பொன்னகர்ச் செல்வி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

16. மர்ம வீரன்

     தலைநகரத்தில் கடந்த சில தினங்களாக நிகழ்ந்த கோலாகல சம்பவங்கள் சட்டென்று அடங்கி அலாதியான அமைதி, பயங்கர அமைதி என்றுகூடக் கூறலாம் - ஏற்பட்டுவிட்டது. இதற்குக் காரணம் இதுதான் என்று குறிப்பிட்டுக் கூற முடியாவிட்டாலும் எத்தனையோ காரணங்கள் என்று பொதுப்படக் கூறலாம். ஆங்காங்கு கூடிக்கூடிப் பேசும் மருவூர்ப்பாக்கத்தார், நாட்டில் ஏதோ ஒரு விபரீதம் நிகழப் போகிறது. எதிரிகளின் கையாட்கள் எப்படியோ ஊடுருவியிருக்கிறார்கள் என்றும் தாங்கள் கண்ணுங் கருத்துமாய் இருக்க வேண்டும் என்றும் பேசிக் கொண்டனர். பட்டினத்துப்பாக்கத்தார், அரசினர்தான் சிறிதளவு கவனக் குறைவு காட்டுகின்றனரோ என்றும் பேசிக் கொண்டனர், ஆயினும் எந்தப் பகுதியினரும் நாட்டிலே எதிரிகளின் கையாட்கள் ஊடுருவியிருக்கின்றனர் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுவதில் தயங்கவில்லை.

     மர்மவீரன் யார்? திடீரென்று வந்த இவனுக்கும் புகலிடம் அளித்தவர் கடல்நாடுடையார் என்பது ஒரு விந்தை! எதிர்பாராதவிதமாக இவன் மன்னர்தம் மெய்க்காவலர் படையில் பதவியேற்றுள்ளான் என்பது இன்னொரு விந்தை! இவற்றுக்குத் தலையானதாக இவனைக் கொல்லுவது என்ற நோக்கத்தில்தான் இளவரசர் தமது வாளில் நஞ்சைக் கலந்து தடவியிருந்தார் என்ற விபரீத வதந்தி காட்டுத் தீப்போலப் பரவிவிட்டது!

     ஆனால், இளவரசன் இதை அடியோடு மறுத்தான். தனது வாளில் நஞ்சு கலந்திருந்த விபரமே தனக்குத் தெரியாது என்று சாதித்தான். மன்னர், தமது மகன் இப்படியொரு கோழைத்தனமான சூழ்ச்சியிலிறங்குவான் என்று நம்பவும் தயாராயில்லை. எனினும் அதே சமயம் இதை மறுத்துக் கூறவும் தயங்கினார் அவர்.

     மும்முடி முன்கோபக்காரன்தான். பதட்டமும் உடன் பிறந்ததுதான். ஆயினும் கோழையல்ல. குரூரமான சிந்தையும் உடையவனில்லை. கோபம் கொண்ட வேகத்திலேயே குழந்தைபோல அதை மறந்துவிடுவதும் அவன் குணமாகும். எதையும் வெளிப்படையாகச் செய்வதுதான் அவன் இயல்பு. குள்ளநரித் தந்திரம், யுக்தி வேலைகளை அறியாதவன். உண்மை இதுவாயிருக்க, இவன் எப்படி இத்தகையதொரு சூழ்ச்சியைக் கொண்டிருக்க முடியும்?

     அரசரை மட்டும் அல்ல, அனைவர் மனத்தையும் குடைந்தெடுத்தது இந்தக் கேள்வி.

     எனவேதான் அவன் தனக்கு இதுபற்றித் தெரியவே தெரியாது என்று சாதித்ததை ஒப்புவதா உதறுவதா என்று புரியாது குழம்பினர்.

     அமைச்சர் குழுவினர், அவர்தம் பிரம்மாதிராயர் காடவர்கோன் ஆகிய அரசவைத் தலைவர்கள் எவ்வளவு கேட்டாலும் என்ன செய்தாலும் இளவரசரிடமிருந்து கிடைத்த ஒரே பதில் ‘எனக்குத் தெரியாது. யாரோ செய்த சூழ்ச்சி!’ என்பதுதான்.

     “உங்கள் வாள் எப்படி மாற்றாறிடம் போகும்?”

     “அதெப்படித் தெரியும் எனக்கு! நான் உணவருந்தப் போகிறேன், உடையுடுக்கச் செல்லுகிறேன், நீராடச் செல்லுகிறேன், படுக்கச் செல்லுகிறேன், பாடல் கேட்கப் போகிறேன். அப்போதெல்லாம் வாள் எடுத்துச் செல்லுகிறேனா என்ன?”

     இளவரசன் கேள்வியில் பொதிந்திருந்த உட்கருத்து விபரீதமானது.

     “அப்படியானால், இங்கே அரண்மனையில் உள்ளவர்களே செய்திருக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுகிறீர்களா?”

     “ஏன் கூடாது? எனக்கெதிராக எனது தந்தை, பாட்டி, ஏன்? உடன் பிறந்தவர்களே மாறிவிட்ட போது ஏன் இதுவும் நடந்திருக்கக் கூடாது?”

     மன்னர் மட்டும் அல்ல, மற்றவர்களும் இளவரசன் புத்தி நிதானத்தை இழந்து பேசுவதை கண்டனர். பிரும்மாதிராயர் அழுத்தமான பேர் வழி. எதற்கும் அசைந்து கொடுப்பவர் அல்ல. மர்ம வீரன் பற்றி அவருக்கு இன்னமும் பழைய ஐயம் நீங்காவிடினும், இளவரசர் தம் வாளில் நஞ்சு பூசப்பட்டிருந்தது என்ற உண்மையைப் பற்றிய உண்மை தெரிவித்தாக வேண்டும் என்ற பிடிவாதமுங் கொண்டுவிட்டார். தவிர அமைச்சரவையினரோ, உடன் கூட்டத்தாரோ அறிய வேண்டிய விவரத்தினை மறுக்கும் உரிமை மன்னருக்குக் கூட இல்லை என்பதாக ஒரு வழக்குமிருந்தது. எனவேதான் வேறுவழியின்றி இளவரசன் அவையினர்தம் அந்தரங்கக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தான். மறுத்தால் ஏற்படும் விளைவு எத்தகையது என்பதை அறிந்திருந்தான்!

     “நேற்றைய இரவு நீங்கள் அரண்மனையிலோ அந்தப்புரத்திலோ தங்கவில்லை என்ற ஒரு உண்மையை நீங்கள் மறுக்கிறீர்களா?”

     “மறுக்கவில்லை. நான் நேற்றிரவு முழுமையும் முந்தா நாள் இரவுப் பகுதியும் சாவக நாட்டுத் தூதுவர் விருந்துகளில் கலந்து கொண்டிருந்தேன்.”

     அவையினர் அதிசயங் கலந்த வியப்புடன் மாறி மாறிப் பார்த்துக் கொண்டனர்.

     “நீங்கள் போகும் போதும் சரி, வரும் போதும் சரி இடையில் வாளைத் தரித்திருந்தீர் என்பது உளவுப் படையினர் அறிவிப்பு!” பேரமைச்சரிடமிருந்து இந்தச் சொற்கள் அழுத்தந்திருத்தமாக வந்தன.

     “இதற்கு உளவுப் படையினர் தேவையில்லை. அரசாங்க விருந்துக்குச் சென்ற காலை அதற்கு உரிய ராஜரீக சின்னங்கள் தேவையென்பதால் அவ்வாறே சென்றேன். இதில் தவறு என்ன?”

     அவையினர், அமைச்சர் தலைவர் அடுத்தபடி தொடுக்கப் போகும் கேள்வியின் மூலம் கொஞ்சமேனும் தெளிவேற்படும் என்று ஆவல் காட்டினர். ஆனால் அவரோ சற்றுத் தயங்கியபடி மன்னரைப் பார்த்தார். அவரோ ஒரு குறியுமில்லாது தனது பார்வையை அங்குமிங்கும் செலுத்தினாரே தவிர, தம்மைப் பேரமைச்சர் நோக்குவதைக் கவனிப்பதாயில்லை. எனினும் அவர் தம் செவிகள் எவ்வளவு கவனங்காட்டியிருந்தன.

     காடவர்கோனுக்குப் பொறுக்கவில்லை.

     “மும்முடி, அயல்நாட்டுத் தூதுவர் விருந்தினை மறுப்பது முறையல்ல. ஆனால் அங்கு இரவு முழுமையும் தங்கித்தானாக வேண்டுமா?” என்று கேட்ட போது அவர் குரலில் சற்றே நடுக்கமும் கலந்திருந்தது!

     சட்டென்று பதில் கூற முடியவில்லை மும்முடியால். அம்மான் கேட்கும் கேள்வியின் உட்கருத்து இத்தகைய குறிப்பிட்ட உட்கருத்தை வலியுறுத்துகிறது என்று இளவரசருக்குப் புரியாமலிருக்கக் காரணமில்லை. தயக்கத்துடன் ஏன் கொஞ்சம் கலக்கத்துடன் என்றாலும் நாணத்துடன் என்று கூடத்தான் சொன்னாலும் தவறில்லை! பதிலளித்தான்: “நான் விருந்தில் கலந்து கொண்டு சற்று மிதமிஞ்சியே...” வார்த்தைகளை முடிக்காமல் சட்டென்று மவுனமானான்! காடவர் மேலே கேட்கத் தயங்கி மவுனமானார்.

     ஆனால் பேரமைச்சர் மீண்டும் கேட்டார்: “நீங்கள் உண்ட மயக்கத்தில் உறங்கச் சென்றீர்கள் அல்லவா?”

     இப்போது நாணமும் தயக்கமும் மும்முடியிடமிருத்து விலகிவிட்டது. “இதென்ன கேள்வி பேரமைச்சரே! ஆமாம் உறங்கச் சென்றேன். எவ்வளவோ நாட்களாக நான் வேங்கியில் அனுபவித்த துன்பங்களையெல்லாம் அன்றைய ஒரு இரவு அடியோடு மறந்து உறங்கினேன். உறங்கினேன். உறங்கிக் கொண்டேயிருந்தேன். மறுநாள் பொழுது புலர்ந்து நெடுநேரமாகியும் துயில் கலையவில்லை.”

     அவையினர் இந்தப் பதிலைக் கேட்டதும் அதிர்ச்சியும் வெறுப்பும் அடைந்து பொருமினராயினும் மன்னர் எதிரே மனம்விட்டுப் பேசத் தயங்கினர். ஆனால் காடவராயர் மன்னரைப் பார்த்த பார்வையில் கோபம் துளிர்த்திருந்தது. அவர்தம் மூடியிருந்த வாய் மேலும் பொறுக்காமல் “கேளுங்கள் சோழ மகிபரே! உமது அருமை மகன் சாவகத்தார் சமைத்து அளித்த விருந்து, அமைத்தளித்த மஞ்சம் எல்லாம் இதுவரை அவன் அனுபவித்தவை அனைத்தும் துன்பம் என்ற முடிவைச் செய்திருப்பவை!” என்று முழங்கிவிட்டுச் சட்டென்று எழுத்துவிட்டார். மன்னரும் தமது இருக்கையைவிட்டு எழுந்து முன்னே வந்தார்.

     மும்முடி தன்னுடைய மாமன் இப்படிக் குமுறி எழத் தான் செய்துவிட்ட தவறுதான் என்னவென்று வியப்பது போல எழுந்து நின்றான்.

     “மாமன்னருக்கும், காடவர்கோனுக்கும் விண்ணப்பித்துக் கொள்ளுகிறேன். சற்று நிதானம் காட்டும்படியாக!” என்று பிரும்மாதிராயர் விநயமாக வேண்டியதும் இருவரும் அப்படியே நின்றனர்.

     “பெரியவர்கள் மனம் இப்படிப் பதறும்படி நான் என்ன செய்துவிட்டேன்?” என்று கேட்ட இளவரசனை ஏளனமாகப் பார்த்த பேரமைச்சர், சற்றே இரைந்த குரலில் “நீங்களாக எதையும் செய்யவில்லை. விருந்து மயக்கத்தில் நீங்கள் அங்கு ஒரு இரவைக் கழித்தீர்கள் அவ்வளவுதான். உங்கள் உறக்கத்தின் போதுகூட உமது வாள் இடையிலேயே கிடந்ததா இளவரசே?” என்று கேட்டுவிட்டுக் கூர்ந்து நோக்கினார் மும்முடி முகத்தை.

     “எப்படி முடியும் அப்படியே தூங்க. வாள் மாட்டலில் அதை மாட்டிய பிறகுதான் தூங்கச் சென்றேன்.”

     “பிறகு காலையில்தான் அதை எடுத்தீர் இல்லையா?”

     “நான் எடுக்கவில்லை. சாமந்தர்தம் மெய்க்காவலரான சிசுநாகரே எடுத்து எனக்கு அணிவித்தார்!”

     “போதும்! போதும் விளக்கம்!”

     அவையினர் ஒருமுகமாகத் திடுக்கிட்டெழுந்தனர். எந்தக் குரல் சோழ சாம்ராஜ்யத்தையே அடக்கி ஆண்டதோ அந்தச் சிம்மக் குரல்தான் அப்படிக் கர்ச்சனை புரிந்தது. எந்தக் குரல் கேட்டதும் எதிரிகள் எல்லாம் எட்டாத் தொலைவுக்கு ஓடினரோ அந்தக் குரல்தான் இளவரசன் மும்முடியின் இனமறியாத ஒரு செய்கையின் விளைவுக்குக் காரணமாக மனக்குமுறல் தாங்காது அப்படி முழங்கியது!

     மும்முடி இப்பொழுதுதான் உண்மையில் அச்சமும் கலக்கமும் அடைந்தவனாகத் தன்னிலைக்கு வந்தான். தனது தந்தை இப்படி இடியோசை முழங்குவதற்குக் காரணம் ஒன்று இருக்க வேண்டும். அக்காரணம் தான் செய்துவிட்ட ஒரு தவறு வழிப்பிறந்ததாகவே இருக்க வேண்டும் என்பதைச் சற்றே உய்த்துணரும் தெளி நிலையை நோக்கி வந்தது அவன் உள்ளம். காடவர்கோன் தான் அந்தப்புரத்தில் தங்காமல் வேற்றிடம் சென்ற தவறைப் பெரிதாகக் கருதுகிறோம். அது பொன்முடிக்காக அவர் உரிமை உறவுமுறைப் பாசத்தின்வழி பிறந்தது. ஆனால் மன்னர் உண்மையில் வேறு காரணத்துக்காகத்தான் இத்தகைய சினத்தைக் கொண்டுவிட்டார். அத்தகைய காரணம்தான் என்ன?

     “மும்முடி? நீ மூத்த இளவரசன், நாளை நாடாளும் பொறுப்பேற்க இருப்பவன். எங்கு, எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எப்படி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற, ஒரு சிறு நிலை கூடவா புரியவில்லை. நீ உறங்கிவிட்டப் பிறகு அந்த வாளில் நஞ்சு பூசப்பட்டிருக்கலாம். அதுவும் மர்மவீரனைப் பிடிக்காதவர்கள் நிறைந்த அந்தத் தூதுவர் மாளிகையில். இது நடைபெற்றிருப்பதில் விந்தையில்லை என்பது கூடவா புரியவில்லை...”

     பேரமைச்சர் இப்படிப் பேச பேச மும்முடிக்குக் கொஞ்சங் கொஞ்சமாக முந்தைய இரவு நிகழ்ச்சிகள் நினைவில் படர்ந்தன.

     மயக்க நிலையிலிருந்தாலும் அவர்கள் மர்ம வீரனைப் பற்றி அதிகமாகவே தன்னிடம் ஏசிப் பேசியவை, தனக்கேற்றபடி அவன் மீது அதிகமான வெறுப்பையூட்டும் வார்த்தைகளைப் பரிமாறியதை நினைவுக்குக் கொணர்ந்தான்... பிறகு காலையில் ‘அந்த அந்நியத் துரோகி அடியோடு ஒழிவான். நீங்கள் வெற்றி பெறும் பெரும் வாய்ப்பினை இந்த வாள் பெற்றிருக்கிறது’ என்று பூடகமாகப் பேசியது... இருக்கலாம்... ஏன் உண்மைதான்? அவர்களில் எவரோதான் இந்தக் கொடிய செயலைப் புரிந்திருக்க வேண்டும்...

     “உன்னுடைய முன்கோபம், பதற்றம், சிந்திக்கும் திறனின்மை ஆகிய மூன்றும் உன்னை மட்டுமல்ல, இந்தச் சோழ நாட்டையே...” என்று மன்னர் கூறிமுடிப்பதற்குள்,

     “வேண்டாம் மன்னா... வேண்டாம். தங்கள் வாயிலிருந்து இப்படிப்பட்ட சொற்கள் வரக்கூடாது. மும்முடியை நன்கறிந்தவர்கள் அவன் இதற்கு முக்காலும் காரணமல்ல என்பதை அறிவர்... நீங்களும் சற்று நிதானிக்க வேண்டிய தருணம் இது. எதிரி எந்த உருவில் எந்த இடத்தில் எப்படிச் செயலாற்றுகிறான் என்ற முழு உண்மையும் தெரியும்வரை மிக்க நிதானம் தேவை நமக்கு” என்று நிதானம் என்பதையே வெறுப்பவரான பழுவேட்டரையர் பணிவுடன் கூறியதும் மன்னர் நீண்டதொரு பெருமூச்சுவிட்டு மவுனமானார். ஆனால் அத்தனை பேர் மனமும் அப்போது மவுனமாக இல்லை. வீரத்துடன் வாள்களையும் வேல்களையும் கொண்டு நேருக்கு நேர் போராடும் பகைவனை எளிதில் சமாளித்து வெற்றி காணலாம். ஆனால் ஊடுருவி நின்று அப்பாவித்தனமாகக் காட்சியளித்துக் குழிபறிக்கும் குள்ளநரிப் பகைவனை இனத் தெரிந்து கொள்ளுவது கூடிக் கடின வேலையன்றோ!

     எனவே அரசவையினர் மேலும் ஏதோ ஆலோசனை செய்யவிருக்கும் தருணத்தில் வேவுகாரப்படையில் ஒருவன் வந்து பேரமைச்சரிடம் ஏதோ கூற, அவர் அதை மன்னரிடம் அறிவிக்க அவர் சட்டென்று எழுந்து “அவை மேற்கொண்டு யோசித்து ஒரு முடிவுக்கு வந்த பிறகு கலையட்டும்!” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளிப்போந்தார். சென்றவர் நேராகப் பெரிய பிராட்டியார் இருப்பிடம் போனதும் “நான் மட்டுமே போனால் போதும், குலோத்துங்கா! நீயும் வரவேண்டுவதில்லை என்று கூறியனுப்பியும் ஏன் வந்தாய்?” என்று கேட்டுவிட்டு தமது அறைக்கு வெளியே நடந்தார்.

     “நானும் கடல்நாடுடையார் மாளிகைக்கு வருகிறேன் அம்மா. எந்தச் செய்தியை நாம் எளிதாகவும் அலட்சியமாகவும் கருதினோமோ அது இப்போது மிகப் பெரியதாக உருவெடுத்துவிட்டதம்மா!”

     “தெரியும் மகனே! தெரியும். சற்று நேரத்துக்கு முன்னர் ராஜகுரு புத்தமித்திரர் இங்கு வந்திருந்தார்!”

     இப்பொழுது மன்னர் வியப்படைந்து “அப்படியானால் எங்கள் ஊகம்...” வார்த்தையை அவர் முடிப்பதற்குமுன் “ஊகம் அல்ல மகனே, உண்மை. ஆகையினால்தான் நான் கோவரையரைப் பார்க்க விழைகிறேன். இது மாதிரி நெருக்கடிகளில் தக்க யோசனை கூறவோ அதைச் செயல்படுத்தவோ அவரால்தான் முடியும்!”

     “எனக்கும் அது தெரியும். ஆனால் நானும் உங்களுடன் வந்தேயாக வேண்டும்.”

     “சரி. அப்படியானால் மறுப்பில்லை. நீயும் வரலாம்...” பேரரசி அம்மங்காதேவியும் மாமன்னன் குலோத்துங்கனும், அந்த நள்ளிரவில் மெய்க்காவலர் உதவியுடன் வேறு யாரும் அறியாமல் கடல்நாடுடையார் மாளிகையடைந்த போது இரவுப் பொழுது நடுநிசியைத் தாண்டி விட்டது.

     சோழ அன்னையும் மகனும் அந்நேரத்தில் தங்கள் மாளிகை வருவர் என்பதை எப்படி எதிர்பார்த்திருக்க முடியும் கடல்நாடுடையார் ஊழியர்களால். சிவிகை தங்கள் மாளிகை வாயிலில் நின்றதையும் அதிலிருந்து அவர்கள் இறங்கியதையும் கண்ட காவலாட்கள் இவர்கள் தம் வருகையை அறிவிக்க மாளிகையுள் செல்லத் துவங்கியதைக் கண்ட மன்னர் “நாங்களே போகிறோம். நீங்கள் இங்கேயே இருங்கள்!” என்று உத்திரவிட்டபடி உள்ளே சென்றனர்!

     கடல்நாடுடையாரும் அரண்மனை வைத்தியரும் தவிர வேறு இரண்டு பேர்களும் இருந்தனர். அவர்கள் யார் என்று தெரிய மன்னருக்கு அதிக நேரமாகவில்லை! எதிர்பாராது மாமன்னர், முதியபிராட்டி வந்ததைக் கண்ட கோவரையர் வணங்கி “இந்த எளியவன் இல்லத்துக்கு இந்நேரத்தில் வந்தது எங்கள் மீது நீங்கள் கொண்ட நல்லன்பைக் காட்டுகிறது!” என்று கூறி வரவேற்றார்.

     “எப்போதும் நல்லவர்களிடத்தில் நல்லன்பு கொள்ளுவதில் சோழகுலத்தார் குறை வைத்ததில்லையே?” என்று மூதாட்டி பதிலுக்கு ஒரு கேள்வி கேட்டதும் கோவரையர் சட்டெனப் பதில் தரவில்லை. ஏனெனில் மன்னர் சற்றே முன்னேறி தனியே நின்ற அந்த இரு பேர்வழிகளிடம் செல்லுவதைக் கவனித்துவிட்டார். ஏதோ ஒரு நிலைமையை ஊகித்தவரைப் போலச் சோழ அன்னை சட்டென, “நாம் அந்த இளைஞனைப் பார்க்கலாமா வைத்தியரே?” என்று கேட்டதும் அவர் முன்னே செல்ல முதியபிராட்டி தொடர்ந்து போனார். இப்போது தயக்கமெதுவுமின்றி கடல்நாடுடையாரும் மன்னரைத் தொடர்ந்து எட்டத்தில் நின்றவர்களிடம் சென்றுவிட்டார்.

     “பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாம் சந்திக்கிறோம் இல்லையா?” என்று மாமன்னர் அந்தப் பேர்வழிகளிடம் கேட்ட கேள்வியில் இருந்த வேகம், வெறுப்பு, சினம், சீற்றம் எல்லாம் அவர்களுக்குத் தெரியாமலில்லை. ஆனால் திடீரென்று தங்கள் எதிர்பாராத ஒரு இக்கட்டில் சிக்கிக் கொண்டோமே என்னும் கலக்கம் அவர்கள் முகத்திலும் பிரதிபலித்தது. எனவே மன்னன் கேள்விக்குப் பதில் கூறுவானேன்? பதில் சொல்லி மேலும் தங்களுடைய நிலையைச் சிக்கலாக்குவானேன் என்ற நினைவுடன் வாளாவிருந்தனர் போலும்!

     ஆனால் கடல்நாடுடையார், “அவர்கள் பதில் கூறுவர் என்று நாம் எதிர்பார்ப்பதற்கில்லை. இப்போதைய சூழ்நிலையில் கடலோடி வேவுப்படையினர் தலைவன் வந்த பிறகு நிலைமை தெளிவாகும். அவனும் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவான்” என்று விளக்கினார்.

     “இவர்கள் பிடிபட்டு எத்தனைக் காலமாயிற்று கோவரையரே!”

     “மூன்று நாட்கள் ஆகின்றன என்று தலைவன் கூறியுள்ளான்! இங்கு வந்து நாலு நாழிகையளவுதான் ஆகிறது.”

     “சோழ நாட்டின் கண்கள் உறங்கவில்லை என்பதை நீங்கள் மீண்டும் உறுதிப்படுத்திவிட்டீர்கள் கோவரையரே. இந்தக் குழப்பமான நேரத்தில் இதுதான் ஆறுதலூட்டுகிறது” என்று மன்னர் கோவரையர் தோளைத் தொட்டு கரங்களைப் பிடித்துக் கொண்டு அப்பால் நகர்ந்தார்.

     சிக்கிக்கொண்ட இரு பெருந்தலைகளும் வர்மத்துடன் பார்த்தன அப்பால் செல்பவரை! எவ்வளவோ திறமையாக தந்திரயுக்திகளைக் கையாண்டும் கூடத் தங்களைச் சோழ நாட்டுக் கடலோடி வேவுப்படை பிடித்துவிட்டதே என்ற கவலைக்குப் பதில் சினந்தான் அவர்களை உலுக்கியது.

     கடல்நாடுடையார் இனி என்ன செய்வார்? சோழ மன்னர் தமது நீண்டகால வைரிகளின் பக்கபலம் தக்கபடி சிக்கின பிறகு பழி தீர்க்காமல் விடுவாரா? எனினும் உயிர் திரணமாத்திரம்தான். இந்த உயிரின் உள்அடக்கமாக புதைந்து கிடக்கின்றனவே எத்தனையோ ‘ரகசியங்கள்...’ அவை எந்தச் சித்திரவதைக்கும் அசைந்து கொடுத்து வெளிப்படாது என்பது உறுதி என்று அவர்கள் தங்களுக்குள்ளே தீர்மானித்தப்படி அடுத்து நடப்பது எதுவானாலும் அதற்குத் தக்கபடித் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளுவதில் இருவரும் கருத்தாயிருந்தனர்.

     அரசரும் கடல்நாடுடையாரும் நெடுநேரம் பேசாமல் நடந்தனர். என்றாலும் இருவர் மனமும் தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டனர். கடல்நாடுடையார் எப்படி எங்கு இவர்களைப் பிடித்திருக்க முடியும்? என்று அதிசயித்துக் கொண்டே நடந்தார். கோவரையரோ அவர்களிடத்திருந்து உண்மையை அறிவதற்குள் மன்னரும் சோழமாதேவியும் வந்திருக்கிறார்களோ? இந்த நடுநிசியில் ஏன் இந்த திடீர் விஜயம்? தமது தள்ளாத வயதில் பேரரசி இங்கு இந்நேரத்தில் வந்திருப்பதற்கு மிக முக்கியமான காரணம், மர்மவீரனைத் தவிர-இருக்கத்தான் வேண்டும். அது என்ன? என்று ஆராய்ந்தபடி நடந்தார்.

     வீரபாலன் கட்டிலில் கிடந்த சிகையைக் கண்டதும் மன்னரே மிரட்சியுற்றார்! பேரரசி பெண்தானே! அவர்கள் உள்ளம் பதறியது. மருத்துவர் “நஞ்சு குருதியில் கலந்துவிட்டதால் உடனடியாக எதுவும் செய்வதற்கில்லை. அதனால்தான் மயக்கமூட்டி உறங்கச் செய்துள்ளேன். நாளை விடிந்த பிறகுதான் ரத்தசுத்தியைத் துவக்க முடியும்” என்று மிகப் பணிவாக அறிவித்தார்.

     “உயிருக்கு எதுவும் ஆபத்து இல்லையே!”

     “இப்பொழுது எதுவும் கூறுவதற்கில்லை!”

     “பொழுது புலரும்வரை காத்திருப்பானேன்? அதற்குள் இன்னும் அதிகமாகப் பரவிட்டால்...”

     “பரவாமல் தடுப்பு முறையைக் கையாண்டுள்ளேன்.”

     “அப்படியானால் இப்போதைக்கு...” என்று மன்னர் மேலே ஏதோ கூறமுற்படுவதற்குள் சற்றே புரண்டு படுத்த வீரபாலன் “உறுதியம்மா உறுதி...” என்று ஏதோ உளறினான்.

     மன்னர் தமது அன்னையை நோக்கினார். அவரோ வைத்தியரைப் பார்த்து “இப்படி அடிக்கடி உளறுகிறானா?” என்று கேட்டதும் வைத்தியர் விநயமாக “ஆம்! சில சமயங்களில் இவர் உளறும் வார்த்தைகள் ஏதோ ஒரு பெரும் மர்மத்தைக் கூறுவது போலவும் இருக்கிறது.”

     “அப்படிப்பட்ட மர்மம்தான் என்னவோ?”

     “மன்னிக்க வேண்டும். மருத்துவத் தொழில் என்னை அமர்த்தி ஆதரிக்கும் மாமன்னர் என்னிடமிருந்து ஒரு நோயாளி தன் நிலையிழந்து கூறுவனவற்றை விளக்கும்படி கேட்டது...”

     மன்னர் மேலே வற்புறுத்தவில்லை. மருத்துவர்கள் இத்தகைய உறுதியைப் பெற்றிருப்பது எத்த அளவுக்கு நன்மை பயக்கும் என்பதை அறிந்தவர் அவர். ஆனால் அவன் ‘உறுதி உறுதியம்மா’ என்று தொடர்பாகக் கூறியதேன். யாரிடம் என்ன உறுதி? கடல்நாடுடையாரைத் திரும்பிப் பார்த்தார் மன்னர். ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவர் போல் “பேரரசி மட்டும் இருக்கட்டுமே. நாம் வெளியே செல்லலாமே” என்று கடல்நாடுடையார் இங்கு தரமாக அழைத்ததும் அரசர் மறுக்காமல் வெளியே நடந்தார்.

     “நாங்கள் ஏன் இச்சமயம் வந்திருக்கிறோம் என்பதை ஊகிக்க முடிகிறதா கோவரையரே?” என்று முதியபிராட்டியார் அறைவாயிற்படி வரை வந்து கேட்டதும், சட்டென்று நின்ற கடல்நாடுடையார் “ஊகிக்க முடிகிறது பேரரசி! பொழுது புலரும் வரை காத்திருக்கலாம். என்னை அழைத்து வரும்படி உத்திரவிட்டிருக்கலாம்!” என்றார்.

     “நிலைமை தெரிந்துமா தாமதிக்கச் சொல்லுகிறீர்? மும்முடியின் வாள் நுனியில்...” என்று மன்னர் இடைமறித்து ஏதோ சொல்ல வந்தபோது “நஞ்சு தடவியவர்கள் பற்றிய புலன் தெரிந்தது என்பதுதானே?” என்று குறுக்கிட்டுத் திரும்பினார் கோவரையர்.

     “இது ஒரு பெரும் கொடுமையென்று நீங்கள் கருதவில்லையா?”

     “இதைவிடக் கொடுமை சிங்களத்து நல்லெண்ணத் தூதுக்குழுவிலும் நமக்குக் கெடுதி செய்ய ஒருவனிருக்கிறான் என்று புலன் வந்துள்ளது!”

     “ஆ என்ன?” என்று மன்னர் பரபரத்துக் கேட்டதும் பேரரசி, “நீங்கள் சிறிது நேரம் இங்கேயே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். மன்னருக்குச் சில விவரங்களைக் காட்டி விளக்கிவிட்டுப் பிறகு உங்களிடம் வந்து தொகுத்துக் கூறுகிறேன்” என்று அவர்கள் அனுமதியைக்கூட எதிர்பார்க்காமல் நடந்தார். மன்னரும் தொடர்ந்தார்.

     பேரரசியார் தன் மகனை அழைத்துப் போய் கடல்நாடுடையார் விளக்கப் போகும் உண்மைகளை ஒருவாறு ஊகித்தவர் போல மீண்டும் அறைக்குள் நுழைந்தார்.

     “இன்னும் எட்டு நாட்கள்தான் தாயே! பொறுத்திருங்கள்...” மூதாட்டி திடுக்கிட்டாள். ‘யாரிடம் இந்த இளைஞன் இப்படிப் பேசுகிறான்... எட்டு நாட்கள்தான் என்றால் எதற்கு? இதென்ன விந்தையான உளறல்!’

     “நீங்கள் அடிக்கடி எச்சரிக்க வேண்டாம் தாயே. நான் ஏன் மாறுகிறேன்! நீங்கள் என்னிடம் கொண்ட நம்பிக்கை வீண்போகவே போகாது!”

     அரசி சற்றே நிதானித்தாள். இங்கு மேலும் இருக்கலாமா? கூடாதா? இந்த இளைஞன் உளறல்களைக் கேட்கும் உரிமை தமக்குண்டா? பயனுண்டா? வேதனையால் தவித்து மயக்கத்தால் தன் நிலைமீறி உளறும் இவன் மர்மங்களை இப்படி அறிவது முறையானதுதானா? என்று யோசித்தார்.

     “ஒருக்காலும் விடமாட்டேன். என் உயிர்போனாலும் போகும். அவர்தம் உயிரைக் காத்தே தீருவேன். அஞ்ச வேண்டாம். அவர் உங்கள் அன்புக்கும் பக்திக்கும் உரியவர்தான். ஆனால் அவர்தானே எனக்கும்... எனக்கும்...” வார்த்தைகள் குழறிவிட்டன.

     சோழமாதேவிக்கு இதைக் கேட்டதும் ஏற்பட்ட உணர்ச்சி எத்தகையதோ! உடல் எங்கும் குப்பென்று வேர்த்து விட்டது. மர்மவீரன் உளறலைப் புரிந்து கொண்டுவிட்டார் அவர். உண்மை சற்றே தெளிவானதும் அரசியால் அங்கு நிற்கக்கூட முடியவில்லை.

     “கோவரையரே... கோவரையரே!” என்று கூவிக் கொண்டே பேரரசி அவ்வறையைவிட்டு வெளியேறிய பிறகும் கூட மருத்துவர் நகரவில்லை. ஆனால் அவர் முகம் மட்டும் அச்சத்தாலோ கலக்கத்தாலோ திடீரென்று மாறிவிட்டது!

     கடந்த சில நாழிகைகளாக அவர் கேட்டுக் கேட்டுத் தவித்துக் கலங்கிப்போன உளறலின் உண்மைதான் என்ன? மருத்துவர் அதிகம் இதுபற்றி இனியும் ஆராயத் தவறவில்லை. பெரிய இடத்து ரகசியம் பற்றி ஆராய முற்படுவது தற்கொலைக்கு ஒப்பானது என்பது அந்த எண்பதாண்டுப் பெரியவருக்குத் தெரியாதா?

     நன்கு தெரியும்! இன்றல்ல, நேற்றல்ல, அரண்மனை மருத்துவராக அறுபதாண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றும் அவருக்குத் தெரிந்திருந்த ரகசியங்கள் பேரரசர்களுக்குக் கூடத் தெரிந்திருக்கவில்லை. ராஜேந்திர சோழன் கடல் கடந்து சென்ற காலையில் நச்சுச் சுரத்தால் பீடிக்கப்பட்டிருந்த மர்மத்தை அவர்தம் மெய்க்காவலர்களே அறிந்துவிடாமல் தொண்ணூறு நாட்கள் கடத்திவிட்டவர் இவர்! பரம்பரை பரம்பரையாக ராஜ விசுவாசிகளாகவும், ராஜ வைத்தியர்களாகவும் இருந்துவரும் தலைமருத்துவக் குலத்தினரான இவர், இந்த மர்மவீரன் உளறுவதன் மூலம் பெரிய பெரிய அரசியல் மர்மங்கள் வெளியாகக்கூடும் என்பதைக் கடந்த சில நாழிகைகளில் அறிந்து விட்டாராயினும் தன் வாய்விட்டுத் தான் கேட்டதெதுவும் வெளிப்பட வேண்டியதில்லை என்பதில் உறுதியாகிவிட்டார்.

     மன்னர் கோபக்காரர்தான். வற்புறுத்தலாம். ஆயினும் பரம்பரைக் குலமுறை உறுதியிலிருந்து பிறழும்படி நிர்ப்பந்திக்க முடியாது அவர்கூட!

     அறைக்கு வெளியே அதிர்ச்சியுடன் சென்ற பேரரசியின் அழைப்பு ஒரு கூக்குரல் மாதிரி கடல்நாடுடையார் செவிகளில் புகுந்துவிட்டது. அதுகாறும் மன்னருக்கு அவர் விளக்கி வந்த பல விவரங்களில் யோசனைகளும் கவலையும் கொண்ட மனத்தினராய் மெய்ம்மறந்து மவுனமாயிருந்த மன்னர் தம் செவிகளில்கூட சோழமாதேவியின் அழைப்புக் குரல் நுழையவில்லையாயினும் கோவரையர் காதில் விழுந்துவிட்டது. ஓடோடிச் சென்றார் பேரரசியிடம்.

     “கோவரையா, நீயுமா என்னிடம் உண்மையை மறைப்பது?” என்று அரசியார் தழுதழுத்த குரலில் கேட்ட கேள்வி, கோபத்தாலா, தாபத்தாலா அல்லது கலக்கத்தாலா என்று புரியவில்லையாயினும் கேள்வியின் பொருள் அவருக்குப் புரியத்தான் செய்தது! எனினும் சட்டெனப் பதில் கூறாமல் ஆனால் மிகவும் அடக்கத்துடன் “தங்கள் மனம் நோகும்படி நானறிந்தவரை எந்தத் தவறும் செய்தேனில்லை. அறியாமல் செய்திருந்தால் பொறுத்தருளும் பெருத்தன்மை தங்களுக்குண்டு” என்று பதில் தந்ததும் அரசி,

     “இப்படி வந்து சொல் நான் கேட்பதற்குப் பதிலைச் சுருக்கமாக?” என்று உத்திரவிட்டதும் அருகே சென்று அடக்கமாக நின்றார்.

     “மர்ம இளைஞன் யார் என்று நீ என்னிடம் இதுவரை கூறவில்லை.”

     “உண்மைதான், இனியும் நானாகச் சொல்லப் போவதில்லை.”

     “ஆனால் எனக்குத் தெரிந்துவிட்டது!”

     இப்போது வியந்து திகைத்தது கடல்நாடுடையார்தான்! எப்படித் தெரிந்தது என்று விழித்தாரோ என்னவோ, அரசியைப் பார்த்த பார்வை அப்படியிருந்தது!

     “இந்த விழிப்புத் திகைப்பெல்லாம் எனக்குப் புதிதல்ல. உனக்கும் புதிதல்ல. ஆனால் இந்த உண்மை உன்னைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்?” என்று அரசி கேட்டதும்! “எந்த உண்மை?” என்று அப்பாவித்தனமாகக் கேட்டார்.

     அரசிக்கு இப்போது உண்மையாகவே சினமுண்டாகிவிட்டது. “கோவரையா, என்னிடம்கூட மறைக்கும்படி இது அவ்வளவு பெரிய ரகசியமா?” என்று வேகமாகவே கேட்டார்.

     “இப்படிக் கேட்டால் நான் என்ன பதில் கூற முடியும்? நீங்கள் மர்ம இளைஞன் உடல் நிலையைக் காண வந்தீர்கள். அவன் உறக்கத்தில் ஏதோ உளறினான். அதை அப்படியே வெறும் பேத்தல் என்று கருதி ஒதுக்காமல் ஏனோ முக்கியத்துவம் கொடுத்து உங்கள் உள்ளத்தில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டுவிட்டீர்கள். தங்களுடைய முதிய பிராயத்தில் அதிர்ச்சி தரும் எந்தச் செய்தியையும் தெரிவித்து விபரீதம் ஏற்படுத்த நான் விரும்பவில்லை.”

     கடல்நாடுடையாரிடமிருந்து இதற்கு மேலும் எதையும் அறிவதற்கில்லை என்பதைப் பேரரசி புரிந்து கொண்டுவிட்டாள். தன்னிடம் மறைக்க வேண்டிய அளவுக்கு முக்கியத்துவம் மட்டும் இல்லை. மனக்கிலேசம் உண்டுபண்ணக் கூடியதுமான ஒரு பெரும் மர்மம் இந்தச் சிறுவனைச் சார்ந்திருக்கிறது என்பதனை அரசி ஊகித்தாளானாலும், தான் அறிந்து கொண்ட ‘உண்மை’ உறுதியாக்கப்பட வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டினாள். என்றாலும் கடல்நாடுடையாரிடம் கெடுபிடி செய்து எதையும் வெளிக் கொணற முடியாது என்பது அரசிக்குத் தெரிய அதிக நேரமாகவில்லை. தவிரவும் கடல்நாடுடையாருக்கு பேரரசி அளித்திருந்த மதிப்பும் தகுதியும் மகத்தானது. ராஜேந்திர சோழ மன்னர் அதாவது பேரரசியின் தந்தையார் ‘கடல்நாடுடையார் சோழநாட்டின் கலங்கரை விளக்கம்’ என்று ஒருமுறை பேரவையில் முழங்கிவிட்டு கோவரையரும் பஞ்சநதிவாணரும் ‘இரு கண்கள்’ என்றும் விளக்கியிருக்கிறார்.

     எந்த ஒரு நடப்பும் இவர்களைக் குறிப்பாகக் கடல்நாடுடையாரை மீறி நடக்காது என்ற நம்பிக்கையைக் குலோத்துங்கரையும் சேர்த்து மூன்று பேரரசர்கள், பிரும்மாதிராயர் உள்ளிட்ட ஆறு தலையமைச்சர்கள், சோழமாதேவி ஆகியவர்கள் தெரிந்து கொண்டிருந்ததால் அவர்தம் பொறுப்பும் பணியும் மிக மிக முக்கியத்துவம் பெற்றதாகிவிட்டது.

     தவிர அவர் கடல் கடந்த நாடுகளில் செயல்படுவதற்கு நியமித்திருந்த உளவுப் படையினர் அக்காலத்தில் ஒரு சிறந்த வேவுக்காரப்படையென்பதாக மதிக்கப்பட்டு, எதிரிகள் அஞ்சி அடங்கியிருக்கவும் செய்தது. கிழக்கிலும் சரி, மேற்கிலும் சரி, இந்தப் படையை மீறி எவராலும் எதுவும் செய்ய முடியாது என்ற ஒரு நிலையைக் கடல்நாடுடையார் ஏற்படுத்தி உறுதிப்படுத்தியிருந்ததால், சோழநாட்டுக்கு எதிராகக் கடல் கடந்த நாடுகளில் எத்தகைய சூழ்ச்சிக்காரர்களாலும் தொடர்ந்து எவ்விதக் கெடுதியையும் செய்ய இயலாமல் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டுவிட்டன.

     குலோத்துங்கன் இளவயதுக் கால முதலே கடல்நாடுடையாரிடம் நெருங்கிப் பழக வேண்டிய சூழ்நிலைகள் உருவானது பற்றி முன்பே கூறியுள்ளோம். அதனால் அந்த நாள் முதலே இருவரும் வேறுபாடற்ற முறையில் எந்த ஒரு விஷயத்தையும் நடத்திச் செயல்பட்டதால் கடல் நாடுகளில் சோழரின் ஆதிபத்தியம் வலுப்பெற்றிருந்தது. தவிர குலோத்துங்கனுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் குறிப்பாக அயல்நாடுகளில் அவர்தம் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த அத்தனை சம்பவங்களும் கோவரையருக்குத் தெரியும்.

     ஒரு காலத்தில் ராஜா ராணிக் கதையில் வரும் ராஜ குமாரன் மந்திரி குமாரன் கதைகளைப் போல இவர்கள் அயல்நாடுகள் பயணத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பலவுண்டு.

     எனினும் மகனைப் பற்றிய கவலை சற்றுமின்றி வாழ பேரரசியால் முன்பும் சரி இப்போதும் சரி முடிந்ததென்றால் அதற்குப் பெரிதும் உறுதுணையாயிருப்பவர் கடல்நாடுடையார்தான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அந்த மூதாட்டிக்கு இருந்தது.

     “மீண்டும் சோழநாட்டுக்கு என்ன நேர்ந்திருக்கிறது கோவரையா?”

     பேரரசியின் தீனக்குரல் கோவரையரின் இதயத்தைத் தொட்டுவிட்டது.

     “ஒன்றும் நிகழவில்லை என்ற தெளிவுடன் இருப்பதுதான் நீங்கள் எங்களுக்குச் செய்யக்கூடிய பேருதவி தாயே? சோழ குலம் எந்த ஆபத்தையும் சமாளிக்கும் சக்தியை நாட்டு மக்கள், சேனைகள், என்னைப் போன்ற ஊழியர்கள் கொண்ட கூட்டு வலுவுடன் பெற்றிருக்கிறது. எனவே அச்சமில்லை. ஆனால் சற்று கலக்கமேற்படத்தான் செய்யும். எனினும் முடிவு நமக்கு முற்றிலும் சாதகமாகவே இருக்கும். அதற்கான வகையில்தான் நாங்கள் செயல்படுவோம். நீங்கள் எந்த அளவுக்குக் கவலையும் கலக்கமும் கொண்டிருந்தால் இங்கு இந்நேரத்தில் வந்திருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். தெரிந்தும் நான் உடனடியாகப் பதறாமல் இருப்பதற்குக் காரணமுண்டு. நாம் சற்றேனும் பதற்றம் காட்டினோமானால் ஊடுருவியுள்ள எதிரிக்குச் சாதகமாகிவிடும். சாவகன் கிடக்கிறான். அவன் ஒரு சிறு தூசு. ஆளும் பெரிய பெரிய சகுனிகள் இன்று நம் அண்டையிலேயே வந்துவிட்டனர். கடல் கடந்து இருப்பவர்கள் கரைக்கே வந்துவிட்டனர். எல்லோரும் எச்சரிக்கையாகத்தான் இருக்கிறோம். எனினும் இந்த மர்ம இளைஞன் மூலம் நமக்குக் கிடைத்துள்ள தடையங்கள் மிக்க பயனளிப்பவை. ஆகையினால்தான் நான் எவ்வளவு மர்மமாகவும் மறைவாகவும் இவன் செயல்பட வேண்டுமோ, எங்கு எப்படிச் செயலாற்ற வேண்டுமோ அப்படி ஏற்பாடு செய்தேன். ஆனால் மும்முடி இவனை வெளிக் கொணர்ந்துவிட்டான். அது ஒரு புதிய சிக்கலாகிவிட்டது. மாற்றார், இவன் மூலம் எங்கு தங்களுடைய சூழ்ச்சிகள் வெளியாகிவிடுமோ, தங்கள் எண்ணம் நிறைவேறாமற் போய்விடுமோ என்ற அச்சத்தில் இவனையே ஒழித்துவிட முயன்றனர். இதில் பரிதாபத்துக்குரியது நம் இளவரசனே இதற்குக் கருவியாகிவிட்டதுதான்!” இந்த இடத்தில் ஒரு பெருமூச்சுவிட்டு நிறுத்திய கோவரையர்! “மேலே சொல்லுங்கள்” என்று தமக்கு உத்தரவிட்டது மன்னர் என்பதை அறிந்து சற்றே தயக்கத்துடன் பேசினார்.

     “கலிங்கனும் கங்கனும் காலங்கருதிக் காத்திருந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்த தருணம் வந்திருக்கிறது. தென் எல்லையிலே கொல்லத்தான் குழுமிவிட்டனர். சிங்களத்திலிருந்து வந்து கொண்டிருந்த குழுவில் ஒரு பகுதி இங்கு ஊடுருவி விபரீதம் விளைவிக்க ஏற்பாடாயிருக்கிறது. சாவகன் சீனத்தின் தூதுவரகத்தில் ஒரு பகுதியினரைத் தன் வலையில் சிக்கச் செய்துவிட்டான். இப்படியாகச் சதிகாரர்கள் சோழர்தம் தலைநகருக்குள்ளேயே தமது கைவரிசையைக் காட்ட முனைந்துவிட்டனர். ஆனால் இன்னும் மூன்றே நாட்களில் இவர்கள் சதி முற்றிலும் முறியடிக்கப்படும். இது உறுதி!” என்று கோவரையர் நிதானம் தவறாமல் ஆனால் உறுதியுடன் விளக்கியதும் பேரரசியும் மாமன்னரும் ஒருவரையொருவர் மாறிமாறிப் பார்த்துக் கொண்டனரேயன்றி வாய் திறக்கவில்லை.

     ஆனால் அடுத்த இரு தினங்களுக்குள் தலைநகரத்தில் நடைபெற்ற மிக விந்தையான நிகழ்ச்சியொன்று சோழ நாட்டையே ஆட்டிவிட்டதால் மூன்றாம் நாள் நிகழ்ச்சியின் முக்கியத்துவம் அவ்வளவு பெரிதாகத் தோன்றவில்லை!