புகழேந்திப் புலவர்

இயற்றிய

நளவெண்பா

தெளிவுரை: புலியூர்க் கேசிகன்

... தொடர்ச்சி ...

காதலரை அனுப்புக

செங்கோலாய் உன்றன் திருவுள்ளம் ஈதாயின்
எங்கோன் விதர்ப்பன் எழில் நகர்க்கே - நங்கோலக்
காதலரைப் போக்கி அருளென்றாள் காதலருக்
கேதிலரைப் போல எடுத்து. 251

     “செங்கோன்மை உடையவனே! உனது திருவுள்ளம் இவ்வண்ணமானால், என் தந்தையாகிய விதர்ப்ப மன்னவனின் அழகான நகருக்கு, நம்முடைய அன்பிற்குரியவரான அழகான மக்களை மட்டுமேனும் அனுப்பி அருள்வாயாக” என்று, தன் காதலன் மக்களுக்குத் தான் தாயன்பு இல்லாத அயலவள் ஒருத்தியைப் போல நின்று, தமயந்தி நளனிடத்தே கூறினாள். (எங்கோன் - எம் கோமான்; இங்கே தகப்பன். திருவுள்ளம் - மனப்போக்கு, ஏதிலார் - எவ்வுறவுப் பிணிப்பும் இல்லாத அயலவர்.)

தாதைக்குக் காட்டுக

பேதை பிரியப் பிரயாத பேரன்பின்
காதலரைக் கொண்டுபோய்க் காதலிதன் - தாதைக்குக்
காட்டுநீ என்றான் கலங்காத உள்ளத்தை
வாட்டுநீர் கண்ணிலே வைத்து. 252

     எதற்கும் கலங்காத திண்மையான தன் உள்ளத்தையும் வாட்டும் தகைமையானதான, மக்களைப் பிரிவதான துயரத்தைத் தன் கண்ணிலே வைத்தவனாக, நளன், “என் காதலியாம் இப் பேதையானவள் பிரிதற்குத் துணிவு கொண்டும், தாம் பிரிதற்கு மனம் பெறாத பேரன்பினரான அன்பிற்குரிய மக்களாகிய இவரைக் கொண்டு போய், என் காதலியின் தந்தையாகிய வீமராசனிடம் சேர்க்க” என்று, தம்முடன் தொடர்ந்து வந்துகொண்டிருந்தவனாகிய ஓர் அந்தணனைக் கேட்டுக் கொண்டான்.

வேறாகப் போக்குதிரோ!

தந்தை திருமுகத்தை நோக்கித் தமைப்பயந்தாள்
இந்து முகத்தை எதிர்நோக்கி - எந்தம்மை
வேறாகப் போக்குதிரோ வென்றார் விழிவழியே
ஆறாகக் கண்ணீர் அழுது. 253

     அதனைக் கேட்ட அம்மக்கள், தம் தந்தையின் திருமுகத்தை நோக்கினர்; தம்மைப் பெற்றவளின் நிலவனைய முகத்தையும் எதிரிட்டு நோக்கினர். தம் கண்களின் வழியே கண்ணீர் ஆறாகப் பெருகி ஓடுமாறு, “எங்களை உங்களைவிட்டுத் தனியே வேற்றிடம் அனுப்புகின்றீர்களோ?” என்று கூறி அழுதனர். (தாய் தந்தையரின் பிரிவைப் பொறுத்தற்கு இயலாத மக்கள் அங்ஙனம் புலம்புகின்றனர்.)

புல்லி விடா நின்றாள்!

அஞ்சனந்தோய் கண்ணில் அருவிநீர் ஆங்கவர்க்கு
மஞ்சனநீர் ஆக வழிந்தோட - நெஞ்சுருகி
வல்லிவிடா மெல்லிடையாள் மக்களைத்தன் மார்போடும்
புல்லிவிடா நின்றாள் புலர்ந்து. 254

     பூங்கொடி போலும் நுண்மையான இடையுடையவளான தமயந்தியானவள், மைதீட்டிய தன் கண்களினின்றும் அருவி போல வழிந்தோடும் கண்ணீரே, அவ்விடத்து அவர்கட்குத் திருமஞ்சன நீர்போல் வழிந்தோடி முழுக்காட்டத், தன் உள்ளம் உருகியவளாக, அவர்களைத் தன் மார்புடனே அணைத்துக் கொண்டு, விடுவதற்கு மனமற்றவளாக, வாட்டமுடன் செயலற்று நின்றாள்.

உயிர்கொண்டு ஏகுவான்

இருவர் உயிரும் இருகையான் வாங்கி
ஒருவன்கொண் டேகுவான் ஒத்து - அருமறையோன்
கோமைந்த னோடிளைய கோதையைக் கொண் டேகினான்
வீமன் நகர்க்கே விரைந்து. 255

     அரிதான வேதப்பொருள் உணர்ந்தோனாகிய அந்தணனும், நள தமயந்தியர் ஆகிய அவ்விருவரது உயிரையும் தன் இரண்டு கைகளினாலேயும் பறித்துக் கொண்டு சென்றாற்போல, அரசகுமாரனோடு, அவனுக்கு இளையவளான அரசகுமாரியையும், தன் இரு கைகளினாலேயும் பிடித்துக் கொண்டவனாக, வீமராசனின் நகரமான குண்டினபுரத்துக்கு விரைந்து செல்வானாயினான். (பெற்றோரிடமிருந்து மக்களைப் பிரித்துச் செல்லும் நிலையினைக் கூற்றுவன் உயிரைப் பற்றிக் கொண்டு செல்லும் நிலைக்கு ஒப்பிடுகின்றார் கவிஞர். அந்த அளவிற்கு நளதமயந்தியர் மக்களைப் பிரிந்ததனாற் செயலற்றுப் போயினர் எனவும், மக்களும் பிரியப் பெறாதவராகப் பிரிந்து போயினர் எனவும் கொள்ளுக.)

உள்ளம் ஒடுங்கினான்!

காத லவர்மேலே கண்ணோட விண்ணோடும்
ஊதை எனநின் றுயிர்ப்போட - யாதும்
உரையாடா துள்ளம் ஒடுங்கினான் வண்டு
விரையாடும் தாரான் மெலிந்து. 256

     வண்டுகள் மணமுள்ள தேனிலே முழுகிக் களிக்கும் பூமாலையினையுடைய நளன், மக்களைப் பிரியும் அந்த வருத்தத்தினாலே தன் உள்ளம் மெலிந்தான். தன் கண் பார்வை அன்புக்குரியவரான அம்மக்களைப் பின்பற்றியே செல்ல, வானிலே செல்லும் ஊதைக்காற்று என்று சொல்லும்படியாக நிலைத்த பெருமூச்சு எழ, யாதும் தமயந்தியுடன் உரையாடாதே நின்றவனாகித், தன் அந்த அவலமான நிலைமையை எண்ணி எண்ணி உள்ளம் ஒடுக்கமுற்றவனும் ஆயினான். (‘உரையாடாதே’ என்றது, அவளுக்குத் தான் தேறுதல் உரைக்கவும் வலியற்றவனாகத், தானே பெரிதும் தளர்ச்சியுற்று நின்றான் என்பதனைக் காட்டுவதாகும்.)

8. ஆடை அரிந்த செயல்

வேகின்ற வெஞ்சுரம்

சேலுற்ற வாவித் திருநாடு பின்னொழியக்
காலிற்போய்த் தேவியொடுங் கண்ணுற்றான் - ஞாலஞ்சேர்
கள்ளிவே கத்தரவின் கண்மணிகள் தாம்பொடியாய்த்
துள்ளிவே கின்ற சுரம். 257

     கெண்டை மீன்களைக் கொண்டிருக்கும் தடாகங்களையுடைய அழகிய தன் நிடத நாட்டினை, அது தனக்குப் பிற்பட்டுப் போகுமாறு கடந்து, தன் மனைவியான தமயந்தியோடும் கால்நடையாகவே நளன் நடந்து சென்றான். நிலத்தினைச் சேர்ந்திருக்கின்ற கள்ளி மரங்களினது கடுமையினாலே, நாகப்பாம்புகளிடத்தேயுள்ள மணிகள் துள்ளித் தெறித்து வீழ்ந்து சாம்பலாக எரிந்து போகின்ற வெப்பமிக்க பாலை நிலத்தையும், அதன்பின் அவன் கண்ணுற்றான்.

புள் வடிவிற் கலி

கன்னிறத்த சிந்தைக் கலியுமவன் முன்பாகப்
பொன்னிறத்த புள்வடிவாய்ப் போந்திருந்தான் - நன்னெறிக்கே
அஞ்சிப்பார் ஈந்த அரசனையும் தேவியையும்
வஞ்சிப்பான் வேண்டி வனத்து. 258

     நல்லொழுக்க நெறி என்னும் ஒன்றுக்கு மட்டுமே அச்சங்கொண்டு, தன் நாட்டினைப் புட்கரனுக்குக் கொடுத்து வந்த நளனையும், அவன் தேவியையும், மீண்டும் அவ்வனத்திடையேயும் வஞ்சிப்பதற்குக் கருதினான் கலிமகன். கல்லைப் போன்ற வன்மையான உள்ளமுடைய அவனும், அந்த விருப்பத்தினாலே, அவர்கள் முன்பாகப் பொன்னிறம் கொண்டதொரு பறவையின் வடிவாகச் சென்று அமர்ந்திருந்தான். (இரக்கமற்றோன் கலியாதலின், ‘கன்னிறத்த சிந்தைக் கலி’ என்றனர். கன்னிறத்த - கல் + நிறத்த எனப் புணர்ந்து வந்த சொல்; இருண்ட சிந்தை என்கிறார்.)

பிடித்துத் தா என்றாள்!

தேன்பிடிக்கும் தண்துழாய்ச் செங்கண் கருமுகிலை
மான்பிடிக்கச் சொன்ன மயிலேபோல் - தான்பிடிக்கப்
பொற்புள்ளைப் பற்றித்தா என்றாள் புதுமழலைச்
சொற்கிள்ளை வாயாள் தொழுது. 259

     தேன் நிரம்பியிருக்கும் தன்மையான துளபமாலையினை அணிந்தோனும், செங்கண்ணனும், கருமுகிலைப் போன்ற நிறமுடையோனுமான இராமபிரானை, மானைப் பிடித்துத் தருமாறு சொன்ன மயில் போன்றாளான சீதையைப் போல கேட்போர்க்குப் புதுமை விளைக்கின்ற மழலைச் சொற்களையுடைய கிளியினைப் போன்று கொஞ்சும் மழலை மொழி பேசும் வாயினளான தமயந்தியும், நளனைத் தொழுது, தான் தன் கையிலே பற்றி வைத்துக் கொள்ளும் பொருட்டாக, அந்தப் பொன்னிறப் பறவையினைப் பிடித்துத் தருவீராகவென்று அப்போது கேட்டனள்.

வளைக்க எண்ணினான்!

பொற்புள் ளதனைப் பிடிப்பான் நளன்புகுதக்
கைக்குள்வரு மாபோல் கழன்றோடி - எய்க்கும்
இளைக்குமா போல இருந்ததுகண் டன்றே
வளைக்குமா றெண்ணினான் மன். 260

     அந்தப் பொன்னிறப் பறவையினைப் பிடிக்கும் பொருட்டாக நளன் அதனிடத்தே செல்ல, அது அவன் கைக்குள்ளே பிடிபடுவது போலக் காட்டித் தப்பியோடி, எய்த்து இளைப்படைந்தாற் போல ஒரு புறத்தே சென்று இருந்தது. அதனைக் கண்ட நளமன்னன் அதனை அப்படியே வளைத்துப் பிடிப்பதற்கான வகையினைக் கருதினான். (கழன்று - பிடியினின்றும் நழுவிச் சென்று. எய்த்தல் - களைத்துச் சோர்தல். இளைத்தல் - நெடு மூச்செறிதல்; அந்தப் போலிப் பறவை நடித்தது அவ்வாறாயிருந்ததென்பது கருத்து.)

ஒற்றைத் துகிலாடை!

கொற்றக் கயற்கட் கொடியே யிருவோரும்
ஒற்றைத் துகிலா லுடைபுனைந்து - மற்றிந்தப்
பொற்றுகிலாற் புள்வளைக்கப் போதுவோ மென்றுரைத்தான்
பற்றகலா வுள்ளம் பரிந்து. 261

     அந்த நிலையிலும், நளன் தன் காதலியான தமயந்தியின் மீது ஆசை நீங்காத உள்ளம் உடையவனாகவே இருந்தான். அதனால், தன் காதலியின் ஆர்வத்திற்கு உதவும் அன்பு கொண்டவனாகக், “கெண்டை மீனையும் வெற்றிகொண்ட கண்களையுடைய கொடி போன்றவளே! நாம் இருவரும் ஒற்றைத் துகிலால் உடை புனைந்து கொண்டு இந்த அழகிய துணியினாலே அந்தப் பறவையினை வளைத்துப் பிடிக்கச் செல்வோம்” என்று சொன்னான். (துணியினாலே அந்தப் பறவையை வளைத்துப் பிடிக்கக் கருதிய நளன், உடுத்திருந்த ஆடையன்றி, இருவரிடமும் வேறொரு துணியில்லாத அவல நிலையினை உணர்ந்து, தமயந்தியின் ஆடையின் ஒரு முனையைத் தான் உடுத்துக் கொண்டு, தான் உடுத்தியிருந்த ஆடையினாலே, அன்னத்தை வளைத்துப் பிடிக்கக் கருதுகின்றான்.)

புள் வளைத்தான்

எற்றித் திரைபொர நொந்தேறி யிளமணலில்
பற்றிப் பவழம் படர்நிழற்கீழ் - முத்தீன்று
வெள்வளைத்தா யோடுநீர் வேலைத் திருநாடன்
புள்வளைத்தான் ஆடையாற் போந்து. 262

     அலைகள் வன்மையுடன் மோத அதனாலே வருத்தமுற்றுக் கரையிடத்து இளமணலிலே பற்றிக் கொண்டு மேலே ஏறிச் சென்று பவளக்கொடிகள் படர்ந்திருக்கும் நிழலிலே முத்துக்களை ஈன்றுவிட்டு, வெண்மையான சங்குகளின் தாய்கள் ஓடிக் கொண்டிருக்கும் நீர்வளமிக்க கடல்வளத்தினையுடைய அழகிய நிடத நாட்டையுடையவன் நளன். அவன், முன் கூறியவாறே தங்களிருவரையும் ஒற்றையாடையினாலே புனைந்து கொண்டவனாகத், தான் உடுத்தியிருந்த ஆடையினாலே அந்தப் பறவையைச் சென்று மூடி வளைத்தான். (எற்றுதல் - உதைத்தல். பொருதல் - தாக்குதல். கடலலைகள் மோதுவதனை, ‘எற்றித் திரை பொர’ என்றனர் கவிஞர்.)

தோற்பித்தோன் நானே காண்!

கூந்தல் இளங்குயிலுங் கோமானுங் கொண்டணைத்த
பூந்துகில்கொண் டந்தரத்தே போய்நின்று - வேந்தனே
நன்னாடு தோற்பித்தோன் நானேகாண் என்றதே
பொன்னாடு மாநிறத்த புள். 263

     சிறந்த கூந்தலையுடைய இளமைப் பருவத்துக் குயிலையொத்த தமயந்தியும், கோமானான நளனும், கொண்டு வளைத்த அழகிய அந்த ஆடையினைத் தூக்கிக் கொண்டு வானத்தே பறந்து போய் நின்று கொண்டு, ‘வேந்தனே! நின் நலம் பொருந்திய நாட்டினைத் தோற்பித்தவனும் நானே தான் என்பதை அறிவாயாக’ என்று, பொன்னினது மேன்மை தாங்கிய நிறத்தினையுடையதாக அமைந்து வந்த அந்தப் பறவையானது, நளனிடம் சொல்லிற்று. (நளன்பால் ‘எல்லாம் தன் செயலே’ என்று பறவை உருவெடுத்து வந்த கலிமகள் கூறினான் என்பது கருத்து.)

ஆவியும் ஆடையும்

காவிபோற் கண்ணிக்கும் கண்ணியந்தோட் காளைக்கும்
ஆவிபோல் ஆடையுமொன் றானதே - பூவிரியக்
கள்வேட்டு வண்டுழலுங் கானத் திடைக்கனகப்
புள்வேட்டை யாதரித்த போது. 264

     பூக்கள் இதழ் விரியத் தொடங்கவும், அவற்றின்பால் நிறைந்திருக்கும் மதுவினை விரும்பி வண்டினம் திரிந்து கொண்டிருக்கின்ற கானகத்தின் இடையிலே, பொற்பறவையினைப் பிடிப்பதற்கு நள தமயந்தியர் விரும்பிய பொழுதிலே, நீலோற்பலம் போன்ற கண்களையுடைய தமயந்திக்கும், மாலைதரித்த தோள்களையுடைய காளையான நளனுக்கும், ஒன்றாகிக் கலந்துள்ள அவர்களின் உயிரினைப் போலவே, அவர்கள் உடுத்தியிருந்த ஆடையும் ஒன்றாகவே ஆயிற்று! (இது கவி வாக்கு. நளதமயந்தியர் ஒரே ஆடை உடுத்தவராக விளங்கிய தன்மையினைக் கவிஞர் இங்ஙனம் கூறுகின்றார்.)

விதியை நினைத்தாள்

அறம்பிழைத்தார் பொய்த்தார் அருள்சிதைத்தார் மானத்
திறம்பிழைத்தார் தெய்வம் இகழ்ந்தார் - புறங்கடையில்
சென்றார் புகுநரகஞ் சேர்வாய்கொல் என்றழியா
நின்றாள் விதியை நினைந்து. 265

     அறநெறியினைப் பிழைத்தோர்கள்; பொய்த்தே திரிகின்ற தன்மையுடையோர்; அருள் என்னும் அரும்பண்பைச் சிதைத்தோர்கள்; மானம் என்கின்றவோர் தன்மையினையே பிழைத்தவர்கள்; தெய்வத்தை இகழ்ச்சியாகப் பேசியவர்கள்; செல்வர்களின் புறக்கடைகளிலே சென்று இரந்து நிற்பவர்கள் ஆகிய பாவிகள் போய்ச் சேர்கின்ற நரகத்தினை நீயும் சென்று அடைவாய் போலும்! என்று கலியைக் குறித்து எண்ணித் தன் உள்ளம் அழிந்தவளாகத், தமயந்தி, தனக்குற்ற விதியை நினைந்து நொந்து கொண்டவளாக மயங்கி நின்றாள்.

9. சூழ்ந்த பேரிருள்

தெய்வம் கொடுத்தால்

வையந் துயருழப்ப மாயம் பலசூழ்ந்து
தெய்வங் கெடுத்தாற் செயலுண்டோ - மெய்வகையே
சேர்ந்தருளி நின்றதனிச் செங்கோலா யிங்கொழியப்
போந்தருளு கென்றாள் புலந்து. 266

     தமயந்தி அவ்வாறு வாட்டமுற்று, ‘மெய்ம்மை நெறியிலே ஈடுபட்டு நின்று யாவர்க்கும் கருணைபுரிந்து வாழ்ந்திருந்த ஒப்பற்ற செங்கோன்மையினை உடையவனே! இவ்வுலகமெல்லாம் துயரத்திலே வருத்தமுறப், பல வஞ்சனைகளைக் கருதித், தெய்வமே இவ்வாறாக நம்மைக் கெடுக்க முயன்றதென்றால், அதற்கு எதிரானவொரு நமது செயலும் உளதாகுமோ? ஆதலினாலே, இவ்விடத்தை விட்டுக் கவலையை மறந்து புறப்பட்டு அருள்வீராக’ என்றாள் நளனிடம். (தெய்வமே கேடு செய்ய முடிவு செய்துவிட்ட போது, அதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியுமோ? அதனால் நிகழ்ந்ததை மறந்து, இவ்விடத்தை விட்டு நாம் புறப்படுவோம்” என்கின்றாள் தமயந்தி.)

குளிர்ப்பான்போற் சென்றடைந்தான்

அந்த நெடுஞ்சுரத்தின் மீதேக வாங்கழலும்
வெந்தழலை யாற்றுவான் மேற்கடற்கே - எந்தை
குளிப்பான்போற் சென்றடைந்தான் கூரிருளால் பாரை
ஒளிப்பான்போற் பொற்றே ருடன். 267

     நளதமயந்தியரின் நிலமை இவ்வாறாக இருந்தது. அந்த வேளையிலே, அந்த நெடிதான பாலைவனத்தின் மேலாகச் சென்ற பொழுது, அவ்விடத்தே உண்டான கொடிதான வெப்பத்தினை ஆற்றிக் கொள்வதன் பொருட்டாக, மேலைக்கடலிடத்தே சென்று குளிப்பவனைப் போலவும், மிகுதியான இருளிலே பூமியை ஒளித்து வைப்பவனைப் போலவும், எந்தையாகிய சூரிய பகவானானவன், தன் பெற்றோருடனே மேற்கடலிற் சென்று சேர்ந்தான். (நளனுக்குத் துயர் தந்தது காணப் பொறாது, அந்தத் துயரத்து வெம்மையினாலே ஆற்றானாகிக் கதிரவன் மேற்றிசையிற் சென்றடைந்தான் எனவும் கருதுக. ‘பூமியை இருளில் ஒளிப்பான் போல’ என்றதும், அது பற்றியே என்க.)

கோதையோடும் சென்றாள்

பானு நெடுந்தேர் படுகடலிற் பாய்ந்ததற்பின்
கான வடம்பின் கவட்டிலைகள் - மானின்
குளம்பேய்க்கும் நன்னாடன் கோதையொடுஞ் சென்றான்
இளம்பேய்க்குந் தோன்றா விருள். 268

     சூரியனின் பெரிய தேரானது சென்று மேற்கடலிலே மூழ்கி மறைந்தபின், காட்டிலுள்ள அடப்பங் கொடிகளின் பிளவுபட்ட இலைகள் மானின் குளம்புகளைப் போலத் தோற்றமளிக்கின்ற நலம் பொருந்திய நாட்டையுடையவனான நளன், இளம் பருவத்துப் பேய்க்கும் வழி தோன்றாத அந்த அடர்ந்த இருளினூடே, தமயந்தியோடு மேற்கொண்டும், நடந்து செல்வானானான். (‘இளம் பேய்க்கும் தோன்றா இருள்’ என்றது, இருளின் செறிவு மிகுதியைக் குறித்தது. இளமை தெளிவான பார்வை உடையது; அதற்கு வழி தோன்றாதென்றார், இருளின் அடர்த்தியைக் காட்டுதற் பொருட்டாக.)

மண்டபங் கண்டான்

எங்காம் புகலிடமென் றெண்ணி யிருள்வழிபோய்
வெங்கா னகந்திரியும் வேளைதனில் - அங்கேயோர்
பாழ்மண் டபங்கண்டான் பால்வெண் குடைநிழற்கீழ்
வாழ்மண் டபங்கண்டான் வந்து. 269

     ‘நமக்கு புகலிடம் எங்கேயோ?’ என்று எண்ணியவாறே, அந்த இருளினிடத்தே வழிநடந்து போவாராக, வெம்மையான அந்தக் காட்டிலே நளதமயந்தியர் திரிந்து கொண்டிருந்த வேளையிலே, பால்போன்ற வெண்கொற்றக் குடை நிழலின் கீழாக அமர்ந்து, வாழ்வு சிறந்த அரண்மனை மண்டபத்தே அரசியற்றிதனை அறிந்தவனாகிய நளன், அவ்விடத்தே ஒரு பாழும் மண்டபத்தினைத் தனக்கு எதிரே விளங்கக் கண்டான்.

துயிலப் போதராய்

மூரி யிரவும்போய் முற்றிருளாய் மூண்டதால்
சாரு மிடமற்றுத் தானில்லை - சோர்கூந்தல்
மாதராய் நாமிந்த மண்டபத்தே கண்டுயிலப்
போதரா யென்றான் புலர்ந்து. 270

     “தளர்ந்து சோர்கின்ற கூந்தலை உடையவளான மாதரசியே! சிறிதளவான இருட்டையுடைய முன்னிரவின் இருளும் மறைந்துபோய், இப்போது நிறைந்த இருளாகவும் மூன்று விட்டது. வேறு தங்கும் இடமோ யாதும் இல்லை. அதனாலே நாம் அந்த மண்டபத்தே சென்று சிறிது கண் துயிலலாம். அவ்விடத்தே செல்வாயாக!” என்று, நளன் மனவாட்டமுடனே தமயந்தியிடம் சொன்னான்.

மகரயாழ் கொதுகின் பாடல்

வையம் உடையான் மகரயாழ் கேட்டருளும்
தெயவச் செவிகொதுகின் சில்பாடல் - இவ்விரவில்
கேட்டவா வென்றழுதாள் கெண்டையங்கண் நீர்சோரத்
தோட்டவார் கோதையாள் சோர்ந்து. 271

     நிலம் ஆளுகின்ற உரிமை உடையான் நளமன்னன். “அவனுடைய மகரவீணையின் இன்னிசையைக் கேட்டருள்கின்ற மேன்மை பொருந்திய காதுகள், இப்போது கொதுகின் அற்புதமான பாடலையும் இந்த இரவு நேரத்தில் கேட்ட வகைதான் என்ன கொடுமையோ?” என்று, பூவிதழ்களையுடைய நீண்ட கூந்தலைக் கொண்டாளான தமயந்தியானவள் வாட்டமுற்றுத், தன் கெண்டை மீன்களைப் போன்ற அழகிய கண்களினின்றும் நீர் வடிய, அதனைக் கண்டு அழத் தொடங்கினாள். (தன் காதலன் மண்டபத்திலே தன்னருகில் வெறுந்தரையிற் கிடந்து உறங்கும் நிலையினைக் கண்ட தமயந்தி, தன் துயரையும் மறந்து, அவனுடைய அந்த அவலநிலைக்கு நொந்து, இங்ஙனம் கண்ணீர் சொரிகின்றாள்.)

வழியல்! அழியல்!

பண்டை வினைப்பயனைப் பாரிடத்தி லார்கடப்பார்
கொண்டல் நிழலிற் குழைதடவும் - கெண்டை
வழியனீ ரென்றான் மனநடுங்கி வெய்துற்
றழியனீ யென்றான் அரசு. 272

     “கார்மேகத்தை போன்ற கூந்தலினது நிழலிலேயுள்ள காதணிகளைச் சென்று தடவுகின்ற கெண்டை மீன்களைப் போன்ற கண்களை உடையவளே! அக் கண்களினின்றும் நீ கண்ணீரை வழியவிடுதல் வேண்டா. பழைதான வினையின் பயனை அநுபவிப்பதல்லது, இந்த உலகத்திலே அதனை வெல்வார்தாம் யாவரோ? அதனால், மன நடுக்கமுற்றுத் துயரமாகிய வெப்பத்தை உளங்கொண்டு நீ வருந்தல் வேண்டாம்” என்று கூறித், தமயந்தியை ஆற்றுவிக்க முயன்றான் நளன். (கொண்டல் - மழை மேகம். வினைப்பயன் - ஊழ்வினைப் பயன். பண்டை வினை - பழையதாகத் தொடர்ந்து வரும் வினை; முற்பிறவிகளிற் செய்த பாவங்களின் பயனாக வந்து அமைவது.)

காணேன் அரசே!

விரைமலர்ப்பூ மெல்லணையும் மெய்காவல் பூண்ட
பரிசனமும் பள்ளி யறையும் - அரசேநான்
காணேனிங் கென்னாக் கலங்கினாள் கண்பனிப்பப்
பூணேர் முலையாள் புலர்ந்து. 273

     பூண் அழகாகப் பொருந்தியிருக்கின்ற மார்பகங்களை உடையவளான தமயந்தி, நளன் அங்ஙனமாகக் கூறக்கேட்டு மீண்டும் வாட்டம் கொண்டவளாயினாள். “அரசே! மணமுள்ள மலர்களின் இதழ்களைப் பரப்பிய மென்மையான படுக்கையையும், மெய்காவல் பூண்டு காத்திருக்கும் ஏவலர்களையும், பள்ளி கொள்வதற்கென்றே அமைந்த அறையையும் நான் இங்கே காணவில்லையே?” என்று, தன் கண்களினின்றும் நீர் சொரியக் கூறியவளாக, அவள் மீண்டும் மனம் கலங்கினாள். (மெய் காவல் - அரசனின் உடலைக் காக்கும் ஏற்பாடு. இதனைப் பூண்டோர் ‘மெய்க்காவலர்’ ஆவர். பாடி காவல், ஊர் காவல், நாடு காவல், போன்ற பல காவல் துறைகளையும், அரசர்கள் அந்நாளிற் கொண்டிருந்தனர் என்க.)

துயில்கை கடன்

தீய வனமும் துயின்று திசைஎட்டுமேதுயின்று
பேயுந் துயின்றதாற் பேர்யாமம் - நீயுமினிக்
கண்மேற் துயில்கை கடனென்றான் கைகொடுத்து
மண்மேற் றிருமேனி வைத்து. 274

     தமயந்தியின் வாட்டத்தைக் கண்ட நளன், அவள் சிறிதும் உறங்காது தன் நிலைக்கு வருந்திக் கொண்டிருக்கும் நிலைமைக்குப் பெரிதும் கலங்கியவனாயினான். தன் கையினை அவளுக்குத் தலையணையாகக் கொடுத்து, மண்மேல் அவளுடைய அழகிய உடலையும் படுக்க வைத்தான். ‘கடுமையான இந்த வனமும் துயின்றது; எட்டுத் திசைகளும் துயின்றன; பேயும் உறங்கி விட்டது; இத்தகைய பெரிதான சாமவேளையிலே, இனி நீயும் நின் கண்மேல் உறக்கங் கொள்ளுதலே நின் கடமையாகும்’ என்று, அவளைத் தேற்றிப் படுக்க வைத்து, உறங்குமாறு சொல்லியும் வற்புறுத்தினான்.

வெடியாதால் நெஞ்சம்

புன்கண்கூர் யாமத்துப் பூழிமேற் றான்படுத்துத்
தன்கண் துயில்வாளைத் தான்கண்டும் - என்கண்
பொடியாதால் உள்ளாவி போகாதால் நெஞ்சம்
வெடியாதால் என்றான் விழுந்து. 275

     துயரம் மிகுந்த அந்த இரவின் யாமத்திலே, பூமியின் மேல் படுத்துக் கண்ணுறங்கிக் கொண்டிருந்த தமயந்தியை நளனும் கண்டான். ‘இந்த நிலையைக் காணும் என் கண்கள் பொடியாகவோ? என்னுள் இருக்கும் என் உயிரும் இந்நிலையே போகாதோ? என் நெஞ்சமும் இப்படியே வெடியாதோ?” என்று, தரையிலே விழுந்து புலம்பவும் தொடங்கினான்.

முந்தானையும் இல்லை!

முன்றில்தனில் மேற்படுக்க முன்தா னையுமின்றி
இன்று துயில இறைவனுக்கே - என்றனது
கைபுகுந்த தென்னுடைய கால்புகுந்த தென்றழுதாள்
மைபுகுந்த கண்ணீர் வர. 276

     (தமயந்தி உறங்கிய நிலையினைக் கண்டு புலம்பி வருந்திய நளனும் அயர்ந்து உறங்கிப் போனான். அப்போது அவள் விழித்துக் கொண்டு தன் நாயகனைப் பார்த்துப் புலம்புகின்றாள்.) ‘என் இறைவனுக்கு இன்று துயில்கொள்வதற்கு இந்த மண்டபத்து முற்றத்திலே விரித்துப் படுத்துக் கொள்வதற்கு என்னுடைய முந்தானையுங் கூட இல்லாமற் போயிற்றே? என்னுடைய கைகள் தலைக்கு அணையாகவும், கால்கள் காற்கணையாகவும் தாமே புகுந்தனவே! இதுவோ அவர் நிலை?’ என்று, மைதீட்டிய தன் கண்களினின்றும் நீர் வழிய அவள் அந்நிலை கண்டு அழுதாள். (முந்தானையே அவனுக்கு ஆடையாயினமையினால் அதுவும் விரித்தற்கு இல்லாமற் போயிற்றே என அவள் வருந்துகின்றாள்.)

யாரே துயரடையார்?

வீமன் திருமடந்தை விண்ணவரும் பெற்றிலாத்
தாமம் எனக்களித்த தையலாள் - யாமத்துப்
பாரே அணையாய்ப் படைக்கண் துயின்றாள்மற்
றாரோ துயரடையார் ஆங்கு. 277

     (அங்ஙனமாகப் புலம்பிய அவள் சோர்ந்து மீளவும் உறங்க, நளன் விழித்துக் கொண்டு, மீண்டும் புலம்புகின்றான்.) “வீமராசனின் செல்வத் திருமகள் இவள்! தேவர்களும் பெறுதற்கியலாத மணமாலையினை எனக்கு அளித்த தையலாள் இவள்! இத்தகையாளே, இந்த யாமத்து வேளையிலே, பூமியே படுக்கையாகக் கொண்டு வேற்படை போன்ற தன் கண்கள் துயின்றனள். இங்ஙனமாயினால், ஊழினால் பிறர் யாவரே துயரம் அடையாது தம்மைக் காத்துக் கொள்ள வல்லவராவர்?” (தாம் அவ்வாறு துயரடைந்த நிலைக்கு ஊழியின் வலியே காரணமாவதென நளன் இங்ஙனம் கூறி வருந்துகின்றான். ஊழ் - முன்வினைத் தொடர்பு.)

கலக்கினான் கலி

பெய்ம்மலர்ப் பூங்கோதை பிரியப் பிரியாத
செம்மை யுடைமனத்தான் செங்கோலான் - பொய்ம்மை
விலக்கினான் நெஞ்சத்தை வேறாக்கி நின்று
கலக்கினான் வஞ்சக் கலி. 278

     மலர்களைப் பெய்து கட்டிய அழகிய மாலையினையுடையவளான தமயந்தியைப் பிரிவதற்கு வேறுபடாத, செம்மையான தன்மையுடைய மனத்தினை உடையவன்; செங்கோன்மையினை உடையவன்; பொய்ம்மையினை அறவே விலக்கியவன், நளன். எனினும், வஞ்சகனாகிய கலிமகன், அவன் மனத்தையும் வேறுபடுத்தி நின்று, அப்போது ‘இவளைப் பிரியலாமோ’ என்ற ஒரு நினைவையும் எழச் செய்து, அவனைக் கலக்கமுறச் செய்தான்.

10. பிரிகின்ற கொடுமை

உதித்ததே வேறு உணர்வு

வஞ்சக் கலிவலியான் மாகத் தராவளைக்கும்
செஞ்சுடரின் வந்த கருஞ்சுடர்போல்-விஞ்ச
மதித்ததேர்த் தானை வயவேந்தன் நெஞ்சத்
துதித்ததே வேறோர் உணர்வு. 279

     இராகு வென்னும் பாம்பினாலே வளைத்துச் சூழ்ந்து கொள்ளப் பெற்றிருக்கும், சிவந்த கதிர்களையுடைய வானத்துக் கதிரவனிடமிருந்து தோன்றிவரும் கருமையான ஒளிக்கதிர்களைப் போல, மேலாகப் போற்றப் பெற்ற தேர்ப்படையினையுடைய வெற்றி வேந்தனான நளனின் செம்மையான நெஞ்சத்திடத்தேயும், வஞ்சகனான கலியின் ஆற்றலினாலே, வேறுபட்டதாகிய ஒரு கொடிய எண்ணம் அப்போது உதிப்பதாயிற்று. (செங்கதிரோனை இராகு சூழ்ந்து கொள்ள இருள் பட்டாற் போல், நளனின் மனமும் கலியின் வஞ்சனையினாலே கவியப் பெற்றதாகி இருளடைந்தது; அங்கே, அவனியல்பிற்கு மாறுபட்ட நினைவுகளும் எழுந்தன என்பது கருத்து.)

அரிதற்கு நினைந்தான்

காரிகைதன் வெந்துயரம் காணாமல் நீத்தந்தக்
கூரிருளிற் போவான் குறித்தெழுந்து - நேரே
இருவர்க்கும் ஓருயிர்போ லெய்தியதோர் ஆடை
அரிதற் கவனினைந்தா னாங்கு. 280

     தமயந்தியின் கொடுமையான துயரத்தினைக் காணப் பொறாமல், அவளை விட்டுப் பிரிந்து, அந்த நிறைந்த இருளிலே வெளியேறிப் போகக் கருதிப், படுத்திருந்த நளன் எழுந்து கொண்டான். இருவருக்கும் பொருந்திய ஓர் உயிரினைப் போலவே ஒன்றாக அமைந்திருந்த அந்த ஒற்றை ஆடையினையும், இடையில் அரிதற்கு அவன் அப்போது எண்ணங் கொண்டான். (ஆடை அரிதலன்றி அவனாற் பிரிய முடியாததனால், அதனை அரிவதற்கு எண்ணினான் என்க.)

வாளாக வந்தான்

எண்ணிய எண்ணம் முடிப்ப இகல்வேந்தன்
கண்ணி யதையறிந்து காய்கலியும் - பண்ணினுக்குக்
கேளான தேமொழியை நீங்கக் கிளரொளிசேர்
வாளாய் மருங்கிருந்தான் வந்து. 281

     வலிமை மிகுந்த வேந்தனாகிய நளன், தமயந்தியைப் பிரிவதற்கும் அவள் துகிலை அரிதற்கும் நினைந்ததை அறிந்தான். அவர்கள்பாற் சினம் கொண்டோனான கலிமகள், அவன் எண்ணத்தை முடித்துக் கொள்ளுமாறும், பண்ணினுக்கு உறவுடைய இனிதான பேச்சினையுடைய தமயந்தியைப் பிரிந்து போகுமாறும் செய்வதற்கு உதவியாக, ஒளி விளங்குகின்ற ஒரு வாளாக உருவெடுத்து வந்து, நளனருகே, அவன் காணுமாறு அருகிற் போய்க் கிடந்தான்.

அரிந்தான்! திகைத்தான்!

ஒற்றைத் துகிலும் உயிரும் இரண்டாக
முற்றுந்தன் அன்பை முதலோடும் - பற்றி
அரிந்தான் அரிந்திட் டவள்நிலைமை நெஞ்சில்
தெரிந்தான் இருந்தான் திகைத்து. 282

     ஒன்றாயிருந்த ஆடையும் ஒன்றுபட்டிருந்த இருவருயிரும் இரண்டுபடுமாறு, வளர்ந்து கனிந்துவரும் காதலன்பை அடியோடும் பற்றி அரிவானைப் போல, நளனும், இருவர்க்கும் ஒன்றாயிருந்த துகிலை இரண்டுபட அவ்வாளினாலே அரிந்தான். அரிந்த பின், அவள், அதனால் அடையும் நிலைமையினைத் தன் நெஞ்சிலே ஆராய்ந்தான்; திகைப்படைந்து, செயலற்றுச் சற்று நேரம் அப்படியே எதுவும் தோன்றாதபடி இருந்தும் விட்டான்.

கடைவார் கைபோல மனம்

போயொருகால் மீளும் புகுந்தொருகால் மீண்டேகும்
ஆயர் கொணர்ந்த அடுபாலின் - தோயல்
கடைவார்தம் கைபோல் ஆயிற்றே காலன்
வடிவாய வேலான் மனம். 283

     கால தேவனின் உருவமாக விளங்கிய வேலினைக் கைக் கொண்டோனான நளனின் மனம், அப்போது, ஒருமுறை தமயந்தியிடத்தே புகுந்து செல்லும்; மீண்டும் அவன்பால் வரும் என்றபடியாக, ஆயர்கள் கொணர்ந்த காய்ச்சிய பாலின் தோயலைக் கடைபவர்களது கைபோலப் போவதும் வருவதுமான ஒரு நிலைமையினையும் உடையதாயிற்று. (அவள் பால் போவது பிரியவொண்ணாத நிலை, மீளவும் வருவது பிரியத் துணியும் நிலை; இவ்வாறு அவன் மனம் அலைக்கழிவதாயிற்று என்க. தோயல் - தோய்த்த தயிர்.)

நெஞ்சம் வலித்தது

சிந்துரத்தான் தெய்வ முனிவன் தெரிந்துரைத்த
மந்திரத்தால் தம்பித்த மாநீர்போல் - முந்த
ஒளித்ததேர்த் தானை உயர்வேந்தன் நெஞ்சம்
வலித்ததே தீக்கலியால் வந்து. 284

     தெய்வத்தன்மை கொண்ட நாரத முனிவரானவர் ஆராய்ந்து உரைத்த மந்திரத்தினாலே, அசைவற்று நின்றதோர் கங்கை நீரின் தன்மையினைப் போல, முற்பட ஒலி முழக்கிச் செல்லும் தேர்ப்படையினை உடையோனாயிருந்த உயர்ந்த நளனின் நெஞ்சமும், தீய கலிமகனின் செயலினாலே தமயந்தியினின்றும் முற்றவும் மீண்டு வந்து தன் இயல்பிலே திரிந்து வன்மையுடையதாயிற்று. (கங்கையாற்று நீரைப் பனிக்கட்டியாக நாரதர் சபித்த கதை இங்குக் கூறப்பெற்றது. நீர் தம்பித்ததும் மென்மை மாறுபட்டதாகி வன்மையுறும். அதுபோன்றே, நளனின் மனமும் வன்மை அடைந்தது என்க. ‘வன்மை’ என்றது, அவளைப் பிரியத் துணிந்த தன்மையை.)

தெய்வங்காள்!

தீக்கா னகத்துறையும் தெய்வங்காள்! வீமன்தன்
கோக்கா தலியைக் குறிக்கொண்மின் - நீக்காத
காதலன்பு மிக்காளைக் காரிருளிற் கைவிட்டின்
றேதிலன்போல் போகின்றேன் யான். 285

     நளன், காடுறையும் தெய்வங்களை இப்படி வேண்டுகின்றான்; “கொடுமை உடையதான இக்கானத்தே கோயில் கொண்டிருக்கும் தெய்வங்களே! வீமராசனது இராசகுமாரியாகிய இவளை, என்பால் போக்காத காதலன்பிலே மிகுந்தவளைக், காரிருளிலே கைவிட்டு, அவளோடு எந்த உறவும் அற்ற ஒருவனேபோல யானும் போகின்றேன்; நீங்கள் அவளைக் குறிக்கொண்டு காப்பாற்றுவீராக.” (பிரியினும், அவள் துயருறாதவாறு காடுறை தெய்வங்களை உதவுமாறு வேண்டுகின்ற நளனின் தன்மையினாலே, பிரிதலால் அவன் அடைந்த மனவேதனை மிகுதியும் உணரப்படும்.)

வேறாகப் போயினான்

ஏந்தும் இளமுலையாள் இன்னுயிரும் தன்னருளும்
பூந்துகிலும் வேறாகப் போயினான் - தீந்தேன்
தொடைவிரவு நாள்மாலை சூட்டினாள் தன்னை
இடையிருளில் கானகத்தே இட்டு. 286

     இனிய தேனானது தொடுத்துள்ள பூக்கண்ணிகளினாலே விரவியிருக்கின்ற மணமாலையினைச் சுயம்வர நாளிலே தனக்குச் சுட்டியவளான தமயந்தியை, இரவின் இடைச் சாமத்து இருள் வேளையிலே காட்டிடத்தே தனியே உறங்கிக் கிடக்கவிட்டு, நிமிர்ந்த இளங் கொங்கைகளை உடையாளான அவளுடைய இனிதான உயிரும், தன்னுடைய அருட் குணமும், அழகிய ஆடையும் வேறுபட்டுப் பிரிந்து போகுமாறு, நளன், அப்போது அவ்விடம் விட்டு அகன்று நீங்கியும் போயினான்.

நகஞ் சிதையச் சென்றான்

தாருவெனப் பார்மேல் தருசந் திரன்சுவர்க்கி
மேருவரைத் தோளான் விரவார்போல் - கூரிருளில்
செங்கா னகஞ்சிதையைத் தேவியைவிட் டேகினான்
வெங்கா னகந்தனிலே வேந்து. 287

     வேந்தனாகிய மன்னனானவன், கற்பகத் தருவினைப் போல என்னும்படியாக இந்தப் புவியின் மேல் வழங்கிக் கொண்டிருக்கும் சந்திரன் சுவர்க்கி என்னும் மேருமலையை யொத்த திண்ணிய தோளுடையானது பகைவர்களைப் போல, மிக்க இருள் கவிந்துள்ள அவ்வேளையிலே, வெம்மை மிகுந்து அந்தக் கானகத்தினிடத்தே தன் மனைவியை விட்டு விட்டுத் தன் சிவந்த கால்களின் நகங்கள் கல்லிலும் முள்ளிலும் இடருண்டு சிதைவுபடுமாறு விரைவாக நடந்து செல்பவனாயினான். (தாரு - தருவென்பது முதல் நீண்டது; கற்பகத் தரு. ‘அகம் சிதைய’ எனவும் கொள்ளலாம்.)

11. துணையிழந்த தோகை

எங்குற்றாய் வேந்தே?

நீலம் அளவே நெகிழ நிரைமுத்தின்
கோல மலரின் கொடியிடையாள் - வேல்வேந்தே
எங்குற்றாய் என்னா இனவளைக்கை நீட்டினாள்
அங்குத்தான் காணா தயர்ந்து. 288

     மலர்களைக் கொண்ட இனிதான கொடியினைப் போன்ற நுண்ணிய இடையுடையாளான தமயந்தியானவள், கண் விழித்துப் படுத்திருந்த இடத்திலே நளனைக் காணாதவளாகித் தளர்ச்சியுற்று, வரிசையாக விளங்கும் முத்துக்களைப் போலக் கண்ணீர்த் துளிகள் நீலமலர் போன்ற கண்களின் அளவாக நிறைந்து நிறைந்து நிறைதற்கு இடமில்லாத நிலையிலே புறத்தும் வழிந்தோட, ‘வேல்வேந்தே! எங்கே சென்றாயோ?’ என்று கதறியவாறே, தொகுதியாக வளையல்கள் விளங்கும் தன் கைகளை நீட்டி நீட்டித் தரையைத் தடவித் தேடினாள்.

அரிந்த துகில் கண்டாள்

உடுத்த துகிலரிந்த தொண்டொடியாள் கண்டு
மடுத்த துயிலான் மறுகி - அடுத்தடுத்து
மன்னே யென அழைப்பாள் மற்றுமவ னைக்காணா
தென்னேயிஃ தென்னென் றெழுந்து. 289

     ஒள்ளிய தொடியணிந்தவளான தமயந்தியானவள், தன்னை ஆட்கொண்ட துயிலின் காரணமாக நளனது செயலை அறியாது போனவள், ஒன்றாய் உடுத்திருந்த துகிலினை அரிந்திருந்த அவன் செயலையும் அப்போது கையாலே தடவிக் கண்டாள். மனம் மிகவும் வருத்தம் உற்றாள்; அடுத்தடுத்து ‘மன்னவனே!’ என்று அழைத்தாள்; அழைத்தும் அவனை வரக் காணாது போகவே, ‘இஃது என்ன காரணமோ?’ என ஐயுற்றுக் கலங்கி எழுந்தாள்.

போய் வீழ்ந்தாள்

வெய்ய தரையென்னும் மெல்லமளி யைத்தடவிக்
கையரிக்கொண் டெவ்விடத்தும் காணாமல் - ஐயகோ
என்னப்போய் வீழ்ந்தாள் இனமேதி மென்கரும்பைத்
தின்னப்போம் நாடன் திரு. 290

     எருமை மாட்டு மந்தைகள் மென்மையான கரும்புகளைத் தின்னுதற் பொருட்டாகப் போகும் வளமான நாட்டிற்கு உரியவனாகிய வீமனின் செல்வமகளானவள், கொடியதான தரை எனப்படும் மெல்லிய அந்தப் படுக்கையைத் தடவிப் பார்த்தும், கைகளால் அலசிப் பார்த்தும், எவ்விடத்தும் நளனைக் காணாமையினாலே ‘ஐயகோ!’ என்று அலறிக் கொண்டே அப்பாற் போய்ச் சோர்ந்து வீழ்ந்தாள்.

வீழ்ந்த வீமன் கொடி

அழல்வெஞ் சிலைவேடன் அம்புருவ ஆற்றா
துழலுங் களிமயில்போல் ஓடிக் - குழல்வண்
டெழுந்தோட வீழ்ந்தாள் இருகுழைமேற் கண்ணீர்க்
கொழுந்தோட வீமன் கொடி. 291

     வீமராசனின் குலக்கொடியான தமயந்தியானவள், வேடனின் கொடிய வில்லினின்றும் எய்யப் பெற்ற கொடிய அம்பு தைத்து ஊடுருவ, அதற்கு ஆற்றாது கிடந்து துடிதுடிக்கும் இளையதோர் மயிலினைப் போல, அங்குமிங்கும் ஓடிக் கதறித் துடிதுடித்தாள். அதனால், கூந்தலிலே மொய்த்திருந்த வண்டுகள் அஞ்சி எழுந்து ஓடவும், இரு குழைகளின் மேலும் கண்ணீர்த் தாரைகள் வழிந்தோடவுமாகத், தரைமேல் சோர்ந்து வீழ்ந்து அழுவாளுமாயினாள்.

முகிலும் மின்னும்!

வான்முகிலும் மின்னும் வறுநிலத்து வீழ்ந்ததுபோல்
தானும் குழலும் தனிவீழ்ந்தாள் - ஏனம்
குளம்பான் மணிகிளைக்கும் குண்டுநீர் நாடன்
இளம்பாவை கைதலைமேல் இட்டு. 292

     பன்றிகள் தம் காற்குளம்புகளாலே மணிகளைக் கிளைத்துக் கொண்டிருக்கும் ஆழமான நீர்நிலைகளையுடைய நாட்டிற்கு உரியவனான வீமனின் இளைய பாவையானவள், தலைமேலாகத் தன் கைகளை வைத்துக் கொண்டவளாக, வானகத்து மேகமும் மின்னிற் கொடியும் வெறுந்தரையிலே ஒரு சேர வீழ்ந்ததைப் போலத், தானும் தன் கூந்தலும் ஒரு சேரச் சோர்ந்து போகத், தரையிலேயும் மயங்கி வீழ்ந்தனள்.

கூவின கோழிக் குலம்!

தையல் துயர்க்குத் தரியாது தம்சிறகாம்
கையால் வயிறலைத்துக் காரிருள்வாய் - வெய்யோனை
வாவுபரித் தேரேறி வாவென் றழைப்பனபோல்
கூவினவே கோழிக் குலம். 293

     கோழியினத்தைச் சேர்ந்த சேவல்கள், தமயந்தியின் துயரத்தினைக் கண்டு நிலைகொள்ளாவாயின! தம் சிறகுகளாம் கைகளாலே தம் வயிற்றிலே அறைந்து கொண்டும் வருந்தின. கருமையான இருள் நிலவிய அப்பொழுதிலே, வெய்யோனாகிய கதிரவனைத் தாவிச்செல்லும் குதிரைகள் பூட்டிய தன் தேரிலேறி வருக என்று அழைப்பன போல, அவை குரலெடுத்துக் கூவவும் தொடங்கின. (இரவின் கடையாமத்திலே சேவல்கள் கூவின என்பதனைப் புகழேந்தி இங்ஙனம் புனைந்து கூறுகின்றார்.)

நெறி காட்டுவான் போல!

வான நெடுவீதி செல்லும் மணித்தேரோன்
தான மடந்ததைக்குத் தார்வேந்தன் - போனநெறி
காட்டுவான் போலிருள்போய்க் கைவாங்கக் கானூடே
நீட்டுவான் செங்கரத்தை நின்று. 294

     வானமாகிய நீண்ட வீதியின் வழியாகச் செல்லுகின்ற அழகிய தேரோனாகிய கதிரவன், தான் வானத்தே நிலை பெற்றுத், தமயந்திக்கு மாலையணிந்த வேந்தனாகிய நளன்போன நெறியினைக் காட்டுபவனைப் போலாக, இருட் பொழுது கழிந்து போய்த் தன் முயற்சியை ஒடுக்கிக் கொள்ள, கானகத்தினூடேயும் ஒளிக்கதிர்களைச் சொரிவானாயினான். (கதிரவன், நளன் சென்ற திசையைத் தமயந்திக்குக் காட்டுபவனைப் போல வானில் உதயமாயினான் என்க.)

பலவாறு பேசுவாள்!

செய்தபிழை ஏதென்னும் தேர்வேந்தே என்றழைக்கும்
எய்துதுயர்க் கரைகா ணேனென்னும் - பையவே
என்னென்னா தென்னென்னும் இக்கானின் விட்டேகும்
மன்னென்னா வாடும் அயர்ந்து. 295

     (மேலும் தமயந்தியின் துன்பம் மிகுதியாயிற்று; நளனை முன்னிலைப்படுத்தி வினவுவாள் போலப் பல சொல்லிப் புலம்புகின்றாள்.) “நான் செய்த பிழை தான் ஏதோ?” என்பாள். “தேர் வேந்தனே” என்று அழைப்பாள். ‘என்னை அடைகின்ற துயரத்திற்கு ஒரு கரையினையும் யான் காணேனே?” என்பாள். “மெல்ல நின் வாய்திறந்து என்ன வென்று கூறாதிருப்பது தான் என்ன காரணமோ?” என்பாள். “இந்தக் கானகத்திலே கொணர்ந்து என்னை விட்டுப் பிரிந்து போகும் வேந்தே! அது தான் எதன் காரணமாகவோ?” என்று, மேலும் பேச்சற்று அயர்ந்து வாட்டம் அடைவாள். (சோகத்தின் மிகுதியினாலே, இவ்வாறு தமக்குத் தாமே பேசுவது இயல்பு. இவற்றால் தமயந்தி கொண்ட சோகத்தினது மிகுதியும் புலனாகும்.)

வெள்ளத்தே விழுந்தாள்!

அல்லியந்தார் மார்பன் அடித்தா மரையவள்தன்
நல்லுயிரும் ஆசையும்போல் நாறுதலும் - மல்லுறுதோள்
வேந்தனே என்று விழுந்தாள் விழிவேலை
சார்ந்த நீர் வெள்ளத்தே தான். 296

     அகவிதழ்களைக் கொண்ட பூவிதழ்களினாலே தொடுக்கப் பெற்ற மாலை விளங்கும் மார்பனான தன் கணவனின் தாமரை மலர் போன்ற அடிச்சுவடுகள், அவளுடைய நல்ல உயிரும், அவள் அவன் மேற் கொண்டிருந்த ஆசையும் போலத் தோன்றின. தோன்றலும், “மற்போர் சிறந்து தோளாற்றலையுடைய வேந்தனே!” என்று கதறியவாறே, அதன்மேல் விழுந்தாள். தன் கண்களாகிய கடலினின்றும் பெருகி வழிந்த கண்ணீர் வெள்ளத்திலே மூழ்கியவளாயும் கிடந்தாள்.

போனாரைக் காட்டுதிரோ?

வெறித்த இளமான்காள்! மென்மயில்காள்! இந்த
நெறிக்கண் நெடிதூழி வாழ்வீர் - பிறித்தெம்மைப்
போனாரைக் காட்டுதிரோ என்னாப் புலம்பினாள்
வானாடர் பெற்றிலா மான். 297

     வான நாட்டவர்களுக்கும் பெறுவதற்கு இயலாதுபோன மான் போன்றவளான தமயந்தியானவள், அக் கானிலே தன் கண்ணெதிர்ப்பட்ட மான் மயில் முதலியவற்றை எல்லாம் நோக்கிப் புலம்பத் தொடங்கினாள். “என்னைக் கண்டு அச்சங்கொண்டு செல்லும் இளமான்களே! மென் தன்மை கொண்ட மயில்களே! இந்த வழியிடையிலேயே நீவிர் நெடி தூழி காலம் வாழ்வீராக! எம்மைப் பிரிந்து சென்றவரை எமக்குக் காட்ட மாட்டீர்களோ?” என்று விளித்துப் புலம்பினாள். (வெறித்த - வெருண்ட)

அரவு அருகணைந்தாள்!

வேட்ட கரியை விழுங்கிப் பெரும்பசியால்
மோட்டு வயிற்றரவு முன்தோன்ற - மீட்டதனை
ஓரா தருகணைந்தாள் உண்தேன் அறற்கூந்தல்
போரார் விழியாள் புலர்ந்து. 298

     வண்டினம் உண்ணுவதற்குரிய தேன் பொருந்திய மலரணிந்தும் அறல்பட்டும் விளங்கும் கூந்தலை உடையவளும், காதளவும் ஓடிப் பொருதும் விழிகளை உடையவளுமான தமயந்தியானவள், மேலும் வாட்டங் கொண்டவளாயினாள். அளவு கடந்த பெரும் பசியினாலே, தான் விரும்பிய யானையைப் பிடித்து விழுங்கி, அதனால் உயர்ந்திருக்கின்ற வயிற்றினையுடைய ஒரு மலைப் பாம்பானது தன் முன்னே தோன்றவும், மீளவும் அதன் இயல்பினை அறிந்து உணராது மயங்கியவளாக, அதனருகே சென்று அடைந்தாள்.

பாம்பு விழுங்கியது!

அங்கண் விசும்பின் அவிர்மதிமேல் சென்றடையும்
வெங்கண் அரவுபோல் மெல்லியலைக் - கொங்கைக்கு
மேலெல்லாம் தோன்ற விழுங்கியதே வெங்கானின்
பாலெல்லாம் தீயுமிழும் பாம்பு. 299

     அழகிய இடத்தை உடையதான வானத்திடத்தேயுள்ள ஒளிரும் நிலவின் மேலாக, அதனை விழுங்கும் பொருட்டாகச் சென்று சேரும் கொடிய கண்களையுடைய இராகு என்னும் பாம்பினைப் போல, வெம்மையுடைய அந்தக் கானகத்திடமெல்லாம் நஞ்சாகிய நெருப்பைக் கக்கிக் கொண்டிருந்த அந்தப் பாம்பானது, மெல்லியலான தமயந்தியைக் கொங்கைகட்கு மேற்பட்ட உடற்பகுதியெல்லாம் வெளியே தோன்றும்படியாக, அந்த அளவுக்குப் பற்றி விழுங்கிற்று.

‘விலக்காயோ?’ என்று அழுதாள்

வாளரவின் வாய்ப்பட்டு மாயாமுன் மன்னவநின்
தாளடைந்து வாழும் தமியேனைத் - தோளால்
விலக்காயோ என்றழுதாள் வெவ்வரவின் வாய்க்கிங்
கிலக்காகி என்றாள் எடுத்து. 300

     அக் காட்டிலே, அக்கொடிய பாம்பின் வாய்க்கு இலக்காகி முடிந்த தமயந்தியானவள், “மன்னவனே! கொடிய இந்தப் பாம்பின் வாயிடையே பட்டு இறந்து போவதற்கு முன்பாக, நின் திருவடிகளையே தஞ்சமாக அடைந்து வாழ்கின்றவளாகிய என்னை, நின் கொள்வலிமையினாலே தடுத்துக் காப்பாற்றி, இத் தீமையை நீக்க மாட்டாயோ?” என்றும் நளனைக் கூவியழைத்து அழுதாள்.


நளவெண்பா : 1    2    3    4    5    6    7    8    9   



புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247