பொன்னகர்ச் செல்வி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

6. வல்லவனுக்கு வல்லவன் எனினும் மிக நல்லவன்

     கடல் நாடுடையார் திரும்பிவிட்ட காரணத்தைப் பற்றியும், மன்னருக்குச் சாவகனிடமிருந்து வந்த ஓலை பற்றியும் ஏழு பேர் கொண்ட உயர் ஆலோசனைக் குழு ஆராய்ந்து கொண்டிருந்த அதே நேரத்தில் சாவகன் மாளிகையில் கனகாம்பாரத்னாம்பாள் சகோதரர்களுடன் வித்யாதர சாமந்தன் பெரியதொரு ஆலோசனையை நடத்திக் கொண்டிருந்தார். தன்னுடைய ஓலை சோழ மன்னரை என்ன நிலைக்கு மாற்றக்கூடும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். எனவே அந்த ஓலையின் வாசக எதிரொலி எந்தெந்த வகையில் எங்கெங்கு முழங்கும் என்பதையும் தனது மதியூகி மந்திரிகளுடன் ஆலோசித்தார்.

     புத்த மித்திரர் தாம் உண்டு, தமது ‘விஹாரம்’ உண்டு என்று எங்கோ ஒரு கோயிலில் செபம் செய்து கொண்டிருந்தார் எனினும் அவருக்கு அவ்வப்போது சுற்றுச் சூழ்நிலையில் நிகழ்வதென்ன என்பதைத் தெரிவிக்கவும் அந்தப் பெரிய மாளிகையில் ஒரு உதவியாள் இல்லாமலில்லை!

     ராஜரீகம் என்பது இக்காலத்தில் மட்டும் இல்லை, எந்தக் காலத்திலும் மந்திராலோசனைகள், சூழ்ச்சிகள், புரட்டுகள், மிரட்டல்கள், உளவு, ஆலோசனை போன்ற உபகரணங்களின்றி இலங்கியதே யில்லை. அரசியல் நடத்த விரும்புவோர்க்கு ராஜரீகம் மிகத் தெரிந்த ஒரு சாதனமாக இருக்க வேண்டும் என்றால், அந்த ராஜரீகத்துக்கு மேற்கூறிய உபகரணங்கள் இல்லாமலிருப்பதற்கில்லை.

     ராஜஸ்ரீசாமந்தன், சோழ மாமன்னனுக்கு அனுப்பியிருந்த ஓலையில் இருந்த வாசகத்தால் மன்னன் எவ்வளவு பரபரப்படைந்தானோ அதே அளவு பரபரப்புடன் தான் சாவக தூதுவனுமிருந்தான்! மன்னன் தனது ஓலை வாசகத்தை நம்ப வேண்டும். நம்பிச் செயலாற்ற வேண்டும். அப்படிச் செயலாற்றுங்கால் நேரும் எந்த நிலைக்கும் தயாராக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தனது உதவியாளர்களுடன் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தனர்.

     அப்பர்சோதரர்கள் சோழர் அந்தரங்கமாக ஆலோசனை நடத்துகிறார் என்பதை ராஜா வாக்கிவிட்ட பெருமையுடன் பேசினார்கள். தாங்கள் எப்படிப் பொய்க் காரணம் கூறிக் காவலர்களை ஏமாற்றினோம் என்று விவரித்தார்கள். ஆனால் சாமந்தனின் கருத்து இதிலெல்லாம் செல்லவில்லை. ஓலையில் கூறியுள்ள உளவாளி ஊடுருவியிருப்பதை வேறு எவரும் கூறும் முன்னர் தான் கூறியதற்கு மன்னர் உண்மையாகவே திகைத்திருப்பாரா? திகைத்திருந்தால் உடன் தன்னைக் காண முயற்சித்திருப்பாரா? தவிர கடல் நாடுடையார் அந்த உளவாளியைத் தம் அடைக்கலத்தில் வைத்திருப்பதால் இரு பெரும் பிரச்னைகள் எழுந்துள்ளன? ஒன்று அவனுக்கு அடைக்கலமளித்து மன்னருக்கு அறிவிக்காதிருப்பது. மற்றொன்று அவனை உடனடியாகப் பிடித்து அரசரிடம் ஒப்படைக்கா திருப்பது?

     நரலோக வீரன் துடிப்பான் பழிவாங்க! பிரும்மாதிரியார் பதறுவார் கோபத்துடன். பழுவேட்டரையர் கூடத்தான்! அப்புறம் என்ன? கடல் நாடுடையார் மீது எழும் கோபம் சோழ நாட்டின் அடித்தளத்தையே ஆட்டிவிடும்.

     அப்படியின்றி கடல் நாடுடையாரே இந்தச் சதுரங்கத்தில் தாற்காலிகமாக வென்றுவிட்டார் என்று வைத்துக் கொண்டால் சிங்களத்திலிருந்து வரும் பெருங் கப்பலைக் கவிழ்த்து விட வேண்டியதுதான்! அதற்குத்தான் ஓலையில் ‘கோடி’ காட்டியாகிவிட்டதே!

     சாமந்தன் இப்படி எண்ணியபோது சோழ மாமன்னனும் இப்படித்தான் எண்ணினான்!

     “மும்முடி! நமக்குக் கலிங்கம், கங்கம், கடம்பை எல்லாம் பகைதான் என்றாலும் நாட்டிலே நம்மிடையே இன்று ஊடுருவியிருக்கும் பகைவரை விட அவர்கள் பெரியதல்ல. சிங்களத்துடன் நாம் எப்படியாவது அமைதி நிலை காண வேண்டும் என்று முயற்சிக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு சோதனை ஏற்பட்டு விடுகிறது. இப்போது சிங்களத்திலிருந்து ஒரு நல்லெண்ணத் தூதுக் குழுவினர் வருகின்றனர். அவர்கள் இன்னும் ஐந்தாறு நாட்களில் இங்கு வந்து சேர்ந்துவிடுவர் என்பதற்காகவே நான் கங்கைகொண்ட சோழபுரம் செல்லாமல் இங்கு தங்கியுள்ளேன். ஆனால் எப்படியோ நம் நாட்டில் ஒரு அயல்நாட்டு ஒற்றர் படை நுழைந்துள்ளது. அப்படியின் தலைவன் ஒரு இளைஞன். அவன் நம்மிடையே சில நாட்களாக நடமாடிக் கொண்டிருக்கிறான். எப்படியோ நமது கடல் நாடுடையாரின் மனதை மயக்கி அவருடைய ஆதரவையும் பெற்றிருக்கிறான் என்று இந்த ஓலை வாசகம் கூறுகிறது” என்று மன்னர் சட்டென அறிவித்தார்.

     “தந்தையே!” என்று கோபத்துடன் துள்ளியெழுந்த மும்முடியைக் குலோத்துங்கன் கூர்ந்து பார்த்துவிட்டு, “பதறாமல் கேள் மும்முடி. நீ எப்பொழுதும் ஆத்திரத்தால் நிதானத்தை இழந்து விடுகிறாய். அறிவாளி ஆத்திரத்தை அடக்கி நிதானத்துச் சிந்திக்க வேண்டும். கடல் நாடுடையார் அவனை ஆதரிக்கிறார் என்றுதான் கோபத்தில் துள்ளியெழும் நீ உன்னுடைய தந்தையால் இன்று அவன் வெகுவாகப் பாராட்டப்பெற்று அவர் சிகையிலிருந்து பரிசிலும் பெற்றான் என்பதை அறிந்தால் என்ன செய்வாயப்பா?” என்று மிடுக்கிழந்த குரலில் கேட்டதும் மும்முடி பற்களை நரநரவென்று கடித்தான். தந்தையின் குரலில் தழுதழுப்போ, குழைவோ, நலிவோ கேட்டறியாத அவனுக்கு அவர் தம் அப்போதைய நிலைக்கான காரணத்தைக் கூர்ந்தறியும் நிதானமில்லை.

     “இந்த ஒற்றன் யார்? எங்கிருந்து வந்தான்? எப்படி இவனை நமக்கு முன்னர் சாவக சாமந்தன் கவனித்திருக்கிறான்? இவனுடன் இன்னும் எத்தனை பேர்கள் எப்படிப்பட்ட உருவில் வந்துள்ளனர் என்பதைச் சாவகன் பூரணமாக அறிந்திருந்தாலும் தருணம் வரும்போது நமக்கு அறிவிப்பானாம்? அந்த ஒற்றர்கள் இங்குப் புகுந்தது முதல் செய்வதாக இருக்கும் விபரீதங்களைச் சாவகன் அறிந்திருக்கிறான். அவற்றில் ஒன்றுதான் சிங்களக் கப்பலைச் சிதைக்கும் சூழ்ச்சி!” என்று மாமன்னர் நிதானமாக விளக்கியதும் மும்முடிச் சோழன் குமுறித் தவித்தான். ஆயினும் தந்தையின் தீர்க்கமான முடிவு என்னவென்றறியும் ஆவலையும் கொண்டுள்ளவனாதலால் வாய் திறக்கவில்லை.

     “நம்முடைய ஒற்றர் படை உறங்குகிறதா?”

     “உறங்குகிறது என்பதைத் தான் சாவகன் சொல்லிக் காட்டியுள்ளான், எழுதியும் காட்டியுள்ளான்!”

     “நரலோக வீரர் போர் முனைக்குத் தான் தகுதி.”

     “உண்மைதான். நாளையே அவர் கொல்லேருக்கரைக்குச் செல்லுகிறார்!”

     “அப்படியானால் இங்கு வேளக்காரப் படைத் தலைமைக்கு யார்?”

     “சோழ கங்கன் பொறுப்பேற்பான்!”

     மும்முடிச் சோழனுக்கு இப்போது உண்மையாகவே கோபம் நிலை மீறிவிட்டது.

     “அப்பா! நீங்கள் செய்கிற முடிவு நமக்கு முற்றிலும் எதிராகிறது? கங்கன் வசமுள்ள ரத்தக் கலப்பு எதையும் நாம் நசுக்கவேண்டும்!”

     “ஆமாம் மகனே. நசுக்கத்தான் வேண்டும்? ஆனால் ரத்தக் கலப்பு நசுக்கக் கூடியதா? உன் தந்தையின் உடலில் கூட சாளுக்கியக் கலப்பு ஊடுருவியுள்ளது. எனவே நம்மை நசுக்க வேண்டும் என்று உறுமியெழுபவர்கள் இன்னும் சிலர் இந்தச் சோழ நாட்டில் இல்லாமலில்லை!”

     தந்தையின் இந்த விளக்கம் மகனை நிலை குலையச் செய்துவிட்டது. இன்று சிலர் மட்டும் இல்லை, சோழ நாட்டின் பெருந்தலைகள் பலவும் குலோத்துங்கன் ஆட்சி உரிமையை ஏற்கவில்லை என்பது தெளிந்த உண்மை. இன்னும் சரிவர சொல்லப் போனால் பேரரசி அம்மங்காதேவியின் மனம் புண்ணாகாமலிருக்கவே அவர்கள் ஒதுங்கியிருக்கிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. மும்முடியின் மவுனம் மன்னருக்கு மேலும் பேச வாய்ப்பளித்தது.

     “மும்முடி, நாம் சோழர்கள் தாம், சோழநாட்டை ஆளும் உரிமையும் தகுதியும் உடையவர்கள் வேறு எவரும் இலர் என்ற உண்மையை நம் நாடறியச் செய்து விட்டோம். என்றாலும் நாம் ஆட்சிக்கு இன்னமும் ஒரு சிலரிடமிருந்து ஆதரவில்லை. ஆனால் அவர்கள் நம் எதிரிகளுமாக வில்லை” என்று சொல்லிவிட்டு ஏதோ யோசித்தார். மும்முடி மீண்டும் கேட்டான்.

     “நமக்கு இரண்டுங்கெட்ட நிலையில் ஆதரவளிப்பவர்களில் கடல்நாடுடையார் ஒருவர் என்பதை நான் ஒப்புவதற்கில்லை.”

     “நல்ல காலம் மும்முடி. நீ எங்கே அவர் நமது எதிரி என்று கூறிவிடுவாயோ என்று கூட ஒரு நொடி கலங்கி விட்டேன். கடல்நாடுடையார் இன்று நேற்றல்ல. இளம் வயது முதற்கொண்டே எனக்குத் துணை நிற்பவர். கடல் கடந்த நாடுகளில் நான் கண்ட வெற்றிகள் யாவும் அவர் ஈட்டித்தந்தவை யென்று கூறும் போது நாம் அவருக்கு எவ்வளவு கடமைப்பட்டிருக்கிறோம் என்பது விளங்காமலே புரியும். அவர் தம் மூத்தவர் பஞ்சரதிவாணர் இல்லையேல் நாம், அதாவது இந்தச் சோழநாடு இந்த அளவுக்குச் செல்வ வளம் பெற்றிருக்க முடியாது என்பது காலமும் அனுபவமும் முடிவு செய்த உண்மை.”

     “உண்மை இப்படியிருக்க அவர் நம் நாட்டில் ஊடுருவியுள்ள எதிரிக்கு ஆதரவு காட்டுவதென்றால்...”

     “அதுதான் புரியவில்லை எனக்கும். அவனுடன் அவர் ஏமாந்திருக்க வேண்டும். அல்லது வேறு ஏதோ முக்கிய காரணம் இருந்தாக வேண்டும்!”

     “கடல்நாடுடையார் கண்கள் ஏமாற்றத்தின் வாடையைக் கூட நாடவிடாதே அப்பா!”

     “அதுவும் உண்மைதான்... ஆனால்...”

     “ஒருக்கால் அவன் தமது ஆதரவில் இருப்பது மூலம் தாமே அவனைக் கண்காணிக்க வாய்ப்பேற்படும் என்று கருதியிருந்தாரானால்...”

     “அலசி ஆராய்ந்து பார்த்தால் இதுதான் அவர் தம் நோக்கமாயிருக்கக் கூடும். எனினும் அவர் ஏன் இது பற்றி என்னைக் கலக்கவில்லை?”

     “சந்தர்ப்பம் கிடைக்காமலிருக்கலாம். அல்லது...”

     “என்னிடம் தெரிவிக்கத் தயங்கியிருப்பதற்கு ஏதோ ஒரு காரணமும் இருக்கலாமில்லையா?”

     “சாவகன் இதைப் பெரிதாகக் கருதும் அளவுக்குக் கடல்நாடுடையார் கருதாதிருக்கலாம்...”

     “அதெப்படி மும்முடி? நாளையே சிங்களத்துப் பெருங் கப்பல் வரலாம். அதில் வருபவர்கள் நமது நல்லெண்ணத்தை, உண்மையில் நாம் பகைமை காட்டாதிருக்கிறோமா என்பதையறிய வருகிறார்கள். அப்படி வருபவர்களின் கப்பல் கவிழ்ந்தால் நமக்கும் சிங்களத்தாருக்கும் இனி ஏது ஒற்றுமை?”

     “நான் வேங்கியிலிருந்து புறப்படுங்கால் கேள்விப்பட்ட செய்து உண்மையானதுதான் என்று தங்கள் வாக்கால் உறுதியாகிறது.”

     “எதைச் சொல்லுகிறாய் மும்முடி?”

     “சிங்களத்தாருடன் நீங்கள் திருமணப் பிணைப்பு மூலம் ஒற்றுமையை ஏற்படுத்திக் கொள்ளுவது?”

     “ஆமாம் மும்முடி. உன்னுடைய பாட்டியாரின் ஏற்பாடு இது.”

     “வேறு வழியில்லையா தந்தையே?”

     “இல்லை மும்முடி. சோழ சாம்ராஜ்யத்துக்கு ஏற்பட்டுள்ள எத்தனையோ சோதனைகள் வரவர சிக்கலாகிவிட்டன. கடல் கடந்த நாடுகள் நம்முடைய பிடியிலிருந்து நழுவ முயலுகின்றன. கலிங்கச் சார்பு நாடுகள் பற்றி நான் சொல்லித் தெரியவேண்டாம். கொல்லத்தார் கூட மல்லுக்கு வந்திருக்கும் போது! உள்நாட்டு நிலைமையைச் சமாளிப்பது என்பது இன்னமும் ‘மக்களிடையே அன்னையின் நன்மதிப்பு’ என்ற ஆதரவில் தான் ஊறியிருக்கிறது. எனவே தான் அன்னையார் கூறும் சில யோசனைகளை நாம் கட்டாயமாக ஏற்றாக வேண்டியிருக்கிறது.”

     “பழுவேட்டரையரும், முத்தரையரும் ஏற்க வேண்டுமே!”

     “நாளை அன்னையே அவர்களை அழைத்துப் பேசுகிறார்கள்!”

     “அவர்கள் முயற்சி வெற்றி பெறும்.”

     “நானும் அந்த ஒற்றர் குழு இளைஞனைச் சந்திக்கிறேன்.”

     “எதற்கப்பா அவனுக்கு இத்தனை மதிப்பு?”

     “மதிப்பது என்பது ஒரு புறமிருக்கட்டும். நேருக்கு நேர் தனிமையில் சந்திப்பதால் உண்மையையும் அறியலாமல்லவா?”

     “கடல் நாடுடையார் வருவாரல்லவா?”

     “தெரியாது மும்முடி. நான் அவனைச் சந்திக்க விரும்புகிறேன் என்றதும், அவர் ‘உத்திரவை நிறைவேற்றுகிறேன்’ என்றார்.”

     “இதில் ஏதோ மர்மம் இருக்கிறது தந்தையே. எங்கிருந்தோ ஒரு இளைஞன் வருகிறான். அவன் சோழ நாட்டு வீரர்களையெல்லாம் ஒரு போட்டியில் வென்று பிரபலமடைகிறான். பிறகு அவனைப் பின்பற்றி வேளக்காரப் படையினர் போக அவர்கள் நிராயுதபாணிகளாகத் திரும்புகின்றனர்! சோழ நாட்டின் மாபெரும் அரசியல் சதுரரான கடல் நாடுடையார் இவனைத் தம் ஆதரவில் வைத்திருக்கிறார் என்னும் விந்தைச் செய்தி! இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தது போல ‘இவன் ஒரு ஒற்றர்படையின் தலைவன்’ என்று நமக்குச் சாவகனால் தகவல் வருகிறது. இதையெல்லாம் ஊடுருவி நோக்கினால்...”

     “சிக்கல்தான் கூடுமேயன்றி குறையாது மகனே!”

     “சிக்கல் ஏற்பட்டிருப்பது எங்கு? சாவகன் எப்படித் திடீர் நண்பனானான்? சத்திரத்தையே பெரிதாகக் கருதி உமக்கு ஓலையை, அதுவும் தேர்ந்த ஒற்றர்களான ‘அம்பரச் சோதரர்கள்’ மூலம் அனுப்பி வைக்கிறான் என்னும் போது இதென்ன விந்தையென்று கேட்கத் தூண்டுகிறதல்லவா?”

     “நியாயமான கேள்விதான். தவிர, இவன் எந்த நாட்டு ஒற்றர் படையைச் சேர்ந்தவன் என்று சாவகனும் எழுதவில்லை!”

     “ஒருக்கால் நமக்கு அவன் வேண்டியவனாகவே இருந்து ஏதோ ஒரு காரணமாக மர்மமாக இருப்பதென்று...”

     “அதெப்படி மும்முடி, நமக்கு வேண்டியவன் நம்மிடம் மர்மமாக இருக்க வேண்டிய காரணம்?”

     “சாவகன் போன்ற ஒரு சிலர் மித்திரபேதம் என்னும் ராஜதந்திரக் கருவியைப் பிரயோகிக்க விரும்புபவர் என்ற காரணம் போதாதா?” மைந்தனின் இந்தக் கேள்வியிலிருந்த நியாயமும் புரிந்தது அவருக்கு!

     மூன்றாம் யாமம் என்பதைக் காட்ட சேமக்கலம் ஒலித்ததும் மேற்கொண்டு பேசாமல் இருவரும் தமது அறைகளுக்கு ஏகினர்.

     மும்முடி வந்த நோக்கம் வேறு. இங்கு உருவாகிவரும் சூழ்நிலை வேறு. மன்னருக்கோ கடந்த பதினாறு ஆண்டுகளாகப் படாதபாடுபட்டு நாட்டிலே ஓரளவு அமைதியையும், சோழ நாட்டின் வலிமையைப் பிற நாடுகளில் உறுதியாக்கி விட்டிருப்பதாகக் கொண்டிருந்த நிலையையும் குலைப்பதற்கு ஒரு சிலர் எங்கெங்கோ யார் யாரோ, எவ்வெப்படியோ முயற்சி செய்வதை இனியும் அலட்சியப் படுத்துவதற்கில்லை என்ற முடிவுடன் துயில் கொள்ள முயன்றார்.

     போர் முனையில் காணும் வெற்றி பெரிதல்ல. அவ்வெற்றியை உறுதிப்படுத்தி அதன் மூலம் நாடு நல்லதொரு பலனைப் பெற ராஜதந்திர முனையில் காணும் வெற்றிதான் பெரிது, அவசியம் என்பதை அறியாதவரல்ல பரகேசரியான ராஜ குலோத்துங்க சோழர் என்பது எல்லோரும் அறிந்த உண்மையாக இருக்கும் போது மும்முடிக்குத் தெரியாமலிருக்குமா?

     தந்தையும் மகனும் துயில் கொள்ள முயலாமல் தவித்த அதே நேரத்தில், கடல் நாடுடையார் மாளிகையில் துயில் வராமல் புரண்டு கொண்டிருந்தான் மர்ம இளைஞன் பாலன்! கடல் நாடுடையார் நாளது வரை இல்லற வாழ்வினை ஏற்காமல் நாட்டுப் பணியே பெரும் பணியாகக் கொண்டு விட்டவர். அந்தக் காலத்தில் கடல் நாடுகளில் பயணம் செய்பவர்கள் நீண்ட காலம் வெளிநாடுகளிலேயே இருக்க வேண்டும் என்ற அவசியத்துக்கு இலக்காகி இருந்ததால் மணப்பிணைப்பினை ஏற்காமலிருந்தனர். தவிர கடல் நாடுடையார் தமது மூத்த சகோதரரான பஞ்சநதி வாணரின் ஆதரவில் வளர்ந்தவர். அவரோ மிகப் பெரிய குடும்பி! இவரும் அவர் தம் குழந்தைகளில் ஒன்றினைப் போல வளர்ந்து ஆளானார்.

     மன்னரே ஒரு முறை அவர் தம் இல்லத்துக்கு வந்திருந்த போது ஏகப்பட்ட குழந்தைகளைப் பார்த்துவிட்டு, “வாணரே நீர் பஞ்சநதிக்கு மட்டுமல்ல, ஏழு கடல்கள், எட்டுக் கண்டங்கள், ஒன்பது மலைகள் அனைத்துக்கும் உடைமை கொள்ளும் உரிமை படைத்தவர் தான்” என்று கேலியாகச் சொல்லியுள்ளார்.

     அத்தகைய பெருங் குடும்பத்தில் ஒருவராக வளர்ந்து விட்ட கடல் நாடுடையார் தமக்கு என்று ஒரு தனிக் குடும்பத்தை ஏற்க விரும்பவில்லை.

     ஆனால், இந்த மர்ம இளைஞன்பால் அவர் காட்டும் ஆதரவும் அன்பும் சற்று அதிகமானதாகவே பஞ்சநதி வாணருக்குத் தோன்றியது.

     இளைஞன் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த நேரத்தில் தமது சகோதரரிடம் பஞ்சநதி வாணர், “ஏன் உனக்கு இந்த வீணான வெறுப்பு தம்பி?” என்று மனதில் தோன்றியதை வெளிப்படையாகவே கேட்டுவிட்டார். எனினும் சட்டென்று பதில் கூறவில்லை. கோவரையர் அண்ணன் கேட்கும் கருத்தினை அறிந்து கொண்ட கடல் நாடுடையார் சற்றுத் தயக்கத்துடன் “நான் இந்த இளைஞனை ஆதரிப்பதைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டவர்கள், நாளை நான் செய்தது சரிதான் என்று ஒப்புக் கொள்ளுவர் என்பது திண்ணம். ஒரு குறிப்பிட்ட காலம் வரை இளைஞன் மர்மமாகவே இருக்க விரும்புகிறான். நானும் அதை ஆதரித்து உறுதியளித்திருக்கிறேன். எனவே விவரமாக எதையும் விளக்க முடியாத நிலையிலிருக்கிறேன்” என்றார்.

     தன்னுடைய இளவல் எந்தக் காலத்திலும் தனக்கெதிர் பேசி அறியாத பஞ்சநதி வாணர் ஒரு நொடி திகைத்து விட்டார். எனினும் இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை உணர்ந்த அவர், “தம்பி, உனது உறுதியை மீற வேண்டாம். ஆயினும் கலிங்கராயரும், பிரும்மாதிராயரும் இது காரணமாக நம்மிடம் குரோதம் கொண்டு விட்டனர். காடவர்கோன் தலையிடாவிட்டால் நிலைமை விபரீதமாகிவிடும் போலிருந்தது. பழுவேட்டரையர் தமது தம்பியிடம் இன்னுமும் பிடிப்பிழந்து விடவில்லை.”

     “எனக்கும் இதெல்லாம் தெரியாமலில்லை. எனினும் பேரரசியும், மன்னரும் என்னுடைய நிலையின் உண்மையை அறிந்ததும் மாறான முடிவு எதுவும் ஏற்படாது. தவிர தங்கள் தம்பி என்றுமே தவறான ஒரு பணியில் தலையிட மாட்டான். சோழ சாம்ராஜ்யம் நிலைக்க வேண்டும், சோழ மன்னர் வாழ வேண்டும் என்பதற்கு வாணர்குலம் நேர்மையாகப் பாடுபடுமேயன்றி, தவறாக எதையும் என்றைக்குமே செய்யாது” என்று உணர்ச்சி வயப்பட்டுக் கூறியதும் பஞ்சநதி வாணர் தமக்கே உரித்தான அடக்கத்தை விட்டுப் பரவசத்துடன் தம்பியை நெருங்கி ஒரு முறை சால அணைத்துக் கொண்டுவிட்டார்!

     அதே தருணம் இந்த அற்புதமான காட்சியைப் பார்த்துவிட்டான் மர்ம இளைஞன் பாலன்.

     சோழ நாட்டின் கடல் கடந்த சக்திக்கு மூலாதார புருஷன் என்று கருதப்பட்டவரும், சோழ நாட்டின் வளமான கருவூலத்தின் ஆதார புருஷரான பஞ்சநதிவாணரும் சகோதர பாசத்துக்கு இலக்கானவர்கள் என்பதை அவனும் தான் கேள்விப்பட்டிருக்கிறான். எனினும் அவர்கள் ஒரே மனத்துடன் சோழ நாட்டுப் பாரினில் எந்த அளவுக்கு ஒன்றியிருப்பார் என்பதை அன்று தான் அவன் நேரில் கண்டு கொண்டான்!

     மூன்று மாதங்களுக்கு முன்பு அவன் பூம்புகார்த் துறையை அடைந்த போதிருந்த நிலையும் தற்போதைய நிலையும் சற்றே ஆராயப்படின் அளவிலாத வேற்றுமைகள் புலப்படாமற் போகாது.

     யவனத்துக்குச் சென்ற கப்பலில்தான், பல அடிமைகளுள் ஒரு அடிமை போல இவனும் வந்தான். கப்பல் கரையை அடைந்ததும், தலைவனான தாலமி கடல் நாடுடையாரின் திருநோக்கம் தனது அழகான மரக்கலத்தின் மீது திரும்பவேண்டுமென்ற எண்ணத்துடன் அவரைப் பரிசுப் பொருள்களுடன் நாடினான். அவரும் யவன மரக்கலத்துக்கு விஜயம் செய்தார். அவ்வமயம் விலை மதிப்புள்ள பல்வேறு நாட்டுப் பொருள்களுடன், திடகாத்திரமான பல நூறு அடிமைகளும் இருப்பதைக் கண்ட அவர், என்று தான் இந்த யவனர் ‘அடிமை வாணிபம்’ செய்வதை நிறுத்தப் போகின்றனரோ என்று நினைத்தாலும், குறிப்பிட்ட இந்த இளைஞனைப் பார்த்ததும் ஒரு நொடி திகைத்தார். பிறகு அருகில் சென்று பார்த்தார். அவன் முகத்தைக் கூர்ந்து நோக்கினார். கைகளைப் பார்த்தார். அகன்ற மார்பும், முறுக்கேறிய தோள்களைப் பார்த்தார். நீண்ட கைகளையும் தன்னை ஊடுருவி நோக்கும் கூரிய விழிகளையும் அவற்றில் நிலைத்த வேகத்தையும் கவனித்தார்.

     கப்பற் றலைவன் தருணமறிந்து விளக்கமளித்தான்.

     “இந்த இளைஞன் பானியில் எங்களிடம் தானாக வந்து சிக்கிக் கொண்டான். ஆயிரம் கழஞ்சு கிடைத்தால் போதும் எனக்கு” என்றான். அடுத்த நொடியே தொகை மாறியதும் இளைஞனை விடுவித்தான். இடையில் அவர் எதுவும் கேட்கவில்லை. அவனும் விளக்க முற்படவில்லை. ஒரு வாரம் ஆகியும் அவனிடம் எந்த வேலையையும் தரவில்லை. வேளைக்குச் சோறு, தேவையானவை அனைத்தையும் கேளாமலே தரப்பட்டன. அடிமைபோல் அல்ல, அந்தஸ்துள்ளவனாகவே மதிக்கப்பட்டான்.

     எட்டாம் நாள் தான் அவராகவே சொன்னார்:

     “இளைஞனே! நீ யார் என்று எனக்குத் தெரியும்!” என்று அவர் அறிவித்ததும் அவன் பதறிவிட்டான். எந்த ஒரு விஷயத்தை இறுதி வரை மர்மமாகவே வைத்திருக்க வேண்டும் என்று அவன் தீர்மானித்திருந்தானோ அந்த மர்மம் சட்டென்று வெளிப்பட்டதனால்!

     “எனக்குத் தெரிந்த விவரம் எவருக்கும் தெரியாது. இப்போதைக்குத் தெரிவதும் அவசியமில்லை!” என்று தொடர்ந்து கூறினார் வாணகோவரையர்.

     கடல் நாடுடையார் இத்தகைய பதிலைச் சொன்னதும் அவன் முதலில் தயங்கினான். பிறகு தயக்கம் நீங்கித் தன்னைப் பற்றி அனைத்தையும் கூறினான். அவனுடைய வரலாற்றைக் கேட்டு கண்ணீர் சிந்திவிட்டார் கலங்கா நெஞ்சினரான கடல் நாடுடையார் கூட!

     “காலம் என்பது நம்மையெல்லாம் மீறி நிற்கும் சக்தியையும் மீறி நகர்வது இளைஞனே. நான் மன்னருக்கும் இந்நாட்டுக்கும் எனது வாழ்க்கையை அர்ப்பணித்தவன். நீயும் அப்படியாக வேண்டும் என்ற விழைவுடன் எஞ்சியுள்ள காலத்தில் உன்னை ஆதரித்து நிற்க முடிவு செய்திருக்கிறேன். எனது தமையனார் வருவார். அவர் எதிலும் பட்டும் படாமலுமிருப்பவர். அவர் என் மீது நிரம்பவும் அன்பு காட்டுபவர். நானோ அவரைத் தந்தைக்குரிய மதிப்புடன் வணங்குபவன். ஆயினும் அவரிடம் கூட சந்தர்ப்பம் நிர்ப்பந்தப்படுத்தும் வரை உன்னைப் பற்றிய உண்மையைக் கூறுவதில்லை என்பது உறுதி” என்றார். அதை இன்று அவர் நேரில் நிறைவேற்றுவதையும் கண்டான் அந்த இளைஞன்!