![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
பொன்னகர்ச் செல்வி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 11. பாதை மாறிடினும் உண்மைக் கருத்து மாறாது! சாவகத் தூதுவர் ஸ்ரீ சாமந்தர் மிகக் குதூகலமாகவே இருந்தார். புத்தமித்திரர் கூட வியக்கும்படியான அளவுக்கு, அவனுக்கென்ன வந்துவிட்டது. இப்படி ஒரேயடியாக மகிழ்ந்து பொங்க என்று சிந்திக்கும் அளவுக்கு, ஆனந்த வாரியில் மூழ்கியிருந்தான்! ஏன் ஆனந்திக்கமாட்டான்?-அவன் போட்டிருந்த திட்டங்கள் ஒவ்வொன்றும் எதிர்பார்த்த வகையில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் போது! அயல் நாட்டுச் சிறுவன் மீது சோழ மன்னனின் ஆத்திரத்தையும் சந்தேகத்தையும் வெறுப்பையு மூட்டி விட்டதால், சிங்களத்துக் கப்பலைத் தன் விருப்பப்படி நங்கூரம் கொண்டு போய்விடலாம். சிதறிப்போன பழைய கப்பலொன்றின் சில தூள்களைக் காட்டினால் போதும்! மும்முடி இப்போதே பாதி நம்பிவிட்டான். இன்னொரு பாதியை மன்னன்தானே நம்பிவிடுவான். வெறும் ஓலைக்கே இவ்வளவு மதிப்பளித்தவன், நிகழ்ச்சிக்கு முக்கியத்துவமளிக்காமலிருப்பானா? மும்முடிதான் எவ்வளவு எளிதில் இவன் வலையில் விழுந்துவிட்டான்! கடல்நாடுடையார் தனது ஆட்களை அனுப்பித் தெற்கு மாகடல் முழுமையிலும் ரோந்து சுற்றுவதையெல்லாம் அப்படிக் கக்கிவிட்டானே? தனது வார்த்தையை அப்படியே நம்பி அந்த அந்நிய நாட்டுச் சிறுபயலைத் தன் வாளுக்கு இரையாக்க முடிவு செய்துவிட்டானே! போதாதா? இலங்கையர்கோன் சோழபூபதியுடன் உறவுகொள்ள விரும்புவதை அந்நாட்டு மன்னனின் மாமன், அமைச்சன் இருவரும் விரும்பவில்லையென்பதை ஆதாரமாகக் கொண்டு தீட்டப்பெற்ற ஒரு திட்டம் இந்த நாட்டையே ஒரு ஆட்டம் ஆட்டி வைக்கும். பிறகு கலிங்கனுக்குக் கனகாம்பரன் காட்டும் வழியில் அவன் கிளம்புவான். கலிங்கனை மணங்குமுறச் செய்ய சூழ்ச்சிகள் செய்யப் போயிருக்கிறான் ரத்னாம்பரன். மும்முடி இம்முறை நம் வசம் செம்மையாகச் சிக்கியிருக்கிறான். இதுவே போதும் முதல் வெற்றிகாண? பிறகு, சாவகத்திலிருந்து கண்டுவந்த கனவுகள் சீக்கிரமே பலித்துவிடலாம்! புத்தமித்திரர் ஞாயிறன்று காலை தமது பிரார்த்தனைகளை முடித்துக் கொண்டு, சிவிகையேறி யக்ஞபூமிக்குச் சென்றார். இராமஸிவர்ம விஹாரத்தின் ஒரு பிரிவு புகாரிலும் இயங்கியது. நாகையிலிருந்தது போன்றே இங்கும் துறவு இருக்கை, யக்ஞ பூமி, தர்மச் சாவடியாகவும் செயல்பட்டன. ராஜகுரு, யக்ஞபூமியில் நோய் நொடியால் வாடுவோருக்குப் பரிகாரப் பிரார்த்தனையும், ஏழை எளியாருக்கு உண்டி, உடை வழங்குதலும், போதனை நாடி வருவோருக்கு உபதேசமும் இங்குதான் நடைபெறும். மதிய உணவுக்குக் கூடச் செல்லாமல் தர்மவிரதர் இங்கேயே பொழுது முழுமையும் கழிக்க நேரினும் வியப்பில்லை. அன்றும் அப்படித்தான். ஆனால் நகரம் எங்கிலும் மும்முடி அந்நியர் வாட்போர் பற்றிய பேச்சே பரபரப்புடன் அளவளாவப்பட்டதால், வெளிநாட்டார் பலர் அங்கும் இங்கும் கூடிக் காரசாரமாக வாதித்ததையும் கவனித்தார் அவர். சிவிகை யக்ஞ பூமியை நெருங்கியதும் அங்கே ராஜசாமந்தனே நின்று வணங்கி வரவேற்றது கண்டு வியப்புக் கொண்டார். திடீரென்று இவருக்கென்ன பக்தி சிரத்தை? அதுவும் யக்ஞபூமியில் மூட்டை மூட்டையாகத் தனங்களை, வண்டிப் பொருள்களை, உடைகளைச் சுமந்து எத்தனை ஆட்கள் நிற்கிறார்கள்! இதென்ன விந்தை? வாய்விட்டுக் கேட்கவும் செய்தார் தருமவிரதர். “வித்தியாதாரா, இதென்ன நீயே இன்று உன்னுடைய உதவியாளர்களுடன் வந்து நிற்கிறாய்? இன்றைக்கென்ன விசேஷம் அப்படி?” “குருதேவா, விசேஷம் முக்காலமும் அறிந்த தங்களுக்கு தெரியாத ஒன்றா? இன்று யக்ஞபூமி தருமப்பணிகள் யாவும் தங்கள் ஆக்ஞையின் மீது என்னாலேயே செய்யப்படுதல் வேண்டும் என்ற அவர் என்னை இங்கு ஈர்த்து வந்தது தவிர சோழப் பேரரசியும், மாமன்னரும்கூடச் சற்று நேரத்தில் இங்கு வந்து, இன்று மதியம்வரை நம்முடன் இங்கு இருப்பார்கள்” என்று பூரிப்புடன் சொன்னதும் அவர் ஒரு நொடி திகைத்தார். குலோத்துங்கனும் அவன் தாயும் இங்கு வருகிறார்கள்! ராஜகுருவுக்கு உண்மையிலேயே இப்பொழுது மகிழ்ச்சி. “அப்படியா? மிக்க மகிழ்ச்சி தரும் செய்தி சாமந்தா. இந்தச் சோழர்களுக்கு எம்மதமும் சம்மதம்தான். நமது அறப்பணிகள் முடிந்த பிறகு மாலைப் பிரார்த்தனைக்கும் அவர்களை இருக்கச் சொல்லுவோம்” என்று அறிவித்ததும் சாவகன் சட்டென்று “அதுதான் இயலாது. இன்று மாலை அவர் கடற்கரை செல்லுவார். நாங்களும்தான்.” “எதற்குச் சாமந்தா? அங்கு அப்படியென்ன விசேஷம்?” “எவனோ ஒரு அந்நியன் நம் சோழநாட்டு இளவரசனை வம்புக்கிழுத்து வாட்போருக்கு அறைகூவியிருக்கிறானாம்!” என்று வெகு அலட்சியமாகச் சொன்னதும் ராஜகுரு திகிலடைந்தார். மும்முடியுடன் வாள்போரிட எந்த முட்டாள் துணிந்தான் என்று பதறிப் போய்விட்டார். “யார் அந்த அந்நியன் சாமந்தா?” “அது ஒரு பெரிய கதை குருதேவா. ஆனாலும் சுருக்கமாகக் கூறிவிடுகிறேன். அந்நியநாட்டு இளைஞனாம் அவன். நாம் ஸ்ரீவிஜயத்திலிருந்து புறப்படும்போதே இவனும் புறப்பட்டிருக்கிறான். எப்படி வந்தான் என்றே இதுவரை தெரியவில்லை. ஆனால் இங்கு ஒரு பெரும் வேவுப்படைக்கு இவன் மூளை என்பதை எப்படியோ சோழ மன்னர் கண்டுபிடித்துவிட்டார்!” “என்ன ஆச்சரியமான கதை சாமந்தா?” “கதையா?” என்று திகிலுணர்ச்சியால் துணுக்குற்றுக் கேட்டான் வித்தியாதர சாமந்தன். ஆனால் புத்தமித்திரர் புன்னகையுடன் “உனக்கும் சம்பா நாட்டுக்கும்தான் பொருத்தமில்லையென்று நினைத்தேன். இப்போது சோழனுக்கும் அவர்களுக்கும்கூடப் பொருத்தமில்லை போலிருக்கிறது!” என்று தம் கேள்வியைத் திசை திருப்பிவிட்டார். “ஆமாம்! உளவு பார்ப்பவர் யாராயிருந்தால் என்ன? உரிய தண்டனை கொடுக்கத்தானே வேண்டும்? அதனால் மும்முடி இன்று மாலை அவனைத் தீர்த்துவிட்டானானால் சோழருக்கும் நிம்மதி, நமக்கும் நிம்மதி இல்லையா?” ராஜகுரு உடன் பதில் தரவில்லை இக்கேள்விக்கு. எனினும் சாமந்தனின் மூளை எவ்வளவு துரிதமாகத் தந்திரமாக வேலை செய்கிறது என்பதையும் ஊகிக்கவில்லை அவர். இளவரசன் மும்முடிச் சோழன் சோழநாட்டில் மட்டுமில்லை, அண்டை நாடுகளிலும் சிறப்புப் பெற்ற தேர்ந்த வாள் வீரன். கத்தி வீச்சில் நீண்டகாலம் பேர் பெற்றவர்களிடம், குறிப்பாக அரபு, யவன வீரர்களிடம் எல்லாம் பயிற்சி பெற்றவன்; இவனுடைய புகழ் சாவகத்துக்கப்பாலும் பரவியிருந்ததால் இவனுடன் வாள் போரிடுவதற்கு ஏனையோர் தயங்கியதில் வியப்பில்லை. ஆனால் வீரபாலன் விஷயம் வேறு! சம்பாவின் செல்வன் யார்? எவன் என்று முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது அறிந்திருப்பான் சாமந்தன். எனவேதான் அவனே அழித்துவிடுவதில் அக்கரை காட்டுகிறான். சம்பா சாவகனை எதிர்ப்பதில் வியப்பில்லை. சாமந்தர் இருவரும் சம்பாவை வென்றதுடன் நின்றார்களா? அந்நாட்டு மக்களையும் அரச பரம்பரையினரையும் எத்தனை பாடுபடுத்தினார்கள்? பலாத்கார மதமாற்றங்கள் ஒருபுறம் இருக்கட்டும். அரண்மனையைத் தரைமட்டமாக்கியது கூடக் கிடக்கட்டும். ஆனால் அரச பரம்பரையினரைத் தீக்குளிக்கச் செய்து துடித்துத் தவித்ததைக் கண்டு களித்துக் கும்மாளம் போட்டதை அவர்களால் எப்படி மறக்க முடியும்? பெரிய சாமந்தன்கூட இந்தக் கோரத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் இவன்... ராஜகுரு பெருமூச்செறிந்தார். ஸ்ரீவிஜயமன்னர் அவர் தம் மனைவி இருவரும் தமக்கு மண்டியிட்டு வணங்கிக் கேட்டுக் கொண்ட கோரிக்கையை நினைவூட்டிக் கொண்டார். “என் மைத்துனர் இருவரும் சம்பாவை வென்றதுடன் நின்றிருந்தால் இவ்வளவுக்கு நிலை முற்றியிருக்காது. அங்குள்ள மக்களை வருத்தி மதம் மாற்றத்துக்காகச் செய்த கொடுமைகளை யாரால் மறக்க முடியும்? அரச பரம்பரையினரைக் கைதுசெய்துதான் கொண்டுவரச் சொன்னேன். ஆனால் சாமந்தன் தன் வெற்றி மமதையில் அவர்களைத் தீக்கிரையாக்கியிருக்கிறான். காலஞ்சென்ற சம்பாவரையரின் மகளைத் தீண்டியிருக்கிறான். தான் ஒரு தாய், குமரியல்ல என்று அவள் வற்புறுத்திக் கூறியும் இவன் கேட்கவில்லை. காமம் கண்களை மறைத்துவிட்டன. அவளோ தப்பியோடினாள். அவளைத் தேடி இந்தக் காமந்தகாரன் சம்பா நாடு முழுமையும் எத்தனை கொடுமைகளை இத்தனைக் காலமாகப் புரிந்திருக்கிறான். இவற்றை எவரால் மறக்க முடியும்? ஒவ்வொரு நாளும் இவன் உயிர் ஆபத்தில் இருக்கிறது. மனைவியும் மகளும் ஒன்று என்ற இவன் புத்தி இப்படிப் போனது கொடுமையிலும் கொடுமை. என்றாலும் இவன் என் மைத்துனன். இவனைக் காக்க வேண்டும் என்ற கடமை, என் மனைவிக்கு நான் கொடுத்த வாக்கு, இரண்டுமாகச் சேர்ந்து தங்களிடம் நான் இக்கோரிக்கையை அறிவிக்க நேர்ந்திருக்கிறது. இவனைச் சோழநாட்டுக்குத் தூதுவனாக அனுப்புகிறேன். இவன் நினைவைச் சம்பா மக்கள் மறக்கும்வரை அங்கேயே இருக்கட்டும். நீங்கள் இவன் கொடுமைகளை மன்னித்து இவனைத் திருத்திக் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். சோழமாதேவியிடமும் மன்னரிடமும் உங்களுக்குள்ள செல்வாக்கு இவனைக் காத்துச் சீராக்க முடியும். அங்குவரை இவனுடைய பகைவர்கள் வரமாட்டார்கள். மீறி வந்தாலும் ஒரு தூதுவனைப் பாதுகாக்கும் பொறுப்பு சோழர்களைச் சேர்ந்ததாதலால் ஓரளவு நிம்மதி கொள்ளவும் இடமிருக்கிறது.” ராஜகுரு உண்மையான அடிப்படைத் தத்துவங்களை பௌத்த சமயத்தின் புனிதமான கருத்துக்களில் ஊறி ஊறிப் போதனையில் மட்டுமின்றி செயல் ரீதியில் கடைப்பிடிப்பதிலும் உறுதியானவர். எண்பதாண்டைத் தாண்டிய பிறகும் இருபதாண்டு வலுவும் திண்மையும் அவரிடம் இருப்பதற்கு இந்த உறுதி, உண்மைப் பற்று, பிரும்மசாரியம் ஆகிய மூன்றும்தான் என்று அனைவரும் கருதியதில் வியப்பில்லை. பிறருக்காக நெறிக்குப் புறம்பான எதையும் செய்யும் நோக்கமோ விருப்பமோ கொள்ளாத அவர் தமக்காகவும் எதையும் செய்ய அக்கரை கொள்ளாதவர். எனவே சாமந்தன் ராஜதூதுவன் ஆக நியமனமான அந்த நாளிலேயே தமது பணி, சோழநாட்டில்தான் என்பதுடன், அது எத்தகையதாயிருக்க முடியும் என்பதையும் நன்கு முடிவு செய்து பிறகுதான் தமது நாட்டைவிட்டுப் புறப்பட்டவர் அவர். மன்னன் தன் மைத்துனனுக்காக, மன்னன் மனைவி தன் உடன் பிறந்தவனுக்காகப் பாதுகாப்புக் கோரிக்கை விடுத்ததைக் கண்டு திகைத்துவிடவில்லை அவர். ஆனால், தனது கடமைப் பொறுப்பையும் அவர், அவர்களுக்கு அப்பொழுதே விளக்கிவிட மறக்கவில்லை! “சம்பாவின் ஹிந்து சாம்ராஜ்யம் சிதைந்துவிட்டது. இது யாரால், எப்படி, ஏன் என்னும் ஆராய்ச்சி நமக்குத் தேவையில்லை. ஆனால் நொடிந்து வீழ்ந்துவிட்டவர்களைப் பராமரிக்கும் பணியை விட்டுவிட்டு நலிந்தவரைக் கொடுமைப்படுத்தியது நமது சமயப் பண்பிற்கு முற்றிலும் மாறானது. ஆயினும் ஆயிரமாண்டுகளாகச் சிதையாத ஒரு கட்டுக்கோப்பான ஹிந்து சமயப் பெருநிலமாக பாரதம் விளங்குகிறது. நமது புத்தபிரான் அவதரித்த நாட்டில் இன்று புத்த சமயத்துக்குப் பதிலாக இந்து சமயம்தான் நிலைத்துள்ளது. இதை மாற்றும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. மாமன்னன் அசோகன் செய்த முயற்சிகளைக் காட்டிலும் வேறு யார் என்ன செய்துவிட முடியும்? அந்த மகத்தான புராதனமான ஹிந்து சமயம் ஏன் இன்றளவும் நலியவில்லை? காரணம் ஒன்றே ஒன்றுதான். சத்தியம் என்று நாம் கூறும் ‘நேர்மையான உண்மை’ அடிப்படையாக இருப்பதால்தான் அதை அசைக்க, சிதைக்க, அழிக்க யாராலும் இதுவரை முடியவில்லை. இனியும் முடியாது. ஆனால் ஒரு கேள்வி எழலாம். சம்பா நாடு அழிந்துவிட்டதென்று! நாடுதான் அழிந்ததேயன்றிச் சமயம் அழிவுறவில்லை. அதை நாம் அழிக்கவே முடியாது என்பதற்கு இன்று நம்மிடையே அந்தச் சமயத்தின் பலமான நிழல் பரவியிருப்பதே சான்றாகும். நாம் பௌத்தர்கள் என்றாலும் ஹிந்து சமயத்தின் உண்மையை ஏற்காமலிருக்கவில்லை. எனினும் இன்று சம்பா தோல்வி கண்டுவிட்டது. அந்த நிலைக்கு நாம்தான் காரணம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் நலிந்தவர்களை மேலும் சித்திரவதை செய்தோம் நாம் என்று இறுமாந்திருப்பதில் நியாயமில்லை. அவர்கள் ‘ஒருநாள் தருமம் வெல்லும்’ என்று பொறுத்திருப்பார்கள். நாம் வென்றுவிட்ட மமதையில் வெறியர்களாகி விட்டோம். நமது வெறியாட்டத்தின் தலைவர்களாகச் சாமந்தர்களைக் கொண்டாடினோம். வெற்றித் திமிரையும், ஆசை வேகத்தையும், காமம் கண்மூடித்தனத்தையும்தான் உண்டாக்கும். இதற்கு உதாரணமே ராஜ வித்யாதர ஸ்ரீசாமந்தன். நாம் என்ன செய்தாலும் சரி, நியாயமாகவே செய்வோம். புத்தபிரான் ஆணையாக நேர்மையாகவே நடப்போம். என்றும் இறுதியில் வினை விதைத்தவன் தினையறுக்க முடியாது. வினையைத்தான் அனுபவிக்க வேண்டும் என்னும் உண்மையை மறந்துவிடக் கூடாது...” ராஜகுருவின் நினைவுத் திரையில் முன்னர் நிகழ்ந்ததனைத்தும் நிழலுருவங்களாக நீண்டு வந்து ஊடாடின! முரசுகள் முழங்க நகார்கள் உடன் ஒலிக்க, வாத்தியங்கள் இசைபாட சோழ பேரரசியும், சோழ மாமன்னனும் நமது பௌத்த விஹாரத்துக்கு வந்துவிட்டனர் என்று ஒரு காவலன் அறிவித்த பிறகுதான் சட்டென்று எழுந்து அவர் தமது நினைவுத்திரையை நீக்கி, விஹாரத்தின் பெரு வாயிலுக்கு ஏகினார்! ராஜசாமந்தன் மிகத் தேர்ந்த ராஜதந்திரியோ இல்லையோ, அந்தச் சமயத்தில் இவன் நடந்து கொண்ட முறை மிகவும் சாதுரியமான ஒன்று! அவனே வாயிலில் நின்று விநயமாக வணங்கி வரவேற்றது கண்டு மன்னரும் அவர்தம் அன்னையாரும் மனம் மகிழ்ந்தனர். ராஜகுரு தியானத்தில் இருக்கிறார். இதோ சில நொடிகளில் அவர் ஈண்டு எழுந்தருளுவார் என்று மிக மிகப் பயபக்தியை வார்த்தைகளில் இணைத்து சோழனின் மனதில் இவ்வளவு மதிப்புக் காட்டுகிறானே தனது குருவுக்கு இந்தச் சாவகன் என்னும் நினைவையும் எழச் செய்துவிட்டான். காலணிகளையும், கவசங்களையும், இதர அணிகளையும் கழற்றித் தமது உதவியாட்களிடம் நீட்டினான் மன்னன். அப்போதுதான் அந்த அணிகளை வழங்கும் கைகளுக்குடையவனை நேருக்கு நேர் சந்தித்தன சாவகனின் கண்கள். ஒரு நொடி கண்கள் படபடத்து முகம் திகில் களை படர்ந்துவிட்டது, மன்னனும் கவனித்துவிட்டான்! ஆயினும் அடுத்த நொடியே எப்படியோ சாவகன் சுதாரித்துக் கொண்டுவிட்டான். எனினும், அவனுக்குப் பக்கத்தில் நின்ற, அம்பா சகோதரர்கள் ஏதோ ஒரு பேயைக் கண்டுவிட்டவர்கள் போல் அப்படியே அயர்ந்து நின்றுவிட்டார்கள். ஏன் அயரமாட்டார்கள்? எவனை உளவாளி, அன்னிய வேவுகாரன் என்று ஓலை விடுத்து உறுதிப்படுத்தினார்களோ அவன் அரசனின் மெய்க்காவலனாக வந்தால்... மன்னனுக்குப் புத்தி பேதலித்துவிட்டதா... அல்லது தாங்கள் கண்களில் ஏதாவது கோளாறு உண்டாகிவிட்டதா என்று திகைத்ததில் வியப்பென்ன? “தாங்கள் இன்று இந்த விஹாரத்துக்கு எழுந்தருளியது எங்கள் பெரும்பாக்கியம்” என்று சோழமாதேவியிடம் சாமந்தன் மிக அடக்கத்துடன் அறிவித்த போது பேரரசி அமைதியுடன் சிறுநகை பூத்து “சாவகத்தவரே! நீங்கள் என்றும் விநயமாகவும் அடக்கமாகவும் இருப்பது காணமிக்க மகிழ்ச்சி. இன்று போல என்றும் இப்படியே இருந்து வருவீராக” என்று கூறியதும் அவனை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. ‘கூழைக் கும்பிடு போடும்போது குள்ளநரித்தனம் அரச குடும்பத்தினரிடம் இருக்காது என்பது உண்மையானாலும் நீ இப்போதுதானே அரசகுடும்ப உறவைப் பெற்றவன்’ என்று குத்திக்காட்டுவது போலிருந்தது அந்தச் சொற்கள்! அளவுக்கு மீறிய விநயமும் அடக்கமும் சாவகனின் பேச்சில் கலந்திருப்பதையும் குழைந்து பேசுவதையும் மேற்கொண்டு விரும்பாத மன்னர் தனது மெய்க்காப்பாளனான வீரபாலனிடம் திரும்பி “இந்த விஹாரத்தை இங்கு அமைக்க விரும்பிய சூளாமணிவர்மர் பெயரையே இதற்கு வைக்கும்படி எனது முப்பாட்டனார் அனுமதி வழங்கி சோழ குடும்பத்துக்கு ஸ்ரீவிஜயத்தாரிடம் உள்ள மதிப்பைக் காட்டினராம். நாகையிலுள்ள மூலவிஹாரத்தின் மாதிரி இது!” என்று ஏதோ தமக்குச் சமான ஒருவரிடம் பேசுவது போன்று அறிவித்ததும் சாவகன் வாய் திறக்காமல் பற்களைக் கடித்தான்! பேரரசியோ தமக்குப் பிடித்தமானதொரு நிகழ்ச்சி பற்றிய நினைவைத் தமது மகன் உண்டாக்கிவிட்ட உணர்ச்சி வேகத்துடன் தமது இளம்பருவத்தில் இது பற்றித் தாமறிந்த விவரம் ஒன்றை மனம்விட்டுச் சொல்லலானார். “ராஜராஜப் பெரும்பள்ளி என்றுதான் அமைக்க வேண்டும் என்று சாவகத்தார் முடிவு செய்து ராஜகுருவுடன் ஒரு பெரும் குழுவே வந்தது. சைவம் தழைத்தோங்கிய சோழ நாட்டில் நாகையில் ஒரு பெரும் பௌத்தர் மடம் அனுமதி வழங்கிய பெருந்தன்மைக்காகத் தமது மன்னர் அதன்மாதிரி உருவான இதற்கு இப்பெயரை வைக்க விரும்பியதைப் பேரரசர் ஏற்கவில்லை. சூளாமணிவர்மர் பெயர்தான் இந்த மடத்துக்கு வைக்கப்பட வேண்டும் என்று உறுதியாக சோழ மன்னர் அறிவித்துவிட்டதால் ஸ்ரீவிஜயத்தினர் ஏற்றனர். இங்குச் சிலர் இதை எதிர்த்தும் கூட சாவகர்களிடம் நமக்குள்ள பெரும் அன்பையும் மதிப்பையும் காட்ட இந்த விஹாரத்தை ஒரு தெய்வீகச் சின்னமாகவே அமைத்துவிட்டனர்...” பேரரசி இப்படிச் சொல்லிவிட்டு “என்ன சாமந்தரே நான் கூறுவது உண்மைதானே?” என்று ஒரு கேள்வி கேட்டதும் எங்கோ மனதைப் பறிகொடுத்திருந்த சாவகன் சட்டென்று விழித்துக் கொண்டவன் போல “ஆமாம்! ஆமாம்!” என்று தலையை ஆட்டி வைத்தார் இன்னதென்று புரியாமல்! அவனுடைய மனநிலை விவரிக்க இயலாத ஒரு குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது. அரசன் தனக்குச் சமதையாக மதித்து அந்த வீரபாலனுடன் பேசியதில் அவனுக்கேற்பட்ட சினம் எல்லை கடந்துவிட்டது. தனது ஓலைக்குரிய மதிப்பை மன்னன் கொடுக்காததுடன் தன்னையே அவமதிப்பது போல அவனைத் தனது மெய்க்காப்பாளனாகவும் நியமித்துக் கொண்டு உடன் அழைத்து வந்திருக்கிறானே என்று உள்ளம் பொருமிக் குமுறியது. எனினும் தானே எந்த ஒரு முடிவுக்கும் வர இயலாமல் தமது அந்தரங்க ஆலோசகர்களின் யோசனைப்படிதான் எதுவும் செய்ய வேண்டும் என்ற முடிவுடன் பற்களைக் கடித்து வாயை மூடிக் கொண்டிருந்தான். எனவே இடையே புகுந்த ஒரு கேள்விக்குப் பதில் கூறத் தெரியாமல் அவன் விழித்துத் தவித்ததில் வியப்பேது! ராஜகுரு வந்துவிட்டார். மன்னன் பணிவுடன் வணங்க பேரரசியும் மரியாதையுடன், “தங்களையும் கண்டு, தாங்கள் தெய்வ வழிபாட்டிலும் கலந்து, புத்ததேவன் அருள் என்றும் எங்களுக்கும் இந்த நாட்டுக்கும் உண்டு” எனக் கூறி “வாருங்கள் உள்விஹாரத்துக்கு!” என்று அழைத்தபடி முன்னே நடந்தார். பேரரசி அம்மங்காதேவி அறுபதாண்டுகளுக்கு முன்னர் இவளைப் பார்த்த நிலைக்கும். இன்றைய நிலைக்கும் சற்றேதான் மாறுதலிருந்தது அவரிடம்! அப்போது அவர் இருபதாண்டிளைஞர். மகாஞானி குணமித்திரரின் முதல் மாணவன் என்ற முறையில் அன்று சோழநாட்டுக்கு வந்திருந்தார். அழகான, அருள் வடியும் முகத்தில் அறிவுக்களையும் நிரம்பியிருந்தது. பதினாறு பிராயத்தையே எட்டியிருந்த அம்மங்காதேவி கீழைச் சாளுக்கிய இளவரசரான ராஜராஜனை மணப்பதாக உறுதியாயிருந்தது. அந்தத் திருமணத்தின் போது குணமித்திரரும் இருக்க வேண்டுமென்று முதலாம் ராஜேந்திர சோழ மாமன்னர் கோரிய போது இருவரும் உடனிருந்தார். அந்தத் திருமண நிகழ்ச்சியே ஒரு மாபெரும் நிகழ்ச்சி! எனவே, அந்தக்கால முதலே புத்தமித்திரர் சோழப் பேரரசிக்கு அறிமுகமான அறப்பாதுகாவலர் ஆவார். முதிர்ந்த பிராயத்தினரான பிறகும் அவருடைய அந்த ஒளிவீசும் முகம், இங்கிதப் பேச்சு, விநயசுபாவம், தன்னடக்கம் மாறவில்லை என்பதைப் பேரரசி கண்டு கொண்டார். பத்தாண்டுகளுக்கு ஒருமுறை புத்தமித்திரர் இந்நாட்டுக்கு வருவதுண்டு. வந்தவர் இரண்டு மூன்று ஆண்டுகள் கூடத் தங்குவதுண்டு. அப்போதெல்லாம் சோழ நாட்டு நிலையை நன்குணர்ந்தவரான புத்தமித்திரர் அரசர்கள் அரசியர் ஆகியவருடன் தொடர்பு கொள்ளத் தவறவில்லை. ஆயினும் அம்மங்காதேவி சோழநாட்டிலிருந்து சாளுக்கிய நாடு சென்று திரும்பும் போதெல்லாம் இவருடன் தெய்வீக விஷயங்களையும், அவர்தம் நாட்டு நிலை பற்றியும் அளவளாமலிருப்பதில்லை. மகன் குலோத்துங்கன் பிறந்துவிட்டான். சோழ நாட்டில் சிலகாலம், சாளுக்கிய நாடு சிலகாலம் என்று வாழ்ந்த அம்மங்காதேவி, தமது மகன் சாளுக்கிய நாட்டுக்கு மட்டுமின்றிச் சோழநாட்டுக்கும் ஆளுந்தகுதியும் பெற வேண்டுமென்று விழைந்ததற்கு சில காரணங்கள் உண்டு. அந்தக் காரணங்கள் கூட புத்தமித்திரருக்குத் தெரியும்! ஏனென்றால் முன்பு அவற்றையெல்லாம் மனம்விட்டுச் சொல்லியிருக்கிறார் இவரிடம் அம்மங்காதேவி! நேர் நிலைமை ஏது இவருக்கு? என்று வாதித்தவர்களைப் பேரரசி நமது திறமையால், மக்களிடையே தாம் பெற்றிருந்த செல்வாக்கால் எப்படியோ, சமாளித்து மனம்மாறிய காலத்தில் புத்தமித்திரர் இங்குதான் இருந்தார். பின்னர் கலிங்கம், வேங்கி, கேரளம், கிளர்ந்தெழுந்த போதெல்லாம் சோழன் மிகவும் திறமையாக நிலைமையைச் சமாளித்து வெற்றி கண்ட போதெல்லாம் புத்தமித்திரர் இங்குத் தங்க நேர்ந்தது. பேரரசி தமது சைவசமயப் பற்றுக்கு வேண்டிய விவரங்களை, அறியும் ஆர்வத்துடன் அவ்வப்போது விவாதம் நடத்துவதுண்டு. தவிர நாட்டு அரசியல் சூழ்நிலையை எந்த அளவுக்குத் தெரிவிக்க வேண்டுமோ அந்த அளவுக்கு இவரிடம் அறிவிப்பதுண்டு. மகன் அடிக்கடி கடல் கடந்து செல்லும் போதெல்லாம் பிரார்த்தனைப் பாணிகளிலேயே ஈடுபட்டுத் தமது வருத்தத்தை வெளிக்காட்டாமல் அரசி இருப்பதற்கு உறுதுணையாக இருந்து உதவியவர் புத்தமித்திரர்தான் என்பதை ஒரு சிலரே அறிவர். இதனால்தான் அவர்தம் தன்னடக்கம், நேர்மை, உண்மைப் பற்று ஆகியவற்றையும் அறிந்த சோழமாதேவிக்கு மிக்க மதிப்பு; மாற்றாரிடத்தும் மதிப்பும் அன்பும் செலுத்தும் அரசியிடம் அவருக்கும் பேரன்பு ஏன்? தந்தைக்குரிய பாசம் என்று கூறலாம். |