பொன்னகர்ச் செல்வி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

7. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, அவசரக்காரனுக்கோ!

     ரத்னாம்பரன் ஓடோடி வந்ததைக் கண்ட ஸ்ரீசாமந்தன், நான் எதிர்பார்த்திருந்த ‘அந்தச் சம்பவம்’ நடந்து விட்டதா அல்லது நடந்து ஏற்பாடாகி விட்டதாவென்றறியும் ஆவலை அடக்கமாட்டாமல் தனது இருக்கையை விட்டெழுந்தான் வேகமாக. பீதாம்பரன் தனக்கு இத்தகைய சந்தர்ப்பம் கிட்டவில்லையே என்ற சோர்வுணர்ச்சியுடன் எழுந்தானே தவிர வேகம் காட்டவில்லை. எனினும் ஆவல் உந்தாதிருக்குமா அவனையும்!

     “அந்தப் பயலை அழைத்துக் கொண்டு போயிருக்கிறார் அரசரிடம் கடல் நாடுடையார்!” என்று அவன் பரபரப்புடன் கூறியதும் சாமந்தன் முகம் கூம்பிவிட்டது! சிங்களக் கப்பல் எங்கு இருக்கிறது என்பதையோ, அல்லது அது தகர்க்கப்பட்டு விட்டது என்பதையோ கொண்டு வருவதற்குப்பதில், தான் போட்டிருந்த தூண்டிலில் மன்னர் விழுந்து விட்டார். இன்று பீற்றிக் கொள்ளுகிறானே இந்த முட்டாள் என்று குமைந்தார்.

     எனினும் மன்னர் தனது ஓலை வாசகத்தில் தூண்டப்பட்டுவிட்டார் என்பதை உணர்ந்து சற்று ஆறுதலும் கொண்டான்.

     “இளவரசன் மும்முடி எங்கே ரத்னாம்பரா?” என்று சம்பந்தமின்றி ஒரு கேள்வி சாமந்தனிடமிருந்து வந்ததும் ரத்னாம்பரன் திடுக்கிட்டான். ஆனால் தனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்பதைக் கண்ட பீதாம்பரன் “சற்று நேரத்துக்கு முன்னால் அவன் ஏழெட்டுப் படகுகளைக் கடலோடச் செய்ததைக் கண்டேன் நான்!” என்றான்.

     சட்டென்று வாய்விட்டுச் சிரித்தான் சாவகன். தன்னுடைய ஒரு சின்ன ஓலை, சோழமன்னர் மனதில் எத்தகைய புயலை எழுப்பிவிட்ட தென்பதறிந்து எக்காளமிட்டுச் சிர்க்காமலிருப்பானா அவன்!

     “பீதாம்பரா, ரத்னாம்பரா, இனி தான் நம்முடைய திறமையைக் காட்ட வேண்டும். மும்முடிச் சோழன் கடலோடுகிறான் சிங்களக் கப்பலைத் தேடி எச்சரிக்க. அவனுக்கு முன்னே நாம் கண்டுபிடித்தாக வேண்டும். நீங்கள் இருவரும் ஆலங்காடி செல்லுங்கள் செல்லும் போது நிறைய ரத்னாபரணங்களை எடுத்துச் செல்லுங்கள். வேளக்காரப்படையினர் கேட்டால் அவற்றைக் காட்டிப் புது அணிகள் செய்ய என் உத்திரவு என்று கூறுங்கள். ஆலங்காடியில் உள்ள ஆருவக்காணரைக் கண்டு நமது முத்திரை லிகிதத்தைக் காட்டுங்கள். இன்றிரவு நடு நிசியில் நம்மை பவுத்த விஹாரத்தின் பின்புறமாகச் சந்திக்கும்படி அறிவியுங்கள். பிறகு திரும்புங்காலையில் நரலோக வீரர், கடல் நாடுடையார் இருவருக்கும் என்னென்ன வேலைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன வென்பதையும் அறிந்து பாருங்கள்” என்று மூச்சுவிடாமல் உத்திரவுகளைப் போட்டதும் அம்பர சகோதரர்கள் சற்றும் தாமதமின்றி அங்கிருந்து அகன்று விட்டனர்.

     ஸ்ரீ சாமந்தன் தனது அந்தரங்க ஆலோசகர்களாகவும், மெய்க்காப்பாளர்களாகவும் இவ்விருவரையும் தேர்ந்தெடுத்ததை ராஜகுருவால் தடுக்க முடியவில்லை. சோழ நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரும் ஒற்றர் படையின் ‘மூளை’யாக இவ்விருவரும் செயல்பட்டதும், சாவக மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கிச் சோழ மன்னர் இவர்களுக்கு உயிர்ப் பிச்சை அளித்ததும் ராஜகுருவுக்கு நன்கு தெரியும். தவிர, தமிழர்களுக்குள்ள இயற்கையான விருந்தோம்பும் பண்பாட்டினை விபரீதமாகச் செய்துவிடும் எந்த ஒரு காரியத்தையும் இவர்கள் செய்துவிடக் கூடாதே என்பதிலும் ராஜ குருவுக்கு அக்கரையிருந்தது. ஆயினும் ஸ்ரீசாமந்தனைப் பகைத்துக் கொள்ளவும் ராஜ குருவால் இயலவில்லை. அவன் தான் அரசனின் மைத்துனனாயிற்றே!

     ஸ்ரீசாமந்தனை நன்கு அறிந்தவர் தான் ராஜ குரு புத்தமித்திரர். ஆயினும் அவன் சாவக மன்னருக்கு மைத்துனனாகிவிடும் உறவு முற்றிவிட்டதும், சாவக அரசியலில் இவனுக்கும் இவனுடைய தமையனான அபிமான சாமந்தனுக்கும் மிக்க செல்வாக்கு ஏற்பட்டு விட்டது. அன்னிய நாடுகளான காம்போஜம், ஸ்ரீவிஜயம், சுமந்திரா, சம்பா, பாலி ஆகிய அத்தனை நாடுகளிலும் தமது ஆதிக்கம் ஏற்படுவதற்கான வழி முறைகளைச் சாவக மன்னர் மேற்கொள்ளும்படி இவர்கள் தூண்டி அதில் வெற்றியும் பெற்றுவிட்டனர்.

     இதனால் அண்டை நாடுகளில் சாவகத்துக்கு எதிராகக் கிளர்ச்சியேற்படப் படை பலத்தைக் கொண்டும் இன்ன பிற தந்திரங்களைக் கொண்டும் இவர்கள் ஆடிய ராஜதந்திர சூதாட்டம் சோழ சாம்ராஜ்யம் வரை பரவியது என்றால் அதன் வேகம் எத்தகையது என்று விளக்கப்பட வேண்டியதில்லை.

     சாவக மன்னன் சத்தியசந்தன் தான். புண்யபாவங்களுக்கு அஞ்சிய புத்த சமயத்தினர் தான். எனினும் ஆசையை அடியோடு விட இயலவில்லை. சகோதரர்கள் இழந்து வரும் செல்வாக்கு, அண்டை நாடுகளில் பரவிவரும் கிளர்ச்சி ஆகியவற்றை நோக்கிய அவன் இதுதான் சமயம் இவனை ஒரு நாட்டுக்குத் தூதுவனாக அனுப்ப என்றெண்ணினான். சட்டென்று இவன் சோழ நாட்டுக்குச் செல்ல விரும்பியதும் மன்னன் ஏற்கவில்லை. எப்போதும் அமைதியுடனும் நேசமுடனும் இருந்து வரும் சோழ சாவக உறவு முறை சிதறுவதை அவன் விரும்பவில்லை. ஆனால் சாமந்தன் பிடிவாதம் தளரவில்லை.

     எப்படியானால் என்ன? சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. சூதுகள் செய்பவனுக்கு இது போதாதா?

     புத்தமித்திரர், தமிழ் நாட்டில் தமது சின்னஞ்சிறு பிராயத்திலேயே வந்து, தங்கி பௌத்த சமயப் போதனைப் பயிற்சி பெற்றவர். ராஜேந்திர சோழர் காலத்திலேயே தமிழகத்தின் பொற்காலம் என்று போற்றிய அந்தக் காலத்திலேயே இங்கே இருந்தவர். மன்னாதி மன்னர் ராஜராஜன் ஸ்ரீமாறவிஜயத்துங்கவர்மன் வேண்டுகோளுக்கு இணங்க நாகையில் புத்த விஹாரம் ஒன்றையமைக்க அனுமதித்ததுடன் அவரே முன்னின்று உதவியதையும், அவர் தம் திருமகனும் ஏழு கடல்களிலும் தமது ஆணையைச் செலுத்திவரும், தமிழ் உலகின் மகோன்னத நிலைக்குக் காரணமாக இருந்தவருமான ராஜேந்திர சோழர் நாகை விஹார அமைப்புக்குத் தமது நேர் பார்வையிலேயே அனைத்துதவிகளைச் செய்து உருவாக்கித் தந்தவர் என்பதையும் அறிவார். தவிர மாறவிஜயோத்துங்கர் அளித்த மானியங்கள் நிவந்தங்கள் எத்தனை விஹாரத்துக்குக் கிடைத்தனவோ அத்தனை அளவுக்குக் குறையாமல் சற்று அதிகமாகவே சோழ மன்னர்கள் அளித்ததையும் அறிவார். ராஜ குரு உலகமாதேவி குழந்தையாக இருக்கும் போது பார்த்தவர். அந்தச் சிறுமி ஆடி ஓடி அரண்மனைத் தோட்டங்களில் வளைய வளைய வந்து தோழிகளுடன் நாகைத் துறைமுகத்திலும், புகார் நகரின் ராஜ வீதிகளில் குமரிப் பருவத்தில் சிவிகையூர்ந்து அழகு ராணியாகப் பவனி வந்ததையும், பிறகு அவள் சாளுக்கிய ராஜராஜனை மணந்து சோழ நாட்டுக்கும், சாளுக்கிய நாட்டுக்கும் ரத்தக் கலப்பு உறவு முறையை உண்டாக்கியதையும் அவர் நன்கறிவார்.

     குலோத்துங்கன் பேரரசி அம்மங்காதேவியாரின் செல்ல மகன், அதாவது சோழ ராஜகுமாரியின் மகன் என்ற ஒரே உரிமைதான் ஆரம்பத்தில் அவனுக்கு இருந்ததென்பதையும், ஆனால் சீக்கிரமே தனது திறமையான செயல்களாலும், யுக்தி புத்தியாலும் சோழ நாட்டு மக்களின் அபிமானத்தையும், பெருந்தலைகளின் பெரும் பிரிவின் ஆதரவையும் பெற்றுவிட்டார் என்பதையும் நன்கறிவார். சுருங்கக் கூறினால் கடந்த சில ஆண்டுகள் நிகழ்ச்சிகளைத் தவிர முந்தைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவர் மிக நன்கறிவார். ராஜ குரு என்ற முறையிலும் இந்நாட்டின் வடபகுதியிலிருந்து வந்த பௌத்த சமயத்தின் ஊழியர் என்ற முறையிலும் இவரிடம் அன்றும் சரி இன்றும் சரி பேரரசியும் மற்றவர்களும் பெருமதிப்புக் காட்டுகின்றனர் என்பதையும் அறியாமலில்லை அவர்.

     ஆனால், இதையெல்லாம் ஸ்ரீசாமந்தன் அறிவானா? சம்பா நாட்டில் இவனுக்கு எதிராக இருந்த இந்து சமயத்தினரை உயிருடன் கொளுத்தும்படி இவன் உத்தரவிட்டதை இங்கு அறியாதவர்கள் இருக்க முடியுமா? எவருக்குத் தெரியாதிருந்தாலும் கடல் நாடுடையாருக்கும் மன்னருக்கும் இதுவரை எட்டாதிருந்திருக்குமா?

     ஒருக்கால் இதுவரை தெரியாதிருந்தாலும் நாளை தெரியாதிருக்கும் என்பது எப்படி?

     நாளை தெரிந்ததும் இங்குள்ளோர் சாவகனுக்கு எப்படி ஆதரவு காட்டுவார்கள்?

     “நீங்கள் எப்படியாவது இவனுக்கு எதிராகச் சோழ நாட்டார் எழாதிருக்குமாறு செய்தாக வேண்டும்!” என்று சாவக மன்னன் கேட்டிருக்கிறானே? புறப்படும் போது சாமந்தன் தன் பிராட்டி, “ஒரு கற்பரசியின் சாபம் தனது கணவரைத் தொடருகிறது. அதை நிவர்த்தியுங்கள்?” என்று வேண்டிக் கதறினாளே? அது என்ன?

     இங்கு வந்ததும் அம்மான்களுடன் கூடிக் கூடிப் பேசுகிறானே? அவர்களை அங்கும் இங்கும் தனக்குத் தெரியாமல் எங்கெங்கோ அனுப்புகிறானே? இதெல்லாம் என்ன?

     இவனால் என்றுமே நல்லவனாக வாழ முடியாதா?

     ராஜகுரு இப்படி நினைத்துப் பெருமூச்செறிந்து விட்டு புத்தன் நாமத்தைச் செபிக்கலானார்.

     இவர் தேவன் நாமத்தைச் செபிக்கும் அதே நேரத்தில் சாமந்தன் சாவக சாம்ராஜ்ய விஸ்தரிப்பு என்னும் தனது பெருங்கனவை நினைவாக்கிக் கொள்ளும் சூதான தந்திரங்களை கையாளும் முறைகளைத் தெரிவித்துக் கொண்டிருந்தான்.

     சீன சாம்ராஜ்யத்தையே கிடுகிடுக்க வைத்து சம்பாவையை நிர்மூலம் செய்து விட்டவனுக்கு இந்தச் சோழ சாம்ராஜ்யம் எம்மாத்திரம் என்று தான் பார்த்து விடலாமே!

     சாவகன் சிந்தனையும் விபரீத ஆசைகளும் ஒரு புறம் இருக்க, தமிழகத்தில் வாழும் வலுவும் மிக்க சோழ சாம்ராஜ்ய நிர்மாணம் ஆன கால முதல் அதற்கு எதிரிகள் இருந்ததில் அதிசயமில்லை. ஆனால் ஒவ்வொரு பகையையும் அவர்கள் எதிர்த்து அடக்கி வென்று நிமிர்ந்து நின்றதுதான் அதிசயம். கரிகாலன் வழிவந்த விஜயாலயன் ‘உலகத்தின் மாபெரும் சாம்ராஜ்யத்தின் மாவீரனான முதல் மன்னன்’ என்ற பெயரைச் சோழர்களுக்குப் பெற்றுத் தந்த நாளிலிருந்து நாளது வரை அவர்கல் வழித் தோன்றல்கள் இதற்கு ஊறு நேரும்படி நடந்ததேயில்லை. தவிர குலோத்துங்கன் எட்டு மாமன்னர்களின் எதிர்ப்பினைத் தவிடுபொடியாக்கி விட்டவன். கடலில் ஏகபோகமாகச் சோழர் தம் பெருங்கலங்கள் சஞ்சரிக்கச் செய்தது வரலாற்றின் தனிச் சிறப்பு. ஆயிரமாயிரம் காதங்களுக்கு அப்பால் பரவிக் கிடந்த நாடுகளில் கூட வறுமையோ, பஞ்சமோ தலையெடுக்காமல் செய்த குலோத்துங்கனை, ‘நலமே உருவான வளமார மாமன்னன்’ என்று உலகினர் புரந்து போற்றியதில் வியப்பில்லை.

     ஆனால் தனக்கு எதிரிகள் மீண்டும் மீண்டும் தலையெடுப்பதேன், என்பதுதான் அந்தக் குலோத்துங்கனுக்குப் புரியவில்லை. சோழ நாட்டில் எதிரிகள் இருந்தால் பொறாமை என்று கூறலாம். கலிங்க நாட்டில், கதம்பத்தில் என்றால் அதிசயமில்லை. ஆனால் கடல் கடந்த நாட்டிலிருந்து இங்கு ஒற்றர் நுழைந்து வேவு பார்த்து எதிரிகளுக்கு உதவும்படி என்ன தான் இருக்கிறது!

     பதினெட்டு ஆண்டுகளாகப் போர், போர் என்று முழங்கி, கொன்று குவித்து வெற்றிக்கு வழிகண்டு, அமைதிக்கு உறுதி தேடியாயிற்று என்றால் மீண்டும் எதற்கு இந்தச் சூது வாதெல்லாம்? இதற்கெல்லாம் முடிவே கிடையாதா?

     இந்தச் சிந்தனை உள்ளூர எழுந்து கோபத்துக்கு வகையேற்படுத்திக் கொண்டு தான் மலர்ந்த முகத்துடனின்றிக் கடுகடுத்த முகத்துடன் ஏறிட்டு நோக்கினான் விநயமுடன் எதிர் நின்ற மர்ம இளைஞனை!

     கடல் நாடுடையார் மன்னர் முகம் அடைந்துள்ள மாறுதலுக்குக் காரணம் அறிந்தவர் போல், “இந்த இளைஞன் எனது அடைக்கலம் என்பதுதான் இவனுடைய நிலை அனைத்துக்கும் பொறுப்பும் நான் தான்?” என்று முதலிலேயே அறிவித்ததும் ராஜகேசரி மனம் சற்றே துணுக்குற்றது. தனது உள்ளக் கிடக்கையை அறிந்தல்லவா பேசுகிறார் மனிதர்!

     “ஒரு சாதாரண இளைஞனுக்காகக் கடல்நாடுடையாரே பொறுப்பேற்க வேண்டுமா?”

     “சந்தர்ப்பம் இத்தகைய முடிவுக்கு வரச் செய்திருக்கிறது!”

     “மும்முடிக்குப் பொறுப்பேற்று முன்பு நிறைவேற்றியவர் நீங்கள்?”

     “இல்லை என்று கூறவில்லை. இதுவும் அப்படித்தான்!”

     “அவன் இந்நாட்டின் இளவரசன்.”

     “உண்மைதான்!”

     “அத்தகைய தகுதிக்கு உரியவனுக்குப் பொறுப்பாக இருக்கும் பெருமைக்கு நீங்கள் தகுதியுள்ளவர் கோவரையரே!”

     “அதே பெருமைக்கு இப்போதைய தகுதி எள்ளளவும் குறைந்ததில்லை மாமன்னரே!”

     ராஜகேசரி துள்ளியெழுந்தார் இருக்கையை விட்டு! தன்னைக் கடல் நாடுடையார் அலட்சியப் படுத்தவில்லை. எச்சரிக்கிறார். அவருக்கு இந்த உரிமை இல்லாமலில்லை. எனினும் கேவலம் ஒரு ஒற்றனுக்குப் பரிந்து நிற்கும் போது இப்படி ஒரு எச்சரிக்கையா?

     “கோவரையரே, நாம் இங்கு தனித்திருக்கவில்லை, நம் விருப்பப்படி பேசுவதற்கு.”

     “ஆமாம் குலோத்துங்கா, இதோ நானும் தான் வந்திருக்கிறேன்!” என்று இனிமையான ஆனால் அரசகுலத்தினருக்கே உரிய கம்பீரமிழைந்த குரலொன்று வந்ததும் மன்னர் வியப்புற்றுத் திரும்பிப் பார்த்த போது பேரரசி அம்மங்காதேவி தமக்கே உரித்தான புன்னகையுடன் நின்றிருந்தார். கடுகடுத்த முகம், களக்கமுற்ற மனம், கலக்கமுற்ற சிந்தனை எல்லாம் ஓடிவிட்டது குலோத்துங்கரிடமிருந்து! அன்னையைக் கண்டவுடனே அரசர் ஒரு சிறு குழந்தையாகி விடுகிறார் என்று அனைவரும் கூறுவது இதனால்தானோ!

     “வீரச்சிறுவனே வா, நீதானே நேற்றைக்கு அத்தனை பரிசில்களையும் எங்கள் சோழ நாட்டிளவல்களிடமிருந்து பறித்துக் கொண்டவன்!” என்று கூறிக்கொண்டே மீண்டும் ஒரு தரம் புன்னகைத்துக் கொண்டே, குலோத்துங்கன் காலி செய்த இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

     பேரரசி நேற்றையச் சூழ்நிலையில் கண்டதற்கும் இப்போதைய சூழ்நிலையில் காண்பதற்குமிகுந்த வேற்றுமை அந்த இளைஞனுக்கு நன்கு புரிந்தது. சட்டென்று இரண்டடி முன்னே சென்று அவர் தம் செவ்வடிகளில் சிரம் வைத்து வணங்கினான். பேரரசியும் அதே வேகத்துடன் அவனை வாரி அணைத்து உச்சி மோந்ததும், கடல் நாடுடையார் சட்டென்று தமது முகத்தைத் திருப்பிக் கொண்டாரானாலும் அவர் கண்களில் இரு நீர்த்துளிகள் தளும்பி நின்றதைக் கண்ட மன்னர் மனம் கூட ஒரு நொடி கலக்கமடைந்து விட்டது.

     மாகடல் குமுறினாலும் மனங்கலங்காத மாவீரர், வாணகோவரையரா இப்படிக் கலங்குகிறார்? என்று கூட வியந்தார் மன்னர்.

     ராஜகேசரி குலோத்துங்கர் மாமன்னர் ஆயினும் மனிதர் தானே? சட்டென்று கடல் நாடுடையார் ஆண்டை சென்று, “கோவரையரே கோபத்தில் நாம் நிதானமிழந்து மறந்து விடும்போது வார்த்தைகள் சற்றே தவறிவிடுகின்றன. அவற்றை உடனடியாக மறந்து விடுதல் தான் நிம்மதி தரும் இல்லையா?” என்று கெஞ்சுவது போலக் கேட்டதும் கடல் நாடுடையார் தமது கண்களைத் துடைத்துக் கொண்டு “ராஜகேசரி, இந்தக் கோவரையார் உங்கள் கோபத்துக்குப் பழக்கமானவன் தான். எனவே, அதை உடனே மறந்துவிட்டேன். ஆனால் இதோ இந்த நிகழ்ச்சியைக் கண்டதும் எனக்கு... அடக்க முடியவில்லை!

     மன்னர் திரும்பிப் பார்த்தார்; பேரரசியின் மடியில் முகம் புதைத்து ஏன் மர்ம இளைஞன் இப்படி விம்மி வெடிக்கிறான்? தமது அன்னை அடைக்கலம் என்று வந்த எவரிடமும் பரிவு காட்டுவது இயற்கைதான். ஆனால் இந்த இளைஞனைப் பற்றிய உண்மை தெரிந்தால்... எவ்வளவுக்கு வெறுப்புக் கொள்ளுவார்!

     “கோவரையரே, எனக்கு இதெல்லாமே ஒரே குழப்பமாயிருக்கிறது. யார் இந்தச் சிறுவன் என்றும் புரியவில்லை? எனதன்னையையே மயக்கிவிட்டான். உங்களைக் கூட மயக்கிவிட்டான். இவனைப் பற்றிய உண்மையோ விபரீதமானது!”

     “நீயும் இவனைக் கண்டு சற்று மயங்கினால் என்ன?” என்று பேரரசி கேட்டதும் மன்னர் திகைத்து அன்னையை நோக்கினார். அவளுடைய கண்களிலிருந்தும் நீர் பொல பொலவென்று உகுத்ததைக் கண்டு “அன்னையே இதென்ன கொடுமை? எவனோ ஒற்றன் என்று எனக்கு இவனைப் பற்றித் தகவல் கிடைத்திருக்கிறது! நாளையோ மறுநாளோ சிங்களத்திலிருந்து நல்லெண்ணத் தூதுக் குழுவொன்று கப்பலில் வருகிறது. அந்தக் கலத்தையே தகர்க்க இந்த இளைஞன் திட்டமிட்டிருக்கிறான். தவிர...”

     “நிறுத்துங்கள் மாமன்னரே நிறுத்துங்கள்!” என்று வேகமுடன் குரல் கொடுத்து எழுந்து நின்றான் மர்ம இளைஞன்.

     “நிரபராதிகளைக் குற்றஞ்சாட்டும் பழக்கம் சாவகத்தாருக்குத்தான் உண்டு, அவர்களைக் கொடுமை புரியும் வேலை அவர்களுக்குத்தான் உண்டு என்று நினைத்திருக்கும் எனக்கு இந்தச் சோழ நாட்டிலும் ஒரு மன்னர் இருக்கிறார் அப்படி, என்று உறுதிப்படுத்தி விடாதீர்கள்” என்று குமுறிக் கொட்டியதைக் கண்ட மன்னரே ஒரு நொடி திகைத்து வாயடைத்து நின்றார். மீண்டும் கோபக்களையேறிவிட்டது அவர் முகத்தில்!

     தன்னைக் குற்றவாளியாக்க முயலுபவன் சாவகன் என்பதை இவன் எப்படி அறிவான்? கடல் நாடுடையாருக்குக் கூடத் தாம் அறிவிக்கவில்லையே! ஆனால் இவன் எப்படி உறுதியாகப் பேசுகிறான்?

     “நான் அயல்நாட்டான் தான். ஆனால் உங்களுக்கு அயலான் அல்ல? நான் யார்? என் பெயர் என்ன? என்று கூறிக் கொள்ளாதிருக்கக் காரணம் இருப்பதால் தான் யாருக்கும் கூறவில்லை. என்னைப் பற்றிய மர்மம் உங்களுக்குத் தெரியாதிருக்கும் வரை உங்களுக்கும் சரி, இந்தச் சோழ நாட்டுக்கும் சரி நலமே ஏற்படும்! என்னைத் தயவு செய்து வற்புறுத்தாதீர்கள். ஆனால் ஒன்று மட்டும் உறுதி, தங்களிடம் நான் வந்திருப்பது ஒரு பெரும் இலட்சியத்தை முன்னிட்டுத்தான். அது முடியும் வரை நான் மர்மமானவனாகவே இருந்தாக வேண்டும். எக்காரணம் கொண்டும் மாற்றுவதற்கில்லை!

     “அந்த இலட்சியமாவது என்ன என்று கூறலாமா இளைஞனே!” என்று பேரரசி இதமாகக் கேட்டதும் தனது இடையிலிருந்து வாளை உருவிய இளைஞன் “சோழ மாமன்னருக்கு மெய்க்காவலனாக இருந்து ஒரு குறிப்பிட்ட காலம் வரை இந்நாட்டில் இருப்பது என்பதாக என்னை ஈன்ற எனது அன்னை மீதும் எனக்கு உறுதுணையான இவ்வாளின் மீதும் ஆணையிட்டிருப்பதுதான்!” என்று ஆவேசத்துடன் கூறியதும் பேரரசியே திடுக்கிட்டு எழுந்து நின்றார். இதே சமயம் ஆலயமணிகள் கணகணவென்று எடுப்பாக ஒலித்தன!

     “சகுனம் நல்லதாகவே இருக்கிறது. குலோத்துங்கா இந்த இளைஞன் கூறியதனைத்தும் உண்மைதான்” என்று பேரரசி கூறியவுடன், “அதெப்படி உண்மையென்று திடீரென்று நம்பிவிடுவது பாட்டி? சில ஒற்றன் என்று உறுதி காட்டும் ஓலை வந்திருக்கிறதே!” என்று குறுக்கிட்டுப் பேசிய வண்ணம் மும்முடிச் சோழன் நுழைந்தான். அவன் வந்த வேகமும் வார்த்தைகளை உதிர்த்த வேகமும் அந்தச் சூழ்நிலைக்கும் வேக மூட்டி விட்டது. “என்னைப் பற்றிய ஓலை சாவகனிடமிருந்துதான் வந்திருக்கிறது இல்லையா?” என்று திருப்பிக் கேட்டான் மர்ம இளைஞன்.

     “அதெப்படித் தெரியும் உனக்கு?”

     “அதை அப்புறம் கூறுகிறேன். சிங்களக் கப்பலிலிருப்பவர்களை மூழ்கடித்துக் கப்பலையும் அழித்து விடுவது என்ற முடிவுடன் சோழர்களுடன் சிங்களர்களை மோதவிட்டு இருக்கும் அமைதியைக் குலைப்பது என்பதாக ஒரு சதியைப் பற்றி விளக்கமும் இருக்கிறதல்லவா?”

     “இருக்கிறது இளைஞனே! நீ தான் அதன் மூலகர்த்தா என்பதை ஒப்பினாலும் ஒப்பாவிடினும் அது விளங்கிவிட்டது!”

     மும்முடி இப்படிக் கூறியதும் இளைஞன் கலகலவென்று நகைத்து விட்டு, “முதியவரே நன்றி, ஆனால் நீங்கள்...” என்று மேலே ஏதோ கூறுவதற்குள் மும்முடி கோபத்துடன் முன்னே வந்து “நீ இருப்பது சோழ மாமன்னர் முன்னிலையில் அவர் தம் நிழலில்... என்பது மறந்து கேலி செய்யாதே!” என்று கர்ஜித்தான்.

     “மறக்கவில்லை இளவரசரே. ஆனால் என்னை இளைஞனே என்று நீங்கள் விளித்ததும், நீ, வா, போ என்று ஏக வசனத்தில் பேசத் துவங்கியதும் உம்மை முதியவராக நான் கருதுவதில் என்ன தவறு?”

     இதுகாறும் மன்னரும், கடல்நாடுடையாரும் வாய் திறந்து பேசவில்லை. இப்போது நிலைமை அவர்களையும் வாய் திறக்க வைத்துவிட்டது.

     “இளவரசே! நாம் பிறருக்கு மரியாதை அளிப்பதில் என்றுமே குறை வைத்ததில்லை. நீங்களும் இளைஞர்; அவரும் இளைஞர்; எனவே நம்மை நாமே அளந்து கொள்ள வேண்டுமல்லவா?”

     குலோத்துங்கர் இப்பொழுது ஆத்திரமெல்லாம் கலைந்தவராய் யோசனையே உருவாக மாறித் தமது அன்னைக்கருகில் போய் அமர்ந்து கொண்டார். ஆனால் மும்முடியின் முன்கோபம் தணியவில்லை! மர்ம இளைஞனை விழுங்கி விடுகிற மாதிரி நோக்கினான்.

     “நான் கேட்டதற்குப் பதில் இல்லை!”

     “நீங்களாக எதையும் கேட்கவில்லை; எனவே பதிலுக்கும் அவசியம் இல்லை.”

     “நான் கேட்கவில்லையா? நீ அன்னிய நாட்டு ஒற்றன் என்றேன். எங்களுக்கும் இலங்கைக்கும் இடையூறு உண்டாக்க வந்தவன் என்றேன். உன்னைப் பற்றிய மர்மங்கள் யாவும் புரிந்து விட்டன என்றேன்.”

     “இவை தவறானதொரு தகவலின் பேரில் செய்து கொண்டுள்ள அவசரமான, அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்கள்.”

     “சுற்றி வளைத்துப் பேசாதே!”

     “மீண்டும் எச்சரிக்கிறேன். மூத்தவர்கள் தான் என்னை ஏகவசனத்தில் பேசலாம். இளவரசனாயிருப்பினும் மரியாதை தவறக்கூடாது!” என்று பதிலடி கொடுத்தான் இளைஞன். மும்முடி பொறுமையிழந்து விட்டான்.

     “கடல்நாடுடையாரே, இனியும் பொறுப்பதற்கில்லை. இவனைக் கைது செய்து தள்ளுங்கள் சிறையில்” என்று கத்தினான்.

     “என்னை அவர் கைது செய்வதிருக்கட்டும். நீங்களே செய்தால் என்ன?”

     “கேவலம் ஒரு வேவுக்காரன் நீ! உனக்குப் பேச்சும் ஒரு கேடா?”

     “இளவரசே தன்னிலை மறந்து பேச வேண்டாம். நான் உங்கள் ஏச்சுக்களை இதற்கு மேலும் பொறுப்பதற்கில்லை!”

     “ஏதோ பெரிய வீரன் மாதிரி பேசி விட்டால் போதுமா?”

     “பின்னே என்ன செய்தால் போதும்?”

     “இவ்வளவு பெரியவர்கள் மத்தியில் மறைந்து நின்று வாதாடுகிறாயே நீ!”

     “ஏன் தங்களுடன் தனியாகப் பேச வேண்டுமா? வருகிறேன்! வருகிறேன்! அங்கு வந்து இளவரசனே நீ, வா, போ என்று பேசலாம் அல்லவா?” அவரைக் கேட்ட கேள்வியில் ஏளனமும் இகழ்ச்சியும் இணைந்திருந்தது, இளவரசனுக்கு மேலும் கோப மூட்டியது. “உன்னை நான் வரவேற்பதற்குப் பதில் எனது வாள் வரவேற்கும்!”

     “மிகவும் மகிழ்ச்சி. மரியாதையின்றிப் பேசும் விஷ நாக்குகளைக் காட்டிலும் வாள் முனைகள் பிடிக்கும் எனக்கு!”

     “உண்மையாகவா?” இப்போது இளவரசன் குரலில் ஏளனம் தலை தூக்கியது. “சந்தேகம் எதற்கு?” இன்னமும் இகழ்ச்சித் தொனி மாறவில்லை! “அப்படியானால் நீ ஒற்றன், கேடு விளைவிக்க வந்தவன் என்று குற்றஞ் சாட்டுகிறேன். இல்லை என்பதை உறுதிப்படுத்த என்னுடன் வாள் முனையில் தயாரா?” மீண்டும் மும்முடியின் குரல் ஆத்திரத்துடன் எக்காளமிட்டது.

     “ஏற்கிறேன் தயக்கமின்றி.” பதிலும் எக்காளம் தான்!

     “மும்முடி! இதென்ன அசட்டுத்தனம்?” என்று கேட்டு எழுந்த பேரரசி பாய்ந்து போகத் துடிக்கும் இரு சிங்கங்களைப் போல நிற்கும் இளைஞரிடையே வந்து நின்றாள்.

     “பாட்டி! நீங்கள் இதில் தலையிட வேண்டாம். உங்களுக்குப் புரியாத விஷயம் இது!” என்று கத்தி விட்டான் மும்முடி. அவ்வளவு தான். இளைஞர் இருவரும் வார்த்தைகள் அம்புகளைப் போல வீசிக் கொள்ளுவதில் தலையிடாதிருந்த மன்னர், “மும்முடி நிறுத்து உன் வசைப் பேச்சை! நீ பேசுவது யாரிடம் என்பதைக் கூடவா புரிந்து கொள்ளவில்லை!” என்று கோபமாகக் கர்ஜித்தெழுந்ததும் இத்தனை பேர் முன்னிலையில் குன்றி நின்றான் பாவம்!