திருவியலூர் உய்யவந்ததேவ நாயனார்

இயற்றிய

திருவுந்தியார்

அகளமா யாரு மறிவரி தப்பொருள்
சகளமாய் வந்ததென் றுந்தீபற
     தானாகத் தந்ததென் றுந்தீபற. 1

பழக்கந் தவிரப் பழகுவ தன்றி
உழப்புவ தென்பெணே யுந்தீபற
     ஒருபொரு ளாலேயென் றுந்தீபற. 2

கண்டத்தைக் கொண்டு கரும முடித்தவர்
*பிண்டத்தில் வாராரென் றுந்தீபற
     பிறப்பிறப் பில்லையென் றுந்தீபற. 3
* பிண்டத்து

*இங்ங னிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன்
அங்ங னிருந்ததென் றுந்தீபற
     அறிவு மறிவதென் றுந்தீபற. 4
* எங்ங

ஏகனு மாகி யநேகனு மானவன்
நாதனு மானானென் றுந்தீபற
     நம்மையே யாண்டனென் றுந்தீபற. 5

நஞ்செய லற்றிந்த நாமற்ற பின்நாதன்
தன்செய றானேயென் றுந்தீபற
     தன்னையே *தந்தானென் றுந்தீபற. 6
* தந்தென்

உள்ள முருகி *லுடனாவ ரல்லது
தெள்ள வரியரென் றுந்தீபற,
     சிற்பரச் செல்வரென் றுந்தீபற. 7
* யுடனவர்


ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று
மீதானத் *தேசெல்க வுந்தீபற
     விமலற் கிடமதென் றுந்தீபற. 8
* தேசெல

ஆக்கிலங் கேயுண்டா யல்லதங் கில்லையாய்ப
பார்க்கிற் *பரமதென் றுந்தீபற
     பாவனைக் கெய்தாதென் றுந்தீபற. 9
* பரமதன்று

அஞ்சே யஞ்சாக வறிவே யறிவாகத்
துஞ்சா துணர்ந்திருந் துந்தீபற
     துய்ய பொருளீதென் றுந்தீபற. 10

தாக்கியே தாக்காது நின்றதோர் தற்பரன்
நோக்கிற் குழையுமென் றுந்தீபற
     நோக்காமல் நோக்கவென் றுந்தீபற. 11

மூலை யிருந்தாரை முற்றத்தே விட்டவர்
சாலப் பெரியரென் றுந்தீபற
     தவத்திற் றலைவரென் றுந்தீபற. 12

ஓட்டற்று நின்ற வுணர்வு பதிமுட்டித்
தேட்டற் றிடஞ்சிவ முந்தீபற
     தேடு மிடமதன் றுந்தீபற. 13

பற்றை யறுப்பதோர் பற்றினைப் பற்றிலப்
பற்றை யறுப்பரென் றுந்தீபற
      *பாவிக்க வாராரென் றுந்தீபற. 14
* பாவிக்கில்

கிடந்த கிளவியைக் கிள்ளி யெழுப்பி
உடந்தை யுடனேநின் றுந்தீபற
     உன்னையே கண்டதென் றுந்தீபற. 15

உழவா துணர்கின்ற யோகி ளொன்றோடுந்
*தழுவாமல் நிற்பரென் றுந்தீபற
      #தாழ்மணி நாவேபோ லுந்தீபற. 16
* தழுவாது # தாழ்ந்த மணி நாப்போல்

திருச்சிலம் போசை யொலிவழி யேசென்று
நிருத்தனைக் கும்பிடென் றுந்தீபற
     நேர்பட வங்கேநின் றுந்தீபற. 17

மருளுந் தெருளு மறக்கு மவன்கண்
அருளை மறவாதே யுந்தீபற
     அதுவேயிங் குள்ளதென் றுந்தீபற. 18

கருது *வதன்முன் கருத்தழியப் பாயும்
ஒருமகள் கேள்வனென் றுந்தீபற
     உன்ன வரியனென் றுந்தீபற. 19
*அதன்முன்னங்

இரவு பகலில்லா வின்ப வெளியூடே
விரவி விரவிநின் றுந்தீபற
     விரைய விரையநின் றுந்தீபற. 20

சொல்லும் பொருள்களுஞ் சொல்லா தனவுமங்
கல்லனா யானானென் றுந்தீபற
     அம்பிகை பாகனென் றுந்தீபற. 21

காற்றினை மாற்றிக் கருத்தைக் *கருத்தினுள்
ஆற்றுவ தாற்றலென் றுந்தீபற
     அல்லாத தல்லலென் றுந்தீபற. 22
* கருத்தினில்

கள்ளரோ டில்ல முடையார் கலந்திடில்
வெள்ள வெளியாமென் றுந்தீபற
     வீடு மெளிதாமென் றுந்தீபற. 23

எட்டுக்கொண் டார்தமைத் தொட்டுகொண் டேநின்றார்
விட்டா ருலகமென் றுந்தீபற
     வீடேவீ டாகுமென் றுந்தீபற. 24

சித்தமுந் தீய கரணமுஞ் சித்திலே
ஒத்ததே யொத்ததென் றுந்தீபற
     ஒவ்வாத தொவ்வாதென் றுந்தீபற. 25

உள்ளும் புறம்பும் நினைப்பறி னுன்னுள்ளே
மொள்ளா வமுதாமென் றுந்தீபற
     முளையாது பந்தமென்றுந்தீபற. 26

அவிழ விருக்கு மறிவுட னின்றவர்க்
கவிழுமிவ் வல்லலென் றுந்தீபற
     அன்றி யவிழாதென் றுந்தீபற. 27

வித்தினைத் தேடி முளையைக்கை விட்டவர்
பித்தேறி னார்களென் றுந்தீபற
     பெறுவதங் கென்பெணே யுந்தீபற. 28

சொல்லு மிடமன்று சொல்லப் புகுமிடம்
எல்லை சிவனுக்கென் றுந்தீபற
     என்றானா மென் * சொல்கோ முந்தீபற. 29
*செய்கோ

வீட்டி லிருக்கிலென் னாட்டிலே போகிலென்
கூட்டில்வாட் *சாத்திநின் றுந்தீபற
     கூடப்ப டாததென் றுந்தீபற. 30
* சார்த்தியென்

சாவிபோ மற்றச் சமயங்கள் புக்குநின்
றாவி யறாதேயென் றுந்தீபற
     அவ்வுரை கேளாதே யுந்தீபற. 31

துரியங் கடந்தவித் தொண்டர்க்குச் சாக்கிரந்
துரியமாய் நின்றதென் றுந்தீபற
     துறந்தா ரவர்களென் றுந்தீபற. 32

பெற்றசிற் றின்பமே பேரின்ப மாயங்கே
முற்ற வரும்பரி சுந்தீபற
     முளையாது மாயையென் றுந்தீபற. 33

பேரின்ப மான பிரமக் கிழத்தியோ
டோ ரின்பத் துள்ளானென் றுந்தீபற
     உன்னையே *யாண்டானென் ருந்தீபற. 34
* ஆண்டதென்

பெண்டிர் பிடிபோல ஆண்மக்கள் பேய்போலக்
கண்டாரே கண்டாரென் றுந்தீபற
     காணாதார் காணாரென் றுந்தீபற. 35

நாலாய பூதமு நாதமு மொன்றிடின்
நாலா நிலையாமென் றுந்தீபற
     நாதற் கிடமதென் றுந்தீபற. 36

சென்ற நெறியெல்லாஞ் செந்நெறி யாம்படி
நின்ற பரிசறிந் துந்தீபற
      *நீசெயல் செய்யாதே யுந்தீபற. 37
* நீ சில

பொற்கொழுக் கொண்டு வரகுக் குழுவதென்
அக்கொழு நீயறிந் துந்தீபற
     அறிந்தறி யாவண்ண முந்தீபற. 38

அதுவிது வென்னா தனைத்தறி வாகும்
அதுவிது வென்றறிந் துந்தீபற
     அவிழ்ந்த *சடையாரென் றுந்தீபற. 39
* சடையானென்

அவனிவ னான தவனரு ளாலல்ல
திவனவ னாகனென் றுந்தீபற
     என்று மிவனேயென் றுந்தீபற. 40

முத்தி *முதலுக்கே மோகக் கொடிபடர்ந்
தத்தி பழுத்ததென் றுந்தீபற
     அப்பழ முண்ணாதே யுந்தீபற. 41
* முதற் கொடிக்கே.

அண்ட முதலா மனைத்தையு முட்கொண்டு
கொண்டத்தைக் கொள்ளாதே யுந்தீபற
     குறைவற்ற செல்வமென் றுந்தீபற. 42

காயத்துள் மெய்ஞ்ஞானக் கள்ளுண்ண மாட்டாதே
மாயக்கள் ளுண்டாரென் றுந்தீபற
     வறட்டுப் பசுக்களென் றுந்தீபற. 43

சிந்தையி னுள்ளுமென் சென்னியி னுஞ்சேர
வந்தவர் வாழ்கவென் றுந்தீபற
     மடவா ளுடனேயென் றுந்தீபற. 44

வைய முழுது மலக்கயங் கண்டிடும்
உய்யவந் தானுரை யுந்தீபற
     உண்மை யுணர்ந்தாரென் றுந்தீபற. 45

திருச்சிற்றம்பலம்