பொன்னகர்ச் செல்வி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

9. தற்காத்துக் கொள்வான் - தடுமாற்றம் ஏன் உனக்கு!

     வெள்ளிக்கிழமை என்னும் போது மங்கலநாள் என்பது தமிழர்களின் தொன்மையான முடிவு. அன்று தான் அவர்கள் ஆலயத்துக்குச் செல்லுவதிலும், அம்பிகையை வணங்குவதிலும், ஆற்றில் கடலில் நீராடிக் களிப்பதிலும் தன்னிலவைத் தெய்வீக ஒளியாகக் கணித்து ஆடிப்பாடி அக மகிழ்ந்திருக்கும் நன்னாளாக இருக்கும் போது, சோழ மன்னனின் செல்வி சூரியவல்லியும், பொன்முடியும் அதிகாலையிலிருந்தே வெள்ளிக்கிழமைக்கான சிறப்புப் பணிகளைத் துவங்கிவிட்டனர்.

     ஆனால், சூரியவல்லி குறும்புக்காரி. சற்று முன்கோபக்காரி என்பதுடன் - மும்முடியின் தங்கைதானே! - குறும்பும் விளையாட்டுத் தனமும் கொஞ்சம் மிகையாகவே அவளிடம் நிலைத்திருந்ததால், பொன்முடி போன்ற ஒரு சாது - அப்பாவி என்று கூடச் சொல்லலாம். சூரியவல்லியின் கேலி, கிண்டலுக்கு எல்லாம் ஈடு கொடுக்கக் கூடியவள் அல்ல அவள்!

     “மும்முடிக்கு பயந்து என் அறைக்கு ஓடி வந்து என் உறக்கத்தைக் கலைத்து வெள்ளி நாள் என்ற பெயரால் வெள்ளி முளைக்கும் முன்பே தொல்லை கொடுக்கும் சீர்வள நாட்டுப் பொன்முடிப் பிராட்டியாரே... கேளுங்கள்!”

     சூரியவல்லியின் பேச்சு வசனமா, கவிதையாவென்று புரியாமல் அவளுடைய உடைகளைச் சீர் செய்வதில் கருத்தாயிருந்தாள் பொன்முடி. சோழன் மகளுக்கு இந்த அப்பாவியின் மவுனம் ஒரு புதிய தெம்பூட்டியது!

     “நீங்கள் தடுத்தாலும் சரி, அவமதித்தாலும் சரி, கடல் அலைகளின் ஊடாடிச் சென்று நான் நீச்சலாடுவேன்!”

     “வேண்டாம் வல்லி, என் பேச்சைக்கேள். நீ கடலில் மூழ்கி விடுவாய் என்பதற்காக அல்ல, ஆயிரம் காளைகள் மூழ்கித் தூக்கிக் கொண்டு வந்துவிடுவர். ஆனால்...”

     “நிறுத்துங்கள் அண்ணி, நான் இந்தக் கடலைப் போல எத்தனையோ பார்த்திருக்கிறேன்.”

     “எங்கே வல்லி! கங்கை கொண்ட புரத்திலா? அல்லது உறையூரிலா?”

     “நாகையில்.”

     பொன்முடி சிரித்த போது பொன்முத்துக்கள் உதிர்ந்த மாதிரியிருந்தது!

     “வல்லி! இந்தக் கடல் தான் நாகையிலும் பரந்துள்ளது! ஆனால் நீ அங்கே கடலை பார்த்ததில்லை.”

     “அதெப்படித் தெரியும் உங்களுக்கு?”

     “எப்படித் தெரியுமா? கடல் இங்கே நீல நிறம், அங்கே என்ன நிறம் என்று சொல்லேன் பார்க்கலாம்?”

     “ஓ! அதுவா? சிவப்பு நிறம்!

     மீண்டும் பொன்முடி சிரித்ததும் வல்லிக்குக் கோபம் மூக்குக்கு மேலே வந்துவிட்டது. “ஏன் இந்தச் சிரிப்பு அண்ணி. நாகையில் கடல் சிவப்பு நிறம் என்பதற்காகவா? புலவர் வரட்டும வரையே கேட்கிறேன்...”

     “தேவையில்லை வல்லி. நீ சொல்லுகிற மாதிரி கடல் சில சமயங்களில் சிவப்பாகவும் கூடும்!”

     “அதெப்படி அண்ணி?”

     “கடற்போர் நடக்கும் போது! நானே நேரில் பார்த்திருக்கிறேன். வாள் வீச்சில் உயிர் நீங்கும் உடல்கள் உதிரத்தைச் சிந்திக் கடல் நீரைச் செந்நீராக்கும் போது அம்மம்மா எப்படியிருக்கும் தெரியுமா?”

     “நீங்கள் பயங்கொள்ளியாயிற்றே அண்ணி!”

     வல்லியின் கேலியைப் பொருட்படுத்தவில்லை பொன்முடி. ஆனால் கடல், வாள், உதிரம் எல்லாம் அவள் மனதில் பதிந்திருந்த அளவுக்கு வேறெவர் மனதிலும் பதிந்திருக்க முடியாது! இது எப்படி சூரியவல்லிக்குத் தெரிந்திருக்க முடியும்?

     “வல்லி, சென்ற ஆண்டில் கூட நான் இந்த இரத்தக் களறியைப் பார்த்து நொந்ததுண்டு. உனது அண்ணன் நல்லவர் தான். தங்கமானவர் தான். ஆனால் வாள் வீச்சின் போது அவர் கல் நெஞ்சராகி விடுகிறார். சென்ற ஆண்டில் இவர் தம் வாள் வீச்சைக் கேலி செய்த இருவர் ஒரே நேரத்தில் இவருடன் வாள் போர் செய்து மரணமடைந்த காட்சியைக் கண்டவுடன், இவர் மீது பட்ட புண்களுக்கு மருந்திடும் போதும் மனம் மறுகித் தவித்ததுண்டு. நீங்கள் கொடுமைக்காரராக இருங்கள், கோபக்காரராக இருங்கள், ஆனால் இந்த வால் யுத்தக்காரராக இருக்காதீர்கள் என்று கெஞ்சினேன். நேற்றிரவு வந்ததும் வராததுமாய் ‘பொன்முடி என் வாளுக்கு மீண்டும் இரை கிடைத்திருக்கிறது. நாளையே அது அந்த முட்டாளின் உதிரத்தை உறிஞ்சிக் குதூகலிக்கும் பார்!” என்று கர்ஜித்தார். அப்போது ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் என்னிடமிருந்து அகலவில்லை. அவருக்கு நேற்றிரவு முழுமையும் யாரிடமோ ஆத்திரம். வாள்வெட்டு, குத்து என்று தான் பேசிக் கொண்டிருந்தார்!

     “உங்களிடம் எப்படி நடந்து கொண்டார் அண்ணி?”

     “என்னிடம் தானே? ஆவேசமும் ஆத்திரமும் அவரைப் பிடித்திருக்கும் போது நான் அவரிடம் வாய் திறந்து கூடப் பேச முடியாது வல்லி... அந்த உளவாளிப் பயலை என்ன செய்கிறேன் பார் என்று உறுமுகிறார், கத்துகிறார், பதறுகிறார். அவரிடம் நான் எப்படிப் பேசுவது. உளவாளி, உளவாளி என்று உருப்போடுபவரிடம்!

     “எந்த உளவாளிப்பயல் அண்ணி?”

     “அன்று பரிசில்களையெல்லாம் நம் சோழநாட்டாரிடமிருந்து பறித்துக் கொண்டு வாகை சூடினான் பார் ஒரு வீரன்... அயல்நாட்டைச் சேர்ந்தவனான அவன் தான் இங்கு உளவாளியாக வந்தானாம்!

     “ஓகோ! அவரைப் பார்த்தால் வீரராக மட்டுமில்லை, அழகும் அறிவும் கம்பீரமும் கண்ணியமும் நிறைந்தவராகத் தானே தோன்றுகிறார்! உளவாளிக்குரிய தோற்றமில்லையே!”

     “பேஷ்! நீ அவ்வளவுக்கு அந்த வீரனைக் கவனித்திருக்கிறாயா?”

     “போங்கள் அண்ணி! ஆயிரம் பேர்களில் வெற்றி கண்ட ஒரு வீரனைப் பார்க்காதிருப்பது எப்படிச் சாத்தியம்?”

     “அதுதான் இனி இலை வல்லி. அந்த வீரனைத் தான் உன் அண்ணன் நாளை தலை சீவப்போகிறார்!”

     “ஐயையோ! அவர் என்ன செய்தாராம் இந்த அண்ணனை?”

     “உளவு பார்க்க வந்தவர்களுள் ஒருவனாம் அந்த வீரன்!”

     “யார் அப்படிச் சொன்னது?”

     “உன் அண்ணன்.”

     “அப்பாவுக்குத் தெரியாதா? நரலோக வீரருக்குத் தெரியாதா? தாத்தாவுக்குத் தெரியாதா? அவர்கள் அறியாமலா இந்த வீரன் உளவு பார்க்க வந்திருக்கிறார்?”

     “அதென்னவோ வல்லி, இரவு முழுமையும் அவர் உறுமிக் கொண்டிருந்தார். விடிவெள்ளி தோன்று முன்பே கிளம்பிவிட்டார். உன்னுடைய தந்தையிடம் சொல்லலாம் என்றால் அவரும் எங்கேயோ போய்விட்டார்!”

     “ஏன்? நானே போகிறேன். மும்முடியைக் கேட்கிறேன்.”

     “கூடாது வல்லி, அவர் முன்கோபக்காரர்.”

     “இருக்கட்டுமே, நானும் முன்கோபக்காரிதான்...”

     “சரி சரி, நேரம் ஆகிவிட்டது நீராட, வைகறைப் பூசைக்கு நாம் ஆலயம் செல்ல வேண்டும், புறப்படுவோம் வல்லி, நடப்பது நடக்கட்டும்.”

     “அப்படி விட்டுவிடக் கூடாது அண்ணி, அந்த வீரனுக்கு யாராவது எச்சரித்து விட வேண்டும். அண்ணனுக்கு எதிராக யவன் அரபு வீரர்கள் கூட வாட் போரிட முடியாது என்று எச்சரித்து விட வேண்டும். பாவம்! தெரிந்த பிறகாவது உயிர் பிழைக்க எங்காவது ஓடிப் போகட்டுமே!”

     “அது தான் முடியாது வல்லி. அந்த வீரனும் வாட் போர் செய்யத் தயார் என்று அறிவித்திருக்கிறாராம்.”

     “அடக்கடவுளே... அப்படியானால்...”

     “அவர் தான் காக்க வேண்டும்...”

     கடலுக்கு நீராடச் சென்ற வல்லிக்கும் சரி, பொன்முடிக்கும் சரி மனக்கலக்கம் தீரவில்லை. அன்று கடற்கரையில் போட்டி நடந்த காலை, கொஞ்ச நேரம் தான் வீரபாலனை பார்த்திருக்கிறாள். ஆயினும் அவன் முகம் நன்றாக நினைவிருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் அவன் வெற்றி கண்டதும் இளங்காளைகளும் கன்னியரும் அவனைச் சுற்றி மொய்த்துக் கொண்டிருந்ததும் எப்படி வல்லியின் பார்வையிலிருந்து தப்ப முடியும்? அன்றைய நிகழ்ச்சிகளை நினைவுக்குக் கொண்டு வந்தாள்.

     மன்னர் கேட்ட போது தன் பெயரைக் கூடச் சொல்லவில்லை. அந்நியநாட்டான் தான் என்றாலும் இங்கு யார் ஆதரவிலாவது தங்கியிருக்க வேண்டுமே? அண்ணன் நேற்றுத்தான் வந்தான். அதற்குள் எப்படி இவனைப் பகை கொள்ள முடிந்தது? இடுமூஞ்சிக்காரறான இவருடன் எப்படி அந்த வீரன் சந்திக்க நேர்ந்தது! அன்று அவன் எவ்வளவு கண்யமாகவும் பெருந்தன்மையுடனும் நடந்து கொண்டான்!

     “ஏன் அண்ணி? அந்த வீரன் இப்போது எங்கே தங்கியிருக்கிறாராம்?” என்று மனதிலுள்ளதைக் கேட்டு விட்டாள்.

     “நம்முடைய கடல்நாடுடையார் மாளிகையில் அவர் ஆதரவில் இருக்கிறாராம்” என்று பொன்முடி கூறியதும் சற்றே நிம்மதியுணர்வு பெற்ற வல்லி, உடனடியாக முடிவு செய்துவிட்டாள், நீராடி முடித்த வேகமும் அலங்கரித்துக் கொண்ட நேரமும் ஓடிய போது, அவளைத் தாங்கிய சிவிகை அடுத்த நாழிகையே கடல்நாடுடையார் மாளிகை நோக்கிச் சென்றது. அங்கே தானே அவளுடைய அன்புத் தோழி வடிவு இருக்கிறாள்!

     பஞ்சரதிவாளரன் செல்வமகளான, வடிவுடைநாயகியும் சூரியவல்லியும் சிசுப்பருவத்திலிருந்தே இணைபிரியாது வளர்ந்தவர்கள், கங்கைகொண்ட சோழ புரத்திலும், பூம்புகாரிலும் இந்தச் சிறுமிகள் ஆடிய ஆட்டமும், கண்ட கனவுகளும், பரிமாறிக் கொண்ட ஆசை நினைவுகளும் எத்தனையோ! பேரரசியும், மன்னரும் கடல்நாடுடையாரின் மாளிகையில் இவள் வாநாள் முழுமைக்கும் இருக்க விரும்பினாலும் மறுப்பதற்கில்லை. ஆனால் இளவரசியாகப் பிறந்துவிட்ட ஒரு தடுப்புச்சுவர் தான் தோழிகளான அவர்கள் இருவரையும் சமீபகால மாறுதல்கள் பிரித்து வைத்திருந்தன!

     அதிவேகமாகப் பாய்ந்து வந்த பரிமா ஒன்று சூரியவல்லியின் சிவிகையைத் தாண்டி ஓடிய போது இருவீரர்கள் இடைமறித்து ‘வீரனே நில்’ என்ற பிறகுதான் அந்தப் பரிமா மீது அந்த அன்னிய இளைஞன் அமர்ந்திருப்பதைக் கவனித்தாள் வல்லி. அவனும் சட்டென்று கடிவாளத்தைப் பிடித்து நிறுத்த குதிரை துள்ளித் துள்ளி நகர்ந்தபடி நடனமாடியது!

     “வீரனே, இளவரசியின் சிவிகை வரும் போது எதிரே வந்த நீ வணக்கம் செலுத்தாமல் போவது வியப்பளிக்கிறது” என்று சிவிகையுடன் வந்த வீரர்களில் ஒருவன் கூறவும், வீரபாலன் ஒருமுறை வாய்விட்டுச் சிரித்து விட்டு, “அப்படியா! வணக்கத்தை வலுவில் கேட்டுப் பெறும் உங்கள் செய்கைதான் எனக்கு வியப்பளிக்கிறது. தவிர யாரை வணங்குவது, வணங்காதிருப்பது என்பது எனது விழைவைப் பொறுத்தது!” என்று அறிவித்து விட்டுக் குதிரையை தட்டி விட்டான்!

     சிவிகைக் காவலனுக்கு ஏற்பட்ட கோபம் எல்லை மீறி விட்டது. ‘பிடியுங்கள் அவனை’ என்று உறுமித் திரும்பினான். ஆனால் இளவரசியின் ‘நில்லுங்கள்’ உத்தரவு அவர்களைச் சட்டென நிறுத்தியது.

     “அவன் யாரோ அன்னியன். நம்மைத் தெரியாதிருக்கலாம். எனவே நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை” என்று கொஞ்சம் வேகமாகச் சொன்னதும் வீரர்கள் தயக்கத்துடன் திரும்பி கடல்நாடுடையார் மாளிகையில் நுழைந்தனர், சிவிகையைத் தொடர்ந்து. எனினும் அந்த வீரனின் துடுக்குத்தனமான பேச்சை அவளால் மறக்க முடியவில்லை.

     மாளிகையின் ஆசாரவாசலில் வண்ணக்கோலம் இழைத்துக் கொண்டிருந்தவர்களை மேற்பார்வை செய்து கொண்டிருந்த வடிவுடைநாயகி இளவரசியின் சிவிகையைக் கண்டதும் ஓடோடி வந்தால். வரவேற்பு, உபசரிப்பு எதையும் பொருட்படுத்தாமல் தோழியர் இருவரும் அன்பாலிங்கனம் செய்து கொண்டு சட்டென்று மாளிகையுள் நுழைந்து விட்டனர்.

     இளவரசி சமீபகாலமாக இங்கு வந்ததில்லை. ஏதோ அவசரமான, முக்கியமான ஒரு பிரச்னை எழுந்திருப்பதால் தான் அவளே வந்திருக்கிறாள் என்பதை ஊகித்த வடிவு, “வடிவு, நீ உன் மாளிகையில் ஒரு வடிவழகனைக் கொண்டு வைத்திருப்பதை எனக்கேன் தெரிவிக்கவில்லை?” என்று வெடுக்கெனக் கேள்வி வந்ததும் திக்குமுக்காடி விட்டாள். சிரிப்பதா, வெறுப்பதாவெனப் புரியாதவளானாள் வடிவழகி எந்தப் பிரச்னையில் தீர்வு காண முடியாமல் தவிக்கிறாளோ அதே பிரச்னை இளவரசியிடமிருந்தும் வந்ததால்!

     “நான் கொண்டு வைத்திருப்பதாக உனக்கு யார் கூறியது வல்லி, இம்மாதிரி இன்னொருவர் கேட்டிருந்தால், இந்நேரம்...”

     “அவர்கள் நாக்குத் துண்டிக்கப்படும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்த வல்லியின் நாக்குக்கு ஆபத்தேற்படாது என்ற தைரியத்தில்தான் கேட்டேன்...”

     தோழிகள் இப்போதுதான் வாய்விட்டுச் சிரித்தார்கள். அப்பாடி! இவ்வளவு கலகலப்பாகச் சிரித்து மகிழ்ந்து ஆடி ஓடி எத்தனைக் காலம் ஓடிவிட்டது!

     “அந்த வீரன் யார் வடிவு? உங்கள் மாளிகையில் கோவரையர் ஆதரவில் இருக்கிறார் என்றால் உனக்குத் தெரியாமலா?”

     “எனக்குத் தெரியாமலில்லை வல்லி. ஆனால் அந்த வீரன் தான் ஒரு புரியாத புதிர்.”

     “அப்படியென்றால்!”

     “அப்படியென்றால் அப்படித்தான். அவர் இங்கு வந்து நாட்கள் பல ஆகியும், எவருடனும் கலகலப்பாகப் பழகுவதில்லை. நானே வலியச் சென்று பேச முயன்றாலும் அவர் தாம் ஒரு அந்நியர்தான் என்பதை வற்புறுத்துவதைப் போல ஒதுங்கி விடுவார்.”

     “அடக்கடவுளே! இந்த வடிவைக் கண்டு மயங்கி அவள் காலடியில் விழுந்து கிடக்கத் தெரியாத பயங்கொள்ளியா அவன்?”

     “நிறுத்து வல்லி, உன் குறும்புப் பேச்சை! அந்த வீரரிடம் மிக்க மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது இங்கு இடப்பட்டுள்ள உத்திரவு! இப்படித் தத்துப்பித்து என்று உளறினால் சித்தப்பாவுக்குக் கோபம் வரும்!”

     “அப்படியா? நான் இந்நாட்டின் இளவரசி. ஏதோ ஒரு நாட்டு வீரனை ‘அவர் இவர்’ என்று கூறுவது என் மதிப்புக்கு இழுக்கில்லையா?”

     “எனக்குத் தெரியாது வல்லி, நான் கூட பஞ்சநதிநாட்டு இளவரசி தான். என்றாலும் நான் சோழகுல வல்லிக்கு ஈடாவேனா?”

     “போதும் உன்னுடைய கேலி. நான் வந்த வேலையைச் சொல்லி விடுகிறேன். மும்முடிக்கு இந்த வீரனைப் பிடிக்கவில்லை. எனக்குக் காரணம் தெரியாது. ஆனால் தன்னுடன் வாட்போரிட இந்த வீரனை அழைத்திருப்பதாக அறிந்து வந்தேன்.”

     “அவர்கள் போரிட்டால் நமக்கென்ன கவலை?”

     “அதென்ன வடிவு? என் அண்ணனுடன் வாள்போரிட்டு வென்றவர் இதுவரை யாராவது உண்டா?”

     “அதற்காக நாம் கவலைப்பட்டென்ன பயன்? கடல் நாடுடையாரும் கவலைப்படவில்லை. இந்த வீரனும் அப்படித்தான்!”

     “என்ன! கடல்நாடுடையாரே கவலைப்படவில்லையா? அப்படியானால்...” இளவரசியின் தயக்கம் நீண்டது.

     “அப்படியானால் என்ன வல்லி?”

     “இந்த வீரன் எனது அண்ணன் வாளுக்கு இறையாகட்டும் என்று அவரும் எண்ணியிருக்கிறார் போலிருக்கிறது!

     வடிவு சிறிது நேரம் பேசவில்லை. கோவரையர் அந்நிய வீரனிடம் காட்டும் அன்புக்கும் மதிப்புக்கும் இந்த மாதிரி வல்லி பேசுவது களங்கமுண்டு பண்ணுவதைப் போலல்லவா இருக்கிறது? இப்படி நினைத்தவளுக்கு சற்று நேரத்துக்கு முன்னர் அந்த வீரன் பேசிய பேச்சும் நினைவுக்கு வந்தது.

     “இளவரசன் வாள்வீச்சுக்கு இலக்கானவர் உயிர் பிழைத்ததில்லை!” என்று வடிவு விளக்கிய போது வீரபாலன் “இலக்கானவர்கள் உயிர் தப்புவது சாத்தியமேயில்லை!” என்றன. இந்தப் பதில் ஒரு புது மாதிரியாக இருந்தது அவளுக்கு. “நீங்கள் இது தெரிந்துமா அவருடன் போரிட விரும்புகிறீர்?”

     “நான் விரும்பவில்லை. அவர் விரும்பினார். ஏற்றுக் கொண்டேன் மறுக்காமல்!”

     “உயிர் வாழ்வதற்கு எவ்வளவு அவசியம் என்பது தெரியாதா உமக்கு?”

     “அதைக் காட்டிலும் மானம் தான் பெரிது என்பது மறக்குலத்தினர் அறிந்த உண்மை.”

     “பேச்சு, வாளை வென்றுவிடுமா என்ன?”

     “பேச்சும் ஒரு கருவிதான். இதைப் பயன்படுத்துவதற்கும் தனித்திறமை வேண்டும்.”

     “உங்கள் பேச்சுக்காக இளவரசர் காத்திருக்க மாட்டார். உங்களுடன் வாட்போரிட இயலாது என்று நீங்கள் ஒதுங்க முயன்றாலும் விடமாட்டார். இலங்கை வீரபாகு இப்படித்தான் கேட்டான். பயனில்லை. யவன நாட்டுக்கு மெக்கான்டர், அரபு நாட்டு ஆறமே ஆகியோர்கள் உலகின் மிகச் சிறந்த வாள் வீரர்கள். இவரிடம் சிக்கித் தீர்ந்ததை எடுத்துக் காட்டியும் இவர் தளரவில்லை. பதிலுக்கு இவ்வளவு தானா?” என்று கேட்கிறார்.

     “வடிவு, இளங்கன்று பயமறியாது. இவர் துடுக்குப் பேச்சால் இவர் உயிருக்கும் பேராபத்து காத்திருக்கிறது. நான் வரும்போது என் வீரர்கள் மரியாதை காட்ட வேண்டும் என்று எச்சரித்தால், அதைக் கேட்டு வாங்கும் விந்தையைப்பார் என்று கேலியாய் பேசுகிறார்!”

     வடிவு வாய்விட்டுச் சிரித்தபடி, “இம்மாதிரிதான் ஒரே கேலிப் பேச்சும் குறும்பான பதிலும் இவரிடம் நேற்று மும்முடி முரடர் ஜாக்கிரதை என்று எச்சரிக்கும் போது ‘ஆமாம்’ ஒரு முடி இருந்தால் அடக்கமிருக்கும். மும்முடி முரண்டு பிடிக்கிறதாக்கும். மிகையைத் தரித்துவிடாது போய்விட்டதுதான் தப்பாகிவிட்டது!” என்று கிண்டல் செய்தால் வல்லி.

     “கோவரையர் இப்போது எங்கிருக்கிறார் வடிவு?”

     “இளவரசரும் அவரும் சில படகுகளுடன் கடலோடியிருக்கிறார்கள்!”

     “நல்ல காலம். எனவே வாள்போர் இப்போதைக்கு இல்லை!”

     வடிவு இந்த நிம்மதிப் பேச்சைக் கேட்டதும் பரபரத்து “அதுதான் இல்லை. நாளைய ஞாயிறு மதியத்தில் நமது புகார்க் கடற்கரையில் உள்ள எங்கள் பூங்காவில் இவர்கள் வாட்கள் மோதுகின்றன” என்று பதிலளித்தாள்.

     இளவரசி மேலும் பேசாமல் சற்று நேரம் மவுனமாயிருந்தால். வீரன் அந்நியன், அறிமுகமாகாதவன். கடல்நாடுடையாருக்கோ அதிகம் அக்கரையில்லை இவனைக் காப்பதில்! எனவே இனித் தந்தையிடம் கூற வேண்டும், அல்லது தமையனிடமே வேண்டினால் என்ன? உம்! பயனிராது? ஒருவேளை பெரிய பிராட்டியிடம் முறையிட்டால், ஏதாவது கொஞ்சம் பலனுண்டாகலாம்.

     “வடிவு, நாம் மீண்டும் சந்திக்க வேண்டும். இயன்றால் நீ நாளை அரண்மனைக்கு வா. இல்லையேல் நானே மறுநாள் வருகிறேன்” என்று சுருக்கமாகப் பேசி விடைபெற்றுச் சிவிகையேறினாள்.

     இளவரசிக்கு இந்த வீரனிடம் ஏன் இவ்வளவு அக்கரை? அழகிகள் அதுவும் அந்தப்புர மோகினிகள் என்றால் பயங்கரப் பைசாசங்களை விட பயங்கரமானவை என்று வெகுண்டோடும் வீரபாலனிடம் இவளுக்கு இத்தனை ஈடுபாடு என்றால், தன் நிலையை எப்படி மாற்றி விட்டுக் கொடுக்க முடியும்? அவன் இந்த நாட்டுக்கு வந்த நாளிலிருந்து அவனிடம் இதயத்தைப் பறிகொடுத்துவிட்டுத் திரும்பிப் பெற வழியறியாது தவித்து வரும் தனக்குப் போட்டியாக, இளம் வயதுத் தோழியும் அன்பும் பண்புமுள்ள இளவரசியுமான சூரியவல்லியா வரவேண்டும்? இதென்ன புதிய சோதனை? ஏற்கெனவே வீரன் எட்டாக் கையிலிருக்கிறான். இப்போது இளவரசியும் இடையே புகுந்தாள்...

     சிவிகையிலிருந்த இளவரசியின் மனமும் இதே போன்று தான் யோசனையில் மூழ்கியது. வீரபாலனை நேருக்கு நேர் சந்தித்த போது கூட அவன் தன்னை இலட்சியம் செய்யாமல் சிவிகையில் வருவது யார்? பெண்ணா, ஆணா, அழகியா, குமரியா என்று கூடக் கவனிக்காமல் குதிரையில் பாய்ந்து சென்ற அழகை இவளல்லவா கவனிக்கும்படி செய்து விட்டான்! என்று நினைத்தாள். அரண்மனையில் பேரரசியின் திருமாடத்தில் போய் இறங்கிய பிறகுதான் இளவரசிக்குக் குழப்பம் ஏற்பட்டது!

     உனக்கு அந்த வீரனிடம் ஏன் இந்த அனுதாபம்? என்று பாட்டி கேட்டால்... கிண்டிக் கிளறிக் கேட்டு எதையும் புரிந்து கொண்டு விடும் சக்தியுண்டே அந்த மூதாட்டிக்கு.

     மும்முடியிடம் தலையை நீட்டும் முட்டாளைக் காப்பாற்றும் நோக்கம் என்று பாட்டியிடம் சொல்லித் தப்பிக்க முடியுமா?

     எப்படியோ பாட்டியிடம் குழைந்து நயந்து பயந்து பேசினால் ஒரு வேளை தலையிட முன் வந்தாலும் வரலாம்!

     “எங்கே வந்தாய் இந்தக் காலைவேளையில் வல்லி? உன்னுடைய அண்ணியும் அன்னையும் மறைக்காட்டுக்கு ஓடத்தில் சென்றுள்ளார்களே... நீ மட்டும் இங்கென்ன செய்கிறாய்?” என்று கேட்டபடி முதிய பிராட்டி அவளை வரவேற்றதும், “பாட்டி, நான் உங்களிடம் ஒரு கோரிக்கையுடன் வந்திருக்கிறேன்!” என்று துவங்கினாள் சட்டென்று.

     “எனக்குத் தெரியும். வேறெதற்கும் நீ இங்கு என்னிடம் வரமாட்டாய் என்று?”

     “கோரிக்கையைக் கேட்டால் நீங்கள் இவளுக்கேன் இந்த வம்பு என்று கூட நினைக்கலாம்!”

     “நினைக்கிறேனோ இல்லையோ கேட்பதைக் கேட்டுவிடு. நடப்பது நடக்கத்தான் செய்யும்.”

     “இது வேதாந்த வார்த்தை பாட்டி. நான் வந்தது...”

     “ஒரு கோரிக்கைக்காக. அது நிறைவேறாது. ஏனென்றால் அதைக் கவனிக்க நானும் உன் தந்தையுமே போகிறோஒம்! தவிர விருப்பமும் தைரியமும் இருந்தால் நீயும் வரலாம்!”

     பாட்டி புன்னகைத்துக் கொண்டே இப்படிக் கூறியதும் சோழகுல வல்லி திகைத்து விழித்தாள். பாட்டி எதைப் பற்றி பேசுகிறாள்?

     “ஏன் வல்லி இப்படி விழிக்கிறாய்? நாளை மறுநாள் நம் புகார்க்கரையில் ஒரு சிறந்த வாட்போர் நடைபெறுகிறது. அதில் உனது அண்ணன், அயல்நாட்டு வீரன் ஒருவனுடன் மோதுகிறான். இம்மாதிரி வீர விளையாட்டைக் கண்டு விழிகள் மகிழ்ந்து நெடுநாளாயிற்றல்லவா?”

     “இதெப்படிப் பாட்டி உங்களுக்குத் தெரியும்?”

     “பேத்திக்குத் தெரியும் போது எனக்குத் தெரியலாகாதா? தவிர இந்த மோதலுக்குக் காரணமே நானும் உன் தந்தையும் தான்! கடல் நாடுடையாரும் காடவர் கோனும் மத்தியஸ்தர்கள். அந்நிய நாட்டுத் தூதுவர்கள் எண்மர்கொண்ட ஒரு குழுவும் நம் நாட்டுப் பிரமுகம் எண்மர் கொண்ட இன்னொரு குழுவும் பார்வையிட்டுத் தீர்வு காண்பவர் ஆவர்!

     “பாட்டி! இதென்ன விபரீதம்? கேவலம் எவனோ ஒரு வீரன் என் அண்ணன் வாளுக்கு இரையாகி, ஏற்கெனவே கோபக்காரன் என்று பேருள்ள இவனுக்கு இன்னொரு கெட்ட பெயரையும் இணைத்துத் தருவதை நீங்களுமா அனுமதிக்க வேண்டும்? அது நமக்கு அவமதிப்பில்லையா?”

     “முடிவைப் பற்றி நாம் ஏன் இப்போதே மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டும்? ஒரு வீரன் அறை கூவலுக்கு இன்னொரு வீரன் - நீ நினைப்பதைப் போல அவன் ஒரு சாதாரண வீரன் அல்ல - ஒப்பியிருக்கிறான். எனவே முறைப்படி ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. அதுவரை நீ பதற்றப்படாமல் பொறுத்திருந்தால் போதும். இதற்காக நீ ஏன் இவ்வளவு சிரமப்பட்டு இங்கும் அங்கும் அலைய வேண்டும் வல்லி?” என்று கேட்டதும் இளவரசி மவுனமாகிவிட்டாள்!