உமாபதி சிவாச்சாரியார் அருளிய சிவப்பிரகாசம் சிவப்பிரகாசம் என்பது 14 சைவ சித்தாந்த சாத்திரங்களுள் ஏழாவதாக வைத்துப் போற்றப்படும் நூலாகம். 14 சைவ சித்தாந்த சாத்திர நூல்களுள் எட்டு நூல்களை இயற்றிய உமாபதி சிவாச்சாரியாரே இதன் ஆசிரியராவார். இந் நூலில் காப்புச் செய்யுள் தவிர மொத்தம் 100 விருத்தப்பாக்கள் அமைந்துள்ளன. இது பொது அதிகாரம், உண்மை அதிகாரம் என்று இரண்டு பகுதிகளைக் கொண்டது. பொது அதிகாரத்தில் ஐம்பது பாடல்களும் உண்மை அதிகாரத்தில் ஐம்பது பாடல்களும் உள்ளன. இந்த நூலுக்கு முதல்நூல் சிவஞான போதம். வழிநூல் சிவஞான சித்தி. இது சார்புநூல். இது தோன்றிய காலம் 14ஆம் நூற்றாண்டு. வடமொழி உபநிடதக் கருத்துக்களை இந்த நூல் தெளிவாக்குகிறது. காப்பு ஒளியான திருமேனி உமிழ்தான மிகமேவு களியார வருமானை கழல்நாளு மறவாமல் அளியாளும் மலர் தூவும் அடியார்க ளுளமான வெளியாகும் வலிதாய வினைகூட நினையாவே. பாயிரம் நடராசர் துதி ஓங்கொளியாய் அருண்ஞான மூர்த்தி யாகி உலகமெலாம் அளித்தருளும் உமையம்மை காணத் தேங்கமழும் மலரிதழி திங்கள் கங்கை திகழரவம் வளர்சடைமேல் சேர வைத்து நீங்கலரும் பவத்தொடர்ச்சி நீங்க மன்றுள் நின்றிமையோர் துடி செய்ய நிருத்தஞ் செய்யும் பூங்கமல மலர்த்தாள்கள் சிரத்தின் மேலும் புந்தியினு முறவணங்கிப் போற்றல் செய்வாம். 1 சிவகாமியம்மை துதி பரந்தபரா பரையாதி பரன திச்சை பரஞானம் கிரியைபர போக ரூபம் தருங்கருணை உருவாகி விசுத்தா சுத்தத் தனுகரண புவனபோ கங்கள் தாங்க விரிந்தவுபா தானங்கண் மேவி யொன்றாய் விமலாய் ஐந்தொழிற்கும் வித்தாய் ஞாலத் தரந்தைகெட மணிமன்றுள் ஆடல் காணும் அன்னையருட் பாதமலர் சென்னி வைப்பாம். 2 விநாயகர் துதி நலந்தரல்நூ லிருந்தமிழின் செய்யுட் குற்றம் நண்ணாமை இடையூறு நலியாமை கருதி இலங்குமிரு குழையருகு பொருதுவரி சிதறி இணைவேல்க ளிகழ்ந்தகயற் கண்ணியொடு மிறைவன் கலந்தருள வருமானை முகத்தான் மும்மைக் கடமருவி யெனநிலவு கணபதியின் அருளால் அலர்ந்துமது கரமுனிவர் பரவவளர் கமல மனைதிரு வடியினைகள் நினைதல் செய்வாம். 3 முருகக்கடவுள் துதி வளநிலவு குலவமரர் அதிபதியாய் நீல மயிலேறி வருமீச னருள்ஞான மதலை அளவில்பல கலையங்கம் ஆரணங்கள் உணர்ந்த அகத்தியனுக் கோத்துரைக்கும் அண்ணல்விறலெண்ணா உளமருவு சூரனுரம் எமதிடும்பை யோங்கல் ஒன்றிரண்டு கூறுபட வொளிதிகழ்வேல் உகந்த களபமலி குறமகள்தன் மணிமுலைகள் கலந்த கந்தன்மல ரடியிணைகள் சிந்தை செய்வாம். 4 சந்தான பரம்பரை தேவர்பிரான் வளகயிலைக் காவல் பூண்ட திருநந்தி யவர்கணத்தோர் செல்வர் பாரிற் பாவியசத் தியஞான தரிசனிகள் அடிசேர் பரஞ்சோதி மாமுனிகள் பதியா வெண்ணை மேவியசீர் மெய்கண்ட திறலார் மாறா விரவுபுகழ் அருணந்தி விறலார் செல்வத் தாவிலருள் மறைஞான சம்பந்தர் இவரிச் சந்தானத் தெமையாளும் தன்மை யோரே. 5 குரு வணக்கம் பார்திகழ வளர்சாம வேத மல்கப் பராசரமா முனிமரபு பயில ஞானச் சார்புதர வந்தருளி எம்மை யாண்ட சைவசிகா மணிமருதைத் தலவன் அந்தன் கார்மருவு பொழில்புடைசூழ் மதின்மீதே மதியங் கடவாமை நெடுங்கொடியின் கரந்தகையுங் கடந்தைச் சீர்நிலவு மறைஞான சம்பந்தன் எந்தை திருவளரும் மலரடிகள் சென்னி வைப்பாம். 6 நுதலிய பொருள் புறச்சமயத் தவர்க்கிருளாய் அகச்சமயத் தொளியாய்ப் புகல் அவைக் களவாகிப் பொற்பணிபோல் அபேதப் பிறப்பிலதாய் இருள்வெளிபோற் பேதமும் சொற் பொருள்போல் பேதாபே தமும் இன்றிப் பெருநூல் சொன்ன அறத்திறனால் வளைவதா யுடலுயிர்கண் ணருக்கன் அறிவொளிபோல் பிறிவருவருமத் துவித மாகுஞ் சிறப்பினதாய் வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தத் திறன்இங்குத் தெரிக்கலுற்றாம். 7 தீட்சாக்கிரமம் மூவகையா ருயிர்வருக்க மலத்தார் கன்ம மூலமலத் தார்மூன்று முடையாரன்றே தீவகமா மெனவுருவாய் வந்து நாதன் திருநோக்கால் பரிசத்தால் திகழும் வாக்கால் பாவனையால் மிகுநூலா லியோகப் பண்பால் பரவிவரு மவுத்திரியால் பாச நாச மேவவரு ளுதவுமவுத் திரியிரண்டு திறனாம் வியன்கிரியை ஞானமென விளம்பு மாறே. 8 விரும்பியமந் திராதிகார மர்ச்சனா திகார மேவுமியோ காதிகார மெனச்சமய விசேடம் வரும்பொருவில் நிருவாண மந்திரங்கள் பதங்கள் வன்னங்கள் பவனங்கள் தத்துவங்கள் கலைகள் ளிரங்கடைவிற்றொகைபதினொன் றெண்பத் தொன்றைம்பத்தொன் றிருநூற்றோ டிருபத்து நாலாறா றைந்திற் பரந்தநெறி யறுவகையு மொருவிநினை வரிதாம் பரபதத்து ளுயிர்விரவப் பயிற்று மன்றே. 9 சிவஞானத்தின் சிறப்பும் வகையும் கிரியையென மருவுமவை யாவும் ஞாங் கிடைத்தற்கு நிமித்தமெனக்கிளக்குமுண்மைச் சரியைகிரி யாயோகத் தன்மையோர்க்குச் சாலோக சாமீப சாரூ பங்கண் மருவியிடு முயர்ஞான மிரண்டா மாறா மலமகல வகலாது மன்னு போதத் திருவருளொன் றொன்றதனைத் தெளிய வோதுஞ் சிவாகமமென் றுலகறியச் செப்பும் நூலே. 10 நூல்வழியும் நூற்பெயரும் தெரித்தகுரு முதல்வருயர் சிவஞான போதஞ் செப்பினர்பின் பவர்புதல்வர் சிவஞான சித்தி விரித்தனர்மற் றவர்கள்திரு வடிகள் போற்றி விளம்பிநூ லவையிரண்டும் விரும்பினோக்கிக் கருத்திலுறை திருவருளு மிறைவ னூலுங் கலந்துபொது வுண்மையெனக் கருதி யானு மருத்திமிக வுரைப்பன்வளர் விருத்த நூறு மாசில்சிவப் பிரகாச மாகு மென்றே. 11 அவையடக்கம் தொன்மையவா மெனுமெவையு நன்றாகா வின்று தோன்றியநூ லெனுமெவையுந் தீதாகா துணிந்த நன்மையினார் நலங்கொண்மணி பொதியுமதன் களங்க நவையாகா தெனவுண்மை நயந்திடுவர் நடுவாந் தன்மையினார் பழமையழ காராய்ந்து தரிப்பர் தவறுநலம் பொருளின்கட் சார்வாராய்ந்தறிதல் இன்மையினார் பலர்புகழி லேத்துவரே திலருற் றிகழ்ந்தனரே லிகழ்ந்திடுவர் தமக்கென வொன் றிலரே. 12 பொது அதிகாரம் முதற் சூத்திரம் 1. பதி இயல்பு பல்கலையா கமவேத மியாவையினுங் கருத்துப் பதிபசுபா சந்தெரித்தல்பதிபாரமே யதுதான் நிலவுமரு வுருவின்றிக் குணங்குறிக ளின்றி நின்மலமா யேகமாய் நித்த மாசி யலகிலுயிர்க் குணர்வாகி யசல மாகி யகண்டிதமா யானந்த வருவா யன்றிச் செலவரிதாய்ச் செல்கதியாய்ச் சிறிதாகிப் பெரிதாய்த் திகழ்வதுதற் சிவமென்பர் தெளிந்து ளோரே. 13 முதல்வன் திருவுரு நீடுபரா சத்திநிக ழிச்சா ஞான நிறைகிரியை தரவதனை நிமலன் மேவி நாடரிய கருணைதிரு வுருவ மாகி நவின்றுபல கலைநாத விந்து வாதி கூடுமொளி வளர்குடிலை மாயை மேவிக் கொடுவினைகொள் தனுகரன புவன போகம் பீடுபெற நிறுவியவை யொடுக்கு மேனி பிறங்கியநிட் களசகளப் பெற்றி யாமே. 14 ஈங்கிதுவென் றதுகடந்த வியல்பி னானும் ஈறுமுத நடுவொன்று மிலாமை யானும் ஓங்கிவளர் ஞானமய னாத லானும் உண்மைபிறர்க் கறிவரிய வொருமை யானும் தாங்கரிய வெறுப்பினொடு விருப்பு மெல்லாஞ் சார்வரிய தனிமுதல்வ னாத லானும் நீங்கலரு முயிர்க்குயிராய் நிற்ற லானும் நிறுத்திடுவ நினைந்தவுரு நிமலன் றானே. 15 முதல்வனது உண்மை உலகமெலா மொருவனோ டொருத்தியொன்றென் றுளதாகி நின்றளவி லொடுங்கும் பின்னு மலமதனா லுளதாகு முருவ மாறி வருவது பேர் வதுசெல்வ தாத லானும் மலைவிலசேத தனமாயை யாதலானு மணுக்களுரு வடையுமறி விலாமை யானும் நிலவுதொழின் மருவுயுரு நிற்ற லானும் நின்றெவையு மளித்திடுவ நிமலன் றானே. 16 கந்தமல ரயன்படைக்கு முலக மெல்லாங் கண்ணனளித் திடுமவையெங் கடவுள் தானே யந்தமுற வழித்திடுவ னாத லாலே யயனரியு மவனதுய ரதிகா ரத்து வந்தமுறை தன்றொழிலே மன்னுவிப்ப னெல்லாம் வருவிப்பன் விகாரங்கண் மருவான் வானின் முந்தரவி யெதிர்முளரியலாவுறுமொன்றலர்வான் முகையாமொன் றொன்றுலரு முறையி னாமே. 17 உலகப் படைப்பின் பயன் ஏற்றவிவை யரனருளின் றிருவிளையாட் டாக வியம்புவர்க ளணுக்களிடர்க் கடனின்று மெடுத்தே யூற்றமிக வருள்புரித லேது வாக வுரைசெய்வ ரொடுக்கமிளைப் பொழித்தன் மற்றைத் தோற்மல பாகம்வரக் காத்தல் போகந் துய்ப்பித்த றிரோதாயி தகநிறுத்த லாகும் போற்வரு மருளருளே யன்றி மற்றுப் புகன்றவையு மருளொழியப் புகலொ ணாதே. 18 இரண்டாம் சூத்திரம் 2. பசுவியல்பு எண்ணரிதாய் நித்தமா யிருண்மலத்தி னழுந்தி யிருவினையின் றன்மைகளுக் கீடான யாக்கை யண்ணலரு ளானண்ணி யவையவரா யதனால் அலகினிகழ் போகங்க ளருந்து மாற்றாற் புண்ணியபா வம்புரிந்து போக்குவரவுடைத்தாய்ப் புணருமிருண் மலபாகம் பொருந்தியக்கா லுண்ணிலவு மொளியதனா லிருளகற்றிப் பாத முற்றிடுநற் பசுவருக்க மெனவுரைப்பருணர்ந்தோர். 19 3. பாச வியல்பு மலமும் திரோதனமும் ஏகமாய்த் தங்கால வெல்லைகளின் மீளும் எண்ணரிய சத்தியதாயிரு ளொளிரவிருண்ட மோகமாய்ச் செம்பிலுரு களிம்பேய்ந்து நித்த மூலமல மாயறிவு முழுதினையு மறைக்கும் பாகமாம் வகைநின்று திரோதான சத்தி பண்ணுதலான் மலமெனவும் பகர்வரதுபரிந்து நாகமா நதிமதியம் பொதிசடையா னடிக ணணுகும்வகை கருணைமிக நயக்குந் தானே. 20 சுத்தமாயையின் காரியம் உன்னலரும் பரசிவன்ற னருளாலே நாத முதிக்கு மிருங் குடிலைதனில் விந்துவரு நாதந் தன்னிலதி னொளிவளருஞ் சதாசிவரா மவரில் தயங்கவரு மீசர்வித்தை தனையளிப்ப ரதனான் மன்னுவரிவ் வகையைவர் வாய்மையினான் முன்னே வந்திடுமென் றுரைசெய்த விந்துவழா வகையே முன்னுதவுஞ் சூக்குமாதி யொருநான்கு மென்று மொழிந்திடுவரருங்கலைகண் முதிர்ந்துளோரே. 21 மாயையின் இயல்பு உருவாதி சதுர்விதமா யொன்றொன்றொவ்வா உண்மையதாய் நித்தமா யொன்றா யென்று மருவாகிக் கன்மாந்த மணுக்க ளியார்க்கு மாவார மாயசித்தா யசல மாகி விரிவாய தன்செயலின் வியாபியா யெல்லாம் விரிந்தவகை புரிந்தடைவின் மேவியவை யொடுங்க வருகால முயிர்களெல்லா மருவிடமாய் மலமாய மன்னியிடு மரனருளான் மாயை தானே. 22 மாயையின் உண்மை என்னையிது வெனினுலகுக் குபாதான மில்லை பிறைவனல தெனினசித்துத் சித்தினிடத் துதியா மன்னியுள தேனமுதல்வ னெனகொ லென்னின் மாயைதா னசித்துருவாய் மருவ மாட்டா தன்னவனு மிதுவொழிய வாக்க மாட்டான் அசத்தனா மெனினதுவு மவன்போ னித்த முன்னவனவ் வசித்தைவிரித் தெவையு மாக்கு முதன்மையது கொடுத்ததென மொழிந்திடாரே. 23 இருவினை உண்மை படைத்ததொரு படியின்றிப் பறவைபசு நரராய்ப் பண்ணியதென் முன்னைவினைப் பான்மையென்ப ரடுத்தவினை யுளதாயி னிறையே னென்னில் அசேதனமற் றவையாவிக் கமைந் தாகும் எடுத்தவினை யுறுவுறுவ துயிரேற் றானே யிருவினைக்குத் தக்கவுட லெய்து மென்னில் சடத்திரளு மகர்த்தாவா யறிவொன் றில்லாத் தன்மையனுங் கூடவொரு சங்கை யின்றே. 24 மும்மலமும் அநாதி அல்லன்மிக வுயிர்க்கிவைதா னனைத்த தீசன் அருவினைக ளருந்துதற்கோ விளையோ வன்றிச் சொல்லிவரு மாயையோ வணுவை முந்தச் சூழ்ந்ததெனு முரைமுதலோர் தொடக்கிலார்பால் ஒல்லைவரு மெனினுளதா முயிருண் டாவே யுளதுமல மலமுளதா வொழிந்த வெல்லாம் நெல்லின்முளை தவிடுமிபோ லநாதி யாக நிறுத்திடுவ ரிதுசைவ நிகழ்த்து மாறே. 25 தத்துவங்களின் தோற்றமுறை அருத்திமிகுங் கலைகால நியதியுடன் வித்தை யராகமிவை யனந்தரான் மாயைதனி லாகும் உருத்திரராற் கலையதனிற் பிரகிருதி குணங்கள் உளவாகு மாங்காரம் புந்திதனி லுதிக்குந் தெரித்தவிது திரிவிதமாந் தைசதம்வை காரி திகழ்தரு பூதாதி யெனத் திருந்தி யசாத்துவிதம் விரித்தகுண மனம்புத்தி யிந்திரிய மென்று விளம்பியசோத் திராதிமுதல் விளங்கியிடும் விரிந்தே! 26 மன்னியகன் மேந்திரிய மானவிரா சதஞ்சேர் வாக்காதி வைகாரி மருவிவருஞ் சத்தந் தன்னைமுத லாகியதா மதமிகுமாத் திரைபின் தருமதனின் வானநில மனல்புனன்மண் சத்த முன்னதனில் வெளியாதி யொன்றொன் றாக முறையிலுறு மிருமையயன் முடிவா முன்னே யுன்னுசதா சிவராதி யதிபதிக ளொடுக்க முதித்தவடை வெனவுரைப்ப ருணர்ந்து ளோரே. 27 கன்மத்தின் இயல்பு நண்ணியிடு முருவதனுக் கேது வாகி நானாபோ கங்களாய் நாசோற் பத்தி பண்ணிவரு மாதலால் அநாதி யாகிப் பலவாகி யணுக்கடொறும் படர்வதாகி யெண்ணிவரு மனவாச கன்மத்தா லியற்று மியல்பிதனாய் மதிகதமா யிருபயனாம் பாவ புண்ணியமாய்ப் புலர்காலை மாயை மேவிப் பொருந்துமிது கன்மமலம் புகலு மாறே. 28 கன்மநெறி திரிவிதநற் சாதியாயுப் போகக் கடனதெனவருமூன்று முயிரொன்றிற் கலத்தல் தொன்மையதூ ழல்லதுண வாகா கானுந் தொடங்கடைவினடையாதே தோன்று மாறித் தன்மைதரு தெய்விகமுற் பெளதிகமான் மிகமாந் தகையிலுறு மசேதனசே தனத்தாலுஞ் சாரு நன்மையொடு தீமைதரு சேதனனுக் கிவணூ ணாடிலத நூழ்வினையா நணுகுந் தானே. 29 மேலைக்கு வருவினையே தென்னி னங்கண் விருப்புவெறுப் பெனவறியவ் விளைவு மெல்லா மூலத்த வினைப்பயில்வா மென்னி னாமேன் முற்றியதன் பயனுனக்கு முளைக்குமென்பர் ஞாலத்து வினைகளிரு திறனாகும் புந்தி நண்ணாத வினைநணுகும் வெனையெனவொன் றிரண்டா யேலத்தா னிதமகித மாமிதனால் வழுவா தெய்தியிடும் புண்ணியபா வங்க ளென்றே. 30 உற்றதொழி னினைவுரையி நிருவினையு முளவாம் ஒன்றொன்றா லழியா தூணொழியாதுன்னின் மற்றவற்றி னொருவினைக்கோர் வினையால் வீடு வைதிகசை வம்பகரு மரபி லாற்றப் பற்றியது கழியுமிது வினையாலேற்கும் பான்மையுமாம் பண்ணாதும் பலிக்கு முன்னஞ் சொற்றருநூல் வழியின்வரின் மிகுதி சோருஞ் சோராதங் கதுமேலைத் தொடர்ச்சி யாமே. 31 ஐம்மலம் மோகமிக வுயிர்கடொறு முடனாய் நிற்க மூலவா ணவமொன்று முயங்கி நின்று பாகமிக வுதவுதிரோ தாயி யொன்று பகர்மாயை யொன்றுபடர் கன்ம மொன்று தேகமுறு கரணமொடு புவன போகச் செயலாரு மாமாயைச் திரட்சி யொன்றென் றாகமல மைந்தென்ப ரைந்து மாறா தருளென்ப தரிதென்ப ரறிந்து ளோரே. 32 அவத்தை இயல்பு 1. கேவலாவத்தை ஓங்கிவரும் பலவுயிர்கண் மூன்றவத்தை பற்றி யுற்றிடும்கே வலசகல சுத்தமென வுணர்க வீங்குவருங் கலாதியொடு குறியுருவ மொன்று மின்றிமல மன்றியொன்று மில்லையெனு மியல்பா யாங்கறிவை யறிவரிதாய் அறிகருவி யணையா வாதலினா லிருண்மருவு மலர்விழிபோல துவாய் நீங்கும்வகை யின்றி நித்த வியாபகமா யங்க ணிற்பதுகே வலமென்று நிகழ்த்து நூலே. 33 ஐக்கியவாத மதமும் மறுப்பும் இன்மைமல மாயைகன்ம மென்றிரண்டே யிறைதான் இலங்குபல வுயிர்களு முன்புரிந்த விருவினையின் தன்மைகளா லெவர்களுக்குந் தனுகரண புவனந் தந்திடுமிங் கதனாலே யிருபயனுஞ் சார்ந்து கன்மமெலா நேராக நேராதன் மருவக் கடவுளரு ளாலெவையுங் கழித்திடுவ னதனாற் பின்மலமா னவையணுகா பெருகொளிமுன்புளதே பெற்றிடுமென் றித்திறமென் பேசு மாறே. 34 மலத்தின் உண்மை மாயைமுத லெனவினையின் பான்மைமுதலெனவே மன்னுபனை விதைமரபின் மயங்குமலம் சுத்தற் கேயுநெறி யென்கொலத னியல்பாயின் முத்தி என்பதென்மற் றிவை நிற்க விருங்கலாதி யுணர்வாய் மேய பினர்த் தன்னுருவம் விளங்காமை விளக்கு மிகுமுலகந்த னிலென்னிலி வைவிடுங்கா லுணர்வுள் தோயுநெறி யிலதாத லறியாமை யெனநீ சொல்லியது மலமென்பர் துணிந்து ளோரே. 35 அந்நியமா னவையுணர்த்தி யநந்நியமாய் நிறைந்த வறிவறியா மையினானு மருணிலவுங் காலந் தன்னிலவ னேயாவு மாய்நின்ற தொன்மை தாமுணர்த லானுமுயிர் தானென வொன்றிலதாய் மன்னியிடு மலமாயை கன்மங்கண் மாறி வந்திடுமிங் கிதுவழுவா தாதலினான் மனத்தால் உன்னரிய திருவருளை யொழியமல முளதென் றுணர்வரிதா மதனுண்மை தெரிவரிதா முனக்கே. 36 2. சகலாவத்தை மலமும் மாயையும் முரனுவன நால்வகை வாக்குகள் புகலுமல மொழித்தற்குக் கலாதிமுதன் மாயை பொருந்தியிடு மரனருளாற் போதந் தீபஞ் சகலமெலா முடனாய வாறு போலுந் தருமருளை மலமுயிர்கள் சாராமன் மறைக்கு மிகலிவரு மியையுணரி னிருள்வெளியாந் தன்மை எய்தும் வகை தன்செய்தி யிலங்கும் விந்து பகர்வரிய வுணர்வாகி யொளியா யுள்ளப் பான்மையினால் ஒரு நாதம் படரும் தானே. 37 வந்தடைந்து பின்னமாய் வன்னங்கள் தோற்றம் வருமடைவு படவொடுக்கி மயிலண்ட சலநேர் சிந்தைதனி லுணர்வாகும் பைசந்தி யுயிரிற் சேர்ந்துவரு மவைமருவு முருவெவையுந் தெரித்து முந்தியிடுஞ் செவியிலுறா துள்ளணர்வா யோசை முழங்கியிடு மத்திமைதான் வைகரியிலுதானன் பந்தமுறு முயிரணைந்து வந்தமொழி செவியின் பாலணைய நினைந்த பொருள் பகருந் தானே. 38 வாக்குகளால் சவிகற்ப உணர்வு உண்டாதலும் தத்துவங்களின் தொழிலும் இத்தகைமை இறையருளால் உயிரறியும் அறிவுக் கீடாக வாடாதே யீரிரண்டா னுரைத்த வித்தைமுத லைவரான் விளங்கு ஞான மேவியிடு மெனவுரைப்ப ரசுத்த மாயை வைத்தகலை தான்மூல மலஞ்சிறிதே நீக்கி மருவும்வகை தெரிவிக்கும் வாயில்களின் பயனைப் புத்திதர வித்தையிடை நின்றறிவை யுயிர்க்குப் பொருந்தியிடும் வகைபுணரும் புனிதசத்தி புணர்ந்தே. 39 பேசரிய வராகந்தன் கன்மத்துக் கீடாப் பெற்றதனி லாசைதனைப் பெருகுவிக்கு நியதி தேசமிகு மரசர்தரு மாணி செய்தி செய்தவரைத் துய்ப்பிக்குஞ் செய்கை போல நேசமுறு தங்கன்ம நிச்சயித்து நிறுத்து நிகழ்காலங் கழிகால மெதிர்கால மென்றே யோசைதர வருங்கால மெல்லைபலம் புதுமை யுறுவிக்கு மிறைசக்தி யுடனாய் நின்றே. 40 மதுபுருட தத்துவமென் றறைந்திடுவ ரறிந்தோர் மெய்வகைய கலாசுத்தி தனினிதற்குஞ் சுத்தி மேவியிடும் வகைதானும் விரும்பிய நூல் விளம்புஞ் செய்வகையின் றொடர்ச்சியிங்குத் தோற்றுவிக்குங் குணத்தின் சேர்வுபுரி பிரகிருதி திரிகுணமா மவைதா மிவ்வகையிற் சாத்துவித ராசததா மதமா இயம்புவர்க ளொன்றிரண்டு குணமேற்கை யுடைத்தே. 41 அலகில்குணம் பிரகாசம் லகுதைவியா விருதி யடர்ச்சிமிகுஞ் கவுரவம நியமமிவையடைவே நிலவியிடு மும்மூன்று முயிரொன்றிற் கலந்தே நிற்குமிவை நிறைபுலனின் பயனெவையுங் கவருங் குலவிவரு போகங்கொ ளிடமா மாறாக குறைவிலொளி யாமலகில் புலனிடத்தி னொருமை பலவகையு முடையதாய்ப் பரனருளாற் புத்தி பஞ்சாசற் பாவகமும் பண்ணுவிக்குந் தானே. 42 ஆனதனு வதனிலுறு மநிலனையு மியக்கி யாங்கார நீங்காத வகந்தைக்கு வித்தா யானலது பிறரொருவ ரெனையொப்பார் புவியி னில்லையெனு மியல்பினதா யிந்திரியம்புலன்க டானுகரு மளவிலதின் முந்தியுறு மிச்சை தானுருவாய்ச் சங்கற்ப சதாகதியுந் தந்து மானதமா னதுநிற்குஞ் சிந்தைநினை வையம் வந்துதரு மனமொழிய வகுப்பொ ணாதே. 43 சொன்னமுறை செவிதுவக்கு நோக்கு நாக்குத் துண்டமிவை யைந்திற்குந் தொகுவிடய மாக மன்னியசத் தப்பரிச ரூபரச கந்த மருவியிடு மிவையடைவே வாக்குப் பாதம் பின்னர்வரு பாணிமிகு பாயுவினோ டுபத்தம் பேசலுறு மைந்திற்கும் பிறங்கொலிகொள் வசன முன்னரிய கமனதா னவிசர்க்கா நந்த முற்றதொழில் பெற்றிடுவ துண்மை யாமே. 44 முந்தியவைம் பூதங்கள் வானாதி யாக முயங்கியநற் செவிமெய்கண் ணாநாசிமுறையா லிந்தவயி னின்றுவரு மைம்புலனு முயிர்தா மெய்தும்வகைதம் முருவினிலங்கியிடும் புறத்து வந்தடைய விடங்கொடுக்கு மிரந்தரமாய் வானம் வாயுமிகச் சலித்தெவையுந் திரட்டுந்தீ வெம்மை தந்தவைசுட் டொன்றுவிக்கு நீர்குளிர்ந்து பதமே தருமுரத்துத் தரிக்குமிகு தரணி தானே. 45 தத்துவங்களின் வகையும் உயிர்கள் இறந்து பிறந்து வருமாறும் இந்நிரையி லைந்துசுத்த மேழ்சுத்தா சுத்த மெண்மூன்று மசுத்தமெனு மிவைமுப்பத்தாறா மன்னியதத் துவங்களிடை மயங்கிநெடுந் துயர்தா மருவுமுரு நிலையழிய வரும்பொழுது வரியார் பன்னகமண் டசங்கனவு படர்வகையே முன்னம் பகரவருங் கலாதிநிலை பரவியசூக் குமமாந் தன்னுருவி லணைந்துபய னருந்தியர னருளாற் றரையினிடை வருமென்று சாற்று நூலே. 46 நால்வகைத் தோற்றம் முதலியன தோற்றியிடு மண்டசங்கள் சுவேதசங்கள் பாரிற் றுதைந்துவரு முற்பீசஞ் சராயுசங்க ணான்கி னூற்றமிகு தாபரங்கள் பத்தொன்பதென்று மூர்வபதி னைந்தமரர் பதினொன்றொ டுலவா மாற்றருநீ ருறைவனநற் பறவைகணாற் காலி மன்னியிடும் பப்பத்து மானுடரொன் பதுமா வேற்றியொரு தொகையதனி லியம்புவர்கள் யோனி யெண்பத்து நான்குநூ றாயிரமென்றெடுத்தே. 47 3. சுத்தாவத்தை இனையபல பிறவிகளி னிறந்துபிறந் தருளா லிருவினைகள் புரிந்தருந்து மிதுசகலம் அகலா முனமருவு மிருபயனு மொருகாலத் தருந்த முந்துநுக ருந்துபய னந்தமுற வந்த வினையுமெதிர் வினையுமுடி வினையுதவு பயனா னேராக நேராதன் மேவுங் கான்முற் சினமருவு திரோதாயி கருணையாகித் திருந்தியசத் திநிபாதந் திகழு மன்றே. 48 நாடியசத் திநிபாத நாலு பாத நண்ணும்வகை யெண்ணரிய ஞான பாதங் கூடுமவர் தமக்குணர்வாய் நின்ற ஞானக் கூத்தனொரு மூர்த்திகொடு குறுகி மோக நீடியகே வலசகல நிகழாவாறு நிறுத்திமல மறுக்குமிது நிலையார் சுத்தங் கேடி புகழ் தருஞ்சரியை கிரியா யோகக் கேண்மையரே லிவையுணர்த்தக் கிளக்கு நூலே. 49 முத்தி பேதங்கள் அரிவையரின் புறுமுத்தி கந்த மைந்து மறுமுத்தி திரிகுணமு மடங்கு முத்தி விரவுவினை கெடுமுத்தி மலம்போ முத்தி விக்கிரக நித்தமுத்தி விவேக முத்தி பரவுமுயிர் கெடுமுத்தி சித்தி முத்தி பாடாண முத்தியிவை பழிசேர் முத்தி திரிமலமு மகலவுயி ரருள்சேர் முத்தி திகழ்முத்தி யிதுமுத்தித் திறத்த தாமே. 50 உண்மை அதிகாரம் இவ்வியலின் வகை இங்கியவை பொதுவி யம்பு மென்பர்க ளிதன்மேல் ஆன்மாத் தங்கிய அஞ்சவத்தை தன்னுண்மை உணர்த்துந் தன்மை பொங்கொளி ஞான வாய்மை அதன்பயன் புனித னாம மங்கதில் அணைந்தோர் தன்மை யறைகுவ னருளி னாலே. 51 1. ஆன்ம வியல்பு செறிந்திடு முடலுண் மன்னிச் சேர்புலன் வாயில்பற்றி யறிந்ததி லழுந்து மொன்று மறிந்திடா தறியுந்தன்மை பிறிந்தடை வஞ்ச வத்தை பெருகிய மலத்தாற்பேணி யுறுந்தனி யதீத முண்மை யுயிர்க்கென வுணர்த்துமன்றே. 52 உருவுணர் விலாமை யானு மோரொரு புலன்களாக மருவிநின் றறித லானு மனாதிகள் தம்மின் மன்னித் தருபய னுகர்த லானு முயிர்சட மாத லானும் அருவினை யுடலு ளாவி யறிவினா லறியு மன்றே. 53 அறிவெனில் வாயில் வேண்டா வன்றெனி லவைதாமென்னை யறிவவை யுதவு மென்னி லசேதன மவைதாமெல்லாம் அறிபவ னறியுந் தன்மை யருளுவ னென்னி லான்மா வறிவில தாகு மீச னசேதனத் தளித்தி டானே. 54 அறிவினா லறிந்த யாவு மசத்தாத லறிதி யென்றும் அறிவினா லறியொ ணாதே லாவதொன்றின்மை தொன்மை யறி வுதா னொன்றை முந்தி யதுவது வாகக் காணு மறிவுகா ணசத்து மற்ற தறிவினுக் கறியொணாதே. 55 எவ்வறி வசத்த றிந்த தெனிலுயி ரறியா தீசன் அவ்வறி வறியா னல்ல தசேதன மறியா தாவி செவ்விய கருவி கூடில் தெரிவுறா தருளிற் சேரா துவ்விரு வகைய தென்னி லொளியிரு ளொருங்குறாவே. 56 சத்திது வென்ற சத்துத் தானறி யாத சத்தைத் சத்தறிந் தகலவேண்டா வசத்திதுசத்தி தென்றோர் சத்திரு ளொளிய லாக்கண் டன்மைய தாம சத்தைச் சத்துட னின்று நீக்குந் தன்மையாற் சதசத்தாமே. 57 கண்ணொளி விளக்களித்துக் காட்டிடுமென்னின் முன்னங் கண்ணொளி யொன்று மின்றாம் விளக்கொளி கலந்த வற்றைச் கண்ணொளி யகல நின்றே கண்டிடும் வேறு காணாக் கண்ணொளி விளக்கின் சோதி கலந்திடுங் கருத்தொன் றன்றே. 58 ஓரிடத் திருத்தன் மாயா வுருநிறைந் திடுத லொன்றாம் பேரிடத் துறைத றானே பிறங்கறி வாகி நிற்றல் சோர்வுடைச் சடநி கழ்த்த லெனுமிவை சொல்லார் நல்லோ ரோரிடத் துணரு முண்மை யொளிர்தரு முபலம் போலும். 59 2. அஞ்சவத்தை இயல்பு எண்ணவொன் றிலாத தீத மெய்திய துரியத் தொன்று நண்ணிடுஞ் சுழுத்தி தன்னில் நயந்துள தொன்று பின்னு மண்ணிடுங் கனவு தன்னி லாறேழாஞ் சாக்கிரத்திற் கண்ணுறு மஞ்சா றாய கருவிகள் மருவுந் தானே. 60 மெய்வகை யிடத்தி லுற்று மேவுமா கண்டு மிக்க பொய்வகைப் பவம கற்றப் புரிந்திடி லருளாலாங்கே யைவகை யவத்தை யுய்க்குமறி வினாலறிந்து கொள்ளே. 61 நீக்கமி லதீத மாசு நிறைந்தகே வலமா நீர்மை சாக்கிரங் கலாதி சேர்ந்த சகலமாந் தன்மை யாகு மூக்கமி லிரண்டுங் கூடா தொழியவோர் நிலையி னீடுஞ் சாக்கி ராதீதஞ் சுத்தத் தகைமைய தாகுந் தானே. 62 3. தன்னுன்மை உணர்த்துந் தன்மை மருவிய பொறியி லொன்று மாபூத மைந்தி லொன்றுங் கருவிக ணான்கு நீங்காக் கலாதிக ளைந்துங் கூடி யொருபுல னுகரு மிந்த வொழுங்கொழிந் துயிரு மொன்றைத் தெரிவுறா தவனொ ழிந்தத் திரள்களுஞ் செயலி லாவே. 63 தனக்கென வறிவி லாதான் றானிவை யறிந்து சாரான் றனக்கென வறி விலாத வாயிறா னறியா சாரத் தனக்கென வறிவி லாதான் தத்துவ வன்ன ரூபன் தனக்கென வறிவா னாலிச் சகலமு நுகருந் தானே. 64 அவிகாரவாதம் சிவாத்துவிதம் என்பவற்றை மறுத்தல் கண்டுணர் புலன்கள் காணுங் கருத்தினா லொருத்தன் ஞானங் கொண்டுள மறியு மென்னிற் கொள்பவன் முதலி யாகு மண்டிய வுணர்வு யிர்க்கா மன்னிநின் றறியு ெமன்னில் உண்டிட வேண்டு வானுக் கொருவன்வே றுண்ட லாமே. 65 சித்தாந்தம் இருணனி யிரவி தான்வந் திரித்தலு மிரவி லெண்ணும் பொருணிலை கண்டு மாந்தர் பொருந்திடு மாறு போல மருணிலை யெங்கு நீங்க மகிழ்ந்துயிர் தன்னுண் மன்னு மருளையு மொழிய ஞாலத் தறிந்தவா றறியு மன்றே. 66 அறிந்திடு மனாதி வாயி லானவை யவன்ற னாலே யறிந்திடு மென்று மொன்று மறிந்திடா வவைபோலி யாவும் அறிந்திடு மறியுந் தன்மை யறிந்திட கன்மத் தொன்மை யறிந்தவை நுகரு மாறு மருளுவ னமலன் றானே. 67 4. ஞான வாய்மை காட்டிடுங் கரண மொன்று மில்லையேற் காணொ ணாதா னாட்டிய விவற்றான் ஞான நணுகவு மொண்ணா முன்னம் ஈட்டிய தவத்தி னாலே யிறையரு ளுருவாய் வந்து கூட்டிடு மிவற்றை நீக்கிக் குரைகழல் குறுகு மாறே. 68 பன்னிறங் கவருந் தொன்மைப் படிகநீ டொளியும் பன்மை மன்னிலங் கியல்புந் தந்த வளரொளி போல வையந் தன்னகம் பயிலு நற்சிற் சடங்களின் றன்மை தாவா நன்னலம் பெறநி றைந்த ஞானமே ஞானமென்பர். 69 மாயைமா யேய மாயா வருமிரு வினையின் வாய்மை யாயவா ருயிரின் மேவு மருளெனி லிருளாய் நிற்கும் மாயைமா யேய மாயா வருமிரு வினையின் வாய்மை யாயவா ருயிரின் மேவு மருளெனி லொளியாய் நிற்கும். 70 5. ஞானவாய்மையின் பயன் தேசுற மருவு மான்ம தெரிசன மான்ம சுத்தி வாசிலா வான்ம லாப மாகமூன் றாகு மூன்றும் பாசம தகல ஞானம் பற்றறான் பணியை நீத்தல் ஏசினே யத்த ழுந்த லெனுமிவற் றடங்கு மன்றே. 71 1. ஆன்ம தரிசனம் தன்னறி வதனா லேதுந் தனக்கறி வில்லை யேனுந் தன்னறி வாக வெல்லாந் தனித்தனி பயன ருந்துந் தன்னறி வறியுந் தன்மை தன்னாலே தனைய றிந்தாற் தன்னையுந் தானே காணுந் தானது வாகி நின்றே. 72 தத்துவ மான வற்றின் தன்மைக ளுணருங் காலை யுய்த்தறிந் திடவு திப்ப தொளிவளர் ஞான மாகும் அத்தன்மை யறிவு மாறு மகன்றிட வதுவா யான்மா சுத்தமாஞ் சுத்த ஞானத் தொருமுத றோன்று மன்றே. 73 சத்தி சத்திமான் என்னும் இருமை உறைதரு முணர்வு மன்றி யதன்முத லுள்ள தென்றிங் கறைவதெ னென்னி லண்ண லருளெனு மதுவே யன்றி நிறையொளி முதல தன்றி நின்றிடா நிமல னாகும் இறைவன் முதல வன்றே னிலங்கருள் சத்தி யாமே. 74 சுத்தமாஞ் சத்தி ஞானச் சுடராகுஞ் சிவமொ ழிந்தச் சத்திதா நின்றா முன்னைத் தகவிலா மலங்கள் வாட்டி யத்தனை யருளு மெங்கு மடைந்திடு மிருள கற்றி வைத்திடு மிரவி காட்டும் வளரொளி போன்ம கிழ்ந்தே. 75 2.ஆன்ம சுத்தி சிவசமவாத மறுப்பு புகலரு மசத்தர் தம்பாற் பொருந்திய வலகை யேபோல் அகிலமு முணரு மீச னருளுயிர் மேவ லாலே சகலமு நிகழ வேண்டுந் தலவனைந் தொழிலுந் தானே யிகலற வியற்றல் வேண்டு மென்றது நன்றி யின்றே. 76 இன்றுநோக் குரை நடக்கு மியல்பிலோற் கினைய வாய்ந்து நின்றதோ ரலகை நேர்ந்தா னிகழ்வதெ னதுபோ லுள்ளத் தொன்றிய வுணர்வு தம்பா லுள்ளது நிகழ்த்து மீசன் தன்றொழி னடத்து மேனி தனக்கெனக் கொண்டு தானே. 77 இந்நிலை தன்னின் மன்னி யெய்திடுங் கலாதி போதந் தன்னள வறிந்து நிற்குந் தகவிலா மலங்க ணீத்த வந்நிலை கரண மாகா வகையதி லறிவ டங்கி மன்னிய வியாபி யாய வான்பயன் றோன்று மன்றே. 78 அடைபவர் சிவமே யாகு மதுவன்றித் தோன்று மென்ற கடனதெ னென்னின் முன்னுங் கண்டிடார் தம்மைப் பின்னுந் தொடர்வரு மருளி னாலுந் தோன்றுமா காணா ராயின் உடையவ னடிசேர் ஞானம் உணர்தலின் றணைத லின்றே. 79 3. ஆன்ம லாபம் பொற்புறு கருவி யாவும் புணராமே யறிவி லாமைச் சொற்பெறு மதீதம் வந்து தோன்றாமே தோன்றி நின்ற சிற்பர மதனா லுள்ளச் செயலறுத் திடவு திக்குந் தற்பர மாகி நிற்றல் சாக்கிரா தீதந் தானே. 80 ஒடுங்கிடா கரணந் தாமே யொடுங்குமா றுணர்ந்தொ டுக்க வொடுங்கிடு மென்னி னின்ற தொடுங்கிடா கரண மெல்லா மொடுங்கிட வொடுங்க வுள்ள வுணர்வுதா னொழியும் வேறா யொடுங்கிடி னன்றி மற்றவ் உண்மையை யுணரா ணாதே. 81 பற்றிடுங் கருவி யாவும் படர்ந்துணர் வளிக்கும் காலை யுற்றறிந் திடுவ தொன்றி னுணர்வினி னுண்மை யாகு மற்றது பகல்வி ளக்கின் மாய்ந்திட வருவ துண்டேற் பெற்றிடு மதனை மாயப் பிறப்பினை யறுக்க லாமே. 82 முந்திய வொருமை யாலே மொழிந்தவை கேட்டல் கேட்ட சிந்தனை செய்த லுண்மை தெளிந்திட லதுதா னாக வந்தவா றெய்த நிட்டை மருவுத லென்று நான்கா மிந்தவா றடைந்தோர் முத்தி யெய்திய வியல்பி னோரே. 83 பாசமா ஞானத் தாலும் படர்பசு ஞானத் தாலும் ஈசனை யுணர வொண்ணா திறையருண் ஞான நண்ணின் தேசுறு மதனான் முன்னைச் சிற்றறி வொழிந்து சேர்ந்து நேசமோ டுயர்ப ரத்து நிற்பது ஞான நிட்டை. 84 உபாய நிட்டை விளம்பிய வகையி னிட்டை மேவிட லரிதேன் முன்னம் அளந்துணர் வளித்த வற்றி னளவுமற் றவற்றி னாலே யுளங்கொளுந் தனையு முள்ள படியுமுற் றுணர்ந்து செவ்வே தளர்ந்திடா துவப்ப மற்றத் தன்மைய தாகுந் தானே. 85 பாவிக்கின் மனாதி வேண்டும் பயனிலை கரண நீத்துப் பாவிப்ப னென்னி லென்ன பழுதுள பாவ கத்தாற் பாவிக்க வொண்ணா னென்று பாவிப்ப னென்னி னீயென் பாவிக்க வேண்டா வாண்ட பரனருள் பற்றி னோர்க்கே. 86 பரமுத்தியின் இயல்பு ஒன்றிரண் டாகி யொன்றி னொருமையா மிருமை யாகி யொன்றினொன் றழியு மொன்றா தென்னினொன் றாகா தீயி னொன்றிரும் புறழி னின்றா முயிரினைந் தொழிலும் வேண்டு மொன்றிநின் றுணரு முண்மைக் குவமையா ணவத்தொ டொன்றே. 87 பாச நீக்கம் அழிந்திடும் பாச மென்னி னித்தமென் றுரைத்தல் வேண்டா அழிந்திடா தென்னின் ஞான மடைவது கருதல் வேணா அழிந்திடுஞ் சத்தி நித்த மழிந்திடா வொளியின் முன்னர் அழிந்திடு மிருளு நாச மடைந்திடா மிடைந்தி டாவே. 88 வினை நீக்கம் எல்லையில் பிறவி நல்கு மிருவினை யெரிசேர் வித்தி னெல்லையி னகலு மேன்ற உடற்பழ வினைக ளூட்டுந் தொல்லையின் வருதல் போலத் தோன்றிரு வினைய துண்டேல் அல்லொளி புரையு ஞானத் தழலுற வழிந்து போமே. 89 6. புனித நாமம் பந்தமா னவைய றுத்துப் பவுதிக முழலு மெல்லைச் சந்தியா தொழியா திங்குத் தன்மைபோல் வினையுஞ் சாரும் அந்தமா திகளில் லாத வஞ்செழுத் தருளி னாலே வந்தவா றுரைசெய் வாரை வாதியா பேதி யாவே. 90 திருவெழுத் தைந்தி லான்மாத் திரோத மாசருள் சிவஞ்சூழ் தரநடு நின்ற தொன்றாந் தன்மையுந் தொன்மை யாகி வருமந மிகுதி யாலே வாசியி லாசை யின்றிக் கருவழிச் சுழலு மாறுங் காதலார்க் கோத லாமே. 91 ஆசறு திரோத மேவா தகலுமா சிவமுன் னாக வோசைகொ ளதனி னம்மே லொழித்தரு ளோங்கு மீள வாசியை யருளு மாய மற்றது பற்றா வுற்றங் கீசனி லேக மாகு மிதுதிரு வெழுத்தி னீடே. 92 7. அணைந்தோர் தன்மை தீங்குறு மாயை சேரா வகைவினை திரிவி தத்தா னீங்கிட நீங்கா மூல நிறையிரு ளிரிய நேயத் தோங்குணர் வகத்த டங்கி யுளத்துளின் பொடுங்க நேரே தூங்குவர் தாங்கி யேகத் தொன்மையிற் றுகளி லோரே. 93 குறிப்பிடங் காலத் திக்கா சனங்கொள்கை குலங்கு ணஞ்சீர் சிறப்புறு விரதஞ் சீலந் தபஞ்செபந் தியான மெல்லா மறுத்தற வொழிதல் செய்தன் மருவிடா மன்னு செய்தி யுறக்குரு பவர்போல் வாய்மை யொழிந்தவை யொழிந்து போமே. 94 அகம்புற மென்றி ரண்டா லருச்சனை புரியு மிந்தச் சகந்தனி லிரண்டு மின்றித் தமோமய மாகி யெல்லா நிகழ்ந்திட மகிழ்ந்து வாழு நீர்மையோர் போல ஞானந் திகழ்ந்தகம் புறமெ னாத செம்மையார் நன்மை யாரே. 95 ஞானத்தில் யோகம் அண்டமே விடவ னைத்து மனைத்தையு மண்ட மேவிக் கொண்டல்போ லெவையு ஞானங் குறைவிலா நிறைத லாலே கண்டதோர் பொருளை யந்தக் கருத்தினாற் காணிற் றானே யண்டநா யகனா மேனி யானதே லைய மின்றே. 96 ஞானத்திற் கிரியை மண்முதற் கரணமெல்லா மறுவசத் தாக்கி ஞானக் கண்ணினி லூன்றி யந்தக் கருத்தினா லெவையு நோக்கி யெண்ணியஞ் செழுத்து மாறி யிறைநிறை வுணர்ந்து போற்றல் புண்ணியன் றனக்கு ஞான பூசையாய்ப் புகலு மன்றே. 97 ஞானத்திற் சரியை தொண்டர்கள் தாமும் வானோர் தொழுந்திரு மேனிதானும் அண்டருங் கண்டி லாத வண்ணலே யெனவ ணங்கி வெண்டர ளங்கள் சிந்த விழிமொழி குழற மெய்யே கண்டுகொண் டிருப்பர் ஞானக் கடலமு தருந்தி னோரே. 98 நூற்கருத்து நிலவுல காய தாதி நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் குலவின ரளவ ளாவாக் கொள்கைய தாகி வேதத் தலைதரு பொருளா யின்பாய்த் தாவில்சற் காரியத்தாய் மலைவறு முணர்வாற் பெத்த முத்திகண் மதித்தா மன்றே. 99 நூலை உபதேசிக்குமாறு திருவருள் கொடுத்து மற்றிச் சிவப்பிர காச நன்னூல் விரிவது தெளியு மாற்றால் விளம்பிய வேது நோக்கிப் பெருகிய வுவமை நான்கின் பெற்றியி னிறுவிப்பின் முன் தருமலை வொழியக் கொள்வோன் றன்வயிற் சாற்ற லாமே. 100 சிவப்பிரகாசம் முற்றும் |