திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளிய உண்மை விளக்கம் உண்மை விளக்கம் என்பது, மெய்கண்ட சாத்திரங்கள் என வழங்கப்படும் சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்றாகும். இது சிவஞான போத ஆசிரியரான மெய்கண்ட தேவரின் மாணவர்களில் ஒருவரான திருவதிகை என்னும் ஊரைச் சேர்ந்த மனவாசகம் கடந்தார் என்பவரால் இயற்றப்பட்டது. வினா விடை வடிவில் அமைந்த இந்நூல் 53 வெண்பாப் பாடல்களால் ஆனது. காப்பு வண்மைதரும் ஆகமநூல் வைத்த பொருள் வழுவா உண்மைவிளக்கம் உரைசெய்யத் - திண்மதம்சேர் அந்திநிறத் தந்திமுகத் தொந்திவயிற்று ஐங்கரனைப் பந்தம் அறப் புந்தியுள் வைப்பாம் 1 நூல் பொய்காட்டிப் பொய் அகற்றிப் போதானந் தப்பொருளாம் மெய்காட்டும் மெய்கண்டாய்! விண்ணப்பம் - பொய்காட்டா மெய்யா! திருவெண்ணை வித்தகா! சுத்தவினா ஐயாநீ தான் கேட்டு அருள். 2 ஆறாறு தத்துவம் ஏது? ஆணவம் ஏது? அன்றே தான் மாறா வினை ஏது? மற்று இவற்றின் - வேறு ஆகா நான் ஏது? நீ ஏது? நடம் அஞ்செழுத்துத் தான் ஏது? தேசிகனே! சாற்று. 3 வள்ளல் அருளால் அன்று வாய்மலர்ந்து - தெள்ளியசீர் ஆகமங்கள் சொன்ன அடைவிலே ஆனந்த யோகம் நிகழ் புதல்வா! உற்று. 4 நாற்கோணம் பூமிபுனல் நண்ணும் மதியின்பாதி ஏற்கும் அனல் முக்கோணம் எப்போதும் - ஆக்கும் அறுகோணம் கால்வட்டம் ஆகாயம் ஆன்மா உறுகாயம் ஆம் இவற்றால் உற்று. 5 பொன்பார் புனல்வெண்மை பொங்கும் அனல்சிவப்பு வன்கால் கருமைவளர் வான்தூமம் - என்பார் எழுத்து லவரய அப்பாராதிக்கு என்றும் அழுத்தமதாய் நிற்கும் அது. 6 குறிகுலிசம் கோகனதம் கொள்சுவத்தி குன்றா அறுபுள்ளி ஆர் அமுத விந்துப் - பிறிவு இன்றி மண்புனல்தீக் கால்வானம் மன்னும் அடைவேஎன்று ஒண்புதல்வா! ஆகமம் ஓதும். 7 பார் ஆதி ஐந்தும் பன்னும் அதி தெய்வங்கள் ஆர் ஆர் அயன் ஆதி ஐவராம் - ஓர் ஓர் தொழில் அவர்க்குச் சொல்லுங்கால் தோற்றம் முதல் ஐந்தும் பழுதறவே பண்ணுவர்காண் பார். 8 படைப்பன் அயன் அளிப்பன் பங்கயக்கண் மாயன் துடைப்பன் உருத்திரனும் சொல்லில் - திடப்பெறவே என்றும் திரோபவிப்பர் ஈசர் சதாசிவரும் அன்றே அநுக்கிரகர் ஆம். 9 மண்கடினமாய்த் தரிக்கும் வாரிகுளிர்ந்தே பதம் ஆம் ஒண்கனல் சுட்டு ஒன்றுவிக்கும் ஓவாமல் - வண்கால் பரந்து சலித்துத் திரட்டும் பார்க்கில் ஆகாயம் நிரந்தரமாய் நிற்கும் நிறைந்து. 10 உள்ளபடி மாபூதம் ஓதினோம் உன்றனக்குக் கள்ளம்மிகும் ஐம்புலனும் கட்டுரைக்கில் - மெள்ளவே ஓசை பரிசம் உருவம் சுவைநாற்றம் ஆசைதரும் ஐம்புலனே ஆம். 11 ஞானேந் திரியங்கள் நன்றாய்க் உரைக்கக்கேள் ஊனம் மிகுபூதம் உற்றிடமா - ஈனமாம் சத்தாதியை அறியும் தானம் செவிதோல்கண் அத்தாலு மூக்கு என்று அறி. 12 வானிடமாய் நின்றுசெவி மன்னும் ஒலியதனை ஈனமிகும் தோல்கால் இடமாக - ஊனப் பரிசம் தனை அறியும் பார்வையில்கண் அங்கி விரவி உருவம் காணுமே. 13 நன்றாக நீர் இடமாக நாஇரதம் தான் அறியும் பொன்றா மணம்மூக்கும் பூ இடமா - நின்று அறியும் என்று ஓதும் அன்றே இறை ஆகமம் இதனை வென்றார் சென்றார் இன்ப வீடு. 14 கண்நுதல் நூல் ஓதியிடும் கன்மேந்திரியங்கள் எண்ணும் வசனாதிக்கு இடமாக - நண்ணியிடும் வாக்குப் பாதம்பாணி மன்னு குதம் உபத்த மாக்கருதும் நாளும் அது. 15 வாக்கு ஆகாயம் இடமா வந்து வசனிக்குக்கால் போக்கு ஆரும் காற்று இடமாப் புல்கி அனல் - ஏற்கும் இடும்பை குதம் நீர் இடமா மலாதி விடும்பார் இடம் உபத்தம் விந்து. 16 அந்தக் கரணம் அடைவே உரைக்ககேள் அந்தமனம் புத்தியுடன் ஆங்காரம் - சிந்தை இவை பற்றியது நிச்சயித்துப் பல்கால் எழுந்திருந்து அங்கு உற்றது சிந்திக்கும் உணர். 17 ஓதியிடும் நால் ஆறும் உற்று ஆன்ம தத்துவம் என்று ஆதி அருள்நூல் அறையும்காண் - தீது அறவே வித்தியா தத்துவங்கள் தம்மை விளம்ப்பக்கேள் உத்தமனே! நன்றாய் உனக்கு. 18 காலம்நியதி கருதும் கலைவித்தை ஏல இராகம் புருடனே மாயை - மால் அறவே சொன்னோம் அடைவாகச் சொன்ன இவை தம் உண்மை உன்னி உரைக்க நாம் உற்று 19 எல்லை பலம் புதுமை எப்போதும் நிச்சயித்தல் அல்லல் தரும் கிரியை ஆன்மாவுக்கு - ஒல்லை அறிவு ஆசை ஐம்புலனும் ஆரவரும் காலம் குறியா மயக்கு என்று கொள். 20 வித்தியா தத்துவங்கள் ஏழும் விளம்பினோம் சுத்தமாம் தத்துவங்கள் சொல்லக்கேள் - நித்தமாம் சுத்தவித்தை ஈசுரம்பின் சொல்லும் சதாசிவம்நல் சத்திசிவம் காண் அவைகள் தாம். 21 சுத்தவித்தை ஞானம்மிகும் தொன்மையாம் ஈசுரம்தான் அத்தன் தொழில் அதிகம் ஆக்கிடும் - ஒத்த இவை சாதாக்கியம் என்றும் சத்தி சிவம் கிரியை ஆதார ஞான உரு ஆம். 22 ஆறாறு தத்துவமும் சொன்னோம் அடைவாக மாறா மலம் இரண்டும் வாசொல்லக் - கூறில் அறியாமை ஆணவம் நீ ஆன சுகம் துக்கம் குறியா வினை என்று கொள். 23 ஆறாறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும் மாறா அருளால் வகுத்துரைத்தீர் - வேறு ஆகா என்னை எனக்கு அறியக் காட்டீர் இவை கண்டேன் உன்னரிய தேசிகரே! உற்று. 24 நன்றா உரைக்கக்கேள் நல்ல சித்தின் முன் அசித்து இங்கு ஒன்றாது சித்து அசித்தை ஓராது - நின்று இவற்றை அன்றே பகுத்து அறிவது ஆன்மாவே என்றுமறை குன்றாமல் ஓதும் குறித்து. 25 தத்துவங்கள் ஆறாறும் தம்மைத்தாம் என்று அறியா எத்தன்மை என்னில் இயம்பக்கேள் - சுத்தமாம் ஆறு சுவையும் அறியாவே தம்மைத்தாம் கூறில் அவை இவை போல் கொள். 26 ஆறு சுவையும் அருந்தி அவைதம்மை வேறு ஒருவன் கூறியிடும் மேன்மைபோல் - ஆறாறும் ஒன்று ஒன்றாய் நாடி உணர்ந்து ஓதில் அதில் உற்று அறிவாய் நின்ற பொருள் தானேகாண் நீ. 27 குன்றா அருளாலே கூறினீர் என்வடிவு பொன்றாத நும் உருவம் போதியீர் - நின்று அருக்கன் கண்ணுக்குக் காட்டுமாப் போலே உனது அறிவில் நண்ணி அறிவித்திடுவோம் நாம். 28 அன்றியும்கேள் ஆன்மாவால் ஆய்ந்து அறியும் ஐம்பொறிகள் இன்றி அறியா இவை என்ன - நின்றதுபோல் ஓவாமல் உன்னை உணர்த்துவோம் உன் அறிவில் மேவாமல் மேவி நாமே. 29 அக்கரங்கட்கு எல்லாம் அகர உயிர் நின்றால்போல் மிக்க உயிர்க்கு உயிராய் மேவினோம் - எக்கண்ணும் நில்லா இடத்து உயிர்க்கு நில்லாது அறிவு என்று நல் ஆகமம் ஓதும் நாடு. 30 நற்றவத்தோர் தாம்காண நாதாந்தத்து அஞ்சு எழுத்தால் உற்று உருவாய் நின்று ஆடல் உள்ளபடி - பெற்றிடநான் விண்ணார் பொழில்வெண்ணெய் மெய்கண்ட நாதனே! தண்ணார் அருளாலே சாற்று. 31 எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே நட்டம் புதல்வா நவிலக் கேள் - சிட்டன் சிவாயநம எனும் திரு எழுத்து அஞ்சாலே அவாயம் அற நின்று ஆடுவான். 32 ஆடும்படி கேள் நல் அம்பலத்தான் ஐயனே நாடும் திருவடியிலே நகரம் - கூடும் மகரம் உதரம் வளர்தோள் சிகரம் பகரும்முகம் வாமுடியப் பார். 33 சேர்க்கும் துடி சிகரம் சிக்கனவா வீசுகரம் ஆர்க்கும் யகரம் அபயகரம் - பார்க்கில் இறைக்கு அங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார் தங்கும் மகரம் அதுதான். 34 ஓங்காரமே நல் திருவாசி உற்று அதனில் நீங்கா எழுத்தே நிறைசுடராம் - ஆங்காரம் அற்றார் அறிவர் அணி அம்பலத்தான் ஆடல் இது பெற்றார் பிறப்பு அற்றார் பின். 35 சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா ஊன்று மலர்ப்பதத்தில் உற்றதிரோதம் முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு. 36 மாயைதனை உதறி வல்வினையைச் சுட்டுமலம் சாய அமுக்கி அருள் தான் எடுத்து - நேயத்தால் ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல் தான் எந்தையார் பரதம் தான். 37 மோனந்த முனிவர் மும்மலத்தை மோசித்துத் தான் மான் இடத்தே தங்கியிடும் - ஆனந்தம் மொண்டு அருந்தி நின்று ஆடல் காணும் அருள் மூர்த்தியாக் கொண்ட திரு அம்பலத்தான் கூத்து. 38 பரை இடமா நின்று மிகு பஞ்சாக்கரத்தால் உரை உணர்வுக்கு எட்டா ஒருவன் - வரைமகள்தான் காணும்படியே கருணை உருக்கொண்டு ஆடல் பேணு வார்க்கு உண்டோ பிறப்பு. 39 நாதாந்த நாடகத்தை நன்றாய் அருள்செய்தீர் ஓதீர் எழுத்து அஞ்சும் உள்ளபடி - தீது அறவே அஞ்சு எழுத்து ஈது ஆகில் அழியும் எழுத்து ஆய்விடுமோ தஞ்ச அருள் குருவே சாற்று. 40 உற்ற குறி அழியும் ஓதும்கால் பாடைகளில் சற்றும் பொருள்தான் சலியாது - மற்றது கேள் ஈசன் அரூள் ஆவி எழில் ஆர் திரோதமலம் ஆசு இல் எழுத்து அஞ்சின் அடைவு ஆம். 41 சிவன் அருள் ஆவி திரோதமலம் ஐந்தும் அவன் எழுத்து அஞ்சின் அடைவாம் - இவன்நின்று நம்முதலா ஓதில் அருள் நாடாது நாடும் அருள் சிம்முதலா ஓதுநீ சென்று. 42 அண்ணல் முதலா அழகு ஆர் எழுத்து ஐந்தும் எண்ணில் இராப்பகல் அற்று இன்பத்தே - நண்ணி அருளானது சிவத்தே ஆக்கும் அணுவை இருளானது தீர இன்று. 43 ஆதிமலம் இரண்டும் ஆதியாய் ஓதினால் சேதியா மும்மலமும் தீர்வு ஆகா - போதம் மதிப்பு அரிதாம் இன்பத்தே வாழலாம் மாறி விதிப்படி ஓது அஞ்செழுத்துமே. 44 அஞ்சுஎழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறையும் அஞ்சுஎழுத்தே ஆதிபுராணம் அனைத்தும் - அஞ்சுஎழுத்தே ஆனந்தத் தாண்டவமும் ஆறாறுக்கு அப்பாலாம் மோனந்த மாமுத்தி யும். 45 முத்திதனை அடைந்தோர் முந்துபழம் போது அங்கி வித்தகமாம் வீணை இவையிற்றின் - ஒத்த இரதம்மணம் வெம்மை எழில்நாதம் போல விரவுவர் என்று ஓதும் விதி. 46 தத்துவங்கள் எல்லாம் சகசமாக ஆன்மாவில் பெத்தத்தில் நிற்கின்ற பெற்றிபோல் - முத்திதனில் சித்தமலம் அற்றார் செறிந்திடுவர் என்றுமறை சத்தியமா ஓதியிடும் தான். 47 ஆதவன் தன் சன்னிதியில் அம்புலியின் ஆர்சோதி பேதம் அற நிற்கின்ற பெற்றிபோல் - நாதாந்தத்து அண்ணல் துரிவடியில் ஆன்மா அணைந்து இனபக் கண்ணில் அழுந்தியிடும் காண். 48 சென்று இவன் தான் ஒன்றில் சிவபூரணம் சிதையும் அன்றுஅவன் தான் ஒன்றுமெனில் அன்னியமாம் - இன்றுஇரண்டும் அற்ற நிலை ஏதுஎன்னில் ஆதித்தன் அந்தன்விழிக் குற்றம் அற நின்றதுபோல் கொள். 49 வாக்கு மனம் இறந்த வான் கருணையாளன் உருத் தாக்கு அறவே நிற்கும் தனிமுதல்வா! - நீக்காப் பதியினைப் போல் நித்தம் பசுபாசம் என்றாய் கதியிடத்தும் மூன்றினையும் காட்டு. 50 முத்திதனில் மூன்று முதலும் மொழியக்கேள் சுத்த அனுபோகத்தைத் தூய்த்தல் அணு - மெத்தவே இன்பம் கொடுத்தல் இறை இத்தை விளைவித்தல் மலம் அன்புடனே கண்டுகொள், அப்பா! 51 அப்பா! இம்முத்திக்கு அழியாத காரணம்தான் செப்பாய் அருளாலே செப்பக்கேள் - ஒப்புஇல் குருலிங்க வேடம் எனக் கூறில் இவை கொண்டார் கரு ஒன்றி நில்லார்கள் காண். 52 கற்றா மனம்போல் கசிந்துகசிந்தே உருகி உற்று ஆசான் லிங்கம் உயர்வேடம் - பற்று ஆக முத்தித் தலைவர் முழுமலத்தை மோசிக்கும் பத்திதனில் நின்றிடுவர் பார். 53 வாழ்ந்தேன் அருட்கடலே! வற்றாப் பவக்கடலில் வீழ்ந்தே அலையாமல் மேதினியில் - சூழ்ந்துவிடா வெண்ணெய்ச் சுவேதவன மெய்கண்ட நாதனே! உண்மைத் தவப்பயனே உற்று. 54 |