உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மதுராந்தகியின் காதல் (மாயாவி அவர்களின் ‘மதுராந்தகியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, பிழை திருத்தி எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) மூன்றாம் பாகம் அத்தியாயம் - 6. மையல் திரை உலகத்திலே மனிதனின் அழிவுக்கு வித்தாக இருப்பவை பெண், பொன், மற்றும் மண் என்று நமது ஆன்றோர் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அவர்கள் கூற்று முற்றிலும் உண்மையே. ஆயின் எத்தகைய நிலையில் அவை மனிதருக்கு அழிவைக் கொடுக்கின்றன எனபதை நாம் ஆய்ந்து அறிய வேண்டும். முதலில் பொன்னாசையை எடுத்துக்கொள்வோம். பொன் என்பது இங்கே பொருளைக் குறிப்பிடுகிறது. பொருட்செல்வம் மனிதருக்கு மிகத் தேவையானதுதான். ஆனால் அச்செல்வத்தை அடைய மனிதர் நேர்வழியில் பாடுபட வேண்டும். தொழில்களைக் கற்று, கலைகளைக் கற்று, அல்லது ஊதியம் பெற்றுப் பொருளுயர்வு பெறவேண்டும். அதைவிட்டு, ஏமாற்று வித்தைகள் மூலம் மனிதர் பொருளீட்ட முயன்றால் அவர்கள் மற்றவர்களையும் அழிக்கிறார்கள்; இறுதியில் தாங்களும் அழிகிறார்கள். மண்ணாசையும் இவ்வாறேதான். கற்காலந்தொட்டு, இடைப்பட்ட பொற்காலம், மற்றும் இன்றைய நற்காலம் வரையில் அலசிப் பார்த்தோமானால் மாபெரும் மன்னர்கள், மகிமைமிக்க பேரரசுகள் எல்லாமே நாடு பிடிக்கும் ஆசையால் நாசமாகியிருப்பதை, நாசமாகி வருவதைக் கண்கூடாகக் காண்போம். மண்ணாசை, அதாவது இந்த நாடு பிடிக்கும் ஆசை ஏற்பட்டால் உடனே போர் மூளுகிறது. போர் என்றால் இருதரப்பிலும் ஆயிரமாயிரம் மக்கள் மாய்கிறார்கள். “உலகில் மனிதப் பூண்டே இல்லாமல் அழிவதற்கு இன்னும் ஒரே உலகப் போர்தான் தேவை!” என்று இன்றைய அறிவாளிகள் கூறி வருகிறார்களே, அது நமது ஆன்றோர் சொற்களுக்குச் சான்று தருகிறது. அடுத்ததாக பெண்ணாசை. இயற்கையாலும் செயற்கையாலும் மனித உலகம் சிறுகச் சிறுக மடிந்து வருவதால் உலகம் சூனியமாவதைத் தவிர்க்க, மக்கள் தொகை பெருக வேண்டியது இன்றியமையாதது. அதற்காகவே இறைவன் ஆண்-பெண் உறவை ஏற்படுத்தியிருக்கிறான். அந்த உறவுக்கு ஒரு நியதி, ஒரு கட்டுப்பாடு போன்றவற்றையும் நமது முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். இந்தக் கட்டுப்பாட்டை மீறி ஆண்கள் நடந்து கொள்ளும்போது அவர்கள் தாங்களும் அழிகிறார்கள்; தங்களைச் சார்ந்தோர்களையும் அழிக்கிறார்கள். அன்றைய மன்னர்கள் பல பெண்களை மணந்தனர். அவர்களோடு இன்பம் துய்த்தனர். பெண்டு-பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர். ஆனால் அவர்களில் யார் பெண்ணின்பத்தை அளவோடு வைத்துக் கொண்டிருந்தார்களோ அவர்களே உயர்ந்தார்கள்; மோகக்கிறக்கத்தைல் ஆழ்ந்து கடமையை மறந்தவர்கள் அனைவரும் அழிந்தார்கள். அறிவிற் சிறந்தவன், வீரத்தில் உயர்ந்தவன், பண்பில் மேம்பட்டவன், இப்படி எவ்விதச் சிறப்புக்கு உரியவர்களாக இருந்தாலும் சரி, கடமையை மறந்து காதலில் ஈடுபட்டவன் தன் அழிவுக்குத் தானே அடிகோலிக் கொள்கிறான் என்றுதான் சொல்லவேண்டும். வீர திலகமாக விளங்கி, சோழநாட்டின் பெருமையைக் கடல் கடந்து முழங்கச் செய்து நமது குலோத்துங்கனும் அவ்வாறு தான் மோகக்கிறக்கத்தில் தனது அழிவுக்கு அடிகோலிக் கொண்டிருந்தான். ஆம், விக்கிரமாதித்தன் விரித்துக் கொடுத்து மாபப்பாளத்து மன்னன் மகிபாலனால் பரப்பப்பட்ட சூழ்ச்சி வலையில் அவன் தெரிந்தே விழுந்து அழிந்து கொண்டிருந்தான். நாடோடி ஆரணங்கு ஒருத்தியுடன் நட்புக்கொள்கிறோம்; அவளைப் பிரியேன் என்று மட்டுமே வாக்குறுதி அளித்திருப்பதால், போர்ப்படை செல்லும் இடத்துக்கெல்லாம் அவளை உடன் அழைத்துச் சென்று நமது வாக்குறுதிக்கு மாறு நேராதவாறு செய்து கொள்ளலாம்; திக்கு விசயத்தை முடித்துக்கொண்டு திரும்புங்காலில் அவளையும் சோழநாட்டுக்கே அழைத்துச் சென்று விடலாம் என்றெல்லாம் மனத்தைத் திடம் செய்துகொண்டுதான் அவன் ஏழிசை வல்லபியோடு வாழ்க்கையில் இறங்கினான். புது மோகம் என்று சொல்லுவார்களே, அந்தத் துவக்க கால மையலில் மெய்ம்மறந்து சில நாட்களைத் தள்ளினான். சோழப்படை தண்டிறங்கியிருந்த தக்கோல் நாட்டு எல்லைப் பகுதியில் குலோத்துங்கனுக்காக அமைக்கப்பட்டிருந்த பாசறையிலேயே அவர்கள் பாசம் வளர்ந்தது; காதல் மலர்ந்து விகசித்தது. குலோத்துங்கன் தன் மையலில் நன்றாகச் சிக்கி விட்டான் என்பதை உணர்ந்ததும் ஏழிசைவல்லபி என்று சிறப்புப் பெயர் சூட்டப்பட்டிருந்த மகிபாலனின் சகோதரி கனிவாய் மொழி இனித் தன்னைக் காட்டிக்கொள்ளலாம் என்று துணிந்தாள். அவள் வகுத்த திட்டப்படி ஒருநாள் குலோத்துங்கனின் பகை மன்னனான மகிபாலன் அரசாங்க வரிசைகளுடன் அவனுடைய பாசறைக்கு வந்து சேர்ந்தான். பகை மன்னர் வரிசைகளுடன் தன்னைக் காண வந்தபோது அவன் தன்னைச் சரணடைய வந்திருக்கிறான்; ஸ்ரீவிசய ராச்சியத்தின் கடைசி நாடும் நமது அடி பணிந்துவிட்டது: இனிச் சோழநாட்டுக்குத் திரும்பலாம் என்றுதான் குலோத்துங்கன் எண்ணினான். அந்த எண்ணத்தோடுதான் அவனை வர விடுமாறு காவலர்களுக்குக் கட்டளை பிறப்பித்தான். ஆனால் உள்ளே வந்த மகிபாலன், “மருகரே!” என்று தன்னைத் தாவி அணைத்துக்கொண்டபோது அவன் திகைத்தான்; திடுக்கிட்டான். அருகில் நின்றிருந்த ஏழிசைவல்லபி, “அண்ணா!” என்று மகிபாலனை அழைத்தது அவனைப் பின்னும் திகைப்படையச் செய்தது. ‘என்ன இதெல்லாம்? இந்தத் தக்கோலத்து நாடோடி ஆடணங்கு மகிபாலனின் சோதரியா?’ என்று அவன் குழம்பினான். அவன் குழப்பத்தை அவர்கள் நீடிக்க விடவில்லை. குழப்பம் விழுப்பம் தரும் என்பதை உணர்ந்து உடனே தங்கள் நாடகத்தின் பிற்பகுதியை நடிக்கத் தொடங்கினர். “என்னை மன்னித்துவிடு சகோதரி. உன் பெருமை அறியாமல் உன்னை நாட்டைவிட்டுத் துரத்திவிட்டேன்,” என்று ஏழிசைவல்லபியின் கரங்களைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினான் மகிபாலன். பின்னர் அவன் குலோத்துங்கனை நோக்கி, “சோழ சேனாதிபதி, நீங்களும் என்னைப் பொறுத்தருள வேண்டும். ஆடல்-பாடல் எல்லாம் அரசகுலப் பெண்டிருக்கு ஏற்றதல்லவென்று என் சகோதரிக்கு எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். அவள் என் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்காமல் அக்கலைகளில் தொடர்ந்து ஈடுபடவே, ‘போ! போய், கூத்தாடியாகவே உன் காலத்தைத் தள்ளு!’ என்று அரண்மனையிலிருந்து விரட்டி விட்டேன். ஆனால் அந்தக் கலைகள் வீரத்தின் சிகரமான தங்களைக் கவரும்; என் கனிவாய் மொழியைத் தாங்கள் மனைவியாக்கிக் கொள்ளுவீர்கள் என்பதை அப்போது அறிந்தேனில்லை. சோழச் சேனாதிபதி, இனி மாபப்பாளம் உங்கள் பகை நாடல்ல; உங்கள் மனைவியின் பிறந்த வீடு. தாங்களும் கனிவாய்மொழியும் என்னுடன் இப்பொழுதே வந்து உங்கள் இல்லற வாழ்வை அங்கே இன்பமாகக் கழிக்க வேண்டும்,” என்று குழைந்தான். குலோத்துங்கனுக்கு ஒன்றுமே பேசத் தோன்றவில்லை. வியப்பாலும் திகைப்பாலும் அவனுடைய வாய் அடைத்துப் போயிற்று. அவன் தயக்கம் ஏழிசைவல்லபியைக் கலங்க வைத்தது. எங்கே இந்த உண்மை வெளியானதன் காரணமாக அவன் தன்னைப் பிரிந்துவிடுவானோ என்று அவள் அஞ்சினாள். ஏனென்றால் அண்ணனின் சூழ்ச்சி இதனால் தவிடு பொடியாவது ஒருபுறம் இருக்கட்டும்; அப்பொழுது அவளே குலோத்துங்கனைப் பிரிய முடியாத ஓர் இணைப்பு நிலையை நோக்கி விரைந்து கொண்டிருந்தாள். எனவே அவள் சொன்னாள்: “என் ஆருயிரே! பகைநாட்டுப் பெண் என்பதற்காக என்னைத் தயைசெய்து ஒதுக்கி விடாதீர்கள். நான் அந்நாட்டைத் துறந்து உங்களையே சதமென்று வந்தடைந்திருப்பவள். உங்களுக்கு மாபப்பாளத்துக்குப் போகப் பிரியமில்லையென்றால் நாம் இங்கேயே இருப்போம். நான் மாபப்பாளத்து இளவரசி என்பதையே நீங்கள் மறந்துவிடுங்கள். அது உங்களுக்குத் தெரிந்து உங்கள் உள்ளத்தில் சந்தேகங்கள் முளைக்கலாகாது என்றே நான் இன்றுவரை அதை உங்களுக்கு மறைத்து வந்தேன். உங்கள் மீது கொண்ட மாறா மையலால் செய்த அப்பிழையைப் பொறுத்து எப்போதும்போல் என்னை ஆட்கொள்ளுங்கள்!” - அவள் அவன் கால்களில் விழுந்து கதறத் தொடங்கினாள். பெண்ணின் கண்ணீருக்குத்தான் என்ன வல்லமை! குலோத்துங்கனின் திட்டத்தையெல்லம் அது அந்தக் கணத்திலே கரைந்துவிட்டது. மோகத்தின் கிறக்கம் அவனைப் பித்தனாக்கிவிட்டது. அவன் தன் வீரத்தை மறந்தான்; நாட்டை மறந்தான்; நாட்டிலே இருந்த ஆசை மனைவியை மறந்தான்; மைந்தர்களை மறந்தான். எல்லாவற்றையும் மறந்து மாபப்பாளத்துக்குப் புறப்படத் தயாராகிவிட்டான். ஆனால்...? உடனிருந்த சோழநாட்டுப் படைத்தலைவர்கள் அவனைத் தடுக்க முயன்றனர். இதில் ஏதேனும் சூழ்ச்சி இருக்கலாமென்று எடுத்துரைத்தனர். ஏழிசைவல்லபி இன்றுவரைத் தன்னை யாரென்று காட்டிக் கொள்ளாதிருந்தது: தன்னைப் பிரியேனென்று வாக்குறுதி பெற்றிருப்பது இரண்டையும் தொகுத்துக் காட்டித் தங்கள் ஐயத்துக்குச் சான்று தந்தனர். மாபப்பாளத்தை அடிமைப்படுத்திவிட்டுத் தாங்கள் நாடு திரும்ப வேண்டியிருப்பதைக்கூட அவனுக்கு நினைவூட்டினர். ஆனால் மோகத்திரைதான் அப்போது குலோத்துங்கனின் வீரம், அறிவு, மதிநுட்பம், எல்லாவற்றையுமே குடத்தினுள் தீபமாக மங்கிப் போகச் செய்திருந்ததே. அவன் தன் படைத்தலைவர்களின் சொற்களைச் சிறிதும் சட்டை செய்யவில்லை. மாபப்பாளத்துக்குத் தான் கிளம்பியதோடு நில்லாமல், தனது படையும் அங்கே வந்து தங்கிவிட வேண்டுமென்று கட்டளையிட்டு விட்டான். பொருது கொண்டு வந்திருக்கையில் சேனாதிபதியின் கட்டளையை மீறுவது ராசத்துரோகமாகும்; எனவே சோழப் படையினர் மறு பேச்சின்றி மாபப்பாளத்துக்குப் பயணப்பட வேண்டியதாயிற்று. மாபப்பாளத்தில் தன் படைகளை அந்நாட்டின் பாதுகாப்புப் படைகளாக நிறுத்திவிட்டு ஏழிசை வல்லபியின் எழிலுருவுக்கு முற்றிலும் அடிமையாகிக் கிடந்தான் குலோத்துங்கன். நாட்கள் பறந்து கொண்டிருந்தன. தான் மேற்கொண்டு வந்த பணியின் நினைவோ, நாட்டின் நினைவோ, மனைவி-மக்களின் நினைவோ, ஒன்றுமே ஏற்படவில்லை அவனுக்கு. இன்பம், இன்பம், இன்பம் இது ஒன்றுதான் அப்போது அவன் விருப்பாக இருந்தது; விடாயாக நிலைத்தது. இந்தச் சிக்கலான போதில்தான் சோழநாட்டின் கொந்தளிப்பான நிலையை விளக்கி அவனை உடனே அங்கே புறப்பட்டு வரச்சொல்லி அங்குள்ள அரசியல் தலைவர்களின் ஓலையும், வீரராசேந்திரரின் இறுதி விருப்பத்தைத் தெரிவித்து மதுராந்தகி விடுத்திருந்த அன்பும் காதலும் கலந்த அழைப்போலையும் குலோத்துங்கனுக்கு வந்தன. அவ்வோலைகள் அவனது மோகத்திரையைச் சிறிது விலக்கின; மனச்சான்றைத் தட்டி எழுப்பின. தன்னை வளர்த்த நாடு, தான் பணிபுரியும் நாடு, தலைமுறை தலைமுறையாக இல்லாத பேராபத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்ற செய்தி அவனை உலுக்கியது. வயதிலும், அறிவிலும், அனுபவத்திலும், ஆற்றலிலும் மிகுந்த எத்தனையோ தலைவர்கள் இருக்க, தனது மாமன் நாட்டைக் காக்கும் பணியைத் தனக்கு இட்டுவிட்டுப் போயிருப்பது அவனை இறும்பூறு கொள்ளச் செய்தது. உடனே அவன் ஏழிசைவல்லபியிடம் சென்றான். கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து வந்திருந்த ஓலைகளைக் காட்டினான். நாட்டைக் காக்கத் தான் அங்கு செல்ல வேண்டியிருப்பதை எடுத்துரைத்தான். அவன் செய்ததெல்லாம் சரிதான். ஆனால் அந்த அறிவற்றவன் மதுராந்தகியின் ஓலையை ஏன் அவளிடம் காட்டினான்? உலகிலே பல தாரங்களைக்கொண்ட மனிதனின் எந்த இரு மனைவியரும் ஒத்துப் போனதில்லை என்ற உண்மை ஏன் அவனுக்குத் தோன்றாமல் போயிற்று? ஆம், தவறு இங்கேதான் பிறந்தது. தன் அண்ணனின் அரசியல் சூழ்ச்சிக்காக குலோத்துங்கனை இங்கேயே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையை ஏழிசைவல்லபி எப்போதோ காற்றோடு விட்டுவிட்டாள். தன் வரையில் அவன் எப்போதும் இணைபிரியாது இருக்க வேண்டும் என்பதுதான் இப்போது அவளுடைய வேட்கையாக இருந்தது. ஆதலால் குலோத்துங்கன் அவளையும் தன்னுடன் சோழநாட்டுக்குக் கூட்டிச் செல்லப் போவதாகச் சொன்னபோது அவள் மறுதலிபின்றி அதற்கு இணங்கியே இருப்பாள். அங்கே அவன் சோழகுல மங்கையான மதுராந்தகியை மணந்திருப்பதும், அவர்களுக்கு மைந்தர்கள் இருப்பதும் அவளுக்குத் தெரியாதவை அல்ல. இருப்பினும் குலோத்துங்கன் தன்மீது காட்டி வந்த அன்பிலிருந்து மதுராந்தகியைவிடத் தன்மீதுதான் அவனுக்குக் காதல் அதிகமாக இருக்கிறது என்று அவள் நம்பியிருந்தாள். சோழநாடு சென்ற பிறகும் அந்த அன்பு குன்றாது என்ற திடமும் அவளுக்கு இருந்தது. ஆனால் இப்போது மதுராந்தகியின் ஓலையைப் படித்தபோது அவளுடைய அந்த நம்பிக்கைகள் மலையிலிருந்து உருண்ட மட்பாண்டமாகச் சிதறிப்போய்விட்டன. ஆம், மதுராந்தகி கணவனுக்குக் காதல் நினைவை எழுப்பி அவனை விரைந்து வரச் செய்ய வேண்டுமென்ற கருத்துடன் திருமண காலந்தொட்டுத் தாங்கள் நிகழ்த்திய காதல் களியாட்டங்களையெல்லாம் விவரித்திருந்தாள். அவை ஒவ்வொன்றும் குலோத்துங்கன் அவள்பால் எத்தனை வற்றாத அன்பு கொண்டிருந்தான் என்பதை ஏழிசைவல்லபிக்குத் தெளிவாக எடுத்துக்காட்டின. அது மட்டுமின்றி, இப்போது மதுராந்தகியின் முயற்சியால் சோழ அரியணையே அவனுக்குக் கிட்டப்போகிறது. இத்தகைய நிலையில் அவனை அங்கே போக விட்டாலோ, அல்லது தான் உடன் சென்றாலோ கூட மதுராந்தகியின் அன்புக்கடலில் அவன் மீள முடியாமல் சிக்குவதைத் தவிர்க்க இயலாது என்று அவள் தெளிந்தாள். எனவே, குலோத்துங்கனோடு சிரித்துப் பேசிக்கொண்டிருந்த அவள் இந்த ஓலைகளைப் படித்ததும் ஓவென அழத் தொடங்கினாள். அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு “உங்களை எங்கும் போகவிட மாட்டேன். நானும் சோழ நாட்டுக்கு வர மாட்டேன். அங்கே போனால் நீங்கள் மீண்டும் மதுராந்தகியின் பொருளாகி விடுவீர்கள்!” என்று பிரலாபித்தாள். அவள் மீதுள்ள அன்பு தன்னிடமிருந்து ஒருபோதும் மாறாது என்று குலோத்துங்கன் எவ்வளவோ எடுத்துச் சொன்னான். “அந்த அன்பு மாறாதென்றால் நீங்கள் எனக்கு அளித்த வாக்குறுதியை மீறி, என் அநுமதியின்றி எங்கும் போகக்கூடாது. அப்படிப் போவதாக இருந்தால், நீங்கள் புறப்படுமுன் என் பிணம் உங்கள் காலடியில் உருளும்,” என்று தீவிரமாக உரைத்தால் அவள். ‘பிணம்’ என்ற அச்சொல் குலோத்துங்கனைச் சட்டென்று பின்னடிக்கச் செய்துவிட்டது. பல திங்கள்களாக அவனுக்கு இன்பச் சுரங்கமாக விளங்கி வந்தவள் அவனுடைய பிரிவைத் தாளாமல் பிணமாவாள் என்பதை எண்ணியபோது மீண்டும் அவன் உணர்ச்சிகளையெல்லாம் மையல் திரை மூடிவிட்டது. இனி எந்நாளும் தான் சோழ நாட்டுக்குத் திரும்பப்போவதில்லை என்றும், இந்த மாபப்பாள நாடும் ஏழிசைவல்லபியுந்தாம் இனித் தன் உயிர் என்றும் தன்னை மறந்து விடுமாறும் மதுராந்தகிக்குப் பதில் ஓலை ஒன்று எழுதி கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து வந்திருந்த வீரனிடம் கொடுத்துவிட்டு, மாபப்பாளத்தில் தங்கியிருந்த சோழப்படையினரையும் அவனுடன் மரக்கலமேற்றி நாட்டுக்குத் திருப்பி அனுப்பிவிட்டான். மதுராந்தகியின் காதல் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
1-10
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
2-11
2-12
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
|