அருங்கலச்செப்பு அருங்கலச்செப்பு ஒரு தமிழ் நீதி நூல் ஆகும். பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூல் பெயர் தெரியாத சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது. இதில் 180 குறள் வெண்பாக்கள் உள்ளன. ‘ரத்ன கரண்ட சிராவகாசாரம்’ என்னும் வடமொழி நூலின் மொழிபெயர்ப்பு இது என்று கருதப்படுகிறது. இந்நூல் சமண இல்லறத்தார் பின்பற்ற வேண்டிய கடமைகளைக் கூறுகிறது. இந்த நூலின் காலம் 12ஆம் நூற்றாண்டு. காப்பு அருகன் வாழ்த்து அணிமதிக் குடை அருகனைத் தொழ அருவினைப் பயன் அகலுமே. நூல் 1. நற்காட்சி அதிகாரம் மங்கல வாழ்த்து முற்ற உணர்ந்தானை ஏத்தி, மொழிகுவன் குற்றம்ஒன்று இல்லா அறம். 1 அறம் நற்காட்சி நன்ஞானம் நல்லொழுக்கம் இம்மூன்றும் தொக்க அறச்சொல் பொருள். 2 நற்காட்சி மெய்ப்பொருள் தேறுதல் நற்காட்சி என்றுரைப்பர் எப்பொருளும் கண்டுணர்ந் தார். 3 மெய்ப்பொருள் தலைமகனும் நூலும் முனியும் இம்மூன்றும் நிலைமைய தாகும் பொருள். 4 தலை மகன் இயல்பு குற்றமொன்று இன்றிக் குறையின்று உணர்ந்துஅறம் புற்ற உரைத்தான் இறை. 5 இருக்கத் தகாதவை பசிவேர்ப்பு நீர்வேட்கை பற்றுஆர்வம் செற்றம் கசிவினோடு இல்லான் இறை. 6 இருக்கத் தக்கவை கடையில் அறிவு இன்பம் வீரியம் காட்சி உடையான் உலகுக்கு இறை. 7 அறத்தினை உரைத்தல் தெறித்த பறையின் இராகாதி இன்றி உரைத்தான் இறைவன் அறம். 8 நூல் இயல்பு என்றும்உண் டாகி இறையால் வெளிப்பட்டு நின்றது நூலென்பர் உணர். 9 ஆகமத்தின் பயன் மெய்ப்பொருள் காட்டி உயிர்கட்கு அரணாகி துக்கம் கெடுப்பது நூல். 10 முனி இயல்பு இந்தியத்தை வென்றான் தொடர்ப்பாட்டோடு ஆரம்பம் முந்து துறந்தான் முனி. 11 முனி மாண்பு தத்துவ ஞான நிகழ்ச்சியும் சிந்தையும் உய்த்தல் இருடிகள் மாண்பு. 12 நற்காட்சி உறுப்புகள் எட்டு வகைஉறுப்பிற் றாகி இயன்றது சுட்டிய நற்காட்சி தான். 13 இதுவும் அது ஐயம் அவாவே உவர்ப்பு மயக்கின்மை மெய்பெற இன்னவை நான்கு. 14 இதுவும் அது அறப்பழி நீக்கல், அழிந்தாரைத் தாங்கல் அறத்துக்கு அளவளா மூன்று. 15 இதுவும் அது அறத்தை விளக்கலோடு எட்டாகும் என்ப திறம்பட உள்ள உறுப்பு. 16 ஐயம் இன்மை மெய்ந்நெறிக்கண் உள்ளம் துளக்கின்மை காட்சிக்கண் ஐயம் இலாத உறுப்பு. 17 அவா இன்மை தடுமாற்ற இன்பக்கு இவறாமை ஆகும் வடுமாற்று அவா இன்மை நற்கு. 18 உவர்ப்பு இன்மை பழிப்பில் அருங்கலம் பெய்த உடம்புஎன்று இழிப்பு இன்மை மூன்ற்றம் உறுப்பு. 19 மயக்கு இன்மை பாவ நெறியாரைச் சேர்ந்த மதிப்பின்மை மோவம் இலாத உறுப்பு. 20 அறப்பழி நீக்கல் அறத்துக்கு அலர்களைதல் எவ்வகை யானும் திறத்தின் உவகூ வனம். 21 அழிந்தாரைத் தாங்கல் அறத்தின் தளர்ந்தாரை ஆற்றின் நிறுத்தல் சிறப்புடை ஆறாம் உறுப்பு. 22 அளவளாவல் ஏற்ற வகையின் அறத்துள்ளார்க் கண்டுவத்தல் சாற்றிய வச்சளத்தின் மாண்பு. 23 அறம் விளக்கல் அறத்தின் பெருமையை யார்க்கும் உரைத்தல் அறத்தை விளக்குதல் நற்கு. 24 எடுத்துக்காட்டுகள் அஞ்சன சோரன் அனந்த மதிஉலகில் வஞ்சமில் ஒத்தா யணன். 25 இதுவும் அது இரேவதை யாரும் சிநேந்திர பத்தரும் தோவகையின் பாரிசரும் சொல். 26 இதுவும் அது வச்சிர மாமுனியும் வளர்பெரு விண்ணுவும் நிச்சயம் எட்டும் உரை. 27 உறுப்புகளின் இன்றியமையாமை உறுப்பின் குறையின் பயனின்று காட்சி மறுப்பாட்டின் மந்திரமே போன்று. 28 நற்காட்சியர் தன்மை மூவகை மூடமும் எட்டு மயங்களும் தோவகையில் காட்சியார்க்கு இல். 29 உலக மூடம் வரைப்பாய்தல் தீப்புகுதல் ஆறாடல் இன்ன உரைப்பின் உலக மயக்கு. 30 தேவ மூடம் வாழ்விப்பர் தேவர் எனமயங்கி வாழ்த்துதல் பாழ்பட்ட தெய்வ மயக்கு. 31 இதுவும் அது மயக்கார்வம் செற்ற முடையாரை ஏத்தல் துயக்குடைத் தெய்வ மயக்கு. 32 பாசண்டி மூடம் மாசுண்ட மார்க்கத்து நின்றாரைப் பூசித்தல் பாசண்டி மூடம் எனல். 33 எட்டு மதங்கள் பிறப்புக் குலம்வலி செல்வம் வனப்புச் சிறப்புத் தவமுணர்வோடு எட்டு. 34 மதத்தின் விளைவு இவற்றால் பெரியேம்யாம் என்றே எழுந்தே இகழ்க்கில் இறக்கும் அறம். 35 நற்காட்சியின் சிறப்பு அறம் உண்டேல் யாவரும் எள்ளப்படாஅர் பிறகுணத்தால் என்ன பயன்? 36 இதுவும் அது பறையன் மகனெனினும் காட்சி உடையான் இறைவன் என உணரல் பாற்று. 37 இதுவும் அது தேவனும் நாயாகும் தீக்காட்சி யால்நாயும் தேவனாம் நற்காட்சி யால். 38 ஆறு அவிநயம் அவ்விநயம் ஆறும் அகன்றது நற்காட்சி செவ்விதின் காப்பார் இடை. 39 அவிநயம் இலக்கணம் நல்லறத்தின் தீர்ந்த வணக்கத்தை நல்லோர்கள் சொல்வர் அவிநயம் என்று. 40 அவிநயத்தின் வகை மிச்சை இலிங்கியர் நூல் தெய்வம் அவாவினோடு அச்சம் உலோபிதத்தோடு ஆறு. 41 அவிநயம் நீக்கும் வழி இவ்வாறு நோக்கி வணங்கார் அவிநயம் எவ்வாறும் நீங்கல் அரிது. 42 நற்காட்சியின் இன்றியமையாமை காட்சி விசேடம் உணர்வும் ஒழுக்கமும் மாட்சி அதனில் பெறும். 43 இதுவும் அது நற்காட்சி இல்லார் உணர்வும் ஒழுக்கமும் ஒற்கா ஒசிந்து கெடும். 44 இதுவும் அது அச்சிலேல் பண்டியும் இல்லை சுவரிலேல் சித்திரமும் இல்லதே போன்று. 45 இதுவும் அது காட்சியோடு ஒப்பதுயாம் காணோம் வையத்து மாட்சி உடையது உயிருக்கு. 46 நற்காட்சியின் பயன் விரதம் இலர் எனினும் காட்சி உடையார் நரகம் புகுதல் இலர். 47 இதுவும் அது கலங்கலில் காட்சி உடையார் உலகில் விலங்காய்ப் பிறத்தல் இலர். 48 இதுவும் அது பெண்டிர் நபுஞ்சகர் ஆகார் பிழைப்பின்றிக் கொண்ட நற்காட்சி யவர். 49 இதுவும் அது இழிகுலத்து என்றும் பிறவார் இறைவன் பழியறு காட்சி யவர். 50 இதுவும் அது உறுப்பில் பிறர் பழிப்ப என்றும் பிறவார் மறுப்பாடில் காட்சி யவர். 51 இதுவும் அது குறுவாழ்க்கை நோயோடு நல்குரவு கூடப் பெறுவாழ்க்கை யுள்பிறத்தல் இல். 52 இதுவும் அது அரசர் இளவரசர் செட்டியரும் ஆவர் புரைதீர்ந்த காட்சி யவர். 53 இதுவும் அது மூவகைக் கீழ்த்தேவர் ஆகார்; முகடுயர்வர் தோவகையில் காட்சி யவர். 54 இதுவும் அது விச்சா தரரும் பலதேவரும் ஆவர் பொச்சாப்பில் காட்சி யவர். 55 இதுவும் அது முச்சக் கரத்தோடு சித்தியும் எய்துவர் நச்சறு காட்சி யவர். 56 2. நல்ஞான அதிகாரம் நல் அறிவின் இலக்கணம் பொருள்நின்ற பெற்றியைப் பொய்யின்று உணர்தல் மருளறு நன்ஞான மாண்பு. 57 பிரத மானுயோகத்தின் இலக்கணம் சரிதம் புராணம் அருத்தக் கியானம் அரிதின் உரைப்பது நூல். 58 காணானுயோகத்தின் இலக்கணம் உலகின் கிடக்கையும் ஊழி நிலையும் மலைவுஇன்று உரைப்பது நூல். 59 சரணானுயோகத்தின் இலக்கணம் இல்லறம் ஏனைத் துறவறம் என்றிவற்றைப் புல்ல உரைப்பது நூல். 60 திரவியானுயோக இலக்கணம் கட்டொடு வீடும் உயிரும் பிறபொருளும் முட்டின்றிச் சொல்லுவது நூல். 61 3. நல்லொழுக்க அதிகாரம் நல்லொழுக்கத்தின் இலக்கணம் காட்சி யுடையார் வினைவரும் வாயிலின் மீட்சியா நல்லொழுக்கு நன்று. 62 நல்லொழுக்கத்தின் வகை குறைந்ததூஉம் முற்ற நிறைந்ததூஉ மாம அறைந்தார் ஒழுக்கம் இரண்டு. 63 ஒழுக்கத்துக்கு உரியார் நிறைந்தது இருடிகட்கு ஆகு மனையார்க்கு ஒழிந்தது மூன்று வகைத்து. 64 குறைந்த ஒழுக்கத்தின் வகை அணுவதம் ஐந்தும் குணவதம் மூன்றும் உணர்நான்கு சிக்கா வதம். 65 அணுவிரதம் பெரிய கொலைபொய் களவொடு காமம் பொருளை வரைதலோடு ஐந்து. 66 கொல்லாமை இயங்குயிர் கொல்லாமை ஏவாமை ஆகும் பெருங்கொலையின் மீட்சி எனல். 67 அதிசாரம் அறுத்தல் அலைத்தல் அடைத்தலோடு ஆர்த்தல் இறப்பப் பொறை இறப்போர் ஐந்து. 68 பொய்யாமை பாவம் பொருந்துவன சொல்லாமை ஏவாமை ஆகும் இரண்டாம் வதம். 69 பொய்யாமைக்கு அதிசாரம் குறளை மறைவிரி இல்லடை வௌவல் புறவுரை பொய்யோலை கேடு. 70 திருடாமை கொடாதது கொள்ளாமை ஏவாமை ஆகும் கொடாதது கொள்ளா வதம். 71 திருடாமைக்கு அதிசாரம் குறைவு, நிறைகோடல், கொள்ளைக் கவர்தல் மறைய விராதல் இறப்பு. 72 இதுவும் அது கள்ளரொடு கூடல் கள்ளர் கொணர்பொருளை உள்ளினர் கோடலோடு ஐந்து. 73 ஏகதேச பிரமசரியம் இலக்கணம் விதித்த வழியின்றிக் காமம் நுகர்தல் மதிப்பின்மை நான்காம் வதம். 74 பிரமசரியத்திற்கு அதிசாரம் அனங்க விளையாட்டு வேட்கை மிகுதி மனங்கொள் விலாரிணைக் கேடு. 75 இதுவும் அது பிறர்மனை கோடல் பிறர்க்குச் செல்வாளை திறவதில் கோடலோடு ஐந்து. 76 பொருள் வரைதல் பொருள் வரைந்து ஆசைச் சுருக்கியே ஏவாமை இருள்தீர்ந்தார்க்கு ஐந்தாம் வதம். 77 மிகுபொருள் விரும்பாமைக்கு அதிசாரம் இயக்க்மோடு ஈட்டம் பெருக்கலும் லோபம் வியப்புமிகைக் கோடலோடு ஐந்து. 78 அணுவிரத பயன் ஐயைந்து இறப்பிகந்த ஐந்து வதங்களும் செய்யும் சுவர்க்கச் சுகம். 79 விரதங்களால் சிறப்படைந்தவர் வரலாறுகள் சட்டித் தனதேவன் பாரீசன் நீலியும் பெற்றார் சயனும் சிறப்பு. 80 விரதமின்மையால் கேடு அடைந்தவர்கள் தனசிரி சத்தியன் தாபதன் காப்பான் நனைதாடி வெண்ணெய் உரை. 81 அணுவிரதியின் மூல குணங்கள் கள்ளொடு தேன்புலைசு உண்ணாமை ஐவதமும் தெள்ளுங்கால் மூல குணம். 82 குண விரதம் இலக்கணம் வரைப திசைபத்தும் வாழும் அளவும் புரைவில் திசைவிரதம் எண். 83 எல்லை அமையும் முறை ஆறும் மலையும் கடலும் அடவியும் கூறுப எல்லை அதற்கு. 84 திசை விரதத்தின் சிறப்பு எல்லைப் புறத்தமைந்த பாவம் ஈண்டாமையின் சொல்லுப மாவதம் என்று. 85 மகா விரதம் சிறிய கொலைபொய் களவொடு காமம் பொருளைத் துறத்தலோடு ஐந்து. 86 இதுவும் அது கொலைமுதலா ஐந்தினையும் முற்றத் துறத்தல் தலையாய மாவத மாம். 87 திசை விரத அதிசாரம் இடம் பெருக்கல் எல்லை மறத்தல் கீழ் மேலோடு உடன் இறுத்தல் பக்கம் இறப்பு. 88 அனர்த்த தண்ட விரதம் எல்லை அகத்தும் பயமில மீண்டொழுகல் நல்அனத்த தண்ட வதம். 89 அனர்த்த தண்ட விரதத்தின் வகை ஐந்தனத்த தண்ட விரதம் முறையுள்ளிச் சிந்திக்கச் செய்வன் தெரிந்து. 90 இதுவும் அது ஆர்வமொடு செற்றத்தை ஆக்கும் நினைப்புகள் தீவுறு தீச்சிந்தை யாம். 91 இதுவும் அது சேவாள் விலைகொளல் கூறுதல் கூட்டுதல் பாபோப தேசம் எனல். 92 இதுவும் அது பயமின் மரம் குறைத்த லோடுஅகழ்தல் என்ப பயமில் பமாதம் எனல். 93 இதுவும் அது தீக்கருவி நஞ்சு கயிறு நார்கள் ஈத்தல் கொலைகொடுத்த லாம். 94 இதுவும் அது மோகத்தை ஈன்று தவமழிக்கும் சொல்கேட்டல் பாபச் சுருதி எனல். 95 அனர்த்த தண்ட விரதத்திற்கு அதிசாரம் நகையே நினைப்பு மொழியின்மை கூறல் மிகைநினைவு நோக்கார் செயல். 96 இதுவும் அது ஐந்தனத்த தண்ட விரதக்கு இறப்பிவை முந்துணர்ந்து காக்க முறை. 97 போக உபபோக பரிமாண விரதம் போகோப போக பரிமாணம் என்றுரைப்பர் வாயில் புலன்கள் வரைந்து. 98 போக உபபோக பொருள் இலக்கணம் துய்த்துக் கழிப்பன போகம் உபபோகம் துய்ப்பாம் பெயர்த்தும் எனல். 99 உண்ணத் தகாதன மயக்கம் கொலை அஞ்சிக் கள்ளு மதுவும் துயக்கில் துறக்கப் படும். 100 இதுவும் அது வேப்ப மலரிஞ்சி வெண்ணெய் அதம்பழம் நீப்பர் இவைபோல் வன. 101 பரிமாணத்திற்கு கால வரம்பு இயமங்கள் கால வரையறை இல்லை நியமங்கள் அல்லா வதம். 102 நியமத்திற்கு உரிய பொருள் உடுப்பன, பூண்பன, பூசாந்தும் ஊர்தி படுப்ப, பசிய நீராட்டு. 103 இதுவும் அது கோலம் இலைகூட நித்த நியமங்கள் கால வரையறுத்தல் நற்கு. 104 நியமத்திற்குக் கால பேதம் இன்று பகலிரா இத்திங்கள் இவ்வாண்டைக்கு என்று நியமம் செயல். 105 அதிசாரம் வேட்கை வழி நினைப்பு துய்ப்பு மிகநடுக்கு நோக்குஇன்மை ஐந்தாம் இறப்பு. 106 4. சிக்கா வதம் சாமாயிகம் கட்டு விடுகாறும் எஞ்சாமை ஐம்பாவம் விட்டொழுகல் சாமா யிகம். 107 கட்டு இன்னது கூறை மயிர்முடி முட்டி நிலையிருக்கை கூறிய கட்டென்று உணர். 108 சாமாயிக இடத்தின் தன்மை ஒரு சிறை இல்லம் பிறவழி யானும் மருவுக சாமா யிகம். 109 சாமாயிகம் செய்ய சிறப்பான காலம் சேதியம் வந்தனை பட்டினி ஆதியா ஓதிய காலம் அதற்கு. 110 சாமாயிக கால நடைமுறை பெற்ற வகையினால் சாமாயிகம் உவப்பின் முற்ற நிறையும் வதம். 111 சாமாயிக காலச் சிந்தனை தனியன் உடன்பிது வேற்றுமை சுற்றம் இனைய நினைக்கப் படும். 112 இதுவும் அது இறந்ததன் தீமைக்கு இழித்தும் பழித்தும் மறந்தொழியா மீட்டல் தலை. 113 இதுவும் அது தீயவை எல்லாம் இனிச்செய்யேன் என்று அடங்கித் தூயவழி நிற்றலும் அற்று. 114 இதுவும் அது ஒன்றியும் ஒன்றாதும் தான்செய்த தீவினையை நின்று நினைந்திரங்கல் பாற்று. 115 இதுவும் அது தனக்கும் பிறர்க்கும் உறுதிச் சொல்செய்கை மனத்தினில் சிந்திக்கற் பாற்று. 116 இதுவும் அது பிறர்கண் வருத்தமும் சாக்காடும் கேடும் மறந்தும் நினயாமை நன்று. 117 இதுவும் அது திருந்தார் பொருள் வரவும் தீயார் தொடர்பும் பொருந்தாமை சிந்திக்கற் பாற்று. 118 இதுவும் அது கூடியவை எல்லாம் பிரிவனவாம் கூடின்மை கேடின்மை சிந்திக்கற் பாற்று. 119 இதுவும் அது நல்லறச் சார்வு நவையுற நீக்கலும் பல்வகையாற் பார்க்கப் படும். 120 சாமாயிக விரத அதிசாரம் உள்ளம் மொழி செய்கை தள்ளல் விருப்பின்மை உள்ளார் மறத்தல் இறப்பு. 121 போசத உபவாசம் உவாட் டமியின்கண் நால்வகை ஊணும் அவாவறுத்தல் போசத மெனல். 122 உபவாசத்தில் நிகழும் விதி ஐம்பாவம் ஆரம்பம் நீராட்டுப் பூச்சாந்து நம்பற்க பட்டினியின் ஞான்று. 123 இதுவும் அது அறவுரை கேட்டல் நினைத்தல் உரைத்தல் திறவதிற் செய்யப் படும். 124 போசத உபவாசம் பொருள் உண்டி மறுத்தல் உபவாசம் போசதம் உண்டல் ஒருபோது எனல். 125 உபவாச நாளில் தொழில் செய்யாமை போச துபவாசம் என்றுரைப்பர் பட்டினிவிட்டு ஆரம்பம் செய்யான் எனில். 126 அதிசாரம் நோக்கித் துடையாது கோடல் மலந்துறத்தல் சேக்கைப் படுத்தல் இறப்பு. 127 இதுவும் அது கிரியை விருப்புக் கடைப்பிடி இன்மை உரிதின் இறப்பிவை ஐந்து. 128 தேசாவகாசிக விரதம் தேசம் வரைந்தொழுகல் கால வரையறையில் தேசாவ காசிக மென். 129 தேசாவகாசிக எல்லை மனைச் சேரி ஊர்புலம் ஆறடவி காதம் இனைய இடம் வரைதல் எண். 130 தேசாவகாசிக கால எல்லை ஆண்டொடு நாள்திங் களித்தனை என்றுய்த்தல் காண்தகு கால மதற்கு. 131 தேசாவகாசிக பெருமை எல்லைப் புறத்தமைந்த பாவமீண் டாமையின் புல்லுக நாளும் புரிந்து. 132 அதிசாரம் கூறல் கொணருதல் ஏவல் உருக்காட்டல் யாதொன்றும் விட்டெறிதல் கேடு. 133 அதிதி சம்விபாகம் உண்டி மருந்தோடு உறையுள் உபகரணம் கொண்டுய்த்தல் நான்காம் வதம். 134 விரதத்தின் பெயர் தானம் செயல்வையா வச்சம் அறம்நோக்கி மானமில் மாதவர்க்கு நற்கு. 135 இதுவும் அது இடர்களைதல் உற்றது செய்தலும் ஆங்கே படுமெனப் பண்புடை யார்க்கு. 136 உத்தம தானம் தரும் முறை உத்தமற்கு ஒன்பது புண்ணியத்தால் ஈவது உத்தம தானம் எனல். 137 தானம் செய்ய வேண்டும் உத்தம தானம் தயாதானம் தம்மளவில் வைத்தொழியான் செய்க உவந்து. 138 உத்தம தானத்தின் பயன் மனைவாழ்க்கை யால் வந்த பாவம் துடைத்தல் மனைநீத்தார்க்கு ஈயும் கொடை. 139 இதுவும் அது தான விடயத்தில் தடுமாற்றம் போந்துணையும் ஈனமில் இன்பக் கடல். 140 தானத்தில் சிறந்து நின்றார் சிரிசேன் இடபமா சேனையே பன்றி உரைகோடல் கொண்டை உரை. 141 அதிசாரம் பசியதன் மேல்வைத்தல் மூடல் மறைத்தல் புரிவின்மை எஞ்சாமை கேடு. 142 பகவான் பூஜை தேவாதி தேவன் திருவடிக்குப் பூசனை ஓவாது செய்க உவந்து. 143 பூஜையின் பெருமை தெய்வச் சிறப்பின் பெருமையைச் சாற்றுமேல் மையுறு தேரை உரை. 144 5. சல்லேகனை அதிகாரம் சல்லேகனையின் காரணம் இடையூறு ஒழிவில்நோய் மூப்பிவை வந்தால் கடைதுறத்தல் சல்லே கனை. 145 சல்லேகனை காலத்துச் சிந்தனை இறுவாய்க்கண் நான்கும் பெறுவாம் என்று எண்ணி மறுவாய நீக்கப் படும். 146 சல்லேகனை காலத்தில் செய்யவேண்டுவன பற்றொடு செற்றமே சுற்றம் தொடர்ப்பாடு முற்றும் துறக்கப் படும். 147 இதுவும் அது ஆலோ சனையின் அழிவகற்றி மாதவன்கண் மீள்வின்றி ஏற்றுக் கொளல். 148 இதுவும் அது கசிவு கலக்கம் அகற்றி மனத்தை ஒசியாமல் வைக்க உவந்து. 149 சல்லேகனை கால உணவு குறைப்பு முறை ஊணொடு பானம் முறைசுருக்கி ஓர்ந்துணர்ந்து மானுடம்பு வைக்கப் படும். 150 சல்லேகனையில் பஞ்ச மந்திரம் நினைக்க வேண்டும் மந்திரங்கள் ஐந்து மனத்துவரச் சென்றார்கள் இந்திரற்கும் இந்திரரே எண். 151 அதிசாரம் சாவொடு வாழ்க்கையை அஞ்சித்தான் மெச்சுதல் வாழ்வொடு நட்டார் நினைப்பு. 152 இதுவும் அது நிதானத்தோடு ஐந்திறப்பும் இன்றி முடித்தார் பதானம் அறுத்தார் எனல். 153 சல்லேகனையின் பயன் அறத்துப் பயனைப் புராண வகையில் திறத்துள்ளிக் கேட்கப் படும். 154 இதுவும் அது பிறப்பு பிணிமூப்புச் சாக்காடு நான்கும் அறுத்தல் அறத்தின் பயன். 155 இதுவும் அது பரிவு நலிவினொடு அச்சமும் இல்லை உருவின் பிறப்பில் லவர்க்கு. 156 இதுவும் அது கிட்டமும் காளிதமும் நீக்கிய பொன்போல விட்டு விளங்கும் உயிர். 157 இதுவும் அது எல்லையில் இன்ப உணர்வு வலிகாட்சி புல்லும் வினைவென் றவர்க்கு. 158 இதுவும் அது உலக மறியினும் ஒன்றும் மறியார் நிலைய நிலைபெற் றவர். 159 இதுவும் அது மூவுலகத்து உச்சிச் சூளா மணிவிளக்குத் தோவகையில் சித்தி யவர். 160 சிராவகர் படிநிலைகள் பதினோர் நிலைமையர் சாவகர் என்று விதியின் உணரப் படும். 161 தரிசன் காட்சியில் திண்ணனாய் சீல விரதம் இலான் மாட்சியுறு தரிசன் ஆம். 162 விரதிகன் வதம்ஐந்தும் சீலமோர் ஏழும் தரித்தான் விதியால் விரதி எனல். 163 சாமாயிகன் எல்லியும் காலையும் ஏத்தி நியமங்கள் வல்லியான் சாமாயிகன். 164 போசத உபவாசன் ஒருதிங்கள் நால்வகைப் பவ்வமே நோன்பு புரிபவன் போசத னாம். 167 அசித்தன் பழம்இலை காயும் பசியத் துறந்தான் அழிவகன்ற அச்சித்த னாம். 168 இராத்திரி அபுக்தன் இருளின்கண் நால்வகை ஊணும் துறந்தான் இராத்திரி அபுக்தன் எனல். 167 பிரமசரிய நிலை உடம்பினை உள்ளவாறு ஓர்ந்துணர்ந்து காமம் அடங்கியான் பம்மன் எனல். 168 அநாரம்பன் கொலைவரு ஆரம்பம் செய்தலின் மீண்டான் அலகிலநா ரம்பன் எனல். 169 அபரிக்ரகன் இரு தொடர்ப் பாட்டின்கண் ஊக்கம் அறுத்தான் உரியன் அபரிக்ர கன். 170 அனனுமதன் யாதும் உடன்பாடு வாழ்க்கைக்கண் இல்லவன் மாசில் அனனு மதன். 171 உத்திட்டன் மனைதுறந்து மாதவர் தாளடைந்து தோற்று வினையறுப்பான் உத்திட்ட னாம். 172 படிநிலையர் ஒழுக்கம் முன்னைக் குணத்தொடு தத்தம் குணமுடைமை பன்னிய தானம் எனல். 173 நூலுணர்தல் பாவம் பகையொடு சுற்றம் இவைசுருக்கி மோவமோடு இன்றி உணர். 174 (இது முதல் வரும் குறள்கள் இடைச் செருகலாகக் கருதப்படுகின்றன) நூல் கற்றலினால் வரும் பயன் அருங்கலச் செப்பினை ஆற்றத் தெளிந்தார் ஒருங்கு அடையும் மாண்புதிரு. 175 இதுவும் அது வந்தித்தாய்ந்து ஓதினும் சொல்லினும் கேட்பினம் வெந்து வினையும் விடும். 176 இதுவும் அது தரப்பினில் மீளாக் கடுந்தவம் நீருற்ற உப்பினில் மாய்ந்து கெடும். 177 இதுவும் அது காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றின் நாமம் கெடக்கெடும் நோய். 178 இதுவும் அது முத்தி நெறிகாட்டும் முன்னறியா தார்க்கெல்லாம் சித்தி அருங்கலச் செப்பு. 179 இதுவும் அது தீரா வினைதீர்க்கும் சித்திபதம் உண்டாக்கும் பாராய் அருங்கலச் செப்பு. 180 அருங்கலச்செப்பு முற்றிற்று |