பொன்னகர்ச் செல்வி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

15. வாட்போர்!

     கடற்றுறைத்திருவிழா முடியும் மட்டும் காத்திருக்குமா வாட்போர் நடத்தவிருந்த நாள்! குறிப்பிட்ட நாளும் வந்துவிட்டது திருவிழாக் காலத்திலேயே! கடல்கரையை அடுத்த ஒரு பெரும் வெளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாட்போர் துவங்கச் சில நாழிகைகளே இருந்தன. ஆயினும் குறிப்பிட்ட இடத்தில் குழுமியிருந்த கூட்டமோ வகை தொகையற்றது. வேளக்காரப்படையினர், பொதுச்சேனையினர், உள்நாட்டுக் காவற்படையினர் கூடுகிற கூட்டத்தை ஒழுங்குபடுத்தி கட்டுப்பாடு செய்திருந்ததால் ‘எப்பொழுது துவங்கும் போர்’ என்ற ஆவல் உந்தப் பெற்றவர்கள் கூட ஆவேசத்தை அடக்கிக் கொண்டு அடக்கமாகவேயிருக்க முயன்றனர்.

     மாமன்னர் பட்டத்துப் பரிமா மீது அமர்ந்து வந்த காட்சியும், அவரைத் தொடர்ந்து இரு பக்கலிலும் சோழ இளவலும், அந்நிய வீரனும் வந்த நிலையும் பார்ப்பதற்கு கிளர்ச்சியூட்டுவதாக இருந்தாலும், மன்னர் முகம் சற்றே கலங்கியிருந்ததையும் குழுமியிருந்தோர் கவனிக்காமலில்லை.

     இளவரசன் மும்முடி பச்சைக் கவச அங்கியணிந்திருந்தான். அவன் கழுத்தில் பதினாறு வைரப் பதக்கங்கள் அதாவது இதுகாறும் உலகப்பெரும் வாள்வீரர் பதினாறு பேர்களை வென்றவன் என்பது குறிக்கும் பான்மையில் அணிந்திருந்தான். தலையில் கூம்பு கட்டிய கிரீடம் போன்ற தலைஉறை சோழநாட்டு முத்திரையைப் பெற்றதல்ல. யவன நாட்டின் மாவீரன் புலஸ்தியஸ் என்னும் வாள்வீரன் இவனிடம் தோற்றுவிட்டதை ஒப்பி ‘இது வெற்றியாளனுக்கே வெற்றிதருவது, எனவே நீயே நிரந்தரமாகத் தரித்திரு’ என்று வாழ்த்தியளித்தது. இடையிலே தொங்கிய நீண்டவாள் நகாரத்தினம் பதிக்கப் பெற்றிருந்தது. எதிரிகளுக்கு இவ்வாள் நாகம் என்பதைக் காட்டுவதாக இருந்தது அதன் தோற்றம். அலட்சியம், மமதை, சிடுசிடுப்பு ஆகிய மூன்று வகைக் களையால் நிரம்பப் பெற்றிருந்த முகத் தோற்றம் சோழர் தமக்கேயுள்ள கம்பீரத்தையும் பெற்றிருந்தது. என்றாலும் மக்களின் பெருங்கவனத்தைக் கவர்ந்தது அந்நிய இளைஞனின் தோற்றம்தான். மஞ்சள் நிறக் கவச உளவு அணிந்திருந்த அவன் இளம்புன்னகை தவழும் முகத்தைக் கூர்ந்து கவனித்தார்கள். ஏதோ ஒரு உண்மையைக் கண்டுபிடிப்பவர்கள் மாதிரி ஆராய்ந்தனர். பயம் இல்லை, ஆனால் பணிவு இருந்தது; அலட்சியம் இல்லை, ஆனால் திடம் இருந்தது. மமதை இல்லை, ஆனால் கம்பீரம் இருக்கத்தான் செய்தது. ஒரு சிறு குழந்தை எதையும் குழந்தைத்தனமாகவே பார்ப்பது போல அவன் கூட்டத்தினரைப் பார்த்த பார்வையில் குறுகுறுப்பும் பரபரப்பும் இருந்தது. நீண்டு மெலிந்த வாள் அதன் உறையிலிருந்து சற்றே உயர்ந்து எட்டிப்பார்த்ததால் அதன் மூடியில் மூன்று மரகதக் கற்கள் கருடமூக்குப் போன்று பதிக்கப்பட்டிருந்ததைக் காண வாய்ப்பளித்தது.

     இருமருங்கிலும் பரிமாப் படையினர் அணிவகுத்து நிற்க, இடையே அறுபது சிவிகைகள் தொடர்ந்து வந்தன. முதலில் இறங்கியவர் சோழ குலப் பேரரசியான முதிய பிராட்டியார்தான். அடுத்து வந்த சிவிகையில் இருந்து இறங்கியவர் சோழ மாதேவி. பொற்கொடியும் சோழன் மகளும் தொடர்ந்துவர, முதலமைச்சர் பிரம்மாதிராயரும் அடுத்துவந்த சிவிகையில் காடவர்கோன், அவர்தம் திருமகன் கடல்நாடுடையார், பழுவேட்டரையர், முத்தரையர் நரலோகவீரன், சோழ இளவரசன் சோடகங்கன் காலிங்கராய நரலோகவீரன் ஆகியோர் வந்தனர் வரிசையாக.

     வாட்போர் நிகழ வேண்டிய இடத்தைப் பிறைவடிவில் அமைத்திருந்தனர். மன்னரும் அவரைச் சேர்ந்தோறும் அயல்நாட்டுப் பிரமுகர்களும் அமரும் இடம் எடுப்பாகவும் ஏற்பாகவும் இருந்தது. ஓலைநாயகம் முன் அறிவிப்புக் கொடுக்க நடுமையத்தில் வந்து நின்ற காடவராயர், சோழர்குலச் சார்பிலும் அதாவது மும்முடிக்காகவும் பாகநாட்டுத் தூதுவர், வீரபாலன் சார்பிலும் நடுவர்களாக இருப்பர் என்று அறிவித்ததும் குழுமியிருந்தோரிடையே ஒரு சலசலப்பேற்பட்டது.

     சாவகன் தன்னை நடுவராக நியமிப்பார் என்று எதிர்பார்த்திருந்தான். அறிவிப்பைக் கேட்டதும் திடுக்கிட்ட அவன் தனது உதவியாளர்களைப் பார்த்தான். அவர்களோ தமக்கு ஏதோ ஒரு பெருந்தோல்வியேற்பட்டு விட்டதாகவே இடிந்து போயிருந்தனர். மன்னர், இருவாள் வீரர்களையும் தம் அருகில் அழைத்து வாட்போரில் கையாள வேண்டிய நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கு உறுதி பெற்றுக் கொண்டார். இருவருக்கும் மன்னரே மார்புக் கவசம் அணிவித்து முதலில் மும்முடியின் இடைவாளை வாங்கி அவனிடம் நீட்டுவிக்க, அவனும் முறைப்படி வணங்கிப் பெற்றுக் கொண்டான்.

     அடுத்தபடியாக முன்னே நின்று வணங்கியெழுந்து வீரபாலன் தனது இடைவாளை மன்னரிடம் நீட்டிய போது அதன் உறையை மட்டும் கழட்டிவிட்டு நீட்டியது கண்டு மன்னர் திகைத்து அவனை வியப்புடன் பார்த்தார். அவனது இடையிலேயே அதன் உறை இருந்தது! மன்னர் ஏன் இப்படி என்று கேட்பது போல அவனை நோக்கியதும் “எனது இடையைவிட்டு வாளைத்தான் உருவமுடியுமேயன்றி உறையைக் கழட்டுவதில்லை” என்று அவன் விநயமாகக் கூறியதும் “ஏன் அப்படி? உறையுடன் முழுமையாகத்தான் கழட்ட வேண்டும். அதை மன்னர் பெற்று உறையிலிருந்து வாளை உருவித் தருவதுதான் முறை!” என்று பிரும்மாதிராயர் தமது கரகரத்த குரலில் அறிவித்ததும் அனைவரும் ஆமோதிப்பது போல ஒரு பேரரவம் எழுந்தது. வீரபாலன் அப்பொழுதும் வளைந்து கொடுக்காமல் “உறுதியிலிருந்து பிறழ்வது என்பதுதான் முறையற்றதாகும்!” என்று பதிலிறுத்தான்.

     “கைப்பிடி உறையுடன் வாளைத் தந்து மன்னரிடம் ஆசி பெறுவதுதான் முறையென்பதை மீண்டும் கூறுகிறோம்!”

     “தவறு. வாளைத் தந்து மன்னரிடம் வாழ்த்தைப் பெறுவது என்பதுதான் மரபு. பிடியும் உறையும் தேவையில்லை. வாள் இல்லையேல் உறைக்கும் பிடிக்கும் மதிப்பேது? உயிரிளில்லையேல் இந்த உடலுக்கு எவ்வாறு மதிப்பில்லையோ அவ்வாறுதானே இதுவும்.”

     பெருந்தலைகள் இதைக் கேட்டதும் வேறு பேச்சின்றி மன்னரை நோக்க, அவரோ மேலே நடக்கட்டும் என்பது போலத் தலையசைத்தார்.

     நடுவரைப் பொறுக்கும் பொறுப்பை அயல்நாட்டுத் தூதுவர் மூவரும், சோழ நாட்டுப் பெருந்தலைகள் மூவரும் சேர்ந்தே ஏற்றிருந்ததால் வெளிப்படையாகக் குறைகூற முடியவில்லை. எனினும் சோழ இளவரசன் சற்றே திடுக்கிட்டுச் சாவகனை உற்று நோக்கினான். கடந்த இரவில் இருவரும் கூடிப்பேசி செய்திருந்த முடிவுக்கு மாறாகவல்லவா நிலைமை மாறியிருக்கிறது! மும்முடி தந்தையைப் பார்த்த பார்வையில் ஆதரவு தேடியதைத் தெரிந்து கொண்ட காடவர்கோன், சட்டென போர் துவங்குவதற்கான வழிமுறை கூறும் முன்னோடி மணியை ஒலிக்கும்படி உத்திரவிட்டார்.

     கணகணவென்று மணிகள் ஒலித்ததும் அந்த மாபெரும் கூட்டத்தினர் கண்களில் ஆவலைப் பெருக்கி வாய்களை மூடிக் கொண்டனர்!

     மும்முடி, மைதானத்தின் நடுமையத்தில் நின்று தனது வாளைச் சுற்றிச் சுழற்றி கூட்டத்தினரை அலட்சியமாகப் பார்த்துவிட்டு தான் தயார் என்பதைத் தெளிவுபடுத்துவது போல வாளை மீண்டும் உறையிலிட்டு முன்னே வந்து நின்றான். வீரபாலன் நிதானமாகக் கத்தியை தலைக்கு மேலே தூக்கியபடி ஒரு முறை மைதானத்தை வலம் வந்து நடுமையம் நாடிச் சற்றே குன்று மீண்டும் ஒருமுறை அனைவரையும் வணங்கும் முறையில் வாளைச் சுழற்றியபடி முன்னே வந்தான்.

     இரண்டாவது மணியும் ஒலித்தது.

     முன்னைவிட அமைதி! பதினாறு அடிகளுக்குள்ளான வட்டமொன்றின் இரு முனைகளிலும் அவர்கள் நின்றதும் மூன்றாம் மணி ஒலித்தது. கனவேகமாகத் தன்னுடைய வாளை உருவிய மும்முடி ஒரே பாய்ச்சலில் எட்டடி முன்னே பாய்ந்து பதறி வராமல் நிதானமாகவே முன்னே வந்து தனது வாளையுருவினான்.

     இரு வாள்வீரர்களும் மூன்றடிக்குள் நின்று தங்கள் வாட்களை ஒன்றித்து உயரத் தூக்கிவிட்டுப் பின்னால் மூன்றடி நகர்ந்து நின்றனர்.

     நடுவர் இருவரும் அவர்கள் அருகே வந்து மீண்டும் எச்சரிப்பது போல வாட்போர் முறைகளை மிகச் சுருக்கமாக அவர்களுக்குத் தெரிவித்தனர். வீரர் இருவரும் தலையசைத்து ஆமோதித்தனர். அவ்வளவுதான்! அடுத்த நொடியே இரு வீரர்கள் வாட்களும் பளிச்சென்று மின்னி இமையசையும் நேரத்தில் மாறி மாறி மோதிக் கொண்டன. எத்தனை முறையோ, நீண்ட வாட்களைத் தாங்கிய நீண்ட கரங்கள், பாய்ந்து பாய்ந்து, சுழன்று சுழன்று, அவர்கள் மோதிய வேகத்தை வர்ணிப்பது என்பது சாத்திய மற்றது. எனினும் கூட்டத்தினரும் சரி, நடுவர்களும் சரி, மர்மவீரன் சற்றும் நிதானமிழக்காமல் தான் கத்தி வீச்சில் ஈடுபட்டிருகிறான் என்பதையும், மும்முடி விறுவிறுப்பைக் காட்டிலும் பதற்றத்துடனேயேதான் வீசுகிறான் என்பதையும் அறிய அதிக நேரம் ஆகவில்லை. சற்று நேரம் வரை வீரர்களின் போரில் தங்கள் முழுமனதையும் லயிக்கவிட்டிருந்தவர்கள் மர்ம வீரன் இன்னும் சற்றே வேகம் காட்ட வேண்டும் என்ற நேரத்தில் ‘தளராமல் துணிந்தாடு’ என்று குரல் எழுப்பவும் செய்தனர்!

     மும்முடி இப்போது தனது அரைகுறை நிதானத்தைக் கூட இழந்துவிட்டான். கூட்டத்தினர் திடீர் என்று தனது எதிரிக்கு ஆதரவாகக் குரல் எழுப்புகிறார்கள் என்ற உணர்வோ, அல்லது இத்தனை நேரம் தன் வாள் வீச்சைச் சமாளிக்கிறானே என்ற கோபமோ, அவனை மாற்றிவிட்டது!

     நேருக்கு நேர் என்பது மாறி வாள்கள் பக்கவாட்டில் இப்போது மோதின. மிக இலகுவாக மும்முடியை மர்ம வீரன் பாய்ச்சல் காட்டி ஏதோ ஒரு குழந்தைக்கு விளையாட்டுக் காட்டுவதைப் போல விளையாடினான். கோபக்காரனுக்கு இப்படிச் சீண்டிக் காட்டினால் போதாதா? சட்டென்று கீழே ஒரு காலை மடக்கிக் குனிந்து மர்மவீரன் விலாப்புரத்தைக் குறிபார்த்துக் குத்துவிட்டான்! இதைச் சற்றும் யாரும் எதிர்பார்க்கவில்லை. நடுவர்கள் கூட மார்புக்குக் கீழே குறிபார்த்தல் என்பது மரபுக்கு மாறானது என்றுதான் எச்சரித்திருந்தனர். ஆயினும் ஒரு நொடியில் இது நிகழ்ந்துவிட்டது. வீரபாலன் வியப்புக் கலந்த திகைப்புக்குள்ளாகி, சட்டென்று துள்ளி நகர்ந்துவிட்டாலும் விலாவில் வாள் பதம் பார்த்து விட்டதால் சட்டென்று குருதி பொங்கி கொப்புளித்து பாய்ந்து வழிந்தது!

     மன்னர் ‘ஆ!’ என்று வியப்புக் குரல் கொடுத்துத் தமது இருக்கையினின்று எழுந்து விட்டார். நடுவர்களில் ஒருவரான காடவர்கோன் சட்டென்று மும்முடியை அப்பால் விலக்க முன்னே வந்த போது அவன் அவரைத் தள்ளிவிட்டு மீண்டும் பாய்ந்தான் மர்மவீரனிடம். ஆனால் அவன் இதை எதிர்பார்த்தவன் போல ஓங்கித் தனது வாளை மும்முடி வாளின் அடிப்புறத்தில் தாக்க ‘ஆ!’ என்று அலறியபடி தனது வாளை நழுவவிட்டுவிட்டான் அவன்!

     கூட்டத்தினர் கொல்லென்று நகைக்க, நடுவர்களில் இன்னொருவரான பாகநாட்டுத் தூதுவர் அந்த வாளைக் கையில் எடுத்துக் கொண்டு விட்டார்.

     மருத்துவர்கள் பின் தொடர மன்னர் முன்னே வரவும் மர்மவீரன், “இது பற்றிக் கவலை வேண்டாம். இதற்காகப் போரை நிறுத்த வேண்டாம். ஆனால் இளவரசர் இப்போது ஏந்தியுள்ள வாளை மாற்றி அவரிடம் வேறு வாளைத் தாருங்கள்!” என்று கம்பீரக் குரலில் சொன்னதும் மன்னர் திகைத்து நடுவர்களையும், பிறகு மும்முடியையும் பார்த்தார்.

     “முடியாது! இந்த வாள் எனது வெற்றி வாள். இதை மாற்றிவிட இவன் விரும்புவது...” என்று மும்முடி மேலும் ஏதோ சொல்லுவதற்குள் பாகதூதுவர் மன்னர் அண்டை நெருங்கி அவர் காதில் மட்டும் விழும்படி ஏதோ சொல்ல அவர் அதைக் கேட்டதும் “ஐயோ!” என்று வாய்விட்டே கூவிவிட்டார். இதற்குள் கூடவரும் இதர பெருந்தலைகளும் பாகநாட்டவர் கூறியதை அருகில் சென்று அறிந்து கொண்டதும் திடுக்கிட்டனர். பிறகு ஒருவர் மாறி ஒருவர் அவ்வாளை வாங்கிப் பார்த்ததும் கூட்டத்தினரிடையே சலசலப்பேற்பட்டுவிட்டது. மன்னர் எதோ கூற முயன்றாலும் வாய்விட்டு வார்த்தைகள் வரவில்லை. மும்முடிக்கு இந்தச் சோதனை ஏன்? இவர்கள் எல்லாம் தன் கத்தியைத் தொடக் கூடத் தகுதியுள்ளவர்கள் என்னும் உண்மையறிவில்லையே என்ற கோபத்தில் சட்டென்று அதைப் பறிக்க முயன்றான்.

     இப்பொழுது காடவர்கோனே முந்திக் கொண்டார். அவர் தம் உறையிலிருந்து வாள் வேகமாகப் புறப்பட்டுத் தன்னை நோக்கி வருவதைக் கண்ட மும்முடி ஒரு நொடி அதிர்ந்து போனான்.

     “இளவரசே, இந்த வாள் சோழர் தம் பரம்பரைக்கே நூற்றாண்டுகளாக எனது முப்பாட்டனார் காலம் முதல் பணியாற்றி வருகிறது. எனவே இதைக் கொண்டு போரிடலாம்” என்று நீட்டியதும் மும்முடி அதை வாங்காமல் “ஏன்? என்னுடைய வாளுக்கென்ன வந்தது?” என்று இரைந்து கேட்டான்.

     இப்பொழுது மன்னருக்கே நிதானம் விலகி கோபம் தலையெடுத்தது. மும்முடியை அவர் பார்த்த பார்வையில் வெறுப்பும் ஏளனமும் கலந்திருந்தது.

     “விருப்பம் இருந்தால் நீ வேறு வாள் தாங்கி மேற்கொண்டு போராடலாம். இல்லாவிட்டால் வாள்போர் இத்துடன் நிற்க வேண்டியதுதான்!” என்று எச்சரித்ததும், மும்முடி “ஒரு சிறு காயத்துக்கே இவ்வளவு என்றால் தலையைக் கொய்து பந்தாடப் போகிறேனே அப்போது யார் வருகிறீர்கள் பார்க்கலாம்!” என்று வெறி கொண்டவன் போலக் கத்திவிட்டு, சாகவரிடமிருந்து வாளைப் பிடுங்கினான் வெடுக்கென்று... வெறியும் வேகமும் இத்தகைய வாள்வீச்சுக்களில் எவ்வளவுக்கு எதிராகும் என்பதை யார்தான் ஊகிக்காமலிருக்க முடியும்? வீரபாலனோ தனது காயத்தினால் ஏற்பட்ட வேதனையைச் சிறிதளவும் வெளிக்காட்டாதிருக்க, மருத்துவர்கள், மர்மவீரனுக்கு முதற் சிகிச்சை முடித்துவிட்டு அப்பால் நகர்ந்தனர்.

     நடுவர்கள் மீண்டும் ஒருமுறை எச்சரித்துவிட்டு அவர்களுக்கு வீச்சிட இடமளித்து நகர்ந்ததும் மும்முடி ஒரேயடியாக ஆவேசமுற்றுப் பாய்ந்தான். ஆனால் மர்ம வீரன் இருந்த இடம்விட்டுச் சிறிதளவும் நகராமல் உறுதியாக நின்று கொண்டே பாய்ந்து வந்தவனின் வாளை அடித்தளத்தில் மீண்டும் தட்டிவிட்டான். ‘ஐயோ!’ என்றலறிய மும்முடி வாளை மீண்டும் நழுவவிட்டான்! மீண்டும் கூட்டத்தினரிடையே நகைப்பொலி. ஆத்திரம், வெறிக்குத் தூபமிட்டது. இனியாவது, நியாயமாவது! ஒரேடியாகத் தொலைத்துவிடுவதுதான் சரி என்று முடிவு செய்தவனைப் போல, கீழே கிடந்த வாளை எடுத்து நொடியும் தாமதியாது பாய்ந்தான்! ஆனால் மர்மவீரன் சற்றும் நகராமல் நின்று தனது வாளைச் சுழற்றி அடித்தான் எதிரியின் வாள் மீது! மீண்டும் அலறியபடி வாளைப் பறிகொடுத்துவிட்டான் முடிமுடி!

     “நீங்கள் நிதானமிழந்து வீசுவதற்கு இது மூன்றாவது தோல்வி! இன்னொரு முறை தேவையா? அல்லது நிதானமிழக்காது, நெறிபிசகாது ஆட விருப்பமா” என்று வீரபாலன் அமர்ச்சியுடன் கேட்டதும் ஆத்திரக்காரனிடமிருந்து “ஆட்டமா!” என்ற வியப்புக் கேள்வி வந்தது!

     “ஆமாம்! நாங்கள் இவற்றை ஒரு ஆட்டமாகத்தான் கருதுவது பழக்கம். நாம் எதிரிகளா? இல்லை. என்றாலும் அறைகூவலுக்காக அதை ஏற்று வந்தவர்கள். எனவே நமக்குள் உயிர்க்கொல்லி முறைகள் ஏன்? நெறிபிறந்த போர் முறை எதற்கு? நியாயமற்ற தந்திரங்கள் தேவையா?”

     “நீ எனது எதிரி. இந்தச் சோழ நாட்டில் உளவுக்காரனாக வந்து உள்ளே புகுந்தது...”

     “நிறுத்து மும்முடி! நிறுத்து உன் வசைச் சொற்களை! அரசர் தம் மெய்க்காவலன் ஒருவனைத் தாக்கிப் பேசுவது மெய்க்காவல் படையினருக்கும் மட்டுமில்லை, மன்னருக்கும் மாசு கற்பிப்பதாகும்” என்று காடவர்கோன் எச்சரித்ததும் மும்முடி வாய் அடங்காமல் “இந்தப் புதிய போர்வையில் மறைத்து கொள்ள மன்னரே இடமளித்திருப்பதும் மட்டும் மாசில்லையாக்கும்?” என்று கத்திவிட்டான்.

     அமைச்சரவையினர் பதறியெழுந்தனர். காடவரோ எதுவும் பதில் கூறச் செயலிழந்தவராய் மன்னரை பார்த்தார். அவரோ தமது அன்னையைப் பார்த்தார்! அம்மூதாட்டியின் கண்கள் கலங்கியிருந்தன!

     சோழநாட்டின் எதிர்காலத்தைத் தன் பொறுப்பில் ஏற்கவிருக்கும் ஒருவன், நடந்து கொள்ளும் முறையா இது? நரலோக வீரன், முத்தரையர் இருவரும் மன்னர் அருகே செல்ல முதிய பிராட்டியார் கடல்நாடுடையாரை அருகேயடைந்தார். சில நொடிதான் அவர்களிடையே ஏதோ பேச்சு நடை பெற்றது.

     மேலே போரை நடத்த மன்னர் அனுமதிக்கிறார்! வாளை, அநாயசமாகத் தூக்கியெறிந்தான் சற்றும் குறி தவறாது மர்மவீரன். அவன் முகத்தில் இன்னமும் இளநகை நிலைத்துத்தான் இருந்தது. வேகமோ வெறியோ சற்றும் தலைகாட்டவில்லை அவனிடம். மைதானத்தைத் தன்னுடையதாகக் கொண்டுவிட்ட இளவரசன் கத்தியைக் கணவேகமாகச் சுழற்றி வீரபாலன் மீது பாய்ந்தான். சற்றே உடலை வளைத்துத் தனது வாளால் அவன் வாளைத் தாக்க, இச்சமயம் சற்றும் தளராமல் எதிர்த்துப் பொருதான் மும்முடி. மீண்டும் சில விநாடிகள் இருவரும் சிறிதளவும் சலிப்போ, தளர்வோ காட்டாது மோதிக் கொண்டதைக் குழுமியிருந்த மாபெருங் கூட்டத்தினர் ஆர்ப்பாட்ட ஒலியெழுப்பி ஊக்க மூட்டினர்.

     ஆனால் அடுத்த நொடியே மும்முடி தனது போர்முறை மாற்றி எப்படியாவது எதிரியைக் குத்திவிட வேண்டும் என்று வாளை வேறு வகையில் வீசியதால், மர்மவீரன் வேறுவழியின்றி முன்மாதிரியே வாளை வீழ்த்திவிட்டான்.

     இப்போது நடுவர்கள் தலையிட்டாக வேண்டிய இக்கட்டு நிலை உருவாகிவிட்டது. மும்முடி இனியும் நிதானத்துடன் எதிரியை வாள்போரில் வெல்லுதல் என்ற ஒரே நோக்கத்துடன் வீசாமல், காயமுண்டாக்கி வீழ்த்திவிடவே முயலுவான் என்ற முடிவுக்கு வந்தவன், மன்னர் இவர்கள் முடிவையறிந்து ஒப்பியதும் “போர் இனிமேலும் நடைபெறாது” என்று அறிவிக்கப்பட்டது.

     “ஏன்?” என்று கத்தியபடி அதிவேகத்துடன் மன்னரை நெருங்கிய மும்முடியை அவர் பார்த்த பார்வை ‘நீயும் ஒரு வீரன்தானா?’ என்று கேட்டு ஏளனம் செய்வது போலிருந்தது.

     முதியபிராட்டி முன்னே வந்து “உன் உயிருக்குச் சிறு ஆபத்து வந்தாலும் இந்தச் சோழகுலம் அவனை மன்னிக்காது என்று நான் எச்சரித்தேன். ஆனால் அவன் உயிருக்கு ஆபத்து உண்டாக்கவே முயற்சித்த உனக்கு எச்சரிக்கை செய்ய எவரும் இயலாது போனதுதான் பரிதாபத்துக்குரியது!” என்று கொஞ்சம் கேவலமாகவே கூறிவிட்டு அவன் ஆத்திரப் பதிலைக் கேட்கவும் மனமில்லாதவர் போல விலாப்புறத்தில் கைதாங்கியபடி கம்பீரமாக நின்றிருந்த மர்மவீரனிடம் போய், அவனைப் பரிவுடன் பார்த்து “வீரச்சிறுவனே! நீ கொடுத்த வாக்கைக் காப்பாற்றியதற்கான தண்டனை இது... எங்களை மன்னித்துவிடு... வேறு நான் என்ன கேட்பது...” பேரரசியின் குரல் தழுதழுத்தது மேலே பேசமுடியாமல்!

     “சோழமாதேவி, எனக்காக இரங்கிப் பரிதவிக்க எவரும் இல்லை. எனினும் என்னால் இனியும் ஊடுருவியுள்ள வலியைப் பொறுத்திருக்க இயலாது. இப்போது தயவுசெய்து மற்றவர்களுக்குத் தெரிவதற்குள் என்னைக் கடல்நாடுடையார் மாளிகைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள்” என்று மிக்க மலிந்த குரலில் அவன் வேண்டியதும் பதறிப் போன பேரரசி கடல்நாடுடையார் எங்கிருக்கிறார் என்பதறியத் திரும்பிய போது அவர் இரு குதிரைகளை அழைத்து வருவதைக் கண்டார்.

     மன்னர் நின்ற இடத்தருகே சற்றே நகர்ந்து சென்ற மர்மவீரன், கத்தியை உறையிலிடும் முன் அவரை வணங்கிவிட்டுத் தனது குதிரைமீது சட்டென்று பாய்ந்தமர்ந்தான்.

     மும்முடிக்கு, இப்போது அத்தனைபேரும் தனக்கெதிராகவே ஏதோ சதி செய்வதாகவே தோன்றியது. வெற்றி தோல்வி தெரியாமல் தனது சொந்த வாளைப் பயன்படுத்தக் கூடாது என்று செய்ததற்குக் காரணமறியாமல், எந்த முடிவுக்கும் வராமல் இப்படி திடுதிப்பென்று நிறுத்துவானேன்? இதுதான் சரியான சமயம் இவனை ஒழித்துக் கட்ட என்று எண்ணியிருந்த நோக்கம் நிறைவேறாமற் செய்துவிட்டார்களே என்ற ஏமாற்றத் திகைப்புடன் மர்ம வீரன் பரிமா மீது பாய்ந்தேறுவதை வெறிக்கப் பார்த்தான். ஆனால் இவனை நோக்கியா அவன் குதிரை திரும்ப வேண்டும்!

     வீரபாலன் சற்றும் முகத்தில் மாறுதலைக் காட்டாமல் “இளவரசே, நீங்கள் ஒரு மாபெரும் வாள்வீரர் என்பதை இன்று கண்டு கொண்டேன். இன்னொரு முறை நாம் வாட்போரில் சந்திக்க வாய்ப்புக் கிடைக்குமானால், அப்பொழுது, உங்களுக்கும் நெறி பிசகாத நிதானமான நியாயமான போர்முறையில் நம்பிக்கையிருக்குமானால் நமது திறமையை பரிசோதிக்க விரும்புகிறேன். இப்போதைக்கு விடைபெற்றுக் கொள்ளுகிறேன்” என்று அறிவித்துவிட்டுக் கூட்டத்தினரைப் பார்த்து சிரக்கம்பம் செய்ய, அவர்கள் பதிலுக்கு வாழ்த்தும் பான்மையில் ஆர்ப்பரித்தனர். மும்முடிக்கோ இந்தக் காட்சியைக் காணவே பிடிக்கவில்லை. பரிமாக்கள் பறந்தன. சிவிகைகள் நகர்ந்தன. கூட்டத்தினர் கலைந்தனர். தன்னை யாரும் கவனிக்கவில்லையே என்ற கோபத்துடன் குதிரையில் அமர்ந்தவன், அந்த வாயில்லாப் பிராணியை எத்தனைமுறை அடித்தானோ!

     தோல்வியும் உள்ளக் குமுறலும் உந்தியெழுப்ப சாவகனும் அவனுடைய ஆலோசகர்கள், மெய்க்காவலரும் சலிப்பும் ஏமாற்றமும் கொண்டவர்களாய் புறப்பட்டனர்.

     ஆனால், அந்த வாளைப் பற்றிய மர்மம் எப்படியோ தெரிந்துவிட்டது போலிருக்கிறதே! இளவரசனுக்குக் கூடத் தெரியாத ஒரு மர்மம் எப்படியோ மன்னர் வரை இப்போது தெரிந்துவிட்டதே! நாளை இந்த முன்கோபக்காரன் விசாரணைக்கு உட்படும் போது நான் என்ன செய்வேன்? எனக்கே தெரியாமல் யாரோ தடவியிருக்கிறார்கள். நான் வேறெங்கும் போகவில்லை. சாவகத் தூதுவர் அளித்த விருதுக்கு மட்டும்தான் போனேன். ஒரே இரவுதான் அவர் மாளிகையில் தங்கியிருந்தேன் என்று உளறிவிட்டானானால் வந்ததே ஆபத்து!

     இப்படிப் பயந்து போன உள்ளக் குமைச்சலுடன் தனது மாளிகை வந்த சாவகனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

     அவர்கள் நினைத்ததே வேறு. இளவரசன் வாள் இரண்டொருமுறை எதிரியின் உடலில்பட்ட மாத்திரத்திலேயே மரணத்தை வெகு துரிதமாகக் கொணரும்படியான சூழ்ச்சி செய்யப்பட்டிருந்தது. எனவே மர்மவீரன் அழிந்து போவான். இளவரசன் எதையாவது உளறினால்கூடத் தனது ஆட்களில் எவராவது சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்ற சந்தேகம் எழுமானால் குறிப்பிட்ட காலத்துக்கு ஆசாமியை விரட்டிவிட்ட மாதிரி ஒரு நாடகம் நடத்திவிடுவது. பிறகு இதே சூழ்ச்சியை அரண்மனைக்குள்ளும் கொண்டு செல்ல வேண்டியது, இவ்வகை வேலைகளில் தேர்ந்த புள்ளிகள் தனது கையாட்களாக இருக்கும் போது... முதலில் இளவரசன்... பிறகு பேரரசி... அப்புறம் சோழ மாமன்னன்... பாவம் இவர்கள் மர்மவீரன் போனவழி போக எத்தனை நாளாகும் என்று நினைத்தால்... நடந்தது முதலிலேயே வேறு மாதிரியாக அல்லவா இருக்கிறது!

     ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டுத்தான் என்பதை இந்த இளவரசன் காட்டிவிட்டானே!

     இப்படியெல்லாம் பலபட நினைத்துக் குமுறிய சாவகத்து பெருந்தூதுவர் மேற்கொண்டு எப்படிச் சமாளிப்பது என்ற பெரும் பிரச்னை தலையெடுத்ததால் தவிப்புக்குள்ளாகி விட்டார். இன்னும் சில நாழிகைகளில் பூம்புகார் நகரம் முழுமைக்கும் பரவிவிடலாம் இந்தச் சூழ்ச்சி விவரம். அப்புறம் யார் யார் என்ற சோதனை அதிதீவிரமாகும். எவரும் தப்ப முடியாது சோழர்தம் திறமையான துப்புத் துலக்கும் பணிமுறைகளிலிருந்து, என்ற எச்சரிக்கை இப்போது பயங்கரமான ஒரு தோற்றமாகவே தலைகாட்டியது.

     அம்பரர்களோ, நாகர்களோ சற்றும் இடமளிக்க மாட்டார்கள் தங்கள் மீது எந்தப்பழியும் ஏற்க. மும்முடியோ நிச்சயமாக நடந்ததைக் கூறுவான். அட கடவுளே!

     ஆம்! சூழ்ச்சிகளுக்கெல்லாம் சூத்திரதாரி என்று தம்மைப் பற்றி இறுமாப்பாக எண்ணி மார் தட்டுபவரான சாவக நாட்டுத் தூதுவர், ராஜஸ்ரீ வித்யாதர ஸ்ரீசாமந்தன் கடவுளை இச்சமயம் வேறுவழியின்றி அழைத்தார் தமது உதவிக்கு!

     ஆனால் அவர் இந்தச் சமயத்தில் உதவிக்கு வரத் தயாராயில்லை. இந்தச் சமயம் என்ன, எந்தச் சமயத்திலும் வரமாட்டார் என்பது சாவகனுக்குத் தெரியாதா என்ன? தெரிந்தும், கொஞ்சம் ஏமாந்திருக்கமாட்டாரோ தனது இறைஞ்சுதலை ஏற்க! என்றுதான் அவரை நினைத்தான் போலும்!

     இரவு முழுமையும் உறக்கம் இல்லையென்றாலும், சூழ்ச்சிகளையே உருவாக்கும் அவன் மனத்தில் நிம்மதியில்லையென்றாலும், ஒரு சூழ்ச்சியிலிருந்து தப்ப இன்னொரு சூழ்ச்சிதான் தேவை என்ற அனுபவத்தைப் பெற்றிருந்த அவன் தனது ஆலோசகர்களை அழைத்தான் பொழுது புலருவதற்குள்ளாக.

     அடுத்த நொடியே புதியதோர் சூழ்ச்சி அங்கு உருவாகத் தொடங்கியது!