பொன்னகர்ச் செல்வி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

4. ஊடுருவி வந்த உலுத்தர் கூட்டம்

     பூம்புகார் தோன்றிய சில காலத்திலேயே, அங்கு மாட மாளிகைகளும் மாபெரும் மாளிகைகளும் மன்னர் தம் கோட்டமும் அமைந்து விட்டன. பிற்காலச் சோழர்கள் தான் உறையூரையோ, கங்கை கொண்ட சோழ புரத்தையோ தலைநகராகக் கொண்டார்களேயன்றி அடிநாளில் ஏன், விஜயாலய சோழன் காலத்திலிருந்து புகார்தான் தலைநகராயிருந்து வந்தது. பிற்காலச் சோழர்கள் வேறு பகுதியில் தலைநகரேற்றாலும் புகார்த் துறைப்பொருள் கோட்டையை மறந்தவரில்லை. ஆண்டுக்கு ஒரு முறையோ இரு முறையோ இங்கு வந்து தங்கிச் சென்றனர். தவிரவும் கடல் கடந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் புகாரைத்தான் முக்கியமாகக் கருதி வந்து சென்றனரேயன்றி இதர கடற்துறை நகரங்களை அவ்வளவாக நாடியதில்லை. பெரிய பெரிய வணிகர்களைக் கொண்ட புகார் நகரத்தில் ஏனைய நாட்டு அரசப் பிரதிநிதிகளும் தங்கியிருந்ததால் ஏனைய நகரங்களின் முக்கியத்துவமும் - அரசர் தலைநகர் ஒன்றைத் தவிர - குறைந்து விட்டது.

     இத்தகைய ஓரளவு அரசாங்க முக்கியத்துவம் பெற்ற புகார், குலோத்துங்கனின் ஆட்சித் துவக்கத்திலிருந்து எல்லாவகையிலும் மீண்டும் முக்கியத்துவம் பெறச் சில மாற்றங்களைச் செய்தான். அவற்றில் ஒன்று, அயல்நாட்டு தூதுவர்கள் நிரந்தரமாகத் தங்கவும், அவரவர்களுடைய அலுவல்கள், சமயப் பணிகள், கலை போன்ற இதரவகைத் துறைகளைச் சிறப்பித்துக் கொள்ள வாய்ப்பும் அளித்திருந்ததுதான். பெரும்பாலும் கங்கைகொண்ட சோழபுரத்தில் தங்கியிருப்பினும் தனது அன்னையாரையோ, குமாரர்களில் எவரையேனும் ஒருவரையோ புகாரில் தங்கியிருப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தான். ஆயினும் கடல் நாடுடைய வாணகோவரையர் மட்டும் புகாரைத் தவிர வேறு எந்த நகரத்துக்கும் அதாவது உள்நாட்டிலிருக்கும் போது மட்டும் தான் செல்வதில்லை. இது அவர்தம் முடிவு மட்டுமில்லை, அரசனுடைய ஏற்பாடும்தான். அயல்நாடுகளுக்கு அவர் சென்ற காலம் தவிர இதர நாட்களில் அவரைப் புகார் நகரின் கடலையடுத்த முல்லைவன மாளிகையில்தான் காணமுடியும்!

     அன்றும் அப்படித்தான் சாவகநாட்டுப் பிரதிநிதி ஸ்ரீ சாமத்தனும் ராஜகுரு தம்மபிரதமரும் சந்திக்கச் சென்றார்கள். எந்த அயல்நாட்டுப் பிரதிநிதி வந்தாலும் மன்னரைக் கண்ட மறுதினமோ அல்லது உடனேயோ கடல்நாடுடையாரைக் காணுவது மரபாகும். இம்மரபுக்கொப்ப மறுநாள் சிவிகையில் ராஜகுருவும், குதிரையில் ராஜசாமந்தனும் வந்து சேர்ந்தனர். முறைப்படி அமைக்கப்பெற்ற ராஜ மரியாதைகளுடன் அளித்த வரவேற்பின் முதலாவதாக கடல்நாடுடையான் தலைமை உதவியாளரான மங்கலமாடினார் ராஜப் பிரதிநிதியை வரவேற்க, கடல்நாடுடையாரே ராஜகுருவை வரவேற்று அழைத்துச் சென்றார், திருமாளிகையுள்! பல்லாண்டுகளாக நண்பர்களாகவும் பரஸ்பர மதிப்புள்ளவர்களாகவும் வாழ்ந்து வரும், ராஜகுருவும் கடல்நாடுடையாரும் மனம் விட்டுப் பேசி மகிழ்ந்தனர். பிறகு முறைப்படி அறிமுகம் என்ற நிலை வந்த போது "ராஜ ஸ்ரீசாமந்தன் எங்கள் சைலேந்திர மாமன்னனின் சொந்தப் பிரதிநிதி மட்டுமல்ல, உறவினருங்கூட" என்றும் "இவர் தான் சோழசாம்ராஜ்யாதிபதியின் கடல் கடந்த நாடுகளுக்கான தனிப்பெருந்தலைவர் கடல்நாடுடைய வாணகோவரையர்!" என்று ராஜகுருவே அறிமுகத்தைச் செய்த போது, வாணகோவரையர் இளம் புன்னகையுடன் "சைலேந்திரப் பிரதிநிதியே வருக. நீரும் உமது பரிவாரத்தினரும் இங்கு மிக்க மதிப்பாகவும், முறையாகவும் கவனிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். கூடியவரை குறை எதுவுமிருக்காது. இருப்பின் உடன் தெரிவிக்கப்படின் நேர் செய்யப்படும். நூற்றி எண்பத்தேழு நாள் கடற்பயணத்துக்குப் பிறகு ஈண்டு வந்திருக்கிறீர்கள். எவ்வளவோ இடையூறுகளிருந்திருக்கும் இல்லையா?" என்று மிக நயமாகப் பேசத் துவங்கியவரிடம் ராஜசாமந்தன் உடன் பதில் கூறவில்லை. நூற்றியெண்பத்தேழு நாட்கள் பயண மறிந்தவர் இன்னும் எதையெல்லாம் அறிந்திருப்பார் என்னும் யோசனையுடன் மெதுவாக "கடற்பயணம் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. எனினும் பழக்கம் காரணமாக அதிகப் பொருட்படுத்தவில்லை" என்றார்.

     "ஆமாம். கடலோடிப் பழக்கமுள்ளவர்கள் இடையூறுகளைப் புதிய அனுபவங்களைத் தரும் நிகழ்ச்சிகளாகக் கருத வேண்டும் என்று எங்கள் பேரரசர் கூறுவதுண்டு. குறிப்பாக மலையூரில் உங்களைச் சந்திக்க வந்திருந்த கலிங்கத்தினர் இருவரால் ஏற்பட்ட குழப்பம் தங்களுக்கு அதிகமாவதற்குள் அவர்கள் எனது ஆள்களிடம் பிடிபட்டு விட்டார்கள் என்ற நல்ல செய்தியை உங்களிடம் நேரில் சொல்ல மகிழ்ச்சியாக இருக்கிறது!" என்று வாணகோவரையர் சர்வ சாதாரணமாகச் சொல்லி முடிப்பதற்குள் பதறியெழுந்த சாமந்தன், "என்ன பிடிபட்டு விட்டார்களா?" என்று சற்றே இரைந்தே கேட்டு விட்டான். வாணகோவரையர் உடன் பதில் கூறவில்லை. ஆனால் அவர் பார்த்த பார்வை அவனைச் சற்றே தட்டுபடச் செய்தது. வரம்பு மீறிக் கேட்டு விட்டோம் என்று நினைக்கவும் செய்தது. என்றாலும் நிலை மீறி விட்டதே!

     "ஏன் இந்தப் பதற்றம்? அவர்களால் உங்களுக்கு எத்தகைய சோதனை சாமந்தரே! அதில் நீர் சிக்குவதால் இரு வகையிலும் உங்களுக்குத் தொல்லைகள் தானே? நல்லகாலம் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள்."

     வாணகோவரையர் ஏதோ ஒரு பள்ளியில் படிக்கும் பையனிடம் பேசுவதைப் போல தன்னிடம் பேசிக் கேலி செய்கிறார் என்று தோன்றியதோ என்னவோ சாமந்தனுக்கு, சட்டென்று சுதாரித்துக் கொண்டு, "பதற்றமொன்றுமில்லை கடலரையரே! வியப்பு! அவ்வளவுதான். அவர்களை நானே கைது செய்து கொண்டு வந்திருப்பேன். ராஜகுரு தான் தடுத்துவிட்டார்!" என்றான் வார்த்தைகளில் அடக்கத்தை இணைத்து. ராஜகுருவும் இப்போது ஒரு வார்த்தை பேசத்தானே வேண்டும்?

     "அந்தச் சகோதரர்கள் எங்களைச் சந்திக்க வந்ததை விரும்பவில்லை. ஆனால் கைது செய்வது என்பதை நான் எதிர்த்த காரணம் வழியில் வம்பு எதற்கு என்பதுதான்..."

     "மலையிலுள்ள சோழ நாட்டின் தூதுவரிடமிருந்து அனுமதியும் பெற்றாக வேண்டுமே என்பதற்காகவும்தான். அதனால் தவறில்லை. ராஜகுருவே உங்களுடன் அவர்கள் ஆறு நாட்கள் தான் தங்கியிருந்தார்கள். பிறகு திரும்பும் போது பிடிபட்டு விட்டார்கள்" என்று மீண்டும் சாதாரணத் தொணியிலேயே வாணகோவரையர் குறுக்கிட்டுச் சொன்னதும் ராஜகுருவின் முகமே மாறிவிட்டது. ராஜ ஸ்ரீசாமந்தன் வியப்பினாலும் வேதனையாலும் அயர்ந்து போய் உட்கார்ந்து விட்டான். எனினும் தனது இரு மெய் யுதவியாளர்களை மட்டும் ஒரு முறை ஏறெடுத்துப் பார்த்தான். வாணகோவரையாரும் தான் ஒரு முறை அவர்களை நிமிர்ந்து பார்த்தார். மெய்யுதவிகளில் ஒருவன் சட்டென்று தனது முகத்தைச் சற்றே திருப்பிக் கொள்ளவும், கலகலவென்று வாய்விட்டுச் சிரித்துக் கொண்டே, கடல்நாடுடையார், "நீயும் உனது தம்பியும் செய்தது அப்படியொன்றும் பெரிய தவறல்ல சிசுநாதா! கலிங்கத்தாரிடம் கேட்ட முக்கிய இலக்குகள் பற்றிய படங்களை நீங்கள் பெற்றிருந்தால் அல்லவா, அது தவறு என்று முடிவாகியிருக்கும்!" என்று மறுபடியும் வெகு அலட்சியமாகவே அவர் சொன்னதும் அத்தனை பேரும் திக்பிரமை பிடித்தவர்களாய்த் திடுக்கிட்டு விழித்தனர். ராஜகுருவோ தர்ம சங்கடமான நிலைமை உண்டாயிருப்பதை ஊகித்து எப்படியாவது இந்த சந்திப்பை ஒரு முடிவுக்குக் கொண்டு வர விரும்பியவராய் "நாடுடையாரே! பிறகு ஒரு முறை நாம் சாவகாசமாகப் பேசிக் கொள்ள வாய்ப்பளித்தால் நலம் என்று கருதுகிறேன். இன்னும் நாங்கள் பயண காலத்துச் சிரமத்திலிருந்து விடுபடவில்லை!" என்று விநயமாகச் சொன்னதை வரவேற்பது போல் சிரக்கம்பம் செய்த வாணகோவரையர், "ஆமாம். வந்த சிரமத்தை நீக்கிக் கொண்ட பிறகே நாம் பேசலாம். நாளை மறுநாள் நான் ராஜதூதுவரைச் சந்திக்க உங்கள் திருமாளிகைக்கே வருகிறேன். உங்களுடைய சூடாமஹிவர்ம விஹாரத்துக்கு வந்து அரசியல் பேசி அவ்விடத்தின் அமைதியையும் பெருமையையும் களங்கப்படுத்த விரும்பவில்லை. சரி இப்போதைக்கு இந்தச் சந்திப்பை முடித்துக் கொள்ளுவோம். சாமந்தரே உங்கள் வரவுக்கு நன்றி. சிசுநாகா உனக்கும் உன்னுடைய தம்பி பவநாகனுக்கும் கூட எமது நன்றியுண்டு. இருபதாண்டுகளுக்குப் பிறகு நீங்களிருவரும் இந்த நாடு திரும்பியிருக்கிறவர்கள் என்பதால் பழைய உறவைப் புதுப்பித்துக் கொள்ளவும் வாய்ப்பளித்திருக்கிறீர்கள்" என்று கூறி இளநகை பூத்தவராய் எழுந்ததும் சந்திப்பு முடிந்தது என்பதைப் புரிந்து கொண்ட மங்கலமாறன் அவர்களை வழியனுப்புவதற்கென்று முன் வந்தான். ராஜதூதனாக வந்துள்ளவனிடம் உபசார வார்த்தை ஒன்று கூறவேண்டாமா? வாணகோவரையருக்கு இது தெரியாதா?

     "நீங்கள் இங்கு சைலேந்திரப் பிரதிநிதியாக வந்தது பற்றி மற்றவர்களை விட அதிக மகிழ்ச்சி கொள்ளுபவன் நான் தான். சென்ற ஆண்டில்தான் நான் சம்பாவுக்கு வந்திருந்த போது உங்கள் சகோதரரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இப்போது உங்களுடன் சேர்ந்தே பணியாற்ற வாய்ப்பேற்பட்டுள்ளது. இது என் பாக்கியம். தவிர உங்களுடைய உன்னத நோக்கத்தையோ இங்குப் பணியாற்ற நீர் வந்துள்ள சந்தர்ப்பத்தையோ சிரத்தையுடன் எதிர்பார்த்திருந்தவன் நான் தான். எனவே நாளை மறுதினம் மீண்டும் சந்தித்து நீண்ட நேரம் அளவளாவ விருப்பம். இப்பொழுது தற்காலிகமாக விடை கொடுத்தனுப்புகிறேன். ராஜகுருவே என்னுடைய வந்தனத்தை ஏற்றுக் கொண்டு ஆசி புரியுங்கள்!" என்று கடல் நாடுடையவர் சற்றே கைதூக்கிக் கூப்பி வணங்க "அவசியம்... நலமெலாம் நிறைந்து பலகாலம் வாழ்க!" என்று ஆசி கூறி வெளிவந்தார். அவர் பின்னே தளர்ந்த நடையுடன் திரும்பினான் ராஜ ஸ்ரீசாமந்தன்!

     சாவகத்துப் பெரிய தூதரும், ராஜகுருவும் அங்கிருந்து அகன்ற பிறகும் கூட வாணகோவரையர் தமது இருக்கையில் அமர்ந்திருந்தார். நெடுநேரம் ஆழ்ந்த யோசனையுடன் மவுனமாக வீற்றிருந்த அவருடைய அந்த நிலையைக் கலைக்க யாரும் விரும்பவில்லை. எனினும் மங்கல மாறனார் மட்டும் சற்று ஒதுங்கியிருந்த இருக்கையில் ஏதோ சுவடிகளைப் புரட்டிய வண்ணம் ஏதும் பேசாது இருந்தார். சட்டென்று தனது மவுனத்தைக் கலைத்த கோவரையர், மாறனாரைப் பார்த்து, “நாம் நினைத்தது ஒவ்வொன்றும் செயல்பட்டுவிடுகிறது அல்லவா? இதன் முடிவும் அப்படித்தானே யிருக்க முடியும்?” என்று கேட்டார். மாறனார் ஒரு நொடித் தயக்கத்துடன் யோசித்துவிட்டு, “முடிவும் நாம் எதிர்பார்ப்பது போல் இருக்குமானால் இப்போதே தடுத்துவிடுவது நலமளிக்குமே?” என்று திரும்பக் கேட்டார்.

     “இல்லை, மாறனாரே இல்லை! அரசர் இது பற்றி வேறு மாதிரி கருதுகிறார். இவனுக்குச் சுமார் நாற்பது வயது தானிருக்கும். யுத்த சேவையிலேயே பெரும் பகுதியைக் கழித்தவன். ராஜ தந்திரம் தேர்ந்தவனாயிருக்க முடியாது என்றும் நினைக்கிறார். காடவர்கோனோ இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் தானே? என்றும் அலட்சியம் காட்டுகிறார். எனவே நாம் மட்டும் அறிந்த அல்லது ஊகிக்கும் சில முடிவுகளை அவர்கள் சட்டென்று ஏற்றுவிட மாட்டார்கள்.”

     “அப்படியானால் இப்படியே விட்டு விட்டால் விபரீதங்கள் விளையுமே!”

     “விளைவதைத் தடுக்க இப்போது வாய்ப்பில்லை. ஆனால் நம் ஊகங்கள் சரியானவையா என்று உறுதி கொள்ளச் சில ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அவற்றில் ஒன்று நம்மிடம் அடைக்கலமாக வந்துள்ள ‘பாலனை’ பயன்படுத்திக் கொள்ளுவதுதான்.”

     “அவன் நூற்றுக்கு நூறு நம்மைப் பொருத்த வரையில் நம்புதற்குரியவன் தான். எனினும் மன்னரும் மற்றையோரும் நம் ஏற்பாட்டுக்கு இணங்க வேண்டுமே!”

     “இணங்கச் செய்வதுதான் நம்முன்னுள்ள முதல் வேலையாகும்!”

     “சற்று நேரத்துக்கு முன்னர்தான் மன்னரைக் காண காடவர்கோன், பிரும்மாதிராயர், நரலோகவீரன், பெரும்பிடுகு ஆகியவர்கள் சென்றிருக்கிறார்கள். ராஜமல்லனும், பழுவேட்டரையரும் நாம் வரவேண்டும் என்று காத்திருக்கிறார்களாம்.”

     “சரி, நாமும் புறப்படலாம். இப்பொழுதே நடுநிசியாகி விட்டது”, என்று அவர் எழுந்ததும் குதிரைகள் தயாராக இருப்பதாக ஒரு வீரன் வந்தறிவித்தான். இருவரும் புரவிகளிலேறி அரண்மனைக் கேகினர்.

     ஆசார வாசலிலேயே இருந்தார் பழுவேட்டரையர். கோவரையர் பரிமீதிருந்து இறங்கியதும் “உங்களை எதிர் பார்த்துத்தான் நாமும் இங்கேயே இருந்தோம்!” என்று அவர் அறிவித்ததும், “மிக்க நன்றி! எனினும் மகிழ்ச்சி என்று கூற இது நேரம் இல்லை” என்றார் கோவரையர். சட்டென்று முகமாறுதலடைந்த பழுவேட்டரையர் “அப்படியா? அப்படியானால் நம் ஊகங்கள் அத்தனையும் உண்மையாகிவிடுமா?” என்று கேட்டார் வேகத்துடன்.

     “அத்தனையும் என்பது ஒரு புறமிருக்க ஓரளவு உண்மையாகிவிட்டனவே என்பதுதான் வேதனையாயிருக்கிறது”, என்று பதிலளித்துவிட்டு ராஜமல்லனின் தோள்மீது ஒரு கைபோட்டுக் கொண்டே பழுவேட்டரையருடன் பேசியபடி அரண்மனையுள் நுழைந்தவரைத் தொடர்ந்து சென்றார் மங்கல மாறனார்.

     சோழ நாட்டின் பெருமைக்கும், சோழ வமிசத்தினரின் ஆட்சிக்கும் உறுதுணையாக மட்டுமின்றி ஆதாரமாகவும் இருந்த குடும்பம் பழுவேட்டரையர்களுடையது. கோவரையர், முத்தரையர், காடவர்கோன் போன்ற அரச வமிசத் துணைவர்களான பழுவேட்டரையர்கள் ‘போர்’ என்னும் போது வேங்கைகளைப் போல் எழுந்து பாய்ந்து இடிமுழக்கம் போல கர்ஜித்து யுத்தத்தில் புகுந்து அநாயாசமாக விளையாடி... ஆமாம்! யுத்தமே அவர்களுக்கு ஒரு விளையாட்டு மாதிரிதான் - எதிரிகளைச் சாடி முடிவில் வெற்றியை, - ஆமாம் வெற்றியையன்றி வேறெதையுமே அறியாதவர்கள் அவர்கள் - கொண்டு வந்து சோழ நாட்டுக்குப் பெருமையும், சோழமன்னர் தம் ஆட்சிக்குச் சிறப்பும் கொண்டு வரும் பரம்பரையினர் ஆவர் என்று வரலாற்று விளக்கங்கள் கூறியுள்ளன. அது மட்டுமல்ல, போரில் எத்தகைய திறமையும் வலிமையும் காட்டுவரோ அவ்வளவுக்கு ராஜதந்திரத்திலும் காட்டும் சிறப்பும் இவர்களுடையது என்னும் போது ஏன் இவர்களுக்கு மட்டும் சோழ நாட்டில் தனிப்பெருமை என்பது விளங்கிவிடும். இருவகையிலும் திறமையும் சக்தியும் பெற்றிருப்பது என்பது அசாதாரணமான ஒரு வாய்ப்பாகும். பெரிய பழுவேட்டரையர் எண்பதாண்டுகளைக் கடந்தவர், மூன்று மாமன்னர்களைச் சோழ ஆட்சியில் கண்ட பெருமையும், பழகிய உரிமையும் படைத்தவர். இப்போது சோழ நாட்டுக்கு ஏதோ ஒரு பெருஞ்சோதனை வந்திருக்கிறது என்பதனால் தான் அவரே வெளி வந்திருக்கிறார். தவிர, அவர் தம் இளவலும், வீர ராஜேந்திரனின் அருமை நண்பரும், ஆனால் அவர் தம் திடீர் மறைவால் மனக்கலக்கமடைந்து விட்டவரும், குலோத்துங்க சோழன் அரியணை ஏறும் உரிமையை நாளது வரை ஏற்காதவருமான இளைய பழுவேட்டரையர், தமது மூத்தவரை விடப் பத்து பிராயங் குறைந்தவர். என்றும் அரசியலில் பற்றுக்காட்டாது திருபுவனத்தில் கோயிலைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார், பாரம்பரிய ஈடுபாடான அரசியலை விட்டுவிட்டு!

     பெரிய பழுவேட்டரையர் தான் குலோத்துங்க சோழன் அரியணை ஏற முதலாவதாக ஆதரவளித்தார். பிறகு தான் முத்தரையர் மழவரையரும், கோவரையரும் இணங்கினர். கொடும்பாளூரார் கூட முதலில் இணங்கவில்லை. ஆனால், அவரையும் குலோத்துங்கன் எப்படியோ தன் வசம் திருப்பிவிட்டான். சோழ நாட்டின் உயிர்நாடிகளான இவ்வைந்து பெருங்குடும்பத்தினரும் குலோத்துங்கனுக்கு ஆதரவாக நின்ற பிறகுதான் கருணாகரத் தொண்டைமானும், மணவிற்கோட்டத்து நரலோக வீரனும் தங்களது பரம்பரைத் தொழிலில் நிற்க, செயலாற்ற முன் வந்தனர். காடவர் கோன் இவர்களுக்கு முன்னரே குலோத்துங்கரை சோழ சாம்ராஜ்யாதிபதியாக்கத் தீர்மானித்திருந்தாலும் கோவரையர் மன்னரின் போர்த்திறன், அரசியல் திறன், நிருவாகத்திறன் ஆகியனைத்தையும் அறிந்த பிறகே இலேசாக ஆதரவளித்தார். ஆனால், கடற்போரிலும், கடல் கடந்த நாடுகளிலும் குலோத்துங்கர் எட்டு ஆண்டுகள் தொடர்ந்து புரிந்த சாதனைகள் கோவரையருக்கு அவரிடம் மிகுந்த ஈடுபாடும் நம்பிக்கையும் ஏற்படுத்தி முடிவில் ‘இவரும் அவருடையவராக’ மாறிவிடும்படிச் செய்திருந்தது.

     சோழ அரியணைக்கு நேர் வாரிசுரிமை தமக்கில்லை என்னும் குறையைத் தமது ஆட்சி தொடங்கிய சில காலத்திலேயே போக்கி விடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டார் குலோத்துங்கர். காலஞ்சென்ற வீரராஜேந்திரருக்கு திருமகனில்லை என்பதனால் அடுத்தபடி யார்? என்ற பிரச்னை பெரிதாகி, சோழநாட்டுக் குறுநில மன்னர்களிடையேயும், ஆதரவாளர்கிடையேயும் மிகப் பெரிதான குமுறல் எழுந்துவிட்டன. கங்கை கொண்ட சோழ மன்னரான முதலாம் ராசேந்திரர் மகள் அம்மங்காதேவியை கீழைச் சாளுக்கிய மன்னரான இராசராசனுக்கு மணம் செய்து கொடுத்திருந்தாரல்லவா? அவர்கள் புதல்வனே குலோத்துங்கன். சோழ அரியணைக்கு உரிமை, இவன் தாய் வழி வந்ததேயன்றி, தந்தை வாரிசு முறையிலல்ல. எனவே உள் நாட்டிலே முக்கியமானவர்கள் இவர் உரிமையை எதிர்த்தாலும், நேர் வாரிசு யாரும் இல்லையே என்ற குறையும் இருந்தது. ஆயினும் சோழ நாட்டுக்கு மட்டுமின்றிச் சாளுக்கிய நாட்டுக்கும் ஆளும் உரிமை படைத்த மேலை சாளுக்கியரை எதிர்த்து வீரராசேந்திரர் நடத்திய போரில் தமது பதினாறாவது வயதிலேயே கலந்துகொண்டு அருந்திறன் காட்டியதை அவர் மறவாமல் தனது துணைவர்களிடம் ‘இவனே ஏற்றவன் நம் சோழ நாட்டை ஆளுவதற்கு’ என்று கூறிவிட்டே மரணத்தைத் தழுவியதாக ஒரு முடிவும் அவருக்கு ஆதரவாக இருந்தது!

     பெரிய பழுவேட்டரையர், மன்னர் வீரராசேந்திரன் உயிர் பிரியுந்தறுவாயில் அவர் அருகில் இருந்தார். பிரும்மாதி ராயரும் இருந்தார். மலையமானும், காலிங்கராயரும் இருந்தனர். காடவர்கோனோ மன்னர் நெடுநாளாக இந்த நோக்கத்தை கொண்டிருந்ததாகவும் அறிவித்தார். எனவே எதிர்ப்புக்கள் சக்தியற்றுப் போயின. எனினும் சிறிய பழுவேட்டரையரும் மலையமானும் முன்னே சாளுக்கியருடன் நடத்திய போர் நிகழ்ச்சிகளை மறக்கத் தயாராக இல்லை. தவிர, கீழைச் சாளுக்கியர், மேலைச் சாளுக்கியர் எல்லாம் தாயாதிகளேயன்றி வேற்றார் அல்லர். எனவே ‘அத்தனையும் பிடாரிகள்தான்’ என்றும் கருதினர். ஆனால், குலோத்துங்கன் பதவியேற்றதும் சோழ சாம்ராஜ்ய நிர்வாகம் சம்பந்தமாக செய்த ஒவ்வொரு ஏற்பாடும் இவர்கள் மனம் ஒத்ததாகவே இருந்தன. கோவரையரை கடல் நாடுடையவராக நியமித்த உடனேயே அவர் முதல் வெற்றி கண்டுவிட்டார். கருணாகரனைக் கலிங்க எல்லையின் மகாசேனாதிபதியாக நியமித்ததுடன், நரலோக வீரனை மெய்க்காப்பாளர் தம் பெரும் பொறுப்பில் வைத்ததும் சோழ நாட்டுப் பெருங்குடும்பங்கள் கலக்கம் நீங்கித் தெளிவாகப் பார்த்தன!

     பெரிய பழுவேட்டரையரையும், சிறிய பழுவேட்டரையரையும் அவர்கள் தம் இல்லத்துக்கே வந்து குலோத்துங்கன் ஒத்துழைப்பை நாடியதுடன், காடவர் கோன் திருமகளைத் தம் அரசியாக ஏற்க விரும்பியிருப்பதையும் அறிவித்ததும், அத்தனைப் பெருங்குடி மக்களும் மிக்க மகிழ்ச்சி கொண்டு அவருக்கு முழு மூச்சாக ஆதரவளித்தனர். சிறிய பழுவேட்டரையர் நேரிடை ஆதரவளிக்காவிட்டாலும், அரசியலிலிருந்து ஒதுங்கி ஆலயப் பணிகளில் ஈடுபட்டுவிட்டார். அதாவது ஒருவகையில் இது மறைமுக ஆதரவு என்றும் கருதலாமல்லவா?

     ஆகவே தான் அவர் மட்டும் அன்றைய ஆலோசனைக் குழுவில் கலந்து கொள்ளவில்லை. பெரிய பழுவேட்டரையரும் கோவரையரும் அத்தாணி மண்டபத்துள் நுழைந்ததும் அத்தனை பேரும், அமைச்சர் உள்படத்தான் எழுந்து வரவேற்றனர். ஆனால், அரசரே ஒரு நொடி தயங்கிய பிறகு கோவரையரையும் பழுவேட்டரையரையும் கைலாகு கொடுத்து வரவேற்றது கண்டு வியப்புக்களை அத்தனை பேர் முகத்திலும் பரவி விட்டது.

     இது திறமையான, சக்தி வாய்ந்த ராஜதந்திரம் என்று நினைத்தார் பிரம்மாதிராயர்!

     அவரவர் இருக்கைகளில் அமர்ந்ததும் மன்னர் தமது இருக்கையில் அமர்ந்து ஒரு முறை சுற்றுமுற்றும் பார்த்தார். அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனரானாலும், ஒரு முக்கியமான விஷயத்தை விவரத்தை அவர் அப்போது கூறப்போகிறாரோ? என்று தான் காத்திருந்தார்கள்! சோழ ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இதைப் போலப் பல கூட்டங்களை அவர் நடத்தியிருப்பினும் இன்றைய கூட்டம் மிக முக்கியமானது. உள்நாட்டிலும் கடல் கடந்த நாடுகளிலும் சோழ நாட்டுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் மீண்டும் பகைவர்கள் சதிச் செயல்களை மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதுடன் அவர்களில் ஒரு பகுதியினர் உள்நாட்டில் ஊடுருவவும் செய்திருக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிவர். அதுவும் கடந்த நாலைந்து தினங்களுக்குள் இத்தகைய ஊடுருவிகள் தொகை ஏராளமாகிவிட்டது. சிங்களத்திலிருந்தும் சாவகத்திலிருந்தும் ஊடுருவியுள்ளவர்களில் பலர் பிடிபட்டிருந்தாலும், மலையூர், கடானம் ஆகிய கடல் கடந்த நாடுகளிலிருந்து வந்தவர்கள் பலரை இன்னும் பிடிக்க முடியவில்லை. எனவே அவர்களுக்கு இங்கேயே யாரோ ஆதரவளித்து வருகின்றனர் என்பதும் முடிவான ஒரு விஷயம். இவர்கள் யார்? எப்படி இவர்களைக் கண்டுபிடிப்பது என்பதும் பெரிய பிரச்னை.

     பல நாடுகளிலிருந்து இப்போது வந்துள்ள சாவகதூதுவர் மந்திரி பல பிரதிநிதிகள் தமது நூற்றுக்கணக்கான பரிவாரங்களுடன் வந்திருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரையும் ஒரே சமயத்தில் கண்காணிப்பதென்பது அவ்வளவு எளிதான விஷயமல்லவாதலால் முற்றிலும் புதியவகையில் இவற்றையெல்லாம் சமாளிக்க வேண்டும். அது எப்படி என்பதற்கும் இப்போது முடிவு கண்டாக வேண்டும் என்பதாக அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் கருதினார்கள்.