திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் இயற்றிய திருக்களிற்றுப்படியார் அம்மைஅப்ப ரேஉலகுக்(கு) அம்மைஅப்பர் என்றுஅறிக அம்மைஅப்பர் அப்பரிசே வந்துஅளிப்பர் - அம்மைஅப்பர் எல்லா உலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும் அல்லார்போல் நிற்பர் அவர். 1 தம்மில் தலைப்பட்டார் பாலே தலைப்பட்டுத் தம்மில் தலைப்படுதல் தாம் உணரின் - தம்மில் நிலைப்படுவர் ஓர் இருவர் நீக்கிநிலை யாக்கித் தலைப்படுவர் தாம் அத் தலை. 2 என்அறிவு சென்றளவில் யான் இன்று அறிந்தபடி என்அறிவில் ஆர்அறிக என்றுஒருவன் - சொன்னபடி சொல்லக்கேள் என்று ஒருவன் சொன்னான் எனக்கு அதனைச் சொல்லக்கேள் நான் உனக்குச் சொல். 3 அகளமய மாய்நின்ற அம்பலத்துஎம் கூத்தன் சகளமாய் போல் உலகில் தங்கி - நிகளமாம் ஆணவ மூல மலம் அகல ஆண்டனன் காண் மாணவக என்னுடனாய் வந்து. 4 "ஆகமங்கள் எங்கே அறுசமயம் தான் எங்கே யோகங்கள் எங்கே உணர்வுகள்எங்கே - பாகத்து அருள்வடிவும் தானுமாய் ஆண்டிலனேல் அந்தப் பெருவடிவை யார் அறிவார் பேசு". 5 மாத்திரத்தே வாய்த்தவளம் வந்துறுமே - ஆர்த்தகடல் தண்ணீர் குடித்தவர்க்குத் தாகம் தணிந்திடுமோ தெண்ணீர்மை யாய் இதனைச் செப்பு. 6 இன்று பசுவின் மலம் அன்றே இவ்வுலகில் நின்ற மலம் அனைத்தும் நீக்குவது இங்கு - என்றால் உருவுடையான் அன்றே உரு அழியப் பாயும் உரு அருள வல்லான் உரை. 7 கண்டத்தைக் கொண்டு கருமம் முடித்தவரே அண்டத்தின் அப்புறத்த(து) என்னாதே - அண்டத்தின் அப்புறமும் இப்புறமும் ஆரறிவும் சென்றறியும் எப்புறமும் கண்டவர்கள் இன்று. 8 அன்றுமுதல் ஆரேனும் ஆளாய் உடனாகிச் சென்றவர்க்கும் இன்னதெனச் சென்றதுஇலை - இன்று இதனை எவ்வாறு இருந்தது என்(று) எவ்வண்ணம் சொல்லுகேன் அவ்வா(று) இருந்த(து) அது. 9 ஒன்றும் குறியே குறியாத லால் அதனுக்(கு) ஒன்றும் குறியொன்(று) இலாமையினால் - ஒன்றோ(டு) உவமிக்கல் ஆவதுவும் தாளில்லை ஒவ்வாத் தவம்மிக்கா ரேஇதற்குச் சான்று. 10 ஆற்றால் அலைகடற்கே பாய்ந்தநீர் அந்நீர்மை மாற்றிஅவ் வாற்றால் மறித்தால்போல் - தோற்றிப் புலன்கள் எனப் போதம் புறம்பொழியும் நம்தம் மலங்கள் அற மாற்றுவிக்கும் வந்து. 11 பாலைநெய்தல் பாடியதும் பாம்பு ஒழியப் பாடியதும் காலனை அன்(று) ஏவிக் கராம்கொண்ட - பாலன் மரணம் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நம்தம் கரணம்போல் அல்லாமை காண். 12 தூங்கினரைத் தூய சயனத்தே விட்டதற்பின் தாங்களே சட்டஉறங்குவர்கள் - ஆங்கு அதுபோல் ஐயன் அருட்கடைக்கண் ஆண்ட தற்பின் அப்பொருளாய்ப் பைய விளையுமெனப் பார். 13 உள்ள முதல் அனைத்தும் ஒன்ற உருகவரில் உள்ளம் உருகவந்து உன்னுடனாம் - தெள்ளி உணரும் அவர் தாங்கள் உளராக என்றும் புணரவர நில்லாப் பொருள். 14 நல்லசிவ தன்மத்தால் நல்லசிவ யோகத்தால் நல்லசிவ ஞானத்தால் நான் அழிய - வல்லதனால் ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண் ஆரேனும் காணா அரன். 15 மெல்வினையே என்ன வியனுலகில் ஆற்றரிய வல்வினையே என்ன வரும் இரண்டும் - சொல்லில் சிவதன்ம மாம் அவற்றிற் சென்றதிலே செய்வாய் பவகன்மம் நீங்கும் படி. 16 ஆதியை அர்ச்சித்தற்(கு) அங்கமும் அங்கங்கே தீதில் திறம்பலவும் செய்வனவும் - வேதியனே! நல்வினையாம் என்றே நமக்கும் எளி தானவற்றை மெல்வினையே என்றதுநாம் வேறு. 17 வரங்கள் தரும் செய்ய வயிரவர்க்குத் தங்கள் கரங்களினால் அன்றுகறி யாக்க - இரங்காதே கொல்வினையே செய்யும் கொடுவினையே ஆனவற்றை வல்வினையே என்றதுநாம் மற்று. 18 பாதகம் என்றும் பழியென்றும் பாராதே தாதையை வேதியனைத் தாளிரண்டும் - சேதிப்பக் கண்டு ஈசர் தாமாம் பரிசளித்தார் கண்டாயே சண்டீசர் தன்செயலால் தான். 19 செய்யில் உகுத்த திருப்படி மாற்றதனை ஐயஇது அமுது செய்கென்று - பையஇருந்து ஊட்டி அறுத்தவர்க்கே ஊட்டி யறுத்தவரை நாட்டியுரை செய்வதென்னோ நாம். 20 செய்யும் செயலே செயலாகச் சென்றுதமைப் பையக் கொடுத்தார் பரங்கெட்டார் - ஐயா உழவும் தனிசும் ஒருமுகமே ஆனால் இழவுண்டோ சொல்லாய் இது. 21 ஆதார யோகம் நிராதார யோகம் என மீதானத்(து) எய்தும் விதியிரண்டே - ஆதாரத்(து) ஆக்கும் பொருளாலே ஆக்கும் பொருளாம் ஒன்(று) ஆக்காப் பொருளேஒன் றாம். 22 ஆக்கி ஒருபொருளை ஆதாரத்(து) அப்பொருளை நோக்கி அணுவில் அணுநெகிழப் - பார்க்கில் இவனாகை தான் ஒழிந்திட்(டு) ஏகமாம் ஏகத்(து) அவனாகை ஆதார மாம். 23 கொண்ட(து) ஒரு பொருளைக் கோடிபடக் கூறுசெயின் கொண்டவனும் அப்பரிசே கூறுபடும் - கொண்ட இருபொருளும் அன்றியே இன்ன(து) இது வென்னாது ஒருபொருளே ஆயிருக்கும் உற்று. 24 அஞ்செழுத்து மேஅம்மை அப்பர்தமைக் காட்டுதலால் அஞ்செழுத்தை ஆறாகப் பெற்றறிந்(து) - அஞ்செழுத்தை ஓதப்புக்(கு) உள்ள மதியும் கெடில் உமைகோன் கேதமற வந்தளிக்கும் கேள். 25 ஆக்கப் படாத பொருளாய் அனைத்தினிலும் தாக்கித்தான் ஒன்றோடும் தாக்காதே - நீக்கி உடன் நிற்கும் பொருளுடனே நிற்கும் பொருளுடனாய் நிற்கை நிராதார மாம். 26 காண்கின்றது ஓர்பொருளைக் காண்கின்ற யோகிகளே காண்கின்றார் காட்சியறக் கண்ணுதலைக் - காண்கின்றார் காண்பானும் காணப் படும்பொருளும் அன்றியே காண்கையினால் கண்டனரே காண். 27 பேசாமை பெற்றதனில் பேசாமை கண்டனரைப் பேசாமை செய்யும் பெரும்பெருமான் - பேசாதே எண்ணொன்றும் வண்ண மிருக்கின்ற யோகிகள்பால் உள்நின்றும் போகான் உளன். 28 ஓட்டற்று நின்ற உணர்வு பதிமுட்டித் தேட்டற்று நின்ற இடம் சிவமாம் - நாட்டற்று நாடும் பொருளனைத்தும் நானா விதமாகத் தேடுமிடம் அன்று சிவம். 29 பற்றினுள் பற்றைத் துடைப்பதொரு பற்றறிந்து பற்றிப் பரிந்திருந்து பார்க்கின்ற - பற்றதனைப் பற்றுவிடில் அந்நிலையே தானே பரமாகும் மற்றும் இது சொன்னேன் மதி. 30 உணராதே யாதும் உறங்காதே உன்னிப் புணராதே நீபொதுவே நிற்கில் - உணர்வரிய காலங்கள் செல்லாத காலத்துடன் இருத்தி காலங்கள் மூன்றினையும் கண்டு. 31 அறிவறிவாய் நிற்கில் அறிவுபல வாம் என்று அறிவின் அறிவு அவிழ்த்துக் கொண்டு அவ் - வறிவினராய் வாழ்ந்திருப்பர் நீத்தோர்கள் மானுடரின் மாணவக! தாழ்ந்தமணி நாவேபோல் தான். 32 ஓசையெலாம் அற்றால் ஒலிக்கும் திருச்சிலம்பின் ஓசை வழியேசென்று ஒத்தொடுங்கில் - ஓசையினில் அந்தத்தா னத்தான் அரிவையுடன் அம்பலத்தே வந்தொத்தான் அத்தான் மகிழ்ந்து. 33 சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின் என்றமையால் சார்புணர்தல் தானே தியானமுமாம் - சார்பு கெடஒழுகின் நல்ல சமாதியுமாம் கேதப் படவருவ தில்லைவினைப் பற்று. 34 அன்றி வரும் ஐம்புலனும் நீயும் அசையாதே நின்றபடி யேநிற்க முன்னிற்கும் - சென்று கருதுவதன் முன்னம் கருத்தழியப் பாயும் ஒருமகள்தன் கேள்வன் உனக்கு. 35 உண்டாகும்; ஆனமையின் ஓரிரண்டாம் - உண்டு இல்லை என்னும் இவைதவிர்ந்த இன்பத்தை எய்தும்வகை உன்னில் அவன் உன்னுடனே ஆம். 36 தூல உடம்பாய முப்பத்தோர் தத்துவமும் மூல உடம்பாம் முதல்நான்கும் - மேலைச் சிவமாம் பரிசினையும் தேர்ந்துணர்ந்தார் சேர்ந்த பவமாம் பரிசறுப்பார் பார். 37 எத்தனையோ தத்துவங்கள் எவ்வெவர்கோட் பாடுடைய அத்தனையும் சென்றங்கு அளவாதே - சித்தம் எனும் தூதுவனைப் போக்கிப்போய்த் தூக்கற்ற சோதிதனில் பாதிதனைக் கும்பிடலாம் பார். 38 சாம்பொழுதும் ஏதும் சலமில்லை; செத்தாற்போல் ஆம்பொழுதிலே அடைய ஆசையறில் - சோம்புதற்குச் சொல்லும் துணையாகும் சொல்லாத தூய்நெறிக்கண் செல்லும் துணையாகும் சென்று. 39 வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்றமையால் வேண்டின் அஃது ஒன்றுமே வேண்டுவது - வேண்டின் அது வேண்டாமை வேண்டவரும் என்றமையால் வேண்டிடுக வேண்டாமை வேண்டுமவன் பால். 40 அரண உணர்வுதனில் அவ்வுணர்வை மாற்றில் கரணமுங் காலும் கை கூடும் - புரணமது கூடாமை யும்கூடும் கூடுதலும் கூட்டினுக்கு வாடாமை யும்கூடும் வந்து. 41 இன்றுஇங்கு அசேதனமாம் இவ்வினைகள் ஓரிரண்டும் சென்று தொடரும் அவன் சென்றிடத்தே - என்றும் தான் தீதுறுவன் ஆனால் சிவபதிதான் கைவிடுமோ மாதொருகூறு அல்லனோ மற்று. 42 அநாதி சிவனுடைமை யால் எவையும் ஆங்கே அநாதியெனப் பெற்ற அணுவை - அநாதியே ஆர்த்த துயர் அகல அம்பிகையோடு எவ்விடத்தும் காத்தல் அவன்கடனே காண். 43 தம்மில் சிவலிங்கம் கண்டு அதனைத் தாம்வணங்கித் தம்மன்பால் மஞ்சனநீர் தாமாட்டித் - தம்மையொரு பூவாக்கிப் பூவழியா மல்கொடுத்துப் பூசித்தால் ஓவாமை யன்றே உடல். 44 தன்னைப் பெறுவதின்மேல் பேறில்லைத் தான் என்றும் தன்னைத்தான் பெற்றவன்தான் ஆரென்னில் - தன்னாலே எல்லாந்தன் உட்கொண்டு கொண்டதனைக் கொள்ளாதே எல்லாமாய் நிற்கும் இவன். 45 துன்பமாம் எல்லாம் பரவசனாய்த் தான்துவளில் இன்பமாம் தன்வசனாய்த் தானிருக்கில் - என்பதனால் நின்வசனா யேஇருக்கின் நின்னுடனாம் நேரிழையாள் தன்வசனா யேயிருப்பன் தான். 46 செத்தாரே கெட்டார் கரணங்கள் சேர்ந்ததனோ ஒத்தாரே யோகபர ரானவர்கள் - எத்தாலும் ஆராத வக்கரணத் ஆர்ப்புண்டுஇங்கு அல்லாதார் பேராமற் செல்வர்அதன் பின். 47 கண்ணும் கருத்தும் கடந்ததொரு பேறேயும் கண்ணும் கருத்தும் களிகூர - நண்ணி வடம் அடக்கி நிற்கும் வடவித்தே போல உடனடக்கி நிற்பார்கள்காண் உற்று. 48 வானகமும் மண்ணகமும் ஆய்நிறைந்த வான்பொருளை ஊனகத்தே உன்னுமதென் என்றனையேல் - ஏனகத்து வாதனையை மாற்றும் வகையதுவே மண்முதலாம் ஆதனமே அன்றோ அதற்கு. 49 கல்லில் கமரில் கதிர்வாளில் சாணையினில் வல்லுப் பலகையினில் வாதனையைச் - சொல்லும் அகமார்க்கத் தால் அவர்கள் மாற்றினர்காண் ஐயா! சகமார்க்கத் தால் அன்றே தான். 50 உள்ளும் புறம்பும் நினைப்பொழியில் உன்னிடையே வள்ளல் எழுந்தருளும் மாதினொடும் - தெள்ளி அறிந்தொழிவாய் அன்றியே அன்புடையை ஆயின் செறிந்தொழிவாய் ஏதேனும் செய். 51 கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை என்றமையால் கண்ணப்பன் ஒப்பதோர் அன்பதனைக் - கண்ணப்பர் தாமறிதல் காளத்தி யாரறிதல் அல்லதுமற்(று) ஆரறியும் அன்பன் றது. 52 அவிழ்ந்த துணியில் அவிழ்ந்த அவிழை அவிழ்ந்த மனத்தால் அவிழ்க்க - அவிழ்ந்தசடை வேந்தனார்க்(கு) இன்னமுதம் ஆயிற்றே மெய்யன்பில் சேந்தனார் செய்த செயல். 53 சுரந்த திருமுலைக்கே துய்ய சிவ ஞானம் சுரந்துண்டார் பிள்ளைஎனச் சொல்லச் - சுரந்த தனமுடையாள் தென்பாண்டி மாதேவி தாழ்ந்த மனமுடையாள் அன்பிருந்த வாறு. 54 அன்பேஎன் அன்பேஎன்(று) அன்பால் அழுதரற்றி அன்பேஅன் பாக அறிவழியும் - அன்பன்றித் தீர்த்தம் தியானம் சிவார்ச்சனைகள் செய்யுமவை சாற்றும் பழமன்றே தான். 55 எல்லார் அறிவுகளின் தாற்பரியம் என்னறிவு செல்லும் இடத்தளவும் சென்றறிந்தேன் - வல்லபடி வாதனையை மாற்றும் வகையிதுவே மற்றவற்றுள் ஏதமறக் கண்ட திது. 56 வித்தும் அதன் அங்குரமும் போன்றிருக்கு மெய்ஞ்ஞானம் வித்தும் அதன் அங்குரமும் மெய்உணரில் - வித்து அதனில் காணாமையால் அதனைக் கைவிடுவர் கண்டவர்கள் பேணாமையால் அற்றார் பேறு. 57 ஒன்றன்று இரண்டன்று உளதன்று இலதன்று நன்றன்று தீதன்று நானன்று - நின்ற நிலையன்று நீயன்று நின்னறிவும் அன்று தலையன்று அடியன்று தான். 58 செய்யாச் செயலையவன் செய்யாமை கண்டுதனைச் செய்யாச் செயலிற் செலுத்தினால் - எய்யாதே மாணவக! அப்பொழுதே வாஞ்சைக் கொடிவளர்க்கும் ஆணவமும் இத்தால் அறி. 59 ஏதேனும் காலமுமாம் ஏதேனும் தேசமுமாம் ஏதேனும் திக்கா சனமுமாம் - ஏதேனும் செய்வான் ஒருவனுமாம் செய்யாச் செயலதனைச் செய்யாமை செய்யும் பொழுது. 60 செய்தற் கரிய செயல்பலவும் செய்து சிலர் செய்தற் கரியதனை எய்தினார்கள் - ஐயோநாம் செய்யாமை செய்து செயலறுக்கலாய் இருக்கச் செய்யாமை செய்யாத வாறு. 61 இப்பொருள்கள் யாதேனும் ஏதேனினும் ஒன்றுசெய்தல் எப்பொருளும் செய்யாது ஒழிந்திருத்தல் - மெய்ப் பொருளைக் கண்டிருத்தல் செய்யாதே கண்ட மனிதரெல்லாம் உண்டிருப்ப தென்னோ உரை. 62 வீட்டிலே சென்று வினையொழிந்து நின்றிடில் என் நாட்டிலே நல்வினைகள் செய்திடில் என் - கூட்டில்வாள் சாத்தியே நின்றிலையேல் தக்கனார் வேள்விசெய்த மாத்திரமே யாம்கண்டாய் வந்து. 63 சிவன்முதலே அன்றி முதலில்லை என்றும் சிவனுடையது என்னறிவ தென்றும் - சிவனவன(து) என்செயல தாகின்றது என்றும் இவையிற்றைத் தன்செயலாக் கொள்ளாமை தான். 64 ஒன்றுசொலி மன்றத்து நின்றவரார் - இன்று இங்கே அங்கம் உயிர்பெறவே பாடும் அடியவரார் எங்கும் இலை கண்டாய் இது. 65 விரிந்தும் குவிந்தும் விழுங்குவர்கள் மீண்டும் தெரிந்தும் தெரியாதும் நிற்பர் - தெரிந்தும் தெரியாது நிற்கின்ற சேயிழைபால் என்றும் பிரியாது நின்றவனைப் பெற்று. 66 ஆதனமும் ஆதனியும் ஆய்நிறைந்து நின்றவனைச் சேதனனைக் கொண்டே தெளிவுற்றுச் - சேதனனைச் சேதனனி லேசெலுத்திச் சிற்பரத்த ராயிருப்பர் ஏதமறக் கண்டவர்கள் இன்று. 67 தாம் அடங்க இந்தத் தலம் அடங்கும் தாபதர்கள் தாம் உணரில் இந்தத் தலம் உணரும் - தாம் முனியில் பூமடந்தை தங்காள் புகழ்மடந்தை போயகலும் நாமடந்தை நில்லாள் நயந்து. 68 துரியம் கடந்தசுடர்த் தோகையுடன் என்றும் பிரியாதே நிற்கின்ற பெம்மான் - துரியத்தைச் சாக்கிரத்தே செய்தருளித் தான்செய்யும் தன்மைகளும் ஆக்கியிடும் அன்பர்க் கவன். 69 ஓடம் சிவிகை உலவாக் கிழி அடைக்கப் பாடல் பனைதாளம் பாலைநெய்தல் - ஏடுஎதிர்வெப்பு என்புக்கு உயிர்கொடுத்தல் ஈங்கிவைதாம் ஓங்குபுகழ்த் தென்புகலி வேந்தன் செயல். 70 கொல்கரியின் நீற்றறையின் நஞ்சின் கொலை தவிர்த்தல் கல்லே மிதப்பாய்க் கடல்நீந்தல் - நல்ல மருவார் மறைக்காட்டில் வாசல்திறப் பித்தல் திருவாமூ ராளி செயல். 71 மோகம் அறுத்திடில்நாம் முத்தி கொடுப்பதென ஆகமங்கள் சொன்ன அவர்தம்மைத் - தோகையர்பால் தூதாகப் போகவிடும் வன்தொண்டன் தொண்டுகளை ஏதாகச் சொல்வேன் யான். 72 பாய்பரியோன் தந்த பரமானந் தப்பயனைத் தூயதிரு வாய்மலரால் சொற்செய்து - மாயக் கருவாதை யாமறியா வாறுசெய்தான் கண்டாய் திருவாத ஊராளும் தேன். 73 அம்மையிலும் இம்மையிலும் அச்சம் தவிர்ந்தடியார் எம்மையுமாய் எங்கும் இயங்குதலால் - மெய்ம்மைச் சிவயோகமே யோக அல்லாத யோகம் அவயோகம் என்றே அறி. 74 மன்னன் அருள் எவ்வண்ணம் மானுடர்பால் மாணவக! அன்ன வகையது அரன் அருளும் - என்னில் அடியவரே எல்லாரும் ஆங்கவர்தாம் ஒப்பில் அடியவரே எல்லாம் அறி. 75 உடம்புடைய யோகிகள்தாம் உற்றசிற் றின்பம் அடங்கத்தம் பேரின்பத்து ஆக்கில் - தொடங்கி முளைப்பதும் ஒன் றில்லை முடிவதும் ஒன் றில்லை இளைப்பதும் ஒன் றில்லை இவர். 76 பேரின்ப மான பிரமக் கிழத்தியுடன் ஓரின்பத்துஉள்ளானை உள்ளபடி - பேரின்பம் கண்டவரே கண்டார் கடலுயிர்த்த இன்னமுதம் உண்டவரே உண்டார் சுவை. 77 நங்கையினால் நாம் அனைத்தும் செய்தாற்போல் நாடனைத்தும் நங்கையினால் செய்தளிக்கும் நாயகனும் - நங்கையினும் நம்பியாய்த் தானடுவே நாட்டப் பெறும் இதுகாண் எம்பெருமா னார்தம் இயல்பு. 78 பொன்நிறம் கட்டியினும் பூணினும் நின்றாற்போல் அந்நிறம் அண்ணலும் அம்பிகையும் - செந்நிறத்தள் எந்நிறத்த ளாய் இருப்பள் ஏங்கள் சிவபதியும் அந்நிறத்தனாய் இருப்பன் ஆங்கு. 79 தாரத்தோடு எங்கும் தலைநிற்பர் - தாரத்தின் நாதாதத் தேஇருப்பர் நால் தானத் தேஇருப்பர் வேதாந்தத்தே இருப்பர் வேறு. 80 ஒன்றுரைத்தது ஒன்றுரையாச் சாத்திரங்கள் ஒன்றாக நின்றுரைத்து நிச்சயிக்க மாட்டாவால் - இன்றுரைக்க என்னால் இயன்றிடுமோ என்போல்வார் ஏதேனும் சொன்னால்தான் ஏறுமோ சொல். 81 யாதேனும் காரணத்தால் எவ்வுலகில் எத்திறமும் மாதேயும் பாகன் இலச்சினையே - ஆதலினால் பேதமே செய்வாய் அபேதமே செய்திடுவாய் பேதாபே தம்செய்வாய் பின். 82 நின்றபடி நின்றவர்கட்கு அன்றி நிறம்தெரியா மன்றினுள் நின்று ஆடல் மகிழ்ந்தானும் - சென்றுடனே எண்ணுறும் ஐம் பூதம்முதல் எட்டுருவாய் நின்றானும் பெண்ணுறநின்று ஆடும் பிரான். 83 சிவமே சிவமாக யான்நினைந்தாற் போலச் சிவமாகியே இருப்பது அன்றிச் - சிவமென்று உணர்வாரும் அங்கே உணர்வழியச் சென்று புணர்வாரும் உண்டோ புவி. 84 அதுஇது என்றும் அவன் நானே என்றும் அதுநீயே ஆகின்றாய் என்றும் - அதுவானேன் என்றும்-தமையுணர்ந்தார் எல்லாம் இரண்டாக ஒன்றாகச் சொல்வரோ உற்று. 85 ஈறாகி அங்கே முதல் ஒன்றாய் ஈங்கிரண்டாய் மாறாத எண்வகையாய் மற்றிவற்றின் - வேறாய் உடனாய் இருக்கும் உருவுடைமை என்றும் கடனாய் இருக்கின்றான் காண். 86 உன்னுதரத் தேகிடந்த கீடம் உறுவதெல்லாம் உன்னுடைய தென்னாய் நீ உற்றனையோ - மன்னுயிர்கள் அவ்வகையே காண் இங்(கு) அழிவதுவும் ஆவதுவும் செய்வகையே நின்றசிவன் பால். 87 அவனே அவனி முதலாயி னானும் அவனே அறிவாய்நின் றானும் - அவனேகாண் ஆணாகிப் பெண்ணாய் அலியாகி நின்றானும் காணாமை நின்றானும் கண்டு. 88 இன்றுதான் நீயென்னைக் கண்டிருந்தும் கண்டாயோ அன்றுதான் நானுன்னைக் கண்டேனோ - என்றால் அருமாயை ஈன்றவள் தன் பங்கனையார் காண்பார் பெருமாயைச் சூழல் பிழைத்து. 89 கடல் அலைத்தே ஆடுதற்குக் கைவந்து நின்றும் கடல் அளக்க வாராதாற் போலப் - படியில் அருத்திசெய்த அன்பரைவந் தாண்டதுவும் எல்லாம் கருத்துக்குச் சேயனாய்க் காண். 90 சிவன் எனவே தேறினன்யான் என்றமையால் இன்றும் சிவன் அவனி வந்தபடி செப்பில் - அவனிதனில் உப்பெனவே கூர்மை உருச்செய்யக் கண்டமையால் அப்படியே கண்டாய் அவன். 91 அவன் இவனாய் நின்ற(து) அவனருளால் அல்ல(து) எவன் அவனாய் நிற்கின்ற(து) ஏழாய் - அவனிதனில் தோன்றுமரப் புல்லூரி தொல்லுலகில் அம்மரமாய் ஈன்றிடுமோ சொல்லாய் இது. 92 முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந்(து) அத்தி பழுத்த(து) அருளென்னும் - கத்தியினால் மோகக் கொடியறுக்க முத்திப்பழம் பழுக்கும் ஏகக் கொடி எழுங்காண் இன்று. 93 அகளத்தில் ஆனந்தத்(து) ஆனந்தி யாயே சகளத்தில் தையலுடன் தோன்றி - நிகளத்தைப் போக்குவதும் செய்தான்தன் பொன்னடிஎன் புன்தலைமேல் ஆக்குவதும் செய்தான் அவன். 94 குற்றம் அறுத்(து) என்னியாட் கொண்டருளித் தொண்டனேன் உற்ற தியானத்(து) உடனுறைவர் - முற்றவரின் மாட்சியுமாய் நிற்பர்யான் மற்றொன்றைக் கண்டிடின் அக் காட்சியுமாய் நிற்பார் கலந்து. 95 ஆளுடையான் எந்தரமும் ஆளுடையா னேஅறியும் தாளுடையான் தொண்டர் தலைக்காவல் - நாளும் திருவியலூர் ஆளும் சிவயோகி இன்றுஎன் வருவிசையை மாற்றினான் வந்து. 96 தூலத் தடுத்த பளிங்கின் துளக்கமெனத் தூலத்தே நின்று துலங்காமல் - காலத்தால் தாளைத்தந்து என்பிறவித் தாளை அறஇழித்தார்க்(கு) ஆளன்றி என்மா றதற்கு. 97 இக்கணமே முத்தியினை எய்திடினும் தான் நினைந்த அக்கணமே ஆனந்தம் தந்திடினும் - நற்கணத்தார் நாயகற்கும் நாயகிக்கும் நானடிமை எப்பொழுதும் ஆயிருத்தல் அன்றியிலேன் யான். 98 என்னை உடையவன்வந்து என்னுடனாய் என்னளவில் என்னையுந்தன் ஆளாகக் கொள்ளுதலால் - என்னை அறியப் பெற் றேன் அறிந்த அன்பருக்கே ஆளாய்ச் செறியப்பெற் றேன்குழுவிற் சென்று. 99 சிந்தையிலும் என் தன் சிரத்தினுலும் சேரும்வகை வந்தவனை மண்ணிடைநாம் வாராமல் - தந்தவனை மாதினுடன் எத்திறமும் வாழ்ந்திருக்க என்பதலால் ஏதுசொலி வாழ்த்துவேன் இன்று. 100 தனிப் பாடல் பொருளும் மனையும் அறமறந்து போகம் மறந்து புலன்மறந்து கருவி கரணம் அவைமறந்து காலம் மறந்து மலைமறந்து தருமம் மறந்து தவம்மறந்து தம்மை மறந்து தற்பரத்தோடு உருகி உருகி ஒருநீர்மை யாயே விட்டார் உய்யவந்தார். |