உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
பொன்னகர்ச் செல்வி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 3. மர்ம வீரனும் மாகடல் வாணரும் உளவாளிகளைப் பிடிப்பதில் நாளது வரை தோல்வியே கண்டிராது தமது திறமையிலும், தந்திரத்திலும் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தவர்களான கலியனும் மாயனும் அதாவது நரலோக வீரனின் உதவியாட்கள், மர்ம வீரனிடம் சிக்கிய 'மர்மம்' புரியாமல் அவன் காட்டிய வழி நடந்து மருவூர்ப்பாக்கத்தை தாண்டி வில்லிகள் வீதியையும் கடந்து புகாரின் பெரும் பூந்தோட்டமான முல்லை வனத்தையும் நெருங்கிவிட்டனர். மர்ம வீரனோ செல்லும்பாதை நன்கு அறிந்தவனைப் போல இவர்கள் என்ன ஒரு பொருட்டா? என்பதைப் போல அலட்சியமாகச் செல்லுவதையும் கண்ட அவர்கள் வியப்பும் வேதனையும் கொண்டு நொந்த மனதுடன் நடந்தனர். ஆனால் முல்லைவனம் தாண்டியதும் 'அரனார் பள்ளி' என்னும் கடல் நாடுடைய வாணகோவரையர் மாளிகைதான் இருக்கிறது. அவரோ சோழ மாமன்னனின் பேரன்புக்கும் பெருமதிப்புக்குமுரியவர் மட்டுமல்ல, நாளது வரை கடல் கடந்த நாடுகளுக்குச் சோழ ராஜனின் ஒரே பிரதிநிதி என்பது உலகறிந்த உண்மை. அவர் செல்லாத நாடுகள் இல்லை, அறியாத மன்னரோ, பெரு வீரர்களோ இல்லை. காடவர்கோன், பழுவேட்டரையர்கள் எல்லாம் அரசருக்கு உறவினராகவும், சோழ நாட்டில் மகா சக்தி வாய்ந்தவர்களாகவும் இருப்பினும் வாணகோவரையர் சோழ நாட்டில் தனிப் பெருமையும் சக்தியும் வாய்ந்தவர். குறிப்பாக அயல் நாடுகளின் உறவுமுறை, நிலைமை அதாவது கடல் கடந்த நாடுகளின் சோழர் பெருமை இன்றளவும் இறங்காதிருப்பதற்கு இவரே காரணம் என்ற உண்மையை சோழ மன்னர் முதல், சர்வசாதாரண பிரஜை வரை அறிந்திருந்தனர். கடல் கடந்த நாடுகள் விவகாரத்தில் இவர் அசாதாரணமான திறமையும் நெடுங்கால அனுபவமும் வாய்ந்தவர். எனவே, மர்ம வீரன் தங்களை அழைத்துக் கொண்டு அந்தப் பகுதி செல்வதென்பது புலிக்குகைக்குள் எலி புகுந்த கதையே ஆகும். தவிர அவர் எதிரில் நின்று பேசும் சக்தி கூட மன்னருக்கும் காடவர்கோன் போன்ற சில பெருந்தலைகளுக்குமேயுண்டு. அப்படியிருக்க இவனாலும் அவர் எதிர் செல்ல இயலாது. நம்மாலும் நிமிர்ந்து நிற்க முடியாது. இதென்ன கஷ்டம்? என்று மாயனும் கலியனும் மனம் புழுங்கினாலும் மர்ம வீரன் குழம்பியதாகத் தெரியவில்லை! எனினும் மவுனமும் குழப்பமும் மாயனை மேலும் மவுனமாக இருக்கவிடவில்லை. "இளைஞனே, நீ நடந்து கொள்ளும் முறை உன்னை என்ன பாடுபடுத்தும் என்பதை யோசித்தாயா?" என்று கேட்டான். மர்ம இளைஞன் அப்பாவித்தனமாக, "எந்த முறை நண்பரே?" என்று கேட்டதும் கலியனுக்கு ஆத்திரமே வந்துவிட்டது. "நீ எங்களை இப்படி நடத்தும் முறை நரலோகவீரனுக்குத் தெரிந்தால் நரகத்துக்கே அனுப்பிவிடுவார் உன்னை!" என்று எரிந்து விழுந்தான். மீண்டும் சிரித்துக் கொண்டே இளைஞன் "அப்படியா? நரகத்துக்கு அனுப்புவதென்றால் அது எங்கேயிருக்கிறது நண்பரே? சோழ நாடு முழுவதும் சொர்க்கமாக்கும் என்று பெருமைப்படுத்திக் கொள்ளுபவர்களுக்கு நரகமும் இங்குதான் இருக்கிறது என்று நரலோகவீரர் காட்டுவாராக்கும்? அதனால் தான் அவருக்கு அந்தப் பேர் வந்ததோ?" என்று ஏளனமாகக் கூறியதும் மாயனுக்கு ஆத்திரம் அளவு கடந்துவிட்டது. சட்டென்று பாய்ந்துவிட்டான் அவன் மீது. இந்தத் தாக்குதலைச் சற்றும் எதிர்பாராத இளைஞன் ஒரு விநாடி அதிர்ந்து விட்டதால் மாயனுடைய முஷ்டி இருமுறை அவன் முகத்தையும் வைர உடலையும் பதம் பார்த்து விட்டது. எனினும் அடுத்த நொடியே இடது கையினால் மாயனின் கழுத்தில் ஓங்கியடிக்க அவன் 'ஆ' வென்றலறிச் சுருண்டு விழுந்தான். அவன் சற்று நேரம் எழுந்திருக்கவேயில்லை. கலியன் குதிரை மீது இருந்து இறங்கி மாயனைத் தொட்டு எழுப்பினான். அவனோ பிரேதம் போல் கிடப்பதைக் கண்டு கலங்கி விட்டவன் "அடப்பாவி! நீ என்ன செய்துவிட்டாய் என் நண்பனை?" என்று கத்தினாலும் பாய்ந்து விடவில்லை! மர்ம இளைஞன், "அஞ்ச வேண்டாம் நண்பரே, உமது தோழன் உயிர் திரும்பி வரும், தயவு செய்து அவனைக் குதிரை மீது தூக்கி வைத்து நீரும் ஏறிக் கொள்ளும். நீரும் அவர் மாதிரி பாய்ந்தால் அப்புறம்..." மர்ம இளைஞனின் சிரிப்பு கலியனை ஆத்திர மூட்டுவதாக இருந்தாலும் நண்பனைத் தூக்கினான். மர்ம வீரனும் ஒரு கைகொடுத்தான்! குதிரை மீது மாயன் தொங்க விடப்பட்டதும் தன் குதிரை மீது அமரச் சென்ற கலியன் டகடகவென்று குதிரைக் குளம்படி சப்தம் வந்த திசை திரும்பிப் பார்த்தான். வாணகோவரையர் தமது பரிவாரங்களுடன் வந்து கொண்டிருந்தார். கலியன் முகம் களை கொண்டது. "இனி நீ தொலைந்தாய் இளைஞனே!" என்று சொல்லி வாய் மூடுவதற்குள் அவர்கள் வந்துவிட்டனர். கம்பீரமாகத் தமது குதிரை மீது அமர்ந்திருந்த வாணகோவரையரைக் கலியன் தலைதாழ்த்தி வணங்கினான். மர்ம இளைஞனோ குதிரை மீது இருந்தபடியே சற்றே தலைசாய்த்து வணங்கினான். அதைச் சிரக்கம்பம் செய்து ஏற்றுக் கொண்ட கடல் நாடுடையார் "என்ன நடக்கிறது இங்கே கலியா?" என்று கேட்டுவிட்டு குதிரை மீது கிடப்பவனை வியப்புடன் பார்த்தார். "உடனே இவனைக் கைது செய்யக் கேட்டுக் கொள்ளுகிறேன். இவன் உளவாளி, எதிரிகளின் கையாள். என்னையும் மாயனையும் ஏமாற்றிவிட்ட நயவஞ்சகன். விடாதீர்கள் இவனை" என்று கத்தினான் கலியன். வாணகோவரையரோ பொறுமையுடன் அவன் கூவுவதைக் கேட்டுவிட்டு, "இளைஞனே இவன் சொல்லுவது உண்மைதானா? நிராயுதபாணியான மாயனை நீ நயவஞ்சகமாக ஏமாற்றி அடித்துப் போட்டாயா?" என்று வெகுளித்தனமாகக் கேட்டதும் கலியனுக்கு ஆத்திரம் கூடிற்றேயன்றிக் குறையவில்லை. ஆயினும் வாணகோவரையர் முன்னே கலியன் எம்மாத்திரம்! "கடல்நாடுடையாரே! இவர் சொன்னதில் ஒன்றுதான் உண்மை. மற்றவை அனைத்தும் பொய்" என்று நறுக்கெனப் பதில் கூறினான். இப்போது கலியன் விழித்தான், எது உண்மையென்று இவன் ஒப்புக் கொள்ளுகிறான்? "உண்மை என்ன இளைஞனே?" "இவருடைய நண்பர் சுருண்டு கிடப்பது!" என்று சாதாரணமாகச் சொன்னதும் அனைவரும் வாய்விட்டுச் சிரித்து விட்டனர். இளநகை பூத்த வாணகோவரையர் "இளைஞனே இவர்கள் வேளைக்காரப் படையினர். நரலோகவீரனின் மெய்க்காவலர்கள். இது தெரியுமா உனக்கு?" என்று கேட்டார். "தெரியும். இவர்கள் சொன்ன பிறகு!" "வியப்புக்குரிய பதில் தெரிந்தும் இவர்களுடன் ஏன் வம்பு?" "வம்பு விளைவித்தவர்களையல்லவா கேட்க வேண்டும்!" வாணகோவரையர் இளைஞனை வியப்புடன் பார்த்து விட்டு, "நல்ல பதில் தான், வம்பு விளைத்தது நீதான், அடித்துப் போட்டது நீதான் என்று கலியன் கூறுகிறானே!" "இரண்டும் பொய். தொடர்ந்து வந்தவர்கள் இவர்கள். கத்தியை உருவியவர்கள் இவர்கள், என் மீது பாய்ந்தவர் அதோ கிடப்பவர், வம்பு வார்த்தைகளை வீசியவர் இவர்!" என்று அடுக்குமுறையில் பதில் அளித்தான் இளைஞன். கலியன் இதென்ன வியப்பு? கேவலம் ஒரு உளவாளியுடன் இவ்வளவு நேரம் மதிப்பளித்துப் பேசுகிறாரே கடல்நாடுடையார்! என்று திகைத்தானேயன்றி குறுக்கே பேசவில்லை. "இளைஞனே, சுருண்டு கிடப்பவனை எழுப்பி விட முடியுமா?" என்று கேட்ட வாணகோவரையர் எதிரிலேயே கிடப்பவன் கழுத்தில் ஒரு தட்டுத் தட்ட அவன் துள்ளி எழுந்து நின்றான்! பிறகு பரக்கப் பரக்க விழித்தான். எதிரே வாணகோவரையர் நிற்பதைப் பார்த்து கனவா நினைவா வென்று திகைத்து விழித்தான்! கலியனோ இதென்ன ஆச்சரியம் என்று பிரமித்து நின்றான். "நல்லது இளைஞனே! இது என்ன வேடிக்கை! ஒரு தட்டுத் தட்டுகிறாய். அவன் துள்ளியெழுகிறான். எப்படி இது சாத்தியமாகிறது?" என்று வாணகோவரையர் கேட்டதும் அவ்விளைஞன் "இதில் அதிசயம் ஒன்றுமில்லை. இது நிப்பன் நாட்டுச் சண்டை முறை. நரம்பில் அடித்தால் பிடித்துச் சுருள்கிறான். இதே நரம்பில் வேறுமாதிரி அடித்தால் எழுந்திருக்கிறான். அவ்வளவுதான்!" என்றதும் அனைவரும் அவனை அதிசயமாகப் பார்த்தனர். மாயன் தன் உடல் மீது கழுத்து நின்றிருக்கிறதா? என்று ஆராய்ந்து பார்த்தான் ஒரு முறை தலையை ஆட்டி! பிறகு அதுகாறும் தான் வாணகோவரையருக்கு வணக்கம் தெரிவிக்க மறந்து விட்டதை நினைத்து சட்டென்று முறைப்படி வணங்கி நின்றான். இருவரையும் மாறி மாறிப் பார்த்த கடல்நாடுடையார், "இந்த இளைஞனை நான் அழைத்துச் செல்கிறேன். நரலோகவீரரிடம் தெரிவியுங்கள். நீங்கள் போகலாம்!" என்று உத்தரவிட்டதும் அவர்கள் 'அப்பாடி! தப்பினோம்!' என்று நினைத்துக் குதிரைகளைத் தட்டி விட்டனர். இளைஞன், இதற்குப் பிறகு வேறு எதுவும் பேசாமல் அவரைத் தொடர்ந்தான். உடன் வந்த பரிவாரத்தினருக்கு வாணகோவரையர் சைகை காட்ட அவர்கள் அப்பால் போய்விட்டனர். அவரும் அவனும் தான்! "இன்று நிகழ்ந்ததெல்லாவற்றையும் கேள்வியுற்றேன். எனக்கு நிரம்பவும் மகிழ்ச்சிதான். ஆனால் அரசர் உன்னை எங்கோ பார்த்திருப்பதாகச் சொன்ன போது நீ ஒரு நொடி திடுக்கிட்டு விழித்தது உண்மைதானா?" என்று அதிர்ச்சியுடன் வாணகோவரையர் கேட்டதும், மர்ம இளைஞனுக்கு உண்மையிலேயே இதென்ன விந்தை! இவருக்கு அந்த ஒரு விநாடி நிகழ்ச்சி எப்படித் தெரிந்தது? என்று திகைத்தாலும் அடுத்த நொடியே அத்தகைய சக்தி இல்லாவிட்டால் இவர் எப்படி உலகப் புகழ் பெற்ற கடல்நாடுடைய வாணகோவரையராயிருக்க முடியும்? என்றும் முடிவையும் செய்து கொண்டு, "நீங்கள் அறிந்த செய்தி உண்மைதான்!" என்றான். "செய்தி அல்ல, நிகழ்ச்சி! அந்த நிகழ்ச்சியின் போது என்னுடைய கண்கள் மட்டும் அல்ல, வேறு நான்கு கண்களும் உன் முகத்தைக் கூர்ந்து நோக்கின. அவற்றில் இரண்டு சோழ மன்னரின் அன்னையாருடையவை!" என்றார் வாணகோவரையர். இளைஞன் பதில் கூறவில்லை. எனினும் அவர் ஏன் இதை விளக்கிக் கூறுகிறார் என்பதன் கருத்தை ஆராய்ந்தான். "நாளை உன்னை அரண்மனைக்கு வரும்படி மன்னர் உத்தரவிட்டிருக்கிறார் அல்லவா?" "ஆமாம்." "மதியம் மன்னர் களைப்பாறியதும் நீ போகலாம். நான் காலையிலேயே அரண்மனை போய் விடுவேன். ஆகவே நீ மன்னரைச் சந்திக்கும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதை இப்பொழுதே சொல்லி விடுகிறேன்" என்று அவர் சொல்லத் துவங்கியதும் மர்ம இளைஞன் அவர் அருகே வந்து ஊன்றிக் கவனிக்கலானான். "நீ யார் எந்த ஊர், என்ன பேர் என்று கேட்கப்படும்போது சோழ நாட்டுக்கு எனது ஊழியத்தை நல்க வந்துள்ள நான் அந்நியன், என்றாலும் நான் கொஞ்ச காலம் வரை என்னைப் பற்றிய உண்மைகளை மர்மமாகவே வைத்துக் கொள்ள விரும்புகிறேன் என்று பணிவாக ஆனால் உறுதியாக அறிவித்து விட்டு அவர் உத்திரவைத் தெரிந்து கொள். வேறு விவரங்களை வற்புறுத்தினால் தருணம் வரும் வரை வெளியிடுவதற்கில்லை என்றும் சொல்லி விடு. பிறகு நான் பார்த்துக் கொள்ளுகிறேன்" என்று அவர் அறிவுறுத்தியதும் இளைஞன் ஆழ்ந்த யோசனையுடன் தலையை அசைத்தான். அவன் கண்கள் சற்றே கலங்குவதையும் ஏதோ சொல்ல விரும்பினாலும் அது வாய் விட்டு வரத் தயங்குவதையும் கவனித்த அவர் மேற்கொண்டு பேசாமல் முன்னே செல்ல இளைஞன் தயக்கத்துடன் தொடர்ந்தான். சற்று முன்னே அவனிடமிருந்த குறும்புப் பேச்சும் அலட்சியப் புன்னகையும் விலகி மவுனமும் வேதனையும் அடைந்தவனாய் அவன் மாறி விட்டதைக் கவனித்தாலும், காரணத்தை அறிந்தவர் என்ற முறையிலோ என்னவோ அவர் மேலே எதுவும் கேட்கவில்லை. அவனும் வாய் திறக்கவில்லை! கடல்நாடுடையாரின் திருமாளிகை, கடற்கரையை ஒட்டியிருந்த முல்லைவனத்தில் அமைந்திருந்ததால், கடல் அலைகளின் இரைச்சல் ஓரளவு கேட்கத்தான் செய்தது என்றாலும் குளிர்ந்த காற்றும் அலாதியான அமைதியும் அந்தப் பகுதியில் நிலவியது. மாளிகைக்குள் முதலில் சென்ற பரிவாரத்தினரைத் தொடர்ந்த வாணகோவரையர் பின்னால் வந்து கொண்டிருக்கும் இளைஞனைச் சட்டென்று கைகளைப் பற்றியவராய் ஒரு முறை அவன் முகத்தை உன்னிப்பாய்ப் பார்த்து விட்டு, "பாலனே நான் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவேன் என்பது உறுதி. இதனால் மன்னரே எனது சேவையை இழக்கத் துணிந்தாலும் நான் மறுப்பதற்கில்லை. இது சத்தியம்!" என்றதும் அவன் கண்கள் நன்றியுணர்ச்சியின் காரணமாகவோ என்னவோ கலங்கி இரண்டொரு கண்ணீர்த் துளிகளும் சிதற இடமளித்து விட்டன. வாணகோவரையர் திடுக்கிட்டுப் போய் "கலங்காதே பாலனே கலங்காதே! நீ ஒரு மாவீரனின் மகன், மகா தியாகம் செய்த உத்தமியின் செல்வன். நான் மட்டும் அல்ல, இந்த உண்மையை அறிந்தவர்கள் மன்னரும் அவர் தம் அன்னையாரும் இன்னும் மூவரும் இன்றுமிருக்கிறார்கள். கால மாறுதல் சற்றே மறக்கச் செய்திருக்கிறது. மாறுதல் ஒழுங்கானால் உண்மை புலப்பட்டு விடும். "சோழ நாட்டுக்கு இனிதான் நல்லகாலம். ஏன் இப்படிப் பார்க்கிறாய்? சாவகன் வந்திருக்கும் போது நான் இப்படிச் சொல்லுகிறேனே யென்றா? கவலையில்லை. அவனைப் பிறகு கவனித்துக் கொள்ளலாம். ஆனால் உள் நாட்டில் தான் இன்று பெரிய பெரிய பகைகள் மூண்டிருக்கின்றன. கலிங்கமும், கங்கமும் துயில் கொள்ள முடியாமல் தவிக்கின்றன. பொறாமையால், தோல்வியால், காலம் கருதிக் காத்திருக்கின்றன. எனவே இந்தச் சமயத்தில் தான் மன்னருக்கு எல்லோருடைய சேவையும் தேவை. சோழநாட்டு வீரம் பகையைக் கண்டு அஞ்சியதில்லை. சூதினைச் சூதால் வெல்லத் தெரியுமோ தெரியாதோ, வீரத்தால் நிச்சயம் வென்று விடும். நீயும் வந்திருக்கிறாய். உன்னுடைய உண்மையான வீரத்தைக் காட்ட வாய்ப்பும் வழிவகையும் ஏற்பட்டிருக்கிறது. பிறகு உண்மையும் வெளிப்படும் போது நமக்கு இந்தக் கலக்கமோ வேதனையோ இருக்கவே இருக்காது. எனவே குழப்பத்தை உதறிவிட்டு உறுதியுடன் நிமிர்ந்து பார். நாட்டுச் சேவைக்கு நாம் எல்லோரும் அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் போது சோழ நாட்டுக்கு எப்படி நல்ல காலம் நிலைக்காமலிருக்க முடியும்?" வாணகோவரையர் உணர்ச்சி வேகத்துடன், இந்தக் கேள்வியைப் போட்டதும் தன்னையுமறியாமல் இளைஞன், "உறுதி தளராது உண்மை இலட்சியம் நிறைவேறும் வரை!" என்று வாய்விட்டே கூறிவிட்டதும் அவர் ஆனந்தப் பரவசத்துடன் அவனை இறுக அணைத்துக் கொண்டார். அவனுக்கோ இந்த அதீத அன்புப் பிணைப்பில் கட்டுண்டு பேசவுமியலாத உணர்ச்சிக் கொந்தளிப்பு காரணமாக விம்மினானேயன்றி வாய்திறக்கவில்லை. மர்ம இளைஞனின் சோகம் பற்றிய அந்தரங்கம் வாணகோவரையர் ஒருவருக்குத்தான் தெரியும். அதனால் தான் அவர் தான் சோழ நாட்டின் மாபெரும் அரசியல் தலைவன் என்பதையும், தான் அரசனுக்கு அடுத்தபடியாக விளங்கும் மதிப்பினைப் பெற்றவன் என்பதையும் ஒதுக்கிவிட்டு, விதியின் கணைக்கு இலக்காகித் தன்னைப் பற்றிய உண்மைகளையெல்லாம் அப்போதைக்கு உலகறியக் கூறுவதற்கு யின்றித் தவித்துத் தத்தளிப்பதையும், தானும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை இளைஞன் மர்மங்களை வெளியிடுவதற்கில்லையே என்ற நினைவும் எழுந்து அவரையும் குழப்பியதால் பாலனின் வேதனைக்குப் பரிகாரம் கூறவியலாது வருந்தினார். "கடல் நாடுடையாரே, எனது மர்மங்கள் என்னுடனேயே இருந்துவிட்டுப் போகட்டும். சோழ அரசர் என்னைப் பற்றி அறிந்தால் என்ன? அறியாமற் போனால் என்ன? அதனால் முந்தி நிகழ்ந்ததனைத்தையும் மறந்து விட்டவர்க்கு புதிய நினைவோ அல்லது சிந்தனையோ எழப் போகிறதா? எழுந்தாலும் நானும், அவருக்கு ஒரு புதிய பிரச்னைதான். மாவீரரும் அரசியல் சதுரருமான அவர் என்னை ஒரு பொருட்டாகக் கருதுவது ஒரு புறமிருக்கட்டும். இதென்ன புதிய வேதனை என்று உதறித் தேய்த்து விட்டாலும் விடலாம். அவரால் எதுவுமே முடியும். உண்மை இதுவாயிருக்க நான் ஒதுங்கியிருக்கலாம். இந்த நாட்டுக்கு வராமலிருந்திருக்கலாம். வந்த பிறகும் வெளிப்படாதிருக்கலாம். எனினும் நான் விடுத்து வந்த ஆணையினின்று விலக இயலாத ஒரு நிலையினால் தானே நான் ஈண்டு வர நேர்ந்திருக்கிறது!" என்று விம்மி வெடித்து வந்த சொற்களில் அளவிலாத் துயரக் குமுறல் கொந்தளித்தது கண்டு வாணகோவரையருக்கும் வரம்பிலாத் துக்கத்தை யேற்படுத்திவிட்டது. "பாலனே! இனியும் நிகழ்ந்தது குறித்து வருந்தலாகாது. ஆனால் இங்கு வந்த பிறகும் வெளிப்படாதிருப்பது என்பது நினைத்துக் கூடப் பார்க்காத ஒரு நோக்கம். நரலோகவீரனும் காடவமல்லனும் இந்நாட்டிற்குள் வரும் எந்த அன்னியரையும் சந்தேக கண்களுடன் தான் பார்க்கின்றனர். அவர்களைப் பற்றித் துருவி, துருவி ஆராய்வதில் ஈடு இணையற்ற திறனைக் காட்டுகிறார்கள். இப்போது கூட அவர்கள் உன்னைப் பற்றி இம்மாதிரி தான் ஒரு முடிவுக்கு வந்திருப்பர். தற்போதைய நிலையில் காடவர்கோன் ஒருவர் தான் எதையும் சீர்தூக்கிச் சிந்திக்கும் நிதான சக்தி படைத்தவர். ஏனெனில் கலிங்கமும் கங்கமும் குலோத்துங்கன் ஆட்சி துவங்கிய நாளிலிருந்து பொறாமையால், எப்படியும் சோழ அரசனை வீழ்த்தி விட வேண்டுமென்ற நோக்கத்தால் ஏவலர்களைப் பல வேடங்களில் ஊடுருவச் செய்துள்ளார்கள். அமைச்சர் பிரும்மாதிராயர் அரண்மனைச் சிப்பந்திகளில் கூட இவர்கள் நுழைந்திருப்பதாகக் கருதுகிறார். நரலோகவீரரோ வேளைக்காரப் படையில் கூட ஒரு சிலர் ஊடுருவியிருக்கலாம் என்று அஞ்சுகிறார்! காடவமல்லனோ இதையும் ஒருபடி தாண்டி விட்டான். எனவே எதற்கும் தயங்காமல் நீ நாளை அரண்மனை சென்று மன்னரைச் சந்தித்து விட வேண்டியது தான். உறுதியாகப் பேசு. இப்போதைக்கு என்ன சொல்ல வேண்டுமோ அதை மட்டுமே சொல்லி ஏனையவற்றைச் சொல்லும் தருணம் வரும் போது சொல்லுவேன் என்று அறிவித்து விடு" என்றார். "என்னைப் பகைவரின் கையாள் என்று கருதினால், கருதி நடவடிக்கை எடுத்தால்..." "அதைப் பிறகு கவனிக்கலாம். அப்போது நான் தலையிட வேண்டி வரும்." "உங்கள் தலையீட்டை மற்றவர்கள் எதிர்த்தால்..." "நான் சோழ நாட்டில் உயிருடன் இருக்கும் வரை என்னை எதிர்க்க எவராலும் இயலாது!" "மன்னரே துணிந்து விட்டால்..." "அவராலும் முடியாது இளைஞனே..." என்று அவர் அழுத்தமாகக் கூறியதும் பாலன் திடுக்கிட்டுப் பார்த்தான் அவரை! இந்த மனிதர் தம்மை எப்படி இவ்வளவு சக்தி வாய்ந்தவராக இறுமாப்புடன் கருதுகிறார் என்ற அதிகாரம் அவன் முகத்தில் படர்ந்து விட்டதைக் கண்ட பிறகும் வாணகோவரையர் கலக்கமின்றி, "இளைஞனே குலோத்துங்கன் இன்றுள்ள நிலைக்கு, இந்த நாட்டில் மூவர் காரணம். கடல் கடந்த நாடுகளில் அவர் பெற்றுள்ள நிலைக்கு ஒரே ஆள் தான் காரணம். அது யார் என்று நான் விளக்க வேண்டியதில்லை!" என்று அவர் வெளிப்படையாகவே விளக்கியதும் இளைஞனால் சில விநாடிகள் பேசவே இயலவில்லை! பாலன் அவருடைய வார்த்தைகளைத் தற்பெருமையின் உளறல்கள் என்று கொண்டுவிடவில்லை. கடல் கடந்த நாடுகளில் கடல்நாடுடையாரின் சக்தி எத்தகைய நிலையை எய்தியிருக்கிறது என்பதை அவனை விட அதிகமாக அறிந்தவரில்லை. கடாரம் முதல் காம்பூஜம், சாவகம் முதல் ஈழம் வரை மன்னர் குலோத்துங்கரைக் காட்டிலும் இவர் பெயரும் சக்தியும் பரவி, இவர் இல்லையேல், இவ்வளவு பெரிய கடலரசை குலோத்துங்கர் காண்பதேது, அல்லது ஆள்வதெப்படி? என்று அறுதியிட்டுக் கூறப்படுவதையும் அவன் அறியாதவனில்லை. ஆனால் அதே சக்தி, வலிமை, உரிமை சோழ நாட்டிலும் இருக்கிறது அவருக்கு என்பதை அவன் எப்படி நம்புவது? அல்லது மன்னரே தன்னை எதிர்க்கத் துணியார் என்று எவர் தான் கூறமுடியும்? அப்படிக் கூறினாலும் ஏற்க முடியுமா? ஆனால் இவர் சொல்லுகிறாரே சற்றும் தயக்கமின்றி! பாலன் குழம்பித் திகைத்தான். இவ்வளவு இறுமாப்புடன் பேசாதீர்கள் என்று கூறவும் வழியில்லை. ஏனெனில் அவர் சர்வ சாதாரணமாகத்தான் பேசினார். அசட்டுத்தனமாக நீங்கள் பேசலாமா என்று கேட்கவும் வழியில்லை. ஏனெனில் அவர் அறிவு கடல் போன்றது என்று எண்ணும் போது அசட்டுத் தனத்துக்கிடமேது? சோழ சாம்ராஜ்யாதிபதிக்குக் காடவர்கோன் யோசனை கூறலாம். பிரம்மாதிராயர் விஷயத்தை விளக்கலாம். பழுவேட்டரையர் தமது பழுத்த அனுபவ ஆலோசனையைக் கூறலாம். இவற்றில் தவறில்லை. ஆனால் என்னை மன்னர் எதிர்க்கத் துணியார் என்று கூறும் இவர் எதைக் கூறினாலும் மன்னர் மறுக்க மாட்டார் என்று கொண்டுள்ள உறுதி இதையெல்லாம் விஞ்சியதாகவல்லவா இருக்கிறது? "இளைஞனே இனியும் நாம் பேசிப் பொழுது போக்குவதற்கில்லை. என்னுடைய உதவியாளர்கள் வருவார்கள். அவர்களுடன் ஆலோசிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருப்பதால் நீ போய் உணவருந்தி துயிலச் செல்லலாம். நான் வருகிறேன்" என்று சட்டென்று அறிவித்து அப்பால் அவர் நகர்ந்து விட்டார். இளைஞனோ வேகமாகப் போகும் அவரை பார்த்தபடியே சிறிது நேரம் அசையாது நின்றான். பிறகு நிதானமாகப் புறப்பட்டவன் பக்கத்தில் ஏதோ நிழலொன்றசைய சட்டென்று தம் கையிலிருந்த கைவாளில் கைவைத்தான். "அஞ்ச வேண்டாம். நான் எதிரியில்லை. கடல்நாடுடையாரின் மெய்க்காவலன். அவர் தம் சேவையில் முப்பதாண்டுகளாக இருப்பவன்" என்று அறிவித்துக் கொண்டவனை மங்கலான அந்த நிலவொளியில் உற்றுப் பார்த்த இளைஞன் "மன்னிக்க வேண்டும் நண்பரே! நான் ஏதோ யோசனையில் சற்று நிதானமிழந்து விட்டேன்!" என்றான். "தவறில்லை இளைஞனே. ஆனால் நீங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது நானும் அங்கிருந்தேன். என்னை அவர் கவனித்தார். நீதான் கவனிக்கவில்லை. வியப்பினாலும் வேதனையாலும் குழம்பியிருந்த உனக்கு என் மாதிரி மெய்க்காவலர்கள் ஒவ்வொரு மூலையிலும் இருப்பார்கள் என்பதை மறந்துவிட்டாய். இனியும் மறந்துவிடாமல் உஷாராக இருப்பது உனக்குத்தான் உதவியாக இருக்கும். தவிர கடல்நாடுடையாரின் பேச்சினால் நீ திகைக்கவே வேண்டாம். அவருக்குள்ள சக்தி, செல்வாக்கு எத்தகையது என்பதை நான் அறிவேன். நீயும் அறியப் போகிறாய். அதற்குப் பிறகு தான் நீ எந்த ஒரு முடிவுக்கும் வர வேண்டும்" என்றான் அக் காவலன். இளைஞன் சற்றே தெளிவடைந்து, "உண்மைதான். நான் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்து விடக்கூடாது. என்ன இருந்தாலும் நான் சிறுவன் தானே! ஆகவே நான் அவசரப்பட்டு வருகிறேன். அனுபவமில்லாததால் ஏற்படும் ஒரு குறை இது!" என்றான் அடக்கமாக. ஆனால் காவலன் வாய்விட்டுச் சிரித்துவிட்டு, "இளைஞனே, உனக்கு அனுபவம் இருக்கிறதா இல்லையா என்ற விவரங்கள் நீ சொல்லித் தெரியும் வரை நாங்கள் பொறுப்பதில்லையென்பது உனக்குத் தெரியுமா?" என்று கேட்டுவிட்டு முன்னே நடந்ததும் மீண்டும் திகைத்த பாலன் மேலும் குழப்பத்தினாலும் தொடர்ந்து நடந்தான் ஆவலுடன்! |