மதுராந்தகியின் காதல்

(மாயாவி அவர்களின் ‘மதுராந்தகியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, பிழை திருத்தி எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

முதல் பாகம்

அத்தியாயம் - 1. வெற்றி வீரர்களுக்கு வரவேற்பு

     அன்று கங்கை கொண்ட சோழபுரம் அல்லோல கல்லோலப்பட்டது. அதன் பல்வேறு பகுதிகளான *உட்கோட்டை, மளிகை மேடு, ஆயிரக்கலம், வாணதரையன் குப்பம், கொல்லாபுரம், வீரசோழ நல்லூர், சுண்ணாம்புக்குழி, குருகை பாலப்பன் கோவில் ஆகியவை தனி அலங்காரத்துடன் விளங்கின. இப்பகுதியிலுள்ள ஒவ்வொரு வீதியும் மாவிலைகளாலும், மகா தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு கடை-கண்ணியிலும், சுத்தமாக வாசல் மெழுகப் பட்டு, மாக்கோலம் போடப்பட்டிருந்தது.

     (*இவை இன்றும் தனித் தனிச் சிற்றூர்களாக இலங்குகின்றன.)

     அன்று அம்மாநகரின் வாணிப நிலையங்களுக்கும், அரசாங்க அலுவல் சாலைகளுக்கும், கல்விக் கேந்திரங்களுக்கும் விடுமுறை. எனவே, பகலில் இத்தலங்களில் அடைப்பட்டிருப்போர் பலரும், அன்று விடுதலை பெற்றவர்களாக மகிழ்ச்சி ததும்பும் முகத்துடன் காணப்பட்டனர்.

     நகரத்து ஆண்களும் பெண்களும், சிறியோரும் பெரியோரும், புத்தாடைகள் புனைந்து, பல்வேறு ஆபரணங்களை அணிந்து, எங்கோ திருவிழாவுக்குப் புறப்பட்டிருப்பவர்கள் போல காணப்பட்டனர்.

     வீட்டுப் பெண்டிர் அதிகாலையிலேயே வீட்டைச் சுத்தம் செய்து, அலங்கரித்து, காலை உணவு ஆக்கி வீட்டில் உள்ளோருக்கு அளித்துத் தாங்களும் உண்டுவிட்டு, குழந்தைகளும் தங்களும் நல்ல ஆடை-ஆபரணங்களை அணிந்து கொண்டு, ஆவலுடன் வீட்டுத் திண்ணைகளிலோ, அல்லது உட்கோட்டைக்குச் செல்லும் இராசவீதி முடங்குகளிலோ கூடி நின்றனர்.

     நகரின் வெளிக்கோட்டைக் கிழக்கு வாயிலிலிருந்து உட்கோட்டைக்குச் செல்லும் இராசவீதியின் இரு மருங்கிலும் ஒரே ஜனத்திரள். அனைவரின் கண்களும் கிழக்குக் கோட்டை வாயிலிலிருந்து வரும் வழியிலே பதிந்திருந்தன. அந்தப் பல்லாயிரக் கணக்கான கண்களிலேதான் எத்தனை மகிழ்ச்சி! எத்தனை பெருமிதம்! எத்தனை ஆர்வம்!

     ஆம், அவர்கள் மகிழ்ச்சிக்குக் காரணம் இருந்தது; பெருமிதத்துக்குக் காரணம் இருந்தது; ஆர்வத்துக்கும் காரணம் இருந்தது. சோழநாட்டுடன் பலகாலமாகத் திருமணத் தொடர்பாலும், அரசியல் தொடர்பாலும் இணைந்து, அதை ஒரு பேரரசாக இயங்கச் செய்து வந்த வேங்கி நாட்டைக் கைப்பற்ற முயன்றான் மேலைச் சளுக்கிய மன்னன் ஆகவமல்லன். அவனையும் அவனது படையையும் முடக்காற்றுப் போரில் புறமுதுகிட்டு ஓடச் செய்து வெற்றி வாகை சூடிய சோழப் படையும், அதனை நடத்திச் சென்ற மாமன்னர் இரண்டாம் இராசேந்திரதேவர், பட்டத்து இளவரசர் இராசமகேந்திரர், அவர்களது இளைய சகோதரர் வீரராசேந்திரர் ஆகியோரும் மற்றும், மிலாடுடையான் நரசிங்கவர்மன் போன்ற பல குறுநில மன்னர்களும், ஜயமுரி நாடாழ்வான், அணிமுரி நாடாழ்வான், சயங்கொண்ட சோழ பிரமாதிராசன் போன்ற படைத் தலைவர்களும், தண்டநாயகர் தலைவரான மதுராந்தகத் தமிழ் பேரரையன் ஆகியோரும் அன்று தலைநகர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

     பல காலமாகச் சோழப் பேரரசிலிருந்து வேங்கி நாட்டைப் பிரித்து விட முயன்று வருபவர்கள் மேலைச் சளுக்கியர்கள் என்பதும், அதற்காக அவர்கள் தொடுக்கும் ஒவ்வொரு போரிலும் அவர்களை முறியடித்து வரும் வலிமை வாய்ந்த படையே தங்கள் நாட்டுப்படை என்பதும் சோழப் பெருமக்களுக்குத் தெரியும். ஆதலால் ஒவ்வொரு போரும் முடிந்து வெற்றி வாகைசூடித் திரும்பும் தங்கள் வீரப்படைக்கு நகரே திரண்டு வந்து வரவேற்பு அளிப்பது வழக்கம். இதை விட மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி அவர்களுக்கு வேறு என்ன இருக்கிறது? சோழ நாட்டின் வீரம் ஒவ்வொரு தடவையும் முன்னிலும் அதிகமாக நிலைநாட்டப் படும்போது, அந்நாட்டு மக்களிடம் பெருமிதம் எழாமல் இருக்க முடியுமா?

     ஆனால் அவர்கள் கண்களிலே ததும்பி நின்ற ஆவல்? அது தனிப்பட்டது. ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு விதமாக எழுந்து நின்றது. சோழ வேந்தரின் யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலட்படை ஆகிய நால்வகைப் படைகளிலும் சோழ நாட்டின் ஒவ்வொரு வீர மகனும் பணி செய்து வந்தான். நாட்டின் பெருமையை நிலைநாட்ட, அதன் வீரத்திறனைப் பகைவருக்கு எடுத்துக்காட்ட, வீடு-வாசல், பெண்டு-பிள்ளை, பெற்றார்-சுற்றம் யாவற்றையும் மறந்து, உயிரைத் துரும்பாக மதித்துப் போர்க்களம் சென்ற அந்த இளங்காளைகளின் நிலை என்ன ஆயிற்று என்பதைப் போர் முடிந்து படை ஊர் திரும்பிய பின்னரே அவர்களைச் சார்ந்தோர் அறிய முடியும்.

     அன்று அங்கு-அந்த இராசவீதி நெடுகக் கூடிநின்ற மக்களில் தங்கள் பிள்ளைகளைப் போருக்கு அனுப்பியிருந்த பெற்றோர்கள் இருந்தனர்; ஆத்தி மாலை சூட்டி, செந்நீர்த் திலகமிட்டுக் கணவன்மார்களை வழியனுப்பியிருந்த மனைவிமார் இருந்தனர்; அண்ணன்-தம்பியரை அனுப்பியிருந்த சகோதர-சகோதரியர் இருந்தனர்; தந்தையரை அனுப்பியிருந்த இளஞ்சேய்கள் இருந்தன. இவ்வாறு தங்களது உயிருக்கு உயிரானவர்களைப் போர்க் களத்துக்கு அனுப்பிவிட்டு மாதக் கணக்கில் அவர்களைப் பற்றிய செய்தியின்றி இருப்பவர்கள், பொருது கொண்டு சென்ற படை திரும்பி வருகிறது என்ற செய்தியை அறிந்தபோது ஆவல் கொள்வது இயற்கைதானே? தங்களைச் சார்ந்தோர் வெற்றி வாகை சூடித் திரும்பி வருகிறார்களா, அல்லது போர்களத்தில் வீரத்துடன் போரிட்டு, பட்டு விழுந்து விட்டார்களா என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?

     இங்கே இவ்வாறு இராசவீதி நெடுக நகர மாந்தர் ஆவலுடன் காத்திருக்க, உட்கோட்டையில் அரச குடும்பத்துப் பெண்டிர் இவர்களைவிடப் பேராவலுடன் காத்திருந்தனர். உட்கோட்டையில் அமைந்திருந்த சோழகேரளன், முடிகொண்ட சோழன் எனும் பெயருடைய இரண்டு அரண்மனைகளிலுந்தாம் அரச குடும்பதினர் வசித்து வந்தனர். மேன்மாடங்களில் வானளாவும் கம்பங்களில் பெரிய புலிக் கொடிகளைப் பறக்க விட்டுக் கொண்டிருந்த இவ்விரு அரண்மனைகளிலும் வசித்த மாமன்னர் இரண்டாம் இராசேந்திர தேவரின் மனைவியரான கிழானடிகள், திரைலோக்கிய முடையாள், அவருடைய மகள் மதுராந்தகி, இராச மகேந்திரனின் மனைவி அருமொழிநங்கை, அவருடைய மகள் *வானவன் மாதேவி (வானவி) ஆகியோரும், அரண்மனைத் தாதியர், பணிப் பெண்கள், அரசகுலப் பெண்களின் சேடியர் ஆகியோரும் சோழகேரளன் அரண்மனை வாயிலில் கூடியிருந்தனர். போர் களத்திலிருந்து திரும்பும் மன்னரையும் அவரது சகோதரர்களையும் வரவேற்க இருந்த அம்மூவரது மனைவியர்களுக்காகப் பணிப் பெண்கள் ஆத்தி மாலைகளையும், மஞ்சள் நீரடங்கிய தங்கத் தட்டுக்களையும் சுமந்து கொண்டு நின்றனர்.

     (* வீரராசேந்திரனுக்கு ஒரு மகள் இருந்தனளென்றும், அவள் மேலைச் சளுக்கிய மன்னனான ஆறாம் விக்கிரமாதித்தனை மணந்தனளென்றும் ஆராய்ச்சி நூல்கள் கூறுகின்றன. ஆனால் எந்த நூலிலும் அவள் பெயர் கொடுக்கப்படவில்லை. நம் கதையில் அவள் ஒரு முக்கிய பாத்திரமாதலால், அவளுடைய தந்தை வழிப் பாட்டியார் வானவன் மகாதேவியின் பெயரை நான் சூட்டியிருக்கிறேன். நம் கதையில் அவளை ‘வானவி’ என்று சுருக்கி அழைப்போம்.)

     இராசவீதி துவங்கும் இடத்தில், அதாவது, வெளிக் கோட்டையின் கீழை வாயிலிலும் புலிக்கொடி ஒன்று கம்பீரமாகப் பறந்து கொண்டிருந்தது. அங்கே சோழ நாட்டின் அரசியல் அதிகாரிகளில் ஒருவரான செம்பியன் மூவேந்தான் தலைமையில், இன்னும் பல அரசியல் அதிகாரிகளும், வேங்கி நாட்டு இளவரசன் குலோத்துங்கனும், இரண்டாம் இராசேந்திர தேவரின் புதல்வர்களான இராசேந்திரசோழன், (தந்தையின் பெயரே மகனுக்கும் விளங்குவதைக் காண்க! ) முகையவிழங்கல் முடிகொண்ட சோழன், சோழ கேரளன், கடாரங்கொண்ட சோழன், படிகொண்ட பல்புகழ் முடிகொண்ட சோழன், இரட்டப்பாடி கொண்ட சோழன் ஆகிய அறுவரும், வீரராசேந்திரனின் புதல்வர்களாகிய மதுராந்தகன், கங்கை கொண்ட சோழன் ஆகிய இளைஞர்களும், போர்க்களத்திலுருந்து திரும்பும் வேந்தர் மரபினரையும், படையினரையும் வரவேற்க அரசாங்க விருதுகளுடன் காத்திருந்தனர்.

     இப்படி நகரமெங்கும் மக்களும், அரச குடும்பத்தினரும், அரசாங்க அதிகாரிகளும் ஆங்காங்கே வரவேற்புக்குத் தயாராயிருக்கையில், நகரின் வடபால் அமைந்திருந்த கங்கை கொண்ட சோழேச்சுரர் திருக்கோவிலில் அன்று விசேட வழிபாடுகள் நடந்து கொண்டிருந்ததன் அறிகுறியாக ஆலயத்தின் கண்டாமணி நெடுநேரமாக ஒலித்துக் கொண்டிருந்தது.

     வெற்றி வீரர்களாகத் திரும்பும் மன்னவரும் மற்றோரும், தலைநகருக்கு அரைக் காத தூரம் வடகிழக்கேயுள்ள *சோழகங்கம் ஏரிக்கரையில் முன்னாள் மாலையே வந்து தங்கியிருப்பதாகவும் மறுநாள் காலையில் நல்ல பொழுதாக இருப்பதால், அப்பொழுதுதான் தலைநகரில் பிரவேசிப்பார்களெனவும் முன்னாள் நகருக்குச் செய்தி வந்திருந்தது. ஆதலால் இரவோடு இரவாக அலங்கார ஏற்பாடுகளும், வரவேற்பு ஏற்பாடுகளும் நடந்தன. இப்பொழுது அனைவரும் வெற்றித் திருவை மருவி வரும் வீரச்சிங்கங்களை வரவேற்க உவகையுடன் காத்திருந்தனர்.

     (*இது பொன்னேரி என்ற பெயருடன் இன்றும் இருக்கிறது.)

     கீழ்வானில் செந்நிறத்துடன் உதித்த ஆதவன், பொன்னிறம் எய்தி, இப்பொழுது வெண்ணிறமாகவும் மாறி விட்டான். அவன் வானத்தில் மேலேறுந்தோறும் வெயிலின் கடுமை ஏறிற்று. அருகில் ஒருபுறம் மாபெரும் காவிரியாற்றிலிருந்தும், மற்றோரு புறம் கடலனைய சோழகங்க ஏரியிலிருந்தும் வீசிய நீர்க்காற்றுக் கூடத் தனது குளிர்ந்த தன்மை மாறிச் சூடு பெற ஆரம்பித்திருந்தது.

     கீழைக்கோட்டை வாசலிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றது மரங்கள் அடர்ந்த நீண்ட சாலை ஒன்று. அதன் வழியாகத்தான் மன்னரும் மற்றோரும் வரவேண்டும். அவர்கள் காலையில் எந்நேரம் கிளம்பி, எந்நேரம் இங்கு வந்து சேருவார்கள் என்பது திட்டமாகத் தெரியாததால் செம்பியன் மூவேந்தன் முதலானோர் அதிகாலையிலிருந்தே அங்கே வந்து காத்திருந்தனர். கோட்டை வாசலின் மேற்பாகம் ஒரு மும்மாட மண்டபமாக அமைக்கப்பட்டிருந்தது. அதன் கீழ்த்தளத்தில் அரசியல் அதிகாரிகளும் அரசகுல இளைஞர்களும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

     மும்மாட மண்டபத்தின் மேல் உப்பரிகை மீது சோழ வீரன் ஒருவன் ‘காளம்’ என்ற நீண்ட ஊது கொம்புடன் நின்று கொண்டிருந்தான். அந்த உயரமான இடத்திலிருந்து அவனால் நெடுந்தூரம் காணமுடியும். மன்னரும் மற்றோரும் பார்வைக்குத் தென்பட்டதும் குழலெடுத்து ஊதி எல்லோரையும் தயார்ப்படுத்தவே அவன் அங்கே நின்று கொண்டிருந்தான்.

     தூரத்தில் சாலை மரங்களுக்கு மேலே புழுதிப் படலம் தெரிந்தது. மும்மாட மண்டபத்தின் மேலே நின்ற வீரன் தனது கொம்பை உயர்த்தி வாயில் புதைத்து முழங்கினான். உடனே கூடியிருந்தோரிடையே ஒரு பரபரப்பு. மண்டபத்தில் அமர்ந்திருந்தோரும் கோட்டை வாயிலின் முன் கூடினர். புலிக்கொடி தாங்கிய குதிரை வீரன் ஒருவன், அரசகுலப் பெண்டிருக்குச் செய்தி அறிவிக்க உட்கோட்டையை நோக்கி விரைந்தான்.

     சாலை மரங்களிடையே வெயில் புகுந்து சென்றதால் எழுந்த ஒளிப்புள்ளிகளின் இடையே கரும்புளிகளாகப் படைகள் தென்பட்டன. பின்னர் யானைகளின் மணியோசையும் குதிரைகளின் குளம்போசையும் மெல்லெனக் கேட்டன. வான விளிம்பிலிருந்து மேக மண்டலம் ஒன்று திரண்டு வருவது மாதிரி கடல் போன்ற அந்தப் பெரும் படை கோட்டை வாயிலை நோக்கி விரைந்து வந்தது.

     முதலில் யானைப்படை வந்தது. முகபடாம் தரித்த மலைபோன்ற யானை ஒன்றின் மீது புலிக் கொடியைத் தாங்கியவாறு சோழ வீரன் ஒருவன் முதலில் வர, அவனைத் தொடர்ந்து யானைப் படையும், குதிரைப் படையும், தேர்ப் படையும் வந்தன.

     தேர்ப் படைக்குப் பின்னால் மூன்று வெண் புரவிகள் ஒரு வரிசையாக வந்தன. அவற்றுள் நடுவிலிருந்த புரவியில் சோழ வேந்தர் இரண்டாம் இராசேந்திர தேவர் அமர்ந்திருந்தார். அவருக்கு இரு புறங்களிலும் பட்டத்து இளவரசர் இராசமகேந்திரனும், வீரராசேந்திரனும் வந்தனர். அவர்களுக்குப் பின்னால், போரில் கலந்து கொண்ட குறுநில மன்னர்களும், வீரச் சிங்கங்களான சோழச் சேனாதிபதிகளும் பல குதிரைகளில் வந்தனர். அடுத்ததாகப் போரில் கைப்பற்றிய பல்வேறு படைப்பொருள்களுடன், சிறைசெய்த பகைவர் படைவீரர்களும் இருந்தனர். எல்லோருக்கும் கடைசியாக, கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் சோழ நாட்டின் காலாட் படையினர் அணிவகுத்து வந்தனர்.

     ஒவ்வொரு படையும் கோட்டை வாயிலைத் தாண்டி உள்ளே சென்ற போது, கூடியிருந்தோர் “வெற்றி வேல்! வீரவேல்! வாழ்க பரகேசரி இராசேந்திர தேவர்! வாழ்க, வாழ்க!” என்று வாழ்த்தினர். படையினரும்,“வெற்றி வேல்! வீரவேல்!” என்று எதிரொலி செய்தனர்.

     மன்னரும், அவரது சோதரர்களும் அமர்ந்திருந்த புரவிகள் கோட்டை வாயிலை நெருங்கியதும், கூடி நின்றோர் அவர்களை எதிர்கொண்டு சென்றனர். மூன்று குதிரைகளும் நின்றன. இராசேந்திர தேவரும், மற்றுமுள்ளோரும் கீழே இறங்கினர். புரோகிதர்கள் மந்திர கோஷம் முழங்கப் பூர்ண கும்பம் அளித்து மாமன்னரை வரவேற்றனர். பின்னர் சோழேச்சுரர் கோவில் அர்ச்சகர் பொன் தட்டில் வைத்திருந்த ஆத்தி மாலையை மன்னருக்குச் சாத்தி, திருநீறு முதலிய பூசைப் பிரசாதங்களை வழங்கினார். பிறகு எல்லோரும் குதிரைகள் மீது ஏறிக்கொள்ள, ஊர்வலம் கோட்டைக்குள்ளே சென்றது.

     வழி நெடுகக் கூடி நின்ற நகர மாந்தரின் வாழ்த்தொலியும், ஆனந்த ஆரவாரமும் வானைப் பிளந்தன. இவ்வாறு மக்களின் அன்பு நிறைந்த குதூகல வரவேற்பை ஏற்றுக் கொண்டவாறு அந்த மாபெரும் வெற்றிப் படை ஊர்வலம் உட்கோட்டைக் குள்ளே நுழைந்து சோழகேரளன் அரண்மனை முன்னுள்ள திடலில் வந்து நின்றது. மன்னரும், அரச குடும்பத்து ஆடவரும் மட்டும் தம் குதிரைகளோடு அரண்மனையின் முகப்பு மண்டபம் வரையில் சென்றனர். அங்கே சென்றதும் அவர்கள் குதிரைகளிலிருந்து இறங்கி மேற்கு முகமாக நிற்க, பாங்கிமார் நிறைகுடம், கெண்டி நீர், மஞ்சள் நீர்த் தட்டு, முப்பரி விளக்கு ஆகியவற்றை ஏந்திவர்களாக அவர்களை மும்முறை சுற்றி வந்து *திருட்டி நீக்கினர். பின்னர் போர் சென்ற மன்னவரையும், அவரது சோதரர்களையும் அவரவர் மனைவியர் நெருங்கி, ஆத்தி மாலை அணிவித்து, மஞ்சள் நீரடங்கிய தங்கத் தட்டைச் சுற்றி, நெற்றியில் அந்நீரல் திலகமிட்டு வணங்கினர்.

     (*இதைத் திருஷ்டி கழித்தல் என்றும் சொல்வதுண்டு.)

     இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கையில் வெளியே போர்ப் படையினரும், பொது மக்களும் “வெற்றி வேல்! வீரவேல்! வாழ்க மாமன்னர் பரகேசரி இராசேந்திர தேவர்! வாழ்க இளவரசர் இராசகேசரி இராச மகேந்திர தேவர்! வாழ்க இளங்கோ வீரராசேந்திரர்!” என்று இடைவிடாமல் வாழ்த்தொலி கூறிக் கொண்டிருந்தனர்.