உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
பொன்னகர்ச் செல்வி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 14. திருவிழாக் கோலம் பூம்புகார் மீண்டும் திருவிழாக்கோலம் பூண்டதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. பட்டினப்பாக்கத்துப் பெருங் குடிமக்கள் திசையாயிரத்தைந்நூற்றுவர் தலைவரும் சோழ நாட்டின் பெருங்கடல் வணிகருமான திசையாயிரத்தைந்நூற்றுவர் முதலானோர் கடல்நாடுகளில் தமது பயணத்தை முடித்துக் கொண்டு ஏராளமான செல்வத்துடன் அயல்நாடுகளிலிருந்து கிடைத்த பல உயர்ந்த விலைமதிப்பற்ற புதுமைப் பொருள்களுடன் வருகிறார் என்ற செய்தி அறிந்தனர். அக்காலத்திலும் வணிகப் பெருமக்கள் பொன்னும் பொருளும் அளவிறந்ததாகப் பெற்றிருந்தால் எந்த ஒரு பொது அமைப்பிலும் முதன்மையாக இருந்தனர். தவிர திரை கடல் ஓடித் திரவியம் தேடிவரும் தங்கள் குலத்தலைவர் நீண்ட காலம் அயல்நாடுகளுக்குக் கடல் ஓடிய பிறகு திரும்புகிறார் என்றால் பத்துத் தினங்கள்கூட கரைகண்ட விழா நடத்துவர் பட்டினப்பாக்கத்தில் வாழும் வணிகப் பெருங்குடியினர். வீதிகளையெல்லாம் விதம்விதமாக அலங்கரித்து வண்ணக் கோலமிட்டு, பூங்குலைகளைச் சார்த்தி தமது மாளிகை வாயில்களில் அடுக்குத் தோரணங்களால் அழகுபடுத்தி, அண்டை அயலாரையெல்லாம் அழைத்து விருந்தோம்பி வெகுவைபவமாகக் கொண்டாடுவர். வணிகப் பெருந்தலைவர் கடல்துறையிலிருந்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவர். பிறகு உற்றார், உறவினர், தோழர்கள், தொழில் பங்குதாரர்கள் புடைசூழ அயல்நாடுகளிலிருந்து கொணர்ந்து அதிசயமான விலையுயர்ந்த பொருள்களுடன் மாமன்னர் மாளிகைக்கு ஏகித் தம் வணக்கத்தைத் தெரிவித்துக் கடல் கடந்த நாடுகளில் நிலவும் வாணிபம், அரசியல், பொதுவாழ்வு நிலைகளைப் பற்றி வெகுவாக விளக்குவார். பிறகு, கடல் நாடுடையார் மாளிகைக்கும் சென்று அவருக்கும் தமது வணக்கத்தையும், வரிசைகளையும் வழங்கி இடைவழிச் செய்திகளையும் அறிவிப்பார். மாலையில், தெய்வசன்னிதானம் சென்று வந்தவனை பூசனை செய்து வழிபடுவார். மறுநாள் கடல் அன்னைக்குப் பூசைகள் பல நெடுநேரம் நடைபெறும்; கடற்கரையில் இது சம்பந்தமாக மூன்று தினங்கள் தொடர்ந்து கடற்றெய்வப் பூசனைத் திருவிழா நடைபெறும். நகரத்தில் உள்ள அத்தனை வணிகர்களும் தலைவருக்கு விருந்துகள் நடத்துவர். தலைவர் தவிர அவருடன் திரும்பிய உடன்பட்ட வாணிகர்கள், அயல்நாடுகளைச் சேர்ந்த வாணிகர் பலரும் இவ்விருந்து வரவேற்புகளில் கலந்து கொள்ளுவதுண்டு. மருவூர்ப்பாக்கத்தில் இந்த வணிகப் பெருமக்களுடன் பல்வேறு வகை உதவியாளர்களாகச் செல்லும் சாதாரண குடிமக்கள் குடும்பத்தினர் இருந்ததால், அவர்களும் தங்கள் சக்திக்கியன்றவரை வைபவமும் நடத்துவதுண்டு. அக்காலக்தில் கடல்நாடுகளுக்குச் சென்று வருவதென்றால் ஐந்தாறு ஆண்டுகளாகும். சென்றவர் சுகமாக உயிருடன் திரும்ப வேண்டும் என்று அவர்தம் இல்லக்கிழத்தியார் நீண்ட கால நோன்பிருப்பதுண்டு. இதன் காரணமாகத் திருக்கோயில்களில் பல பூசைகள் நடைபெறுவதும் திங்களில் சில நாட்கள் விசேஷமாக மதிக்கப்படுவதுமுண்டு. தங்கள் கணவர் திரும்பியதும் எந்தப் பெண்டிருக்குத்தான் மகிழ்ச்சி ஏற்படாமலிருக்கும்? மகன் சிறப்புடன் திரும்பியது. கண்டு நிம்மதி தோன்றாதிருக்கும்! தவிரவும் சென்றவன் நிறைந்த திரவியத்துடன், பொருள்கள் அணிமணிகளுடன் திரும்பியிருக்கும் போது எப்படி அளவுகடந்த ஆனந்தம் கொள்ளாதிருக்க இயலும்? இதன்வழி பிறப்பதுதானே விழாவும் விருந்தும்! களிப்பும் கேளிக்கையும்! எனவேதான் புகார்ப்பெருந்துறை நகர் மிக்கசிறப்பாகக் கரைகண்ட விழாவினைக் கொண்டாடியது இயல்பே. இப்படி ஒருபுறம் இருக்க இன்னொருபுறத்தில் சோழநாட்டின் திருக்கோயில்கள் அனைத்தையும் சேர்ந்த தெய்வ நெறித்தொண்டர்களும், அறநெறிப் பணியாளர்களும் புகாரில் குழுமியிருந்தனர். ஆடுதுறைப் பெருங்கோயில் திருப்பணி முடிவுற்ற காலமது. அறுபதாண்டுக் காலம் சோழநாட்டின் மாபெரும் சேனைத்தலைவராகப் பணியாற்றித் தொண்ணூற்றாறு போர்களில் கலந்து வெற்றி நூறெனக் கண்ட வாகை வீரர் என்று நாடெல்லாம் புகழ்ந்த நலவீரர், அறப்பணியாளராக மாறி ஆண்டவன் தொண்டிற்கே தம்மை அர்ப்பணித்துக் கொண்டுவிட்ட சங்கர அம்பலக்கோயில் கொண்டார் தலைமையில் தெய்வத் தொண்டர்களின் பெருந் திருக்கூட்டமே புகார்நோக்கி வருகிறது! எனவே வீதிகள்தோறும் தெய்வீக முழக்கம். பெரும்மாளிகைகள் தோறும் அருள்வாக்கு வந்தனைகள். இல்லங்கள்தோறும் நல்லறச் சொற்கள் என்று எங்கு திரும்பினாலும் தெய்வத்திருப்பணி எதிரொலியே நகரெங்கும் பரவிச் சிறப்புற முழங்கிக் கொண்டிருந்தது. அடியார்களின் அற்புதப் பணிகளில் திருவீதிப் பாட்டுக்களில் உயிர்த்து மெய்ம்மறந்த பெரியோர்கள், தொண்டர்களின் பசிதாகம் தீர்க்கப் போட்டியிட்ட நல்லோர்கள், இப்படியாக நகரம் முழுமையும் பொது நலமே வளமாக நிலவி நிறைந்திருந்தது. இன்னொரு புறத்திலும் வேறு வகையில் ஒரு விழாக் கோலம்! கடற்கரையிலே, கானகத்திலே, பூந்தோட்டத்திலே, ஆற்றங்கரைகளில் அருவியோரத்தில் கூடியவர் யாராயினும் ஆணாயினும் அரிவையராயினும் விழாவைக் கூட சற்றே மறந்து அளாவியது அடுத்து நடைபெறவிருக்கும் வாட்போர் பற்றித்தான்! பொற்கொடி சில சமயம் தனது நிலை கண்டு வருந்துவதுண்டு. சோழ இளவலான தனது கணவன் இவ்வளவு முன் கோபியாயிருக்கிறானே, இதே கோபத்துக்கு இவனுடைய திறமையும் இலக்காகிவிட்டால்... அதன் முடிவு பற்றி நினைத்துப் பார்க்கவும் அஞ்சினாள் அவள்! எனவேதான் தனது நாத்தியுடன் அரண்மனைவிட்டு வரவும் மறுத்துவிட்டாள் அச்சமும் கலக்கமும் தாங்காது. அண்ணி பொற்கொடிக்குள்ள கவலை இரட்டிப்பாகிவிட்ட நிலையில் சோழர் செல்வி கடற்கரைக்குத் தோழியர் புடைசூழ வந்திருந்தாள். தனது அண்ணியையும் அழைத்து வரத்தான் முயன்றாலும் பயனில்லை. மறுநாள் வாட்போர் முடிவைப் பற்றி முதலில் எல்லோரும் ஒரே மாதிரிதான் அதாவது மும்முடியிடம் தோல்வி காண்பான் அந்நிய இளைஞன் என்றே அத்தனை பேரும் கருதினாலும் - நேரம் ஆக ஆக இந்தத் திடமான முடிவிலிருந்து அவர்களே நழுவத் துவங்கினர்! வழக்கம் போல கடலோடும் விளையாட்டில் ஈடுபட்டிருந்த பலரும் தங்களுக்குள்ளேயே நாளை வாட்போர் பற்றி போட்டியிட்டுக் கொண்டனர். மூவர் மும்முடிதான் வெல்லுவான் என்றால் நாலாமவன் தன் கருத்துக் கூறுவதற்குப் பதிலாக மவுனம் சாதிப்பான். எனினும் அயல்நாட்டு அலுவலகத்தினர், பயணிகள் பலர் ஆங்காங்கு கூடும் போதும் மட்டும் அந்நிய இளைஞனுக்கு ஆதரவாகவே கருத்துப் பரிமாறிக் கொள்ளுவதுண்டு. எனினும் இவையெல்லாம் வேளக்காரப் படையினர் கவனத்தைக் கவரவில்லை. இந்தக் கூட்டம் எதிலும் கலந்து கொள்ளாமல் நால்வர் மட்டும் ஒரு ஓரமாக ஒதுங்கி ஏதோ மர்மமாகவே பேசிக் கொண்டிருந்ததுதான் நரலோக வீரனின் தலைமையிலான வேளக்காரப் படையினரின் கவனத்தைக் கவர்ந்தது. தாழம்புதர்கள் நிறையப் படர்ந்து கிடந்த பகுதியில் பரிசல்களிடையே அமர்ந்திருந்த அந்த நாள்வரும் சாவகத்து பேர்வழிகள் என்பதறிய அவர்களுக்கு அதிக நேரம் ஆகவில்லை. எனவே சுறுசுறுப்புடன் தங்கள் காதுகளைத் தீட்டிக் கொண்டனர். நரலோக வீரனின் கையாட்களான கலியனும் மாயனும் மற்றவர்களைப் போலக் கடற்கரை உலாவுக்கென்று வராமல், அந்நிய உளவாளிகளுக்கு உள்ள இடமாயிற்றே இந்தப் பகுதி என்னும் எண்ணத்துடன்தான் வந்தார்கள். சாவகத்துச் சதுரர்களைச் சந்தேகக் கண்கொண்டு பார்த்தாலும் அவர்கள் கண்களில் தென்பட்டு விடவில்லை. மறைவிடத்தில் பதுங்கி உற்றுக் கேட்டனர் உண்மையென்னவென்றறிய. ஏனென்றால் தனித்திருந்த அவர்கள் திருட்டு விழிகளால் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே தமது பேச்சுக்களில் மூழ்கியிருந்தனர். கடல்நாடுடையார் தங்களை எச்சரித்துப் பேசியது பற்றியும், சாவகர் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமென்று விதித்துள்ள வேலைகளையும் எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று தங்களுக்குக் கூறிய யோசனைகளையும் அவர்கள் பறிமாறிக் கொண்டனர். யாரும் தொலை தூரம்வரை இல்லை என்ற உறுதியில் அவர்கள் சற்று அச்சமின்றிக் கூடப் பேசினர் என்றும் கூறலாம். நாணற் புதர் மறைவிலிருந்து வேளக்காரப் படையினரான மாயனுக்கும் கலியனுக்கும் சாவகத்தார் பேச்சைக் கேட்கக் கேட்க திகைப்பும், ஆத்திரமும் பெருகியது. இதென்ன விபரீதமென்று வியந்து கலங்கிவிட்ட அவர்கள் அடுத்த நொடியே அங்கிருந்து புறப்பட்டுத் தமது படைத்தலைவர் இருப்பிடத்துக்கு ஓடினர். மேலும் இந்தச் சதியை வளரவிட விருப்பமில்லை அவர்களுக்கு! சிங்களத்துக் கப்பலில் வந்து கொண்டிருக்கும் நல்லெண்ணத் தூதுக்குழுவின் தலைவர், ராஜகுரு தர்மவிரதர் போன்ற ஒரு பெருந்தலைதான் என்றாலும், சிங்களத்து அமைச்சருக்கு இந்தச் சமரச யோசனைகள் எல்லாம் பிடிக்கவில்லை என்பதை அறிய சாவகனுக்கு அதிக காலமாகவில்லை. புகார் நகரத்தில் இருக்கும் இதர நாடுகளின் தூதுக்குழுவினர்களுடன் தனது பிரதம ஆலோசகர்களான ரத்னாம்பர பீதாம்பரனை தொடர்புகொள்ளச் செய்தான். சிசுநாகன், பவநாகன் இருவரையும் அவர்கள் போக்கில்விட்டு அந்நிய தூதரகங்களில் எவையெவை தனது திட்டங்களுக்கு அனுசரணையாக இருக்கின்றன என்பதறிந்து வரச் செய்தான். இந்தக் குறிப்பிட்ட உளவு வேலைகளில் அவர்களுக்கு ஈடாக அந்தக் காலத்தில் எவருமேயிருந்ததில்லை. ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் போர்முனைகளில் காண முடியாத வெற்றிகளை இந்த ‘நாக’ சகோதரர்களால் ஊடுருவுந் தந்திர முறைகளில் காண முடியும் என்று ஸ்ரீவிஜய மாமன்னரே நம்பியிருந்தார். அவர்தம் நம்பிக்கை மட்டுமில்லை, அந்நாட்டு அரச குடும்பத்துக்குப் பரம்பரையாக அரசியல் ஆலோசனைப் பணியில் முதன்மையாக அமர்ந்திருந்த அம்பர குடும்பத்தினரும் நம்பினர். சமீப காலத்திலே அரச குடும்பத்துடன் உறவுமுறை கொள்ள வாய்ப்புப்பெற்று, கொஞ்சம் கொஞ்சமாக நாடாளும் பணியில் தம்மைத் தலைமையாக்கிக் கொண்டுவிட்ட சிறந்த அரசியல் சதுரர்களான ராஜ்ய வித்யாதர ஸ்ரீசாமந்தனும் மூத்தவனான அபிமனோத்துங்க ஸ்ரீசாமந்தனும் இவர்களைப் பரிபூரணமாக நம்பினார்கள். முதலில் ஸ்ரீவிஜயமன்னர், இந்த அம்பரசகோதரர்கள், நாக சகோதரர்கள் சேர்ந்து ஸ்ரீ சாமந்தனுடன் செல்லுவதை மன்னர் விரும்பாவிட்டாலும் நிர்ப்பந்தம் காரணமாகவே ஒப்பினார். எனினும் ராஜகுரு இருக்கிறார். அவரை மீறி இவர்களால் எந்த விபரீதமும் செய்துவிட முடியாது என்று நம்பியிருந்தார். ஆனால், சாமந்தன் இதயத்தில் வெகுகாலமாக ஒரு பெரும் சாம்ராஜ்யக் கனவு துவங்கி வளர்ந்து விரிந்து கிடந்தது என்பதை ராஜகுரு அறியாமற்போனது எப்படி என்பதுதான் சிலருக்குப் புரியாமலிருந்தது! ஏதோ சாதாரண குடிமக்களைச் சேர்ந்தவர்கள்தான் சாமந்தர்கள் என்றாலும் தங்கள் சகோதரி அரசனின் மனைவியாகிவிட்ட காலத்திலிருந்து தனியொரு தகுதி, உரிமை கொண்டவர்கள் ஆகிவிட்டனர். பிறகு தங்கள் திறமையால், அரசியல் சதுரத்தால் ஸ்ரீவிஜய சாவக சாம்ராஜ்யத்தின் ஆட்சிக்கு இன்றியமையாதவர்களாகிவிட்டார்கள். எனவே இவர்கள் பேச்சுக்கு எதிர்ப் பேச்சென்பது இல்லாது போய்விட்டது. ஸ்ரீவிஜய சாம்ராஜ்யாதிபதி தன்னுடைய ஆளுகைக்குட்பட்ட நாடுகளின் தொகை, சாமந்தர்கள் திறமை காரணமாகத்தான் கூடுகிறது என்று எண்ணியமை; தன்னுடைய சேவையில் நீண்டகாலமாகப் பணியாற்றும் அம்பரர்கள், நாகர்கள் ஆகியோரின் ராஜதந்திர, ரரணுவதந்திர ஆதரவு பூரணமாக அவர்களுக்குக் கிடைத்துள்ளமை, முதிய பிராயம் காரணமாகவோ என்னவோ வளர்ந்து வரும் சாம்ராஜ்யப் பேரரசை இவர்களால் நிறைவேற வாய்ப்புண்டு என்ற நினைவு... இப்படியாகச் சாமந்தர்களிடம் நம்பிக்கை கூடியதும் ஏற்கெனவே மைத்துனர்கள் என்ற உறவு முறையும் இவற்றுக்கு ஆதாரமாக அமைந்துவிட்டது! எனினும் சம்பா, பாலி, சுந்தரா, சுவர்ணா ஆகிய நான்கு தீவகநாடுகளை ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தில் இணைக்கப்படுவதற்காக இந்த சாமந்தர்கள் கையாண்ட முறைகளைச் சற்றும் அவன் விரும்பவில்லை. மன்னர் குலத்தினரை பௌத்த சமயத்தைச் சார்ந்தவர்களாக மாற்றிய குணவர்மர் முதல் இன்றைய ராஜகுரு தர்மவிரதர்வரை அவர்களுடைய கொடுமைகளை மறக்கவில்லை. மக்களும் சாமந்தர்கள் என்றால் ‘கொடுமைக்காரர்கள்’ என்ற ஒரே முடிவைத் தவிர வேறு எந்த நினைவையும் ஏற்கத் தயாராயில்லை மக்கள். மன்னர் தமது முதிய பிராயத்தில் ஒரு அழகுப் பேயின் வசப்பட்டுவிட்ட காரணத்தினால் அவனைச் சேர்ந்தவர்களின் கைப்பாவையாகிவிட்டார் என்பதே நேர்மையான உள்ளம் பெற்ற அவர்கள் செய்த முடிவு? இத்தகைய ஒரு எண்ணம் மக்கள் மனதில் வேரூன்ற அவ்வப்போது தொடர்ந்து நிகழ்ந்த நிகழ்ச்சிகளே காரணமாகும். சம்பாவில் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருந்த சிறந்ததொரு ஆட்சியை, தருமநெறியைச் சமயச்சார்புடன் நிலைக்கச் செய்த பத்ராவர்ம மகாராஜனின் பரம்பரையை அடியோடு நிர்மூலமாக்கி விட அவர்கள் கையாண்ட தந்திரங்களை, அந்த நாட்டைத் தீவைத்து எரித்துச் சாம்பல் மலைகளைக் குவித்த கொடுமைகளை, குஞ்சுகுளுவான்கள்கூட மிஞ்சியிருக்கக் கூடாது அரச குடும்பத்தில் என்று நசுக்கி அழித்துவிட்ட கொடியவர்களான ஸ்ரீ சாமந்தர்களை அரக்கர்களுக்கு ஒப்பாக மக்கள் மதித்து வெறுத்ததில் வியப்பில்லை. எனினும் ஸ்ரீ சாமந்தர்கள் இது பற்றிக் கவலையுறவில்லை. அவர்கள் விரும்பியதெல்லாம் ஒரு பெரும் சாம்ராஜ்யமே. அதற்கு யார் தலைமையாயிருந்தாலென்ன? தங்கள் சொற்படி ஆடினால் போதும் அந்தத் தலை. அவ்வளவுதான்! தலையாடத்தான் செய்தது! எனவே நாட்டில் கொடுமைகளே ஆட்சிக்குக் கருவிகளாய், முறைகளாய் வகை தொகையில்லாமல் செயல்பட்டது. ஓர் ஆண்டு இரண்டாண்டுகளுடன் நிற்கவில்லை. பல ஆண்டுகளாக இந்தப் பாவப்பாழ் செய்பணி வளர்ந்தது! நியாயம், நேர்மை, உண்மை, நன்மை என்பதெல்லாம் அகரமதிகளில் போய் ஒளிந்து கொண்டுவிட்டன. எங்கும் இவர்கள் கொடுங்கோலாட்சியே கெடுபிடி செய்தது. இந்த நிலையில்தான் வெற்றி மிதப்பில், வெறிவேகத்தில் திளைத்த சாவக சாமந்தனின் கவனம் கடல்கடந்து செவ்வனே வளர்ந்து சிறப்பாகக் குளிர்தரு நிழல் போலப் பரவி நிலைத்திருக்கும் சோழப் பேரரசின் மீது திரும்பியது. பல நூறு மாதங்களுக்கு அப்பாலும் குறையேதுமின்றி, பகை எதிர்ப்பின்றி பரவிவிட்டிருந்த அந்தச் சோழனின் பெருமையைக் காண உள்ளங்குமைந்து பொருமினான். கீழை நாடுகளிலேயே பெரிய நாடான சீனம் கூட இந்தச் சோழ நாட்டார் தம் நல்லுறவே பெரிது என்று கருதி எதுவும் செய்யத் தயாராக இருக்கிறார்களே! அவர்களே அப்படி என்றால் ஸ்ரீவிஜயத்தான் திறை செலுத்த முன் வந்ததில் வியப்பென்ன! என்றாலும் இப்போது அடங்க முடியாது என்று மறுத்துவிட்டால்! முதலில் சோழருக்குத் திறை கட்டுதல் நிறுத்தப்பட வேண்டும் என்றான். மன்னன் ஒப்பவில்லை. மூத்த சாமந்தனும் தம்பியின் ‘திடீர்’ யோசனையை முதலில் ஏற்கவில்லை. தேர்ந்த அரசியல் தந்திரத்துடன் செயல்படுத்தப்பட வேண்டிய சில திட்டங்கள் மூலம்தான் சோழர்கள் உறுதியை, பிடியைத் தளர்த்திச் சிதறடிக்க முடியும் என்றான் அவன். அப்படிப்பட்ட தந்திரத் திட்டங்களில் ஒன்றுதான் சோழர்களுக்கு எதிராகக் குமுறி எழுந்துள்ள கலிங்கம், கங்கம், கொல்லம் போன்ற உள்நாட்டுப் பேரரசுகளை ஒன்றுகூட்டி ஒரு முகத்தூண்டுதல் மூலம் பணத்தைத் திரட்டி சோழர்களின் ஆட்சியை, அரசர்கள் சாம்ராஜ்யத்தைத் துண்டாடிவிடுவது. அதே சமயத்தில் கடல்நாடுகளில் குறிப்பாக மலையூர், மாநக்கவரம், மாயிருடிங்கம், நக்கவரம், சிங்கபுரம், சிங்களம், மாலவம் ஆகியவத்றைத் தூண்டிவிடுவது. கடல் கடந்து சென்றுள்ள சோழர் கலங்களை மறித்துவிடுவது. புகார், நாகை, விசாகை ஆகியவற்றிலிருந்து புறப்படும் கடற் பெருங்கலங்களைப் பிடித்துக் கொள்ளுவது... இப்படியாகச் செய்தால் குறைந்தது மூன்றாண்டுகளாவது பிடிக்கும் சோழர்கள் தளர்வடைய. இதற்குப் பிறகென்ன? தளர்த்துவிட்டால் சோர்வும் வீழ்ச்சியும் தானே நாடிவரும் அல்லவா? சுயமாகச் சிந்தித்து எதையும் செய்யவியலாது. ஆனால் நாடுபிடித்துப் பெருக்குவதில் பேராசையுள்ள மன்னன் இந்தத் தந்திரயுக்திகளை எதிர்க்கவும் இல்லை! ஆதரிக்கவும் இல்லை! ஏன் என்றால் நீங்கள் எப்படிச் செய்தாலும் என்னைச் சம்பந்தப்படுத்தாதீர்கள் என்று கூறிவிட்டான். எஞ்சிய வாழ்வை எப்படியாவது சுகித்துக் கழிக்க வேண்டுமென்ற ஆர்வத்தில்! மன்னன் ஆதரவில்லையேல் எதைச் சாதிக்க முடியும்? ஐந்து பெரும் சாம்ராஜ்யங்களில் தலையாயதான சோழர் தம் நாட்டு நிலையறிந்து அங்கு மிகத் திறமையாகத் தமது யுக்திகரமான சாதனைகளைப் புரிந்தால்தான், காலத்துக்கும் தங்கள் நோக்கத்துக்கும் ஏற்பச் செயல்பட்டால்தான் தங்கள் இலட்சியம் வெற்றிபெற முடியும். இதற்கு அந்தத் தகுதியும் திறமையும் மட்டுமின்றி அரசர் ஆதரவும் அதிகார முத்திரையும் முழுமையாகத் தேவை. எனவேதான் சோழநாட்டுத் தூதுவர் பதவிக்குச் சாமந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டான். முன்பு இதே பதவியில்தான் மூத்த சாமந்தன் சோழநாட்டில் சிலகாலமிருந்தான். எனினும் அப்போது ராஜேந்திர சோழர் ஆட்சி நடந்தது. சோழ சாம்ராஜ்யத்தின் மகோன்னத காலமல்லவா அது! உள்நாடு, வெளிநாடுகள் எங்கானாலும் சரி எதிரிகள் அவரை நினைத்த மாத்திரத்திலேயே அஞ்சித் தவித்து உயிருடன் செத்தார்கள். ஆதலால் மூத்த சாமந்தன் மட்டும் என்ன! பேசாமல் கப்சிப்பென்று அடங்கிடந்த காலம் அல்லவா அது! தவிர, இயற்கையிலே முத்த சாமந்தன் கெட்ட எண்ணமோ, சூதான நோக்கமோ கொண்டவன் அல்லன். ஆனால் தம்பியின் பேராசைக்குப் பலியாகி அவனுக்கு ஒத்துப்போவதில் முன்னேறி, இயற்கையாகவே தனக்குள்ள திறமை, புத்திசாலித்தனம் ஆகியவற்றைத் தவறான வழிகளில் செலுத்தப் பின்னாளில்தான் ஊக்கமாயிருந்தான். இளைய சாமந்தன் சோழநாட்டுக்குத் தனது பிரதிநிதியாகப் போவது நிச்சயமானது முதல் மன்னன் ராஜகுருவிடம் நெருங்கி யோசனைகள் கேட்கத் துவங்கினான். அவரோ தீமைகளின் உருவமான சாமந்தன் சோழநாட்டில் காலடி எடுத்து வைப்பதே நாகத்தைக் கொண்டு செல்லுவதாகும் என்று விளக்கிச் சொன்னார். ஆனால், ஸ்ரீவிஜவத்தான் விநயத்துடன் விடாப்பிடியாக வற்புறுத்தி “எப்படியானாலும் அவன் என் மைத்துனன். எனக்கோ குழந்தைகள் இல்லை. அவனுடைய சகோதரியை நான் முதிய பிராயத்தில் மணந்ததற்குப் பிராயச்சித்தம் அவனுடைய குழந்தைகளில் ஒருவரைத் தத்து எடுப்பதுதான்! நாளை அவன் மகன் இந்நாட்டு மன்னராவான் என்பது நிச்சயமாகிவிட்ட பிறகு நான் என்ன செய்ய முடியும்? தவிர நீங்கள் உங்களுடைய சமயத்தொண்டினைச் சங்கடம் இன்றி நடத்த வேண்டுமாயின் அவர்கள் தயவும் துணையும் இல்லாமல் இயலுமா? என்னுடைய நிலைமைதான் இக்கட்டானது. நான் முன்போல மக்களிடையே அளவு கடந்த மதிப்போ மாண்போ பெற்றிருக்கவில்லை. கொடியர்களின் கைப்பாவை என்று என்னை ஏசுகிறார்கள். அல்லது இரக்கப்பட்டு அலட்சியங் காட்டுகிறார்கள். இத்தகைய நிலையில் நான் என்ன செய்ய முடியும்?” என்று நொந்து பேசினான். இயற்கையிலேயே கருணை உள்ளமும், மன்னனிடம் வெகுவான அன்புமுள்ள தர்மவிரதர் ஆறுதல் வகையாக என்ன யோசனை கூற முடியும்? “ஏன், நீ மந்திரி மகாசபையையும், ராணுவ மகாசபையையும் கூட்டி இவர்களைச் சக்தியற்றவர்களாக்கும்படிச் செய்யக் கூடாது?” என்று கேட்டார். “முடியாது குருவே! முடியவே முடியாது! அமைச்சர்களான ரத்னாம்பான் அவன் தம்பி, வீரநரோத்தமர் முதலிய ராணுவப் பெருந்தலைகள் எல்லாம் இவர்களையே ஆதரிக்கின்றனர். காரணம் எனது சக்தியின்மை. வருங்காலம் அவர்கள் கையில். அவர்களுடைய மகன்தானே வருங்கால மன்னன். ஆகவே காற்றடிக்கும் பக்கம் சாய்ந்துவிட்டார்கள்! எனவே பயனில்லை!” என்றான். “அப்படியானால் இந்த ஆட்சிப் பொறுப்பை அடியோடுவிடுத்து இனி நீ நற்கதியடைவதற்கான பணிகளில் இறங்க வேண்டியதுதானே!” “அதுவும் இப்போதைக்குச் சாத்தியமில்லை. திடீரென்று நான் அரசியல் வாழ்விலிருந்து விலகிவிட்டால் இவர்கள் நம் நாட்டினையும் நாசமாக்கிவிடுவார்கள்! ஏனென்றால் நாசம் செய்வதை இவர்கள் ஒரு கலையாகப் பயின்றிருக்கிறார்கள்!” “பின்பு என்னதான் செய்யப் போகிறாய் விஜயா?” மன்னனின் பரிதாபமான நிலைமைக்குப் பரிகாரம் கூற முடியாதவர் அனுதாபத்துடன் இப்படிக் கேட்டதும் “உங்கள் உதவியும் ஆதரவும் கிடைத்தால் எதிர்காலம் கொஞ்சம் சிறப்பாயிருக்கும்!” என்று தயங்காது சட்டென்று பதிலளித்துத் தன் நிலையைத் தெளிவாக்கத் துடித்தான். “அதெப்படி?” “சோழ சாம்ராஜ்யத்தில் எப்போதுமே ஸ்ரீவிஜயத்தாருக்கு அன்பும் ஆதரவும் காட்டிவருபவர்கள். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நம்மைப் பூண்டோடு அழித்துவிடக் கங்கணம் கட்டிக் கொண்டு வந்த நாயக்கர்களைக் கண்டு நாம் நடுங்கி அஞ்சி ஏது செய்வது என்பதறியாது நின்று தவித்துப் பதறிய போது சோழர்கள் நமக்கு துணை வந்து அவர்களைச் சமராடி அழித்துக் கடத்திய பெருந்தகை அந்த ராஜேந்திர சோழ மாமன்னர். அவருக்குப் பின்னர் குலோத்துங்கன் இங்கு வந்த போது சம்பாவையும் சாயாவையும் நமது படைகள் நாசமாக்கிவிட்டதைக் கண்டு என்ன செய்தான்? அங்கத்தில் மக்கள் குமுறியெழுந்தனர். நமது படையினர் சிக்கிக் கொண்டனர். தக்க சமயத்தில் தலையிட்டு நம்மவர்களைக் காப்பாற்றினான். நியாயமற்ற முறைகளைக் கையாண்டது பற்றிக் கடிந்து கொண்டான் என்னிடம். ஆயினும் நம்மைப் பரிகரித்துக் கொள்ளவில்லை. நமக்கும் அவர்களுக்கும் நிலைத்த ஒரு நல்ல சூழ்நிலை கெடவில்லை.” “ஆமாம். ஆனால் சாமந்தன் சோழன் தன்னோடு திரும்பிய அடுத்த ஆண்டே சம்பாவைத் தாக்கி நீர்மூலம் செய்துவிட்டானே! இது பற்றிச் சோழர் மனம் குமுறிக் கொண்டிருப்பதை நாம் சிறிதாக மதித்துவிட முடியுமா?” “முடியாது என்பது உண்மைதான். அது ஒரு பெருஞ் சாபத்தீடு. நிரபராதியான மக்கள் நாசமானது நம்மை என்றுமே நிம்மதியாக இருக்கவிடாது. ஆனால் அதே சாமந்தன் சோழ நாட்டுக்குப் பிரதிநிதியாகப் போவது எவ்வளவு விந்தையானது? நீங்கள் நம் மக்களிடையே பெற்றுள்ள மதிப்பையும், சோழர்களிடையே பெற்றுள்ள நம்பிக்கையையும் ஆதாரமாகக் கொண்டு நான் விடுக்கும் வேண்டுகோளை மறுக்காமல் ஏற்க வேண்டும்!” “அதென்ன வேண்டுகோள்?” “நீங்கள்தான் சோழநாட்டுக்குச் செல்லும் அரசப் பிரதிநிதிக்குத் தலைவராகச் செல்ல வேண்டும்!” “அது சாத்தியமில்லை மன்னா! நான் அரசியலில் தலையிட விரும்பவில்லை. தவிர எனது தலைமையை, வழிமுறையைச் சாமந்தன் விரும்பவும் மாட்டான்.” “அவனை விரும்ப வைப்பது என் வேலை.” “நான் அவனுடைய சூதான செயல்களில் சம்பந்தம் கொள்ள விரும்புவது நியாய விரோதமாகும். எனது அறப் பணிக்குப் புறம்பானதாகும்.” “அப்படியல்ல ராஜகுருவே. நீங்கள் இவனுடைய கொள்கைகளை, செயல்களையெல்லாம் ஆதரிக்க வேண்டாம். சோழர்களுக்கு விரோதமாக இவன் ஏதாவது செய்தால் நீங்களே அதை வெளிப்படுத்தி அவர்களையும் எச்சரிக்கலாம். இவனையும் அடக்கித் திருப்பியனுப்பிவிடலாம். எனக்குத் தெரியும். இவன் அவர்களுக்கு எதிராக எதையும் திறமையாகச் செய்ய முடியாதென்று. அவர்கள் நிலை இமயமொத்தது. இவனோ ஏரிமலை மீது நின்று கொக்கரிக்கும் ஒரு சிறு பொரி போல என்று!” “இவனுடைய சதிகாரத்தனமான யோசனைகள், செயல்கள் எல்லாம் சோழநாட்டுக்கு மட்டும் அல்ல நம் நாட்டுக்குமே முடிவில் தீமை விளைவிக்கும்!” “ஆகவேதான் அதை முளையிலேயே கிள்ளியெறியும் சக்தி, திறன் இரண்டுமுள்ளவர் நீங்கள். ஏனென்றால் தெய்வத் தொண்டினைத் தேசத் தொண்டாகக் கொண்டுள்ள உங்களுக்கு இவன் எல்லாம் ஒரு திரணமாத்திரம் என்ற நம்பிக்கையில் பணிவுடன் வேண்டிக் கொள்ளுகிறேன்...” தர்மவிரதர் மவுனமானார். மன்னன் நிலை, வேண்டுகோள், விநயம் எல்லாவற்றையும் மவுனமாகவே சிந்தித்தார்! ஸ்ரீவிஜய மன்னர் வெற்றி பெற்றுவிட்டார் என்பது நமக்கு முன்னரே தெரிந்த செய்தி. ஸ்ரீவிஜய அமைச்சரவையும் ராஜகுரு சோழநாடு செல்வதை முழுமனதுடன் ஆமோதித்தது. முதலில் சாமந்தர்கள் எதிர்த்தாலும் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு ஏற்றார்கள். தனக்கு முழு அதிகாரமும் இல்லையே என்று சாமந்தன் நினைத்தாலும் ராஜகுரு படுகிழம். கப்பல் பயண காலத்திலேயே உயிரை விட்டுவிடும் என்று நினைத்தால் பயனில்லை! சோழநாடு வந்ததும் அதன் சூடு தாங்காமல் சாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான்! ஆனால், அவர் இங்கு வந்தது அரசன் வேண்டுகோளை முன்னிட்டு மட்டுமில்லை. அவருக்கே இந்நாட்டில் ஒரு முக்கியமான வேலையிருந்தது. நெடுங்காலத்துக்கு முன்னர் மரணத்தைத் தானகவே ஏற்றுவிட்ட ஒரு உத்தம உயிரின் சார்பில் இங்கு, சோழர் குலம் சம்பந்தப்பட்ட ஒரு பெரும் பணி அவருக்கு இருந்ததால் அதை நிறைவேற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது என்றே ஒப்புக் கொண்டார் சோழ நாட்டுக்கு விஜயம் செய்வதற்கு! அவருக்குத் தெரியும் முன்பே சாவகன் சூதெல்லாம் அம்பரர்கள், நாகர்கள் எல்லாம் சாவகன் எதிரில்தான் தலை நிமிர்ந்து நிற்பார்களேயன்றி ராஜகுருவுக்கு எதிரிலே அமரக்கூட தைரியம் பெற்றவர்கள் இல்லை. அந்நாட்டில் அரசனைக் காட்டிலும் ராஜகுரு பெற்றிருந்த மதிப்புக் காரணமாக மட்டுமில்லை. ராஜகுரு நினைத்தால், முயன்றால் ராஜகுடும்பம் மட்டுமில்லை, ராஜாங்கமே தூக்கியெறியப்படும் என்பதை அத்தனை பேரும் அறிந்திருந்தார்கள். அப்படி ஒரு செல்வாக்கு அவருக்கு. அந்தக் காலத்தில் பாரத நாட்டிலிருந்து சென்று பௌத்த சமயப் பெரும் பணியைச் செய்த மகாகுரு குணமித்திரர் முதலிய அரசனைத் தம் வயப்படுத்திச் சமயமாற்றம் செய்த பிறகு ஐம்பது ஆண்டுகள் அவரே இந்நாட்டில் தெய்வத்துக்கு அடுத்தபடி மதிக்கப்பட்டார். பிறகு பௌத்தமித்திரர் பதவியேற்றதும் அதே மதிப்பு இரட்டிப்பாகிவிட்டது. இவர்தம் யோசனை கேளாமல், இவருக்குத் தெரியாமல் எதுவுமே நடைபெற்றதில்லை. அரசன், அமைச்சரவை, ராணுவ சபை அனைத்தும் கூடிச் செய்யும் முடிவுகள் இவர்தம் ஆமோதிப்பு இல்லையேல் நடை பெறாது என்ற நிலை உறுதியாகிவிட்டது. ஆனால், வயதாக ஆக ராஜகுரு சமயத் தொண்டிலேயே அதிகம் கவனம்காட்டி அரசியல் வேலைகளிலிருந்து தாமாகவே ஒதுங்கலானார். இது சாமந்தர்களுக்குப் பெரியதொரு வாய்ப்பைத் தந்தது. பிறகு அம்பரர்கள் போன்ற பெருங்குடி மக்களைத் தம் பக்கம் திருப்பி அமைச்சரவை போன்ற ஆளுகைக் குழுக்களைக் கைக்குள் போட்டுக் கொண்டுவிட்டனர். ஒருமுறை இவர்களுக்குத் தங்கள் நிலை பற்றிய பலப் பரீட்சையொன்று நடத்திப் பார்க்கவும் முயன்றனர். அம்பர குடும்பத்துக்குச் சொந்தமான ஒரு ஆலயத்தில் பூசைப்பணிக்கு என ஒருவரை ராஜகுருவின் அனுமதியின்றி நியமித்தனர். மக்கள் இதனை அறிந்து ராஜகுருவிடம் கூற அவர் விவரங் கேட்டு அனுப்பினார் அம்பரர்களிடம். தம் குடும்பக் கோயிலில் தம் விருப்பப்படி எதையும் செய்யும் உரிமையுண்டென்று வாதாடியவர்களுடன் பதில் பேசாமல் இருந்துவிட்டார். அவ்வளவுதான்! கோயிலின் வாசலைக்கூட மக்களில் எவரும் மதிக்கவில்லை. பால்பழங்கள், மலர் போன்ற பூசனைப் பொருள்கள் கூட வரவில்லை. ஒருநாள் இருநாள் என்று ஒன்பது நாட்கள் இப்படி நடந்ததும் அம்பார் அரசரிடம் சொல்ல, அவர் அமைச்சர்களிடம் கூற, சாமந்தர் ஆட்களைச் சேர்க்க முயன்றனர். ஆலயத்தில் நுழைய யாருமே வரவில்லை. வேலும் வில்லும் கொண்டு எவ்வளவோ மிரட்டியும் பயனில்லை. பத்தாம் நாள் கோவில் பூசைக்கென வந்திருந்த புதிய பூசாரியும் போய்விட்டார்! அப்புறம் என்ன? ஊரிலே சில விபரீத நிகழ்ச்சிகள் தலையெடுக்கத் துவங்கின. மக்கள் குமுறிய உள்ளத்துடன் அம்பரர் குடும்பத்தையே அடித்துத் துவைத்துவிடவும் தயாராகிவிட்டது கண்ட அவர்கள் இனி நமக்கு வேறுவழியில்லை இனியும் முரண்டுபிடித்தால் அடியோடு நாசமாக வேண்டியதுதான் என்ற முடிவில் வேறு வழியின்றி ராஜகுருவிடம் நல்ல புத்தியுடன் சரண் அடைந்துவிட்டனர். எனவே அந்தப்பெருமை, சக்தி, மதிப்பு எல்லாம் இன்றளவும் அவருக்குண்டு என்பதில் சாமந்தனுக்குக்கூட ஐயமில்லை! |