உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
பொன்னகர்ச் செல்வி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 2. நல்வழிகாட்டியும் வல்லடி வழக்கனும்! அலைமோதும் கடலில் அன்னம் போல் மிதந்து வந்து கொண்டிருந்த அழகான மிகப்பெரிய சாவகத்து மரக்கலம் கடற்கரையை நண்ணி விட்டது. சம்பா, சாயாணி வர்ணா, சரிமா, ஸ்ரீவிஜயம், சுமத்திரா, கடாரம் முதலிய நாடுகளின் இணைப்புச் சங்கிலியான அன்றைய சாவகத்துப் பேரரசின் பிரதிநிதியாகச் சைலேந்திர மாமன்னனின் மைத்துனரும், திறமையும் புத்திக்கூர்மையும் வாய்க்கப் பெற்ற தலை சிறந்த அரசியல் சதுரன் என்றும் பெயர் பெற்ற ராஜ வித்யாதர ஸ்ரீசாமந்தன் அவர்களும்; சைலேந்திர ராஜகுரு புத்தமித்திர தர்ம விரதரும் தங்கள் உதவியாளர், பரிவாரம் சூழ வந்து கொண்டிருக்கின்றனர் என்பதை முன்னோடிப் படையினர் படகுகளில் வந்து அறிவிக்க மன்னர் குலோத்துங்கர் நமது உடன் கூட்டத்தார் புடைசூழ கடலோரமாக நகர்ந்தார். 'சோழ குலாதிபர் நீடுழி வாழ்க!' என்று அக்கப்பலில் இருந்தவர்கள் முழங்க, 'வாழ்க சைலேந்திர மன்னர்!' என்று பிரதி ஒலி கரையிலிருந்து எழுந்தது. முதலில் ராஜசாமந்தர் இறங்கி ஒரு முறை சுற்று முற்றும் நோட்டம் விட்டுக் கொண்டே முன் வந்து முறைப்படி சோழநாட்டு மன்னரை வணங்க, கம்பீரமான சிரக்கம்பத்துடன் குலோத்துங்கரும் "பயணம் சுகமாயிருந்ததா?" என்று வினவினார். இதற்குள் ராஜகுரு தர்ம விரதர் இறங்கி வர, மன்னனே முன்சென்று முதலில் அவருக்கு வணக்கம் தெரிவித்து வரவேற்றான். அவரும் தமது ஆசிகளைத் தெரிவித்து, "முன்னே நாம் சந்தித்த போது நீங்கள் குமாரப் பருவத்தினர். உமது அன்னையார் சுகந்தானா? உங்கள் மனைவி, மைந்தர் யாவரும் நலந்தானா? எல்லோரும் நலமாக வாழ புத்ததேவன் அருள்புரிவார். ராஜசமந்தனை நீங்கள் பார்த்திருக்க முடியாது. நீங்கள் அங்கு வந்திருந்த போது இவன் இந்நாட்டில் தான் இருந்தான். எமது தூதுவரகத்தின் உதவியாளராக. மன்னர் உங்களை நிரம்பவும் கேட்டதாகவும் மீண்டும் இங்கு விஜயோத்துங்க விஹாரத்தை விரிவுபடுத்துவதில் உதவு செய்யத் தாங்கள் முன்வந்ததற்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார். நானும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று வார்த்தைகளை நிறுத்தாமல் தட்டுத் தடங்கலின்றி அந்த முதுபெருங் குருசிகாமணி அறிவித்ததும், "தங்கள் ஆசியும் அன்பும் சைலேந்திரனின் நன்றிப் பெருக்கும் என்றும் மறக்கற்பாலது அன்று ராஜகுருவே!" என்று பதிலளித்தான் குலோத்துங்கன் மன நிறைவுடன். இருபதாண்டுக் காளையாக இருந்த போது ஒரு மாபெரும் கடற்படையுடன் திக்விஜயம் தொடங்கிய குலோத்துங்கன் சுமார் ஏழு ஆண்டுகள் சீனம், மிசிரம், ஸ்ரீவிஜயம், மாயிருடிங்கம், கடாரம், சாவகம், சம்பா, மலையூர், பாலி, முத்ரா, சோனகம், நக்கவரம் ஆகிய கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று சோழர் தம் குலப்பெருமையை நிலைநாட்டி வந்த காலை, இந்தப் பெரியாரை, ஸ்ரீவிஜயத்தில் சந்தித்து நீண்டகாலம் பழகும் வாய்ப்பினைப் பெற்றிருந்தான். இதை அவரும் மறக்கவில்லை! அவருக்கு அப்போது பொன்விழா ஒன்று நிகழ்ந்தது. சைலேந்திர மன்னரே வெகு விமரிசையாக விழா நடத்தி ஆலயங்கள் அனைத்திலும் பூசைகள் புரிந்துத் தான தருமங்கள் பலவும் வழங்கிக் கொண்டாடியது குலோத்துங்கருக்கு நினைவு வந்தது. சோழ சாம்ராஜ்யாதிபதியின் பிரதிநிதியாகவும், சம்பாலில் ஹிந்துக்களுக்குத் தீங்குகளை விளைவித்த ஸ்ரீவிஜய, சீன, சாவகச் சிற்றரசர்களை அடக்குவதற்காகவும், சோழர்களின் மேலாதிக்கத்தை அந்த நாடுகளில் மேலும் வலுப்படுத்தவும் ஏழாண்டுக்காலம் கடல் நாடுடையார் துணையுடன் முக்கடல்களில், வலம் வந்த குலோத்துங்கன் கண்ட வெற்றிகள், நிகழ்த்திய சாதனைகளைக் காட்டிலும் இந்தப் பெரியாரிடம் நெருங்கிப் பழகி அடைந்த மன அமைதிதான் சிறந்த விளைவு என்பதை குலோத்துங்கன் நாளது வரை மறக்கவில்லை. "மகா குருவே, ஸ்ரீசாமந்தர் சைலேந்திர ராஜ மன்னரின் பிரதிநிதி என்றால் நீங்கள் அந்நாட்டு மக்களின் தூதுவர். எனவே இருவரையும் மனமுவந்து வரவேற்கவே நானே இன்று கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து ஈண்டு வந்திருக்கிறேன். தங்களைக் காண எனது அன்னையும் வந்திருக்கிறார்" என்று குலோத்துங்கன் அறிவித்ததும் தர்ம விரதர் உண்மையிலேயே மிக மகிழ்ச்சி கொண்டவராய், "அம் மூதாட்டியை இவ்வெளியவன் சந்தித்து அளவளாவத் தானோ என்னவோ அவருக்குப் பூரண ஆயுளையும் எனக்கு மீண்டும் இந்தப் புனித நாட்டுக்கு வரும் வாய்ப்பையும் புத்தபிரான் தந்திருக்கிறான் போலும்" என்று தமக்குள்ளாகவே கூறிக் கொண்டு, தன் பக்கலில் நின்றாலும் தொலை தூரத்தில் நோட்டம் விட்டபடி எடுப்பாக நின்ற ஸ்ரீசாமந்தனை விளித்து, "சோழப் பேரரசர் நம்மை வரவேற்க தாமே நேரில் வந்திருப்பது அவர் தம் பெருமையையும் நமது மன்னரிடத்திலும், நாட்டிடத்திலும், புத்த பிரானின் நல்லுபதேசத்திலும் அவர் கொண்டுள்ள மதிப்பையும் எடுத்துக் காட்டுகிறது அல்லவா?" என்று கேட்கவும், ஸ்ரீசாமந்தன் "ஆமாம், இது உண்மையில் நம் நாட்டுக்கும் மன்னருக்கும் அளிக்கப்பட்டுள்ள பெருமையேயாகும்!" என்று பதிலளித்தான். சோழ மாமன்னர் ஸ்ரீசாமந்தனை ஒரு முறை ஏறெடுத்துப் பார்த்து விட்டு, "சரி, நாம் அரண்மனை செல்லலாம்!" என்று அறிவித்ததும் சிவிகைகள் கிடுகிடுவென்று வந்து நின்றன! பூம்புகார்த் திருவீதிகளில் ஒன்றன் பின் ஒன்றாகச் சென்ற அந்தச் சிவிகைகளைத் தொடர்ந்து முன்னும் பின்னுமாக யானை வீரர்கள், பரிமாப் படையினர், வேளைக்காரப் படைகள் தொடர நரலோக வீரனும், அமைச்சர், உட்பட்ட உடன் கூட்டத்தாரும் மெதுவாகப் பேசியபடி சென்றதையும் மக்கள் கவனிக்காமலில்லை. மருவூர்ப்பாக்கத்தைத் தாண்டி பட்டினப் பாக்கத்தில் புகுந்ததும், வீதிகள் அழகாக, மிகப் பெரிதாக, சோழ நாட்டுச் செல்வத்தின் திண்மையையும் வன்மையையும் கலைச் செறிவையும் போக வாழ்வையும் காட்டுவனவாக சகல வகையிலும் சிறந்து விளங்குவதைச் ஸ்ரீசாமந்தன் ஊன்றிக் கவனிக்காமலில்லை. முதலில் சென்ற முத்துச் சிவிகையில் மன்னர் யோசனையே உருவாக அமர்ந்திருப்பதையும், பின்னால் வரும் தந்தச் சிவிகையில் புத்தமித்திர தருமவிரதர் ஏதோ பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பதையும் அதிகம் கவனிக்காமல் இடையில் செல்லும் தங்கச் சிவிகையில் அமர்ந்து எங்கெங்கோ கண் பார்வையைச் செலுத்தும் ஸ்ரீசாமந்தனை மட்டும் நரலோக வீரனின் ஊடுருவுங் கண்கள் கவனிக்கத் தவறவில்லை! எனினும் தன்னைக் கவனிக்கும் கண்கள் எவருடையவையென்றோ, ஏன் என்றோ சற்றும் சிந்தியாமலே தனது ஆய்வு நோட்டத்தை விடாப்பிடியாக மேற்கொண்டிருந்தான் ஸ்ரீசாமந்தன். சற்றே குள்ளமானவன் தான் என்றாலும் குரூபியல்ல. பரந்து சிவந்திருந்த முகத்தில் மூக்கு சற்றே சப்பைதான் என்றாலும் நெற்றி அகலமானது. கண்கள் கூடச் சிறிது தான் என்றாலும் அவற்றில் இருந்த வேகம் அதி கூர்மையானது என்பதை வேளைக்காரப் படைத்தலைவர் அறிய அதிக நேரமாகவில்லை. இதழ்களில் அரும்பியிருந்த புன்னகை இயற்கையா அல்லது உள்ளூர நிலைத்திருக்கும் எண்ணத்தை மறைக்க அரசியல் சதுரர்கள் கையாளும் தந்திரங்களில் இப்புன்னகையும் ஒன்றாயிற்றே, அது தானா? என்றும் அமைச்சர் யோசிக்காமலில்லை. நரலோக வீரருக்கும் சரி, அமைச்சருக்கும் சரி, மன்னரின் உடன் கூட்டத்தாருக்கும் சரி, சாவகத்துத் தூதுவர் பற்றிய தகவல்கள், அதாவது அரசியல் சம்பந்தமானவை யனைத்தும், ஏற்கெனவே தெரிந்திருந்தன. வேளைக்காரப் படையும் உளவுப் படையும் தாங்கள் மெய்யாட்கள் மூலம் இவற்றைச் சேகரித்து இவர்களிடம் முன்பே கொடுத்திருந்தன. நரலோக வீரன் தலைமையில் இயங்கும் இரு படைகளில் உளவுப் படை 'சோழ நாட்டின் கண்கள்' என்று கூறலாம். ஆபத்துதவிகளான வேளைக்காரப் படையுடன் இந்தப் பிரிவும் இணைந்து மிகத் திறமையாக இயங்கியதால் சோழ நாட்டில் எந்த வகைப் பகைச் சக்தியும், எந்த வகையிலும் ஊடுருவச் சக்தியற்றிருந்தன. மன்னர் குலோத்துங்கர் தான் முடி சூடிப் பட்டமேறியதும் செய்த முதல் வேலை காடவர் கோனின் பேரன்பையும் பரிபூரண ஆதரவையும் உறவு முறையொன்றின் மூலம் அதாவது அவருடைய மனைவியர்களில் ஒருத்தியாகக் காடவர் கோன் திருமகளையே ஏற்றுக் கொண்டதால் அவருடைய குடும்பத்தினரே குலோத்துங்கரின் உறவினராகவும் மாறி விட்டதால், நாட்டுக் காவல் பொறுப்பில் தலைமைப் பொறுப்பேற்று விட்டதால், அவர் தம் திருமகன் காடவ மல்லன் மன்னரின் மெய்க்காவற் படைத்தலைவரானதில் வியப்பில்லை. மணவில் நரலோக வீரன் குடும்பத்தாரின் அரச பக்தி மகத்தானது. தவிர சின்னஞ் சிறு வயது முதற் கொண்டே நரலோக வீரனைத் தனது பார்வையில் வளர்த்து மேல் நிலைக்கு மன்னர் குலோத்துங்கரே கொண்டு வந்திருப்பதால் அவன் நன்றிக்கடன் ரத்தத்தில் கலந்து வளர்ந்து விட்டவனாவான். எனவே, சோழ நாட்டின் பேரமைச்சரும் பிரதான மகாசேனாதிபதியுமான நல்லூர் ஸ்ரீவத்ச மதுராந்தக பிரும்மாதிராஜருக்கு அடுத்தபடியாக இவர்கள் இருவரும் முக்கிய பதவி வகித்தார்கள் என்றாலும், அரசரின் அந்தரங்கத்தை அறிந்து அவருக்கு எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் உரிமையும் வாய்ப்பும் இவர்களுக்கு உண்டு என்பது சோழ நாடு முற்றும் அறிந்திருந்த உண்மையாகும். சோழ நாட்டுப் பெருஞ்சேனாதிபதியின் மேற்பார்வையில் இவர்கள் இருப்பினும் அரசரின் மெய்க்காவல் படைகளுக்குள்ள முக்கியத்துவம் காரணமாக எப்போதும் அவர் இருக்குமிடத்திலேயே இருக்கும் தகுதியும் உரிமையும் படைத்தவர்களாக இருந்தனர். இவர்கள் தவிர ஆகவமல்லன், காடவமல்லன், ராஜமல்லன், முடிகொண்டான், பஞ்சநதிவாணன், சக்திமலையன் என்று ஐந்து பெருந்தனபதிகளும் சோழநாட்டின் காவற் பெருந்தகைகள் ஆவர். ராஜமல்லன், ஆகலமல்லனின் மூத்த சகோதரனான காடவமல்லன் இணையற்ற வீரன். மகாசேனாதிபதியின் அந்தரங்க நம்பிக்கைக்கும் பேரரசின் பேரன்புக்கும் உறவு பூண்டவனானதுடன் அவர் தம் பேரன்புக்கும் உரியவன். ஆயினும் ஆகவமல்லன், ராஜமல்லன் இருவரையும் எந்த ஒரு அந்தரங்க வேலைக்கோ அல்லது ஆலோசனைக்கோ மன்னர் அழைக்காமலிருபப்தில்லை. எனவேதான் அரண்மனையை மன்னரைத் தாங்கியிருந்த சிவிகை சேர்ந்த போது அவரையும் மற்றவர்களையும் வரவேற்கக் காடவர்கோடம் மகாசேனாதிபதியும் மேற்குறிப்பிட்ட வீரர்களும் காத்திருந்தனர் போலும்! மன்னர் தம் அன்னையை முதலில் சென்று பார்த்து நலமறிந்தவர், ராஜகுரு புத்தமித்திர தர்ம விரதர், பேரரசி அவருடன் நிறைய நிறையப் பேசினார். பிறகு ராஜஸ்ரீசமந்தனை விசாரித்தாள். அவனுக்கு மணமாகி பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டதென்றும் ஒரு மகளும் இருக்கிறாள் என்பதறிந்ததும் ஏன் அவளையும் அழைத்து வரவில்லை? என்று பேரரசி கேட்டதற்கு 'உரிய தருணம் வரும்போது வந்து சேருவாள்' என்று நகை தவழப் பதிலளித்தான் சாமந்தன். எனினும் "உரிய தருணம் என்று ஒன்று வர வேண்டுமா என்ன உன்னுடைய துணைவியை அழைத்து வருவதற்குக்கூட!" என்று மீண்டும் பேரரசி வற்புறுத்தி வினவியதும் அவன் புன்னகை சற்றே விலகி சினக்களை தட்டியது முகத்தில். இந்த நாட்டில் ஒரு கிழவிக்கு - அவள் என்னதான் அரசனின் அன்னையாக இருக்கட்டுமே - இவ்வளவுக்கு இடமளித்திருப்பது ஏன்? ஒரு தூதுவன் அதுவும் ராஜ குடும்பத்தினன் வந்திருக்கும் போது அவனுடன் நேர் முகமாகப் பேசுவதும், உறவு முறைகள் கொண்டாடுவதும் இந்த சோழ நாட்டில் சாதாரணமாக இருக்கிறதே! என்று சற்றே சலிப்புணர்ச்சி காட்டியது உள்ளம். எனினும் தனக்கு இச்சமயம் ராஜகுருவின் உதவி கிட்டினால் தான் தப்பிக்க முடியும் என்று அவரைப் பார்த்தான். அவரும் புரிந்து கொண்டார்! "ஸ்ரீசாமந்தன் விஜயோத்துங்கவர்மனின் மைத்துனன். நான் முன்பு இந்நாட்டுக்கு வந்திருந்த காலையில் இவன் ஒரு தூதுவாலய உதவியாளனாகத்தான் வந்திருந்தான். சில அரசியல் காரணங்களால் இரண்டோர் ஆண்டுகளிலேயே திரும்பிவிட்டான் எங்கள் நாட்டுக்கு. சமீப காலத்தில் இவனும் இவன் அண்ணன் அபிமானோத்துங்க சாமந்தனும் இப்போது அரசருக்கு உறவினர்களாகி விட்டனர். அவன் எங்கள் மன்னருக்குத் துணையாக அங்கே இருக்கிறான். சூடாமணி விஹாரத்தைப் புதுப்பித்து ராஜராஜப் பெரும் பள்ளியில் ஒரு பெரிய பௌத்தப் பல்கலைக் கழகத்தை நிறுவ வேண்டுமென்பது எங்கள் மன்னர் அவா. எனவே தான் என்னையும் இவனுடன் அனுப்பியுள்ளார். இவன் மனைவி இன்னும் ஓராண்டுக்குள் வந்து சேருவார்." என்று அவர் விளக்கியதும் பேரரசி அதை ஒப்பிய மாதிரி சிரக்கம்பம் செய்தாள். இதற்குள் ஆலயமணி ஒலிக்க, "சரி, ஆண்டவனை வழிபடச் செல்லுவோம். இரவு நன்கு களைப்பாறுங்கள். நாளை சாவகாசமாகப் பார்க்கலாம்!" என்று பேரரசி சொல்லியெழுந்ததும் அவளிடமிருந்து விடைபெற்றனர். பிறகு அவரவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த பகுதிகளுக்கு எல்லாரும் சென்றனர். ஏதோ பெரியதொரு நெரிசலிலிருந்து தப்பிய மாதிரி தனது அறைக்குள் சென்ற ராஜசமந்தன் தனது அந்தரங்க ஆட்களான சிசுநாகன், பவநாகன் என்னும் இருவருடன் தனித்துப் பேசத் துவங்கினான். ராஜகுருவோ அவர்களுடைய அந்தரங்கப் பேச்சில் தலையிடாமல் பிரார்த்தனைக்குச் சென்று விட்டார். எனவே சமந்தன் அங்கு வேறு யாரும் இல்லை என்ற முடிவில் அவர்களுடன் ஏதேதோ - ரகசியமாகத் தான் - பேசிக் கொண்டேயிருந்தான். ஆனால் சோழநாட்டிலுள்ள அரண்மனையின் சுவர்களுக்குக் கூட காதுகளும் கண்களும் உண்டு என்ற உண்மை அச்சமயத்தில் அவனுக்குத் தெரிய நியாயமில்லை! சிறிது நேரம் கழித்து சுவையான உண்டிகளை அரண்மனைச் சுயம்பாகிகள் கொண்டு வரத் துவங்கியதும் அவர்கள் பேச்சு நின்றது. ஆனால் அவர்கள் பேசியதனைத்தையும் ஒன்றுவிடாமல் கேட்ட 'சுவரின் காதுகள்' இரண்டு கால்களால் நடந்து போய் நரலோக வீரனிடம் ஒன்று விடாமல் கூறியதும், திகைப்பும் வியப்பும் கலந்த வேதனையுடன் அவன் அமைச்சர் மாவலிவாணராயனிடம் சென்றான். இருவரும் சிறிது நேரம் பேசி முடித்ததும் நேராகக் காடவர் கோனிடம் போய்விட்டனர். "எங்கே இன்னமும் காணோமே என்று தான் காத்திருந்தேன்!" என்று கம்பீரமான குரலில் வரவேற்ற அவர் இருவர் முகத்தையும் பார்த்துத் திடுக்கிட்டார். ஆனால் அவர்கள் அறிவித்த விவரமோ அவரையே கிறுகிறுக்க வைத்தது! "நமது ஊகம் தவறல்ல என்பதை வேல் தம்பி அறிந்து வந்த விவரம் உண்மையாக்கி விட்டது. சாமந்தன் நல்ல எண்ணத்துடன் சோழ நாட்டுக்கு வரவில்லை என்பது உறுதியாகி விட்டது" என்று நரலோகவீரன் மனம் நொந்து கூறியது கேட்டு சில விநாடிகள் வரை வாய் திறவாதிருந்த காடவர்கோன் மல்லனைப் பார்த்தார். அந்தப் பார்வை 'நீயும் ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?' என்று கேட்பதைப் போலிருந்தது! எனவே தனது கருத்தையும் விளக்க முற்பட்டான். "சாமந்தனின் ஆலோசகர்களான ஜயவர்மனும் வீரவர்மனும் ஏற்கெனவே இங்குள்ள நிலைமையை நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள். அது எப்படி சாத்தியமாகும்? ஒருவேளை அவர்களுடைய உதவியாட்கள் ஏற்கெனவே இங்கு ஊடுருவி நிலைத்திருந்து சகலத்தையும் அறிந்திருக்க வேண்டும். அல்லது நம்மவர்களிலே எவராவது உளவாளிகளாயிருக்க வேண்டும். தவிர நம்முடன் கங்கன் நாளது வரை செய்து வரும் தகராறுகள் அனைத்தையும் இவர்கள் அறிந்திருக்கிறார்கள். நாம் கடந்த வாரத்தில் கங்கபாடிக்கு அனுப்பிய வேளக்காரப்படை, அவற்றின் தொகை, அலுவல்களையும் கூட இவர்கள் அறிந்திருக்கிறார்கள்" என்று மல்லன் கூறியதும் காடவர்கோன் வியப்புடன் பிரும்மாதிராயனைப் பார்த்தார். அவரே "இனியும் சந்தேகத்துக்கிடமில்லை. மூன்று மாதங்களுக்கு முன்னரே இவன் தனது ஆட்களை இங்கு அனுப்பியுள்ளான். அவர்களை நாம் புரிந்து கொள்ளவில்லை. ஒருகால் நரலோகவீரர் சந்தேகிப்பது போல படகுப் போட்டியில் வெற்றி பெற்ற மர்மப் பேர்வழியும் அவர்களில் ஒருவனாயிருக்கலாம்" என்றார். இதுகாறும் எதுவுமே பேசாமலிருந்த காடவர்கோன் இப்போதுதான் வாய் திறந்தான். "பிரமாதிராயரே, உங்கள் ஊகமும் சரியாயிருக்கலாம் அல்லது தவறாகவுமிருக்கலாம். ஆனால் இப்போதுள்ள நிலைமையை ஆதாரமாக வைத்து ஆராய்ந்து பார்த்தால் கங்கனே இவனுடன் நேரடித் தொடர்பு கொண்டிருக்கலாம் என்பதாக நினைக்க வழியேற்படுகிறதில்லையா? படைகளை நாம் அனுப்பியது பகிரங்கமாகத் தானேயன்றி ஒளிவுமறைவாக அல்ல. ஆனால் அங்கு எல்லையை நோக்கி வந்திருப்பவர்கள் யாரார் என்பது கங்கனுக்குத் தெரியாமலிராது. இன்னும் கூட அவனுடைய ஆட்கள் நம் நாட்டில், ஏன் அரண்மனையில் இல்லாமலில்லை. தவிர நாம் இப்போது செய்துள்ள எச்சரிக்கையான ஏற்பாடுகளை மீறி மூன்று மாதங்களுக்கு முன்னும் சரி, இன்றும் சரி, எவரும் ஊடுருவியிருக்க முடியாது!" என்று அழுத்தந்திருத்தமாகக் கூறியதும் நரலோகவீரன் முகத்தில் சற்றே களை தட்டியது. மல்லனுக்கோ சற்று உற்சாகமே உண்டாகிவிட்டது. ஆனால் சிந்தனையிலாழ்ந்த பிரம்மாதிராயர் காடவர்கோன் முடிவை மறுக்கவில்லை! "இப்பொழுது நாம் செய்யக்கூடியதெல்லாம் இதுதான்" என்று ஒரு பீடிகையைப் போட்ட காடவர்கோன் சுற்று முற்றும் தனது குழுவினரை ஒரு முறை பார்த்துவிட்டு, அவர் என்ன கூறுவாரோ என்று ஆவலுடன் அவர்கள் இருப்பதையும் கவனித்துக் கொண்ட அவர் "ஸ்ரீசாமந்தனை நாம் சந்தேகிக்கிறோம் என்ற செய்தி மன்னர் தம் காதுகளில் கூட விழக்கூடாது. ஏனெனில் அவர் மாறவிஜயோத்துங்கவர்மனின் வம்சத்தினர் பற்றிக் கொண்டுள்ள அபிப்பிராயம் நாம் அறிந்ததே. தவிர தர்ம விரதர் பெருமதிப்புக்குரியவர் என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் ஸ்ரீசாமந்தனின் உதவியாட்களை மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இரண்டாவதாகப் போட்டியில் இன்று எதிர்பாராத விதமாகப் பரிசு பெற்றவன் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். மன்னருக்கும், மன்னர் தம் அன்னையாருக்கும் அறிந்த முகத்தினனாயிருக்கிறான் அவன். மூன்றாவதாக கங்கநாட்டுக்கு இப்போதே நாம் தேர்ந்த இரு உளவாளிகளை அனுப்பியாக வேண்டும். இது என் யோசனை. உங்கள் யோசனைகளையும் தாராளமாகக் கூறுங்கள். பிறகு, பிரும்மாதிராயர் முடிவுக்கு இவற்றை விட்டுவிடலாம்" என்று சாதுரியமாகப் பேசியதும், முன்கோபக்காரரான அவரே, "நன்று காடவர்கோனே, மிக்க நன்றாகக் கூறினீர்கள். வேறு யோசனை எதற்கு? நரலோக வீரர் ஏற்கெனவே தமது ஆட்களின் கண்களை அந்த வீரனைச் சுற்றி வட்டமிடச் செய்திருக்கிறார். மன்னரிடம் இன்றிரவு நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று நீங்களே கூறிவிட்டீர்கள். ராஜமல்லன் கங்க நாட்டுக்கு ஆட்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து விடுவார்!" என்று அதிவேகமாக ஆமோதித்ததும் மற்றவர்கள் மாற்றுக் கூறாமல் ஒப்புக் கொண்டு எழுந்தனர். |