உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
பொன்னகர்ச் செல்வி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 5. சிங்கத்தின் குகையில் சிறுநரிகள் தலையீடு! ராஜகேசரி என்பது சோழர்குல மன்னர்களுக்கு பாரம்பரியமாக உள்ள விருதுதான் என்றாலும் குலோத்துங்கனுக்கு இது மிகவும் பொருத்தமானது என்பது அன்றைக்குப் பலர் செய்த முடிவு. எடுப்பான தோற்றம் கம்பீரப் பார்வை, இளநகை, முகத்துக்குப் பொருத்தமான மீசை எல்லாம் இந்த விருதுக்கு ஏற்றவனாக அவரைச் செய்து விட்டதாக எண்ணக்கூடாது. ராஜாதி ராஜன் என்பதற்காகவும் இப்படிக் கொடுத்ததாகக் கருதிவிடக் கூடாது. உண்மையிலேயே அவர் மன்னர்களுக்குள் ஒரு சிங்கம்தான் என்பது அவர் சோழ அரசினை மேற்கொண்ட சில நாட்களுக்குள்ளேயே முடிவான விஷயமாகும். உள்நாட்டில் அவர் கையாண்ட ராஜதந்திர முறைகள் மூலம் தம்மை தலைமையாகக் கொண்ட ஆட்சியை உறுதியாக்கிக் கொண்டவர். சோழநாட்டார் தமது போர்த்திறமையைக் காணவும் கண்ட பிறகே ஒரு முடிவுக்கு வரவும் காத்திருக்கிறார்கள் என்ற உண்மை நிலையை அவர் உணர்ந்து கொள்ள அதிகக் காலமாகவில்லை. எனவே யுத்தமுனை வெற்றிக்கு வழிவகுப்பது ராஜ தந்திர முனையில் வெற்றி காண்பதைப் பொறுத்ததே என்பதறிந்திருந்தார் அவர் இந்த நிலையில் தான் சோழநாட்டிற் கெதிராக மேல சாளுக்கியர் மன்னர் விக்கிரமாதித்தனும், தேவகிரி யாதவராயனும், ஹோய்சளரெங்கனும் திரிபுவனமல்ல பாண்டியனும் கடம்ப நாட்டு ஜெயகேசரியும் தமது பகைமைப் போக்கினைத் துரிதப்படுத்துவதில் ஒன்றுபட்டுவிட்ட மாதிரி ஆங்காங்கு போர்க்கோலம் கொள்ளத் துவங்கினர். குலோத்துங்கனும் ஆலசியம் இன்றிச் சோழநாட்டுப் படைகளுக்குத் தலைமை வகித்து அத்தனை எதிரிகளையும் கடந்த எட்டு ஆண்டுகளில் வெவ்வேறிடத்தில் வெவ்வேறு சமயத்தில் வென்று வாகை சூடிய பிறகு அவனுடைய போர்த் திறமைக்கும் நாட்டு மக்கள் தலை வணங்கினர். என்றும் நாட்டுத் தலைமைக்கு இன்றியமையாதவர்கள் படைத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் மட்டுமல்ல, மக்களிடையே மதிப்புப் பெற்றவர்கள் எவரோ அவர்களும்தான் மிகமிக அவசியம் என்பதைக் குலோத்துங்கன் அறிந்திருந்ததால் தம்முடன் ஒத்துழைக்கத் தயங்கியவர் சிலராலும் அவரையும் இரக்கமாகக் கொண்டு வருவதில் கையாண்ட திறமையும் மிகவும் போற்றத்தக்கதாயிருந்தது. ராஜகேசரி இத்தகைய வெற்றியைப் பெற்றதால் கண்டபலன் சிறப்பானது. ஆக்கரீதியாகப் பயன் கிடைத்தது. அன்று ஆலோசனை மண்டபத்தில் குழுமியிருந்தவர்களில் சிலர் சமீபகாலம் வரை அவருடன் ஒத்துழைக்கத் தயங்கியவர்கள் ஆவர். ஆனால் நாட்டுக்கு மீண்டும் சோதனை ஏற்படலாம் என்ற ஒரு நிலை உண்டானதும் அவர்கள் தங்கள் தயக்கத்தையெல்லாம் உதறிவிட்டு வந்திருந்தனர் என்பதே இதற்குச் சான்றாகும். பழுவேட்டரையரையும் கோவரையரையும் மன்னரே எழுந்து கைலாகு கொடுத்து வரவேற்றதும் அவையே பிரம்மிப்பில் ஆழ்ந்தது என்று கூறினோமல்லவா? பேரமைச்சர் மதுராந்தக பிரும்மாதிராஜாவும் வியந்தார் என்றோம். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாதவர் போல மன்னர் சட்டென்று தமது உரையைத் துவங்கி விட்டார் மற்றவர்களும் வியக்க அல்லது திகைக்க இடமளிக்காமல்! “சோழநாட்டுப் பெருங்குடி மக்கட் தலைவர்களே!” என்று அவர் அனைவரையும் மதிப்புடன் விளித்துத் தனது கம்பீரக் குரலில் பின் வருமாறு உரைத்தார். “நம்முடைய நாட்டுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து இடையூறுகள் வந்துள்ளன என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. கலிங்க பீமன் கச்சையை வரிந்து கட்டிக் கொண்டு நம்முடன் பொருதத் தயாராகிவிட்டான் என்று எல்லை நிலக்காவற் படைத் தலைவர் தெரிவித்துள்ளார். விக்கிரமாதித்தர் நாளது வரை கண்ட தோல்விகள் போதாது, புதியன வேண்டும் என்று பதறுகிறார்? கங்கனோ ஆடுகள் முட்டிக் கொண்டால் சிந்தும் இரத்தத்தை ருசி பார்க்கக் காத்திருக்கிறான்! இவர்களுக்கு உதவித் தன் தலைக்குத் தீயை வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் ஹோய்சலனும், சுசதம்பனும்! இவர்களைப் பற்றி நமக்குக் கவலை தேவையில்லை. ஒரு யுத்தம் செய்தால் தான் அதில் அவர்கள் முற்றிலும் தோல்வி கண்டு அதன் மூலம் நிலை குலைந்து நலிவார்கள் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. எனவே எந்த நேரத்திலும் கருணாகரன் தலைமையிலுள்ள நம் படைகளுடன் நானும் சேர்ந்து விட நேரும். தவிர கொல்லித் தலைவன் நான் பெரும் படைகளை எப்போது அழைத்துச் செல்லப் போகிறேன் என்று காத்திருக்கிற மாதிரி தெரிகிறது. எனவே நான் கொல்லித் தலைவனைக் கவனிக்க நரலோக வீரரை அதிசீக்கிரத்திலேயே அனுப்புவதாக இருக்கிறேன். இவை தவிர இன்னொரு முக்கியமான பிரச்னை - கடல் கடந்தது சிங்களத்துடையது - இருக்கிறது. இதனை நான் சீர்தூக்கி ஆராய்ந்து பார்த்ததில் தெளிந்தறிந்தது பற்றி ஒரு முக்கியமான முடிவைச் செய்திருக்கிறேன். தற்போதைய சூழ்நிலை பற்றி கவனிப்போம். சாவகத்திலிருந்து அந்நாட்டு மன்னரின் பிரதிநிதியாக வந்துள்ள ராஜ வித்யாதர ஸ்ரீசாமந்தரைப் பற்றி இதுவரை தெரிந்துள்ளவை மிகவும் ரசமானவை. இனிமேல் தெரிய இருப்பன எத்தகையதோ! ஆனால், இதுபற்றி நாம் கவலைப்படுவதற்கில்லை. தேவையான அனைத்தையும் கடல் நாடுடையார் கவனித்துக் கொள்ளுவர். எனவே மீண்டும் விஷயத்துக்கு வருவோம். இன்றிரவே சில முக்கியமான முடிவுகளைச் செய்ய விரும்புகிறேன். நான் கலிங்க எல்லைக்குப் புறப்படுவது அதிதுரிதமாகவே இருக்கலாமாதலால் உங்களில் எழுவரைக் கொண்ட ஒரு பொதுத் தலைமைப் பெருங்குழிநாட்டைக் குறிப்பிட்ட காலம் வரை நிர்வகிக்க வேண்டுமெனக் கருதுகிறேன். பேரமைச்சர் தவிர நமது பழுவேட்டரையர், காடவர்கோன் கோவரையர், முத்தரையர், மழவரையர், பஞ்சநதிவாணர் ஆகிய அறுவரும் உடன் கூட்டத்தாரின் இணக்கத்துடன், இந்தப் பொறுப்பையேற்றுக் கொள்ளுவதில் அவர்களுக்கும் சரி, மற்றவர்களுக்கும் ஆட்சேபம் இருக்காது என்று நம்புகிறேன்”, என்று மன்னர் கூறி முடித்ததும் அவையினர் அமைதி கலையாமல் ஆழ்ந்த யோசனையுடனிருந்தனர். பழுவேட்டரையர் சற்றே நிமிர்ந்து உட்கார்ந்தார். அவர் ஏதோ கூற விரும்புகிறார் என்பது இதன் பொருள்! எல்லோரும் அவரைக் கூர்ந்து நோக்கினர்! “மன்னருக்குத் தெரியாத விவரம் எதுவும் இல்லை. ஆனால் நமக்குத் தெரியாத விவரம் இரண்டொன்று உண்டு. அவற்றில் ஒன்று இப்போது நீங்கள் குறிப்பிட்ட சிங்களம் பற்றீயது. உங்கள் முடிவைக் கூறவில்லை. நீங்கள் அங்கு படைகளை அனுப்பப் போவதுண்டா? இல்லையா வென்று அறிவிக்கவில்லையே?” பழுவேட்டரையர் இப்படிக் கேட்டதும் வியப்படைந்தவர்கள் மன்னரின் பதிலை மிக்க ஆவலுடன் எதிர்பார்த்தனர். “ஆமாம். அங்கு நம் படைகள் போகப்போவதில்லை. எனது அன்னையார் தம் நல்லெண்ணத் தூதுவராக செல்கிறார். சிங்களத்தை இனியும் நான் நம் ஆதிக்கத்தில் வைத்திருப்பதை விரும்பவில்லை. காரணம் உள் நாட்டைக் கட்டிக் காக்கப் படைகளுக்கு ஆகும் செலவையும் மிஞ்சிவிடுகிறது அதைக் கட்டி ஆதிக்கம் நடத்த. இது பொக்கிஷத்துக்கும் நஷ்டம். மக்களுக்கும் நஷ்டம். சிங்கள மன்னர் நம்முடன் ஒத்து வாழ விரும்புகிறார். ஆனால் சுதந்திரமாக நம் எதிரிகள் எவருக்கும் சிங்களத்தில் இடந்தரேன் என்று உறுதியுமளித்திருக்கிறார். இவற்றை உறுதி செய்யச் சோழ வமிசத்துடன் மீண்டும் மிக நெருங்கிய உறவு கொள்ளவும் முன் வந்திருக்கிறார். நானும் ஏற்க முடிவு செய்துள்ளேன். இப்படி நான் செய்துள்ள முடிவு சொந்தப் பிரச்னை ஒன்றில் தீர்வு காணுவதற்கல்ல. நாட்டின் பெரிய அரசியல் பிரச்னை ஒன்று தீர்வதற்கேயாகும். என்னுடைய இந்த முடிவு திடீரென்று செய்யப்பட்டதாக உங்களில் எவரும் எண்ணிவிடக் கூடாது. கடல்நாடுடைய வாணகோவரையர், பிரும்மாதிராயர், நான் ஆகிய மூவரும் கலந்து செய்த முடிவு தான் இது. இன்று நான் இவ்விடத்தில் பகிரங்கமாக இம்முடிவை அறிவிக்க முன்வந்ததற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று உங்கள் அனைவரின் ஆதரவு இதற்குத் தேவை. மற்றொன்று எனது முடிவு ஒப்புதலில்லை என்று கருதுபவர்கள் தம் காரணத்தை விளக்குவதற்கும் இன்று சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மன்னர் மேலும் பேசுவதற்குச் சற்றே காட்டிய தயக்கத்தைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்ட காடவர்கோன் “சிங்களப் பிரச்னை ஒரு சிக்கலான, நீண்ட காலமாகத் தீர்வுக்குள்ளாகாத தொன்றாகும். நான் இது போன்ற சிக்கலான பிரச்னைகளில் நிதானத்தைக் காட்ட விரும்புபவன் என்பதை இங்குள்ளோர் அறிவர். எனினும் கடல்நாடுடையாரும், பிரும்மாதிராயரும் உரிய யோசனையைச் சரியாகவே கூறியிருப்பர் என்ற நம்பிக்கை எனக்குண்டு. தவிர தாங்களும் இதுபற்றி நல்லதொரு முடிவுக்கே வந்திருக்கலாம் என்றே நம்புகிறேன். ஆயினும் இந்த விவகாரத்தில் இன்னும் சற்றுத் தெளிவு தேவை. நீங்கள் செய்திருக்கும் முடிவு சோழ நாட்டுக்குகந்தது தானா என்பதறிந்து அதற்கேற்ப எங்கள் கருத்தை உருவாக்கிக் கொள்ள விரும்புகிறோம். இப்பொழுது உடனடியாக விளக்கம் தேவையில்லை, இன்னொரு தரம் பார்க்கலாம் என்றாலும் சரி, இப்பொழுதே நடுநிசியாகி விட்டது” என்று சொல்லிவிட்டு சுற்று முற்றும் ஒரு முறை பார்த்துக் கொண்டே தமது இருக்கையில் அமர்ந்தார். குலோத்துங்க மன்னன் பழுவேட்டரையரை மட்டும் அல்ல, காடவர்கோனையும் நன்கு அறிந்தவன். மனதிற்பட்டதைத் தயக்கமின்றிப் பேசுபவர். கூடிச் செய்த முடிவில் உறுதியாக நிற்பவர் என்று அறிந்த அவன் வானகோவரையரை நோக்கியபோது அவர் எழுந்து நின்றார். சட்டென்று பிரும்மாதிராயரும் அவருடன் எழுந்து நின்றதும் அவையினர் திகைத்தனர். பிரும்மாதிராயர் தாம் பேசுவதை, அல்லது செய்வதை எவரும் விவாதிப்பதை விரும்பாதவர். பழுவேட்டரையர் போன்று கர்ஜிக்கமாட்டார். அவசியம் எதுவுமின்றி வார்த்தைகள் அவர் வாயை விட்டுக் கிளம்பவே செய்யாது. ஆள் அழுத்தம் என்று இதனால் தான் அவரைச் சிலர் குறிப்பிட்டனர் போலும். ஆனால் சந்தேகம் அவருடன் பிறந்த ஒரு நோய் என்று தான் அன்று மன்னர் மக்கள் வரை யாவரும் கருதினர். ஆனால் அவர் ‘சந்தேகம்’ வெறும் வதந்தியாகவோ வீணாகவோ போய்விடுவதில்லை. பல ‘உண்மையாகவும்’ ஆகிவிடுமாதலால் அவர் தம் சந்தேகங்களைச் சட்டென்று யாரும் எதிர்ப்பதில்லை! மன்னர் கூட தயங்குவார் என்றால் வேறு எப்படிக் கூற முடியும்? கடல்நாடுடையார் எழுந்து நின்றதும் பிரும்மாதிராயரும் எழுந்ததால் சரி, ஏதோ சந்தேகப்புகை எழப்போகிறது என்று தான் அவையினர் கருதினார். அந்தப் புகையும் எழுந்து பரவிவிட்டது பிரும்மாதிராயர் தம் வாய் திறந்ததும்! “சிங்களம் பற்றிய முடிவு பற்றிய விளக்கம் இப்பொழுதே பகிரங்கப் படுத்தப் படுவது நாட்டு நன்மைக்குகந்ததல்ல. இங்கு வந்து கலந்து கொண்டிருப்பவர்கள் நம் அழைப்புக் கிணங்க வந்தவர்கள் தான். எனினும் தற்போதைய சூழ்நிலை இருக்கிறதே, இது மிகவும் சந்தேகத்துக்குரியதாகும். நான் இப்படிக் கூறுவதால் இங்குள்ளவர்களில் எவரோ ஒருவரையோ அல்லது சிலரையோ குறிப்பிடுவதாகக் கொள்ளக் கூடாது” என்று அளந்து பேசிவிட்டு எவரையும் நோக்காமல் அமர்ந்துவிட்டார்! அவையில் நிலவிய அமைதி இத்தருணத்தில் மிகவும் பயங்கரமாயிருந்தது. கடல்நாடுடையார் கூறுவதாக இருந்த ஏதோ விளக்கவிருந்ததைத் தடுக்கவே அமைச்சர் இப்படிப் பேசியதாகக் கருதினர் அனைவரும். மன்னரோ வாய் திறவாது மீண்டும் கோவரையரையே குறிப்பாகப் பார்த்தார். அவரோ இருக்கையில் அமராமல் நின்றபடியே ஆழ்ந்து யோசித்தார் போலும்! இவ்விடத்தில் ஒரு சிறு விளக்கம் தேவைப்படுகிறது. கடல்நாடுடைய வாணவகோவரையர், இவர் தம் உடன் பிறந்தாரும் சோழ நாட்டின் உள் நாட்டு நிர்வாகத் தலைவருமான பஞ்சநதிவாணர் ஆகிய இருவருக்கும் அமைச்சர் பிரும்மாதிராயருக்கும் பல பிரச்னைகளில் உடன்பாடில்லாத மாறுபாடுகள் நெடுங்காலமாக இருந்து வருகின்றன என்பது நாடு முழுமையும் அறிந்த விவரம். எனினும் நாட்டு தன்மையும் மன்னரின் அரவணைத்துக் கொள்ளக் கூடிய போக்கும் இவர்களுடைய கருத்து வேறுபாடுகளை வலுவிழக்கச் செய்து விடும். தவிர காடவர்கோன் இவர்கள் அனைவருடைய மதிப்புக்கும் நம்பிக்கைக்கும் உகந்தவராக இருந்ததால் அவர் ஒரு வகையில் இவர்களிடையே உள்ளக் குமுறல் வெளிப்பட்டுப் பெரிய அளவில் குழப்பமேற்படாதவாறு செய்திருந்தார். பஞ்சநதிவாணருக்கோ தலைநகரிலேயே தங்கியிருக்க நேரமில்லாது நாடு முழுமையிலும் சுற்றிக் கண்காணிக்கும் வேலையும், கடல் நாடுடையாருக்கோ கடல் கடந்த நாடுகளுக்குப் பயணப்பட வேண்டியிருந்ததாலும் பிரும்மாதிராயருக்கும் இவர்களுக்குமிடையே நாளது வரை நேரிடையாக மோதல் ஏற்பட வழியேற்படாமலிருந்தது! எனவே மன்னர், சிங்களம் சம்பந்தமாகச் செய்த ஒரு முடிவு கோவரையருக்கும், பிரும்மாதிராயருக்கும் உடன்பாடானது என்ற செய்தி அத்தனை பேருக்கும் வியப்பூட்டுவதான ஒரு செய்தி ஆகும். இவர்கள் இருவரும் நேர் எதிரிடையான மன நிலையுள்ளவர்களான இவர்களைத் ‘தமது முடிவு ஒன்றினை’ ஒரே மனநிலையில் மன்னர் ஒப்புக் கொள்ளச் செய்திருக்கிறார் என்றால் அது அவர்தம் சாவகத்தையும் தனித்திறமையையும் தான் காட்டுகிறது என்று கருதினர். குலோத்துங்கனின் இந்தத் திறமைதான் அவரைச் சோழப் பேரரசின் தலை சிறந்த தலைவனாக்கியிருக்கிறது என்பதையும் இது காட்டுகிறதல்லவா? மன்னர்தம் முன்னுரையும் விளக்கமும், இடையே பெருந்தலைகள் எழுப்பிய சந்தேகங்களும் ஒரு எல்லைக்குட்பட்டதாகவே இருந்தது. ஏனெனில் குலோத்துங்கன் சட்டென்று கோபம் அடைவர் என்ற ஒரு பேச்சும், துரித காலத்தில் அவர் தாமாகவே எதையும் முடிவு செய்பவர் என்பதையும் அனைவரும் அறிந்திருந்ததால் மற்றவர்கள் ஒரு எல்லை வகுத்துக் கொண்டனர் தமது விவாத விருப்பத்துக்கு! ஆயினும் பிரும்மாதிராயர் மீண்டும் எழுந்து நின்ற போது மன்னர் சிரக்கம்பம் செய்து பேசும்படி அனுமதித்தார். “நாட்டு நலனை முன்னிட்டு மன்னர் செய்யும் எந்த ஒரு முடிவையும் யாரும் ஏற்காமலிருக்க முடியாது. ஆயினும் மீண்டும் கலிங்கப் போர் வரும் என்றும் அதில் கலந்து கொள்ளத் தாம் செல்ல வேண்டும் என்பதற்காக ஒரு புதிய நிர்வாகக் குழுவை இங்கு மன்னர் அமைக்கத் தீர்மானித்திருப்பது பற்றி கருத்து வேறூபாடிருப்பதற்கு இடமிருக்கலாம். மீண்டும் மீண்டும் கலிங்கம் நம்மைப் பகைத் தெழுகிறது. கங்கன் அதற்குத் துணை நிற்கிறார். எனவே இந்தத் தடவை முற்றிலும் அவர்கள் தோல்வி காண வேண்டும். அது இறுதியானதாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு உகந்த முறையில் புதியதோர் திட்டத்தைக் கையாண்டால் தான் முடியும் என்பது எனது கருத்து.” “அந்தப் புதியதோர் திட்டத்தைக் கையாளுவது பற்றி இங்கு இப்போது விவாதிக்க வாய்ப்புண்டா?” இந்தக் கேள்வி வந்த திசையை நோக்கின எல்லோருடைய கண்களும்! மன்னர் விழிகளும் அப்பகுதியில் திரும்பின! ஏனெனில் இந்தக் கேள்வியைக் கேட்டவர் வேறு யாரும் இல்லை, மன்னர் தம் மூத்தகுமாரரும் வேங்கி நாட்டின் ஆட்சிப் பீடத்தில் சோழ அரசப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருபவருமான ராஜராஜ மும்முடிச் சோழர்தான்! சோழநாட்டின் அடுத்த வாரிசான இவர் கேள்வி கேட்டதில் வியப்பில்லை. ஆனால் இந்தத் தருணத்தில் இவர் இங்கு எப்படி வந்தார் என்பதுதான் மன்னர் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் அதிசயமாயிருந்தது. சட்டென்று அவையினர் பலர் எழுந்து அவருக்கு முறைப்படி வந்தனை செலுத்திய அதே சமயத்தில் அவரும் மன்னரை வணங்கு நின்றார். வியப்பிருப்பினும், மகிழ்ச்சியுள்ள மன்னர் அவரையும் பிரும்மாதிராயரையும் மாறி மாறிப் பார்த்தார். அமைச்சரே தன்னிடமே கேள்வி போடக் கூடிய உரிமை துணிச்சல், தகுதி மூன்றும் மன்னரைத் தவிர ஒரு குறிப்பிட்ட சிலருக்குத்தான் உண்டு என்று கருதிக் கொண்டவர். அத்தகையவர்களில் மும்முடிச் சோழர் ஒருவரா என்பது ஒருபுறம் இருக்க அவருக்கும் அமைச்சருக்கும் எப்போதுமே ஒரு முகப்பட்ட அரசியல் கருத்துக்கள் இல்லை என்ற ஒரு ‘உண்மை’ அந்த அவையினருக்கு மட்டுமில்லை, மக்கள் பலருக்கும் தெரியும். எனினும் அவர்களுடைய ‘வேறுபாடு’ பெருத்த அளவில் மோதலாக மாறாதிருக்க மன்னரும் சில தந்திரங்களைக் கையாண்டார். அவற்றில் ஒன்றுதான் அவர் வேங்கிக்கு ராஜப் பிரதிநிதியாக மும்முடிச் சோழரை அனுப்பியது! இந்தத் தீர்ப்பு பற்றியும் மக்கள் நன்கு அறிவர். ராஜராஜ மும்முடிச் சோழர் முன்கோபி, பதட்டக்காரர் என்று பேரெடுத்தவர்தான். எதையும் சட்டென்று வெளிப்படையாகப் பேசி விடுவார். ஒளிவு மறைவு எதுவும் பிடிக்காது. பிரும்மாதிராயர் நிதானித்துச் சொல்லலாமா கூடாதா என்று தயங்கும் போதெல்லாம் இவர் ஒரு அழுத்தக்காரர் என்று முடிவு செய்து விடுவதும் மும்முடிச்சோழர் வழக்கம். ஒரு ராஜ தந்திரிக்குத் தேவையான இந்த சாதாரண நிதானம் கூட அவரிடமில்லையே, இவர் எப்படி நாளைக்கு மன்னனாகி இந்த சாம்ராஜ்யத்தைக் கட்டியாளப் போகிறார் என்பது அமைச்சர் தம் கருத்து! கேள்வி வந்த வேகத்தில் பதில் இல்லை! மும்முடிச் சோழன் பொறுமை இழந்தான். மன்னரையும் மந்திரியாரையும் ஏறிட்டுப் பார்த்த அவர் “நான் கேட்ட கேள்விக்கு உடன் பதில் வராது என்று புரிந்து கொண்டுதான் கேட்டேன். இந்த நள்ளிரவில் நாம் என்னவோ மர்மமாகத் தான் இங்கு அந்தரங்கமாகக் கூடியிருக்கிறோம் என்பதாக யாராவது நினைத்திருந்தால் அது தவறாகும்!” என்று மீண்டும் படபடப்புடன் சொன்னதும் அவையினர் அயர்ந்து விட்டனர். மேலும் பொறுமையாக இருக்கவியலாது, பிரும்மாதிராயரோ துள்ளியெழுந்தார். “இளவரசர் திடீர் என்று வந்திருக்கிறார். எனவே திடீரென்று எதை எதையோ பேசுகிறார். நான் உறுதியாகக் கூறுகிறேன். இங்கு கூடியிருப்பவரைத் தவிர வேறு யாருக்கும் எதுவும் தெரியாது” என்று முழங்கினார். “இதோ இவர்கள் யார் என்று தெரிகிறதா?” என்று இளவரசர் கைநீட்டிக் காட்டிய திசையில் அனைவர் கண்களும் திரும்ப அங்கே இருவர் நின்றிருந்தனர்! பிரும்மாதிராயர் துள்ளியெழுந்தார்! அனைவரும் ஆ! என்று கர்ஜித்து எழுந்தனர். அங்கு நின்றவர்கள் வேறு யாரும் அல்ல. தெரும்பரனும் பீதாம்பரனும் தான்! சாவகத் தூதுவனின் அந்தரங்க ஆலோசகர்கள். நரலோக வீரர் ஆத்திரத்துடன் எழுந்து பாய்ந்து வந்தார் முன்னே. ஆனால் மன்னர் “நில்லுங்கள்” என்று உத்திரவிட்டதும் அவர் அப்படியே நின்றார் ஒன்றும் நகராமல் பின்னும் திரும்பாமல்! என்னில் அவர் மனநிலையில் ஏற்பட்டு விட்ட கொந்தளிப்பு! அவையினர் தம் வியப்பும் வேகமாய் எழுந்த ஆத்திரமும் மன்னர் தம் உத்திரவைக் கேட்டதும் மீறி எழும் உணர்ச்சிப் போக்கு யாவும் சட்டென்று ஒரு தேக்க நிலையில் நின்று விட்டது. மும்முடிச் சோழர் மன்னரை ஏரெடுத்துப் பார்த்தார். மன்னரே ‘அம்பரச்சோதார்களை’யே பார்த்தார். மன்னனின் அடுத்த உத்திரவே அவர்களைச் சிரச்சேதம் செய்வதாகத்தான் இருக்கும் என்று அவையினர் முடிவு செய்தார்கள். எனினும் மன்னர் ஒரு முறை கடல்நாடுடையாரைப் பார்த்து விட்டு மும்முடிச் சோழனை நோக்கி “நீ திடீரென்று வேங்கியிலிருந்து இங்கு வரக்காரணம் ஒன்று நிச்சயமாக இருக்க வேண்டுமே!” என்று சர்வசாதாரணத் தொனியில் கேட்டுக் கொண்டே தமது இருக்கையில் அவர்ந்ததும் அவை திகைத்து விட்டது! மும்முடியும் மிரட்சி கலந்த கோபத்துடன் அவரை ஏறிட்டு நோக்கி “முதலில் கவனிக்க வேண்டியதைக் கவனித்து விட்டுப் பிறகு நான் வந்ததைக் கவனிக்கலாமே!” என்று பதிலளித்தார். மன்னர் முகம் சற்றே மாறுதல் அடைந்தது என்றாலும் நிதானமாகவே “முதலில் கவனிக்க வேண்டியது எது என்று இளவரசர் சொல்லி எனக்குத் தெரிய வேண்டுமா?” என்று திரும்பக் கேட்டதும் அவையின் கவனம் கவலையாக மாறிவிட்டது! தந்தையும் மகனும் வார்த்தைச் சிலம்பம் ஆட இதுவா நேரம் என்று கவலை கொண்டார்கள் போலும்! எனினும் மன்னர் மென்னகை ஒன்றை வருவித்துக் கொண்டவராய் “குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே எனினும் அவர்கள் வந்த காரணம் பற்றியும் நான் சற்று தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?” “ஒற்றர் வருவது எதற்காக என்று ஆராயத் தேவையா?” “ஒற்றனாக அன்றி உதவிக்காக வந்திருந்தால்” அவையினர் வியப்பு அதிகரித்ததேயன்றிக் குறையவில்லை. ஒற்றர் என்றதும் உறுமி எழும் மன்னர் ஏன் இம்மாதிரி வாதித்து நேரத்தைப் போக்குகிறார்? என்று திகைத்தனர். இவ்வளவு நேரிடும் சூழ்நிலைகளைக் கவனித்தவாறிருந்த காடவர்கோன் எழுந்தார். மன்னரின் மனப்போக்கினை அறிந்தவர் போல் “நீங்கள் இருவரும் இங்கு எப்படி வந்தீர்கள்? எதற்காக வந்தீர்கள்?” என்று வினவினார். தெரும்பரன் அடக்கமாகத்தான் பதில் அளித்தான். எங்கள் தலைவர் ஒரு முக்கியமான ஓலையொன்றை உடனடியாக மன்னரிடம் சேர்ப்பித்து விடும்படி அனுப்பினார். வந்தோம். வாயிற்காவலன் அவை நடக்கிறது. மன்னர் இருக்கிறார். நீங்கள் போகலாம்! என்று அனுமதித்தான். உள்ளே வந்தோம். உங்களைத் தனியே சந்தித்து அதைச் சேர்ப்பிப்பது எப்படி என்று புரியாமல் விழித்து நின்ற சமயத்தில் இளவரசர் நுழைந்தார். நாங்கள் விழித்த விழிப்பு எங்களைக் காட்டிக் கொடுத்து விட்டது. அவ்வளவு தான்! என்று கூறியதும் காடவர்கோன் மன்னரை நோக்கினார். அவரோ நரலோக வீரரை நோக்கினார்! “உங்களை உள்ளே அனுமதித்த காவலன் யார்?” என்று நரலோக வீரர் கேட்டது கர்ஜித்த மாதிரி இருந்தது. ஆனால் சாவகத் தூதனின் அந்தரங்க உதவியாளர்கள் அயர்ந்து விடவில்லை. நிதானமாக “அதோ அவர்கள்தான்”, என்று இருவரைச் சுட்டிக் காட்டினான் பீதாம்பரன். நரலோக வீரன் சட்டென்று நகர்ந்தார். அந்தத் திசையில் அங்கே மாயனும் கலியனும் நின்றது கண்டு திடுக்கிட்டவர் “யார் இவர்களை அனுமதிக்கச் சொன்னது?” என்று கோபத்துடன் வினவியதற்குப் பதிலாகக் கலியன் “தலைபோகிற அவசரம் என்றார்கள் தவிரவும் அவர்கள் கையிலுள்ள ஓலையும் சிவப்பு முத்திரை கொண்டதாகும்” என்றதும் காடவர்கோன் “சிவப்பு முத்திரையா? எங்கே அந்த ஓலை?” என்று பரபரப்புடன் கேட்டார். பீதாம்பரன், “இதோ இருக்கிறது, ஆனால் மன்னர் தம் கையில்தான் சேர்ப்பிக்கப்பட வேண்டும்!” என்றதும் இளவரசன் “அதென்ன அப்படி ஒரு உத்திரவு? மன்னரிடம் நேரில் எதையும் கொடுப்பது என்பது...” என்று குறுக்கிட்டான். “இல்லை. நாமே அதைப் பெற விரும்புகிறோம்” என்று மன்னர் இடையிட்டுக் கூறியதும் அவர்களில் மூத்தவனான தெரும்பரன் அடக்கமாக முன்னே சென்று அவ்வோலையை நீட்டினான் மன்னரிடம்! இளவரசன் ஆத்திரம் இன்னமும் அடங்கவில்லை. பிரும்மாதிராயரோ தமது எச்சரிக்கையும் உறுதியும் சோதனைக்குள்ளாகி விட்டதே என்று கோபம் அடைந்தாலும் அதை நரலோக வீரரிடம் காட்ட முயன்றார். அவரோ தமது உதவியாட்களான கலியனும் மாயனும் இப்படிச் செய்து விட்டார்களே! என்று பொருமினார். மன்னர் கடிதத்தைப் பிரித்ததும் அனைவரும் அவையின் ஆலோசனை சம்பந்தமான முக்கியத்துவம் போய்விட்டது, இந்தத் தலையீட்டால் என்று கருதி அவரையே உற்று நோக்கினர். ஆனால், அவர் முகம் அடைந்த மாறுதல் மிகப் பயங்கரமாயிருந்தது! “சரி, நீங்கள் போகலாம்! போனதும் எனது நன்றியை உமது தலைவருக்கு அறிவித்து, நாளை சந்திக்கலாம் என்றும் தெரிவியுங்கள்!” என்று சோழ மன்னர் கூறியதும் அவர்கள் சட்டென்று வணங்கி வெளியேறி விட்டார்கள்! அவையின் முடிவை மதிப்பிழக்கச் செய்த தலையீடும் ஓலையும் அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்னும் ஆவலைத் தூண்டி விட்டது. பேரமைச்சர் பிரும்மாதிராயரை ஊன்றி நோக்கிய மன்னர், “நடக்கக் கூடாதது ஒன்று நடந்துவிட்டது, எனவே நாளை நாம் அனைவரும் மீண்டும் கூடுகிறோம்.” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு இருக்கையிலிருந்து எழுந்ததும் அனைவரும் எழுந்தனர். இளவரசன் மன்னரைத் தொடர்ந்தான். ஏனையோர் என்னவோ ஏதோ என்று முடிவுகாண இல்லாத தேக நிலையுடன் நடந்தனர். அவைக்கு வந்த போதிருந்த வேகமும் மிடுக்கும் இப்போது யாரிடமும் இல்லை. எங்கும் கலக்கமிருந்தது. கருத்தில் குழப்பமிருந்தது. மன்னரே வாய் திறந்து சொல்லிவிட்டார், ‘நடக்காதது நடந்திருக்கிறது!’ என்று! அது என்னவாயிருக்கும்? எதிரி நுழைந்து விட்டனரா? கலிங்கம் போர் முரசம் கொட்டிவிட்டதா? ஒருவேளை அதற்காகத்தான் இளவரசர் ஓடோடி வந்திருக்கிறாரா? அப்படியானால் சாவகன் ஓலை ஏன் வந்தது? அதில் அப்படி என்ன தான் கூறப்பட்டுள்ளது? கட்டையும் காவலையும் மீறி எப்படி அவர்கள் - சாவகத் தூதுவரின் மெய்க்காவலர் நுழைந்தனர். சோழநாட்டில் வேளைக்காரப் படையின் மதிப்பு வாய்ந்த திறமைக்கும் அமைச்சரின் ராஜதந்திரத்துக்கும் சோதனைக் காலம் ஏற்பட்டிருக்கிறதா என்ன? மன்னர் எழுந்து நடந்ததும், இளவரசர் அவரைத் தொடர்ந்ததும் கடிதம் கூறியதென்ன? என்று கூடத் தெரிவிக்காமல் அமைச்சரைக் கூட அழைக்காமல் அவர் வேகமாகப் புறப்பட்டு விட்டதையும் கண்ட அவையினர் மீண்டும் சோழ நாட்டுக்கு ஏதோ ஒரு பேராபத்து நெருங்கியிருக்கிறது; அமைதியும் நிம்மதியும் மக்களிடையே கடந்த பதினேழு ஆண்டுகளாக நல்வாழ்வு பரவியிருப்பது காணும் பொழுது எதிரிகள் மீண்டும் ஏதோ சூழ்ச்சியில் இறங்கியுள்ளனர். கலிங்கன், கங்கன், கொல்லன் எல்லாம் ஏதோ ஒரு வகை கூட்டில் இயக்கினாலும் இப்போது மன்னரிடம் எட்டியுள்ள ‘பகைமைச் செய்தி’ இவற்றையெல்லாம் விட பெரிதாயிருப்பதால் ‘நடக்கக்கூடாதது நடந்து விட்டது!’ என்று அறிவித்திருக்கிறார். எனவே இனி எங்கே நிம்மதி? அவையினர் இம்மாதிரி பலபட எண்ணிக் கலையத் துவங்கினார்கள். ஆயினும், பேரமைச்சர், மழவரையர், முத்தரையர், காடவர்கோன், கோவரையர், பஞ்சவதிவாணர், பழுவேட்டரையர், நரலோக வீரர் மட்டும் சற்று நேரம் அங்கேயே தங்கி அந்தரங்கமாக விவாதித்தனர். கடல் நாடுடையார் மட்டும் இந்த அந்தரங்க விவாதத்தில் தீவிரங்காட்டவில்லையென்பதை அவர், மற்றவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டதும் தெளிவாகத் தெரிந்தது. பேரமைச்சருக்கு அவருடைய திடீர் புறப்பாடு பற்றி மனதில் சஞ்சலமும் குழப்பமும் ஏற்பட்டுவிட்டது. இதை ஊகித்ததைப் போல கடல் நாடுடையார் தமது மெய்க்காவலர்களுடன் அதிவேகமாகச் சென்றதைக் கண்ட பழுவேட்டரையர் அவர் ஏன் இவ்வளவு அவசரப்பட வேண்டும் என்று அதிசயித்தார், எனினும் வாய் திறந்து எதுவும் பேசவில்லை. அமைச்சருக்கு மட்டும் மனம் பொறுக்கவில்லை. “நமக்குச் சில விவரங்கள் கூறப்படாமல் இரகசியமாகவே நடைபெறுகின்றன” என்றார். ஆனால் சட்டென்று பஞ்சநதிவாணர் “அமைச்சர் நாட்டின் கண் மட்டுமின்றி காதுகளாகவும் இருந்தாக வேண்டுமே! இன்று மன்னருக்கு வந்த ஓலை சாவகத் தூதுவரிடமிருந்து என்னும் போது அவ்வோலை விவரங்கள் நமக்கு முன்னதாகவே தெரிந்திருக்க வேண்டுமே! சோழநாட்டின் வேளக்காரப் படையினர் திறன் அசாதாரணமானதாயிற்றே!” என்று இடையிட்டுப் பேசியதும் நரலோக வீரர் அவரைப் பார்த்ததில் ஆத்திரம் நிறைந்திருந்தது. அமைச்சரின் பார்வையிலோ வெறுப்புக் கலந்திருந்தது. பழுவேட்டரையர் தமது கர்ஜனைக் குரலில், “இது சமயமல்ல நமது விபரீத வாதங்களுக்கு. எனக்கென்னவோ இன்று மாலையில் கடற்கரையில் விழாப் போட்டியில் கலந்து கொண்ட இளைஞனைச் சுற்றி ஏதோ ஒரு விபரீதம் இருக்கிறது என்ற கருத்து உறுதியாக இருக்கிறது. நாம் அதுபற்றிச் சிந்திக்கவேயில்லை.” “நானும் அதைத்தான் கூறினேன். ஆனால் மன்னர் கவனிக்கவில்லை” என்று மறுக்கிறார் பிரும்மாதிராயர். “என்னுடைய கையாட்களை அவன் விரட்டியிருக்கிறான். கடல் நாடுடையார் அவனுக்கு ஆதரவளித்திருக்கிறார்!” என்று நரலோக வீரர் சொன்னதும் அத்தனை பேர் கவனமும் அவர் திசை திரும்பியது. “அப்படியா?” என்று பழுவேட்டரையர் சட்டென்று கேட்டதும் நரலோக வீரர் ‘ஆமாம்’ என்று தலையசைத்தார். ‘உறுதியாகத் தெரிந்து கொண்டீர்களா?’ என்று காடவர் கோன் கேட்டதும் தமது உதவியாட்களான கலியனையும் மாயனையும் அழைத்து நிகழ்ந்ததை விளக்கச் செய்தார். சோழ நாட்டுப் பெருந் தலைகள் இவ்விளக்கங் கேட்டதும் கவலையும் வியப்பும் கொண்டவர்களாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “ஏதோ இதற்கொருகாரணம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கடல் நாடுடையார் அவனுக்கு அடைக்கலம் அளித்திருக்க முடியாது” என்று காடவர்கோன் சில விநாடிகள் கழித்து நிதானமாகச் சொன்னதும் பேரமைச்சர் “ஒற்றனுக்கு உதவும் காரணம் நமக்குப் பயனுள்ளதா என்ன?” என்று வெடுக்கெனக் கேட்டதும் காடவர்கோன் அவர்தம் கேள்வி வேகத்தைக் கண்டு திடுக்கிட்டார். “காரணம் என்னவென்று யாருக்கும் கூறாதிருக்கக் காரணம் ஏதாவது இருந்தாக வேண்டுமே!” என்று கேலித் தொனியில் முத்தரையர் சொல்லப் பழுவேட்டரையர் “காரணம் இல்லாமல் எதையும் செய்யமாட்டார் கடல்நாடுடையார்” என்று அறுதியிட்டுப் பேசினார். “இருக்கலாம். எனினும் அந்தக் காரணம் நமக்குத் தெரிந்தால் என்ன?” என்றார் அமைச்சர் சற்று அடங்கிய குரலில்! “தெரிந்தால் நாம் பொது விஷயம் போல விவாதித்துக் கொண்டிருப்போம். நம்மைச் சுற்றி எதிர்களின் கையாட்கள் நின்று கொண்டிருப்பர்!” என்றதும் அமைச்சர் வாய் மூடிவிட்டது! நரலோக வீரரோ குன்றிப் போனார் இச்சொற்களைக் கேட்டதும்! “அப்படியாயின் மன்னருக்கு வந்த சாவகர் ஓலை கூறுவதற்கும் கடல் நாடுடையார் திடீர் புறப்பாட்டுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கத்தான் வேண்டும்!” என்று நரலோக வீரர் உறுதியாகக் கூறியதும் சட்டென்று மற்றவர்கள் மவுனமாகி அவரையே உற்று நோக்கினர். அந்தப் பார்வையின் நோக்கம் ‘நீங்கள் சொல்வது தான் உண்மையான காரணமாக இருக்க வேண்டும்’ என்று ஆமோதிக்கும் பாவணையில் இருந்தது! |