பொன்னகர்ச் செல்வி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

8. மர்மம் புரியவில்லை - மாற்றம் நேரவில்லை

     இளவரசன் மும்முடி இனியும் இங்கிருந்தால் தனக்கு மதிப்பில்லை என்பதாக எண்ணி என்னவோ அங்கிருந்தும் அப்பால் போய் விட்டான். ஆனால் போகும் போது மர்ம இளைஞனைப் பார்த்த பார்வையில் தான் எத்துணை அளவுக்குச் சினரேகை பரவியிருந்தது என்பது விவரிப்பதற்கில்லை. மர்ம இளைஞன் தான் இப்போது சுதாரித்துக் கொண்டு பேசினான்! அடக்கமும் அமர்ச்சியும் கொண்ட குரலில்!

     “மாமன்னரே, பேரரசியே! எனக்கு முதலிலேயே நீங்கள் சரியானபடி விளக்கச் சந்தர்ப்பம் அளித்திருந்தால் பல உண்மைகள் புரிந்திருக்கும். சாவகன் என்னை ஒரு ஒற்றன் என்று கருத வேண்டும் என்பதற்காகவே நானே இதையெல்லாம் செய்தேன். அவர்களை, நான் சாவகத்திலிருந்து தொடர்ந்து வந்திருக்கிறேன். எத்தகைய நோக்கத்துடன் ஸ்ரீ சாமந்தன் தூதர் பதவியேற்று இங்கு வந்திருக்கிறான், என்பதை நான் இந்தத் துரித காலத்தில் விளக்குவதற்கில்லை. ஆனால் கடல்நாடுடையாருக்கு அனைத்தும் தெரியும். ஏன்? நான் உண்மையில் யார் என்று கூடத் தெரியும் அவருக்கு. அவரைத் தவிர இன்னும் ஒரே ஒருவருக்குத்தான், அவரும் என்னைப் போல சோழ நாட்டைப் பொறுத்தவரையில் அந்நியர்தான், தெரியும். எனினும் அவரும் யார் என்று நான் இப்போது கூறுவதற்கில்லை.

     நான் உங்களுக்கு மட்டுமில்லை, இறந்து போன ஒரு உத்தம ஜீவனுக்கு இறுதிக் காலத்தில் கொடுத்த உறுதியொன்றின் படி உமக்குத் தக்க சமயத்தில் உதவக் கூடிய ஒரு ஆபத்துதவியாகவே நான் இங்கு வந்திருக்கிறேன். எனவே என்னைப் பற்றித் தேவையற்ற எதையும் ஊகம் செய்யாமல், நம்ப வேண்டுமென்ற வேண்டுகோள் ஒன்றைத் தவிர நான் வேறு எதையும் உங்களிடமிருந்து கோரப் போவதில்லை” என்று கம்பீரமான குரலில் கூறிய போது, வியப்பும், இனந்தெரியாத ஏதோ ஒரு கவர்ச்சியும் கொண்டவராய்ப் பேரரசி அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது, கடல்நாடுடையாருக்குத் தெரிந்து விட்டது. மன்னருக்கும் முதலிலிருந்த வேகமும் கோபமும் விலகிக் கலக்கமும் சற்றே குழப்பமும் தான் ஏற்பட்டிருந்தது.

     “கோவரையா, நீ ஏன் எப்போதும் போலவே இப்பொழுதும் அடங்கி ஒதுங்கி நிற்க வேண்டும்? குலோத்துங்கன் பரபரப்புக்காரன் என்பதறிந்தும் நீ வாய்விட்டுப் பேசாதிருக்கலாமா? இந்த இளைஞன் மர்மம் இவனுடனேயே இவன் விருப்பம் போலவே இருக்கட்டும். ஆனால் சாவகன் ஓலை என்பது நம்மனதில் குமுறலுண்டாக்கி விட்டதே? இந்தச் சிக்கலை அவிழ்ப்பது எப்படி என்பதையாவது நீ சொல்லியாக வேண்டுமே!

     “வழக்கம் போல மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்குச் சற்று மாறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் இதை மடக்க வேண்டும் பேரரசி. மன்னர் இந்த இளைஞனையும் என்னையும் குறிப்பிட்ட காலம் வரை செய்திகளைக் கேட்காமலிருந்தால் போதும். சிங்களத்துக் கப்பல் இங்குச் சீராக வந்து சேரும். சாவகன் சதியைச் சிதறடித்து விட்டோம்!”

     “சாவகன் சதியா? கடல்நாடுடையாரே இதென்ன புது விவரம்! எனக்கு வந்துள்ள ஓலை...” என மன்னர் குறுக்கிட்டு எச்சரித்ததும் கடல்நாடுடையார் வினையமுடன், “இந்த இளைஞனை எங்கிருந்து எதற்காக வருகிறான் என்பதை நம்மைவிடச் சாவகன் தான் நன்கறிவான். எனவே சாவகனும் அவனுடைய கூட்டாளிகளும் போட்டிருக்கும் சூதான திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு இடையூறு செய்யக் கூடியவன் இவன் தான் என்பதையும் அவன் நன்கறிவான். எனவே ஆரம்பத்திலேயே இவன் மீது உங்களுக்கு விபரீத எண்ணம் உண்டாகுமானால், பிறகு அது ஊன்றி உறுதியாகத் தேவையானதனைத்தையும் அவ்ன செய்வான். சாவகன் ஒரே அம்பில் இரண்டு குறிகளைத் தாக்க முற்பட்டிருக்கிறான். அதற்கு நாம் இடமளித்து விடலாகாது” என்று அழுத்தந்திருத்தமாகக் கூறினார்.

     மன்னருக்கு மீண்டும் ஆவலும் ஆத்திரமும் தலையெடுத்து விட்டது. “அப்படியானால் நாம் இந்தச் சிறுவன் கூற்றை நம்பவேண்டும் என்பது உங்கள் முடிவு. அப்படித்தானே?”

     “சட்டென்று நீங்கள் கேட்பதால், நானும் சுருக்கமாக ‘ஆம்’ என்றுதான் சொல்லியாகவேண்டும்.”

     “உங்கள் முடிவை நான் ஏற்றுக் கொள்வதனால்...” என்று மன்னர் மேலும் ஏதோ சொல்ல விரும்புவதற்குள் பேரரசி குறுக்கிட்டு, “கடல்நாடுடையாரே, குலோத்துங்கனுக்கு எதிராகவோ, இந்த நாட்டுக்கு எதிராகவோ உங்கள் குலத்தவர், ஒதுங்கி நிற்கும் கானகத்தின் கருநாகம் கூட மனம் கொள்ளாது என்ற நம்பிக்கை எங்களுக்குண்டு. குலோத்துங்கனைச் சின்னஞ்சிறு வயது முதற்கொண்டு பாதுகாத்து வருபவர்களில் தலைமைப் பொறுப்பு கொண்டவர் நீரும் உமது சகோதரரும். இதைச் சோழர் குலம் என்றும் மறப்பதற்கில்லை!” என்று விளக்கமளித்ததும் மன்னர் மேலே பேசவில்லை. தாய் கூறுவதில் சந்தேகமில்லை. கோவரையர் இல்லையோ கடல் கடந்த நாடுகளில் சோழன் வாகை சூட வழியேயில்லை. சாவகன் மட்டும் அல்ல, சோனகனாயிருப்பினும், சீனனாயிருப்பினும் எவனாயிருப்பினும் இவர் தம் சக்திக்கு முன் ஒரு பொருட்டல்ல. இதெல்லாம் உண்மைதான். ஆனல் இவர் எதற்காக இந்த மர்மச் சிறுவனை ஆதரித்து நிற்க வேண்டும்? இவன் யார், எவன் என்று கூட தெரியாமல் அல்லது எனக்கும் அறிவிக்காமல் மூடி வைக்க வேண்டும்? ஆதாரமில்லாமல் அப்படியொரு ஓலையை அவசரம் அவசரமாக அனுப்புவானா? திருடன் தன்னைத் திருடன் என்று ஒப்புக் கொள்ளுவதில்லை என்பது உண்மைதான். ஆனால் பிறனைத் திருடன் என்று குற்றம் சாட்டத் தனித் தைரியம் வேண்டுமே!

     பேரரசி, மன்னன் எவற்றையெல்லாமோ சிந்தித்துத் சிந்தித்துத் தயங்குவதையும், கடல் நாடுடையார் கலங்கி நிற்பதையும், இளைஞன் அடக்கமாக ஆனால் தன்னம்பிக்கை கொண்டவனாக நிற்பதையும் மாறி மாறி நோக்கிய பிறகு சட்டென்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.

     “குலோத்துங்கா, இந்த இளைஞன் தனது இப்போதைய பெயரால் ‘பாலன்’ என்ற பெயரிலேயே கடல் நாடுடையாருடன் இருக்கட்டும். சந்தர்ப்பம் நேரும் போது நாம் இவனுடைய பணியை ஏற்றுக் கொள்வோம்” என்று கூறியதும் குலோத்துங்கன் அன்னை சொல்லுக்கு எதிர் சொல்லாமல் தலையசைத்தார்.

     “மன்னருக்குப் பூரண சம்மதமில்லை. பேரரசி வற்புறுத்தலுக்காகத்தான் தலையசைக்கிறார். எனினும் நான் சீக்கிரமே அவருடைய பூரண அபிமானத்துக்கு ஏற்றவனாக முயலுவேன். என் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு பாத்திரமானவனாக இருப்பது உறுதி. ஆனால் இதற்காக இன்னொரு வேண்டுகோள். அதை நீங்கள் ஏற்கத்தான் வேண்டும்.”

     “அந்த வேண்டுகோள் என்னவோ?”

     “மெய்க்காவல் படையில் நான் ஒரு இரகசிய ஊழியனாக இணைக்கப்பட வேண்டும்!”

     மன்னர் சட்டென்று எழுந்து கடல்நாடுடையாரை வியப்புடன் நோக்கினார். பிறகு வார்த்தைகள் பலபவென்று அவர் தம் திருவாயிலிருந்து உதிர்ந்தன...

     “கடல் நாடுடையாரே, இந்தச் சிறுவன் யார் எவன் என்பதெல்லாம் கிடக்கட்டும். இவன் நமக்குத் துரோகம் செய்யவே இங்கு வந்துள்ளான் என்பதும் பொய்யாகவே இருக்கட்டும். ஆனால் இவன் எதற்கு நம் மெய்க்காவல் படையில் இருக்க விரும்புகிறான்? நாட்டின் கண்கள் அந்தப் படைகள் என்பதனால் தானே? எப்பொழுதும் விழிப்புடனிருக்கும் மன்னருக்கும் நாட்டுக்கும் ஊறு செய்ய விரும்புவோரைக் குலைத்து அழித்து விடும் படை அது என்பதறிந்து தானே? அதில் இடம்பெற்றால் எந்தத் தடையும் இன்றி, எவர் தடையுமின்றி எங்கும் செல்லலாம். எதிலும் கலக்கலாம், எதையும் செய்யலாம் என்பதனால் தானே?”

     “தாங்கள் கூறுவதனைத்துக்கும் தான்”, என்று பாலன் குறுக்கிட்டுச் சொன்னதும் மன்னர் சற்றே வெகுண்டு, “இவற்றுக்கு மட்டும் இல்லை. மெய்க்காவல் படையில் நீ இணைந்தால் உன்னை யாரும் உளவு காண முடியாது. இதை ஒரு கவசமாகக் கொண்டு நீ எதை வேண்டுமாயினும் செய்யலாம். மன்னர் பக்கலில் இருந்து கொண்டே அவருக்கு...”

     “ஆபத்துக்கள் நேராமல் காக்க முடியும் என்பதற்காகத் தான்!”

     பேரரசி தமது இருக்கையை விட்டு எழுந்து சற்றே முன் வந்து “குலோத்துங்கா, பால்வடியும் இவன் முகத்தில் துரோகத்தின் இரேகை கூட அண்ட முடியாது என்பதைப் பார்த்துப் பேசு. கோவரையரைக் கிஞ்சித்தாவது நாம் சந்தேகிக்க முடியுமா?”

     “முடியாது தாயே! முடியாது. சோழ நாட்டின் இன்றைய பெருமை கடல் நாடுகளில் பரவியுள்ளதென்றால் அதற்கு முக்காலும் காரணம் இவர் தான்.”

     “அப்படியிருக்கும் போது, அவர் கொண்டு வந்துள்ள சிறுவன் மீது நீ ஏன் குற்றங்கான முயலுகிறாய்?”

     “அம்மா, இது சாதாரண விஷயம் அல்ல. இந்தச் சிறுவன் பேச்சும் நடை நொடி பாவனையும் எவரையும் மயக்கவல்லதாயிருக்கிறது? நீங்களே மயங்கி விட்டீர்களே. நானும் கூட ஏதோ ஒரு கவர்ச்சியால் சில நொடிகள் திக்கு முக்காடிப் போனேன். கடல் நாடுடையாரும் ஏன் இப்படி ஏமாந்திருக்க முடியாது?”

     “இல்லை. நான் ஏமாறவில்லை. இவன் யார்? எதற்கு இங்கு வந்திருக்கிறான்? என்பதறிந்தவன் ஆதலால் தான் இந்தச் சிறுவனிடம் நான் ஈடுபாடு கொண்டுள்ளேன். இந்தச் சோழ நாடுமட்டும் அல்ல. இவனால் உங்களுக்கே மகத்தான ஒரு உதவி கிட்டப் போகிறது என்பதறிந்தே இவனைப் பூரணமாக ஆதரிக்க உறுதி கொண்டுள்ளேன். ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் இவனைப் பற்றிய விவரங்கள் மர்மமாயிருக்கும்.”

     “அந்த மர்மங்கள் வெளியாகும் போது நான் எங்கிருப்பேன் என்றும் என்னால் கூற இயலாது” என்றான் இளைஞன் தயக்கமின்றி.

     கடல்நாடுடையார் மேலும் பேசாமல் மன்னரைப் பார்த்தார். தமது அன்னையும், கடல்நாடுடையாரும் இந்த இளைஞன் விவகாரத்தில் கொண்டுள்ள மனோநிலை கண்டு உண்மையிலேயே குழம்பிவிட்ட அவர் ‘சாவகன் ஓலை’ பற்றியும் சற்றே குழம்பத் தொடங்கினார்.

     பேரரசிதான் மீண்டும் பேசினார்.

     “குலோத்துங்கா, நான் இந்த விவகாரங்களில் எல்லாம் தலையிட விரும்பவில்லை. ஆனால் என்னிடம் புக்கமித்திரர் பேசிக்கொண்டிருந்த போது சொன்ன சில விவரங்களை என்னை இவற்றிலிருந்தெல்லாம் ஒதுங்கியிருக்கும்படி விடவில்லை. கங்கைகொண்ட சோழபுரம் போனதும் நாம் சாவகாசமாகப் பேசலாம் என்றிருந்தேன். மீண்டும் அவர் என்னைச் சந்திக்கும் போது நீயும் உடன் இருக்க வேண்டுமென்றார். ஒப்புக்கொண்டேன். அனேகமாக நாளையே அவர் வந்தாலும் வரலாம். ஆனால் அவர் சொன்னதெல்லாம் சாவகனுக்குச் சாதகமானது என்று கூறுவதற்கில்லை!” என்று மனம்விட்டுப் பேசியதும் மன்னர் வியப்புடன் தம் அன்னையைப் பார்த்தார்.

     இதுதான் சரியான தருணம் என்று தீர்மானித்தவரைப் போல கடல்நாடுடையார் மெதுவாக, “நாளைவரை இதுபற்றி சிந்தித்துப் பிறகு ஒரு முடிவு செய்வதில் மன்னருக்கு ஆட்சேபமில்லையே?” என்று கேட்டதும் அவரும் சட்டென்று இணங்கிவிட்டார்.

     ஆனால், பாலனுக்கு, உடனடியாகத் தன் சேவையை மன்னர் ஏற்கத் தயங்கியது கண்டு மனம் பொறுக்கவில்லை. மாற்றானான சாவகன் ஓலைக்குக் கொடுக்கும் மதிப்பு தன்னுடைய விளக்கத்துக்குக் கொடுக்கப்படவில்லையே எனக்குமுறினானாயினும், பேரரசி விடைகொடுக்கும் தோரணையில் “பாலனே, நாளை சோழ மன்னன் சேவையில் புகும்போது வீரபாலன் என்ற பெயரில் மீண்டும் இந்த அரண்மனைக்குள் வந்து சேர்!” என்று சொன்னதும் அவன் சற்றே தெளிந்து வணங்கினான்.

     பேரரசி அம்மங்காவே, சின்னஞ்சிறு வயது முதல் ராஜரீக விஷயங்களில் கருத்துக்காட்டிப் பங்கெடுத்துப் பழக்கம் பெற்றவள். தனது தந்தையாருக்கும், தமையனுக்கும் அவ்வப்போது பல பிரச்னைகளில் உதவிகரமாயிருந்து அவற்றை வெகு எளிதில் தீர்த்து வைத்து அவர்களுடைய அபிமானத்துக்கு மட்டுமின்றி, நாட்டினரின் மதிப்புக்கும் பாத்திரமானவள்.

     குலோத்துங்கன், தனது அன்னையின் ஆலோசனைக்கும், புத்திமதிக்கும் கொடுத்த மதிப்பு மகத்தானது. அவர் ஒரு பெண். எனவே அரசியல் அறியாதவர் என்ற கருத்தினை அவர் என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை. பழுவேட்டரையர்கள், முத்தரையர்கள் கூட அன்னையின் ஆதரவு ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு தான் இவன் சோழ அரியணை ஏறியுள்ளான் என்ற ‘உண்மை’ உண்மைதான் என்றாலும், நாளடைவில் தனது உரிமையை அதற்குகந்த உறுதியை மேற்கொண்டு விட்ட தனது மகனிடம் அபிமானம் காரணமாகச் சில விஷயங்களில் பேரரசி தலையிட்டதேயில்லை.

     தவிர தனது அன்னை முதுமை எய்துகிறாள் என்பதைக் காரணமாகக் கொண்டு மன்னர் தாமே சில முடிவுகளை மேற்கொள்ளத் துணியும்காலை எப்படியோ அரசி அறிந்து கொண்டு விடுவதுண்டு!

     சிங்களத்துடன் நட்புக் கொண்டு அதனை உறுதியாக்க அன்றவர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில் இரண்டொன்று அன்னைக்குப் பின்னால் தெரிவிக்கப்படலாம் என்று தான் மன்னர் கருதினார். ஆனால் பேரரசிக்கு மன்னர் மேற்கொண்டுள்ளதனைத்தும் தெரியாமலில்லை. மகள் சூரியவல்லியின் எதிர்காலம் பற்றி எந்த ஒரு முடிவையும் செய்யத் தந்தையான குலோத்துங்கனுக்கு உரிமையில்லையா என்ன? ஆனால் இது ராஜதந்திர முறையில் தீர்க்கப்படும் ஒரு பிரச்னையைக் கருதி நடப்பதுதான் பேரரசிக்குப் பிடிக்கவில்லை என்பதை யார் அறிவார்?

     “குலோத்துங்கா! சிங்கள உறவுக்கு நாம் கொடுக்க வேண்டிய ‘தானம்’ பற்றிய விவரத்தை மர்மமாக வைத்திருக்கிறாய் அல்லவா!” என்று பேரரசி கேட்டதும் அரசர் திகைப்புற்று “அன்னையே தருணம் வரும் போது தங்களுக்குத் தெரிவிக்காதிருப்பேனா?” என்று சட்டென்று பதிலுக்குக் கேட்டார் பரபரப்பையடக்க முடியாமல்! அன்னை அப்படியோ தெரிந்து கொண்டிருக்கிறார். அனைத்தையும் தம் மனதில் உள்ள திட்டத்தை அவர் தன் மூத்த மனைவி தவிர வேறு எவரிடமும் கூறவில்லை. எனவே அவள் தான் தெரிவித்திருக்க வேண்டும்!

     “நீ தருணம் வரும் போது தெரிவிக்க நினைப்பதைப் போலத்தான் கடல்நாடுடையாரும் தருணம் வரும் போது இவனைப்பற்றி நமக்கு தெரிவிக்க விரும்புகிறார்! சோழ மன்னனுக்குள்ள உரிமை அந்தச் சோழனின் நல்வாழ்வில் கருத்துள்ளவனுக்கும் உண்டல்லவா?”

     மன்னர் சட்டென்று முன்னே சென்று அந்த இளைஞன் தோள் மீது கை வைத்து “வீரபாலா, நீ இந்த நிமிடம் முதலே எனது அந்தரங்கத்திற்குரிய மெய்க்காப்பாளன்” என்று அறிவித்ததும் வியப்பும் மகிழ்ச்சியும் மிஞ்சிவிட்டதால் விம்மிதமடைந்த இளைஞன், “உங்கள் நம்பிக்கைக்கு என்றும் ஊறு நேர விட மாட்டேன். இதோ இந்த வாளின் மீதும் என்னைப் பெற்ற தாயின் மீதும் ஆணை!” என்று முழங்கிப் பிரமாணம் செய்த போது கடல்நாடுடையார், அருகேயிருந்த தங்கப்பெட்டகத்திலிருந்து ஒரு இலச்சினையை எடுத்து வந்தார். பேரரசியே அதை வீரபாலனின் மார்பிலணிந்தார். அவரை மீண்டும் வணங்கக் குனிந்த போது அரசி அவனை அணைத்து உச்சி முகந்து விட்டு, “வீரபாலா சோழ குலம் என்றுமே நன்றி மறவாத வீரகுலமாக்கும்!” என்று கூறும் போது தாமே கண்கள் கலங்கி விட்டார். கடல்நாடுடையாருக்குத் தெரியும் குலோத்துங்கரைக் காட்டிலும், அம்மங்காதேவி எந்த அளவுக்கு நெஞ்சுறுதியுள்ளவர் என்று. ஒரு சமயம் உளவுப் படையினர் தவறான ஒரு செய்தியை ஆதாரமாகக் கொண்டு குலோத்துங்கர் வந்த கப்பல் கவிழ்ந்து விட்டது என்ற தகவலையறிவித்தனர் அரிசியாரிடம். ‘ஐயோ!’ என்று மற்றவர்கள் அலறிப் பதறிய போது அம்மங்காதேவி மட்டும் அஞ்சாமல் கலக்கத்தை வெளிக்காட்டாமல் “சோழநாட்டு மக்களை ஆளக் கொடுத்து வைத்தவனாயிருந்தால் பிழைத்து வருவான். தகுதியற்றவனானால் பிழைத்தலைந்து தான் என்ன பயன்?” என்றார்!

     ஆனால் இதே போன்று ஒரு செய்தியை அதாவது திருபுவன ஆலயத்தின் பிராகாரத்தில் பேரரசி மயங்கி விழுந்து விட்ட சிறிது நேரம் மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்த போது மன்னர் அறிந்து ஓடோடி வந்து “அம்மா நீ போய் விட்டாயா? நான் ஏன் வாழ வேண்டும்!” என்று புலம்பித் துடித்தார்.

     விழித்தெழுந்த பேரரசி, “நீ ஏன் வாழ வேண்டும்! நாட்டு மக்களுக்காக வாழ மனமில்லாதவனா நீ!” என்று திரும்பக் கேட்டு விட்டாள்!

     இதெல்லாம் மன்னருக்கு நினைவிராதிருக்கலாம். கடல்நாடுடையாரால் மறக்க முடியுமா?

     “நீங்கள் உடனிருக்கும் போது என் மகன் உயிரை எமன் எடுத்துக் கொள்ளத் துணிவுண்டாகுமா?” என்று இவரிடமே ஒரு முறை பேரரசி கேட்டிருக்கிறாள்.

     “எனக்கு அது தெரியாது சோழமாதேவி. ஆனால் உங்கள் மகன் என் நண்பன். குலோத்துங்கா என்று நான் சோதர முறையில் அழைக்கும் அன்புக்குரியவன். அவன் உயிர் என் உயிராகும். ஒருக்கால் இந்த உயிர் போன பிறகு அந்த உயிர் பற்றிய கவனம் இல்லாதிருக்கலாம்!” என்று கோவரையரும் பதில் அளித்திருக்கிறார். கடல்நாடுடையார் ஏதோ கருத்தால் தன்னிடம் இந்த இளைஞன், இனி தமது அந்தரங்கப் பாதுகாப்பாளனாக இருக்கப் போகும் வீரபாலன் பற்றிய விவரங்களை மர்மமாக வைத்திருக்கிறார். நான் ஏன் இது பற்றிக் கிலேசமுற வேண்டும்? என்று நினைத்தவர் “சரி கோவரையரே, நான் அன்னையாருடன் சென்று மும்முடிக்குப் புத்தி சொல்லியாக வேண்டும்” என்று தமக்கே இயல்பான கம்பீரப் புன்னகையை, மீண்டும் வரவழைத்துக் கொண்டு மன்னர் கூறியதும், பேரரசி “இப்போது அவனை நாடிச் செல்ல வேண்டாம், பொன்முடி காத்திருக்கிறான் அவனுக்காக! இங்கே கோபித்துக் கொண்டவன் அங்கே முற்றிலும் மாறியிருப்பான்! என்றதும் மன்னரும் கடல் நாடுடையாரும் வாய் விட்டுச் சிரித்து விட்டனர்.

     சற்று நேரத்துக்கு முன்னர் அவ்வறையில் குழப்பம், கோபம், வேகம், ஆவேசம் எல்லாம் நிலவியிருந்தாலும் இந்த நகைப்பொலி அவற்றைப் போக்கிவிட்டது. நல்லதோர் சூழ்நிலை அப்பொழுது அங்கு உருவாகிவிட்டது.

     மன்னரே மீண்டும் தெளிவாகப் பேசினார்.

     “வீரபாலா, நீ சோழ இலச்சினையை அணிந்து கொண்டுள்ளவன் என்றாலும் தற்போதுள்ள சூழ்நிலையில் எனது மெய்க்காவலன்! நரலோகவீரன் இதை மனப்பூர்வமாக வரவேற்க மாட்டான். ஆயினும் நான் அவரைக் கொல்லம் அனுப்புகிறேன். சோடகங்கன் வருகிறான் உளவுக்காரப் படை முதல்வனாக; அவன் முன்கோபக்காரனில்லை. இங்கிதமானவன், இதமாகப் பேசுவான். இரக்கமாகவும் நடந்து கொள்ளுவான். நிதானத்தின் உருவம் அவன்!”

     “ஆனால் உறுதியானவன், எந்த வேலையையும் சாதிப்பதில் அவனுக்கு இணை அவன் தான்!” என்று குறுக்கிட்டார் பேரரசி.

     “உண்மை. கோவரையரைச் சந்தித்துப் பேசும் போது உன்னைப் பற்றி அறிய வேண்டியதை அறிவான். ஆனால், அதுவரை நீ மும்முடியைச் சந்திக்க வேண்டாம். என்றாலும் உங்களிடையே நடக்கலிருக்கும் வாட்போர் பற்றிய கவலை மாறுவதற்கில்லை.”

     “நல்லது. நான் சந்திக்கவில்லை. ஆனால் காரணமறியலாமா? வாட்போரை நான் வேண்டவில்லை. அவராகத்தானே அறைகூவினார்?”

     “உண்மைதான். அவன் எவ்வளவு கோபக்காரனோ அவ்வளவுக்கு நல்லவன் தான். ஆனால், தட்டென்று முன் கோபத்துடன் பாய்ந்து விடுவான். கத்தியைக் கூட உன்னைக் கண்டதும் யோசியாமல் உருவிவிடுவான். அவனுடைய வாள் வீச்சுக்கு எதிர்வீச்சுப் போட இந்த நாட்டில் இப்போதைக்கு எவரும் இல்லை!”

     “அப்படியா? நல்லதுதான். நானும் அதையறிந்து கொள்ள இளவரசருடன் வாள்வீச்சில் ஈடுபடும் வாய்ப்புக் கிடைத்தால்...”

     பேரரசி இப்போது உண்மையிலேயே பயந்துவிட்டாள். இரண்டடி முன்னே வந்து, “வீரபாலா, நீ மன்னருக்கு ஆபத்துதவியாகப் பணியாற்ற உறுதி தந்தவன் இல்லையா?”

     “உண்மைதான் பேரரசி! மறுக்கவில்லை, மாற்றமும் இல்லை!”

     “நீ இறந்து போய்விட்டால் இது எப்படிச் சாத்தியமாகும்?”

     “நான் திடீரென்று இறப்பது எப்படி உறுதியாகும்?”

     “மும்முடி வாளின் முன்னே உயிருடன் திரும்பியவர் இதுவரை இல்லை இளைஞனே!”

     “இனியும் அப்படியே இருக்க வேண்டுமென்பது விதியா?”

     “நீ இளைஞன், நிதானமாகச் சிந்திக்க அனுபவம் போதாது. என்றும் ஒரு இலட்சியத்துடன் இங்கு வந்திருக்கிறாய். அது நிறைவேறும் வரை நீ வாழ்ந்தாக வேண்டும்.”

     “உங்கள் அன்புக்கும் எச்சரிக்கைக்கும் நன்றி. ஆனால் மீண்டும் ஒரு வேண்டுகோள்!”

     “என்னவோ!”

     “மும்முடி என் வாளுடன் மோதுங்கால் நீங்கள் நினைப்பதற்கு மாறாக நடந்து விட்டால்...”

     நீண்ட பெருமூச்சுடன் கரகரப்பேறிய குரலில் மாமன்னர் பதிலளித்தார்.

     “அப்படி நடந்து விட்டால் அதாவது அவன் உயிர் இழந்தால் இந்தச் சோழ குலம் அதை மன்னிக்கவே மன்னிக்காது” என்று கூறும் போது மன்னர் முகம் தான் எப்படி மாறி விட்டது!

     வீரபாலன் இலேசாகப் புன்னகை செய்து விட்டு “நல்லது அரசே நல்லது. இப்போது எனக்குப் புரிந்து விட்டது. உங்கள் மனநிலை! மும்முடியின் உயிருக்கு ஆபத்து நேராது என் வாளால், ஆனால் ஒருமுறையோ அல்லது இரு முறைகளோ சந்தர்ப்பம் அளித்து விடுகிறேன். மூன்றாம் முறையும் சாத்தியமில்லை. நான் வருகிறேன்” என்று புறப்பட யத்தனித்தவனைச் சட்டென்று நிறுத்திய பேரரசி, “வீரபாலா உன்னுடைய பேச்சும், எச்சரிக்கையும் என்னை என்னவோ செய்கின்றன. மும்முடி முன்கோபி, நாளை உன்னை விடமாட்டான். அறைகூவலை மறக்கும் நோக்கமும் உனக்கில்லை. ஆனால் நான் கோருவதெல்லாம் இதுதான். நாளை அவன் சோழ மன்னனாகும் உரிமை கொண்டவன். எனவே அவனுடைய நலம் எங்கள் நலமாகி விடுகிறது. என்றாலும் உன்னை அவன் வென்றாலும் சரி, நீ அவனை வென்றாலும் சரி ஒரே ஒரு முறைக்கு மேல் நீ அவனுடன் வாள் போரிடுவதில்லை என்ற உறுதியைச் செய்து தர வேண்டும். தருவாயா?” என்று துணிவுடன் இறைஞ்சிப் பேரரசி கேட்டதும் ஏறெடுத்துப் பார்த்த வீரபாலன் “ஆகட்டும் சோழமாதேவி!” என்று பதிலளித்து விட்டு அப்பால் சென்று விட்டான். திடீரென்றூ ஏற்பட்ட மாறுதலால், சோகத்தால் பேரரசி மயங்கி விழ விருந்ததைத் தடுத்து மன்னர் தாங்கிக் கொள்ள, “நீங்கள் கலங்க வேண்டாம். நான் கவனித்துக் கொள்ளுகிறேன். ஒரு முறைக்கு மறுமுறை மோதல் ஏற்படாமலிருக்க!” என்று கடல்நாடுடையார் கூறிய பிறகுதான் மூதாட்டி சற்றே தெளிவடைந்தாள். பிறகு கோவரையர் அவர்களிடமிருந்து விடைபெற்றுத் தனது மாளிகைக்குச் சென்றார்.