உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
பொன்னகர்ச் செல்வி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 17. நல்லெண்ணத் தூதுக்குழு சிங்களத்திலிருந்து வந்த நல்லெண்ணத் தூதுக் குழுவினர் தலைவராக அந்நாட்டுப் பேரரசர் இளவலும் சிறந்த கல்விமானுமான தகவீரநாயகனும், முதல் அமைச்சர் தேவதிலகரும் சோழநாட்டுடன் சீரான முறையில் உறவு கொள்ளுவதை ஆவலுடன் வரவேற்றவர்களில் முதன்மையானவர்கள். மிகப் பெரிய சோழ சாம்ராஜ்யத்துடன் பகைத்துக் கொண்டு நாளதுவரை கண்ட பயன்தான் என்ன? என்ற முடிவுக்கு அவர்கள் மட்டும் அல்ல; அந்நாட்டு மக்களில் பெரும்பாலோர் கருதியதால் சோழ சிங்கள உறவுக்கு எத்தகைய தியாகமும் செய்யத் தயாராயிருந்தனர். எனவே, சோழ மன்னர் இத்தகைய ஆவலை நிரந்தரமாக்குவதற்கு மேற்கொண்ட ஏற்பாடுகளில் தலையானது யாதெனில் தன் மகளைச் சிங்கள மன்னனுடைய திருமகனுக்குத் திருமணம் செய்து கொடுப்பது என்பதுதான். சிங்களம் தென்கோடி எல்லையில் கடல்கடந்த ஒரு தனித் தீவுக் கோட்டை போலத் தமிழகத்தை ஒட்டியிருந்ததால் அதன் முக்கியத்துவம் பற்றி எக்காலத்திலும் சோழர்கள், கருத்தாகவே இருந்தனர். எப்படியோ அந்நாடு தங்கள் நோக்கத்துக்கு முரணாக இல்லாமல் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென்பதே சோழர்களின் முதல் நோக்கமாயிருந்தது. எனினும் இலங்கையில் அவ்வப்போது நாடாள வரும் அரசர்கள் எல்லோரும் ஒரே மாதிரி இருந்ததில்லை. சோழர்களின் அரவணைப்பு, ஒரு தந்திரம். மேலாதிக்கம் கொள்ளவே இந்தச் சூழ்ச்சி என்று தவறாக ஊகித்து முரண்டு பிடிப்பது உண்டு. இதைச் சமாளித்துச் சீர்படுத்தச் சிறிதளவு கெடுபிடி செய்தாக வேண்டிய நிர்ப்பந்தமும் சோழர்களுக்கு ஏற்படும். ஆனால் இது ஒரு பெரும் ‘போராகும்’ என்று சிங்களவர் கூக்குரலிட்டு மல்லுக்கு நின்று வம்புகள் செய்வதுமுண்டு! இத்தகைய சிக்கல் அவ்வப்போது எழாமலிருக்க எப்போதும் தமிழ் நாட்டுடன் ஒற்றுமையைச் சிங்களர் பேண என்ன செய்யலாம் என்று சோழ அரசர்கள் ஆராய்வர். இப்படி அவர்கள் செய்த முடிவுகளில் ஒன்று பெண்ணைக் கொடுத்து அல்லது பெண்ணை வாங்குவது என்னும் திருமணத் தொடர்பாகும். இம்மாதிரித் திருமணங்கள் மூலம் உறவுமுறை ஏற்பட்டு அது வலுப்பெற்றுவிடுவதால் நெடுங்காலம் வம்பில்லை, வழக்குமில்லை, உகந்த இணைப்பைத் தவிர, என்ற முடிவும் ஏற்படும் என்பது நல்லெண்ணமுடையோரின் நம்பிக்கை. இத்தகைய ஒரு ஏற்பாட்டுக்குத்தான் சோழமன்னன் வழிவகுத்து இரு அரச குடும்பங்களையும் இணைக்க முடிவு செய்திருந்தான். கடல்நாடுடையார், இந்த ஏற்பாட்டுக்கு மூலகாரணம் என்று உறுதி கூறியவர்களும் பலர் உண்டு. எனினும் சோழமாதேவிதான் இத்தகைய ஒரு ஏற்பாடுதான் நிரந்தர நன்மை பயக்கும் என்று முதன் முதலாகக் கூறியவர். நீண்ட காலம் யோசித்து, தமது அன்னயாரின் இந்த யோசனையை மிகவும் அந்தரங்கமானவர்களுடன் குறிப்பாகக் கடல்நாடுடையார், காடவராயர் ஆகியோருடன் கலந்து கொண்ட பிறகே மன்னர் இலங்கையருடன் உறவுகொள்ள முடிவு செய்தார். சிங்கள மன்னன் பொதுவாகவே சோழர்களின் குறிப்பாகக் குலோத்துங்கரின் உறவையும் துணையையும் நாடிப் பெறுவதற்குக் காலமும் சூழ்நிலையும் வரும்வரை காத்திருந்தான். தருணம் வந்ததும் தாமதியாது அதைப் பற்றிக் கொண்டான் தனக்கே உரிய அரசியல் விவேகத்துடன். இதன் விளைவுதான் இலங்கை அமைச்சரும் அரசன் தம்பியும் கொண்ட நல்லெண்ணத் தூதுகோஷ்டியின் வருகை. எனினும் இந்த நல்லெண்ணத் தூதுகோஷ்டியில் எப்படியோ சில கருங்காலிகளும் இடம் பெற்றிருந்தனர் என்பதற்குச் சான்றாக மூன்று சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. கலிங்கனுக்குச் சூதான யோசனைகளைச் சொல்லுவதற்கென்றே தங்கள் வாழ்நாளைப் பயன்படுத்தும் இரு பேர்வழிகள் சீனம், சியாம், மலைநாடு ஆகியவற்றிற்கெல்லாம் சென்றுவிட்டுப் பிறகு சிங்களத்துக் கப்பலையும் நாடிச்சென்று அங்குள்ள கருங்காலிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்பதைத்தான் கடல்நாடுடையாரின் கடல் வேவுப்படையினர் கண்டுபிடித்து அவர்களைக் கையுங்களவுமாகப் பிடித்து வந்திருக்கிறார்களே! இதைவிட வேறு என்ன வேண்டும்! சோழநாட்டுக்குப் பிரதிநிதியான சாவகன் சோழநாட்டுக்கு மட்டுமின்றி, சிங்களத்துக்கும் தூதுவனாதலால் தனது ஆலோசகர்களில் இருவரை அங்கு அனுப்பியிருக்கிறான். அவர்கள் அதே நல்லெண்ணத் தூதுகோஷ்டிக் கப்பலில் வருகிறார்கள். அவர்களுடன் மேற்படியினர் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதும் தெளிவாகியிருக்கிறது. தவிர இதே கப்பலில் வரவேண்டியவர்கள் சிலர் தனியாகப் பிரிந்து கோடிக்கரைக்குத் தனித்து வருகின்றனர். அவர்கள் ஏன் அப்படிப் பிரிய வேண்டும்? அவர்கள் மறைக்காடு துறையில் இறங்கி வருவானேன்? நேராகப் புதூர்த்துறை வருவதற்கு இவர்களுக்கு மட்டும் ஏன் விருப்பமில்லை? கடல்நாடுடையாரின் உதவியாளர்கள் இவற்றைத்தான் ஆராய்வதில் முனைந்துள்ளனர். இவ்வளவு விவரமும் மன்னருக்குக் கடல்நாடுடையாரிடமிருந்து கிடைத்ததும் நெடுநேரம் அவர் பேசவேயில்லை. பிறகு நிதானமாகவே, “அப்படியானால் நம்மைச் சுற்றிலும் எதிரிகளின் கையாட்கள் சிறுகச் சிறுகச் சூழ்ந்து கொள்ளுகிறார்கள் போலும்” என்று கூறியதைத் கடல்நாடுடையார் சட்டென்று மறுக்கவில்லை. ஏனெனில் வளமும் வாழ்வும் சிறந்த ஒரு நாடாகச் சோழ சாம்ராஜ்யம் நிலைத்திருப்பதைச் சிறிதளவும் விரும்பாதவர்கள் சுற்றியிருக்கும் போது எப்படி செய்திருக்க முடியும்? கடல் காவல் படையினரின் மர்மப் பிரிவின் தலைவனான கோட்புலி வீரராமன் கடல்நாடுடையாரின் மனமறிந்து செயல்படுபவன் மட்டும் அல்ல, மிக்கத் தந்திரசாலியுங்கூட! எடுத்த காரியம் எதுவாயினும் அதை முடிக்கும் வரை அயராது மாறாது செய்து முடிப்பதில் கருத்தும் உறுதியுமுள்ளவன். மன்னரே இவனுடைய திறமையையும் உறுதியையும் கண்டு பாராட்டியதுண்டு. ‘கடற்புலி’ என்றுகூட இவனுக்கு விருந்தளித்திருக்கிறார்! இவையனைத்தையும்விட வானகோவரையரின் பூரண நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் என்பதுதான் இவனுக்குத் தலையான மதிப்பாகும்! எப்படி வாணகோவரையர் தனிச்சிறப்புப் பெற்ற வெளிநாடுகளுக்கான அமைச்சரோ, அதே போன்று அவர் தம் உதவியாளர்களும் சிறப்புப் பெற்றிருந்ததில் அதிசயம் எதுவுமில்லை. எனினும் வாணகோவரையரின் பெரும் மாளிகையில் அந்த நேரத்தில் பேரரசி, மாமன்னர், கடல்நாடுடையார் ஆகியோர் மனதில் கிளர்ந்தெழுந்த நினைவுகள் அனைத்தும் மர்மவீரனைப் பற்றியதாகவே இருந்தன. “கோவரையா, நீயும் கூட அல்லவா என்னிடம் உண்மையை மறைத்துவிட்டாய்?” என்று முதிய பிராட்டி கேட்டதற்கு அவர் உடனடியாகப் பதில் கூறவில்லை. ஆனால் மன்னர் முன்வந்தார். பதிலைத் தாமாகவே கூறுவதற்கென்று கடல்நாடுடையார் அன்னையும் மகனும் பேசி ஆறுதல் கொள்ளட்டும் என்று நினைத்தோ என்னவோ மெல்ல நழுவிவிட்டார்! நேரம் ஓடிக் கொண்டேயிருந்தது. சோழநாட்டுப் பேரரசியிடம் சோழ மாமன்னன், அவர்தம் திருமகன் கூறிய விளக்கமே ஏதோ ஒரு நீண்ட சோகவரலாறு போன்றிருந்தது. அவர் சொல்லச் சொல்லப் பேரரசிக்கு, இருபதாண்டுகளுக்கு முன்னர் கடல் கடந்து சென்ற தனது மகன் நடத்திய ஒரு நாடகம் மன அரங்கில் வெகு தெளிவாகவே உருப்பெற்றது! “...சாலவந்தாட்டிவிட்டான் என்றாலும் பொன்னகர் எந்த நொடியிலும் நாசமாகும் என்பதை உணர்ந்த சோழ இளவரசனும், வாணகோவரையறும், எப்படியாவது தங்களால் இயன்றவரை பொன்னகர் வாசிவிளக்காக்க வேண்டுமென்பதில் பரபரப்புக் காட்டினர். இருவரும் தாங்கள் யார் என்று அப்போதைக்குக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. எனவே மாறுவேடத்தில் நாட்டினுள்ளே புகுந்தனர் சிறு கட்டுப் படகு மூலமாக. சம்பநாட்டின் ஏனைய பகுதிகளைப் போலவே பொன்னகரும் இடுகாடாகவே காட்சியளித்தது. பன்நூற்றாண்டுகள் பெருமையுடன் செங்கோலோச்சிய பத்திராவர்மரின் பரம்பரையில் எஞ்சியிருந்தவர் எவருமேயில்லையா? இளவல் ஒருபுறம் சென்று ஆராய, மறுதிசை பறந்தார் வாணகோவரையார். சோழ இளவல் கோட்டை கொத்தளங்களைத் தாண்டி ஓடித் திரியும் மக்களிடையே ஊடாடி காடும் மலையும் கடந்து முடிவில் பொன்னகரின் ஏதோ ஒரு மூலையில் நடுக்காட்டின் இடையே நின்ற மாளிகையொன்றில் ஒரு முதியவரையும், அழகுக் குமரியொருத்தியையும் சந்திக்கிறார். முதியவர் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அதுவரைப் பிரிய விரும்பாது தவித்துக் கதறிய கட்டழகி “ரூஸ்காரும் போய்விட்டால் எனக்கார் துணை?” என்று அரற்றிய குரல் இளவரசின் காதில் விழுந்ததும் அவர்கள் அருகே ஓடோடிச் சென்று “நான் இருக்கிறேன்!” என்று அபயமளித்ததும் மங்கை வியப்பாலும் திகைப்பாலும் மலரமலர விழிக்கப் பெரியவர் “ஆ! நீங்களா?” என்று வாய்விட்டுக் கூச்சலிட முயன்ற அடுத்த நொடியே அவர் தம் ஆவி பிரிந்துவிட்டது. அழகி ‘ஓ’வென்று அலறினாள். புலம்பினாள். வேறு என்ன செய்ய முடியும்? இதற்குள் பகைவர் கூட்டம் தீவர்த்திகளுடன் அங்கு வருவதைக் கவனித்த இளவரசர், சட்டென்று கிழவரின் சடலத்தைத் தூக்கிக் கொண்டு “சற்றும் தாமதியாமல் வா!” என்றதும் அவள் வாய் பேச வழியின்றி அவரைத் தொடர்ந்தாள். பொழுது புலரும் முன்னர் அவர்கள் அடைந்த இடம் வேறொரு சிறு தீவு என்றாலும் அங்கே கோவைரயர் காத்திருந்தார்! இளவரசருடன் வரும் பெண்ணைக் கண்ட கோவரையர் எதுவும் கேட்கவில்லை. உயிர் நீத்த முதியவரின் ஈமச் சடங்குகளை உரிய மரியாதைகளுடன் இருவரும் செய்து முடித்தனர். நெடு நேரத்திற்குப் பின்னர்தான் அவள் வாய் மூலமே இளவரசர் அவளை யாரென்று தெரிந்து கொண்டார். சம்பா நாட்டு இளவரசிதான் அவள்! எப்படியாவது இவளைக் கவர்ந்துவிட வேண்டுமென்று ராஜவித்யாதரன் படாத பாடுபட்டிருக்கிறான். பயனில்லை. சோழ இளவரசர்தான் தன்னைக் காப்பாற்றியவர் என்று ஊகிக்காத அவள் யாரோ அயல்நாட்டு வியாபாரி என்றுதான் நம்பினாள்! இளவரசரான குலோத்துங்கர் மாறுவேடத்திலிருந்த காரணத்தாலோ என்னவோ அவளுடைய இந்த நம்பிக்கை தவறு என்று கூறி உண்மையைத் தெரிவித்துவிடவில்லை! இப்படியாகச் சில நாட்கள், பிறகு மாதங்கள் என்ற கால ஓட்டம் நிற்கவில்லை. பருவகாலமும் தனது கடமையைத் தடுக்கவில்லை! கோவரையர் எப்படி இந்த இக்கட்டிலிருந்து இளவரசரை விடுவிப்பது என்று புரியாமல் விழித்தார். என்றும் ‘பொன்னகர்ச் செல்வி’ என்ற புதிய பெயருடன் தங்கள் நாவாய்ப்படையில் வந்துள்ள மங்கை; இளவரசரின் அன்புக்குப் பாத்திரமானவர் என்று மரியாதை காட்டுவதில் எவரும் குறை வைக்கவில்லை! காலம் அதன் போக்கில் ஓட இயற்கை அதன் பணியை இயற்கையாகவே நடத்த, இளவரசர் தமது இளமை மயக்கத்திலிருந்து விடுபடுவது என்பது அசாத்தியமானதாகி விட்டது! நாளெல்லாம் மரக்கலங்கள் கடல்களில் அங்கும் இங்கும் செலுத்தி, கடல் போர்ப் பயிற்சி அளிப்பது என்பது மட்டும் நோக்கம் அல்ல. கீழைப் பகுதிகளில் சோழர் தம் பெருங் கடற்படை எத்துணை வலுவானது என்பதற்காகவும் அடிக்கடி சின்னஞ்சிறு கடல் நாடுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளுவதோ அல்லது வம்புக்கிழுப்பதோ, அந்தப் பகுதியில் சோழர் தம் கடற்படை இருக்கும் வரை சாத்தியமில்லை என்பதைத் தெளிவுபடுத்தவோ வேண்டித்தான் இவ்வாறு அக்காலத்தில் செயல்பட்டது என்றும் கூறலாம். ஆனால் குலோத்துங்கர், பொன்னகர்ச் செல்வியுடன் தன்னந்தனியாக ஒரு சிறு தீவில் ஒதுங்க நேர்ந்ததும் நிலமை முழுதும் மாறிவிட்டது. அரசகுமாரர்களைத் தமது விருப்பப்படியெல்லாம் உடனடியாகத் தடுத்து நிறுத்தும் சக்தி அக்காலத்தில் யாருக்கும் இல்லை. விட்டுப் பிடித்து நிதானமாகத் திருப்பித்தான் கொண்டு வர முடியும். கோவரையர் இதை நன்றாகவே அறிவார். எனவேதான் கட்டவிழ்த்துவிடப்பட்ட இளம்பருவத்தினரான அந்த ஜோடிகள் தீவில் உல்லாசமாக ஆடிப்பாடி மகிழ்வதைக் கொஞ்ச காலம் கவனிக்காதவர் போலிருந்து விட்டார். தமது உதவியாளர்கள் மனதிலும் எவ்வித எண்ணங்கள் கிளர்ந்தெழும் என்பதையும் ஊகித்து அதற்கேற்ப தீவுகளில் நெடுந் தொலைவில், கடலில் ஓய்வு ஒழிவில்லாமல் பயிற்சியை அளித்தவாறு இருந்தார். மாதங்கள் பத்தும் ஓடிவிட்டன. இனியும் தாமதிப்பதில் பொருளில்லை என்ற நினைவுடன் ஒருநாள் அவரும் அந்தத் தீவுக்குத் திரும்பிய பொழுது இளவரசரும் அவரை எதிர்பார்த்த மாதிரி நாடி வந்தார்கள்! இருவரும் நாள் முழுமையும், இரவிலும்தான், தணித்துப் பேசினர். பேசிக் கொண்டேயிருந்தனர். சற்றே மறைவில் இருந்த அழகியின் செவி செவியல்லவே! உண்மை தெரிய அதிக நேரமாகவில்லை அவளுக்கு. சோழ நாட்டிளவரசன் அல்லவா தன் இதயங் கவர்ந்துவிட்ட கட்டழகன்! இதையறிந்த உடனேயே அவள் உள்ளத்திலே ஏனோ ஒரு திகிலுணர்ச்சியும் எழுந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பற்றி அன்றளவும் ஒரு கதை மாதிரி சம்பாவின் பேரரசரும் இவ்வழகியின் தாத்தாவுமான பத்திராவர்மா சொல்லியிருந்தது அவளுக்கு நினைவுக்கு வந்தது! சோழர்கள், சம்பாவுக்காகச் செய்த மாபெரும் நன்மைகளைப் பற்றி அவர் நிறைய நிறையச் சொல்லுவதுண்டு. ஆயினும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் அவர் தமது குடும்பப் பெண்களுக்கு எச்சரிக்கை செய்வதுண்டு. “சோழர்கள் வரட்டும். வரவேற்று உபசரியுங்கள், விருந்தளியுங்கள், வாழ்த்துக் கூறுங்கள் அல்லது வணக்கம் செய்யுங்கள்... ஆனால் அவர்களுடைய இளவல்களுடன் நெருங்கிப் பழகாதீர்கள். சோழ குலத்திளவரசர்கள் அழகும் அறிவும் வீரமும் தீரமும் நிறையப் பெற்றவர்தான். எனினும் தாங்கள் சோழர்கள் என்பதை அவர்கள் மறுப்பதாயில்லை. கடல் கடந்த நாடுகளில் மட்டும் இல்லை, அண்டை நாடுகளில் கூட அவர்கள் பெண் எடுப்பதில்லை. எடுத்தாலும் அவர்களுக்கு இரண்டாந்தர மூன்றாந்தர நிலைதான். தமது குலத்தினருக்குத்தான் அவர்கள் முதலிடந்தருவர். இதனால் பிறநாட்டுப் பெண்களை அவர்கள் வெறுப்பவரோ என்றெண்ணிவிட வேண்டாம். ஏதோ விரும்பித்தான் அணுகுவர். அதேபோன்று விலகியும்விடுவர்! எனவே இவ்விஷயத்தில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!” “உங்கள் நோக்கம் எனக்குப் புரிந்துவிட்டது. அதற்கு ஏற்றவாறு இன்னும் பதினைந்து நாட்களில் தேவையானவற்றைச் செய்துவிட்டு நமது படைப் பயிற்சியில் வந்து கலந்து கொள்ளுகிறேன்!” என்று இளவரசர் கூறியதும் அவரிடமிருந்து விடைபெற்றேகினார் கோவரையர். எதுவும் அறியாதவள் போல ஒதுங்கியிருந்த அழகியிடம் அடுத்த சில தினங்கள் வரை அவர் ஏதும் பேசவில்லை. மூன்றும்நாள் கடல் ஓரமாக அவர்கள் இருவரும் உலாவிக் கொண்டிருந்த போது அவள் கேட்டாள்: “நீங்கள் ஏன் என்னிடம் உண்மையைக் கூறவில்லை” என்று. “எந்த உண்மையைச் செல்வி?” “உங்களைப் பற்றிய உண்மையை!” “நான்தான் இதோ இருக்கிறேனே! என்னிலிருந்து வேறுபட்டதா என்ன என்னைப் பற்றிய உண்மை?” “ஆமாம். ஒரு பெண் தன்னுடைய கணவர் தன்னிடமிருந்து எதையோ மறைக்கிறார் என்பதை அறியும் போது அடையும் ஏமாற்றம் அவள் வாழ்வையே பறித்துவிடும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.” “தெரிந்து கொள்ளுகிறேன். ஆனால் சில உண்மைகளைச் சொல்ல முடியாத நிலையில் அந்த கணவன் என அழைக்கப்படுபவன் இருந்தால்...” “அப்படியானால் ஒரு பெண்ணை ஏமாற்றுவதற்கு மட்டும் அந்த நிலை இடமளிக்கிறதா?” “அதைத்தான் நானும் ஆராய்ந்து ஆராய்ந்து எந்த முடிவுக்கும் வர இயலாமல் தவிக்கிறேன். வாணகோவரையர் வந்த போது... அடேடே! அதாவது...” “வேண்டாம் இளவரசே வேண்டாம். எனக்காக நீங்கள் மேலும் மேலும் பொய்யராக வேண்டாம்!” “இளவரசரா? யார்?” “நீங்கள் இனியும் என்னிடம் எதையும் மறைக்க வேண்டாம். சோழநாட்டு இளவரசர்கள் பற்றி எனக்கு எச்சரித்தவர்கள் அறியாதவர்கள் என்று நினைக்க முயலும் என்னை மேலும் சோதிக்க வேண்டாம். இளவரசே! நீங்கள் எனக்கு ஒரு சிறு உதவி செய்ய முடியுமா?” “அது எதுவாயிருந்தாலும் செய்கிறேன் செல்வி!” “உங்களுக்கு இந்தச் செல்வியின் நினைவு இனி எப்போதாவது ஏற்பட வேண்டுமல்லவா?” “அடக்கடவுளே! நான் உன்னை எப்படி மறக்க முடியும்? நீதான் எனது வாழ்நாள் முழுமையும் துணையாக இருந்து...” “போதும் போதும்! உங்களுடைய வாளை இப்படித் தாருங்கள்.” “எதற்கு செல்வி? நான் உன்னை ஏதோ ஒருவகையில் ஏமாற்றியதாகக் கற்பனை செய்து கொண்டு இதனால் தற்கொலை செய்து கொள்ளவா?” செல்வி சிரித்துவிட்டாள். “நான் தற்கொலை செய்து கொள்ளுவதென்றால் அதற்கு இவ்வளவு பீடிகையா? தேவையில்லை. உங்களுடைய வாள் என்னிடம் ஒரு குறிப்பிட்ட காலம்வரை இருக்கும். பிறகு அது உங்களிடமே திரும்பும். அதோ ஒரு சந்தனமரம் இருக்கிறது பாருங்கள். அதில் நீங்கள் இவ்வாளைக் கொண்டு நம் பெயர்களை எழுதுங்கள். மரம் வளர வளர எழுத்துக்களும் பெரிதாகும். பின்னாளில் இவ்வாள் உங்களிடம் திரும்பும்பொழுது சந்தன மரம் உங்கள் பொன்னகர்ச் செல்வியை நினைவுபடுத்தும்... இப்போது தயவுசெய்து அதைக் கொடுத்துவிட்டு, அந்த அசோக மரத்தின் உச்சியில் இந்தச் சிவப்புச் சீலையைக் கட்டுங்கள்.” “இதெல்லாம் ஏன் செல்வி?” “ஏன் என்று உங்களுக்குத் தெரியாதா? சிவப்புக் கொடி பறப்பதைக் கண்டதும் சீறிவரும் உங்கள் கடற்படையின் படகுகள். அவற்றில் ஒன்றில் நீங்கள் மட்டும் ஏறிச்செல்லுவீர்கள். அவ்வளவுதான்...” “அது முடியாது!” “ஏன் இளவரசே?” “உன்னை மீண்டும் காதகர்கள் கையில் நான் சிக்கவிட மாட்டேன்.” “நான் ஏமாற்றுபவர்களைக் கூட காதகர்களாகவே கருதுகிறேன்!” “வேறு வழியில்லாமல் ஒன்றை மறைத்தால் அது ஏமாற்றுவதாகாது.” “மனம் உடைந்தபிறகு ஏமாற்றமும் நம்பிக்கையும் பயனற்றதாகும். உங்களைப் பொறுத்தவரை நீங்கள் அடுத்ததாக வேண்டியதைக் கவனிக்க வேண்டும். அதுதான் உங்கள் கடமை. தயவுசெய்து நீங்கள் நான் சொன்னபடி செய்துவிடுங்கள். ஆனால் இன்னும் ஒரு வேண்டுகோளுமுண்டு.” “அது என்னவோ?” “வாணகோவரையருடன் நான் இரண்டொரு வார்த்தைகள் பேச வேண்டும்.” “அவ்வளவுதானே. இதோ ஏற்பாடு செய்கிறேன்.” வாணகோவரையர் வானத்தைப் பார்த்த போது ஆயிரக்கணக்கான உடுக்குலங்கள் சிதறிக் கிடந்தாலும் இருள் எவ்வளவு வலிமையுடன் உலகைக் கப்பிக் கொண்டிருக்கிறது என்பதையும் சிந்தித்தார். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் சென்ற மனம், பழைய சம்பவங்களையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாகக் கொண்டு வந்ததைப் போல மன்னர் மனதிலும் இவை ஊடாடி உலுப்புகின்றன என்பதை அறியாமலில்லை. அன்று அந்தப் பேரழகி முடிவாகக் கடல்நாடுடையாரிடம் “நான் உயிரை இன்னமும் வைத்திருப்பது இன்னும் சில காலத்திலேயே நான் தாயாகப் போவதால்தான். அந்தக் குழந்தை பெண்ணாக இருந்தால் உங்களையோ மன்னரையோ தேடிவராது. ஆணாக இருந்தால் நிச்சயம் தேடி வருவான் இளவரசர் தந்தவாளுடன்! அந்த வாளைக் கொண்டு அவர்தம் உயிரைக்காக்கும் மகத்தான் சேவையில் நீங்கள் அவனை ஈடுபடுத்துவதாக உறுதி கூற வேண்டும் என்று உறுதி கூறுவீர்களா?...” “உறுதியளிக்கிறேன் தாயே. எங்கள் சோழ அரசின் மீது ஆணையிட்டு!” “என்ன கோவரையரே, நள்ளிரவில் எதற்கு, யாரிடம் இப்படி உறுதி அளிக்கிறீர்கள்?” கடல்நாடுடையாருக்கு இப்போதுதான் புரிந்தது. நாம் வாய்விட்டுக் கூறிய வார்த்தைகள்... சிந்தனையின் பின்னலிலிருந்து வெளியானவை என்று! கேட்டவர் மன்னர்! அவர் பக்கத்தில் சோழகுலப் பெரிய பிராட்டியும் அல்லவா நிற்கிறார்... இருளைக் கிழித்துக் கொண்டு ஏதோ வேகமாக மின்னி ஓடுவதைக் கவனித்த மாமன்னர் “அதோ, அது என்ன?” என்று வாய்விட்டுக் கேட்டார். ஆனால் இதற்கு முன்னரே அந்தத் திசை பாய்ந்தோடினார் கடல்நாடுடையாரே. “நில்லுங்கள் அப்படியே!” தமக்குப் பின்புறமிருந்த அறையிலிருந்து எழுந்த இந்த எச்சரிக்கையைக் கேட்டுச் சோழ அரசர் திரும்பி நோக்க, அறையின் வாயிற்புறத்தில் நின்றிருந்தவன் வேறுயாரும் அல்ல. வீரபாலன். படுக்கையிலே நினைவு மறந்துகிடந்தவன் இங்கே எப்படி வந்தான்? பேரரசி சற்றுமுன்னே சென்று “நீ ஏன் எழுந்துவந்தாய் வீரபாலா?” என்று கனிவுடன் கேட்டுக் கொண்டே அவனைத் தாங்கப் போக... “பேரரசி, தயவுசெய்து நீங்கள் மன்னருடன் உள்ளே செல்லுங்கள். அதோ அந்த மதிள்மீது பகைவர்கள் விஷ அம்புகளுடன் நின்று அரசரைக் குறிபார்க்கிறார்கள் என்று எச்சரிப்பதற்குள் விர்விர்ரென்று பத்துப்பதினைந்து அம்புகள் பாய்ந்தோடி வந்தன. சட்டென்று மர்ம இளைஞன் மன்னருக்கு முன்னே சென்று, ‘இதென்ன விபரீதம்?’ என்று வியந்து திகைத்து நின்ற அவருக்குப் பின்னுக்குத் தள்ளி நின்று கொண்டான். இதற்குள் மீண்டும் அம்புகள் பாய்ந்து வந்தன. ஆனால் அவனைத் தாண்டி ஒரு அம்புகூடச் செல்லவில்லை. கடல்நாடுடையார் காவலர்களுடன் ஓடிவந்தார். வீரபாலன் தன்னிடமிருந்த வாளை அதிவேகத்துடன் மதிளை நோக்கி வேகமாக வீச, அடுத்த நொடியே ‘ஓ!’ என்ற அலறல் அதைத் தொடர்ந்து இருதலைகள் உருண்டு விழுந்தன இளைஞன் காலடியில்! “ஆ! இந்தத் தலைகள்..” “வாய்விட்டுச் சொல்ல வேண்டாம். உள்ளே என்னைத் தூக்கிச் செல்லுங்கள்..” என்று வீரபாலன் கூறியதும் மன்னரே சட்டென்று அவனை இருகைகளாலும் தூக்கிக் கொண்டு நடந்தார். அவன் மார்பில்தான் எத்தனை அம்புகள்! கடல்நாடுடையார் சில நொடியில் நடந்துவிட்ட சம்பவங்களின் வேகத்தை ஊகிக்க முயன்றார். ஆனால் வீரபாலன் வார்த்தைகள் அவர் ஊகத்தைத் தடைசெய்தன. “மன்னரைக் கொல்ல கோழைத்தனமாகத் தீட்டப்பட்ட திட்டப்படி அவர்கள் இங்குச் சாவகத்திலிருந்து வந்தனர். ஆனால் அது பலிக்கவில்லை! மாமன்னரே, உங்கள் மெய்க்ப்பாளன் நான். உயிர் இருந்தவரை அதில் நான் தவறவில்லை. என் தாய்க்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிட்டேன்...” அவன் மேலும் பேசுவதற்குள் மதிள்மேலிருந்தவர்களின் தலைகளைத் துண்டித்த வாளைக் கொணர்ந்தார். “இதோ நீங்கள் பொன்னகர்ச் செல்வியிடம் கொடுத்து வைத்திருந்த வாள்...” என்று அதை வாங்கி வீரபாலன் நீட்டியதும் வீரமாமன்னர் அதிர்ச்சியடைந்து, “அப்படியானால் நீ... நீ... ஐயோ! பொன்னகர்ச் செல்வி... கடல்நாடுடையாரே, இப்போதுதான் புரிகிறது எல்லாம். அவள்... செல்வி முடிவில் நீதான் வென்றாய்... வீரபாலா... நீதான்...” “ஆமாம். என்றுமே மறக்கமாட்டேன் என்று உறுதியளித்த உங்களுடைய அந்தப் பொன்னகர்ச் செல்வி பெற்ற செல்வன்... நான்...” “அரசே... வீரபாலன் வீரமரணத்தை எய்திவிட்டான்!” பேரரசியால் இந்தச் சோகநிலையைக் காண முடியவில்லையென்றாலும் எப்படியோ தன்னைச் சமாளித்துக் கொண்டுவிட்டவளாய் “வாணகோவரையரே! சோழர் தம் நலனுக்காகத் தனது ஆவியைக் கொடுத்த இம்மாவீரனுக்கு ஈமக் கிரியைகளை பேரரசனுக்குரிய பெரும் மரியாதைகளுடன் நடக்க ஏற்பாடு செய்யுங்கள். குலோத்துங்கா, தியாகம் செய்யப் பிறந்தவர்களால்தான் வாழப்பிறந்தவர்கள் பிறகு கொஞ்சகாலமாவது சாகாமல் வாழ முடிகிறது. எனவே நடந்தது நடந்துவிட்டது. நாம் விம்மி வெடிப்பதால் மாறுதல் எதுவும் நேர்ந்துவிடாது. அடுத்து நடக்க வேண்டியனவற்றைக் கவனிக்கும் பொறுப்பு என்றும் மாபெருங் கடமையைத்தான் நாம் இனி நோக்க வேண்டும்... வா போகலாம்” என்று கூறி அன்னை முன்னே நடக்க அவர் பின்னே அரசரும் சென்றார்! அங்கே ஆசார வாசலில் வந்து நின்ற ஒரு சிவிகையிலிருந்து சாவகத்து ராஜகுரு வந்து இறங்கியதைக் கண்ட பேரரசி... “நீங்கள் இந்த வேளையில்... எப்படி இங்கு வந்தீர்கள்?” என்று பரபரப்புடன் கேட்டாள். ராஜகுரு சட்டென்று முன்னே வந்ததும் அரசி தயக்கத்துடன் தளர்நடையில் வருவதைக் கண்டதும் “நல்ல காலம். நான் தங்களைக் காண அரண்மனை சென்றேன். அங்கில்லையென்றதும் இங்கே ஓடோடி வந்தேன். உங்களை எச்சரிக்கை செய்ய வேண்டும் என்ற வேகத்தில்...” “இப்போது எச்சரிக்கை தேவையில்லை பெரியவரே! கொல்ல வந்தவர்கள் கொல்லப்பட்டார்கள்...” “அப்படியா! வீரபாலன்...?” “கடமைக்காக வந்தவன் அதற்காக உயிர் நீத்தான்.” “பேரரசி... மன்னருக்கு உண்மையில் இது அதிர்ச்சியளிக்கக் கூடியதுதான். குறிப்பிட்ட காரணத்தால்தான் நானும் சரி, கடல்நாடுடையாரும் சரி அவனைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்தவில்லை.” “தெரியும். என்றாலும் குலோத்துங்கன் சில சமயங்களில் தான் ஒரு மாபெரும் சாம்ராஜ்யாதிபதி என்பதை மறந்து விடுகிறான். அரசப் பிறவி என்பது தனது விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பாற்பட்டது என்பதை உய்த்துணர்ந்து செயல்பட்டால்தான் எதையும் தாங்க முடியும் என்பதை மறந்துவிடுகிறான்.” இது பேரரசியின் விநயமான விளக்கம்! “தங்கள் மகன் என்னும் பாசத்தால் இப்படிக் கூற உங்களுக்கு உரிமையுண்டு, ஆனால் நான் வீரபாலனைச் சிசுப் பருவத்திலிருந்து எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களுக் கிடையே எவருமேயறியாமல் வளர்த்து ஆளாக்கப்பட்டபாடுகள் விளக்கத்துக்கு அப்பாற்பட்டது. அவனுடைய தாய் இவனைத் என்னிடம் ஒப்புவித்துவிட்டுப் போனவள் போனவள்தான். வயது வந்ததும் உண்மையைச் சொல்லி இவனைக் கொண்டு வந்து சேர்ப்பதில்கூட மிக மர்மமாயிருக்க வேண்டியிருந்தது...” “புரிகிறது புரிகிறது. மர்மமாகவே பிறந்தவன் மர்மமாகவே வாழ்ந்துவிட்டான். இத்துடன் நாம் இச்சம்பவத்தை நம் மனதில் ஆழப் புதைத்துவிட்டு மேலே ஆவனவற்றைச் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையா ராஜகுருவே?” என்று முதிய பிராட்டி கேட்டதும் ராஜகுரு வேறு என்ன பதில் கூற முடியும் ? ஆனால் சோழ மாமன்னர் மனம் என்ன பாடுபட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் அவர் ஊகிக்க முடிந்ததால் “உண்மைதான். நீங்கள் மாறா மன உறுதிகொண்ட ராஜேந்திரன் மகள் இல்லையா? உங்கள் மன உறுதியில் ஓரளவாவது உங்கள் மகனுக்கும் இல்லாமலா போகும்?” என்று சாதுரியமாகப் பதிலளித்ததும் பேரரசியின் முகத்தில் சற்றே நிம்மதிக் களையேற்பட்டது. எனினும் முடிவாகப் பேரரசியே இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பதைப் போல “தியாகம் செய்வது என்பது எல்லாருக்கும் எளிதல்ல. தவிர தியாகம் செய்வதனால் உண்டாக்கும் பலன் மகத்தானதாயிருப்பது என்பதும் அவ்வளவு எளிதல்ல. வரலாற்றுப் பெருமைக்கும் புகழுக்கும் பாத்திரமாக வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யும் தியாகமும் பெரிதல்ல. இவ்வகையில் ஏதோ கோடியில் ஒருவர்தான் உண்மையான தியாகம் செய்ய முடியும். அரை நாழிகைக்கு முன்னால் சோழ சாம்ராஜ்யமே உருக்குலையவிருந்தது. ஆனால் அதைத் தனது உயிர்த் தியாகத்தால் தடுத்து நிறுத்திவிட்டான் நீங்கள் வளர்த்துக் கொடுத்த வீரச் செம்மல். உலகம் அறியாது போகட்டும், வரலாறு வரையாது போகட்டும், அக்கரையில்லை. நம்முடைய இதயங்களில் என்றென்றும் நாம் நினைத்துப் போற்றி வணங்கி வாழவேண்டியதொரு மகத்தான தியாக புருஷனாக, கோடியில் ஒருவனாக அவன் வாழ்ந்து மறைந்ததை நம்மால் இனி ஒரு நொடிகூட மறந்துவிடுவதற்கில்லை!...” அரசியாரின் இவ்வாக்குக்கு எதிர்வாக்கேது? மாறுபட்ட கருத்துத்தான் மனதில் நிலைக்க முடியுமா? ஆம்! உண்மைதான்! முக்காலும் உண்மைதான்! என்பதாக அங்கிருந்தோரின் மனம் எண்ணிப் பொருமியதில் வியப்பில்லை! எனினும் அந்நேரத்தில் அவர்களும் ஒரு முடிவுக்கு வராமலில்லை. சோழர் தம் பெருவாழ்வு என்றும் வரலாற்று விளக்க ஏடுகளில் புதைந்து கிடக்கும் எத்தனையோ அத்தியாயங்களில் இதுவும் ஒன்று என்ற மதிப்புக்காட்டிச் சற்றே நிம்மதி காண முயன்றனர் அனைவரும்! (முற்றும்)
|