உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
பொன்னகர்ச் செல்வி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 1. வந்தான் எங்கிருந்தோ - வென்றான், உளங்கவர்ந்தான்! உலகநாடுகள் இணையுந் துறைநகர் என்று புகழ் பெற்ற பூம்புகார் அன்று திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. நகர மக்கள் திரள் திரளாகக் கூடிக் கடற்கரை சேர்ந்திருந்ததால் அலைகடலே ஓய்ந்து விட்டது போன்ற மகிழ்ச்சிப் பெருக்கு! வானத்தவிசில் வெகு வேகமாக வந்து உச்சத்திலே உக்கிரமான பார்வையுடன் நிலைத்துத் தன் கிரணங்களை வாரி வீச இருந்த பகலவன் சற்றே தயங்கியதற்குக் காரணமில்லாமலில்லை. மக்கள் புத்தாடை அணிந்து புத்துணர்ச்சி பெற்று மலர்ந்த மனத்திலே கிளர்ந்தெழுந்த உவகைப் பெருக்குடன் 'தைத்'தாயை வந்தனை செய்து வரவேற்று மகிழும் பான்மையில், கன்னலும் கரும்பாகும் கலந்து குழைந்து இனித்த நறுந்தேனையும் இணைத்துப் பொங்கி வரும் அமுதப் பொங்கலின் தங்கநிறச் சோபையைக் கண்டு மயங்கியோ என்னமோ, உக்கிரம் தணிந்து வேகத்தைக் குறைத்து விநயமுடன் பார்த்தான் செங்கதிர்த்தேவன். புகார் வாழ் மக்கள் மட்டுமல்ல, தமிழகமே, அன்று பொங்கல் திருநாளை வாழ்வு தரும் வளநாளாகக் கொண்டாடிக் கொண்டிருந்தது. தென்னகமெங்கும் தீதறுத்த திருநாளாகப் பொங்கற் பெருநாளைச் சாதி, சமய வேறுபாடின்றி இன, மொழி மாறுபாடின்றி இன்பமுடன் கொண்டாடியது. புகாரை மட்டும் இங்குக் குறிப்பிடுவானேன்? தமிழகத்தின் தலையாய கடற்றுறை என்பதற்காகவோ சோழ நாட்டின் தலைநகர் என்பதற்காகவோ, அயல் நாட்டு வணிகர்கள் அவர் தம் மரக்கலங்கள், தூதுவர்கள் ஏனையோர் அங்கு தான் வந்து கூடுகின்றனர் என்பதற்காக அல்ல. புகார்க் கடவுளின் படைப்புக் காரணமாக நாடெல்லாம் செழிக்கும் நெற்காடெலாம் கொண்ட சோழப் பெருநாட்டின் தனிப்பெரும் சிறப்பு நகரான பூம்புகார் தமிழகத்தின் அன்றைய நாகரிகத்தை முழு அளவில் பிரதிபலித்த ஒரே நகராதலால் அதற்குத் தனிச்சிறப்பளிக்கிறோம். இவற்றுடன் அன்று அந்தக் குறிப்பிட்ட நாளோ பொங்கற் புதுநாள்! தமிழரின் தனிப்பெருந்திருநாள் அன்றோ! சோழ மாமன்னர் குலோத்துங்கன் அன்று கடற்கரைக்குத் தமது அன்னையார், மனைவியர் இதர பரிவாரத்தினருடன் வந்து மக்களுடன் கலந்து மங்கலப் பொங்கலில் இணைந்து மகிழ்கிறார். அப்பொழுது கடற்கரையில் கூடியிருந்த அனைவருக்கும் புதிய செய்தி ஒன்றும் தெரிய வருகிறது. இன்னும் நான்கு நாழிகையளவில் புகார்த்துறையில் சாவகத்துப் பெருங்கலம் ஒன்று வருகிறது. அதில் சாவகத்துப் பேரரசர் பிரதிநிதியாக அவர் தம் மைத்துனரும் சாவகர் தம் ராஜகுருவும் வருகிறார்கள். அவர்களை வரவேற்க அரசியல் வழக்கப்படி தலைமையமைச்சரும் அயல்நாட்டு அமைச்சரும் தான் வருவர். ஆனால் அன்றோ சாவகத்துப் பேரரசரிடம் தனி மதிப்புக் கொண்டுள்ள சோழப் பேரரசரான குலோத்துங்கச் சக்கரவர்த்தியவர்களே கடற்கரை போந்துள்ளார்கள் என்பதுதான் அச்செய்தி! அன்றைக்கு வழக்கம் போல மாலையில் கடலில் பரிசலோட்டும் போட்டி நடைபெறும். அதுநாள் வரை மன்னரின் சார்பில் பிரதானி எவரேனும் வந்து வெற்றி பெற்றவர்க்குப் பரிசளித்து வந்தார். அன்றோ, மன்னரே தமது திருக்கரங்களால் பரிசு வழங்கப் போகிறார் என்ற செய்தி இளங்காளைகளிடத்தே இணையற்ற உற்சாகமேற்படுத்தியது. எழிற்கன்னியர்க்கும் ஒரு போட்டி உண்டு. கண்ணைக் கட்டி காட்டிலே விடுவர்; இல்லை! கடற்கரையில் விடுவர். தோழியரைக் கட்டிப் பிடிக்க வேண்டும். வென்றவளுக்குப் பரிசிலை வழங்குவது அன்று சோணாட்டுப் பேரரசி பஞ்சவன் மாதேவி! எனவே மன்னரே தங்களிடையே வந்திருக்கிறார் என்ற மகிழ்ச்சியில் பெருமிதங்கொண்ட பெரியவர்கள் அவர்தம் திருக்கைகளால் பரிசு பெறும் வாலிபனோ, வடிவழகியோ தாங்கள் பெற்ற செல்வங்களாயிருக்கும் என்று கூட நம்பினர். அழகழகான வண்ணம் பூசப்பெற்ற அன்னப்படகுகள் அணிவகுத்துக் க்டலோரமாக நின்றன. அவற்றைச் சுற்றிப் போட்டியில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் குழுமி நின்றனர். கடலோடும் ஆற்றலில் சோணாட்டினர் பெற்றிருந்த பெரும் புகழ் பிற நாட்டினர் பொறாமைக்கு இலக்காயிருந்த காலமது. பல்லாயிரம் காதங்களுக்கப்பால் கடல் கடந்திருந்த நாடுகளில், தீவுகளில் எல்லாம் புலிக்கொடி வானோங்கிக் கம்பீரமாகப் பறந்த காலம் அது. கடலோடும் தொழிலில் பயிற்சி பெறுவதற்கென்று தமிழகத்தின் பிற்பகுதிகளிலிருந்து மட்டுமல்ல, சீனம், சாவகம், மலையூர், நக்கவரம், கடாரம், மாயிருடிங்கம், மப்பாளம், தலக்கோலம், சம்பா, சீயம், சிங்கை ஆகிய இதர நாடுகளிலிருந்தும் பல இளைஞர்கள் வந்திருந்தனர். இங்கு மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் தங்கிக் கடலோடும் பயிற்சி பெறுவர். அவர்களிற் சிலரும் அன்று படகுப் போட்டியில் பங்கு பெற விழைந்தனர். எனவே அன்றைய போட்டி கண்களுக்கும் கருத்துக்கும் உடற்றிறனுக்கும் நல்ல விருந்தாகுமென மக்கள் நினைத்தனர். படகுப் போட்டி துவக்கப்படும் நேரம் நெருங்கி விட்டது என்பதைக் காட்ட பம்பை முழங்கியது. சோழ சேனைத் தலைவன் நரலோக வீரன் தனது பெரிய பரிமாவைத் தட்டிவிட, மீண்டும் மும்முறை பம்பை முழங்கியது. சேனைத் தலைவர் முன்னே பாய்ந்து செல்ல அவரைத் தொடர்ந்து பன்னிரு குதிரை வீரர்கள் அணிவகுத்து நிற்க மன்னருக்கும் அவர் தம் பரிவாரத்துக்குமென அமைக்கப்பட்டிருந்த பெரும் பந்தரில் அரசர் புகுந்து அமர்ந்தார். கடலோடிகள் தலைவன் வலம்புரிச் சங்கையெடுத்து 'பம் பம்' என்று முழங்கியதும் ஒன்பது பரிசில்கள் கடலோரத்தேயிறங்கின. படகு வரிசை ஒழுங்கானதும் நரலோக வீரன் சற்று முன்னே வந்து கடலோடித் தலைவனை அருகே அழைத்து "இன்னும் ஒரே நாழிகையில் நாம் இந்தப் போட்டியை முடித்துக் கொண்டோமானால் மன்னருக்குத் திருப்தி உண்டாகும். ஏனெனில் அந்திக்கு முன்னர் அயல் நாட்டுக் கலமொன்று வருகிறது. அதை முறையான அரச மரியாதைகளுடன் வரவேற்க விருக்கிறோம்" என்று தாழ்ந்த குரலில் அறிவித்ததும், "நல்லது தலைவரே அப்படியே செய்வோம்!" என்று பதில் கூறி அடுத்தாற் போல் மீண்டும் சங்கை முழக்கினான். அவ்வளவுதான்! கடல் முகப்பிலிருந்த படகுகள் அனைத்தும் கம்பீரமாக அலைகளைக் கிழித்துக் கொண்டு சீறிப் பாயும் கோர நாகம் போல விரைந்தோடின. அலைகடலில் பாய்ந்தோடிய படகுகளை நோக்கிய ஆயிரமாயிரம் கண்கள் எத்தனையெத்தனை விதமாகத்தான் பார்த்தனவோ? தங்கள் கணவர்மார் நிறைந்த படகுகள் முன்னே வருகின்றனவா என்று பரபரக்கும் பெண்டிர், தங்கள் காதலர் தான் வெற்றி பெறுவர் என்று உறுதியாக நிற்கும் கன்னியர்களின் விழிகள் ஓடும் படகுகளையே உற்று நோக்கின. பாய்ந்தோடும் படகுகள் தங்களுடைய வேகத்தில் மட்டும் அல்ல, வண்ணங்களிலும் போட்டியிட்டன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தில் இருந்ததால் 'நவ'வர்ண ஜாலங்களுடன் அவை ஓடின. நீலக்கடலின் பெருந்திரைகளினூடே மன்னர் மன்னன் குலோத்துங்கன் கவனத்தைக் கூட போட்டியிடும் படகுகள் சற்று நேரம் கவர்ந்திழுத்து விட்டன. அதோ அவை திரும்புகின்றன. 'விரையுங்கள்!' என்ற பொதுவான உற்சாகக் குரலும் 'சோமா, தளராதே!' 'ராமா சலியாதே' 'பீமா அஞ்சாதே' 'வேலா விரைந்து வா' 'சேந்தா பறந்து வா!' இங்ஙனமாக மாறி மாறி எழுந்த குரல்கள் எத்தனையோ! ஒன்பது படகுகளும் திரும்பிய வேகம் சிறப்பானது தான். கைக் கம்பை வலித்தவர்கள் திறமையும் சிறப்பானதுதான். ஆனால் அத்தனை பேரையும் மிஞ்சிய வேகத்துடன் அரிமா போலச் சீறித் திரும்பி முதலாக வந்தது ஒரு படகு! அதில் இருந்தவன் சோழநாட்டுச் சேந்தனோ, வேலனோ, சோமனோ அல்ல! சற்றேனும் அயர்வோ, இரைப்போ காட்டாது அநாயாசமாக இறங்கி வந்த அப்படகோட்டியைப் படைத்தலைவனும், கடலோடித் தலைவனும் மகிழ்ச்சியுடன் ஆனால் சற்றே தயக்கத்துடன் வரவேற்றனர். மன்னனுக்குத் தலை தாழ்த்தி வணக்கஞ் செலுத்திய அவன் மக்களையும் ஒரு முறை வணங்கி விட்டு மிடுக்குடன் நின்றான். இதற்குள் ஏனைய படகுகளின் இளங்காளைகளும் இறங்கி வந்து மன்னரை வணங்கி நின்றனர் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க! ஒவ்வொரு ஆண்டும் சோழ நாட்டுக் காளை ஒருவன் தான் இந்தப் படகுப் போட்டிப் பரிசிலைப் பெறுவது நாளது வரை வழக்கத்திலிருந்தது. சோழர்களின் கடலோடுந்திறனை அன்றைக்கு நிரூபிப்பது போலிருக்கும், இந்தப் போட்டியின் முடிவு. மன்னர் தம் பிரதிநிதி மட்டுமின்றி, ஏனைய நாட்டுத் தூதுவர்களும் இதற்கெனவே வந்து பூம்புகாரில் குழுமுவதுண்டு. வெற்றி பெற்றவனுக்குப் பரிவட்டம் கட்டி வீரவாள் கொடுத்துத் தனது மன்னர் மெய்க்காவல் படையில் ஒருவனாக அவனை அங்கீகரிப்பது வரை சோழ மன்னரின் பிரதிநிதி செய்து முடித்ததும் ஏனைய நாட்டுப் பிரதிநிதிகள் அவனுக்கு ஏராளமான பல்வேறு பரிசில்களையும் வழங்குவதுண்டு. இது நேற்று வரை. ஆனால் இன்றோ... நரலோக வீரர் முகம் அடைந்த மாறுதலையும், கடலோடுந் தலைவன் முகம் கடுகடுத்ததையும், பரிவாரங்களில் பெரும் பகுதியினர் முகம் சுளித்ததையும் மன்னர் கண்டாரோ, இல்லையோ? சட்டென்று தமது இருக்கையினின்று எழுந்து இரண்டடி முன்னே வந்தார். வணங்கிவிட்டுக் கம்பீரமாக நிற்கும் இளைஞனைக் கூர்ந்து நோக்கினார். பிறகு தம் அமைச்சரையும் பார்த்தார்! எத்தனையோ ஆண்டுகளாகச் சோழ நாட்டு வீரனே வெற்றி பெற்று வந்தமை காரணமாக, வேறு யாரும் வெற்றி பெறும் வாய்ப்பினையோ திறனையோ பெற்றவரில்லை என்ற முடிவில் நரலோக வீரர் மட்டும் இல்லை, அமைச்சர் பிரும்மாதிராயர் கூடச் சற்றே கலக்கங் கொண்டார் முடிவைக் கண்டு! குலோத்துங்கர் 'நீறு பூத்த நெருப்பு' என்பது ஒரு வகையில் உண்மையானாலும், சந்தர்ப்பம் வரும் போது அவர் வெடித்தெழும் எரிமலையாகவும் மாறி விடுவதுண்டு என்பது அவருக்குத் தெரியாததல்ல. தவிர சில நாட்களுக்கு முன்னர் தான் அவர் உடல் நிலையும் ஏன் உள நிலையும் என்று கூறினாலும் சரிதான், திருந்தி நலமுற்றிருக்கிறார். கலிங்கத்தின் எழுச்சியும், கொளானு தலைவன் கலகமும், உள் நாட்டிலே பகை நாட்டாரின் ஊடுருவலும் அவருக்கு உண்டாக்கிய தொல்லைகள் நரலோக வீரரின் உறுதியான, திறமையான மேற்பார்வையில் இயங்கிய கண்காணிப்புப் படையினரால் எப்படியோ அடக்கப் பெற்றதால் ஓரளவு நிம்மதி கொண்ட மன்னர், நாட்டிலே நலம் உண்டாகியிருக்கிறது என்ற நிலையை எடுத்துக் காட்டவோ என்னவோ, புகார்த் திருவிழாவில் தாமே கலந்து கொள்ள முன் வந்தார். மன்னரே வந்துள்ளார், பரிசில் வழங்குவார், மக்களுடன் விழாவில் கலந்து கொள்ளுவார் என்று உறுதியான பிறகு, புகார் நகரமே மாறிவிட்டது. தடந்தோள் வீரர் நிமிர்ந்து நடந்தனர். அழகு மங்கையர் அலங்கரித்து மகிழ்ந்தனர். முதிய பிராயத்தினர் தெய்வாம்சம் பெற்ற மன்னரை இறுதியாகக் காண்போம் நேரில் என்னும் நம்பிக்கையுடன் நலிவைப் போக்கி நின்றனர். இப்படியாகப் புகாரே புதுமை கண்டு பொலிவு பெற்றிருந்தது. இந்த வேளையில் ஒரு சோழ வீரன் வெற்றி பெறாமலிருந்தால், மன்னர் 'ஏன் ஓய்வு சோர்வு கொடுத்து விட்டதா? கடலாடுந்திறன் கண் மூடிவிட்டதா நம் காளையரிடம்?' என்று கேட்டால்... அமைச்சர் தயக்கத்துடன் அரசர் அருகே வர, "உடன் கூட்டத்தலைவரே ஏன் தாமதம்?" என்று நிதானக் குரலில் மன்னர் கேட்ட பிறகு தான் தயக்கந் தவிர்த்தவராய் "படகுப் போட்டியில் வெற்றி கண்டவன் யாரோ அயல் நாட்டு இளைஞன். நம் நாட்டானல்லன்" என்று பதற்றத்துடன் பதிலளித்தார். மன்னருக்குச் சற்றே முகம் மாற்றங்கண்டது. ஒருவேளை சினங்கொண்டு விட்டாரோ என்று அஞ்சும்படியாகவும் இருந்தது அந்த மாறுதல். "அமைச்சரே, யாராயிருந்தால் என்ன! வெற்றி பெற்றவன் அவன் தானே? அருகே அழையுங்கள் அவ்விளைஞனை" என்று உத்தரவிட்டதும் நரலோக வீரன் சற்றே நகர்ந்து முன்னே வந்த வீரனுக்கு வழிவிடுகிற மாதிரி நின்றான். அருகே வந்து நின்றவனை இன்னொரு முறை மன்னர் உற்றுப் பார்த்தார். அந்தப் பார்வையின் எதிரே இன்னொருவராயிருந்தால் அயர்ந்து விடக்கூடும். ஆனால் அவன் அப்படி அயரவில்லை, அஞ்சவுமில்லை! இதற்கு மாற்றாக இளைஞனோ அவரையே ஒரு முறை ஏறிட்டு நோக்கினான். மூன்றாம் முறையும் மன்னர் அவனைப் பார்த்த பிறகு தான் மற்றவர்கள் ஏனிப்படி மன்னர் வாய் திறவாமல் அவனையே உற்றுப் பார்க்கிறார்! 'நீ யாரடா? எந்த ஊர்? சோழநாட்டுப் போட்டியில் வெற்றி பெற?' என்று மன்னரே கேட்பதற்குத்தான் இப்படிப் பார்க்கிறாரா? அமைச்சர் இப்படித்தான் நினைத்தார். வேளைக்காரப் படைத்தலைவன் நரலோக வீரனும் இதே மாதிரிதான் சிந்தித்தான். ஆனால் கடலோடித் தலைவன் குனிந்த தலை நிமிராமல் அஞ்சி அடங்கி ஒடுங்கி நின்றான். "இளைஞனே உனது வெற்றி சிறப்பானது", என்று மன்னர் தெளிவாகக் கூறியது அனைவர் காதிலும் விழுந்தது. ஆனால் அடுத்த நொடியே மன்னர், "உன்னை இதற்கு முன் நான் எங்கோ பார்த்திருக்கிறேன்... அது எங்கே? உன்னுடைய பெயரென்னவோ?" என்று கேள்வி போட்டதும் நரலோக வீரன் காதுகளைத் தீட்டிக் கொண்டு அவன் பதிலைக் கவனித்தான். இளைஞனிடமிருந்து பதிலெதுவும் வரவில்லை. குழுமியிருந்தவர்களிடையே வியப்பும் வேதனையும் மண்டியெழுந்தன. மன்னர் கேள்விக்கு உடன் பதில் வராதது கண்ட அமைச்சர் சற்றே சினத்துடன், "இளைஞனே மன்னர் கேள்விக்குப் பதில் கூறத் தயக்கமேன்? உன்னுடைய பெயரென்ன, ஊரெது என்று கூட அறிவிக்காமல் மௌனம் சாதிக்கிறாயே!" என்று இடைக்கேள்வியொன்றைப் போட்ட பின்பும் கூட அவன் பதில் கூறாது தயங்கி நின்றான். உடன் கூட்டத்தாரின் சினம் வரம்பு மீறுவதற்குள் பேரரசி, மன்னரை நோக்கி, "மகனே! அவன் போட்டியில் வென்றவன். அவ்வளவுதான். அவனுடைய ஊர், பேர், குலம் கோத்திரம் அறிந்து என்ன செய்யப் போகிறோம்? பாராட்டும் முறையில் பரிசளிக்கிறோம். அதைக் கொடுத்தனுப்ப வேண்டியதுதானே?" என்று கேட்டதும் குலோத்துங்கன் இலேசாகச் சிரித்து விட்டு, "அன்னையே தங்கள் விருப்பம் போலாகட்டும். அமைச்சரே, அந்தப் பரிசிற் கேடயத்தை எடுங்கள்" என்று உத்தரவிட்டார். அமைச்சர் தயக்கத்துடன், அக்கேடயத்தைப் பணிவுடன் அரசரிடம் நீட்ட, அவர் தம் வலக்கரத்தால் அதைத் தாங்கி, அவனை மேலும் ஒரு முறை உற்றுப் பார்த்துக் கொண்டே, "இளைஞனே புலி இலச்சினை கொண்ட இக் கேடயம் அணிந்தவர் எவராயினும் அவர் சோழர் குல மெய்க்காவல் குழுவில் ஒருவராகி விடுவர். அது முதல் அவர் வாழ்க்கை சோழ நாட்டு நலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு விடுவதாகும். இதைப் பெற்றுக்கொள்!" என்று அறிவித்து அளித்ததும் அவன் அதை இருகரம் நீட்டிப் பணிவுடன் பெற்றுக் கொண்ட போது மும்முறை வெற்றி முரசு முழங்கியது. வேளைக்காரப் படைத்தலைவன் நரலோக வீரனுக்குக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இல்லாத ஒரு வழக்கம் அன்று ஏற்பட்டது. ஊர் பேர் அறிவிக்க விரும்பாத எவனோ ஒருவன் பரிசிலைத் தட்டிச் சென்றதும் பெருஞ் சோதனையாக மட்டுமல்ல, மிக்க வேதனையாகவுமிருந்தது. அமைச்சருக்கோ ஆத்திரமும் சிறிது அசூயையுங்கூட ஏற்பட்டுவிட்டது. அன்று போட்டியில் பரிசு பெற வாய்ப்பு கொண்டிருந்தோர் காடவர்கோன் திருமகனும், பரதவர் தலைவர் மகன் துறைவனும் தான் பெறுவர் என்று நம்பியிருந்தனர். தவிர முன்னீர்ப் பழந் தீவுகளுக்கு அரசி மாதேவி உல்லாச யாத்திரை சென்ற போது பரதத் தலைவரும் அவரது மகனும் அற்புதமாகக் கலங்களை ஓட்டி அவரையும் அவர்தம் பரிவாரத்தையும் மகிழ்வித்திருப்பதால் அவ்விளைஞன் பரிசு பெறுவதில் அரசி கூடச் சற்று அக்கறை காட்டினார். காடவர்கோன் பேரரசரின் உற்ற உறவினர், உகந்த நண்பர், சோழ அரசினுக்கே பெருங்காப்பாளர். அவர் தம் செல்வனெப்படி இன்று தோற்றான் என்பது அரசருக்குக் கூட அதிசயமாக இருந்தது. எனினும் நடந்தது நடந்து விட்டது. ஆனால் முற்றிலும் எதிர்பாராதது! நரலோக வீரருக்குத்தான் இது சற்றுக் குழப்பத்தை உண்டு பண்ணியது. 'இந்த அந்நிய இளைஞன் யார்? எங்கிருந்து வந்தான்? ஏன் வந்தான்? போட்டியிற் கலந்து கொள்ளத் தூண்டியது எது? வென்றவன் மர்மமாக இருக்க விரும்பியதேன்? அரசர் எங்கோ பார்த்திருப்பதாக அறிவிக்கிறார், அரசரின் அன்னையார் தலையிடுகிறார். இளைஞனோ வாய் திறக்க மறுக்கிறான். வழங்கிய பரிசை ஏற்று அலட்சியமாக வணங்குகிறான். ஏன் இதெல்லாம்?' என்று சிந்தித்துக் குழம்பிய அவன் தனது துணை வீரர்களுக்குக் கண் சாடை காட்ட அவர்களும் புரிந்து கொண்ட மாதிரி தலையசைத்தனர். "இளைஞனே! அரண்மனையில் உன்னை நாளை நண்பகலில் எதிர்பார்க்கிறேன்" என்று மன்னர் அறிவித்ததும் அவ்விளைஞன் ஒரு வினாடி திடுக்கிட்டுப் பார்க்க, "சரி, நீ போகலாம்" என்று மன்னர் மீண்டும் சொன்னதும் சிரம் தாழ்த்தி வணங்கிய அவன் சட்டென்று புறப்பட்டு விட்டான். ஆனால் அவனைத் தொடர்ந்து நரலோக வீரனின் கையாட்கள் இருவர் போவதை அமைச்சர் கவனிக்காமலில்லை. படகுப் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசுகளை அமைச்சர் வழங்கி முடித்ததும் ஏழு பெண்கள் அரசியின் எதிர் வந்து வணங்கி தங்கள் கூத்துக்குத் தலைமை தாங்குமாறு வேண்டினர். அரசியும் தோழியர் புடைசூழ கன்னியர் களியாட்டத்திற்குத் தலைமை தாங்க அடுத்திருந்த பந்தருக்குச் சென்றார். அங்கு நூற்றுக் கணக்கில் மகளிர் கூடியிருந்தனர். அணிமணிகள் பல அணிந்து புதுமை புதுமையாகக் கண்களைக் கவரும் வண்ணம் சிங்காரித்துக் கொண்டிருந்த செல்விகள் அரசியை வணங்கி ஆட்டத்தில் இறங்கினர். பன்னிரு பெண்கள் ஒரு பக்கத்தில் கூட, ஒரே ஒருத்தி கண்களை, அரசியின் தோழி ஒருத்தி செந்துகில் கொண்டு இறுகக் கட்டினாள். தண்டிகையெனப்படும் இசைக் கருவி ஒலியெழுப்ப, கன்னியர் தம் காலில் கட்டியிருந்த சதங்கை கிண்கிணியென இன்னொலியெழுப்பக் குதித்தோடினாள் குமரி. ஆனால் ஏனைய பன்னிரு அரிவையரும் வட்டத்துக்குள்ளே எட்டியோடி கலகலவென்று நகையொலியெழுப்பிப் போக்குக் காட்டினர். எவளாவது தன் கையில் சிக்குவாளாவென்று தேடி ஓடினாள் கண்ணைக் கட்டிக் கொண்டவள். தோழியரில் ஒருத்தி அரசியிடம் மெதுவாக ஏதோ கூற வியப்படைந்த குரலில், "அப்படியா? நல்லதுதான். நல்ல திறமையுள்ளவள். வெற்றி காணட்டும்" என்று வாய்விட்டுக் கூறினாள். எனினும் அவளுக்கு வெற்றியளிக்க எந்தக் குமரியும் வரவில்லை! காடவர்கோனின் செல்வி தேடி நடந்தாள். அவளுக்குப் பின்புறம் வந்த ஒரு குறும்புக்காரி படபடவென்று கைதட்டி விட்டோடினாள். திரும்பிய அழகி கூச்சல் வந்த பக்கம் ஓடினாள். "கோடு! கோடு! தாண்டிவிட்டால் தோல்வி தான்" என்று ஒருத்தி கூச்சலிட்டதும் நங்கை வந்த திசை திரும்பி ஓடி வந்தாள். ஓடி வந்தவள் எவர் மீதோ மோத "அப்பாடி! சிக்கிக் கொண்டாயா?" என்று தான் மோதியவர் கைகளைப் பிடித்துக் கொள்ள, "காடவன் மகளே! என்ன செய்துவிட்டாய் நீ?" என்று அரசியே வாய்விட்டுக் கத்தி விட்டாள்! கண் கட்டுகளைப் பயத்துடன் பிரித்த அவள் எதிரே நின்றது பெண் அல்ல, ஒரு ஆண் மகன்! அதுவும் ஊர் பேர் தெரியாத அந்தப் படகுப் போட்டி வெற்றியாளன்! காடவர் குலச்செல்வி துணுக்குற்றாள். கூடியிருந்த மகளிர் குதூகலம் மறைந்து அயர்ந்து விட்டனர். அரசி இருக்கை விட்டெழுந்தாள். இதற்குள் பேரரசி வந்து விட்டார். எல்லாரும் நடுநடுங்கிக் குழம்பி நிற்பதையும் காடவர்கோன் மகள் மருட்சியுடன் ஒரு இளைஞனைப் பார்த்து விட்டுத் தலைகுனிந்திருப்பதையும் கண்டு, "இங்கே என்ன நடந்தது மாதேவி? இவன் எப்படி இங்கு வந்தான்?" என்று ஒரு கேள்வியைச் சிந்திவிட்டு, அரசி அமர்ந்திருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டாள். பேரரசியின் முன்னால் சோழ மாதேவி சற்றே சஞ்சலம் நீங்கப் பெற்றவராய், "அவன் இங்கு வரவில்லை. அந்தப் பக்கம் போய்க் கொண்டிருந்தான். இவள் தான் அவனிடம் போய்ப் பிடித்துக் கொண்டாள்" என்று நன்னகைத்துக் கூறியதும் பேரரசி வாய்விட்டுச் சிரித்து விட்டு, "இளைஞனே, நீ அதிருஷ்டக்காரன் தான் போ. அங்கே பரிசில் வெற்றி, இங்கே அழகுச் செல்வத்தையே வென்று விட்டாய்!" என்று தொடர்ந்து சொன்னதும் அனைவரும் திடுக்கிட்டனர். பேரரசிக்குத் தெரியும், இத்தகைய விளையாட்டின் போது ஒரு ஆடவனைப் பெண் பிடித்தால் அவன் அவளுக்கு உரியவன் ஆகிறான் என்பதாகவும் ஒரு முடிவு. இதைத்தான் மன்னரின் அன்னையார் கூறினார். ஆனால் அரசி ஏதோ சொல்ல வாய் திறப்பதற்குள் அந்த இளைஞனே பணிவுடன், "பேரரசிக்கு வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இந்தப் பெண் மீது நான் எந்த உரிமையும் கொள்ள விரும்பவில்லை. எதிர்பாராது நடந்து விட்டதற்கு நான் இந்தப் பக்கம் நகர்ந்தது தான் காரணம். மன்னித்து விடுங்கள்!" என்று விநயமுடன் கூறிவிட்டுச் சரேலென்று அப்பால் நகர்ந்து விட்டான். பேரரசி அவன் செல்லுந்திசையில் நரலோக வீரரின் உதவியாட்கள் செல்லுவதைப் பார்த்துவிட்டு "மாதேவி, அவன் எங்கும் ஓடிவிட மாட்டான். நாளை நம் அரண்மனைக்கு நிச்சயம் வருவான்" என்றாள். அரசிக்குச் சந்தேகந்தான்! "அதெப்படி உறுதியாகக் கூறுகிறீர்கள். அவன் ஊர் பெயரைக் கூட மாமன்னர் கேட்டும் கூறாதவன் எப்படித் திரும்பவும் தென்படுவான்?" என்று கேட்டாள். "மாதேவி, நிச்சயம் வருவான் அவன். இந்தச் சோழ நாட்டின் கட்டு திட்டங்களை நன்கறிந்தவன் தான் அவன். தவிரவும் குழோத்துங்கன் ஆயிரமாயிரங் கண்களைப் படைத்தவன், அவற்றிலிருந்து தப்ப முடியாது தன்னால் என்பதையும் அறிந்தவன் தான் அந்த இளைஞன்" என்று உறுதியாகக் கூறியதும் மாதேவி ஒரு விநாடி தயங்கிவிட்டு, "நீங்கள் இப்படி உறுதியாகக் கூறுவதைப் பார்த்தால் அவனை ஏற்கெனவே அரசரைப் போல நீங்களும் பார்த்திருத்தல் தான் வேண்டும்!" என்று சொல்லிவிட்டு மன்னர் தம் அன்னையின் முகத்தைக் கூர்ந்து நோக்கினாள். பேரரசி இளம் புன்னகையுடன் "இப்படி என்னைப் பார்ப்பது போல நாளை அவனையும் பார்" என்று அறிவித்து விட்டு அப்பால் நடந்ததும் அரசியே குழம்பி விட்டாள். மன்னர் மன்னன் குலோத்துங்கனை மணந்து பதினேழு ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகு அவளுக்கு அறிமுகமாகாத வீரரோ, அரச தந்திரியோ எவருமில்லை. தவிர காடவர்கோனின் இளைய மகனைத் தனது புதல்வர்களைப் போலவே கருதிய அரசி, பழுவேட்டரையர், பிரம்மாதிராயர், சம்பூவரையர், முத்தளியர், பாணர், தொண்டைமான், வாணகோவனியர் குடும்பத்தினர் அனைவரையும் நன்கறிவார். எனினும் இந்த இளைஞனை அவர்கள் எவர் தம் குடியிலும் கண்டதில்லை. ஒரு வேளை வேளிர் குலத்தவனோ எனில் அவருக்கோ சுற்றமனைத்தும் மூன்று பெண்கள் தான். அயல்நாட்டினன் என்பது நிச்சயம் தான் என்றும் அவர்களில் பலரை அரசியலார் அறிவர். அவர்களில் இவன் நிச்சயமாக ஒருவன் இல்லை! அப்படியானால் இவன் யார்? திடுதிப்பென்று வந்து குதித்த இவனை அரசர் எங்குப் பார்த்திருக்கிறார்? பேரரசி அவன் சார்பாகப் பேசுவதேன்? உளவாளியா? பகைவர் தம் கையாளா யென்பதைக் கண்காணிக்க நரலோக வீரன். அதுவும் இல்லையென்றால் இவன்... அரசி குழப்பத்துடன் மன்னர் தங்கியிருந்த பந்தருக்குச் செல்ல, அங்கே அவர் இல்லை! "தொலைவில் ஒரு மரக்கலம் தெரிகிறது. ஒருக்கால் அது சாவகக்கலமாக இருக்கும் என்று நினைத்து படகோடிகளை அறிய அனுப்பியுள்ளார் மன்னர். தங்களைச் சிவிகையேறி அந்தப்புரம் செல்லுமாறு உத்தரவிட்டிருக்கிறார்" என்று நரலோக வீரன் சொன்னதும் அரசி, "சரி, படைத்தலைவரே, நான் அரண்மனை செல்லுகிறேன். நீங்கள் ஒரு வேலையாளை அனுப்பி வாரைகோவரையர் மனையாளை அங்கு அனுப்பி வைக்குமாறு அறிவியுங்கள்" என்று சொல்லிவிட்டுச் சிவிகையேறினாள். சோழ மாதேவியின் சிவிகை பட்டினப்பாக்கத்தில் நுழைந்ததும் வீதியில் சென்றோர், அங்காடி வணிகர் அனைவரும் தலைதாழ்த்தி வணங்கி வழிவிட இடையே ஓடி வந்தன மூன்று குதிரைகள். அவற்றில் முதலாக வந்த பரி மீது இருந்தவன் பரிசு பெற்ற அந்நிய இளைஞன். பின்னே வந்தவர் நரலோக வீரனின் கையாட்கள். அரசியின் சிவிகை அண்டையில் வந்த வீரன் அரசியிடம் பணிவுடன் "இவர்கள் என்னைத் தொடர்ந்து நான் எங்குச் சென்றாலும் வருகிறார்கள். இது என் சுயமதிப்புக்கு உகந்ததல்ல. இவர்களை நீங்களாவது எச்சரித்து அனுப்ப முடியுமா?" என்று கேட்க, அரசி துணுக்குற்றாள். அவனையும் அவர்களையும் பார்த்து விட்டு, "இளைஞனே! அவர்கள் வேளைக்காரப் படையினர். காரணமின்றி அவர்கள் யாரையும் தொடருவதில்லை. தவிர அவர்களை உத்தரவிடும் உரிமை இந்நாட்டில் மன்னருக்கும், நரலோக வீரருக்கும் தான் உண்டு" என்றாள். இளைஞன் வியப்புடன் அரசியைப் பார்த்து விட்டு "பேரரசிக்கும் இதே கதிதானா" என்று வாய்விட்டுக் கேட்டதும் நெருங்கி வந்த வீரர்கள், "வாய் அடக்கிப் பேசு இளைஞனே!" என்று எச்சரித்து விட்டு அரசியைப் பணிந்து, "இவன் வாய்த்துடுக்கை மன்னித்து விடுங்கள். நாங்கள் இவனைக் கவனித்துக் கொள்ளுகிறோம்" என்று அறிவித்தனர். சிவிகையும் நகர்ந்தது அரசியைத் தாங்கி! "இளைஞனே, இது சோழநாடு நீ அந்நியன். இங்குள்ள சூழ்நிலைக்கு ஒப்ப நீ நடக்கா விட்டால் உரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும். சங்கைக்குரிய உன் நடத்தையைக் கண்காணிப்பது எங்கள் கடமை" என்று வீரருள் ஒருவன் அறிவித்ததும் அவ்விளைஞன் "என்னுடைய எந்தச் செய்கை உங்கள் சங்கைக்குரியதாகி விட்டது?" என்று மிடுக்குடன் திருப்பிக் கேட்டதும் இருவரும் ஒரு நொடி திகைத்து விழித்தனர். என்றாலும் சட்டென்று தெளிந்து, "நாங்கள் இருவர் - நீ ஒருவன்" என்று மிரட்டுவது போலக் கூறியதும் இளைஞன் கலகலவென்று சிரித்து விட்டு, "சோழநாட்டின் இருவீரர்கள் கூடியிருந்து தான் அயல் வீரர் ஒருவனை மிரட்ட முடியுமா?" என்று கேட்டதும் இருவரும் சினம் கொண்டு குதிரைகள் மீதிருந்து இறங்கினர். "இளைஞனே, நீ வீறாப்புப் பேசும் வீரனாக இருக்கிறாய். உன்னை நாங்கள் எங்கள் தலைவரிடம் இட்டுக் சொல்லுகிறோம். அங்குப் பேசிக் கொள் எல்லாவற்றையும்!" என்று சொல்லியபடி அவன் குதிரையைப் பிடித்தனர். ஆனால் அடுத்த நொடியே அவன் கையிலிருந்த குதிரைச் சாட்டை இருவரையும் பதம் பார்த்து விட்டது. "ஐயோ!" என்று அலறிய வீரர் ஆத்திரந் தாங்காமல் இடை வாளை உருவ அதற்குள் அவன் கைவாள் மின்னியது. "உயிர் மீது ஆசையிருப்பின் உருவிய கத்திகளைக் கீழே போடுங்கள்!" என்று உத்தரவிட்ட அவன் குரலின் வேகம் அவர்கள் கையிலிருந்த வாட்களைத் தானாகவே நழுவச் செய்து விட்டது! "ஏறுங்கள் உங்கள் குதிரைகள் மீது. வாய் திறவாமல் முன்னே செல்லுங்கள்!" என்று உத்தரவிட்டவனுக்கு எதிர் பேசத் திராணியற்று அவ்வீரர்கள் அவ்வண்ணமே செய்தனர். அவர்கள் முன்னே செல்ல அவன் அலட்சியமாக அவர்கள் பின்னே விரட்டியபடி சென்றான் அரச வீதியின் ஊடே! அனைவரும் அதிசயமாகப் பார்த்து நின்றனர். |