புகழேந்திப் புலவர்

இயற்றிய

நளவெண்பா

தெளிவுரை: புலியூர்க் கேசிகன்

... தொடர்ச்சி ...

கடற்கரை கண்டான்

நினைப்பென்னும் காற்றசைப்ப நெஞ்சிடையே மூளும்
கனற்புகைய வேகின்றான் கண்டான் - பனிக்குருகு
தண்படாம் நீழல் தனிப்பேடைப் பார்த்திரவு
கண்படா வேலைக் கரை. 351

     சிந்தையிலே எழும் நினைவுகள் என்னும் சுழல் காற்றானது தன்னை அலைக்கழிப்ப, அதனால் அந் நெஞ்சிடத்தே மூளும் துயரக் கனலும் புகையத் தொடங்க, அதனால் வேகின்ற தன்மையாளனாகச் சென்று கொண்டிருந்த நளன், அஞ்சும் இயல்புடைய பறவையானது குளிர்ச்சியான பெருங்கொடியினது நிழலிலே தனித்திருக்கும் தன் பெண் பறவையினைப் பார்த்து, இரவு முழுவதும் கண்மூடாது காத்திருக்கும் கடற்கரையினைக் கண்டான்.

     (தன் பெடை உறங்குமாறு காவலிருக்கும் ஆண் பறவையைக் கண்ட நளன், தமயந்தியை இருளில் கானகத்தே கைவிட்டுப் பிரிந்த தன் கொடுஞ்செயலை நினைவிற் கொண்டு வருந்தினான் என்பதாம்.)

குருகே கூறாது இருத்தியால்

கொம்பர் இளங்குருகே கூறா திருத்தியால்
அம்புயத்தின் போதை யறுகாலால் - தும்பி
திறக்கத்தே னூறுந் திருநாடன் பொன்னை
உறக்கத்தே நீத்தேனுக் கொன்று. 352

     மரக்கொம்பின் மேலாக இருக்கும் இளமைப் பருவத்துப் பறவையே! தாமரையின் முகையினைத் தன் ஆறுகால்களினாலே வண்டு திறக்க, அதனின்றும் தேன்வழியும் சிறந்த விதர்ப்ப நாட்டு அரசனின் திருமகளை, உறக்கத்தே கைவிட்டுப் பிரிந்த எனக்கு, நீயும் எதுவும் ஆறுதல் கூறாது இருக்கின்றன போலும்! (பிரிவுத் துயரினாலே நளன் இவ்வாறெல்லாம் விளித்துப் புலம்புகின்றான்.)

ஆவி அழிந்தான்

புன்னை நறுந்தாது கோதிப் பொறிவண்டு
கன்னிப் பெடையுண்ணக் காத்திருக்கும் - இன்னருள்கண்
டஞ்சினா னாவி யழிந்தான் அறவுயிர்த்து
நெஞ்சினால் எல்லாம் நினைந்து. 353

     புன்னையின் மணமுள்ள பூந்தாதினைக் கோதிப் புள்ளிகளையுடைய ஆண் வண்டானது, தன் காதலியிடம் அழகிய பெண் வண்டு உண்ணுதற்குக் காத்திருக்கின்ற, இனிதான அருள் நோக்கத்தைக் கண்டான். தன் பழிச்செயலுக்கு அஞ்சினவனாக, மிகவும் பெருமூச்செறிந்தவாறே, தன் உள்ளத்திலே தான் செய்தவைகளை எல்லாம் நினைத்து, தன் உயிர் சோரப் பெற்றான் நளன்.

நண்டே சொல்வாய்!

காதலியைக் காரிருளிற் கானகத்தே கைவிட்ட
பாதகனைப் பார்க்கப் படாதென்றோ-நாதம்
அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவ ஓடி
ஒளிக்கின்ற தென்னோ உரை. 354

     “நண்டே! தன் காதலியை மிக்க இருளிலே காட்டிடையே கைவிட்டு வந்த பாதகனாகிய என்னைப் பார்க்கவும் கூடாதென்றோ, ஒலியினை அளிக்கிற கடலிடத்தே நீ ஓடி ஒளிகின்றனை! அன்றி, அஃது எதனாலோவென்று எனக்குச் சொல்வாயாக?” (அலவன் - நண்டு. நாதம் - ஒலி. ஆழி - கடல். பாதகச் செயலைச் செய்தவன் பாதகன். நண்டினை விளித்து நளன் இப்படிப் புலம்புகிறான்.)

என்ன நினைப்பாள்?

பானலே சோலைப் பசுந்தென்றல் வந்துலவும்
கானலே வேலைக் கழிக்குருகே - யானுடைய
மின்னிமைக்கும் பூணாரம் வீங்கிருள்வா யாங்குணர்ந்தால்
என்னினைக்குஞ் சொல்வீர் எனக்கு. 355

     “நீலோற்பல மலர்களே! சோலையிடத்துப் பசுமையான தென்றல் வந்து உலவுகின்ற கழிக்கானலே! கடலைச் சேர்ந்த கழியிடத்தே இருக்கும் நாரையே! யான் மனைவியாகவுடைய, மின்போல ஒளிரும் பூணுதற்குரிய மாலையினை உடையவளான அவள், மிகுதியான இருள் நடுவே துயில் உணர்ந்தாளானால், என்னைப் பற்றி என்ன நினைப்பாள்? அதையேனும் எனக்குச் சொல்வீராக.”

இரவகற்றி வந்தாய் கொல்?

போவாய் வருவாய் புரண்டு விழுந்திரங்கி
நாவாய் குழற நடுங்குறுவாய் - தீவாய்
அரவகற்றும் என்போல ஆர்கடலே மாதை
இரவகற்றி வந்தாய்கொல் இன்று. 356

     ஒலிக்கும் ஆரவாரத்தையுடைய கடலே! போகின்றாய்; மீளவும் வருகின்றாய்; புரண்டு விழுந்து ஒலியுடனே நாவாய்களும் கவிழுமாறு நடுக்கமுறுகின்றாய்? நெருப்பினின்றும் பாம்பினை அகற்றிக் காத்த என் போலவே, நீயும் நின் மனைவியை இரவிலே விட்டு நீங்கி இன்று வந்துள்ளனை போலும்! (தன் நிலைக்குக் கடலின் குமுறலான அலைக்கழிவை ஒப்பிட்டுப் பேசுகிறான் நளன். நாவாய் - கலம்; நாவும் வாயும்.)

முறுவள் திரள்!

முந்நீர் மடவார் முறுவல் திரள்குவிப்ப
நன்னீர் அயோத்தி நகரடைந்தான் - பொன்னீர்
முருகுடைக்குந் தாமரையின் மொய்ம்மலரைத் தும்பி
அருகுடைக்கும் நன்னாட் டரசு. 357

     பொன்னின் தன்மையுடைய அழகினையும் உடைந்து போகச் செய்யும் தாமரையின் செழுமையான பூவினை, வண்டுகள் அணுகிச் சென்று கட்டவிழ உடைக்கும் நலமிக்க நிடத நாட்டு அரசனான நளன், கடற்கரைப் பாக்கத்துப் பெண்கள் சிரிப்பொலியினைத் திரளாகக் குவித்துத் தன்னை வரவேற்கக் கடற்கரை வழியே நடந்து சென்று, நல்ல நீர் வளத்தினை உடைய அயோத்தி நகரினைச் சென்றும் சேர்ந்தான். (அவர்கள் சிரித்தது நளனின் அழகற்று குறுகிப் போன உடலினைக் கண்டதனால் என்க.)

வரவு உரைமின்

மான்தேர்த் தொழிற்கு மடைத்தொழிற்கும் மிக்கோனென்று
ஊன்தேய்க்கும் வேலான் உயர்நறவத் - தேன்தோய்க்கும்
தார்வேந்தற் கென்வரவு தானுரைமின் என்றுரைத்தான்
தேர்வேந்தன் வாகுவனாய்ச் சென்று. 358

     தேர்வேந்தனான நளன், வாகுவனாக அயோத்தி அரசனின் அரண்மனைக்குச் சென்று, “குதிரைகள் பூட்டிய தேர்த்தொழிற்கும், மடைப்பள்ளித் தொழிற்கும் சிறந்தவன் யான். பகைவர் உடலின் ஊனைச் சிதைத்தழிக்கும் வேலினனான, உயரிய மணமுள்ள தேனிலே தோய்ந்திருப்பது போல விளங்கும் தாரினையுடைய, நும் வேந்தனுக்கு என் வருகையினைச் சென்று சொல்வீராக” என்று, காவலரிடம் சொன்னான்.

அரசன்முன் சென்றான்

அம்மொழியைத் தூதர் அரசற்கு அறிவிக்கச்
செம்மொழியாத் தேர்ந்ததனைச் சிந்தித்தே - இம்மொழிக்குத்
தக்கானை இங்கே தருமி னெனவுரைக்க
மிக்கானும் சென்றான் விரைந்து. 359

     வாயிலாளர்கள் சென்று அந்தச் சொற்களைத் தம் அரசனுக்கு அறிவித்தனர். அரசனும் அதனைப் பற்றிச் சிந்தித்துச் செம்மையான பேச்சாகவே அதனைத் தெளிந்தவனாக, “இச்சொற்களுக்குத் தகுதியுடையவனை இவ்விடத்தே இட்டுத் தாருங்கள்” என்று சொல்லவும், அவற்றில் சிறந்தோனாகிய நளனும், அம் மன்னனின் திருமுன்னர் விரைந்து சென்று நின்றான்.

அயோத்தி மன்னனின் வினா

பொய்யடையாச் சிந்தைப் புரவலனை நோக்கித்தன்
செய்ய முகமலர்ந்து தேர்வேந்தன் - ஐயாநீ
எத்தொழிற்கு மிக்கானீ யாதுன் பெயரென்றான்
கைத்தொழிற்கு மிக்கானைக் கண்டு. 360

     தேர்வேந்தனான அயோத்தி மன்னன், கைவினையாகிய தொழிலிலே சிறந்தோனாகிய வாகுவனைக் கண்டான். பொய்ம்மை சென்று சேராத உள்ளத்தானாகிய அப்புரவலனான நளனை நோக்கித் தன் செவ்விய முகம் மலர்ச்சி கொண்டவனானான். “ஐயா! நீ எத்தொழிற்குச் சிறந்தவன்? நின் பெயர் யாது?” என்றும் வினவினான். (கைத்தொழில் - மேன்மையான தொழிலும் ஆம்; அதனைச் செங்கோலாட்சி எனவும் கொள்ளலாம்.)

வல்லவன் யான்

அன்னம் மிதிப்ப அலர்வழியும் தேறல்போய்ச்
செந்நெல் விளைக்குந் திருநாடர்- மன்னா
மடைத்தொழிலும் தேர்த்தொழிலும் வல்லன்யான் என்றான்
கொடைத்தொழிலின் மிக்கான் குறித்து. 361

     ஈகையிலே சிறந்தோனாகிய நளன், தன்னைக் குறித்து, “அன்னம் மிதிப்பதனாலே மலர்கின்ற தாமரை மலர்களினின்றும் வழியும் தேனானது பாய்ந்து செந்நெல்லை விளைவிக்கின்ற செல்வமிக்க நாட்டினரின் மன்னவனே! மடைத் தொழிலிலும் தேர்த் தொழிலிலும் வல்லன் யான்” என்றான். (இங்ஙனமே அவ்விரு தொழிலுக்கும் உரியோனாக அவன் நியமிக்கப் பெற்றான் என்க.)

3. தேடிய மறையோன்

வேந்தனை நாடுக

என்னை இருங்கானில் நீத்த இகல்வேந்தன்
தன்னைநீ நாடுகெனத் தண்கோதை - மின்னுப்
புரைகதிர்வேல் வேந்தன் புரோகிதனுக் கிந்த
உரைபகர்வ தானாள் உணர்ந்து. 362

     தண்மையான மாலையினைச் சூடிய தமயந்தியானவள், தன்னைக் கவிந்திருந்த துயரத்தினின்றும் சற்றே தெளிவடைந்தாள். மின்னலை ஒத்து ஒளிசிதறும் வேல்வேந்தனான வீமராசனின் புரோகிதனுக்கு, “என்னைப் பெரிதான கானகத்திலே கைவிட்டுப் பிரிந்து மனமாறிய வேந்தனை, நீ தேடிச் சென்று அறிவாயாக” என்று, இவ்வாறான ஒரு பேச்சினைச் சொல்வதானாள். (இகல் - மாறுபாடு; நளன் தன்னை நீத்தது ஏதோ மனமாறுபாடு கொண்டு என்று தமயந்தி கருதுகிறாள்.)

அறியும் வகை

காரிருளில் பாழ்மண் டபத்தேதன் காதலியைச்
சோர்துயிலின் நீத்தல் துணிவன்றோ - தேர்வேந்தற்
கென்றறைந்தால் நேர்நின் றெதிர்மாற்றம் தந்தாரைச்
சென்றறிந்து வாவென்றாள் தேர்ந்து. 363

     “‘கருமையான இருளிலே, பாழும் மண்டபத்திலே, தன் காதலியை, அவன் தளர்ந்து உறங்கியிருக்கும் போது கைவிட்டுப் பிரிதல் தேர்வேந்தனுக்குத் துணிவான செயலல்லவோ?’ என்று சொன்னால், அதனைக் கேட்டு நின் எதிரே நின்று மறுமொழி தந்தவரைச் சென்று அறிந்து வருவாயாக” என்று, தமயந்தி நளனை அறியும் உபாயத்தையும் ஆராய்ந்து, அந்தப் புரோகிதனிடம் கூறினாள்.

அயோத்தி அடைந்தான்

மின்னாடும் மால்வரையும் வேலையும் வேலைசூழ்
நன்னாடும் கானகமும் நாடினான் - மன்னு
கடந்தாழ் களியானைக் காவலனைத் தேடி
அடைந்தான் அயோத்தி நகர். 364

     மின்னல் தவழ்கின்ற பெரிய மலைமுகடுகளும், கடல்களும், கடல்கள் சூழ்ந்த நல்ல நாடுகளும், காடுகளும் எல்லாம், அந்தப் புரோகிதனும், நிலைபெற்ற மதநீர் ஒழுக்கு உடைய களிப்பு பொருந்திய யானைப்படையினை உடையவனாயிருந்த காவலனான நளனைத் தேடிச் சென்றான். முடிவில், அயோத்தி நகரினையும் சென்று அடைந்தான்.

வந்தான் எதிர்

கானகத்துக் காதலியைக் காரிருளிற் கைவிட்டுப்
போனதுவும் வேந்தற்குப் போதுமோ - தானென்று
சாற்றினான் அந்தவுரை தார்வேந்தன் தன்செவியில்
ஏற்றினான் வந்தான் எதிர். 365

     “காட்டிடத்தே, தன் காதலியைக் கருமையான இருட்போதிலே கைவிட்டுப் போன செயலும், வேந்தனாகியவனுக்குப் பொருந்துவதாகுமோ?” என்று, புரோகிதன் அயோத்தி வேந்தனின் அவையிலும் சென்று கேட்டான். அந்தச் சொற்களைத் தார்வேந்தனான நளனும் தன் காதுகளினாலே கேட்டான்; அந்தப் புரோகிதனுக்கு முன்பாகவும் வந்தான்.

விதியின் பயனே!

ஒண்டொடி தன்னை உறக்கத்தே நீத்ததுவும்
பண்டை விதியின் பயனேகாண் - தண்டரளப்
பூத்தாம வெண்குடையான் பொன்மகளை வெவ்வனத்தே
நீத்தான்என் றையுறேல் நீ. 366

     “ஒள்ளிய தொடியணிந்தவளை உறக்கத்திலே விட்டுப் பிரிந்ததுவும் பண்டை விதியின் பயனாக நிகழ்ந்ததே என்று நீ அறிவாயாக. குளிர்ச்சியான முத்துக்களின் அழகிய மாலைகள் தொங்கும் வெண்கொற்றக் குடையுடையவனின் திருமகளை, வெம்மையான காட்டினிடத்தே, அவனாகவே மனம் மாறுபாடு கொண்டு கைவிட்டுச் சென்றான் என்று மட்டும் நீ ஐயங் கொள்ளாதே” என்றான் நளன்.

தலைப்பட்டவாறு உண்டோ?

எங்க ணுறைந்தனைகொல் எத்திசைபோய் நாடினைகொல்
கங்கைவள நாட்டார்தங் காவலனை - அங்குத்
தலைப்பட்ட வாறுண்டோ சாற்றென்றாள் கண்ணீர்
அலைப்பட்ட கொங்கையா ளாங்கு. 367

     அங்ஙனம் உரைத்த எதிர்மாற்றத்தைக் கேட்ட புரோகிதன், நேராகத் தமயந்தியிடம் திரும்பி விட்டான். அவனைக் கண்ட அவள் - கண்ணீர் அலையலையாகப் பட்டிக்கும் மார்பகங்களை உடையவள் - அவ்விடத்தே அவனை நோக்கி, “எவ்விடமெல்லாம் தங்கினாய்? எத்திசை எல்லாம் கங்கைவள நாட்டாரின் காவலனைச் சென்று தேடினாய்? அவ்விடத்தே எங்காவது அவனைச் சந்தித்ததுண்டோ? சொல்வாயாக” என்றாள்.

புரோகிதன் உரைத்தது

வாக்கினால் மன்னவனை ஒப்பான் மதித்தொருகால்
ஆக்கையே நோக்கின் அவனல்லன் - பூக்கமழும்
கூந்தலாய் மற்றக் குலப்பாகன் என்றுரைத்தான்
ஏந்துநூல் மார்பன் எடுத்து. 368

     பூணூல் தங்கிய மார்பனான அப்புரோகிதன், “மலர் மணம் கமழும் கூந்தலை உடையவளே! வாக்கினாலே நம் மன்னவனைப் போன்றோனாகவே உள்ளான்! மீண்டும் ஒரு முறை அவன் உடலினைப் பார்த்தோமானால், நம் மன்னவன் அல்லன். எனக்கு விடை சொன்ன அந்தச் சிறந்த தேர்ப்பாகன்” என்று எடுத்து உரைத்தான். (குரலும் பேச்சும் நளனாகத் தோன்றுகிறது; ஆனால் உருவம் மாறுபட்டிருக்கின்றது என்று தான் கண்டறிந்ததைப் புரோகிதன் சொன்னான்.)

4. இரண்டாம் சுயம்வரம்

மீண்டோர் சுயம்வரம்

மீண்டோர் சுயம்வரத்தை வீமன் திருமடந்தை
பூண்டாளென் றந்தணநீ போயுரைத்தால் - நீண்ட
கொடைவேந்தற் கித்தூரம் தேர்க்கோலம் கொள்வான்
படைவேந்தன் என்றாள் பரிந்து. 369

     புரோகிதன் உரைத்ததைக் கேட்ட தமயந்தி, “அந்தண! ‘வீமன் திருமகள் மீண்டும் ஒரு சுயம்வரத்தினை மேற்கொண்டாள்’ என்று நீ போய் அயோத்தியிற் சொன்னால், மிகுந்த கொடைச் சிறப்புடைய அம் மன்னவனுக்கு, இவ்வூர்வரையும் நம் படைவேந்தன் தேர்க்கோலம் கொள்வான்” என்று, தன் காதலன்பால் அன்பு கொண்டவளாகி, அவனிடம் சொல்லிச் சொல்ல விடுத்தாள். (வாகுவனைப் பற்றிய உண்மையினை அறிவதற்குத் தமயந்தி செய்த சூழ்ச்சி இது.)

நாளை சுயம்வரம்

எங்கோன மகளுக் கிரண்டாஞ் சுயம்வரமென்
றங்கோர் முரசம் அறைவித்தான் - செங்கோலாய்
அந்நாளும் நாளை யளவென்றான் அந்தணன்போய்த்
தென்னாளுந் தாரானைச் சேர்ந்து. 370

     தமயந்தி சொன்னபடியே அந்தப் புரோகிதனும் மீண்டும் அயோத்தி நோக்கிச் சென்றான். அழகு ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற தாரணிந்தவனாகிய அயோத்தி மன்னனையும் அடைந்தான். “செங்கோன்மையாளனே! எம் கோமானின் மகளுக்கு இரண்டாவது சுயம்வரம், என்று அவ்விடத்தே ஒப்பற்ற முரசம் அறைவித்துள்ளான். அச் சுயம்வர நாளும் நாளை அளவிலே நடைபெறவிருக்கின்றது” என்று சொன்னான். (அந்த நாளிலே இப்படி இரண்டாம் சுயம்வரம் நடப்பதும் வடபுல வழக்கமாக இருந்திருத்தல் வேண்டும். இல்லை என்றால் அதனை அயோத்தி மன்னன் உண்மையெனக் கொள்ளுவதும், உடனே வீமனின் நகர் நோக்கி அதற்காகப் புறப்படுவதும் பொருந்தாததாகும். ஆனால், தமயந்தி அதனைச் சூழ்ச்சியாகவே கொண்டனள் என்பதனையும் மறத்தல் கூடாது. அவளைப் பெற்றவர் ஏற்பாடல்ல இது என்பதையும் நாம் கருத வேண்டும். தென் - அழகு)

என் செய்தோம்?

வேத மொழிவாணன் மீண்டும் சுயம்வரத்தைக்
காதலித்தாள் வீமன்றன் காதலியென் - றோதினான்
என்செய்கோ மற்றிதனுக் கென்றான் இகல்சீறும்
மின்செய்த வேலான் விரைந்து. 371

     “வேத மொழிகளிலே வல்லவனான இந்தப் புரோகிதன் வந்து, ‘வீமராசனது அன்பிற்குரிய மகளான தமயந்தி மீண்டும் சுயம்வரத்தை விரும்பினாள்’ என்று சொன்னான். இதற்கு நாம் என்ன செய்வோம்?” என்று பகைவரைச் சினந்து அழிக்கின்ற மின்னல்போல ஒளிசெய்யும் வேற்படையினனான அந்த அயோத்தி மன்னன், அந்திப் பொழுதிலேயே நளனிடம் கேட்டான். (நாளை சுயம்வரம் என்றதனால், எப்படிப் போய்ச் சேருவதென்பது குறித்துத் தன் தேர்ப்பாகனாக இருந்த நளனிடத்தே அயோத்தி ராசன் கேட்டான் என்று கொள்க.)

சொல்லப்படுமோ?

குறையாத கற்பினாள் கொண்டானுக் கல்லால்
இறவாத வேந்திழையாள் இன்று - பறிபீறி
நெல்லிற் பருவரால் ஓடும் நெடுநாடா
சொல்லப் படுமோவிச் சொல். 372

     “மீன் பிடிப்பவர் இட்டு வைத்துள்ள பறியினைக் கிழித்துக் கொண்டு, பருத்த வரால்மீன்கள் நெற்பயிரிடையே ஓடுகின்ற பெரிய நாட்டிற்கு உரியவனே! குறைவு எதுவுமில்லாத கற்பினை உடையவள், தன்னைக் கொண்டவனுக்கு அல்லாமல் பிறனிடத்தே தன் மனத்தை செலுத்தாத ஏந்திழையாள், அந்தத் தமயந்தி! அவள், இந்நாள் இத்தகைய சொல்லினைச் சொல்லுதலும் கூடுமோ?” என்று, நளன் அரசனுக்குத் தன் கருத்தைக் கூறினான். (தமயந்தி அவ்வாறு கூறியிருக்கவே மாட்டாள் என்பதே நளனின் கருத்தாதலை அறிக. பறி - மீன் பிடிக்கும் குடலை போன்ற ஒரு சாதனம்.)

என் மேல் எறிகின்ற மாலை!

என்மேல் எறிகின்ற மாலை எழில்நளன்தன்
தன்மேல் விழுந்ததுகாண் முன்னாளில்-அன்னதற்குக்
காரணந்தான் ஈதன்றோ வென்றான் கடாஞ்சொரியும்
வாரணந்தான் அன்னான் மறித்து. 373

     மத நீரினைச் சொரிகின்ற யானையைப் போன்றவனான அயோத்தி மன்னன், புரோகிதனின் சொற்களை வாய்மை எனவே மதித்தான். “முன்னர்ச் சுயம்வரம் நடந்த நாளிலே அவள் என் மேல் எறிந்த பூமாலை, தவறிப் போய் எழிலுடைய நளனது மேலாக விழுந்து விட்டது என்பதனை நீ அறிவாயாக. அங்ஙனம் பிழைபட நேர்ந்ததற்குக் காரணந்தான் இத்தகைய இரண்டாம் சுயம்வரம் அல்லவோ?” என்று அயோத்தி அரசன், தன் முடிபையும் நளனுக்குத் தெரிவித்தான்.

நளனின் கலக்கம்

முன்னே வினையான் முடிந்ததோ மொய்குழலாள்
என்னைத்தான் காண விசைந்ததோ - தன்மரபுக்
கொவ்வாத வார்த்தை யுலகத் துரைப்பட்ட
தெவ்வாறு கொல்லோ விது? 374

     “முன் செய்த தீவினையின் காரணமாக எல்லாமே இங்ஙனம் வந்து நிறைவேறுவதாயிற்றோ? அல்லது, வண்டினம் மொய்க்கும் கூந்தலுடையாள், என்னைத்தான் கண்டு பிடிப்பதற்காக இங்ஙனம் செய்கின்றனளோ? குலமரபுக்குப் பொருந்தாத பேச்சு உலகத்திலே இந்நாளிற் சொல்லப்பட்டு விட்டதே? இது எவ்வகையினாலே ஏற்பட்டதோ?”

     (மொய் குழல் - நெருங்கிய கூந்தலும் ஆம். ‘உலகில் பொருந்தாத சொல்லாக இரண்டாம் சுயம்வரம் என்றதொரு பேச்சும் எழலாயிற்றே’ என, நளன் எண்ணி வருந்துகின்றான்.)

கடமை உணர்ந்தான்

காவலனுக் கேவற் கடன்பூண்டேன் மற்றவன்றன்
ஏவன் முடிப்பன் இனியென்று - மாவிற்
குலத்தேரைப் பூட்டினான் கோதையர்தங் கொங்கை
மலர்த்தேன் அளிக்குந்தார் மன். 375

     “இந்த அரசனுக்கு ஏவலானதொரு கடமையினை யான் மேற்கொண்டேன். அதனால், அவன் ஏவலையே இனி நிறைவேற்றுவேன்” என்று மனந்தேறியவனாக, பெண்களுடைய மார்பகங்களிலே தன் தாரினின்றும் பூந்தேன் துளித்து விழும்படியான தாரினைப் பூண்டவனாகிய நளமன்னன், நல்ல சாதிக் குதிரைகளோடு, தேரினையும் புறப்படுவதற்கு ஆயத்தமாகப் பூட்டிக் கொணர்ந்து, தன் அரசனின் முன்பாக நிறுத்தினான்.

5. தேர் சென்ற சிறப்பு!

தேர் ஏறுக!

ஒற்றைத் தனியாழித் தேரென்ன ஓடுவதோர்
கொற்ற நெடுந்தேர் கொடுவந்தேன் - மற்றிதற்கே
போந்தேறு கொன்றுரைத்தான் பொம்மென் றளிமுரலத்
தீந்தேறல் வாக்குந்தார்ச் சேய். 376

     “பொம்” என்னும் ஒலியோடு வண்டினம் ஒலி செய்ய, இனிதான தேறலை ஒழுக்கிக் கொண்டிருக்கிற தாரினை அணிந்தோனான நளன், ‘ஒன்றாகிய ஒப்பற்ற சக்கரத்தை உடையதான கதிரவனின் தேர்’ என்றாற்போல, விரைந்து ஓடத்தக்கதொரு வெற்றி பொருந்திய உயர்ந்த தேரினைப் பூட்டிக் கொண்டு வந்துள்ளேன்; இதனிடத்தே தாமும் ஏறியமர்க” என்று, அயோத்தி மன்னனிடத்தே வந்து கூறினான்.

சிந்தையிலும் கடுகச் சென்றது

முந்தை வினைகுறுக மூவா மயல்கொண்டான்
சிந்தை யினுங்கடுகச் சென்றதே - சந்தவிரைத்
தார்குன்றா மெல்லோதி தன்செயலைத் தன்மனத்தே
தேர்கின்றான் ஊர்கின்ற தேர். 377

     அழகும் மணமும் உள்ள மாலைகளிற் குறையாத, மென்மையான கூந்தலையுடையவளான தமயந்தியின் செயலினைத் தன் உள்ளத்தே ஆராய்கின்ற நளன் செலுத்திய அந்தத் தேரானது, தன் பழவினை வந்து நெருக்கினதனாலே, தமயந்தியின் மீது தேயாத மையல் கொண்ட அயோத்தி மன்னனின் சிந்தையைக் காட்டினும் விரைவாகவே சென்று கொண்டிருந்தது. (இருதுபர்ணன் என்பது அயோத்தி மன்னனின் பெயர், அவன் மையல் கொண்டது வினைப்பயன் என்றார். பிறர் மனைவியின் பால் மையல் கொண்ட தன்மை பற்றியும், அவன் பின்னர் அடையப் போகும் ஏமாற்றத்தைக் கருதியும் இவ்வாறு சொல்லினார்.)

வீழ்ந்தது எடு!

மேலாடை வீழ்ந்த தெடுவென்றான் அவ்வளவில்
நாலாறு காதம் நடந்ததே - தோலாமை
மேல்கொண்டான் ஏறிவர வெம்மைக் கலிச்சூதில்
மால்கொண்டான் கோல்கொண்ட மா. 378

     பகைவர்க்கு தோல்வி உறாமையினையே மேற்கொண்டு விளங்குபவனாகிய அயோத்திராசன், அவ்வாறு தேரேறி வருகையிலே, “என் மேலாடை வீழ்ந்து விட்டது; அதனை எடுக்க” என்றான். அப்படிச் சொல்வதற்குள், வெம்மையாளனான கலியின் சூதினாலே மயக்கம் கொண்ட நளன், கோல் கைக்கொண்டு செலுத்திய குதிரைகள், நாலாறு காத தூரத்தினைக் கடந்துவிட்டன. (தேர் சென்ற விரைவு இவ்வாறு கூறப்பெற்றது. தேர்த் தொழிலிலே வல்லவன் நளன் என்பதனையும் கவி இவ்வாறு புனைந்து காட்டுகின்றார்.)

எண்ணிப்பார்

இத்தாழ் பணையில் இருந்தான்றிக் காயெண்ணில்
பத்தா யிரங்கோடி பாரென்ன - உய்த்ததனில்
தேர்நிறுத்தி எண்ணினான் தேவர் சபைநடுவே
தார்நிறுத்துந் தோள்வேந்தன் தான். 379

     தேர் அவ்வாறு மிக வேகத்துடனே சென்று கொண்டிருந்தது. அப்போது “தாழ்ந்த இடமாகவுள்ள இந்தத் தோட்டத்திலே இருக்கும் பெரிய தான்றிக் காய்களை எண்ணினால், அவை பத்தாயிரம் கோடியாகும். நீ சோதித்துப் பார்” என்றான் அயோத்தி மன்னன். தேவர்கள் கூடியிருந்த சுயம்வர அவையின் நடுவே, தமயந்தியின் மணமாலையினைத் தானே தாங்கிக் கொண்ட தோள்களையுடைய வேந்தனான நளனும், அவ்வாறே தேரை நிறுத்தி, உய்த்து எண்ணிப் பார்த்து, அத்தொகை சரியாயிருக்கவும் கண்டான்.

தொழில் மாற்றுதியோ?

ஏரடிப்பார் கோலெடுப்ப இன்தேன் தொடைபீறிக்
காரடுத்த சோலைக் கடனாடன் - தேரடுத்த
மாத்தொழிலும் இத்தொழிலும் மாற்றுதியோ என்றுரைத்தான்
தேர்தொழிலின் மிக்கானைத் தேர்ந்து. 380

     ஏரடிக்கும் உழவர்கள் தம் கைக்கோலை உயர எடுக்கையிலே இனிதான தேன் பூங்கொத்துக்களைப் பீறிக் கொண்டு ஒழுகும், மேகங்கள் தவழ்கின்ற சோலைகளையுடைய கடற்கரை நாட்டிற்கு உரியவனான அயோத்தி மன்னன், தேர் செலுத்தும் தொழிலிலே சிறந்தவனான நளனை மதித்துத், “தேரிற் பூட்டிய குதிரைகளைச் செலுத்தும் நின் தொழிலையும், இங்ஙனம் எண்ணிக் காணும் என் தொழிலையும், என்னுடன் மாற்றிக் கொள்ளுகிறாயோ?” என்று (அங்ஙனமே, இருவரும் தம் கலைத்திறனை ஒருவருக்கொருவர் கற்பித்தனர் என்பதனையும் நாம் அறிதல் வேண்டும்.)

கலி நீங்கிற்று

வண்டார் வளவயல்சூழ் மள்ளுவ நாட்டெங்கோமான்
தண்டார் புனைசந் திரன்சுவர்க்கி - கொண்டாடும்
பாவலன்பால் நின்ற பசிபோல நீங்கிற்றே
காவலன்பால் நின்ற கவி. 381

     வண்டுகள் ஆர்ப்பரிக்கும் வளமான வயல்கள் சூழ்ந்திருக்கும் உழவர் நாட்டை ஆளுகின்ற எம் மன்னவனான, தண்மையான தாரினைச் சூடுகின்ற சந்திரன் சுவர்க்கி என்பவன் போற்றுகின்ற பாவலனிடத்தே, அதற்கு முன் நிலைபெற்றிருந்த பசி நோயினைப் போல, காவலனாம் நளனிடத்தே நிலைபெற்றிருந்த கலியும், அப்போது அவனை விட்டு நீங்கிப் போயிற்று. (இருதுபர்ணன் நளனுக்குக் கற்பித்த வித்தை ‘அட்ச இருதயம்’ என்பது. அது பிறர் எண்ணத்தை அறிதலும், கண்டவற்றை, எண்ணிக் காணலும் ஆகிய சக்தி உடையது. இந்த வல்லமை நளனுக்கு வந்ததும், சொக்கட்டான் ஆட்டத்தில் அவன் வென்றுவிடுவான் என்பதனால், கலிபுருஷன் அவனை விட்டு நீங்கினான் என்று கொள்க. அன்றித் தன்னுடைய பகைமையை உணர்ந்து கொள்ளின், அதுவும் தனக்குக் கேடாகும் எனக் கலிபுருஷன் கருதினான் எனவும் கொள்.)

6. வீமன் நகரில்

வீமன் நகரம் சேர்ந்தனர்

ஆமை முதுகில் அலவன் துயில்கொள்ளும்
காமர் நெடுநாடு கைவிட்டு - வீமன்தன்
பொன்னகரி சென்றடைந்தான் போர்வெட் டெழுங்கூற்றம்
அன்னகரி யொன்றுடையான் ஆங்கு. 382

     போர்க்களத்தினை விரும்பி உயிருண்ண எழுகின்ற கூற்றத்தைப் போன்று களிற்று யானையினோடு ஒப்புமை உடையவனான அயோத்தி மன்னன், ஆமைகளின் முதுகிலே நண்டுகள் துயில் கொள்ளுகின்ற அழகான பெரிய தன் நாட்டினைக் கைவிட்டு, வீமராசனது அழகிய நகரத்தினையும் சென்று சேர்ந்தான்.

வீமன் அரண்மனையில்

வெற்றித் தனித்தேரை வீமன் பெருங்கோயில்
முற்றத் திருத்தி முறைசெய்யும் - கொற்றவற்குத்
தன்வரவு கூறப் பணித்துத் தனிப்புக்கான்
மன்விரவு தாரான் மகிழ்ந்து. 383

     வெற்றிச் சிறப்புடைய ஒப்பற்ற தேரினை வீமராசனின் பெரிய அரண்மனை முற்றத்தே நிறுத்தி, முறைநடாத்தும் வெற்றி வேந்தனுக்குத் தன் வரவினைக் கூறுமாறு வாயிலர்க்குக் கட்டளையிட்டு விட்டுப், பெருமை சேர்ந்த தாரினனான இருதுபர்ணன், தனியாகவே மகிழ்வுடன் அரண்மனையுள்ளே சென்றான்.

     (தனிப்புக்கான் என்றது நளனாகிய பாகனை வெளியே விட்டுவிட்டுச் சென்றான் என உணர்த்துவதற்கும், பிறவரசர் எவரும் அங்கு வந்திலர் என்று காட்டுவதற்கும் ஆம்.)

வர விரும்பியது ஏனோ?

கன்னி நறுந்தேறல் மாந்திக் கமலத்தின்
மன்னித் துயின்ற வரிவண்டு - பின்னையும்போய்
நெங்தற் கவாவும் நெடுநாட நீயென்பால்
எய்தற் கவாவியவா றென்? 384

     “புதிதான மணமுள்ள தேனை நிறையக் குடித்துவிட்டுத் தாமரை மலரிற் சேர்ந்திருந்து உறங்கிய வரிகளையுடைய வண்டானது மறுபடியும் எழுந்து, கருநெய்தற் பூவினை விரும்பிச் செல்லுகின்ற பெரிதான நாட்டை உடையவனே! நீ என்னிடத்தே வருவதற்கு விரும்பியதற்கான காரணம் தான் என்னவோ?” என்று வீமராசன் இருதுபர்ணனை அன்போது விசாரித்தான்.

காணும் ஆசையால் வந்தேன்

இன்றுன்னைக் காண்பதோ ராதரவால் யானிங்ஙன்
மன்றல் மலர்த்தாராய் வந்தடைந்தேன் - என்றான்
ஒளியார்வேற் கண்ணாள்மேல் உள்ளம் துரப்பத்
தெளியாது முன்போந்த சேய். 385

     ஒளி நிறைந்த வேற்படை போன்ற கண்ணினளான தமயந்தியின் மேல் தன் உள்ளம் செலுத்துவதான காரணத்தினாலே, உண்மையினைத் தெளிந்து கொள்ளாது, புரோகிதனின் பேச்சை நம்பி வீமராசனின் முன் சென்ற இருதுபர்ணன், “இன்று உன்னைக் காணும்படியான ஓர் ஆசையினாலே, மணமுள்ள மலர்மாலை உடையவனே! நின்னிடத்தே யான் வந்துள்ளேன்” என்று சொல்லித், தான் வந்த காரியத்தைப் பற்றிய நினைவை வெளியே காட்டாதபடி மறைத்துக் கொண்டான்.

7. மக்களும் தந்தையும்

மடைப்பள்ளி புகுந்தான்

ஆதி நெடுந்தேர்ப் பரிவிட் டவையாற்றிக்
கோதில் அடிசிற் குறைமுடிப்பான் - மேதிக்
கடைவாயிற் கார்நீலங் கண்விழிக்கும் நாடன்
மடைவாயிற் புக்கான் மதித்து. 386

     எருமைகளின் வாய்க்கடையிலே கருநெய்தற் பூக்கள் மலர்ந்து கொண்டிருக்கும் வளமான நிடதநாட்டிற்கு உரியவனாகிய நளன், முதன்மையான நெடிய தேரிலே பூட்டியிருந்த குதிரைகளை அவிழ்த்து அவைகளைக் களைப்பாறச் செய்துவிட்டுக், குற்றமறச் சோறாக்குவதாகிய தன் கடமையினை முடிப்பதனைக் கருதியவனாக மடைப்பள்ளியினுள்ளே சென்று புகுந்தான். (வீமனைன் விருந்தாளியாக இருதுபர்ணன் இருந்தபோதும், அவன் உணவினை அவனுடைய சமையற்காரனே சமைக்கச் சென்றதன் தன்மையினைக் காண்க. இது அக்காலத்து அரசர் கொண்டிருந்த ஒரு தற்பாதுகாப்பு மரபு போலும்.)

நிரப்பாமல் நிரம்பிற்று

ஆதி மறைநூல் அனைத்தும் தெரிந்துணர்ந்த
நீதி நெறியாளர் நெஞ்சம்போல் - யாதும்
நிரப்பாமல் எல்லாம் நிரம்பிற்றே பொற்றேர்
வரப்பாகன் புக்க மனை. 387

     ஆதியாகிய மறைநூல்கள் அனைத்தையும் ஆராய்ந்தறிந்த நீதி நெறியாளர்களான சான்றோர்களின் உள்ளத்தைப் போலப், பொன்மயமான தேரின் சிறந்த பாகனாகிய நளன் புகுந்த அந்த வீடும், எதனையும் எவரும் கொண்டு நிரப்பாமலே, எல்லாம் தாமே வந்து நிரம்பியதாக அமைந்து இருந்தது. (இது நளனுக்குத் தேவர்கள் முன் தந்த வரத்தின் பயனினாலே யாகும். இந்த வரத்தைப் பற்றிய செய்தியை ‘அங்கியமுதம்’ என்ற செய்யுளாற் காண்க.)

தெரிந்து வா!

இடைச்சுரத்தில் தனனை இடையிருளில் நீத்த
கொடைத் தொழிலான் என்றயிர்த்தக் கோமான் - மடைத்தொழில்கள்
செய்கின்ற தெல்லாம் தெரிந்துணர்ந்து வாவென்றாள்
நைகின்ற நெஞ்சாள் நயந்து. 388

     துயரத்தினாலே நைந்து போகின்ற நெஞ்சினளான தமயந்தி, உண்மை அறிதலை விரும்பித், தன் சேடியருள் ஒருத்தியை அழைத்துப், பாலைவழியினடுவிலே இரவின் இடைச் சாமவேளையிலே தன்னைக் கைவிட்டுப் போன கொடைத் தொழிலானே என்று தான் ஐயுற்ற தன் கோமான் சமைக்கும் தொழில்கள் செய்கின்ற வகையினை எல்லாம் தெரிந்து, அவற்றின் தன்மையினை அறிந்து வருக என்று ஏவினாள். (நளன் சமைக்கும் தொழிலில் தலைசிறந்தவன்; அதனால், அதனை அறிந்து வர இங்ஙனம் தமயந்தி தன் சேடியை அனுப்பினாள் என்று உணர்க.)

குமரனையும் குமரியையும் அனுப்புதல்

கோதை நெடுவேற் குமரனையும் தங்கையையும்
ஆதி யரசன் அருகாகப் - போத
விளையாட விட்டவன்றன்மேற் செயல்நா டென்றாள்
வளையாடுங் கையாள் மதித்து. 389

     வளையல்கள் குலுங்கிக் கொண்டிருக்கும் கைகளை உடைய தமயந்தியானவள், மேலும் எண்ணமிட்டு, “கோதை சூடிய நெடிய வேலேந்தும் என் குமரனையும், அவன் தங்கையான என் குமரியையும், ஆதியிலே அரசனான அந்தச் சமையல் செய்வோரின் அருகாகப் போகவும் விளையாடவும் விட்டு, மேற்கொண்டு அவனிடத்தே அதனால் நிகழும் செயல்களையும் நீ அறிந்து வருவாயாக” என்றாள்.

யார் மக்கள்!

மக்களைமுன் காணா மனநடுங்கா வெய்துயிராப்
புக்கெடுத்து வீரப் புயத்தணையா - மக்காள்நீர்
என்மக்கள் போல்கின்றீர் யார்மக்க ளென்றுரைத்தான்
வன்மக் களியானை மன். 390

     பகைக் குணமுள்ள மதயானைகளையுடைய மன்னனான நளன், தன் மக்களைத் தன் எதிரே கண்டதும் உளம் நடுங்கினான். சுடுமூச்சு எறிந்தவனாக, அவர்களைப் போய் எடுத்துத் தன் வீரஞ்செறிந்த புயத்தோடு அணைத்துக் கொண்டான். “மக்களே! நீங்கள் என் மக்களைப் போலவே தோன்றுகிறீர்கள்; நீங்கள் யார் மக்களோ?” என்று அன்புடன் கேட்டான்.

மக்கள் சொன்னது

மன்னு நிடதத்தார் வாழ்வேந்தன் மக்கள்யாம்
அன்னைதனைக் கான்விட் டவனேக - இந்நகர்க்கே
வாழ்கின்றோம் எங்கள் வளநாடு மற்றொருவன்
ஆள்கின்றான் என்றார் அழுது. 391

     “வளஞ்செறிந்த நிடதநாட்டினரின் வாளாற்றல் உடைய வேந்தனாயிருந்தோனின் மக்கள் யாங்கள். அவன் எங்கள் அன்னையைக் காட்டிலே கைவிட்டுப் போய்விட்டதனால், இந்த நகரத்திலே வந்து வாழ்ந்து வருகின்றோம். எங்களுக்குரிய வளநாட்டினை மற்றொருவன் ஆண்டு கொண்டிருக்கின்றான்” என்று அழுது கொண்டே அந்தக் குழந்தைகள், தம்மைப் பற்றிச் சொன்னார்கள்.

நீங்கா உயிரோடு நின்றான்

ஆங்கவர் சொன்ன வுரைகேட் டழிவெய்தி
நீங்கா உயிரோடு நின்றிட்டான் - பூங்காவில்
வள்ளம்போற் கோங்கு மலருந் திருநாடன்
வெள்ளம்போற் கண்ணீர் உகுத்து. 392

     பூந்தோட்டங்களிலே கிண்ணங்களைப் போலக் கோங்கம் பூக்கள் மலர்ந்திருக்கும் செழிப்பாக நிடதநாட்டிற்கு உரியவனான நளன், அவ்விடத்தே அம்மக்கள் சொன்ன பேச்சைக் கேட்டான். உள்ளம் நைந்து போய், வெள்ளம் போலக் கண்ணீரை வழிய விட்டவனாகித், தன்னைவிட்டுப் போகாத உயிரோடும் செயலிழந்து நின்று விட்டான். ‘உள்ளம்போற் கண்ணீர்’ எனவும் பாடம். உள்ளத்துச் சிதறல் போலச் சிறிய கண்ணீர்த்துளிகள் என அப் பாடத்திற்குப் பொருள் கொள்க. ‘நீங்கா உயிரோடு’ என்றது, உயிர் நீங்கவில்லையே தவிரப் பிறவகையினால் எல்லாம் உயிர்போயினவனைப் போலவே செயலிழந்து நின்றான் நளன் என்பதாம்.)

தாழ்ச்சி அல்லவோ?

உங்கள் அரசொருவன் ஆளநீர் ஓடிப்போந்(து)
இங்கண் உறைதல் இழுக்கன்றோ - செங்கை
வளவரசே என்றுரைத்தான் மாதவத்தாற் பெற்ற
இளவரசை நோக்கி எடுத்து. 393

     பெரும் தவப்பேற்றினாலே தான் பெற்ற இளவரசனை நோக்கி, “சிவந்த கைகளையுடைய வளமான அரசகுமாரனே! உங்களுடைய அரசனை மற்றொருவன் ஆட்சி செய்து கொண்டிருக்க, நீங்கள் உங்கள் நாட்டைவிட்டு ஓடிவந்து, இவ்விடத்தே வாழ்தல் உங்களுக்குத் தாழ்ச்சி உடையதல்லவோ?” என்று வினவினான் நளன்.

வாய்மையே வலி!

நெஞ்சாலிம் மாற்றம் நினைந்துரைக்க நீயல்லால்
அஞ்சாரோ மன்னர் அடுமடையா! - எஞ்சாது
தீமையே கொண்ட சிறுதொழிலாய் எங்கோமான்
வாய்மையே கண்டாய் வலி. 394

     “சோறடுகின்ற மடைப்பள்ளிக்கு மட்டும் உரியவனே! குறைவின்றித் தீமையினையே உளங்கொண்ட சிறு செயலாளனே! தம் நெஞ்சினாலே இத்தகைய ஒரு பேச்சினை எண்ணிச் சொல்வதற்கு நின்னையல்லாமல் மன்னராவார் எவரும் அஞ்சமாட்டார்களோ? எம் கோமானாகிய தந்தைக்கு வாய்மை ஒன்றே வலிமையானது என்பதனை நீ அறிவாயாக” என்றான் இளவரசன். (நாடு விட்டது ஆண்மைக் குறைவினாலே அன்று, வாக்கினைப் பேணும் உறுதியினால் என்று கூறும் இளவரசன், நளனின் பொருந்தாத பேச்சினைக் கேட்டுச் சினமும் கொள்கின்றான்.)

அடியிற் காணும் வடு!

எந்தை கழலிணையில் எம்மருங்கும் காணலாம்
கந்து சுளியும் கடாக்களிற்றின் - வந்து
பணிமுடியிற் பார்காக்கும் பார்வேந்தர் தங்கள்
மணிமுடியிற் றேய்ந்த வடு. 395

     “தம்மைக் கட்டியிருக்கும் தறிகளோடு சினங்கொள்ளுகின்ற மதகளிறுகளின் மீது ஏறி வந்த, ஆதிசேடனாகிய பாம்பின் தலை மீதுள்ள இந்த நிலத்தினைக் காத்துவரும் பார்வேந்தர்களது மணிமுடிகளினாலே தேய்வுற்றதனால் விளங்கும் வடுக்களை, எம் தந்தையின் இரு பாதங்களிலும் எவ்விடத்தும் காணலாமே!” (இப்படித் தந்தையின் பெருமையினை இளவரசன் எடுத்துக் கூறினான். நளனின் உள்ளம் அப்போது பெருமிதத்தாலும் துயரத்தாலும் ஒருங்கே கலக்கமுற்றது.)

முடிசாய்த்து நின்றான்!

மன்னர் பெருமை மடையர் அறிவரோ
உன்னை அறியாது உரைசெய்த - என்னை
முனிந்தருளல் என்று முடிசாய்த்து நின்றான்
கனிந்துருகி நீர்வாரக் கண். 396

     “மன்னர்களின் பெருமையினை என்னைப் போலுறி மடைத்தொழில் செய்பவர் அறிவார்களோ? உன்னைப் பற்றி அறியாமல் பேசிவிட்ட என்னைக் கோபித்துக் கொள்ளாதேம்” என்று இளவரசனைக் கேட்டுக் கொண்டு, உள்ளம் கனிந்து உருகி, கண்கள் நீர் சொரியத் தன் தலையினைக் கவிழ்ந்தவாறே நளன் நின்றான். (‘மடையர்கள்’ என்னும் சொல் இருபொருள் தந்து இனிப்பதும் காண்க.)

தமயந்தி உண்மை அறிதல்

கொற்றக் குமரனையும் கோதையையும் தான்கண்டு
மற்றவன்றான் ஆங்குரைத்த வாசகத்தை - முற்றும்
மொழிந்தாரம் மாற்றம் மொழியாத முன்னே
அழிந்தாள் விழுந்தாள் அழுது. 397

     வெற்றிச் சிறப்புடைய தன் குமரனையும் குமரியையும் அந்தப் பாகன் கண்டதனையும், அவ்விடத்தே அவன் சொன்ன சொற்களையும் சேடியர் வந்து முற்றவும் தமயந்திக்கு எடுத்துக் கூறினர். அதற்கொரு பதிலையும் சொல்வதற்கு முன்பாகவே, அவனே நளன் என உணர்ந்து, தன் மனம் அழிந்தவளாகி அழுது கொண்டே நிலத்திற் சாய்ந்து விட்டாள் அவள்.

பதைத்து அழுவாள்!

கொங்கை யளைந்து குழல்திருத்திக் கோலஞ்செய்
அங்கை யிரண்டும் அடுபுகையால் - இங்ஙன்
கருகியவோ என்றழுதாள் காதலனை முன்னாள்
பருகியவேற் கண்ணாள் பதைத்து. 398

     முன் நாட்களிலே தன் காதலனின் அழகையெல்லாம் பருகிய வேல்போலும் கண்களையுடைய தமயந்தியானவள் அவனிருக்கும் தோற்றத்தை நினைத்துப் பதைபதைத்தாள். “என் கொங்கைகளை அளைந்தாடியும், என் கூந்தலைத் திருத்தியும் எனக்கு அழகு செய்கின்ற நின் அழகிய கைகள் இரண்டும், சமைத்தலினாலே எழும் புகையினால் இவ்வாறு கருகிப் போயிற்றோ?” என்று சொல்லி, மேலும் புலம்பினாள். (‘கொங்கை வருடக் குழைதிருத்தி’ எனவும் பாடம் கொள்வர். குழை - காதணி.)

8. ஒன்றுபட்ட குடும்பம்

அவனே மன்னவன்!

மற்றித் திருநகர்க்கே வந்தடைந்த மன்னவர்க்குக்
கொற்றத் தனித்தேரும் கொண்டணைந்து - மற்றும்
மடைத்தொழிலே செய்கின்ற மன்னவன்கா ணெங்கள்
கொடைத்தொழிலான் என்றாள் குறித்து. 399

     தன் தாய் தந்தையரை அணுகித் தமயந்தி, “இந்தச் சிறந்த நகருக்கு வந்து சேர்ந்த அயோத்தி மன்னனுக்கு வெற்றிமிக்க ஒப்பற்ற தேரினைச் செலுத்திக் கொண்டு வந்து மேலும் மடைத்தொழிலும் செய்கின்ற மன்னவனே எங்கள் கொடைத் தொழிலோன் ஆகிய நள மன்னவன்” என்று அவனைக் குறிப்பிட்டுத், தன் அறிந்துணர்ந்ததனையும் சொன்னாள்.

வீமன் திகைத்தான்

போதலருங் கண்ணியான் போர்வேந்தர் சூழப்போய்க்
காதலிதன் காதலனைக் கண்ணுற்றான் - ஓதம்
வரிவளைகொண் டேறும் வளநாடன் தன்னைத்
தெரிவரிதா நின்றான் திகைத்து. 400

     மொட்டுக்கள் மலர்ந்து கொண்டிருக்கும் கண்ணியைச் சூடியவனான வீமராசன், போர்வல்ல வேந்தர்கள் தன்னைச் சூழ்ந்து வரச் சென்று, தன் மகளின் அன்பிற்கு உரியவனைப் போய்ப் பார்த்தான். கடலானது வரிகளையுடைய சங்குகளைக் கொண்டு கரை மீது ஏறி வருகின்ற வளமான நிடத நாட்டு மன்னனைத் தெரிவது அரிதாகப் போக, அதனால் திகைப்புற்றும் நின்றான்.


நளவெண்பா : 1    2    3    4    5    6    7    8    9