இராம பாரதியார்

இயற்றிய

ஆத்திசூடி வெண்பா

     ஆத்திசூடி வெண்பா இராம பாரதியார் என்பவரால் இயற்றப்பட்டது. இந்நூல் ஆத்திசூடி நீதிவாக்கியங்களை கதைகள் வாயிலாக இனிது விளக்குவது. தொண்டை நாட்டில் பாகை என்னும் ஊரில் வாழ்ந்த கணபதி என்பவரின் மகன் ‘புன்னைவன நாதன்’ என்னும் வள்ளலைப் போற்றிப் பாடப்பட்ட நூல் இது. இதில் உள்ள 110 வெண்பாக்களில் தொடக்கத்தில் உள்ள காப்பு வெண்பா, இறுதியில் உள்ள ‘வாழி வெண்பா’, சாத்துக்கவி வெண்பா ஆகிய மூன்றும் நீங்கலாக 107 வெண்பாக்களிலும் ஓர் ஆத்திசூடிப் பாடலும், அதனோடு தொடர்புள்ள கதையோ, செய்தியோ உள்ளன.

தெய்வ வணக்கம்

விநாயகர் துதி

உலகம் புகழ்பாகை ஓங்குதொண்டை நாட்டின்
திலகன் கணபதிமால் செல்வன் - நலமிகுந்த
வாழ்வாகும் புன்னை வனநாதன் நற்றமிழ்க்குச்
சூழாத்தி சூடி* துணை.

* ஆத்திசூடி - விநாயகர்

நூல்

அறஞ்செய விரும்பு
கபிலை கதை

அருளார் கபிலை அறமே சயமென்று
இருளகல வேங்கைக்கு இயம்பும் - பெருமையினால்
மாவளரும் புன்னை வனநாதா மெய்த்துணையா
மேவியறஞ் செய்ய விரும்பு. 1

ஆறுவது சினம்
சடபரதர் கதை

ஆதி சவ்வீ ரன்சிவிகைக்கு ஆளாய்ச் சடபரதர்
தீது பொறுத்துச் சிறப்புற்றார் - சோதிப்
புயமா வளர்கின்ற புன்னைவன நாதா
செயமா றுவது சினம். 2

இயல்வது கரவேல்
அரிச்சந்திரன் கதை

இந்துமதி* விற்றும் அலைந்து ஈனனுக்கு ஆளாகிஅரிச்
சந்திரனே தன்னிலைமை தப்பாதான் - அந்த
மனுநெறிதேர் புன்னை வனநாதா பூமி
யினில்இயல்வ துகர வேல். 3

* இந்துமதி - சந்திரமதி

ஈவது விலக்கேல்
சுக்கிரன் கதை

மாவலியை மாலுக்கு மண்ணுதவா மல்தடுத்த
காவலினால் சுக்கிரனுங் கண்ணிழந்தான் - ஆவதனால்
நல்நீதி புன்னைவன நாதமகி பாவுலகத்
தில்ஈ வதுவிலக் கேல். 4

உடையது விளம்பேல்
சடாயுவின் கதை

உள்ளபடி தன்சிறகில் உண்டுபலம் என்றொருசொல்
விள்ளுஞ் சடாயுமுனம் வீழ்ந்ததுபார் - வள்ளல்
தனபதியே புன்னைவனத் தாடாளா வொன்னார்க்கு
இனதுடைய துவிளம் பேல். 5

ஊக்கமது கைவிடேல்
பகாசூரன் கதை

ஊரில் நரபலிக்கா வூர்சகட மேல்வீமன்
தீரன் பகாசூரன் தீதடக்கும் - காரணம்பார்
தேக்குபுகழ் புன்னைவன தீரனே யாவுறினும்
ஊக்க மதுகை விடேல். 6

எண்எழுத்து இகழேல்
துருவன் கதை

எண்ணரிய கோள் உடுக்கள்* எல்லாம் ஒருமையதாத்
திண்ணத் துருவர்கையில் சேர்ந்ததனால் - மண்ணுலகில்
போற்றுந் தமிழ்ப்பாகை புன்னைவன பூபாகேள்
ஏற்றெண் எழுத்திக ழேல். 7

* உடுக்கள் - நக்ஷத்திரங்கள்

ஏற்பது இகழ்ச்சி
திருமால் சரித்திரம்

மாவலிபால் மண்ணிரக்க மாதவனே வாமவுரு
ஆமென்றான் மற்றவர்க்கஃ தாகுமோ - மூவுலகில்
பேர்பரவும் புன்னைவனப் பேரரசே எவ்வகையால்
சீர்பெறினும் ஏற்ப திகழ்ச்சி. 8

ஐயம் இட்டுண்
பிரமராக்ஷதன் கதை

வன்பிரம ராக்கதன்றான் மங்கிலியப் பிச்சையருள்
என்பவளுக் கேகொடுத்தீ டேறினான் - அன்பதனால்
வள்ளலெனும் புன்னை வனநாதா வஞ்சமிலாது
உள்ளத்தி லேஐயமிட் டுண். 9

ஒப்புற வொழுகு
தாரணியின் தன்மை

தாரணிபோல் எவ்வுயிருந் தாங்குந் தகைமையதாச்
சீரணிந்து நாளுஞ் சிறந்தோங்க - ஆரந்
தழைந்தபுகழ்ப் புன்னைவனத் தாடாளா யார்க்குங்
குழைந்தொப் புறவொழு கு. 10

ஓதுவது ஒழியேல்
வேதவியாசர் கதை

மச்சகந்தி தன் வயிற்றில் வந்துதித்தும் ஓதலினால்
விச்சைபெற்ற வேத வியாசனைப்பார் - நிச்சயமே
பன்னுதமிழ்ப் புன்னைவன பார்த்திப* உண்மைநூ
லின்ஓ துவதொழி யேல். 11

* பார்த்திபன் - அரசன்

ஔவியம் பேசேல்
உத்தரன் கதை

மாதர்முன்னே உத்தரனும் மாபலவான் போலுரைத்து
காதமரில் அர்ச்சுனனாற் கட்டுண்டான் - ஆதலினால்
வண்மைபெறு புன்னை வனநாதா சீருடைய
திண்மையுன்னி ஔவியம்* பேசேல். 12

* ஔவியம் - பொறாமை

அக்கஞ் சுருக்கேல்
சிட்டுக் கதை

*மைக்கடல்கொண் முட்டைதனை வாங்குவோ மென்றுசிட்டு
புக்கதனை வென்றதுதன் புத்தியினால் - அக்கதைபோல்
வேளாளர் புன்னைவன மேகமே உண்மையெனக்
கேளாய்அக் கஞ்சுருக் கேல். 13

* மை - நீர்

கண்டொன்று சொல்லேல்
சத்தியவிரதன் கதை

கள்ளமின்றி முன்னே கனசத் தியவிரதன்
உள்ளதுசொல் லிக்கலந்தான் ஓர்வழியைத் - தெள்ளிமையோய்
மாதனதா புன்னைவன வள்ளலே மேலெண்ணா
ஏதுங்கண் டொண்று சொல் லேல். 14

ஙப்போல் வளை
காக்கைகளின் இயல்பு

தீதில் அரிட்டங்கள் செய்யவுண வைக்கொள்ள
மேதினியில் தம்மினத்தை மேவுதலால் - நீதிநெறி
போற்றுபுகழ்ப் புன்னைவன பூபால உற்றாரை
மாற்றிருமெய் ஙப்போல் வளை. 15

சனி நீராடு

ஞாயிறுயிர்க் கீறுதிங்கள் நம்பர்அருள் செய்கிலர்செவ்
வாய்பிணிதுக் கங்குருநாள் வாழ்வுபோம் - தூயவெள்ளி
போடிவைகள் புன்னைவன பூபாலா மிக்கபுத
னோடு சனிநீர் ஆடு. 16

ஞயம்பட உரை
பட்டினத்துப்பிள்ளை இயல்பு

தொட்டடித்தோன் நன்றிசெய்த தூயோன் இருவருக்கும்
பட்டினத்துப் பிள்ளை பகர்ந்ததுபார் - *மட்டுலவுந்
தென்பாகை புன்னைவன தீரனே யாரிடத்தும்
அன்பாய் ஞயம்பட உரை. 17

* மட்டு - தேன்

இடம்பட வீடிடேல்

நித்தியமாம் வீட்டு நெறியிலிடம் பாடல்லால்
பொய்த்தஇன்ப வீட்டிற் பொருளடையா - தத்தம்
நடையறியும் புன்னைவன நாதனே பூமி
இடைஇடம் படவீடி டேல். 18

இணக்கம் அறிந்து இணங்கு
விக்கிரமாதித்தன் கதை

செய்யபுகழ் விக்கிரமா தித்தனொரு தட்டாரப்
பையல் உறவுபற்றிப் பட்டதனால் - வையம்
மணக்குஞ்சீர்ப் புன்னை வனநாதா நீயும்
இணக்கம் அறிந்திணங் கு. 19

தந்தைதாய்ப் பேண்
கருடன், அந்தணன் ஆகியவர்களின் கதை

அனையிடர்தீர்த் தான்கருடன் அந்தணன்செங் கந்தை
தனையெடுத்துச் சாவு தவிர்த்தான் - இனையவர்போல்
சீராரும் புன்னைவன தீரனே நாள்தோறும்
பேராரும் தந்தைதாய்ப் பேண். 20

நன்றி மறவேல்

உன்னாட்டார் நன்றால் உயிர்காத்துக் கோத்திரத்தில்
எந்நாளும் வாழ்ந்தே இருப்பதனால் - பன்னாளும்
பூதலத்தின் மேன்மைபெறு புன்னைவன நாதனே
ஏதமற நன்றிமற வேல். 21

பருவத்தே பயிர்செய்
வேளாளர் கதை

உன்னாட்டில் பொற்களந்தை ஊரர்நன்னாட் செய்தபயிர்
பொன்னே விளையப் புகழ்பெற்றார் - ஒன்னார்
பயந்திடுவேற் புன்னைவன பார்த்திபா நீயுஞ்
செய்யும்பருவத் தேபயிர் செய். 22

மண்பறித்து உண்ணேல்
கூதைசகடன் கதை

கூறவழக் கெண்ணாத கூதைசக டற்குவண்டில்
ஏறமுன்போல் வாரா திருந்ததனால் - தேறியென்றும்
மாதிலகா புன்னைவன மன்னாகேள் பூமியதில்
ஏதிலன்* மண்பறித்துண் ணேல். 23

* ஏதிலன் - அயலான்

இயங்கித் திரியேல்

மன்னவனுக் குன்னாட்டார் வந்து முடிசூட்ட
முன்னனலின் மூழ்கி முதன்மைபெற்றார் - அன்னவர்போல்
நன்றறியும் புன்னைவன நாதனே வையகத்தில்
என்றும்இயங் கித்திரி யேல். 24

அரவம் ஆட்டேல்
பரிசித்து கதை

இருடிமேற் செத்தபாம் பேற்றிப் பரிச்சித்து
அரவினால் பட்டது அறிந்தே - திரைக்கடல்சூழ்
மண்ணுலகிற் புன்னைவன மன்னவா பாவமிதென்று
எண்ணி *அரவமாட் டேல். 25

* அரவம் - பாம்பு

இலவம்பஞ்சியில் துயில்

அன்னத்தின் *தூவிபொங்கர் ஆகும் அரசற்குப்
பன்னும் பருத்திதான் பாங்கலவே - அன்னதனால்
மன்னனெனும் புன்னை வனநாதா மையிரவில்
துன்இலவம் பஞ்சில் துயில். 26

* தூவி - இறகு

வஞ்சகம் பேசேல்
தூருவாசர் கதை

மாயனார் தம்மக்கள் மாமுனியைக் கேட்டகெற்பம்
ஏயவரைக் கொல்லும் இருப்புலக்கை - ஆயதனால்
*மாரனெனும் புன்னை வனநாதா வையத்தில்
சீருறா வஞ்சகம்பே சேல். 27

* மாரன் - மன்மதன்

அழகலாதன செயேல்
வாணாசுரன் கதை

வாணன் சிவனை வணங்கிவசஞ் செய்துலகோர்
காணநின்று தன்வாயிற் காக்கவைத்துப் - பாணியெலாம்
போனதனால் புன்னைவன பூபாலா யாரிடத்தும்
தான் அழக லாதனசெய் யேல். 28

இளமையில் கல்
காளிதாசன் கதை

கல்வியிள மைக்குள்இலாக் காளிதா சன்மனையாள்
வல்வசையாற் பொல்லா மரணமுற்றுச் - செல்லலுற்றாள்
நற்றமா புன்னைவன நாதா இதையறிந்து
கற்றால் இளமையில் கல். 29

அறனை மறவேல்
பத்திரகிரியார், சனகன், விதுரன் ஆகியவர்களின் இயல்பு

பத்திரகிரி ராசன் பகர்சனகன் மெய்விதுரன்
சித்தபரி சுத்தஞ் செலுத்தியதால் - இத்தரையில்
மன்னனெனும் புன்னை வனநாதா யாவுறினும்
இன்பாம் அறனைமற வேல். 30

அனந்தல் ஆடேல்

காலைதுயில் சீலம்போங் கண்டபகல் ஆக்கம்போம்
மாலைதுயில் நோயாம் வகையறிந்து - ஞாலமதில்
புண்ணியமெ லாந்தெரிந்த புன்னை வனநாதா
எண்ணி *அனந்தலா டேல். 31

* அனந்தல் - தூக்கம்

கடிவது மற
இரணியன் கதை

இரணியனும் ஆங்காரத் தெண்ணா துரைத்து
*நரஹரியால் இற்றான்முன்னாளில் - #சுரதருவைப்
போலே கொடுக்கின்ற புன்னைவனநாதா
மாலே கடிவது மற. 32

* நரஹரி - நரசிங்கம்
# சுரதரு - கற்பகம்

காப்பது விரதம்
சிலாதன் கதை

துய்ய சிலாதன்செய் துங்கவிர தங்களெலாஞ்
செய்யநந்தி யாகச் சிறப்புற்றான் - பொய்யலவே
தேன்கால்சொற் புன்னைவன தீரனே ஐம்புலனைத்
தான்காப் பதுவிர தம். 33

கிழமை படவாழ்
தொண்டைமண்டலத்தார் கதை

தண்டமிழ்க்காக் கம்பருக்குத் தாம்அடிமை யென்றுதொண்டை
மண்டலத்தார் ஏட்டில் வரைந்ததுபோல் - எண்டிசைக்கும்
பொன்னான புன்னைவன பூபாலா தென்பாகை
மன்னா *கிழமைபட வாழ். 34

* கிழமை - உரிமை

கீழ்மை அகற்று

பெண்கேட்ட வேந்தனுக்குப் பெண்ணாயைப் பந்தரிலே
கண்காண நின்குலத்தார் கட்டிவைத்த - பண்பதுபார்
நன்பாகை புன்னைவன நாதனே அப்படிப்போல்
துன்பான கீழ்மை அகற்று. 35

குணமது கைவிடல்

நீர்கலந்த பாலைஅன்னம் நீர்பிரித்துக் கொள்வதுபோற்
சீர்கலந்தார் நற்குணமே தேர்ந்துகொள்வார் - ஏர்கொள்
புகழாளா புன்னைவன பூபால னேமிக்
(க)குண மதுகைவி டேல். 36

கூடிப் பிரியேல்
அருச்சுனன் கதை

அர்ச்சுனன்மால் சார்பிழந்த அன்றே கருதலர்த்துன்
கைச்சிலைவெற் பாக்கனத்துக் கைதளர்ந்தான் - நிச்சயமே
மன்றல்சூழ் புன்னை வனநாதா தக்கோரை
என்றுங்கூ டிப்பிரி யேல். 37

கெடுப்பது ஒழி
இராமன் கதை

வாலிகெட ராமனொரு வாளிதொட்ட வெம்பழிக்காம்
மேலொருசன் மத்திலன்னோன் மீண்டுகொன்றான் - ஞாலமதில்
வல்லவனே புன்னை வனநாதா யாரெனினும்
ஒல்லை கெடுப்பது ஒழி. 38

கேள்வி முயல்
பகவத்கீதை மான்மியம்

முன்பகவற் கீதைமுனி யுரைக்கக் கன்னிமரந்
தன்படியே கேட்டுலகில் தார்வேந்தர் - அன்புறல்போல்
மாதவனே புன்னை வனநாதா நன்மையுற
மூதறிவோர்க் கேள்வி முயல். 39

கைவினை கரவேல்
இந்திரன் கதை

இந்திரன் வாள்வைக்க எடுத்துமுன்னே மாதவத்தோர்
தந்தருமம் விட்டுத் தவம்அழிந்தார் - சந்நதமும்
பாகையில்வாழ் புன்னைவன பார்த்திபா வாகையினால்
ஏகை வினைகர வேல். 40

கொள்ளை விரும்பேல்
துரியோதனன் கதை

கொட்டமிட்டே உத்தரத்திற் கோக்கொள்ளை யாடவந்து
துட்டனர வக்கொடியோன் தோற்றிடுக்கண் - பட்டதனால்
நீதிபரா புன்னைவன நேயனே ஏதெனினும்
பேதைமையாக் கொள்ளைவிரும் பேல். 41

கோதாட்டொழி
செம்பியன் கதை

நம்பனுக்காஞ் செவ்வந்தி நன்மலர்வே சிக்களித்த
செம்பியனும் மண்மழையாற் சீரழிந்தான் - அம்புவியில்
எவ்வாறும் புன்னைவனத் தேந்தலே நீநீதிக்
கொவ்வாத *கோதாட் டொழி. 42

* கோதாட்டு - குற்றமான செய்கை

சக்கரநெறி நில்
தண்டன் கதை

மண்டலத்திற் செங்கோல் வழியிற் செலுத்தாமல்
கண்டகனென் னும்ஒருவன் தான்மடியக் - கண்டதனால்
*வேள்புரையும் புன்னைவன வித்தகா எந்நாளும்
நீள்சக் கரநெறி நில். 43

* வேள் - மன்மதன்

சான்றோர் இனத்திரு
அகத்தியர் கதை

ஈசன் உமைமணத்தில் ஏவடதிக் காழ்ந்ததெனக்
காசினிசீ ராகக் கலசமுனி* - வாசமதாற்
செய்ததுபார் புன்னைவன தீரனே அப்படிச்சீர்
எய்திடச்சான் றோரினத் திரு. 44

* கலசமுனி - அகஸ்தியர்

சித்திரம் பேசேல்
சூர்ப்பநதி கதை

சீதைபண்பு இராவணற்குச் செப்பிக் குலங்கெடுத்த
பாதகிமூக் கன்றிழந்த பங்கம்பார் - ஆதலினால்
தாரணிக்குட் புன்னைவனத் தாடாளா தன்னையெண்ணாச்
சேரலர்க்குச் சித்திரம்பே சேல். 45

சீர்மை மறவேல்
கங்கைகோத்திரன் கதை

உற்றதொடைப் புண்ணுக்கு உடைகீறிக் கட்டிநின்றான்
கொற்றவன்முன் னுன்கங்கைகோத்திரத்தான் - வெற்றிபுனை
மன்னான புன்னைவன வள்ளலே ஆதலினால்
எந்நாளுஞ் சீர்மைமற வேல். 46

சுளிக்கச் சொல்லேல்
சகுனி கதை

சகுனிதுரி யோதனற்குச் சற்பனையாக் கேடு
மிகவுரைத்துத் தன்னுயிரும் ஈந்த - தகைபார்
மனுநெறிதேர் புன்னை வனநாதா யாவர்
எனினுஞ் சுளிக்கச்சொல் லேல். 47

சூது விரும்பேல்
பாண்டவர் கதை

தோராத நூற்றுவருந் தோற்றபஞ்ச பாண்டவரும்
பாரே அகன்றுபட்ட பாரதம்பார் - பேராண்மை
வற்றாத புன்னைவன மாகடலே மிக்கசெல்வம்
பெற்றாலும் சூதுவிரும் பேல். 48

செய்வினை திருந்தச் செய்
தக்கன் கதை

வேள்விக்கு மூவருமே வேண்டுமென்று எண்ணாமல்
தாழ்வுசெய்து தக்கன் தலையிழந்தான் - ஏழுலகும்
வீசுபுகழ்ப் புன்னைவன வித்தகா செய்கையறிந்து
(ஏ)செய் வினைதிருந்தச் செய். 49

சேர்விடம் அறிந்து சேர்
மார்க்கண்டன் கதை

இருமைக்கும் மெய்த்துணையாம் என்றுமார்க் கண்டன்
அரன் அடியைச் சேர்ந்தான் அவன்போல் - அருள் பெருகும்
*பூசா பலாபாகை புன்னைவன மேமனமொத்து
(ஏசேர் விடமறிந்து சேர். 50

* பூசாபலம் - தேவபூசையின் பலன்.

சையெனத் திரியேல்
மாரீசன் கதை

தூயரகு ராமன்பால் சோரமுனி மாரீசன்
மாயமா னாய்த்திரிந்து மாய்ந்ததுபார் - ஞாயமன்று
வீசுபுகழ் புன்னைவன மேகமே இத்தலத்தில்
(ஏ)சை* யெனத்திரி யேல். 51

* சையென - சீ என்று அருவருக்கும்படி

சொற்சோர்வு படேல்
கும்பகர்ணன் கதை

நித்தியத்தைக் கேட்கப்போய் நித்திரையென் றேகுளறிப்
புத்தியற்ற கும்பகர்ணன் பொன்றினன்பார் - மத்தமத
குன்றம்போற் புன்னைவனக் கொற்றவா பாகைமன்னா
என்றுஞ்சொற் சோர்வு படேல். 52

சோம்பித் திரியேல்
நளன் கதை

நளனிருது பன்னன்தேர் நாளொன்றில் வீமன்
வளநகரிற் சேர்த்து மனையாள் - உளமகிழ
நின்றதுபார் புன்னைவன நேயனே தன்முயற்சி
என்றுஞ்சோம் பித்திரி யேல். 53

தக்கோனெனத் திரி
திருஞானசம்பந்தர் கதை

சைவசம யத்தைத் தலையாகச் சம்பந்தர்
செய்ததனால் யாண்டுஞ் சிறப்புற்றார் - வையகத்தில்
பொங்குபுகழ்ப் புன்னைவன பூபாலா பாகைமன்னா
எங்குந்தக் கோனெனத் திரி. 54

தானமது விரும்பு
கன்னன் கதை

முன்செய் அறத்தை *முகுந்தற்கு அளித்தகன்னன்
பின்செயலும் ஈதலுறப் பேறுபெற்றான் - தன்செயல்பொன்
தாதாவாம் புன்னைவனத் தாடாளா பூமியின்மேல்
(ஏ)தா னமது விரும்பு. 55

* முகுந்தன் - கிருஷ்ணமூர்த்தி

திருமாலுக்கு அடிமைசெய்

அண்டர் முனிவர்க்கா அவதாரம் பத்தெடுத்து
*மிண்டரைவெட் டித்தரும மேபுரக்கக் - கண்டதனால்
மந்தரனே புன்னைவன வள்ளலே யெந்நாளுஞ்
செந்திருமா லுக்கடிமை செய். 56

* மிண்டர் - இராக்கதர்

தீவினை அகற்று
தானவர் இயல்பு

ஈசன்வர முஞ்சிதைந்தே எய்தியபேர் *ஆக்கமும்போய்த்
#தேசழிந்து தானவர்கள் தேய்ந்ததனாற் - காசினியில்
வாழ்பாகை புன்னைவன மன்னவா நன்மையன்றிச்
சூழ்தீ வினையகற் று. 57

* ஆக்கம் - செல்வம்
# தேசு - அழகு

துன்பத்திற்கு இடங்கொடேல்
இந்திரன் கதை

தூயரா மன்பகையாற் துன்பமுற்றுத் தஞ்சமென்ற
* சேயினையுந் தேவேந் திரன்இகழ்ந்த - ஞாயம்பார்
மாதுங்கா புன்னைவன மன்னவா அஃதறிந்து
(ஏ)துன்பத் திற்கிடங்கொ டேல். 58

* சேய் - புத்திரன்

தூக்கி வினைசெய்
வாலி கதை

எதிரிபலம் பாதிகொள்வான் என்றறிந்து வாலி
வதைபுரிய ராமன் மறைந்து - துதிபெறல்பார்
பாரளந்த புன்னைவன பார்த்திபா அப்படிப்போல்
சீரறிந்து தூக்கிவினை செய். 59

தெய்வம் இகழேல்
திரிபுரவாசிகள் கதை

*தாரகத்தார் மூவரையுந் தாழ்வுசெய்து தங்கள்தங்கள்
காரியத்தால் வேறு கதியளித்தார் - #தாரணிக்குள்
மாதவனே புன்னை வனநாதா மீதிடுக்கண்
ஏதுறினுந் தெய்வமிக ழேல். 60

* தாரகத்தார் - சிவபெருமான்
# தாரணி - பூமி

தேசத்தோடு ஒத்துவாழ்

எல்லா மதத்திற்கும் எவ்வுயிருக்கும் நீர்நிழல்போல்
நல்ல ஆதரவே நயந்தருளி - வல்லாண்மை
சூழ்தேக புன்னைவனத் தோன்றலே நீயுமென்றும்
வாழ்தேசத் தோடொத்து வாழ். 61

தையல்சொற் கேளேல்
சித்திராங்கி கதை

மாதுசித்தி ராந்திசொல்லால் மைந்தனைக்கை கால்களைந்து
ஏதுபெற்றான் ஓர்மன்னன் இப்புவியில் - நீதிநெறி
மாதவனே புன்னை வனநாதா பாகைமன்னா
ஏதெனினுந் தையல்சொற்கே ளேல். 62

தொன்மை மறவேல்
பாஞ்சாலன் கதை

பண்டு* துரோணன் பழமையெண்ணாப் பாஞ்சாலன்
மிண்டமரில் அர்ச்சுனனால் வீறழிந்தான் - கண்டதன்றோ
பொன்னாளும் புன்னைவன பூபாலா தன்னையறிந்து
எந்நாளுந் தொன்மைமற வேல். 63

* பண்டு - பண்டைக்காலம்

தோற்பன தொடங்கேல்
மகிடாசூரன் கதை

சண்டனொடு மிண்டன் தனைவென்ற சங்கரிபால்
*மிண்டுமகி டன்பொருது வெட்டுண்டான் - புண்டரிக
மாதாரும் புன்னை வனநாதா நீள்நிலத்தில்
(ஏ)தோற் பனதொடங் கேல். 64

* மிண்டு - நெருங்கி

நன்மை கடைப்பிடி
அரசின் கதை

அரசமரந் தொல்கடல்நீந்து அந்தணனைக் #கால
புரவழியிற் காத்த புகழின் - பெருமையைப்பார்
*மன்றலந்தார் புன்னைவன வள்ளலே யாவர்க்கும்
என்றும்நன் மைகடைப் பிடி. 65

* மன்றல் - வாசனை
# காலபுரம் - எமபுரம்

நாடொப்பன செய்
தருமர் கதை

நாடோடும் போது நடுவோட வேண்டுமென்று
தேடுந் தருமர்சொன்ன சீரதனால் - நீடு
பொருந்துபுகழ் புன்னைவன பூபாலா நன்றாய்த்
தெரிந்து நாடொப்பன செய். 66

நிலையிற் பிரியேல்
மலைகளின் கதை

சஞ்சரித்து நின்ற சயிலங்* களையெல்லாம்
வெஞ்சினத்தால் இந்திரன்முன் வெட்டினதால் - செஞ்சாணால்
மண்ணளந்த புன்னை வனநாதா என்றும்நம்மை
எண்ணிநிலை யிற்பிரி யேல். 67

* சயிலம் - மலை

நீர் விளையாடேல்
கண்ணன் மக்கள் கதை

கண்ணனருண் மைந்தர் கருங்கடலில் நீராடி
எண்ணரும்வாட் கோரையினால் *இற்றனரால் - புண்ணியத்தின்
கண்ணான புன்னைவனக் காராளா மேல்வருங்கேடு
எண்ணாநீ நீர்விளையா டேல். 68

* இற்றனர் - சேதமடைந்தனர்

நுண்மை நுகரே
கௌசிகன் மாணாக்கர் கதை

கோசிகன்மா ணாக்கர் கூறரிய நாய்நிணத்தைப்
போசனஞ்செய் தேபுலையாய்ப் போயினரால் - வீசுபுகழ்த்
தென்பாகை புன்னைவன தீரனே எள்ளளவும்
இன்பாக நுண்மைநுக ரேல். 69

நூல் பலகல்
கவி வீரராகவ முதலியார் கதை

கற்றதனா லுங்கள் கவிவீர ராகவமால்
வெற்றிபர ராசசிங்க மேன்மைசெயப் - பெற்றதனால்
ஞாலமதிற் புன்னைவன நாதனே நற்பருவ
காலமதில் நூல்பல கல். 70

நெற்பயிர் விளை

அண்டர் முதலோர்க்கு அமிர்தமய மாவடிவு
கொண்டறமே முத்திக்குங் கொள்கருவாக்* - கண்டதனால்
தக்கபுகழ் புன்னைவனத் தாடாளா எப்பயிற்க்கும்
மிக்ககுண நெற்பயிர் விளை. 71

* கரு - வித்து

நேர்கோனெறி நில்
வேளாளர் இயல்பு

வேத நெறிநின்ற வேதியர்போல் இன்மரபோர்
ஆதிமுத லாப்புகழை யாண்டதுபார் - *ஆதுலர்க்குத்
தாயான புன்னைவனத் தாடாளா பாகைமன்னா
நீயுநேர் கோனெறி நில். 72

* ஆதுலர் - யாசகர்

நைவினை நணுகேல்
இராமர் கதை

செய்தவமும் பாராமற் சீராமன் சம்புகனை
*நைதலின்றிச் சென்னிகொண்ட ஞாயம்பார் - #உய்தரும
வானேநற் புன்னை வனநாதா மிக்கதுஷ்ட
ரேனுநைவி னைநணு கேல். 73

* நைதல் - வருந்துதல்
# உய்தல் - பிழைத்தல்

நொய்ய வுரையேல்
அருச்சுனன் கதை

காந்தருவன் றஞ்சமென்ற காலையின்மா யோன்பகையைச்
சிந்தையில்வைத் தெண்ணினனோ தேர்விசயன் - பைந்தமிழோர்
போற்றுபுகழ்ப் புன்னைவன பூபாலா யாரெனினும்
ஏற்றதற்பின் நொய்யவுரை யேல். 74

நோய்க்கு இடங்கொடேல்
இலக்குமணன் கதை

பசிநோய் இலக்குமணன் பார்வனத்தில் முன்னே
நசியாமல்* நீக்கி நலமா - இசைபெற்றான்
பொன்னாளும் புன்னைவன பூபாலா அப்படிப்போல்
எந்நாளும் நோய்க்கிடங் கொடேல். 75

* நசியாமல் - தான்கெடாமல்

பழிப்பன பகரேல்
கைகேசி கதை

சூடுமுடி ராகவனார் சூடாமற் கைகேசி
கேடுசொல்ல நிந்தை கிடைத்ததுபார் - நீடுபுகழ்க்
காராளா புன்னைவனக் கற்பகமே யாரிடத்தும்
*ஏராப் பழிப்பனசொல் லேல். 76

* ஏர் - அழகு

பாம்பொடு பழகேல்
வாசுகி கதை

வாசுகிமுன் நாட்பழகும் வானோர்க்கு அமுதெழுமுன்
மோசமுற நஞ்சுமிழ்ந்த மூர்க்கம்பார் - காசினியில்
நன்றறியும் புன்னைவன நாதா இதையறிந்தே
என்றும்பாம் போடுபழ கேல். 77

பிழைபடச் சொல்லேல்
சாபாலி கதை

சாபாலி ராமன் சபையிலோர் சொற்பிழைத்துக்
கோபாலன் நஞ்சுடர்மெய் குன்றியே - *சோபமுற்றான்
ஆதலினாற் புன்னைவன ஐயனே எவ்விடத்தும்
ஏதும் பிழைபடச்சொல் லேல். 78

* சோபம் - வருத்தம்

பீடுபெற நில்
வேளாளர் இயல்பு

நீலிபழி யைக்களைந்து நின்மரபில் வேளாளர்
சூலிமுது கிற்சுடவே சோறிட்ட - மேலான
ஞாயம்பார் புன்னைவன நாதனே அப்படிப்போல்
நீயுமிகப் பீடுபெற நில். 79

புகழ்பட வாழ்
இந்திரத்துய்ம்மன் கதை

விழுமிந் திரத்துய்ம்மன் மிக்கபுகழ் சொல்லிக்
கழறுமுன்மால் நற்கழல்சேர் காதை - பழமையன்றோ
செய்யபுகழ்ப் புன்னைவன தீரனே நீயுமிந்த
வையம் புகழ்பட வாழ். 80

பூமி விரும்பு

தலந்தீர்த்தந் தானந் தவஞ்சேர்சந் தானம்
நலம்பெறலாற் தேவரெலாம் நாடி - நிலந்து திப்பார்
மந்திரியே புன்னை வனநாதா ஆதலினால்
*புந்தியினீ பூமிவிரும் பு. 81

* புந்தி - புத்தி

பெரியாரைத் துணைக்கொள்
பிரகலாதன் கதை

தந்தை இரணியனைத் தள்ளியவன் மைந்தன்முன்னே
சிந்தையின்மா யோன்துணையே தேடியுய்ந்தான் - சந்ததமும்
நட்பறியும் புன்னைவன நாதமகி பாவுலகிற்
குட்பெரியா ரைத்துணைக் கொள். 82

பேதைமை யகற்று
திலீபன் கதை

கோவதைசெய் யப்பிடித்த கோளரிக்குத் தன்னுடலை
ஈவனென்றா னேதிலீபன் என்னுமன்னன் - ஆவதனால்
நட்பாளும் புன்னைவன நாதமன்னா எப்போதும்
உட்பேதை மையகற் று. 83

பைதலோ டிணங்கேல்
கட்டியங்காரன் கதை

சச்சந் தனைமுன் சதிகட்டி யங்காரன்
நிச்சயமாய்ச் செய்த நிறைபிழைபார் - பொற்சிகர
தீபமெனும் புன்னைவன தீரனே ஆனதுகண்டு
(ஏ)*பைத லோடிணங் கேல். 84

* பைதல் - சிறுபிள்ளைத்தனம்

பொருள்தனைப் போற்றிவாழ்
நவநிதி பெற்ற ஒருவன் கதை

நவநிதிபெற் றுந்தன் னம்பரருள் இல்லார்க்கு
*அவிழும்நல்கான் காப்பான் அவன்போற் - புவிதழையத்
தேன்பொழிசொற் புன்னைவன தீரனே நீ என்றும்
வான்பொருள் தனைப்போற்றி வாழ். 85

* அவிழ் - சோறு

போற்றடிப் பிரியேல்
பிருங்கிமகரிஷி கதை

சங்கரனை யன்றியுமை தன்னைவலஞ் செய்யாமல்
பிருங்கிரிஷி மூன்றுகால் பெற்றதனால் - துங்க
மனந்தளராப் புன்னை வனநாதா தொண்டர்
இனம்போற் றடிப்பிரி யேல். 86

மனந்தடுமாறேல்
கஞ்சனூர் ஆழ்வார் கதை

கஞ்சனூர் ஆழ்வார் கலங்கா தறஞ்செய்தே
எஞ்சாப் பரமபதம் எய்தினர்பார் - *தஞ்சமென்பார்
புண்ணியமா மெய்த்துணையாம் புன்னைவன பூபதியே
எண்ணி மனந்தடுமா றேல். 87

* தஞ்சம் - அடைக்கலம்

மாற்றானுக்கு இடங்கொடேல்
காகத்தின் கதை

காகம் வருந்திவரக் காரிருளில் நன்மைசெய்த
கூகைபகற் பட்ட கொடுமையினால் - வாகு
புனைதாமா புன்னைவன பூபாலா மோசம்
எனமாற்றா னுக்கிடங்கொ டேல். 88

மிகைப்படச் சொல்லேல்
சங்கராசாரியார் கதை

சங்கரா சாரியனார் தாயை இகழ்குலத்தார்
தங்கண்மனை யேசுடலை தானாகப் - பங்கமுற்றார்
ஆதலினாற் புன்னைவன ஐயனே யாரிடத்தும்
ஏதும் மிகைபடச்சொல் லேல். 89

மீதூண் விரும்பேல்

இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்குங்
*கழிபே ரிரையான்கண் நோயென்று - உளமுதுநூல்
வாக்கியத்தாற் புன்னை வனநாதா முன்னயிறல்
போக்கிமீ தூண்விரும் பேல். 90

* கழி - மிகுந்த

முனைமுகத்து நில்லேல்
நரியின் கதை

ஆட்டுக் கடாப்போரில் அன்றுதிரம் வேட்டுநரி
மாட்டிக்கொண் டேயுயிர்போய் மாண்டதுபார் - தோட்டுமலர்
மாமருவும் புன்னை வனநாதா வீணாக
(வே)முனைமு கத்துநில் லேல். 91

மூர்க்கரோடு இணங்கேல்
விடதாரி கதை

வேங்கை வரிப்புலிக்குத் தீர்த்தவிட தாரியென
ஓங்குமௌவை சொன்மூ துரைப்பொருள்பார் - பாங்குடைய
காமாற்றும் புன்னைவனக் காராளா வையகத்தில்
(ஏ)மூர்க்க ரோடிணங் கேல். 92

மெல்லினல்லாள் தோள்சேர்

*போதவே நற்குணங்கள் போந்துந் தனைமூத்த
மாதரின்பந் தீதே மனுநெறிபார் - ஆதலினால்
துய்யபுகழ்ப் புன்னைவனச் சோமா இளையாளாஞ்
செய்யமெல்லி னல்லாடோள் சேர். 93

* போத - முழுதும்

மேன்மக்கள் சொற்கேள்
தசரதன் கதை

ஆசிரியன் சொற்கேட்ட அன்றே தசரதனார்
கோசிகன்பால் ராகவனைக் கூட்டியதால் - தேசுபெற்றார்
நாட்கமலைப் புன்னைவன நாதமகி பாதருமங்
கேட்கின்மேன் மக்கள்சொற் கேள். 94

மைவிழியார் மனையகல்
விப்பிரநாராயணர் கதை

விப்பிரநா ராயணன்முன் வேசிதன்மேல் ஆசையினால்
இப்புவியிற் கட்டுண்டு இழுக்குற்றான் - தப்பலவே
சைவநெறிப் புன்னைவனத் தாடாளா எந்நாளும்
மைவிழி யார்மனை யகல். 95

மொழிவது அறமொழி
புருஷாதி மிருகத்தின் கதை

வீமனுட லிற்பாதி மெய்வழக்கில் தேர்ந்துபுரு
டாமிருகத் தின்பங்கென் றார்தருமர் - ஆமவர்போல்
பூமியெலாங் கொண்டாடும் பொய்யாத புன்னைவன
(மே)மொ ழிவதற மொழி. 96

மோகத்தை முனி

தேவர் முனிவர்மண்ணோர் தென்புலத்தார்க் கும்மோகம்
பாவவித்தென் றேதும் பழமறைகள் - ஆவதனால்
வேளாள புன்னைவன வித்தகா இத்தரையில்
மூளுமோ கத்தை முனி. 97

வல்லமை பேசேல்
பூதனை கதை

குழந்தையென்று *மாயனைப்போய் கொல்லமுலைப் பாலீந்து
இழந்ததுயிர் என்பதுல கெங்கும் - முழங்குதலால்
வீறாளா புன்னைவன மேகமே யாரிடத்தும்
மாறான வல்லமைபே சேல். 98

* மாயன் - கிருஷ்ணன்

வாதுமுற் கூறேல்
விசுவாமித்திரன் கதை

இந்திரன்முன் கோசிகன்வ திட்டருடன் வாதிலரிச்
சந்திரனைப் பொய்யனென்ற தப்பிதத்தால் - வந்ததுபார்
மாதவனே புன்னை வனநாதா வாயிடும்பால்
ஏதெனினும் வாதுமுற்கூ றேல். 99

வித்தை விரும்பு
திருவள்ளுவர் கதை

வள்ளுவரைக் கல்வியன்றோ வண்டமிழ்ச் சங்கஞ் செயிக்கத்
தெள்ளுதமிழ் நூலுதவி செய்ததெல்லாம் - உள்ளதன்றோ
சந்திரனே புன்னைவனத் தாடாளா பேரறிவாம்
புந்தியினில் வித்தை விரும்பு. 100

வீடுபெற நில்
ஜனகன் கதை

நிலையா வுடல்பொருள் நீரில்நிறை கஞ்ச
மலரிலைபோல் எத்தனைநாள் வாழ்ந்தும் - இலகுபொருட்
பத்தியொன்றும் புன்னைவனப் பண்பா சனகனைப்போல்
நித்தியமாம் வீடுபெற நில். 101

உத்தமனா யிரு
வியாசர், விதுரர், வதிஷ்டர் ஆகியவரின் கதைகள்

வேத வியாசன் விதுரன் உருப்பசிதன்
காதன்மைந்த னான கன்வதிட்டன் - நீதியைப்பார்
நேயத்தாற் புன்னைவன நீதிபரா தாரணியில்
(ஏ)யுத் தமனா யிரு. 102

ஊருடன் கூடிவாழ்

ஊருந்தா யுஞ்சரியே யூரையன்றி யேதனிவாழ்ந்
தாருந்தா யைத்தனிவாழ்ந் தாருமொப்பார் - பாரின்பால்
பொன்னூரும் புன்னைவன பூபாலா நீயிதெண்ணி
மன்னூ ருடன்கூடி வாழ். 103

வெட்டெனப் பேசேல்
சிசுபாலன் கதை

தருமருயர் வேள்வி தனிற்சிசுபா லன்பார்த்
தரியைநிந்தை சொல்லி யழிந்தான் - தெரிவதன்றோ
பார்புகழும் புன்னைவனப் பார்த்திபா மேலோரைச்
சீர்மைதப்பி வெட்டெனப்பே சேல். 104

வேண்டுவினை செய்
இடைக்காடர் கதை

ஆடாசா வேந்தாடா வாங்குடிசை வாசமதாத்
தேடுமிடைக் காடர்முன்பு செய்ததுபார் - *நீடழகு
சார்ந்தபுகழ்ப் புன்னைவனத் தாடாளா நன்றாகத்
தேர்ந்துகொண்டு வேண்டுவினை செய். 105

* நீடு - மிகுந்த

வைகறைத் துயிலெழு

செய்யமுகம் வாய்கைகால் தேகசுத்தி செய்துமெய்யில்
துய்யவெண்ணீ றிட்டானைத் தோத்திரஞ்செய் - துய்யும்வகை
மாவெய்தும் புன்னைவன மன்னவா மையிரவில்
(ஏ)வைக றைத்துயி லெழு. 106

ஒன்னாரைத் தேறேல்

தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னார்
அழுதகண் ணீரும் அனைத்தென்று - எழுசொலைப்பார்
தூயபுகழ்ப் புன்னைவனத் தோன்றலே சொப்பனத்தி
லேயுமொன் னாரைத்தே றேல். 107

ஓதுவது வேதம்

அந்தணர்கள் வாழி அறம்வாழி கீர்த்திநிலை
தந்தவர்கள் வாழி தவம்வாழி - சந்ததமும்
மானபரா புன்னை வனநாதா இவ்வகையே
தானோ துவதுவே தம். 108

ஆத்திசூடி வெண்பா முற்றும்




புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247