பொன்னகர்ச் செல்வி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

10. பதற்றக்காரனுக்கு பக்குவப்பேச்சு பயனில்லை!

     சோழநாட்டுத் தலைநகரம் எப்போதும் கலகலப்பாகத்தான் இருக்கும். ஆனால் கடந்த மூன்று தினங்களாக குலோத்துங்கன் மனம் ஒரே குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது. காடவன்மாதேவி, அரசர் ஏன் இப்படி இருக்கிறார் என்று அதிகம் சிந்தித்துப் பார்த்தாலும், அந்த அயல்நாட்டு இளைஞன் தான் காரணம் என்று கருதினாள். மகன் மும்முடி வந்ததும் வராததுமாக வீண் வம்பை விலைக்கு வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறான் என்றே அவளுக்குத் தோன்றியது. ஆனால், இதற்கெல்லாம் மன்னர் மனங்கலங்கி விட்டார் என்று முடிவு செய்ய அவளால் ஏனோ முடியவில்லை. வேறு ஏதோ ஒரு யோசனை, அது நிறைவேறுமா என்ற ஆவலுள்ள நிலைமையில் அரசர் சிந்திப்பதும் இடையே ஏதோ இரண்டொரு முக்கிய அலுவல்களை, அதுவும் அடிக்கடி சிங்களத் தூதுவர்கள் வந்துவிட்டார்களா என்று அறியத் துடிப்பது என்பது தவிர வேறு அலுவல்களில் அதிகம் ஈடுபடவில்லையே என்று தான் கவலையுற்றாள்.

     சிங்களத்துடன் மேற்கொண்டு யுத்தம் வேண்டாமென்பதற்குத் தனது தந்தையும், கடல்நாடுடையாரும் தான் காரணம் என்று அவளுக்குத் தெரியும். காடவர்கோன் நெடுநாள் யோசனைக்குப் பிறகே இந்த முடிவுக்கு வந்தார். கடல்நாடுடையாரோ, நம் சக்தி வேறு வகையில் திருப்பப்பட வேண்டிய யோசனையை ஏற்றார்.

     மன்னரோ, இது மட்டும் போதாது, என்றென்றைக்கும் நாம் சிங்களத்துடன் பகைக்காதிருக்க இப்போதே நிரந்தர ஏற்பாடு ஒன்றைச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார்.

     சிங்களத்து இளவரசனான வீரப்பெருமாள், நல்ல அழகன், நிறைய படித்தவன் என்று அடிக்கடி மன்னர் குறிப்பிடுவதை அரசி கவனித்து அதன் உட்கருத்தையும் புரிந்து கொண்டாள்! பேரரசி முதலில் மகளின் நோக்கம் அறியவில்லை. ஆயினும் அறிந்த பிறகு தடை கூறவில்லை! இது ஒரு தகுதியான ராஜ தந்திர முடிவுதான் என்று ஆமோதித்தார்...

     சோழமாதேவி இப்படியெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக சிந்தித்துக் கொண்டிருந்த போதுதான் பொன்முடி வந்து அயல்நாட்டு வீரனிடம் இளவரசி காட்டும் ‘அனுதாபத்தை’ அறிவித்ததால் இந்த ‘அனுதாபம்’ என்பதை எந்த வகையில் கவனிப்பது என்று அரசிக்குப் புரியவில்லை. அரசருக்கு மட்டும் எப்படிப் புரியும்?

     வெள்ளிக்கிழமைதோறும் மாலையில் அரசன் ஆலயத்துக்குச் செல்வது மாறாத ஒரு வழக்கம். ஆனால் அன்று சாவகத் தூதுவரின் அழைப்புக்கு இணங்க ‘நான் சாவகக் கொட்டம்’ செல்லுகிறேன் என்று அரசர் கூறிவிட்டதால் தனியாகத்தான் சிவிகையேறினாள் காடவன்மாதேவி. மனதில் நிம்மதியில்லாவிட்டாலும் கடவுள் நிவர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை இயற்கைதானே?

     ஆலயத்தில் வழக்கம் போல அரசியின் வழிபாட்டுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தன. ஒரு முறை நகரத்தை வலம் வந்துவிடலாமே அதற்குள்ளாக என்று அரசி சுற்றத் துவங்கியதும், வடவண்டைப் பிராகாரத்தில் இருந்த நெல்லிமரத்தடியில் ஆழ்ந்த யோசனையுடன் வீரபாலன் அமர்ந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டாள். ஏனெனில் அவன் மேனியெல்லாம் திருநீரு அணிந்து பக்தியே உருவாக அமர்ந்திருந்த தோற்றத்தைக் காண அவளுக்கே வியப்பும் திகைப்பும் உண்டாகிவிட்டது. தான் வருவது கூட கவனிக்காமல் தியானத்தில் மூழ்கியிருக்கிறானே என்று அதிசயித்து நின்றாள் அரசி.

     இதற்குள் கண்களை விழித்த வீரபாலன், தன் அருகே நின்றவளைக் கண்டதும் சட்டென்று வணங்கி நின்றான்.

     “இளைஞனே, நீ என்னை வியப்பில் ஆழ்த்திவிட்டாய். இந்த நேரத்தில் இங்கு வந்து வழிபாட்டில் ஈடுபடுவாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இம்மாதிரி பிரார்த்தனை நடத்தும் வழக்கம் எப்போதுமுண்டா உனக்கு?”

     “எப்போதும் உண்டு இந்த வழக்கம். எங்கள் நாட்டில் இது பரம்பரைப் பரம்பரையாக பயிற்றப்படும் நற்பழக்கங்களில் ஒன்று இது!”

     “உங்கள் நாடு, அப்படியானால் இந்தியப் பண்பாட்டில் ஊறியதொன்றாக இருக்கவேண்டும்.”

     “ஆம் தாயே!”

     அரசி ஒரு நொடி அதிர்ந்து போனாள். தன்னைத் தாயே என்று கம்பீரமாக விளிக்கும் இவ்வீரன் உண்மையில் ஒரு உயர்குலச் செம்மலாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்து, “இளைஞனே நீ எந்த நாட்டைச் சேர்ந்தவன் என்று கூடச் சொல்லவில்லையே!” என்று மிக அப்பாவித்தனமாகக் கேட்டு வைத்தாள். இளைஞன் இளநகையுடன், “தருணம் வரும்போது தயங்காமல் கூறுவேன். தங்களைத் தாயே என்று நான் அழைத்ததைத் தவறாகக் கருதவேண்டாம். நான் வெகுசமீபத்தில் தான் என் தாயை இழந்து தனியனானேன். ஆயினும் அவர் எனக்குச் சோழநாட்டில் ஒரு கடமையுண்டு என்று மரணத்தருவாயில் கூறியதைச் சிரமேற்றாங்கி இங்கு வந்திருக்கிறேன். அவர் வேண்டுகோள்படித்தான் நான் சில விவரங்களை மர்மமாக வைத்திருக்கிறேன்.”

     காடவன்மாதேவி அவன் அருகில் சென்று “கலங்காதே வீரமகனே. தாயின் வார்த்தைக்கு இணங்கி நீ உறுதியாக நடந்து கொள்ள வேண்டும். நீ என்னைத் தாயார் என்று அழைத்ததில் உண்மையில் மகிழ்ச்சியே அடைகிறேன். என் மகனாகக் கருதி உன்னை வாழ்த்தவும் நான் தயாராக யிருக்கிறேன். நீ இங்கு ஆற்ற வந்துள்ள கடமையென்ன, எது என்றெல்லாம் நான் கேட்க விரும்பவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. நீ இங்கு வந்த நாள் முதல் கடல்நாடுடையார் ஆதரவில் தங்கியிருக்கிறாய் என்று அறிகிறேன். அதுபோதும் சோழநாடும், மன்னரும் அந்தக் குழத்துக்குப் பெரிதும் கடமைப்பட்டவர்கள்.”

     “அதே போன்று நானும் உங்களுக்குக் கடமைப்பட்டவன் தான்.”

     “தெரிகிறது வீரனே தெரிகிறது. ஆனால் நீ இளவரசனுடன் நாளை மறுநாள் வாட்போரிடுவது இக்கடமைகளில் ஒன்றுதானா?”

     வீரபாலன் ஒரு நொடி அயர்ந்துவிட்டான். அரசி எவ்வளவு துரிதமாகத் தன்னை மடக்கிவிட்டாள் என்பதைக் காணச் சற்றே கலங்கி விட்ட அவன் நிதானமாக “கடமைகளில் இதெல்லாம் இல்லை. ஆனால் இளவரசர் என்னை வம்புக்கு இழுத்து அறைகூவும் போது நான் ஒதுங்கினால் கோழையென்று கூறப்படுவேன். வீரத்தாய் ஒருத்தியின் மகன் கோழையென்று பெயரெடுப்பதைப் பொறுக்க முடியாது தாயே!” என்று மிக விநயத்துடன் திரும்பக் கேட்டதும் அரசி இலேசாகச் சிரித்துவிட்டு, “வீரனே நீ பேசுவதே அழகாகத்தானிருக்கிறது. இந்தச் சின்னஞ்சிறு வயதில் நிரம்பவும் அனுபவம் பெற்றவன் மாதிரி வாதிக்கிறாய்.”

     “சோழருலமாதேவி, நீங்கள் காடவர்கோன் மகளாகப் பிறந்து சோழ மன்னன் மனைவியாக மாறி இந்நாட்டு மக்களின் அன்புத்தாயாக இருக்கும் தகுதியும் மதிப்பும் பெற்றவர்களாதலால் என்னிடமும் பெருமனங்கொண்டு அன்பு காட்டுகிறீர்கள். இது பாரம்பரியப் பண்பாட்டைக் காட்டுகிறது. இந்நாட்டைப் பொறுத்தவரை நான் ஒரு அன்னியன் தான். என்றாலும் நானும் உங்கள் அன்புக்குப் பாத்திரமாக உகந்த குலத்தான் தான். என் தாயும் உங்களைப் போல ஒரு நற்குலத்தில் பிறந்த நங்கையாகப் பிறந்து எனக்கு இணையான ஒருவரையே வரித்தவர் தான். எனினும் அவரை நான் இழந்துவிட்டேன்” என்று கூறிச் சற்றே நிறுத்தினான்; குரலும் தழுதழுத்தது - பேசுவதற்கியலாமல்.

     இளைஞன் பெற்றோரை இழந்து துக்கத்தில் ஆழ்ந்து அநாதையாக இந்த நாட்டுக்குக் கடமை வீரனாக வந்துள்ளான் என்பதையறிந்த அந்தச் சோழ அன்னைக்கு அவனிடம் ஏற்கெனவே ஏற்பட்டிருந்த அன்பு இரட்டித்தது. ஏன்? பாசம் கூட அரசிக்குப் பெருகிவிட்டது அவனிடம் என்று கூடக் கூறலாம். இருவருமே மேலே பேசுவதென்னவென்று திகைத்துச் சற்றே மவுனமாயிருந்த சமயத்தில் ஆலயமணி அவர்களைத் தீபாராதனைக்கு அழைத்தது.

     அம்பிகையின் சந்நிதிக்கு அரசி சென்றதும் வரவேற்ற பூசாரியை அரசியுடன் இளைஞனும் வணங்கினான். மன்னர் தான் எப்போதும் மெய்க்காவலருடன் வருவார். இப்போது அரசியும் வருகிறார்கள். அவர்களுடைய துணையுடன் மீண்டும் சோழ நாட்டில் ஏதோ ஒரு பெரும் சம்பவம் நடக்கப் போகிறது என்பதற்கு இது அறிகுறிபோலும்! என்று எண்ணியபடி பூசாரி, அரசியாரிடம் பிரசாதங்களை வழங்கினார்.

     புகாரில் சிவ, வைணவ, பௌத்த ஆலயங்கள் தவிர காவேரி அம்மனுக்கும், கடல் அம்மனுக்கும் ஆலயங்கள் உண்டு. இந்தக் காவேரி அம்மனுக்கு ஆலயம் அமைத்தவர் சோழகுலப் பேரரசரான கரிகாற் பெருவளத்தார் என்பதாக ஒரு வரலாற்று ஆதாரமும் உண்டு. கடல் அம்மனுக்கு ஆலயம் அமைத்தவர் கங்கைகொண்ட சோழர் என்பதாகவும் ஒரு விவரமுண்டு. சோழபரம்பரையினர் எந்த ஒரு பணியையும் தெய்வீகத் துணையுடன் தான் செய்வர். காவேரி அம்மன் அருள் இல்லையேல் சோழ வளநாடு ஏது என்று கரிகாலர் கருதி இருக்கலாம். கடல் கடந்த நாடுகளில் சோழர் பெருமை பரவ கடல் அம்மன் துணையில்லையேல் சாத்தியம் ஏது என்று ராஜேந்திரர் கருதியிருக்கலாம். எனவே இரண்டும் உண்மை நிகழ்ச்சியெனக் கொள்ளலாம்.

     சோழ குலத்தார் சாதி சமய வேற்றுமை காணும் குறுகிய மனப்பான்மையோ கொண்டவரல்லர். பரந்த சர்வ சமய சமரச மனப்பான்மை கொண்டிருந்ததால் தான் சோழ நாட்டில் சைவ சமயத்துக்குச் சமமாக வைணவமும், பின்னர் பௌத்தமும், சமணமும் தழைத்தன. அவரவர்கள் வழிபாட்டுக்கு அவரவர்கள் சுதந்திரம் பெற்றிருந்தனர். இது காரணத்தால் தான் சோழ சாம்ராஜ்யம் நெடுங் காலமாக வளமாகவும் சிறப்பாகவும் நிலைத்திருக்க முடிந்தது என்று வரலாற்றாசிரியர் வரைந்துள்ளனர்.

     ஆனால் சோழர்கள் எங்கோ வடக்கேயிருந்து இங்கு ஊடுருவி சூழ்ச்சிகள் பல செய்து தலைக்காட்ட முயன்ற காபாலிகரை மட்டும் ஆதரிக்கவில்லை. புனித உயிர்களுக்கு ஊறுவிளைவித்து ‘பலி’கள் மூலம் ஒரு சமயத்தை அனுஷ்டிக்க விரும்புவதை யார் ஆதரிக்க முடியும்?

     ஒருவேளை அந்தக் காபாலிகர் தான் இப்போது இந்தப் புகார் நகரத்திலும் நுழைந்திருக்கிறார்களோ? என்று கருதினார் அம்மன் கோயில் பூசாரியான அவர்!

     ஆனால், இளைஞனின் எடுப்பான தோற்றம், அழகு முகம், கம்பீரமான பார்வை, சிம்மக்குரல் இவற்றை நோக்கினால் ஒரு ராஜகுமாரனாக இல்லாவிட்டாலும், ஒரு குறுகிய மன்னனாகவாவது இருக்க வேண்டுமே! பூசாரி நன்றாகப் பேசுவார். அரச குடும்பத்தார் அவரிடம் தனிமதிப்பு வைத்திருந்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அவர் ஆலயப் பூசாரி என்பது. இரண்டாவது அவர் பரம்பரையாக ஆருடம் சொல்லுவதில் தேர்ந்தவர். ஏதோ ஒரு விசேஷம் என்றால், நாள் குறித்து நலம் கூறுவது, நல்லோரை வைப்பது எல்லாம் இவர்தான். எனவே, பேரரசி முதல் அவர் தம் கொள்ளுப்பேத்தி வரை இவரிடம் மனம் விட்டுப் பேசுவதுண்டு மூடி மறைக்காமல்!

     மும்முடிச் சோழன் அடிக்கடி சொல்வான் பூசாரி பொன்னம்பலத்தார் ஆயுளைக் காட்டிலும் ஒரு நூற்றாண்டு அதிகமானது அவர் தம் தாடி என்று!

     தாடியை உருவியபடி திருநீற்றுக் கிண்ணத்தை உள் மாடத்தில் வைத்தவர், அரசியைத் தொடர்ந்து பிராகாரம் வந்ததும் அரசியே பேசினார். “பூசாரி ஐயா, இந்த இளைஞன் அந்நியனானாலும் இப்போதைக்கு நம்மவன் தான். பெயர் தான்...” என்று சொல்லத் தெரியாமல் சற்றே தயங்கிய பொழுது “என் பெயர் வீரபாலன்” என்று இளைஞனே அறிவித்தான்.

     அரசி மட்டும் அல்ல, பூசாரியும் வியப்புற்றனர். இந்த மாதிரி பெயர்களைக் கேள்விப்பட்டதேயில்லை இருவரும். தவிர இத்தகைய பெயர்கள் சாவகம், பாலி, சம்பா போன்ற கடல் கடந்த நாடுகளிலிருப்பவர்கள் தான் பெற்றிருப்பர். ஆதலால் ஒருக்கால் இவனும் அந்த நாடுகளில் ஒன்றினைச் சேர்ந்தவன் தானோ? அப்படியானால் இப்போதுள்ள சூழ்நிலையில் இவர்களை - அதாவது அந்நிய நாடுகளிலிருந்து வந்திருப்பவர்களை எந்த அளவுக்கு நம்ப முடியும் என்றும் யோசித்தாள் அரசி.

     பூசாரி, அரசியார் வியப்பும் யோசனையும் எது குறித்து என்று நிதானித்தார். உடன் வந்த மெய்க்காவலன் பெயர் கூட அரசிக்குத் தெரியவில்லை. அவனோ அயல்நாட்டான் என்பது பெயரிலேயே நன்கு புரிகிறது. ஆயினும் இவன் அரசர் தம் அந்தரங்கக் காவலனுக்கான சின்னத்தைத் தரித்திருப்பதால் எதை எப்படி தீர்மானிப்பது என்றும் புரியாமல் குழம்பினார்.

     ஆனால் அரசி அவர் தம் குழப்பம் நீங்கச் சட்டென்று ஒரு கேள்வி போட்டாள்.

     “இங்கு காலையில் இளவரசியும், பொன்முடியும் வந்திருந்தார்களா?” என்று கேட்டதும் “வந்திருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு முன்னரே காடவர்கோயன் இளைய செல்வியும் வந்திருந்தனர்” என்று பதிலளித்தார் பூசாரி. அரசி மீண்டும் வியந்து, “அவள் மட்டும் தனியாகவா?” என்று கேட்டதும், “ஆமாம் மாதேவி, அவர் மட்டும் தான் சிவிகையில் வந்திருந்தார். வந்ததும் வராததுமாக...” சட்டென்று மவுனமானார் பூசாரி!

     அரசி, தன் பக்கத்தில் நிற்கும் இளைஞன் எதிரில் பூசாரி அரச குடும்ப சம்பந்தமான விவரங்களைப் பேச விரும்பவில்லை என்பதை ஊகித்து, “தயங்காமல் சொல்லுங்கள். இவ்வீரர் எமது மகளைப் போல்!” என்று தைரியமூட்டியதும் வீரபாலனே வியந்து நின்றான்.

     பூசாரி தயக்கம் சட்டெனப் பறந்து விட்டது.

     “காடவர் செல்வி வந்ததும் வராததுமாக நீங்கள் சொன்ன ஆருடம் பலித்து விட்டது என்றார். எந்த ஆரூடம் என்று கேட்டேன். நாணம் அவர் வாயை மூடிவிட்டது!”

     “நாணமா?”

     “ஆமாம் மாதேவி, அவருக்கு இந்தத் திங்களில் திருமணம் ஆகிவிடும் என்றேன் முன்னர். அதுதான் பலித்து விட்டதாம்!”

     அரசி அதிகாரத்துடன் “இதென்ன விந்தை பூசாரி? எனக்குத் தெரியாமல் அவளுக்கு வரன் நிச்சயமாகி விட்டதா? யாருக்கு யார் சொன்னது? நிச்சயம் செய்தது யார்? யார் அந்த மணமகன்? இதெல்லாம் ஏன் பூடகமாக இருக்கிறது? நீங்கள் ஆரூடம் சொல்லுவதைப் போலல்லவா இருக்கிறது!”

     “ஆமாம் அரசியாரே. கடற்றுறைத் திருவிழாவன்று காளையொருவன் இவள் கைகளைப் பற்றிவிட்டதாகக் கூறினார்!”

     அரசி வாய்விட்டுச் சிரித்து விட்டாள். அப்பாடி! எவ்வளவு நிம்மதியான சிரிப்பு. சட்டென்று தன்பக்கத்தில் நின்ற வீரபாலனைப் பார்த்தாள். அவனோ அதுகாறும் அவர்கள் பேச்சில் அக்கரை காட்டாதிருந்தவன் சட்டென்று கடல்துறை விழா கன்னி என்று கேட்டதும் திடுக்கிட்டான். அரசியையும் பூசாரியையும் மாறிமாறிப் பார்த்தான்!

     “உங்கள் ஆரூடப்படிதான் அது நடந்ததாமோ?” என்று அரசி சற்றே குறும்பு கலந்த தொனியில் கேட்டாள்.

     “ஆமாம் அரசி. நான் ஒரு அந்நிய வீரன் தான் உனது கைப்பற்றுவான் என்றேன். கண்களைக் கட்டிப் பிடிக்கும் போட்டியின் போது யாரோ ஒரு இளைஞன் அவ்வழி வர இவள் அவனைப் போய்த் தொட்டிருக்கிறாள். நம் வழக்கம் தான் தெரியுமே அரசி, அந்த நிமிடமே அவன் இவளுடையவனாகி விட்டான்!”

     “அபத்தமான கற்பனை!”

     வீரபாலனிடமிருந்து இப்படியொரு கர்ஜனை வந்தது கண்டு பூசாரிக்கும் கோபம் வந்து விட்டது! தன்னுடைய பரம்பரைத் தொழில் கற்பனை என்று சொல்ல இவன் யார்?

     “நிறுத்தும் இளைஞரே... நீர் இந்நாட்டில் அந்நியன். இந்தப் பூசாரியின் சக்தியை அறியாதவன்!” என்று கத்தினார்.

     “எனக்கு உங்கள் சக்தியைப் பற்றிக் கவலையில்லை.”

     “அப்படியென்றால்...”

     “நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் எந்த ஆரூடத்தையும் சொல்லுங்கள் எனக்குக் கவலையில்லை. ஆனால் ஒரு பெண்ணின் கை இன்னொரு ஆடவன் கையில் ஏதேச்சையாகப்பட்டுவிட்டது என்பதற்காக அவனுக்கும் அவளுக்கும் ஏதோ ஒரு முடிபோடும் நினைவைத்தான் அபத்தமான கற்பனை என்றேன்.”

     பூசாரிக்குப் புரியவில்லை என்றாலும் அரசிக்குப் புரிந்து விட்டது. வீரன் அந்நியன் என்பதனால் இந்நாட்டுப் பழக்க வழக்கங்கள் தெரியாதிருக்கலாம். ஆனால் காடவர் செல்வி முன்பு நிகழ்ந்ததை முடிவாகக் கொண்டு கற்பனை செய்கிறாள் என்பதை அவள் ஏற்கத் தயாராயில்லை. ஏனோ அவள், இந்த வீரன் தான் தான் வரித்தவன் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாள். பூசாரியின் ஆரூடம் எப்படியாயினும் உண்மை நிகழ்ச்சி அதை ஒத்திருப்பதால் அவளுக்கு இவரிடம் அலாதி நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதனால் பரவசமுற்றவள் உண்மை மனோநிலையை வெளிபடுத்தியிருக்கிறாள். அவ்வளவுதான்! இதை எப்படிக் கற்பனை என்று கூற முடியும்?

     ஆனால், வீரபாலன் நிலையும் வெளிப்படையானது. யதேச்சையாக நிகழ்ந்த ஒன்றுக்கு உருவான முழுமை கொடுக்கும் முயற்சி வெறும் கற்பனை தான் என்று அவன் கருதுவதில் அர்த்தமில்லாமலில்லை. ஏதோ ஒரு கடமை இந்நாட்டில் காத்திருந்தது. அதை நிறைவேற்றுவதற்காகவே ஈண்டு வந்திருக்கிறான். எனவே இந்தக் கடமையில் செலுத்தும் கருத்துக்கு மாற்று நேர அவன் விரும்பவில்லை. இது நியாயமான கொள்கைதான்.

     எனினும் காடவர் செல்வி மனம் இவனை வரித்துவிடும்படி நேர்ந்தது இயற்கையான ஒரு நிகழ்ச்சிதான். அந்த எதேச்சையான முடிவு...

     அரசி இரு நிலைகளிலும் நின்று பார்த்தாள். அதனதன் வழியில் இரண்டும் சரியாகத்தான் இருந்தன!

     “சோழமாதேவி, இந்தத் திருக்கோயிலிலேயே நான் ஒரு உண்மையை விளக்க விரும்புகிறேன். நான் இங்கு வந்துள்ள கடமை நிறைவேறும் வரை எனது கருத்து வேறு எந்தத் திசையிலும் திரும்பாதென்பது உறுதி. காடவர் செல்வியையோ, மாடலர் மங்கையையோ நான் அறியேன். தடுக்கி விழுந்த ஒருவன் அந்த இடம் தான் உரிமை என்று கொண்டாடுவது நியாயமா?” என்று வேகமாகக் கேட்டான். அரசிக்கு அவன் கேள்வியின் கருத்துப் புரிந்தது. ஆயினும் விட்டுக் கொடுக்க மனமில்லை.

     “வீரபாலகா, காடவர் செல்வி என்பது ஒரு உயிர். மண் அல்ல. நீ கடமை பெரிது என்று கருதினால் தவறில்லை. அதே போல் அவள் யதேச்சையாக நிகழ்ந்தது இயற்கையின் முடிவு என்று கொள்ளுவதிலும் தவறில்லை!” என்று விட்டகல முயன்றாள்.

     “இது ஒருதலையான முடிவு. நியாயத்தைச் சிந்தித்துச் செயலாற்றுவோர் கொள்ளத்தக்க முடிவல்ல.”

     “காடவர்கோன், தமது பேத்தியின் முடிவை ஏற்பாரேயன்றித் தள்ளமாட்டார். அவர் தம் முடிவை ஏற்பதுதான் சோழர் தம் நிலையேயன்றி மாற்றம் இருக்காது இளைஞனே!”

     “நீங்கள் தெளிவாக்கி விட்டீர்கள். நானும் தெளிவாக்கி விடுகிறேன். நான் என் மனதுக்குப் பிடிக்காத எந்த ஒரு முடிவையும் ஏற்பதற்கில்லை. எவருடைய வற்புறுத்தலும் இதை மாற்ற முடியாது!”

     பூசாரி, குறுக்கிட்டார் இப்போது “என்னுடைய ஆரூடம் இதுவரை தோற்றதேயில்லை!” என்று முறையிட்டுக் கொண்டார்.

     “நீங்களும் போர் முறைகளில் கவனம் செலுத்தினால் அதில் வெற்றியும் உண்டு தோல்வியும் உண்டு என்பதறியலாம்.”

     “நான் சாதாரண ஒரு பூசாரி. போர் முனையில் கருத்தில்லை.”

     “ஆனால் மனித உயிர்களுடன் விளையாட மட்டும் விருப்பமாக்கும்?” என்று ஏளனக் கேள்வி அவனிடமிருந்து வந்ததும் அரசி, சட்டென்று “சரி, வீரபாலகா நாம் புறப்படலாம். பூசாரி ஐயா நாங்கள் வருகிறோம்!” என்று அங்கிருந்து புறப்படச் சிவிகை முன்னே வந்தது, அவரைச் சுமந்து செல்ல.

     வீரபாலனின் குதிரை அவனைச் சுமந்து அலட்சியமாகத் துள்ளியோடினாலும் அவன் மனம் முன் போலத் துள்ளவில்லை. ஒரே குழப்பம். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் இந்தச் சோழநாட்டின் மூடப் பழக்கவழக்கங்கள் தன்னைக் கூட அல்லவா தாக்குகிறது என்று அஞ்சினான் அவன்.

     வாட்போரா? அச்சமில்லை. அரசியல் வாதமா? லட்சியமில்லை. தந்திர யுக்தியா? தளர்ச்சியில்லை. ஆனால் இந்த மூடப் பழக்கவழக்கங்களா? ஒன்றுமே புரியவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டமாதிரி.

     ஆமாம்! ஒரு பெண்ணின் கண்களைக் கட்டி விட்டவர்கள் ஏன் தங்கள் சுயபுத்திக்கும் கட்டுப் போட்டுக் கொள்ளுகிறார்கள்? என்று கூட நினைத்தான் அவன்.

     ஆனால், காடவர்செல்வி நிலையில் அரசி கவனம் செலுத்திக் கொண்டே அரண்மனை சென்றாள். இளவரசி, வடிவுடைநாயகி இவர்கள் எல்லாம் ஏன் இந்தக் காடவர் செல்வி முடிவை அறியாமலிருக்கிறார்கள்!

     சோழமாதேவி சிவிகையிலிருந்து இறங்கி அரண்மனைக்குள் பத்தடிகள் தான் சென்றிருப்பார். பின்புறத்தில் ஆத்திர கர்ஜனை ஒன்று புறப்பட்டது கண்டு திரும்பிப் பார்த்தாள்!

     “யார் அழைப்பின் பேரில் நீ இங்கு வந்தாய்?” என்று வேகமாக எழுந்த குரல் மும்முடியுடையது என்று விளங்க அதிக நேரமாகவில்லை. அரசி வேகமாகத் திரும்பி முன்னே வந்த போது வீரபாலன் அலட்சியப் புன்னகையுடன் தன் மார்பிலணிந்திருந்த சின்னத்தை மும்முடிக்குக் காட்டுவதைக் கவனித்தாள்.

     “இது எப்படி உனக்குக் கிடைத்தது? ஒரு உளவாளியின் மார்பில், சோழ இலச்சினையா? இது ஏது? எவர் தந்தது? அல்லது எங்கு திருடினாய்? சொல் சீக்கிரம் சொல்...”

     மும்முடியின் சினவேகம் புரியாமலில்லை பாலனுக்கு. எனினும் அடக்கமாகவே “யார் கொடுக்க வேண்டுமோ அவர் கொடுத்ததுதான். இது திருடக்கூடிய இடத்தில் கேட்பாரற்றுக் கிடக்கும் பொருள் அல்ல. எனவே எங்கு திருடினாய் என்று கேட்டதை மன்னித்து விடுகிறேன்!”

     “முட்டாளே! நீ யார் என்னை மன்னிக்க? யார் கொடுத்தது என்று கூறாமல் பசப்புகிறாய்... குதிரையில் இருந்தபடி குதர்க்கம் பேசுகிறாய்? அழையாத வீட்டில் நுழைகிறாய் அனுமதியின்றி...”

     அரசி வந்துவிட்டாள். “மும்முடி ஏன் கண்டபடி உளறுகிறாய்? இந்த வீரன் என்னுடன் தான் வந்தான்.”

     “அன்னையே, இதில் நீங்கள் தலையிட வேண்டாம். இவன் ஒரு திமிர்பிடித்த முட்டாள். நயவஞ்சகமாக நம்மை ஏமாற்ற வந்தவன். இந்தப் பதரை...”

     அடுத்த நொடியே இளைஞன் கரங்கள் அவன் வாயைப் பொத்திவிட்டன இறுக்கமாக! இதற்கு அடுத்த நொடியே இளவரசன் ஒரு புறமாகச் சுருண்டு விழுந்துவிட்டான்!

     “ஐயோ!” என்று பதறியோடித் தூக்கினாள் அரசி. காவலர்கள் பொறிதட்டிய நேரத்தில் என்ன நடந்துவிட்டது என்றறிய இயலாமல் ஓடி வந்தனர். பொன்முடியும் இளவரசியும் எங்கிருந்தோ ஓடோடி வந்தனர். இளவரசனோ பிரேதம் போல் கிடக்கிறான்!

     “மாதேவி, மன்னிக்க வேண்டும், எவ்வளவு பொறுக்க முடியுமோ அவ்வளவுக்குப் பொறுத்தேன் என்பதை நீங்களே பார்த்தீர்கள். மேலும் பொறுக்க இயலவில்லை. ஒரு இளவரசன் அதுவும் நாளைய மன்னன் நாக்கில் இவ்வளவு கேவலமான வார்த்தைகள் வந்தால் குடிமக்கள் தடிமக்களாவதில் விந்தையில்லை.”

     “வீரபாலா, நான் அத்தனையும் கேட்டேன். நீ எவ்வளவு தான் பொறுப்பாய்? ஆனால் இவன் இப்படி...” அரசி கெஞ்சினாள். இளைஞன் புன்முறுவலுடன் “இளவரசர் உயிருக்கு ஆபத்து எதுவுமில்லை. உள்ளே அழைத்துச் செல்லுங்கள். சாதாரணமாக எழுந்திருக்கச் செய்கிறேன்” என்று வாக்களித்தான்.

     காவலர்கள் இளவரசனைத் தூக்கிச் சென்றனர். பின் தொடர்ந்தான் மற்றவர்களுடன் வீரபாலனும். கட்டிலில் கிடத்தப்பட்டவன் மீது இலேசாக ஒரு தட்டுத் தட்டியதும் துள்ளியெழுந்து உட்கார்ந்தான் மும்முடி! அனைவரும் வியப்பிலிருந்து விடுபடுவதற்குள் மும்முடி சுதாரித்துக் கொண்டு “என்ன நடந்தது? யார் என்னை இப்படி அடித்து வீழ்த்தியது?” என்று கத்தினான். ஆனால் எதிரே நின்ற வீரபாலன் மிக அலட்சியமாக “நான் தான்” என்று நிதான வார்த்தைகளில் பதிலளித்ததும் பதறியெழுந்தான் இளவரசன். ஆத்திரங்களால் மீண்டும் ஏதோ சொல்லுவதற்குள் குறுக்கே புகுந்தவர் வேறு யாரும் இல்லை. மும்முடியின் தாயார் மாமனும், சோழமாதேவியின் தந்தையும் சோழ அரசின் ‘மூளை’ என்று மதிக்கப்படுபவருமான காடவர் கோன்!

     “மும்முடி! நீ ஒரு இளவரசன் என்பதை மறந்து ஏச்சின் மூலம் விஷவார்த்தைகளை உதிர்த்ததைப் பொருட்படுத்தாமல் இந்த இளைஞன் பெருந்தன்மையுடன் இருந்ததை நானே நேரில் பார்த்தேன். உன் நாக்குதான் உன் எதிரி என்றால் உனது முன்கோபம் இந்தச் சோழ நாட்டுக்கே எதிரி. இப்போது இந்த மாவிரனையும் எதிரியாக்கிக் கொண்டுவிட்டாய். அவன் விரும்பியிருந்தால் நீ மீண்டும் உயிர் பெற்றிருக்க முடியாது. தீரனான வீரசோழனையும், புத்திமானான விக்கிரமசோழனையும் பெற்ற என் மகள் உன்னையும் பெற்றாளே, அந்தப் பாவத்துக்குப் பிராயச்சித்தமேயில்லை...” என்று கர்ஜித்துவிட்டு வீரபானைப் பார்த்து அடக்கமாக, “இளைஞனே, நீ யாராயினும் மிக்க உயர்குடிமகன் என்பதைக் காட்டிவிட்டாய். உனக்கு இந்தச் சோழ குலம் வெகுவாகக் கடமைப்பட்டு விட்டது. இவன் உதிர்த்த விஷச்சொற்களை மறந்துவிட்ட உன்னுடைய பெருந்தன்மையை நாங்கள் என்றும் மறக்கமாட்டோம்! எனினும் ஏனைய இளவரசர்களும் இவனைப்போலவே தான் என்று எண்ணித் தவறான முடிவுக்கு வந்துவிடாதே என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று இறைஞ்சி நின்றார்.

     வீரபாலன் கண்கள் கலங்கிவிட்டன. “களத்திலே மாற்றாரைக் கலக்கி வெற்றிக்களிப்பில் நிமிர்ந்தாடும் காடவர்கோனவர்களே வணக்கமுடன் ஒன்று கூற விரும்புகிறேன். இளவரசர் எத்தகையவர் என்பதை நான் முன்பே அறிந்தவன். எனவே அவர் ஆத்திரச் சொற்களைப் பற்றி அக்கரையில்லை. ஆனால் அவர் சார்பில் நீங்களே வந்து என்னிடம் மன்னிப்புக் கோருவது நியாயமில்லை. நான் இந்தக் கணமே இவற்றையெல்லாம் மறந்துவிடத் தயார். எனினும் நீங்கள் இவர் சார்பில் பேசுவதால், இவர் சார்பாக ஒரு உறுதிமொழி அளிக்க முடியுமா என்று அறியக்காத்திருக்கிறேன்” என்றதும் காடவர்கோன் சற்றே திடுக்கிட்டார். ஆனால் அரசி முன் வந்தாள்.

     “வீரபாலா, அந்த உறுதியை நான் அளித்தால் போதுமா?” என்று கேட்டாள் பரபரப்புடன்.

     “பயனில்லை மாதேவி. காடவர்கோன் கொடுத்தால் ஓரளவு பயனுண்டு. தவிர, நான் ஏற்கெனவே பேரரசியாரிடம் ஒரு உறுதி கூறியிருக்கிறேன். அதில் மாறுதலில்லை. ஆனால் இப்போது கேட்பது வேறொன்று!”

     “அது என்ன இளைஞனே?” என்று கேட்டார் காடவர்கோன்.

     “வேறு ஒன்றுமில்லை. நீங்களும் விவரம் தெரியாமல் உறுதியளிக்கத் தயங்குவது புரிகிறது. சொல்லிவிடுகிறேன். சாவகத் தூதுவரின் ஆலோசகர்களான சிசுநாகனும், பவநாகனும் இப்போது நம் இளவரசரின் நண்பர்களாயிருக்கிறார்கள். இந்த நட்பு நிரம்பவும் விபரீதம் விளைவிக்கும். ஆதலால் இப்பொழுதே தடுத்து நிறுத்துங்கள்” என்றான் வீரபாலன். ஆனால் இதைத் தொடர்ந்து இளவரசன் “ஆ! ஆ!” என்று இரைந்து சிரித்தது கண்டு காடவர்கோன் கூடத் திகைத்துப் பிரமித்துவிட்டார்.

     “என் கூட நட்பாயிருக்கும் தகுதி எவருக்குண்டு என்று விதி வகுக்கக் கூடவா துணிந்துவிட்டாய்?” என்று இகழ்ச்சியும் குரோதமும் கலந்த குரலில் கேட்டான். வீரபாலன் ஒரு முறை சுற்றுமுற்றும் பார்த்தான். பிறகு சட்டென்று “காடவர்கோனே நீங்கள் உறுதியளிக்க வேண்டாம். சூடு கண்டால் தான் பூனைக்குத் தெரியும். நான் வருகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டுவிட்டான் அங்கிருந்து.