உமாபதி சிவாச்சாரியார்

அருளிய

கொடிக்கவி

     மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கினுள் மிகச் சிறியது கொடிக்கவி என்னும் இந்நூல். இந்நூலை இயற்றியவர் உமாபதி சிவாச்சாரியார் ஆவார். தில்லை எனப்படும் சிதம்பரத்தில் கொடியேற்றுவதற்காகப் பாடப்பட்டதனால் இதற்குக் கொடிக்கவி என்னும் பெயர் ஏற்பட்டது. சைவ சித்தாந்தத்தின் உட்கருத்தை இந்நூல் விளக்குகிறது.

நூல்

ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன்
றொளிக்கு மெனினு மிருளட ராதுள் ளுயிர்க் குயிராய்த்
தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே
குளிக்கு முயிரருள் கூடும் படிக் கொடி கட்டினனே. 1

பொருளாம் பொருளேது போதேது கண்ணே
திருளாம் வெளியே திரவே - தருளாளா
நீபுரவா வையமெலா நீயறியக் கட்டினேன்
கோபுர வாசற் கொடி. 2

வாக்காலு மிக்க மனத்தாலு மெக்காலுந்
தாக்கா துணர்வரிய தன்மையனை - நோக்கிப்
பிறித்தறிவு தம்மிற் பிறியாமை தானே
குறிக்குமரு ணல்கக் கொடி. 3

அஞ்செழுத்து மெட்டெழுத்து மாறெழுத்து நாலெழுத்தும்
பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்தும் நெஞ்சழுத்திப்
பேசு மெழுத்துடனே பேசா வெழுத்தினையுங்
கூசாமற் காட்டாக் கொடி. 4

அந்த மலமறுத்திங் கான்மாவைக் காட்டியதற்
கந்த அறிவை அறிவித்தங் - கிந்தறிவை
மாறாமல் மாற்றி மருவு சிவப் பேறென்றுங்
கூறாமல் கூறக் கொடி. 5

கொடிக்கவி முற்றும்