புகழேந்திப் புலவர்

இயற்றிய

நளவெண்பா

தெளிவுரை: புலியூர்க் கேசிகன்

... தொடர்ச்சி ...

6. நோய் மிகுந்த நெஞ்சம்

பின் போன வன்னெஞ்சம்

தூதுவந்த காதலனைச் சொல்லிச் செலவிடுத்த
மாதுவந்து பின்போன வன்னெஞ்சால் - யாதும்
அயிர்த்தாள் உயிர்த்தாள் அணிவதனம் எல்லாம்
வியர்த்தாள் உரைமறந்தாள் வீழ்ந்து. 101

     தேவர்களின் பொருட்டாகத் தன்னிடத்தே தூதுவனாக வந்த தன்னுடைய காதலினத்தே, தன் உள்ளத்துக் காதலைச் சொல்லி விடுத்த தமயந்தியானவள், தன்னைக் கைவிட்டு அவன் பின்னாகவே மகிழ்வுடனே போய்விட்ட தன்னுடைய கொடிய உள்ளத்தின் காரணமாக, எல்லாவற்றையும் ஐயமுறலானாள், பெருமூச்செறிந்தாள்; அழகிய முகமெல்லாம் வியர்வு அரும்ப நின்றான்; சோர்ந்து வீழ்ந்து பேச்சற்றும் கிடக்கலானாள்.

உள்ளரிக்கச் சோர்ந்தாள்

உள்ளம்போய் நாண்போய் உரைபோய் வரிநெடுங்கண்
வெள்ளம்போய் வேகின்ற மென்தளிர்போல் - பிள்ளைமீன்
புள்ளரிக்கும் நாடன் திருமடந்தை பூவாளி
உள்ளரிக்கச் சோர்ந்தாள் உயிர். 102

     மீன் குஞ்சுகளைப் பறவையினங்கள் மேய்கின்ற விதர்ப்ப நாட்டு மன்னவனது மகளான தமயந்தியானவள், மலர்க்கணைகள் தன் உள்ளத்தை அரிக்க, உள்ளம் தன் வசமிழந்தும், நாணத்தைப் போக விட்டும், உரை சோர்ந்தும் செவ்வரி படர்ந்த நெடிதான தன் கண்களிலேயிருந்து வெள்ளமாகக் கண்ணீர் வீழ்ந்து கொண்டிருக்கவும், அழலிற்பட்டு வேகின்ற மென்மையான தளிரினைப் போல் வாட்டமுற்றுத், தன் உயிரும் சோர்ந்து போயின நிலைமையினள் ஆயினாள்.

ஆசை போகாதென்று அழிந்தாள்

பூவின்வாய் வாளி புகுந்த வழியேயென்
ஆவியார் போனாலும் அவ்வழியே - பாவியேன்
ஆசைபோ காதென் றழிந்தாள் அணியாழின்
ஓசைபோல் சொல்லாள் உயிர்த்து. 103

     அழகிதான யாழினின்றும் எழுகின்ற இசையைப் போன்ற இனிதான சொல்லினையுடையவளான தமயந்தியானவள், “மலரினாலான மன்மத பாணங்கள் புகுந்த துளைகளின் வழியாக என் உயிரே போய் விட்டதானாலும், அந்த வழியாகப் பாவியேனுடைய ஆசைமட்டும் போகவே போகாது” என்று கூறி, நெடுமூச்செறிந்து, தன் அறிவும் மயங்கியவள் ஆயினாள்.

விரிகதிரோன் சென்றடைந்தான்

வையம் பகலிழப்ப வானம் ஒளியிழப்பப்
பொய்கையும் நீள்கழியும் புள்ளிழப்பப் - பையவே
செவ்வாய அன்றில் துணையிழப்பச் சென்றடைந்தான்
வெவ்வாய் விரிகதிரோன் வெற்பு. 104

     வையகமெல்லாம் பகற்பொழுதாகிய ஒன்றினை இழக்கவும், வானமெங்கும் ஒளியினை இழக்கவும், பொய்கைகளும் நெடிதான உப்பங்கழிகளும் தம்மிடையே இருக்கும் நீர்ப் பறவைகளை இழக்கவும், சிவந்த வாயினவான அன்றில்கள் தம் துணைகளை இழக்கவுமாக, வெம்மை பொருந்திய விரிந்த கதிர்களையுடைய ஞாயிறானவன் மெல்ல மெல்லச் சென்று, மேலைத்திசை மலையிடத்தை அடைந்து, அதன் பின்னே மறைவானும் ஆயினான்.

குடபால்வரை மறைந்தான்

மாயிரு ஞாலத் துயிர்காண வானரங்கில்
பாயிருள் என்னும் படாம்வாங்கிச்-சேய்நின்று
அறைந்தா ரணம்பாட ஆடிப்போய் வெய்யோன்
மறைந்தான் குடபால் வரை. 105

     வெய்யவனாகிய கூத்தன், மிகப் பெரிதான மண்ணுலகத்து உயிர்த்தொகைகள் எல்லாம் காணுமாறு, வான்வெளியாகிய கூத்தாட்டரங்கத்திலே பரந்துள்ள இருள் என்னும் திரைச் சீலையை இழுத்துவிட்டுத், தொலைவிலே நின்று வேத கோஷம் செய்வோர் உரத்த குரலிலே பாடத் தொடங்கக் கூத்தாடிச் சென்றவாறே, மேற்றிசை மலையிடத்தே போய்த்தான் மறைந்தும் போயினான்.

மெல்ல நடந்தது அந்தி

மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கருப்பு
வில்லி கணைதெரிந்து மெய்காப்ப - முல்லையெனும்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது. 106

     மல்லிகை அரும்புகளையே வெண்சங்குகளாகக் கொண்டு வண்டினம் ஊதி ஊதி முழக்கமிட்டன. சிறந்த கரும்பினாலாகிய வில்லினை உடையோனான மன்மதன், மலர்க் கணைகளை ஆராய்ந்து எடுத்துக் கொண்டு வந்து, தன்னைப் பற்றிய உண்மையினைப் பேணுதற்குத் தொடங்கினான். இப்படியாக, முல்லை மலர் என்னும் மென்மையான மாலையானது தோளிடத்தே கிடந்து அசைந்தாட, புல்லிய மாலைக்காலமாகிய அந்திப்பொழுதும் மெல்ல மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தது. (அந்தியின் வருகையை ஒரு ‘ராஜபவனி’ யாகக் கவிஞர் அருமையாக உவமிக்கிறார்.)

அந்தி செய்த கலக்கம்

புற்கென்றார் அந்தி புனைமலர்க்கண் நீரரும்ப
நிற்கின்ற தந்தோ நிலங்காப்பான் - முற்கொண்டு
அடைகின்ற வேந்தர்க்கும் ஆண்டஞ்சி னோர்க்கும்
இடைநின்ற காலம்போல் இன்று. 107

     மேற்சொன்ன அந்திப் பொழுதானது, காமநோயினாலே தம் உடல் பசலை கொண்டு விளங்குவாரது, புனைதலுடைய குவளை மலர் போன்ற கண்களிலே நீர் அரும்புமாறு, நிலத்தினைக் காக்கின்றதொரு குறிக்கோளினை முன்னிறுத்திக் கொண்டு, ஒரு நாட்டினை முற்றுகை இடுவாராய் வருகின்ற வேந்தர்களுக்கும், அவ்விடத்தே அரணினுள்ள அச்சத்துடன் இருப்போர்க்கும் இடையே நிலைபெற்றுள்ளதோர் கலக்கமிகுந்த காலத்தைப் போல், இப்போது நிலைபெற்றிருக்கின்றதே! ஐயகோ! (முற்றுகைக் காலத்து இருசாரார்க்கும் ஏற்படும் கவலைகள் மிகுதியாகும். இது போன்றதோர் கவலையினை, அந்தி, காதலரைப் பிரித்துறைபவர்க்குத் தருவதாயிற்று என்பது கருத்து. இது கவிக்கூற்று.)

ஆழல் பெய்வான் வந்த பிறை

பைந்தொடியாள் ஆவி பருகுவான் நிற்கின்ற
அந்தி முறுவலித்த தாமென்ன - வந்ததால்
மையார்வேற் கண்ணாள் வனமுலைமேல் ஆரழலைப்
பெய்வான் அமைந்த பிறை. 108

     மை தீட்டப் பெற்றதொரு வேலாயுதத்து முனையினைப் போன்று விளங்கும் கண்களையுடையவளான தமயந்தியின் அழகிய முலைமுற்றத்திடத்தே, மிக்க நிலவொளியாகிய நெருப்புத்தணலைப் பெய்வதற்கென்றே அமைந்த நிலவும், பசுமையான வளையல்கள் அணிந்தவளான அவளுடைய உயிரினைக் குடிக்கும் பொருட்டாகப் பொருந்தியிருக்கின்ற அந்தி என்னும் கூற்றாளது நகைகொண்டது என்று சொல்லும்படியாக, வானிலே எழுந்து தோன்றிற்று. (அந்திப் போதைக் கூற்றுக்கு உவமையாக்கினார். அது முறுவலித்தல், தன் செயலின் மூலம் பெறுகின்ற வெற்றியின் உறுதியினாலே என்பது கருத்து. அது தமயந்திக்கும் காம நோயினை மிகுவித்து அவள் உயிர் சோரும் அளவுக்கு வருந்தியது என்பதாம்.)

நீணிலா என்னும் நெருப்பு

கூட்டுமைபோற் சிறந்த கூரிருளைக் கூன்கோட்டால்
கோட்டுமண் கொண்ட குளிர்திங்கள் - ஈட்டுமணிப்
பூணிலா மென்முலைமேற் போதச் சொரிந்ததே
நீணிலா வென்னும் நெருப்பு. 109

     தம் கண்களுக்கு இடுவதன் பொருட்டாக நங்கையர்கள் கூட்டுகின்ற மையினைப் போலச் சிறந்த காரிருளினைத், தன் வளைவான கொம்பினாலே குத்தி வீழ்த்திக் கோட்டுமண் கொண்டது குளிர்ச்சியான நிலவு. சேர்த்துக் கோர்க்கப்படும் நவமணிகளினாலாகிய பூண் இல்லாதிருக்கும் தமயந்தியின் மென்மையான முலைகளின் மேலாகவும், அத் திங்கள் நெடிதான நிலவு என்னும் நெருப்புக் குழம்பினை மிகுதியாகச் சொர்வதாயிற்று. (‘பிறையினை’ இங்கே ஆன் ஏற்றின் வளைந்த கொம்பிற்கு உவமையாக்கினார். ‘கூரிருளை வென்ற திங்கள், இருண்ட மணிப்பூணில்லாத முலை மேலும் நிலாவழலைச் சொரிந்ததே’ என, அதன் செயலினது பொருந்தாத் தன்மையினையும் கவி கூறுகின்றார். நிலவு - பிறை என்பதும் விளங்கும்.)

பிழைத்தால் வந்தேன் என்னும்

அன்னங்காள் நீங்களுமவ் வாதித்தன் தானும்போய்
மன்னும் படியகலா வல்லிரவில் - மின்னும்
மழைத்தாரை வல்லிருட்கும் வாடைக்கும் நாங்கள்
பிழைத்தால்வந் தேனென்னும் பேர். 110

     அன்னப் பறவைகளே! நீங்களும் அந்த ஆதித்தனும் போய்விட்டீர்கள். செறிந்திருப்பது போன்ற அகலாதிருக்கும் கடுமையான இரவுப்பொழுதும் இதோ வந்தது. மின்னலுடனே கூடிய மழைத்தாரைகள் வீழ்கின்றன. அதற்கும், கடுமையான இருளுக்கும், வந்துறும் வாடைக்கும் நாங்கள் தப்பிப் பிழைத்தோமானால், ‘வந்தேன்’ என நீங்களும் என் பேரினைச் சொல்வீர்களாக. (இரவுக்கும், வாடைக்கும் ஆற்றாது தமயந்தி இங்ஙனம் புலம்புகின்றாள். விடியும் வரையும் உயிரோடிரேன் என்கிறாள் அவள்.)

கொப்புளம் கண்ட குளிர் வானம்

செப்பிளங் கொங்கைமீர் திங்கட் சுடர்பட்டுக்
கொப்புளங் கொண்ட குளிர்வானை - இப்பொழுதும்
மீன்பொதிந்து நின்ற விசும்பென்ப தென்கொலோ
தேன்பொதிந்த வாயால் தெரிந்து. 111

     “குங்குமச் சிமிழினைப் போன்று திரட்சிக் கொண்ட இளையவான கொங்கைகளை உடைய தோழியரே! திங்களாகிய தீச்சுடர் பட்டுக் கொப்புளங்கள் எழுந்துள்ள குளிர்ச்சியான வானத்தினைத் தேன் போன்ற இனிய வாயூறல் நிரம்பியிருக்கும் உங்கள் வாயினாலே, ‘தெளிவாக விண்மீன்கள் நிறைந்துள்ள வானகம்’ என்கின்றீர்களே! அதுதான் என்னவென்று எனக்கும் சொல்வீர்களாக?”

பொடியாடி கொன்றது பொய்

கானுந் தடங்காவும் காமன் படைவீடு
வானுந்தேர் வீதி மறிகடலும் - மீனக்
கொடியாடை வையமெல்லாம் கோதண்ட சாலை
பொடியாடி கொன்றதெல்லாம் பொய். 112

     கானகங்களும், அகன்ற சோலைகளும் எல்லாம் காம தேவனின் பாசறைகளாகும். வானம், அவனுடைய தேர் செல்லும் வீதியாகும். சுருண்டெறியும் அலைகளையுடைய கடல் அவனுடைய மீன்கொடியினைக் கொண்டதான துகிலாகும். இந்த வையகமெல்லாம் அவனுடைய வில்லின் தொழிலைக் காட்டுகின்ற இடமாகும். இங்ஙனம் இருப்பதனால், நீறணிந்தோனாகிய சிவபெருமான் அவனைக் கொன்றது எனக் கூறுவதெல்லாம் பொய்க்கதையேயாகும். (அஃது உண்மையாயின், அவனுடைய ஆதிக்கம் இங்ஙனம் இருக்குமாறு எவ்வாறெனப் புலம்புகின்றனள். பொடி - திருநீறு)

இரவின் உள்ளம் கொடியது

கொள்ளைபோ கின்ற துயிரென்னும் கோளரவின்
முள்ளெயிறோ மூரி நிலாவென்னும் - உள்ளம்
கொடிதிரா என்னும் குழையும் தழல்போல்
நெடிதிரா வாய்புலரா நின்று. 113

     ‘என் உயிர் கொள்ளை போகின்றதே’ என்பாள். ‘வன்மை பொருந்திய பிறைநிலவானது கொடிய அரவினுடைய முள் போன்ற நச்சுப்பல்லோ?’ என்பாள். ‘இவ் இரவுப் பொழுதினது உள்ளமானது மிகவும் கொடுமையானது’ என்பாள். இங்ஙனமாகத் தன்னை நெருப்பினைப் போலச் சுட்டு வருத்துகின்ற நெடிதான இரவுப்பொழுதெல்லாம் வாய்விட்டு புலம்பியவளாகத் தமயந்தி, காம நோயினால் பெரிதும் வாட்டம் கொள்வாளாயினாள்.

எரிகின்ற தென்னோ இரா?

வெங்கதிரோன் தன்னை விழுங்கிப் புழுங்கியோ
கொங்கை அனலிற் கொளுந்தியோ - திங்கள்
விரிகின்ற வெண்ணிலவால் வேகின்ற தேயோ
எரிகின்ற தென்னோ இரா. 114

     ‘இந்த இரவுப்பொழுது ஏனோ என்னை மிகவும் சுடுகின்றதே? வெம்மையுடைய கதிரோனை விழுங்கியதனால் தன்னுள் கொதிப்பு ஏற்பட்டதனாலோ, அல்லது என் கொங்கைகளிடத்தே எழுகின்ற அனலினாலே கொளுத்தப் பெற்றோ? திங்கள் பரப்புகின்ற வெண்ணிலவினாலே என்னை வேகச் செய்கின்றதே? அதுதான் என்ன காரணமோ என்று யானும் அறியேனே?’

மதியம் கான்ற வெயில்

ஊழி பலவோர் இரவாயிற் றோவென்னும்
கோழி குரலடைத்த தோவென்னும் - ஆழி
துயிலாதோ என்னும் சுடர்மதியம் கான்ற
வெயிலால் உடலுருகா வீழ்ந்து. 115

     மதியமானது சுடரிட்டு எரிக்கின்ற வெயிலினாலே தமயந்தி உடலுருகிச் சோர்ந்து வீழ்ந்தாள். ‘ஊழிகள் பலவும் சேர்ந்து இந்த ஓர் இரவாக ஆயிற்றே?’ என்று கூறி வருந்தினாள். ‘சாமக்கோழியும் கூவுதற்கு இயலாது குரல் அடைத்துப் போயிற்றோ?’ என்று சொல்லி ஏங்கினாள். ‘கடலும் துயில் கொள்ளாதோ?’ என்று புலம்பிக் கலங்கினாள். (இது கவிக் கூற்று.)

பொறுக்குமோ துயர்?

ஆடி வரிவண் டருகே பறக்கவே
வாடி மெலிவாள் வனமுலைமேல் - ஓடிப்
பொறையாகச் சோர்வாள் பொறுக்குமோ மோகத்
துறைவாய் அடங்காத் துயர்? 116

     “வரிகளையுடைய வண்டானது பூந்தாதிலே ஆடியதாக அவளருகே வந்து பறக்கவே, அவளும் தன் காதலனை நினைந்து வாட்டமுற்று மெலியலாயினாள். அழகான முலைகள் ஏக்கத்தால் மேலெழுந்து விம்மியதாக, அதனைப் பொறுக்கவியலாப் பாரமாகக் கருதிச் சோர்வாளாயினாள். மோகம் என்னும் பாதையிடத்தே சென்ற அவள், அடங்காத அத்துயரங்களை எல்லாம் பொறுப்பவளும் ஆவாளோ?” (இது தோழியர் சொல்வது.)

பொர அளித்தான் கண்ணி

ஈர மதியே! இள நிலவே இங்ஙனே
சோர்குழலின் மீதே சொரிவதெவன் - மாரன்
பொரவளித்தான் கண்ணி உனக்குப் புலரா
இரவளித்தான் அல்லனோ இன்று? 117

     “குளிர்ச்சியான மதியமே! மன்மதனானவன் பலரையும் பொருதற்கென்று நினக்கு மாலைசூட்டி அனுப்பி வைத்தான் அல்லனோ? விடியாத இரவையும் நினக்குத் துணையாக அளித்தானும் அல்லனோ? இருந்தும், இவ்விதமாகத் தளர்ந்த கூந்தலுடைய இவள் மீதே இளநிலவினை நீ சொரிந்து கொண்டிருப்பதுதான் எக்காரணம் பற்றியோ? அதனைச் சொல்வாயாக?” (ஈரம், இரக்கமும்: இளமை, இளம்பருவமும் ஆம். இதுவும் தோழியர் கூற்று.)

தனியே தளர்கின்றாள்

தாங்கு நிலவின் தழல்போய்த் தலைக்கொள்ளத்
தேங்குழல்சேர் வண்டு சிறைவெதும்ப - ஓங்குயிர்ப்பின்
தாமங் கரியாத் தனியே தளர்கின்றாள்
யாமங் கரியாக இன்று. 118

     நிலவின் தழலானது போய்த் தாங்கும் தலையினிடத்தேயும் வெப்பங்கொள்ளுமாறு செய்ய, மணமிக்க கூந்தலினிடத்தே சேர்ந்து வண்டுகளின் சிறகுகள் அதனால் வெப்பங் கொள்ள, நெடிய சுடுமூச்சினாலே அணிந்துள்ள மாலையும் கரிந்து போக, இந்நாள் யாமமே தனக்குச் சான்றாகக் கொண்டவளாகத், தமயந்தியும் தனிமையினாலே மிகவும் தளர்கின்றவளாயினாள்.

தானிருந்து தவம் செய்வாள்

மையிட்ட கண்ணருவி வார வளைசோரக்
கையிற் கபோலத் தலம்வைத்து - மெய்வருத்தித்
தேனிருந்த பூங்கணையே தீயாகத் தேமொழியாள்
தானிருந்து செய்வாள் தவம். 119

     தேனென இனிக்கும் பேச்சினை உடையவளான தமயந்தி, மையிடப் பெற்ற தன் கண்கள் அருவியினைப் போல நீரினைச் சொரிந்து கொண்டிருக்க, உடல் தளர்வதனால் தன் கைவளைகளும் சுழன்று வீழக், கன்னத்தைத் தன் கையிடத்தே சாய்த்து வைத்துக் கொண்டவளாகத், தேன் பொருந்திய மாரனின் மலரம்புகள் எரி நெருப்பாகத் தன்னைச் சுட்டு வருத்த, மெய் வருந்தியவளாகத், தான் தன் காதலனை அடைவது குறித்து இரவெல்லாம் தவம் செய்வாளும் ஆயினாள்.

பொதுமகளிர் இதயம் போன்றது

அள்ளிக் கொளலாய் அடையத் திரண்டொன்றாய்க்
கொள்ளிக்கும் விள்ளாத கூரிருளாய் - உள்ளம்
புதையவே வைத்த பொதுமகளிர் தங்கள்
இதயமே போன்ற திரா. 120

     அன்றைய இரவுப் பொழுதானது, கைகளாலே அள்ளிக் கொள்ளலாம் போன்ற தன்மையுடையதாய் அடைவதாகத் திரட்சியுற்று ஒன்றுபட்டு விளங்கியது. தீக்கொள்ளிக்குக் கூடப் பெயர்ந்து போகாத பேரிருளாயும் அமைந்தது. தங்கள் உள்ளங்களை வஞ்சனையால் புதையுண்டதாகவே வைத்திருக்கும் பொதுமக்களின் இதயங்களைப் போன்று, அந்த இரவும் மிகவும் இருண்டு விளங்கிற்று. (பொதுமகளிர் இதயத்தே தம்மைக் கூடியவர்பால் அன்பில்லாதது போலவே, இரவும் இரக்கமற்றதாய்த் திகழ்ந்தது என்பது கருத்து. ‘அள்ளிக் கொளல்’ செறிவு மிகுதியைக் காட்டுதற் பொருட்டு.)

காவலர் போந்தார்

ஊக்கிய சொல்லர் ஒலிக்கும் துடிக்குரலர்
வீக்கிய கச்சையர் வேல்வாளர் - காக்க
இடையாமம் காவலர்கள் போந்தார் இருளில்
புடைவாய் இருள்புடைத்தாற் போன்று. 121

     அத்தகைய இரவுப்பொழுதின் இடையாமத்திலே, ஊர் காவலர்கள், உரத்த குரல் எழுப்புவோராகவும், ஒலிக்கும் துடிமுழக்கினை உடையவராகவும், அரையிற் கட்டிய கச்சையினை உடையவராகவும், வேலினைக் கைக்கொண்டோராகவும், வாளினை ஏந்தியவராகவும், இருளே உருவெடுத்து வந்தாற் போன்ற கருநிற உருவினராகவும், ஊரினைக் காவல் செய்யும் பொருட்டாக, நகரத்தின் வீதிகளிலே புறப்பட்டுச் சுற்றி வந்தார்கள்.

உலகு துயில் புக்கது

சேமங் களிறுபுகத் தீம்பாலின் செவ்வழியாழ்
தாமுள் ளிழைபுகுதத் தார்வண்டு - காமன்தன்
பூவாளி ஐந்திற் புகத்துயில் புக்கதே
ஓராது முந்நீர் உலகு. 122

     போர்க்களிறுகள் எல்லாம் தத்தம் கட்டுமிடங்களிலே சென்று புகுந்தன. இனிதான முறையிலே செவ்வழிப் பண்ணினை எழுப்புகின்ற யாழ்கள் எல்லாம் தத்தம் உள்ளுறைகளினுள்ளே சென்று புகுந்தன. தார்களிலே மொய்கின்ற வண்டுகள் காமனது மலரம்புகள் ஐந்து புட்டிலுள்ளே புகத் தாமும் துயில் கொண்டன. இவ்வாறாகக் கடல் சூழ்ந்த உலகமெல்லாம் இடையீடின்றித் துயிலிடத்தே புகுந்திருந்தன. (வண்டு, காமனது வில்லிற்கு உரிய நாணாதலின் இப்படிக் கூறினார்.)

பேயுரங்கும் நள்ளிரவு

ஊன்தின் றுவகையால் உள்ள வுயிர்புறம்பே
தோன்றும் கழுதும் துயின்றதே - தான்தன்
உரைசோரச் சோர உடல் சோர வாயின்
இரைசோரக் கைசோர நின்று. 123

     பேய் ஒன்று புலாலைத் தின்ற மகிழ்ச்சியினால் அதனிடம் உள்ள உயிரும் வெளிப்புறத்தே தோன்றுவதுபோலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டதாகத் தூங்கத் தொடங்கிற்று. அது தானாகவே பேசிக் கொண்டிருந்த பேச்சும் தளர்ந்து கொண்டே போயிற்று. உடலும் சோர்வுற்றது. வாயில் வைத்த ஊனாகிய இரையும் நழுவி விழலாயிற்று. கைகளும் செயலற்றுச் சோர்ந்தன. இப்படியாக, அந்தப் பேயும் நின்றுகொண்டே உறங்கும் நள்ளிரவு வேளை அதுவாகும். (கழுது - பேய். ‘தான் தன் உரை’ என்றது, ஊனுண்ட களிப்பால் அது தானாகவே மயக்கத்தோடு பேசிக் கொண்டிருந்த சொற்கள்.)

அவிழ்ந்தது கண்ணீர்

அன்றில் ஒருகண் துயின்றொருகண் ஆர்வத்தால்
இன்றுணைமேல் வைத்துறங்கும் என்னும்சொல் - இன்று
தவிர்ந்ததே போலரற்றிச் சாம்புகின்ற போதே
அவிழ்ந்ததே கண்ணீர் அவட்கு. 124

     அன்றிற் பறவையானது, ஒரு கண் துயின்று, மற்றொரு கண்ணினைத் தன் துணையின் மீதுள்ள ஆசையினாலே அதன்பால் வைத்தபடியே உறங்கும் என்று சொல்வார்கள். அந்தச் சொல்லும் இந்நாள் பொய்யாகிப் போய்விட்டது போல, அன்றிற் பறவையும் தன் துணையைக் கூப்பிட்டுக் கூவியதாகத் தனிமை நோயினாலே துயருறுகின்ற பொழுதிலே, தமயந்திக்கும், தனிமைத்துயரால் கட்டவிழ்ந்து கண்ணீர் பெருகலாயிற்று.

இரவுக்கு இரையோ யான்?

ஏழுலகும் சூழிருளாய் என்பொருட்டால் வேகின்ற
ஆழ்துயரம் ஏதென் றிறிகிலேன் - பாழி
வரையோ எனுநெடுந்தோள் மன்னாவோ தின்னும்
இரையோ இரவுக்கு யான்? 125

     “பாழி மலைதானோ என்னும்படியான வலிமையுள்ள உயர்ந்த தோள்களையுடைய மன்னவனே! ஏழுலகினையும் சூழ்ந்து கொள்ளும் பேரிருளாக வந்து, என் பொருட்டாக வெந்து கொண்டிருக்கின்ற பெருந்துயரம் எதனாலோ வென்று யான் அறியா துள்ளேனே? என் செய்வேன்? யான் இந்த இரவிற்குத் தின்னும் இரையே தானோ? நீரே கூறுவீராக” என்று வாய்விட்டுப் புலம்பினாள் அவள். (பாழி - வலிமையான மலைத்தொடர்; நன்னன் என்பானுக்குரியதாகச் சங்க நூற்களுள் குறிக்கப்பெறுவது இந்நாளைய சவ்வாது மலைத் தொடர்களுள் ஒரு பகுதி.)

வாடைக்கு ஆற்றாள்

கருவிக்கு நீங்காத காரிருள்வாய்க் கங்குல்
உருவிப் புகுந்ததால் ஊதை - பருகிக்கார்
வண்டுபோ கட்ட மலர்போல் மருள்மாலை
உண்டுபோ கட்டஉயிர்க்கு. 126

     “வாள் வேல் முதலியவான எவ்விதமான படைக்கருவிகளுக்கும் அஞ்சிப் போயொழியாத கருமையான இருளினிடத்தே, அதனை ஊடுருவிக் கொண்டு வந்து புகுந்தது வாடைக்காற்று. கருநிற வண்டானது உள்ளிருந்த தேனைப் பருகியபின் கழித்துப் போட்டுவிட்டுப் போனதோர் மலரினைப் போல மயக்கஞ் செய்கின்ற மாலைக்காலமானது சாரத்தையெல்லாம் உண்டு கழித்துப் போட்டுப்போன என் உயிருக்கு, அந்த வாடைக் காற்றும் இது போழ்து ஒரு கூற்றாக வந்ததே!” (வாடைக் காற்றுக்கு ஆற்றாதவளாகத் தமயந்தி இவ்வாறு சொல்லி வருந்தினாள்.)

நாணொடு நின்று அழியும்

எழுந்திருக்கும் ஏமாந்து பூமாந் தவிசின்
விழுந்திருக்கும் தன்னுடம்பை மீளச் - செழுந்தரளத்
தூணோடு சேர்க்கும் துணையேதும் இல்லாதே
நாணோடு நின்றழியும் நைந்து. 127

     காமநோயினால் இங்ஙனம் வாடி வருந்தும் தமயந்தியின் நிலை, மேலும் மேலும் கவலைக்கிடமாக ஆயிற்று. திடுமென எழுந்து நிற்பாள். காதலனைக் காணாது ஏமாந்து அழகிய மாந்தளிர் போன்ற மென்மையான படுக்கையிலே சென்று விழுந்து கிடப்பாள். மீண்டும் தன்னுடலை வளவிய முத்துக்கள் பதித்திருக்கும் தூணோடு சேர்த்துக் கொள்வாள். இவ்வாறு, தனக்கொரு துணையும் இல்லாதவளாகி, பிறர் பாற் சொல்லியும் உதவிபெற இயலாதபடி, நாணத்தோடும் மிக வருந்தி, நெஞ்சம் அழிபவளாயினாள் தமயந்தி.

தழலே உயிர்க்கும்

விரிகின்ற மெல்லமளி வெண்ணிலவின் மீதே
சொரிகின்ற காரிருள்போல் சோரும் - புரிகுழலைத்
தாங்கும் தளரும் தழலே நெடிதுயிர்க்கும்
ஏங்கும் துயரோ டிருந்து. 128

     விரிந்து பரவுகின்ற மென்மையான அமளி என்னும் வெண்ணிலவின் மீதிலே சொரிகின்ற காரிருளினைப் போல, அவிழ்ந்து தொங்கிக் கிடக்கும் தன் சுருண்ட கூந்தலைத் தன் கையினாலே தாங்கிக் கொண்டு, படுக்கையிற் கிடந்து, அவள் தளர்வுகொள்வாள். நெருப்பாகவே நெடுமூச்சுவிடுவாள். துயரத்தோடு, படுக்கையும் கொள்ளாமல், அதன்மேல் அமர்ந்திருந்து ஏங்கிக் கொண்டேயும் இருப்பாள். (துயர மிகுதியால் சோர்ந்து வீழ்ந்த தன் கூந்தலைத் தாங்கிக் கொண்ட தமயந்தி, நளனை நினைத்து வருந்தலாயினாள் என்பது குறிப்பு.)

ஏகாத இரவு

உடைய மிடுக்கெல்லாம் என்மேலே ஓச்சி
விடிய மிடுக்கின்மை யாலோ - கொடியன்மேல்
மாகாதல் வைத்ததோ மன்னவர்தம் இன்னருளோ
ஏகாத தென்னோ இரா. 129

     ‘தனக்குள்ள ஆற்றலை எல்லாம் என் மேலேயே செலுத்தி விட்டு, விடிவதற்கு தனக்கு ஆற்றலில்லாமற் போனதனாலோ, அல்லது கொடியவனாகிய மன்மதனின் மீது பேரன்பினை வைத்து விட்டதனாலோ, நளமன்னனது இனிதான அருளின் காரணத்தாலோ, இரவும் விரையக் கழிந்து போகாதேயே இருக்கின்றதே! அதுதான் எதனாலேயோ!”

மயங்கும் தெளியும்

மயங்கும் தெளியும் மனநடுங்கும் வெய்துற்று
உயங்கும் வறிதே உலாவும் - வயக்கிழைபோய்ச்
சோரும் துயிலும் துயிலாக் கருநெடுங்கண்
நீரும் கடைசோர நின்று. 130

     சற்றே மயக்கங் கொள்வாள்; பின் அதனின்றும் தெளிவும் அடைவாள். மனம் நடுக்கங் கொள்வாள். வெப்பம் கொண்டு வருந்துவாள். வறிதாக உலாவிக் கொண்டிருப்பாள். விளங்கும் அணிகள் கழன்று போகச் சோர்வாள். துயில்தலையுடைய நீண்ட கருங்கண்களிற் கண்ணீரும் கடை சோரும்படியாகத் துயில் கொள்ளாத நிலையிலும் நிற்பாள்.

ஆருயிர்க்கு அரண் உண்டோ?

விழுது படத்திணிந்த வீங்கிருள்வாய்ப் பட்டுக்
கழுதும் வழிதேடும் கங்குல் - பொழுதிடையே
நீருயிர்க்கும் கண்ணோடு நெஞ்சுருகி வீழ்வார்தம்
ஆருயிர்க்கும் உண்டோ அரண். 131

     “விழுதாக ஊன்றி நிலைபெற்று விடுவதுபோலச் செறிந்திருந்த பேரிருளினிடத்தே சிக்கியவளாக அகப்பட்டுக் கொண்டாள், தமயந்தி. பேயும் வழி காணாது தேடிக் கொண்டிருக்கும் அடர்ந்த இரவுப் பொழுதினிடையிலே, நீரினைச் சொரிகின்ற கண்களோடு நெஞ்சம் உருகி மயங்கிக் கிடப்பவர்களது அரிதான உயிர்க்கும் ஒரு பாதுகாவல் தான் உலகில் ஏதேனுமுண்டோ? (இது கவிக் கூற்று.)

7. சுயம்வரக் காட்சி

பொழுது புலர்ந்தமை

பூசுரர்தம் கைம்மலரும் பூங்குமுத மும்முகிழ்ப்பக்
காசினியும் தாமரையும் கண்விழிப்ப - வாசம்
அலந்ததேங் கோதையின் ஆழ்துயரத்தோடு
புலர்ந்ததே அற்றைப் பொழுது. 132

     பூசுரர்களது கைகளாகிய மலர்களும், அழகிய குமுத மலர்களும் குவியவும், உலகமும் தாமரை மலரும் துயிலெழுந்து கண் விழிக்கவும், மணம் பரந்த தேன் பொருந்திய கோதையுடையவளாகிய தமயந்தியின் ஆழ்ந்த துயரத்தோடுங் கூடியதாக அற்றைப் பொழுதும் புலர்ந்தது. (அற்றைப் பொழுது - சுயம்வரத்திற்கு என்று குறித்திருந்த நாளின் காலைப் பொழுது.)

கதிரோன் தோன்றினான்

வில்லி கணையிழப்ப வெண்மதியம் சீரிழப்பத்
தொல்லை இருள்கிழியத் தோன்றினான் - வல்லி
மணமாலை வேட்டிடுதோள் வாளரசர் முன்னே
குணவாயில் செங்கதிரோன் குன்று. 133

     பூங்கொடியாளான தமயந்தியின் மணமாலையினை அடைதலை விரும்பிய தோள்களை உடையவரான வாளாற்றல் மிக்க அரசர்களின் முன்பாகக், கரும்பு வில்லோனாகிய மதனவேள் தன் அம்புகளை இழந்து போகவும், வெண்ணிலவு தன் சிறப்புக்களை இழந்து போகவும், தமயந்திக்குத் தொல்லையாகவே விளங்கிய இருளாகிய பகை உடைபட்டுப் போகுமாறும், செங்கதிரோன், கீழ்த் திசைக் குன்றின் மேலாக எழுந்து தோன்றினான். (தமயந்திக்குத் துன்பம் செய்வாரைக் காணின், அவள் மணமாலையினை விரும்பி வந்து கூடியிருந்த வாளரசர் பொறார். ஆகவே, இரவெல்லாம் அவளுக்குத் துயரிழைத்த மதனனும், மதியமும், இருளும், பொழுது விடியப் புறமுதுகிட்டனவாய்ப் போய் ஒதுங்கின எனலும் ஆம்.)

மன்னர் பலரும் வந்தார்

முரைசெறிந்த நாளேழும் முற்றியபின் கொற்ற
வரைசெறிந்த தோள்மன்னர் வந்தார் - விரைசெறிந்த
மாலை துவள முடிதயங்க வால்வளையும்
காலை முரசும் கலந்து. 134

     முரசு அடித்து அறிவிக்கப்பட்ட ஏழு நாட்களும் கழிந்த பின், வெற்றி பொருந்திய மலை போன்ற தோள்களையுடைய மன்னர்கள், மணச்செறிவுள்ள மாலைகள் தங்கள் மார்புகளிற் கிடந்து தவளவும், திருமுடிகள் தலைகள் ஒளி செய்யவுமாக, வெண் சங்குகள் காலை முரசமும் கலந்து ஒலிமுழங்கச் சுயம்வர மண்டபத்தை நோக்கி முறையே வரலானார்கள்.

நடுவணைய வந்திருந்தான்

மன்றலந்தார் மன்னன் நடுவணைய வந்திருந்தான்
கன்று குதட்டிய கார்நீலம்- முன்றில்
குறுவிழிக்கு நேர்நாடன் கோதைபெருங் கண்ணின்
சிறுவிழிக்கு நோற்றிருந்த சேய். 135

     கன்றுகள் வாயாற் குதட்டி உமிழ்ந்த கருங்குவளை மலர்கள், மனைமுற்றங்களிலே மகளிர்களது சிறுநோக்கத்திற்கு ஒப்பாகப் பரவிக் கிடக்கின்ற நாட்டினையுடையவன் நளன். தமயந்தியினுடைய அகன்ற கண்களிலே தோன்றும் சிறு நோக்கத்திற்குத் தவஞ்செய்து கொண்டிருந்தவனாகிய அவன், அழகிய தாரணிந்த பிற மன்னர்களுக்கு இடையிலே, தானும் சுயம்வரத்திற்கு என்று வந்து அமர்ந்திருந்தான். (சேய் - முருகன்; அவன் போல் அழகன் நளன் என்பது குறிப்பு.)

அணங்கு வந்தாள்

நித்திலத்தின் பொற்றோடு நீலமணித் தோடாக
மைத்தடங்கண் செல்ல வயவேந்தர் - சித்தம்
மருங்கே வரவண்டின் பந்தர்கீழ் வந்தாள்
அருங்கேழ் மணிப்பூண் அணங்கு. 136

     அரிதான ஒளியையுடைய மணிகளாலான ஆபரணங்களை அணிந்த, அணங்கு போல்வாளான தமயந்தியானவள், நித்திலம் பதித்த பொன்னாலான தோடுகள் நீலமணியை வைத்திழைத்த தோடாகத் தோன்றும்படியாக, மைதீற்றிய அகன்ற கண்கள் காதளவுக்கும் சென்று கொண்டிருக்கவும், வெற்றி வேந்தர்களின் உள்ளமெல்லாம் இருபக்கத்தும் தன்னையே தொடர்ந்து வந்து கொண்டிருக்கவும், வண்டுகளின் பந்தர்க்குக் கீழாகச் சுயம்வர மண்டபத்திற்குள் வந்தாள்.

வெளிவழி புகுந்த கண்

பேதை மடமயிலைச் சூழும் பிணைமான்போல்
கோதை மடமானைக் கொண்டணைந்த - மாதர்
மருங்கின் வெளிவழியே மன்னவர்கண் புக்கு
நெருங்கினவே மேன்மேல் நிறைந்து. 137

     பேதைத் தன்மையினை உடையதோர் இளமயிலைச் சூழ்ந்து வருகின்ற பெட்டை மான்களைப் போலத் தமயந்தியாகிய இளமானைச் சூழ்ந்து கொண்டு தோழியராகிய மாதர்கள் சுயம்வர மண்டபத்தைச் சேர்ந்தனர். அப்போது, அந்த மாதர்களின் இடைகளது இடையே தோன்றிய வெளிகளின் வழியாக உட்புகுந்த மன்னவரின் கண்கள், தமயந்தியை மென்மேலும் நிரம்பியவாய் நெருங்கின. (தோழியர் சூழ வருவாளான தமயந்தியை, அவர்களின் இடைகளின் இடைவெளி வழியாக மன்னரனைவரும் கண்டுகளித்தனர் என்கிறார் கவி.)

மண்டபம் புகுந்தாள்

மன்னர் விழித்தா மரைபூத்த மண்டபத்தே
பொன்னின் மடப்பாவை போய்ப்புக்காள்- மின்னிறத்துச்
செய்யதாள் வெள்ளைச் சிறையன்னஞ் செங்கமலப்
பொய்கைவாய் போவதே போன்று. 138

     மின்னலின் நிறத்தைப் போன்று ஒளிபரப்பும் சிவந்த தாள்களையும், வெண்மையான சிறகுகளையும் உடைய அன்னமானது, செந்தாமரைப் பூக்கள் நிறைந்த தடாகத்தினிடத்தே மிதந்து போவதனைப் போல, திருமகள் போன்ற இளைய பாவையாகிய தமயந்தியானவள், மன்னர்களின் கண்களாகிய செந்தாமரை மலர்கள் பூத்த அந்தச் சுயம்வர மண்டபத்தினுள்ளேயும் போய்ச் சேர்ந்தாள்.

கடைபார்த்து நின்றான்

வடங்கொள் வனமுலையாள் வார்குழைமேல் ஓடும்
நெடுங்கண் கடைபார்த்து நின்றான் - இடங்கண்டு
பூவாளி வேந்தன்றன் பொன்னாவம் பின்னேயிட்டு
ஏவாளி நாணின்பால் இட்டு. 139

     மலரம்புகளையுடைய வேந்தனாகிய மன்மதன், தகுதியான இடத்தைப் பார்த்தவனாகத் தன் அழகிய அம்புக் கூட்டைப் பின்புறமாக இட்டுக் கொண்டான். அம்பு வரிசைகளைத் தன் கரும்புவில்லின் கருப்பு நாணின்மேல் இட்டுக் கொண்டான். முத்து வடத்தினை ஏந்திக் கொள்ளுகின்ற அழகிய மார்பகங்களை உடைய தமயந்தியின் நீண்ட குண்டலங்களின் மீது ஓடிக் கொண்டிருக்கும் நெடிதான கண்களின் கடையினைப் பார்த்தவாறே, தான் அவர்கள்பால் அம்பு தொடுத்தற்குத் தக்க சமயத்தையும் எதிர்பார்த்திருந்தான்.

தனிக்கொடிக்குக் காட்டினாள்

மன்னர் குலமும் பெயரும் வளநாடும்
இன்ன பரிசென் றியலணங்கு - முன்னின்று
தார்வேந்தன் பெற்ற தனிக்கொடிக்குக் காட்டினாள்
தேர்வேந்தர் தம்மைத் தெரிந்து. 140

     இயல்புகளிலே சிறந்த அணங்குபோல்வாளான சேடி ஒருத்தி, தேர் வேந்தர்கள் தம்மை ‘இவரவர் இன்னின்னார்’ எனத் தெரிந்து கொண்டு, அந்தந்த மன்னவர்களுடைய குலச்சிறப்பும், பெயரும், வளநாடும் இன்னபடியான தன்மையுடையன்’ என்று வெற்றி மாலையினையுடைய வேந்தனான வீமராசனின் ஒப்பற்ற கொடியாகிய தமயந்திக்கு விளக்கிச் சொல்லியவாறே, ஒவ்வொருவராகக் காட்டிக் கொண்டே வந்தாள்.

சோழ நாடன் இவன்

பொன்னி யமுதப் புதுக்கொழுந்து பூங்கமுகின்
சென்னி தடவும் திருநாடன் - பொன்னின்
சுணங்கவிழ்ந்த பூண்முலையாய் சூழமரிற் றுன்னார்
கணங்கவிழ்ந்த வேலனிவன் காண். 141

     பொன்னைப் போலத் தேமல்கள் படர்ந்திருக்கின்ற பூணிட்ட மார்பகங்களை உடையவளே! வந்து சூழ்ந்த போரிலே பகைவர்களின் திரள் எல்லாம் வீழ்ந்துபடுவதற்கு ஏதுவான வேற்படையினைக் கொண்டிருக்கும் இவனைப் பார்! இவன், பொன்னி நதியின் அமுதம் போன்ற நீரின் புது வெள்ளத்தே எழுகின்ற அலைகளின் முனைகள், அழகிய கமுக மரங்களினது உச்சியினைத் தடவிக் கொண்டிருக்கும் நீர்வளமுடைய சோழநாட்டின் அரசனாவான்.

பாண்டி நாடன் இவன்

போர்வாய் வடிவேலாற் போழப் படாதோரும்
சூர்வாய் மதரரிக்கண் தோகாய்கேள் - பார்வாய்ப்
பருத்ததோர் மால்வரையைப் பண்டொருகாற் செண்டால்
திரித்தகோ விங்கிருந்த சேய். 142

     வடித்துக் கொண்ட வேற்படையினாலே போரினிடத்தே பிளக்கப்படாதவர்களும் அச்சமுறும் தன்மையினைக் கொண்ட, மதர்த்த அரிபடர்ந்த கண்களையுடைய மயில் போன்றவளே! கேட்பாயாக! இங்கே வீற்றிருக்கின்ற முருகனைப் போன்ற மன்னவன், பூமியினிடத்தேயே பெரிதான ஒப்பற்ற பெருமலையாம் மேருவினை, முன்னொரு காலத்தே செண்டினாலே அடித்து வெற்றி கொண்ட பாண்டிய குமாரனாவான்.

சேரன் இவன்

வென்றி நிலமடந்தை மென்முலைமேல் வெண்டுகில்போல்
குன்றருவி பாயுங் குடநாடன் - நின்றபுகழ்
மாதே யிவன்கண்டாய் மானத் தனிக்கொடியின்
மீதே சிலையுயர்த்த வேந்து. 143

     நிலைபெற்ற புகழினையுடை மாதே! வெற்றிப் புகழுடைய நிலமகளின் மென்மையான முலைகளின் மேலாக வெண்மையான துகில் விளங்குமாறுபோல, மலைகளிடத்திருந்து அருவிகள் பாய்கின்ற மேற்றிசை நாட்டிற்கு உரியவனான, ஒப்பற்ற தன் கொடியின் மீதிலே வில்லை உயர்த்து அமைத்துள்ள சேரவேந்தன் இவன் ஆவான். (மானத் தனிக்கொடி - பெருமையுள்ள ஒப்பற்ற கொடி.)

யதுகுல வேந்தன் இவன்

ஆழிவடி யம்பலம்ப நின்றானும் அன்றொருகால்
ஏழிசைநூற் சங்கத் திருந்தானும் - நீள்விசும்பின்
நற்றேவர் - தூது நடந்தானும் பாரதப்போர்
செற்றானும் கண்டாயிச் சேய். 144

     வடித்த தன் அம்பினைக் கடலிலே முன்னொரு காலத்தில் கழுவிக் கொண்டவனும், முன் ஒரு காலத்திலே ஏழுவகையான இசையமைதிகளையுடைய இசைச் சங்கத்திலே இருந்தவனும், நெடிதான ஆகாயத்திலேயுள்ள நல்ல தேவர்களின் பொருட்டாகத் தூது நடந்தவனும், பாரதப் போர் வெற்றிபெறக் காரணனும், இந்த யதுகுலக் குமரனேயாவான்; இவனையுங் காண்பாயாக. (கார்த்தவீரியார்ச்சுனன் என்பவன் யதுகுலத்தான். அவன் நருமதைச் சங்கமத்தருகே இராவணனை மீட்க வந்த அரக்கரைக் கொன்று கடலிலே ஆயுதங்களைக் கழுவினான். மற்றொரு முறை நாரதருக்கும் விசுவாவசுவிற்கும் சங்கீத சர்ச்சை நடந்த சங்கத்தின் தலைவனாயிருந்தான். அவன் பெருமைகள் யதுகுலத்திற்குச் சுட்டப்பெற்றன. பாண்டவர் தேவாம்சமாகப் பிறந்தவர்; அவர்கட்குத் தூது சென்றவன் கண்ணன். அவனும் யதுகுலத்தான். பாரதப் போரை முடித்தவனும் அவனே. நளசரிதை பாரதத்திற்கு முற்பட்டது. ஆயினும், கவிஞர் பிற்காலத்தவராதலால் இவ்வாறு கூறி யதுகுலத்தைச் சிறப்பிக்கிறார். ரஜீ என்பவன் ஒருவனைத் தேவதைகள் இந்திர தூதனாக வந்து அழைத்துச் சென்று, உலகத்தை நாசஞ் செய்து கொண்டிருந்த அரக்கரைக் கொல்வித்த கதையினையே இப்பகுதி குறிக்கும் எனவும் உரைப்பர்.)

குரு நாடர் கோமான்

தெரியில் இவன்கண்டாய் செங்கழுநீர் மொட்டை
அரவின் பசுந்தலையென் றஞ்சி - இரவெல்லாம்
பிள்ளைக் குருகிரங்கப் பேதைப்புள் தாலாட்டும்
வள்ளைக் குருநாடர் மன். 145

     செங்கழுநீர் மலரினது மொட்டினைப் பாம்பினது பசுமையான தலையென்று நினைத்து அச்சங்கொண்டு, இரவுப் பொழுதெல்லாம் பறவைக் குஞ்சானது வாய்விட்டு ஓலமிட, அதன் தாய்ப்பறவை தாலாட்டிக் கொண்டே இருக்கும் வள்ளைக் கொடிகள் மலிந்த குரு நாட்டின் கோமான் இவன். தெரிய விரும்பினால் இவனையும் காண்பாயாக. (‘பிள்ளைக் குருகு’ என்றது நாரைக் குஞ்சினன்.)

மத்திரத்தார் மகன்

தேமருதார்க் காளை யிவன் கண்டாய் செம்மலர்மேல்
காமருசங் கீன்ற கதிர்முத்தைத் - தாமரைதன்
பத்திரத்தால் ஏற்கும் படுகர்ப் பழனஞ்சூழ்
மத்திரத்தார் கோமான் மகன். 146

     தேன் பொருந்தியிருக்கும் தாரினை அணிந்த ஏறுபோன்றோனான இவன், சங்கானது சிவந்த மலரின் மேலாக விருப்பமுடனே ஈன்று போட்ட ஒளியுடைய முத்தினைத் தாமரையானது தன் இலையினாலே தாங்கிக் கொள்ளுகின்ற, பள்ளங்களையுடைய வயல்கள் சூழ்ந்திருக்கும் மந்திர தேசத்து அரசனுடைய மகன்; இவனையும் காண்பாயாக.

மச்சத்தார் கோமான் மகன்

அஞ்சாயல் மானே யிவன்கண்டாய் ஆலைவாய்
வெஞ்சாறு பாய விளைந்தெழுந்த - செஞ்சாலிப்
பச்சைத்தாள் மேதிக் கடைவாயிற் பாலொழுகும்
மச்சத்தார் கோமான் மகன். 147

     அழகிய சாயலினைக் கொண்ட மான் போன்றவளே! ஆலையினிடத்தேயிருந்து விருப்பங் கொள்ளும்படியான கருப்பஞ்சாறு வந்த நீராகப் பாய, அதனாலே விளைந்து உயர்ந்த ‘செஞ்சாலி’ என்னும் நெற்பயிரின் பசுமையான தாளினைத் தின்பதினாலே, எருமைகளின் கடைவாயினின்றும் பால் ஒழுகிக் கொண்டிருக்கும்படியான மச்ச நாட்டரசனின் மகன் இவன்; இவனையும் காண்பாயாக!

அவந்தி நாடன்

வண்ணக் குவளை மலர்வெளவி வண்டெடுத்த
பண்ணிற் செவிவைத்துப் பைங்குவளை - உண்ணா
தருங்கடா நிற்கு மவந்திநா டாளும்
இருங்கடா யானை இவன். 148

     அரிதான எருமைக் கடாக்கள் வண்ணமுடன் திகழும் குவளை மலர்களைப் பற்றிக் கௌவியபோது, அப்பூக்களிலேயுள்ள வண்டுகள் எழுப்பிய ரீங்காரப் பண்ணினுக்குச் செவி கொடுத்ததாகிப் பசுமையான அக்குவளை மலர்களை உண்ணாதேயே நிற்கும், வளமுடைய அவந்தி நாட்டினை ஆளுகின்ற பெரிய களிற்று யானையினைப் போன்றவன் இவன்; இவனையும் காண்பாயாக! (அருங்கடா - வலிமையுள்ள கடா; அருமை வலிமையைக் குறித்தது.)

பாஞ்சால மன்னன் இவன்

விடக்கதிர்வேற் காளை இவன்கண்டாய் மீனின்
தொடக்கொழியப் போய்நிமிர்ந்த தூண்டில் - மடற்கமுகின்
செந்தோடு பீறித்தேன் செந்நெற் பசுந்தோட்டில்
வந்தோடும் பாஞ்சாலர் மன். 149

     நஞ்சு ஊட்டப்பெற்ற ஒளியுடைய வேலினைக் கைக்கொண்டு விளங்கும் காளை போன்ற இவனையும் காண்பாயாக. தூண்டிலிலே தொடுத்திருந்த இரையானது போய்விட, அதனால் விரைந்து சென்று நிமிர்ந்த தூண்டிலின் முட்கோலானது மடல்களையுடைய கமுக மரத்தின் வளமான தோட்டினைப் பிளக்க, அதிலிருந்து வழிந்த தேனானது செந்நெற்பயிர்களின் பசுந்தாளிலே வந்து விழுந்து ஓடுகின்ற வளமிக்க பாஞ்சால நாட்டின் வேந்தன் இவன்.

கோசல மன்னன் இவன்

அன்னம் துயிலெழுப்ப அந்தா மரைவயலில்
செந்நெல் அரிவார் சினையாமை - வன்முதுகில்
கூனிரும்பு தீட்டும் குலக்கோ சலநாடன்
தேனிருந்த சொல்லாயிச் சேய். 150

     தேனனைய இனிமை தங்கியிருக்கின்ற சொல்லினை உடையவளே! அன்னப் பறவைகள் அதிகாலையிலேயே தம்மைத் துயிலினின்றும் எழுப்பிவிட, அழகிய தாமரை மலர்கள் நிறைந்துள்ள வயலிடத்தே சென்று செந்நெற்களை அரிபவர், கருக்கொண்டிருக்கும் ஆமையினது முதுகு ஓட்டிலே வளைவான தம் அரிவாட்களைத் தீட்டுகின்ற சிறப்பு மிகுந்த கோசல நாட்டு மன்னன் இந்த அரச குமாரன்; இவனையும் பார்ப்பாயாக!


நளவெண்பா : 1    2    3    4    5    6    7    8    9