கமலை வெள்ளியம்பலவாண முனிவர்

இயற்றிய

முதுமொழிமேல் வைப்பு

சிறப்புப் பாயிரம்

பதிகதையால் நாலொழிவெண் பாட்டிருநூ றாக
முதுமொழிமேல் வைப்பு மொழிந்தான் - மதுமலர்க்கா
உம்ப ருலகளவு மோங்கு கமலைவெள்ளி
அம்பல வாணமுனி வன்.

காப்பு

சதுமுகன்மால் காணாத் தலைவர்புகழ் சொல்லும்
முதுமொழிமேல் வைப்பு மொழிய - மதுரத்
தவளமத வாரணமே காயெனநின் றேத்தும்
கவளமத வாரணமே காப்பு.

1. அறத்துப்பால்
பாயிரம்

கடவுள் வாழ்த்து

எங்கு முளனிறைவ னென்றிரண்டா யேத்துதமிழ்ச்
சிங்க நடந்தவழிச் சித்தாந்தம் - என்ற
தகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு. 1

புத்தர்பிறர் சொல்லும் பொருள்மறுத்து வள்ளுவர்தாம்
அத்தர்மறை யாகமங்க ளாமென்று - வைத்த
திருள்சே ரிருவினையும் சேரா விறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 2

வைதிகமேற் கொண்டுசொலு மற்றவர்க்குப் பக்குவர்க்காம்
சைவமவர் கொண்ட சமயமெனும் - செய்திசொலும்
கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. 3

பெற்றதவர் சைவத்துப் பேத சமாதியன்றி
மற்றுஞா னாந்தமென வந்ததிது - முற்றும்
தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்ற லரிது. 4

அப்பர்முதற் சித்தாந் திகள்வீ டடைதலுமே
வைத்தபுவ னத்திருந்தார் மற்றையவர் - ஒக்கும்
பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தார். 5

வான்சிறப்பு

அழித்துலகை யாக்குதலா லந்தமே யாதி
அழித்தொன்றை யாக்குவது முண்டோ வெனிற்கொள்
கொடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉ மெல்லா மழை. 6

அடியவரை நீத்தரனுக் கன்புசெய்ய மாறன்
மழைமறுத்துப் பல்லுயிரும் வாடும் - படியில்
விசும்பிற் றுளிவீழி னல்லான்மற் றாங்கே
பசும்புற் றலைகாண் பரிது. 7

நீத்தார் பெருமை

ஆர்பெரியர் நீத்து மரனறிய நின்றதிரு
நீலகண்டர் போலரிதி னீத்திலரால் - சாலச்
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். 8

புறமகமென் றியாவும் புகல்வனவும் காணத்
திறநுவல் கின்ற சிவநூல் - நெறியிற்
சுவையொளி பூறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே யுலகு. 9

அறன் வலியுறுத்தல்

தண்டிக் கருள்புரிந்து தக்கன் சிரமறுக்கும்
அண்டர்பெரு மானருளு மாகமத்திற் - கண்ட
அறத்தினூஉங் காக்கமு மில்லை யதனை
மறத்தலி னூங்கில்லை கேடு. 10

காணலா மீசன் கழல்பணிந்து நல்லறங்கள்
பேணுவார் நாளும் பெறும்பயனைப் - பேணும்
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை. 11

தருமர் பிறர்நெறியாற் சார்ந்ததுவிண் ணீசன்
அருணெறியா லீனருமே லானார் - அருநூல்
அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம்
புறத்த புகழு மில. 12

பாயிரம் முற்றும்

இல்லறவியல்

இல்வாழ்க்கை

இல்வாழ் மருத்தர்போ லீசனடிக் கன்புசெய
வல்லாரே னோற்க வருவானேன் - எல்லாரும்
ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை
நோற்பாரி னோன்மை யுடைத்து. 13

வாழ்க்கைத் துணை நலம்

முளையா லமுதமைத்த முக்கணர்பா லன்பன்
இளையான் குடிமாற னில்வாழ் துணைபோல்
மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. 14

உலகுண் டுறங்கு மொருத்தி யொருத்தி
சிலகொண் டரனுவப்பச் செய்யு மறனென்றால்
இல்லதென் னில்லவள் மாண்பானா லுள்ளதென்
இல்லவண் மாணாக் கடை. 15

அறவோ னகத்திருந்தா ளன்புகண்டேங் கண்டேம்
இறையோ டிறந்தா ளியல்பு முறையுட்
சிறைகாக்குங் காப்பெவன் செய்யு மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை. 16

புதல்வரைப் பெறுதல்

வேணுபுர நாதரருண் மேவுதலுஞ் சம்பந்தர்
தாதையினு மேனோருந் தாமகிழக் காணுதலால்
தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது. 17

பெண்பெறினு மென்ன பிழையோ தடாதகைபோல்
எண்பொருளு மீசனும்வந் தெய்துமே - கொண்ட
எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின். 18

அன்புடைமை

கண்ணுதலோன் கண்ணோவு கண்டளவிற் கண்ணப்பன்
கண்ணினீர் சோரக் கதறுமால் - உண்ணெகிழும்
அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர்
புன்கணீர் பூச றரும். 18

விருந்தோம்பல்

ஈசனடி யார்விருந்தென் றிட்டுலவாக் கோட்டைபெற்ற
நேசர் குறைவின்றி நிற்றலா னாடி
வருவிருந்து வைகலு மோம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுத லின்று. 20

இனியவை கூறல்

முதுகிரியா னன்பர் முனிந்தருள வந்த
தகுதி யுடையான் சரிதஞ் சொலுமே
பணிவுடைய னின்சொல்ல னாத லொருவற்
கணியல்ல மற்றுப் பிற. 21

செய்ந்நன்றி யறிதல்

எள்ளளவு காணா தெலிசெய்த நன்றிக்கா
வள்ள லுலகாள வைத்தருளும் - நல்லாய்
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்றெரி வார். 22

அன்று குணனுய்ந்தா னந்தணனைக் கொன்றுமரன்
நன்றி கொலுமசுரர் நாடறியப் - பொன்றுதலால்
எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. 23

நடுவு நிலைமை

ஈச னுமையா ளிடைப்பட்டு வாரமாய்ப்
பேசலு மாயோன் பெரும்பாம்பாம் - ஆசிற்
கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச
நடுவொரீஇ யல்ல செயின். 24

பிள்ளையினுங் கைத்தொண்டு பேணுதலா லப்பருக்கு
நல்ல படிக்காசு நல்குமால் - எல்லாம்
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி. 25

அடக்க முடைமை

ஆனை யிழிந்து மரசிறைஞ்சும் போலியைக்கண்
டேனையர னன்பரென்றா லென்படுமோ - மாநிலத்துள்
எல்லார்க்கு நன்றாம் பணித லவருள்ளும்
செல்வர்க்கே செல்வந் தகைத்து. 26

சோதி திறமறிந்து சொல்லவறி யாதுசொல்லி
வேதநிலை கண்டானு மெய்ம்மறந்தான் - ஆதலால்
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. 27

ஒழுக்க முடைமை

தில்லை மறையோர் சிவசமயஞ் சார்ந்தொழுகி
இம்மையே சாரூப மெய்தினார் - நல்ல
ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்கம்
உயிரினு மோம்பப் படும். 28

பிறனில் விழையாமை

எந்தை பலிக்கென் றியங்குநாட் பின்றொடர்ந்த
மென்றொடியார் தேத்தும் விழைந்திலார் - என்ப
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனொன்றோ வான்ற வொழுக்கு. 29

பொறை யுடைமை

பித்த னெனத்தமக்குப் பேர்படைத்து மெந்தைபிரான்
வைத்தவனைத் தோழனென வாழ்வித்தார் - நித்தம்
அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்த றலை. 30

கல்லெறி யும்பொறுத்துக் கண்ணுதலார் தாமறந்து
நல்லபத மவர்க்கு நல்கினார் - வல்லி
பொறுத்த லிறப்பினை யென்று மதனை
மறத்த லதனினு நன்று. 31

அழுக்காறாமை

புத்த னிறந்தான் பொறாமைசெய்து செய்யார்க்கு
நித்தரரு ளுண்டாய் நிறைந்தபுகழ் - மெத்த
அழுக்கற் றகன்றாரு மில்லையஃ தில்லார்
ஒழுக்கத்திற் றீர்ந்தாரு மில். 32

வெஃகாமை

இரந்துண்டு வாழ்ந்து மிறைவர் புலவர்
இரந்த பொருள்கவர்ந்த தீந்தார் - மறந்தும்
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர். 33

புறங்கூறாமை

சங்கறுக்குஞ் சாதிசொலுஞ் சங்கரனை நக்கீரன்
அன்றுபழி சொன்னதுபோ லார்சொல்வார் - என்றும்
பிறன்பழி கூறுவான் றன்பழி யுள்ளும்
திறன்றெரிந்து கூறப் படும். 34

பயனில சொல்லாமை

இறைவர் மதலை யெதிரிசைவு கூறும்
வெறுமுரையாற் சென்றுகழு வேறும் - பிறர்போல்
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரு மெள்ளப் படும். 35
தீவினை யச்சம்

தையலார் கற்பழியச் சார்வானை மாமதுரைத்
தெய்வமே சென்றொறுக்குஞ் செய்தியால் - நொய்தின்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு. 36

ஒப்புர வறிதல்

தருவும் வரிசைபெறும் சங்கரனுக் கன்பர்
ஒருவர் திருவுடைய ராகத் - தெருநடுவே
ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்
பேரறி வாளன் றிரு. 37

ஈகை

தொல்லைமணி மன்றுடையார் தொண்டர்க்குப் பெண்டிரையும்
இல்லையெனா தீந்தா ரியற்பகையார் - வல்லி
இலனென்னு மெவ்வ முரையாமை யீதல்
குலனுடையான் கண்ணே யுள. 38

புகழ்

தோன்றி யரனருளாற் றொண்டர்வென்றார் தோற்றமணர்
ஏன்பிறந்தே மென்றே யிடருழன்றார் - ஆய்ந்தறிஞர்
தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்
தோன்றலிற் றோன்றாமை நன்று. 39

இல்லறவியல் முற்றும்

துறவற வியல்

அருளுடைமை

அருளாற் பிரம்பினடி யுண்டார்க் கில்லை
துயர்தா னுலகனைத்துஞ் சொல்லும் - ஒருநாளும்
அல்ல லருளாள்வார்க் கில்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி. 40

புலான் மறுத்தல்

புத்தன்நான் அன்றுசிவ போதனெனுஞ் சைவனென
வைத்ததிரு வள்ளுவர் வாய்மொழிதான் - நித்தம்
தினற்பொருட்டாற் கொள்ளா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டா னூன்றருவா ரில். 41
நாரைபுலா லுண்ணாது நல்லறமேற் கொண்டொழுகி
ஈசனுல கேறி யிருத்தலால் - ........
செயிரிற் றலைப்பிரிந்த காட்சியா ருண்ணார்
உயிரிற் றலைப்பிரிந்த வூன். 42

வேதியர்கள் விண்ணடைந்தார் வேட்டுயிரைக் கொன்றுதின்னா
ஆதிசைவர் மேலென் றதனைமறுத் - தோதும்
அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. 43

தவம்

தமிழ்மணக்கப் பாடியரன் றண்ணளிசேர் மைந்தன்
அமணழிக்குந் தென்னவனை யாக்கும் - இமையளவில்
ஒன்னார்த் தெறலு முவந்தாரை யாக்கலும்
எண்ணிற் றவத்தால் வரும். 44

கூடா வொழுக்கம்

என்று மிறைவ னடியார் பொருளென்று
நின்றொழுகு மெய்ப்பொருளினேரான்போய் - அன்று
தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து
வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று. 45

கள்ளாமை

ஈசனுக்குப் பெண்டென் றிருந்தாரு நெய்திருடி
ஆயர்மனைப் பட்டபா டார்படுவார் - சீசீயென்
றெள்ளாமை வேண்டுவா னென்பா னெனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் னெஞ்சு. 46

வாய்மை

ஆதிமுடி தேடி யறியா னறிந்தேனென்
றோதிமன நொந்தே யுழல்கின்றான் - வேதனென்றால்
தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும். 47

நந்தியருள் காசிமயா னத்திருந்து சீவித்தும்
அந்த மொழிதவறா தாற்றுமரிச் - சந்திரன்போல்
உள்ளத்தாற் பொய்யா தொழுகி னுலகத்தார்
உள்ளத்து ளெல்லா முளன். 48

வெகுளாமை

பெற்ற முவந்தார் பெருமைமதி யாதுதக்கன்
செற்றமேற் கொண்டு சிரமிழந்தான் - முற்றும்
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. 49

இன்னா செய்யாமை

கண்ணுதலார் தம்மைக் கடைகாக்க வைத்தானை
விண்ணவருந் தாழ்ந்திறைஞ்ச மேல்வைத்தார் - எண்ணி
இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண
நன்னயஞ் செய்து விடல். 50

இரணியனைக் கொன்றிருக்க வெண்ணினவர் கேடும்
அரன்வெகுளப் பின்னிகழு மாற்றால் - ஒருவர்
பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா
பிற்பகல் தாமே வரும். 51

கொல்லாமை

கூடலிறை யன்று கொடியமறை யோன்சுமத்தும்
வேடன்பழி யஞ்சி விடுவிக்கும் - தேடவரும்
நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழு நெறி. 52

நிலையாமை

அரனையருச் சித்தவிப சித்திற்கும் வேள்வி
புரியு நகுடனுக்கும் போல - வருவதூஉம்
கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கு மதுவிளிந் தற்று. 53

முனைநா ளிருந்தகண்ணன் முக்கணற் காட்பட்ட
வனசரனான் மாயு மறுநாள் - எனலால்
நெருந லுளனொருவ னின்றில்லை யென்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு. 54

துறவு

குலனொழுக்க நல்ல குணமுண்டோ வென்னும்
அரனருளு முய்யவந்தார்க் கன்றே - துறவுமுதிர்ந்
தியானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த வுலகம் புகும். 55

பட்டினத்துப் பிள்ளை பரனையடைந் தார்துறந்து
விட்டுவிடா விந்திர.... கிலார் - கிட்டித்
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றைய வர். 56

எங்குமிறை தோய்ந்தாலுந் தோய்விலனென் றோதுதமிழ்ச்
சிங்க நடந்தவழிச் சித்தாந்தம் - அங்கதுகேள்
பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. 57

மெய்யுணர்தல்

மதியிருளை நீங்கின் மலவிருளு நீங்கும்
பதியருளா மென்றுசைவர் பார்த்து - மொழிவ
திருணீங்கி யின்பம் பயக்கு மருணீங்கி
மாசறு காட்சி யவர்க்கு. 58

இருள்பலவாக் கோட லிறைநூ லுக்கன்றி
அருகர் பிறர்க்காகா தென்னும் - உரைகேள்
இருணீங்கி யின்பம் பயக்கு மருணீங்கி
மாசறு காட்சி யவர்க்கு. 59

அரனருளா மின்ப மனுபவிப்பார் வேறென்
றிருமைபரிந் தொன்றை யிகழ்வான் - உரைசெயும்
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. 60

பற்றொழிந்து மென்னபிறர் பண்டரனைத் தூதுவிடக்
கற்றவர்போன் மெய்ப்பொருளைக் கண்டார்கொல் - உற்றதுகேள்
ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு. 61

அவாவறுத்தல்

பிறவியறார் மற்றையவர் பிஞ்ஞகர்காண் பித்த
பலபொருளும் வேண்டாத பண்பின் - அவரன்றி
அற்றவ ரென்பா ரவாவற்றார் மற்றையவர்
அற்றாக வற்ற திலர். 62

ஊழ்

வரருசியுள் ளிட்டார் மயங்கினா ரென்றால்
அவரவருக் கீச னமைத்த - திறனன்றி
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். 63

துறவறவியல் முற்றும்

அறத்துப்பால் முற்றும்

2. பொருட் பால்

அரசியல்

இறைமாட்சி

இறையெளிநின் றியார்க்கு மினியசொல்ல லாலே
மதுரை மதுரையென்பார் மாந்தர் - அதுவன்றோ
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேல்
மீக்கூறு மன்ன னிலம். 64

கல்வி

அருகர்கழு வேறுதலா லன்னெறி விட்டீசர்
திருவருளால் வாதவூர் சேரும் - குருநெறியிற்
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. 65

நாதரருள் சேரனொடு நம்பியா ரூரருமுன்
பேதமறக் கூடிப் பிரிவதுபோல் - தீதின்
றுவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். 66

கற்றவர்சங் கத்திருந்தார் கண்ணுதலோ டேனையவர்
சற்றுமிரா ரென்று தலையாயார் - முற்றும்
உடையார்முன் னில்லார்போ லேக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர். 67

சிவகீதை முற்கேட்டார் சென்றுசென்று சென்மத்
தவர்பார்த் தனுக்கருளு மாற்றால் - புவனத்
தொருமைக்கட் டான்கற்ற கல்வி யொருவற்
கெழுமையு மேமாப் புடைத்து. 68

இறைவருங் கைவிடா ரேடவர்பாற் சென்ற
பிறருமறிந் தின்பம் பெறலால் - அறிதொறூஉம்
தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார். 69

கல்லாமை

ஒருவர் சிறிது... லுமையாற்
கருள்வதன்முன் ப...தறிந்து - குருமுகத்தாற்
கல்லாதா னொட்பங் கழியநன் றாயினும்
கொள்ளா ரறிவுடை யார். 70

ஈச ரிடத்தன்ப ரென்பவர்பாற் புத்தரெலாம்
பேசுமிடத் தூமையாம் பெற்றிமையால் - ஆகமத்தைக்
கல்லா வொருவன் றகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும். 71

கேள்வி

ஆலடியார் பாற்பட்ட வந்தணர்போ லுய்வதற்குச்
சீலமுடை யார்பாற் செவிதாழ்க்க - சால
இழுக்க லுடையுழி யூற்றுக்கோ லற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல். 72

அறிவுடைமை

பிறர்க்குண்டோ வில்லையவர் பேராண்மை குன்ற
மதிக்க ணுழைமதனை மாய்த்தார் - தமக்கே
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா வரண். 73

ஈசனெறி தொண்ட ரியம்புதலு மெய்ந்நெறியென்
றாசினறு தேவ ரடைந்ததூஉம் - நீதியன்றோ
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. 74

பண்டு களிற்றுப் படிமருங்கு வைத்தசெழும்
தண்டமிழை யம்பலவர் தாமகிழ்ந்து - கொண்டமையால்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. 75

குற்றங் கடிதல்

தோன்றி யிறைவருள்ளுந் தொண்டரெனு மூர்த்திக்கு
மூன்றுமறைச் செல்வ முதிருமஞ் - ஞான்று
செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து. 76

பெரியாரைத் துணைக்கோடல்

பகைசிறிது மின்றிப் பறவைகளு மஞ்ச
இறைவர் துணைவலியா னெய்தும் - முறைமையால்
உற்றநோய் நீக்கி யுறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல். 77

சிந்தா மணிகிடைத்தென் தென்னர்க் கிறையருளால்
வந்தாரைப் போலவெது வாழவைக்கும் - அந்தோ
அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல். 78

சிற்றினஞ் சேராமை

குண்டராற் றென்னன் குறைபட்டுக் கண்ணுதலார்
தொண்டரான் மிக்குயர்ந்து தோன்றலால் - எண்டிசையும்
நல்லினத்தி னூங்குந் துணையில்லை - தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉ மில். 79

தெரிந்து செயல்வகை

ஆய்தொடியார் கண்ணுதல்பா லன்பி லுமிழ்தலுமே
வாய்மையறி யாதொழுகு மற்றவர்போல் - தூய்மையொடு
நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை. 80

வலியறியதல்

கண்ணுதல்பாற் சென்றது காமனுக்கு வென்றியோ
எண்ணமிலான் போலு மெதிர்ந்திறந்தான் - நண்ணி
நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி யாகி விடும். 81

கால மறிதல்

எல்லா மிமைப்பி லழிப்பாரு நீட்டித்தார்
வல்லார் புரமெரிக்க வந்துழியும் - ஒல்லாரைப்
பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த்
துள்வேர்ப்பர் ஒள்ளி யவர். 82

இடனறிதல்

இறையருள் தென்னனிடத் திந்திரன் வந்தன்று
வளையா லெறிபட்ட வாற்றால் - இளையாச்
சிறுபடையான் செல்லிடஞ் சேரி னுறுபடையான்
ஊக்க மழிந்து விடும். 83

தெரிந்து தெளிதல்

இறைவர்நிலை காணா ரிருவரென்று கண்டால்
பெருமை சிறுமையினிப் பேசேம் - இறையாம்
பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தம்
கருமமே கட்டளைக் கல். 84

தெரிந்து வினையாடல்

ஈசன்குண் டோதரபோ வென்றருளுங் குன்றுபுரை
சோறுகறி யுண்டு தொலைப்பதற்கு - நாடி
இதனை யிதனா லிவன்முடிக்கு மென்றாய்ந்
ததனை யவன்கண் விடல். 85

சுற்றம் தழால்

அத்தர் திருவருளா லன்றுபடிக் காசுபெற்றார்
பத்தர்கணஞ் சூழப் பரிந்திட்டார் - இத்தலத்துச்
சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன். 86

பொச்சாவாமை

மறந்துமறந் தீசன் மலரடியைப் பேணா
திறந்திறந்து மாலுமிட ரெய்தும் - அறிந்தறிந்து
முன்னுறக் காவா திழுக்கியான் றன்பிழை
பின்னூ றிரங்கி விடும். 87

செங்கோன்மை

இறைமகிழ வேந்த னிளங்கன்றிற் காக
மகவினையுந் தேரூரு மாற்றால் - அகலிடத்தில்
ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந்தி யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை. 88

அந்திவண்ண னூலா லருகர்பிறர் கோள்சிதைய
வந்ததிரு வள்ளுவர்தம் வாய்மொழிகேள் - இந்தநிலத்
தந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்
நின்றது மன்னவன் கோல். 89

கொடுங்கோன்மை

மாமனென்றும் பாணனென்றும் வந்தானைப் பொன்மதுரைச்
சேவகன்றா னென்றுந் திரியாத சூரனென்றும்
நாடோறு நாடி முறைசெய்யா மன்னவன்
நாடோறு நாடு கெடும். 90

வெருவந்த செய்யாமை

இசைபயிற்றார் வாதத் திறைவருமொன் றேனும்
இசைவன்றி... வியன்றான் - இசைவொன்றத்
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு கொறுப்பது வேந்து. 91

கண்ணோட்டம்

வாண னிருகரமும் வைத்துப் பணிகருதி
நாதனறுப் பித்தருளு நன்னயத்தைப் - போலக்
கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்
குரிமை யுடைத்திவ் வுலகு. 92

ஒற்றாடல்

சீர்படைத்த முக்கட் சிவனன்ப னென்றெழுதும்
பேர்படைத்த சேரர் பெருமான்போல் - பார்மிசையின்
எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை யெஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் றொழில். 93

ஊக்க முடைமை

பார்த்த குரவர் பணிமுயன்றார் கண்ணுதலார்
தீர்த்தத் தியலுந் திறநின்றார் - நீர்த்தடத்து
வெள்ளத் தனைய மலர்நீட்ட மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு. 94

மேனிகழ்வ தேதெனினும் வென்றியெனத் தென்மதுரை
ஈசனொடு வாதத் தெதிர்நின்ற - கீரனைப்போல்
உள்ளுவ தெல்லா முயர்வுள்ளன் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. 95

மடியின்மை

கஞ்சுகனா தன்கோயிற் காலெலிக்கு மாட்டாதே
வஞ்சனைசெய் தானையிவண் வைத்துப்பார் - துஞ்சு
மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான்
தாஅய தெல்லா மொருங்கு. 96

மாற னிறையருளால் வந்துவெல்லத் தோற்றளவில்
போர்விண்ட விந்திரனைப் போலவே - சால
இடிபுரிந்தெ ள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட வுஞற்றி லவர். 97

ஆள்வினை யுடைமை

பால னொருவன் பணிந்துகட வூரானைக்
காலற் கடந்திருக்கக் கண்டோமே - ஞாலத்தின்
ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித்
தாழா துஞற்று பவர். 98

இருக்க ணழியாமை

நக்கர் சிறிது நகைத்தலுமே முப்புரமும்
அக்கணமே வெந்துவிழு மாதலால் - மிக்க
இடுக்கண் வருங்கா னகுக வதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில். 99

அரசியல் முற்றும்

அங்கவியல்

அமைச்சு

தென்ன னிறைவரருள் சேர்ந்துசெங் கோல்செலுத்த
மன்னு குலச்சிறையே மந்திரியாம் - என்னை
அறனறிந்தான் றமைந்த சொல்லானெஞ் ஞான்றும்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை. 100

சொல்வன்மை

சிவனடி யென்னுமயன் சீர்பெறுமுன் பின்னர்ச்
சிவசமதை சொல்லலும் சீர்போம் - எவருந்தம்
ஆக்கமுங் கேடு மதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. 101

பரமனருள் வேண்டிப் பகர்ந்தசுர ரான
கரதூட ணன்முதலோர் காதை - வரவறிவீர்
ஆக்கமுங் கேடு மதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. 102

எவற்றினுமே லென்னவிறை வர்சொன்ன தெல்லாம்
சிவப்பிரகா சத்தடங்கச் செப்பும் - தவத்தினர்போல்
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் லச்சொல்லை
வெல்லுஞ்சொல் லின்மை யறிந்து. 103

வினைத் தூய்மை

சூரனிழந் தானிழந்தான் சோதியரு ளுந்தாய
னாரிழந்த வெல்லா மடையுமே - தேரின்
அழக்கொண்ட வெல்லா மழப்போ மிழப்பினும்
பிற்பயக்கு நற்பா லவை. 104

வினைத் திட்பம்

தோழனென்று சொன்னவடித் தொண்டர்க் கிறைவர்தூ
தாக நடந்த தரிதரிது - காதலிபாற்
சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாம்
சொல்லிய வண்ணஞ் செயல். 105

குறுமுனியு மீசனருள் கொண்டுகட லங்கை
வரையடிக் கீழடக்கு மாற்றால் - சிறிதும்
உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னா ருடைத்து. 106

வினைசெயல் வகை

இறையருளாற் செவ்வே ளிமையோரைக் காக்கும்
திறனாடிச் சூர்தடிந்த செய்கை - அதுபோல்
முடிவு மிடையூறு முற்றியாங் கெய்தும்
படுபயனும் பார்த்துச் செயல். 107

இறைவர்க்குத் தொண்டா யிடர்தீர்ந்த தன்றிப்
பெறுபயனும் வாகீசர் பெற்றார் - அறிஞர்
வினையான் வினையாக்கிக் கோட னனைகவுள்
யானையால் யானையாத் தற்று. 108

கண்ணுதல்பா லாழிபெறக் கண்சாத்தித் தாள்காணா
வண்ண மொழிந்தநெடு மாலேபோல் - எண்ணி
வினையான் வினையாக்கிக் கோட னனைகவுள்
யானையால் யானையாத் தற்று. 109

தூது

பேதையரு நாவலரும் பேதமின்றி யேபொருந்தத்
தூதுசென்ற கொன்றைத் தொடையலார் - போலவே
அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்
கின்றி யமையாத மூன்று. 110

மன்னரைச் சேர்ந்தொழுகல்

ஐய னருள்புரிந்த வன்றுசம் பந்தர்தமைத்
தெய்வமெனத் தந்தையருந் தேறினார் - நொய்தின்
இளைய ரினமுறைய ரென்றிகழார் நின்ற
ஒளியோ டொழுகப் படும். 111

குறிப்பறிதல்

உண்ணப் பொதிசோறு மூர்சிவிகை யும்பிறவும்
எண்ண மறிந்தடியார்க் கீந்தருளும் - கண்ணுதல்போற்
கூறாமை நோக்கிக் குறிப்பறிவா னெஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி. 112

அவை யறிதல்

பொல்லார்மு னெல்லாம் புகன்று சிவஞானம்
அல்லார்மு னல்லா ரடங்குதலால் - வல்லார்
ஒளியார்மு னொள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணங் கொளல். 113

இறைநூ லுரையாடார் இன்புற்றார் சால
அறிவுசா லுரைகேட்ட வன்றே - நெறிநின்று
கற்றறிந்தார் கல்வி விளங்குங் கசடறச்
சொற்றெரிதல் வல்லா ரகத்து. 114

அவையஞ்சாமை

சங்கத்தார் வாக்குந் தமிழுணர்த லாற்சொக்க
லிங்கந் தமிழ்ப்புலவ ரெல்லார்க்கும் - சிங்கமன்றோ
கற்றாருட் கற்றா ரெனப்படுவர் கற்றார்முற்
கற்ற செலச்சொல்லு வார். 115

நாடு

இறைசாருந் தென்னாடே நாடேனை நாடு
பிறவுடைய வேனும் பெறாகாண் - உறையுமவர்க்
காங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு. 116

அரண்

குன்றவில்லி காத்தருளுங் கூடலர ணேயன்றி
நின்ற வுளவெனினும் நிற்குமோ - என்றும்
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் ணில்ல தரண். 117

பொருள் செயல் வகை

தந்தைபொருட் டெந்தைபிரான் சம்பந்தர்க் கீந்தகிழி
நந்திப் பயனனைத்து நல்கிற்றே - முந்தும்
அறனீனு மின்பமு மீனுந் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள். 118

திகம்பரர்க்கு நஞ்சைத் திருமகளைப் பீதாம்
பரதரர்க் கீயும் பயோதி - நிரந்தரமும்
இல்லாரை யெல்லாரு மெள்ளுவர் செல்வரை
எல்லாருஞ் செய்வர் சிறப்பு. 119

படைமாட்சி

எத்திறத்த நூலு மிலங்கு சிவஞான
சித்தியொன்று காணச் சிதையுமே - மெத்த
ஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகை
நாக முயிர்ப்பக் கெடும். 120

ஆலமுகந் தானைமணந் தாள்படையே வெல்படையாம்
காலனையுந் தோற்றோடக் காணுதலால் - ஞாலத்துக்
கூற்றுடன்று மேல்வரினுங் கூடி யெதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை. 121

படைச் செருக்கு

இறையோ டெதிர்ந்திறந்த தென்றாலு மென்ன
குறையோ பிறரையடுங் கூற்று - முறையேகாண்
கான முயலெய்த வம்பினில் யானை
பிழைத்தவே லேந்த லினிது. 122

நட்பு

பிள்ளை யிறைவ ரருள்பெறலுங் கேட்டிருந்த
கள்ளவிழ்பூங் கோதையார் காதலாற் - சொல்லும்
புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும். 123

நன்னிழலி னீர்வைத்து நம்பர் நடுப்படையில்
தென்னரழி யாதருளுஞ் செய்தியான் - முன்னர்
உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே
இடுக்கண் களைவதா நட்பு. 124

நட்பாராய்தல்

மாறனது கேட்டி லுறுதியென மாணிக்கம்
கூறி விலையாக் கொடுக்குமிறை - ஆதலாற்
கேட்டினு முண்டோ ருறுதி கிளைஞரை
நீட்டி யளப்பதோர் கோல். 125

பழமை

வழுவுசெய்தும் மாலயர்க்கு வந்தரனே பின்னும்
பழமை கருதியருள் பண்ணும் - முழுதும்
அழிவந்த செய்யினு மன்பறா ரன்பின்
வழிவந்த கேண்மை யவர். 126

தீ நட்பு

தக்க னுறவெனினுஞ் சங்கரன்ற னட்பிற்குத்
தக்கவனன் றென்றொறுத்தல் சாலுமே - மிக்க
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்ற லினிது. 127

கூடா நட்பு

ஆரூரர்க் காரூரர் போன்றொற்றி யூரர்செயும்
கூடாநட் பாலே குறைவரலால் - ஓரும்
இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்
மனம்போன்று வேறு படும். 128

பேதைமை

அரனன்பர் வாகீச ரன்றமணை நீங்கப்
பெரிதின்ப மன்றியுண்டோ பீழை - தெரியிற்
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கட்
பீழை தருவதொன் றில். 129

புல்லறிவாண்மை

ஈசனடி யாரிசையா தேயு மிசைந்தமணர்
தாமே கழுவேறுந் தன்மையால் - ஞாலத்
தறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்குஞ் செய்த லரிது. 130

ஆதி மொழியை யறியா னறிந்தேனென்
றோதியது மீளப்போ யோ... - லேதம...
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉ மையந் தரும். 131

எறும்புகடை யானைதலை யீசனைப் பூசித்துப்
பெறுங்கதிகண் டுந்தேறார் பேய்கள் - அறிந்த
உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் வையத்
தலகையா வைக்கப் படும். 132

இகல்

ஆங்கா லிறைவ ரடிதொழுவார் செல்வமெல்லாம்
போங்கா லசுரர் பொரவருவார் - நீங்கா
இகல்காணா னாக்கம் வருங்கா லதனை
மிகல்காணுங் கேடு தரற்கு. 133

பகைமாட்சி

கண்ணன் கடையிருந்த கண்ணுதலின் றாள்வணங்கி
உண்ணின்ற வாண னொடுபொருதான் - எண்ணி
வலியார்க்கு மாறேற்ற லோம்புக வோம்பா
மெலியார்மேன் மேக பகை. 134

பகைத்திறந் தெரிதல்

விளையாடிக் கீரனொடு வெல்வதற்குச் செல்லும்
இறையோனும் பின்வெகுளு மென்றால் - குறையாம்
பகையெனினும் பண்பி லதனை யொருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று. 135

உட்பகை

நாரதர்மா லுட்பகையாய் நம்பரடி பேணாத
வாறுசொல்லி முப்புரமும் மாய்வித்தார் - ஆதலினால்
உட்பகை யஞ்சித்தற் காக்க வுலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும். 136

பெரியாரைப் பிழையாமை

மன்றுடையார் குன்றை மதியா தெடுத்தரக்கன்
அன்று படுந்துயர மார்படுவார் - என்றும்
பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாரால்
பேரா விடும்பை தரும். 137

பெண் வழிச் சேறல்

திசைவென் றவள்பதியும் செல்லா தவள்பின்
அசைவின்றித் தானுலக மாளும் - இசையொன்ற
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல். 138

வரைவின் மகளிர்

புனிதரழல் மூழ்குதலும் போயழலின் மூழ்கும்
பனிமலர்மென் கோதையெழிற் பாவை - ஒழியப்
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்க மிருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று. 139

கள்ளுண்ணாமை

அண்ணல் பழமலையை யண்ணாமுன் கள்ளுண்ண
எண்ணில் பெருந்துயர மெய்துதலான் - மண்ணுலகத்
துண்ணற்க கள்ளை யுணிலுண்க சான்றோரால்
எண்ணப் படவேண்டா தார். 140

சூது

அரனடியார் நித்த மமுதுசெய வேண்டிக்
கவறுருட்டிக் கைவந்தா ரன்றிப் - பிறரெல்லாம்
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று. 141

மருந்து

மண்ணுண் டவனறியா மண்ணுண்டை யொன்றுகொடுத்
தெண்ணருநோய் தீர்க்கு மெழில்வேளூர்க் - கண்ணுதல்போல்
நோய்நாடி நோய்முத னாடி யதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். 142

அங்கவியல் முற்றும்

ஒழிபியல்

குடிமை

மன்னு மரன்புலியூர் வாய்மை மதியானை
அன்னை வயிற்குறையென் றையுற்றார் - என்னை
நலத்தின்க ணாரின்மை தோன்றி னவனைக்
குலத்தின்க ணையப் படும். 143

மானம்

இறையருள்சேர் தென்னவனன் றிந்திரன்பாற் சென்றும்
குறையிரவான் போயிருந்தான் கூட - முறையன்றோ
இன்றி யமையாச் சிறப்பின வாயினும்
குன்ற வருப விடல். 144

பெருமை

சங்கரன்போய் நின்றளவில் சங்கப் பலகையின்மேல்
அங்கிருந்தா னக்கீர னாயினுமென் - எங்கணும்போய்
மேலிருந்தும் மேலல்லார் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர். 145

சான்றாண்மை

உலகர்க்குத் தந்தை யொருத்திக்குத் தாயாய்ப்
பலவு முபகரித்த பண்பின் - புலவர்
கடனென்ப நல்லவை யெல்லாங் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. 146

பன்றிக் குருளைக்குப் பன்றியாய்க் கண்ணுதலும்
சென்று முலைகொடுக்குஞ் செய்தியால் - என்றும்
கடனென்ப நல்லவை யெல்லாங் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. 147

இறையருள்சேர் தென்ன னிருங்கடலு மாழி
பிறழ நிலைநிறுத்தும் பெயரால் - கடல்பிறழ
ஊழிபெயரினுந் தாம்பெயரார் சான்றாண்மைக்
காழி யெனப்படு வார். 148

பண்புடைமை

முப்புரங்கள் கொன்றுமரன் மூவர்க் கருளியதை
இப்பொழுது தானுமுல கேத்துமே - செப்பின்
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டு முலகு. 149

நன்றியில் செல்வம்

எங்களிறை யன்பருக்கொன் றீயாமை யாற்பிறந்து
பங்கப் படத்துணிந்த பாவிதிருத் தங்கியெனும்
அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வ மிகநலம்
பெற்றா டமியள்மூத் தற்று. 150

கல்வில் லுடையார் கருணைபெற மாட்டாது
வல்வினையிற் பட்டழுந்தும் வாதாவி - வில்வலன்போல்
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று. 151

நாணுடைமை

இறையருளும் தென்னவன்பா லிந்திரன் வந்தன்று
குறைபடலும் நாணியது கூறின் - முறையன்றோ
ஊணுடை யெச்ச முயிர்க்கெலாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு. 152

குடிசெயல் வகை

பாணன் குடியுயரப் பண்டரனுங் கூடல்வரு
பாணனெனச் சாதாரி பாடுதலால் - நாளும்
குடிசெய்வ லென்னு மொருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும். 153

உழவு

தென்னாட் டுழவ ரிறைகொண்டு கண்ணுதலும்
அந்நாட் டிருந்துலக மாளுதலால் - தன்னேர்
பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர். 154

நல்குரவு

மூலலிங்க பூசை முயன்றபயன் வருமுன்னே
சீல முடையவிப சித்தெனவே - ஞாலத்தில்
துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்குங் காடிக்கும் கூற்று. 155

இரவு

ஈச ரிரந்தாலு மீந்தாரோ டொத்துயர்ந்தார்
நேர ரிடத்திலிருந்து நிற்றலால் - பேசின்
இரத்தலு மீதலே போலுங் கரத்தல்
கனவிலுந் தேற்றாதார் மாட்டு. 156

இரவச்சம்

என்றியம்பி னார்மொழியாற் போலு மிறையாயும்
சென்றிரந்து நிற்குஞ் சிவன்றானும் - அன்றே
இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக வுலகியற்றி யான். 157

ஒருவர் செயவேண்டா வுலகியல்பா மென்னும்
அருகர்பிறர் கோள்சிதைக்கு மாற்றால் - வருவ
திரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக வுலகியற்றி யான். 158

கயமை

மணலமுதா மாறு மனையாட்குக் கூறிப்
பரனருடீர் மாமறையோர் பண்பின் - நுவலும்
அறைபறை யன்னர் கயவர் தாங்கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைக்க லான். 159

ஒழிபியல் முற்றும்

பொருட்பால் முற்றும்

3. காமத்துப்பால்

களவியல்

தகையணங் குறுத்தல்

ஆரூரன் கண்டளவி லாரூரன் கோயிலிடை
ஆரூரிற் கென்றமைந்த வாயிழையைத் - தேரும்
அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் னெஞ்சு. 160

இறைவ ரருள்கதிர்வே லெந்தை குறவர்
மடமகளைக் கண்டு வருந்திப் - புகலும்
கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேற் றுகில். 161

குறிப் பறிதல்

அரனருள் சேய் மான்மகளென் றாங்கிருவர் தங்கள்
இயல்பு மறிந்த விகுளை - கருதுவது
கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனு மில. 162

புணர்ச்சியின் மகிழ்தல்

அரனடியா ரல்லா ரடைபதந் தானும்
இருநிலவின் பத்திழிவா மென்று - வருவதிது
தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல்
தாமரைக் கண்ணா னுலகு. 163

அல்லொளிசேர் கண்டத் தரனருள்சேய் மானீன்ற
வல்லியிரு கொங்கை மணந்ததற்பின் - சொல்லியது
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள. 164

நலம்புனைந்துரைத்தல்

மின்னுசடை வேந்தரருள் வேலனொரு மானீன்ற
பொன்னை மகிழ்ந்து புனைந்துரைக்கும் - இந்நிலத்து
நன்னீரை வாழி யனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள். 165

காதற் சிறப்புரைத்தல்

நாதர் பரமகுரு நாதர் குறமகள்பாற்
காதன் மிகுதிசொலக் கண்டோமே - தீயசெழும்
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர். 166

நாணுத்துற வுரைத்தல்

ஆதியருள் சேய்நா ணகன்றுமட மான்மகட்குத்
தோழி யெதிர்நின்று சொல்லியது - கூறிய
காம முழந்து வருந்தினார்க் கேம
மடமல்ல தில்லை வலி. 167

அலரறி வுறுத்தல்

பரனருள்சேய் கேட்கப் பசும்பொன்மா னீன்ற
குறமகட்குத் தோழிநின்று கூறும் - திறனுவலின்
தாம்வேண்டி னல்குவார் காதலர் யாம்வேண்டும்
கௌவை யெடுக்குமிவ் வூர். 168

களவியல் முற்றும்

கற்பியல்

பிரிவாற்றாமை

சூளுறவு செய்திறைவர் தோழர் பிரிவறிந்த
கோல்வளையார் கூறுவது தோழிக்குச் - சால
அளித்தஞ்ச லென்றவர் நீப்பிற் றெளித்தசொல்
தேறியார்க் குண்டோ தவறு. 169

படர்மெலிந்திரங்கல்

அரன்றனக்குத் தோழனெனு மாரூரன் சேணிற்
பிரிந்தவழி பரவை பேசும் - இரங்கி
மன்னுயி ரெல்லாந் துயிற்றி யளித்திரா
என்னல்ல தில்லை துணை. 170

கண் விதுப்பழிதல்

நந்தியருள் சேர்பரவை நம்பியைக்கா ணக்கிடையா
வெந்துயரா லாற்றுவித்த மெல்லிழைக்கு - வந்துசொலல்
கண்டாங் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாங்காட்ட யாங்கண் டது. 171

பசப்புறுபருவரல்

பரனன்பர் நீங்கப் பரவைதனை யாற்றும்
புரிகுழற் பாங்கி புகலும் - பெரிதும்
பசந்தா ளிவளென்ப தல்லா லிவளைத்
துறந்தா ரெவரென்பா ரில். 172

தனிப்படர் மிகுதி

கண்ணுதலார் தோழன் கருத்தையறிந் தாற்றினாய்
என்னப் பரவை யிகுளைக்குப் - பன்னுவது
நாங்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாங்காதல் கொள்ளாக் கடை. 173

நினைந்தவர் புலம்பல்

நம்பி தனைநினைந்து நம்பரருள் சேர்பரவை
துன்பமுற்றுத் தோழிக்குச் சொல்லியது - சென்றிருந்து
தந்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எந்நெஞ்சத் தோவா வரல். 174

கனவு நிலை யுரைத்தல்

தம்பிரான் றோழர் தமையிகழ்ந்த தோழிக்கு
மங்கை பரவை மறுத்துரைக்கும் - எங்கிருந்தும்
துஞ்சுங்காற் றோண்மேல ராகி விழிக்குங்கால்
நெஞ்சத்த ராவர் விரைந்து. 175

பொழுதுகண்டிரங்கல்

ஆற்றுவித்த தோழிக் கரனன்ப ரைப்பிரிந்த
கோற்றொடியா ரூர்மடந்தை கூறுவது - மேற்சென்று
காலைக்குச் செய்தநன் றென்கொலெவன் கொல்யான்
மாலைக்குச் செய்த பகை. 176

உறுப்பு நலனழிதல்

அரனன்பர் நீங்குதலு மாற்றாமை கண்டு
பரவைக்குத் தோழி பகரும் - தலைவர்
தணந்தமை சால வறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள். 177

நெஞ்சொடு கிளத்தல்

அரனருள்சேர் நம்பிபிரி வாற்றாம லாரூர்ப்
பரவை தனிநின்றூ பதைத்துக் - கருதும்
நினைந்தொன்று சொல்லாயோ நெஞ்சே யெனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கு மருந்து. 178

நிறை யழிதல்

வேடர்க் கருளும் விமலர் துணைபிரிவு
நீடப் பரவை நிறையழிந்து - கூறியது
காமக் கணிச்சி யுடைக்கு நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு. 179

அவர்வயின் விதும்பல்

இறைவரருள் சேர்பரவை யேந்தல்பிரி வாற்றிப்
பகரு மிகுளைக்குப் பகரும் - எதிர்நின்று
காண்கமற் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்குமென் மென்றோட் பசப்பு. 180

குறிப்பறிவுறுத்தல்

இறைவர்துணை நீங்கி யெழிற்பரவை யோடும்
உறையுநாட் பாங்கிக் குணர்த்தும் - செறியும்
மணியிற் றிகழ்தரு நூல்போன் மடந்தை
அணியிற் றிகழ்வதொன் றுண்டு. 181

புணர்ச்சி விதும்பல்

ஈசனன்ப ரோடு மியைந்த பரவைதனைப்
பேசியதோ ழிக்கவளும் பேசியது - கூறின்
எழுதுங்காற் கோல்காணாக் கண்ணேபோற் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து. 182

நெஞ்சொடு புலத்தல்

தம்பிரான் றோழர் தவறுகண்டுங் கூடுவதற்
கன்பு செயும்பரவை யார்மொழிவார் - என்றும்
அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவனெஞ்சே
நீயெமக் காகா தது. 183

புலவி

அரன்வாயி லாகச்சென் றாரூர ரோடு
பரவையா ரூடலுணர் பண்பின் - உரைசெய்யும்
உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது
மிக்கற்றால் நீள விடல். 184

புலவி நுணுக்கம்

எல்லாரு முய்வதற்கா யீசனுலாப் போதுதலும்
புல்லா துமையாள் புலந்தளவிற் - சொல்லாடும்
பெண்ணியலா ரெல்லாருங் கண்ணிற் பொதுவுண்பார்
நண்ணேன் பரத்தநின் மார்பு. 185

ஊடலுவகை

தண்டி யுணர்த்தத் தலைவி புலவிநீர்ந்
தண்டிப் பெருமா னணைந்தளவிற் - கண்டருளும்
ஊடுதல் காமத்திற் கின்ப மதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின். 186

கற்பியல் முற்றும்

காமத்துப் பால் முற்றும்

4. வீட்டின் பால்

பதிமுதுநிலை

வள்ளுவருந் தாமு மதித்தபொரு ளொன்றென்றே
தெள்ளு தமிழ்விரகாய்ச் செப்பியது - சொல்லின்
அகர வுயிர்போ லறிவாகி யெங்கும்
நிகரிலிறை நிற்கு நிறைந்து. 187

உயிரவை நிலை

பொன்னர்பிறர் காணாரப் புண்ணியனைப் புண்ணியனும்
அன்னவர்முற் றோன்றலரா னாதலினால் - சொன்னதுகேள்
ஊமன்கண் போல வொளியு மிகவிருளே
யாமன்கண் காணா தவை. 188

இருண் மல நிலை

அருண கிரியறியா ரண்ணலெனத் தத்தம்
கருவி யுபகரிக்கக் கண்டும் - இருவர்க்கும்
அன்றளவி யுள்ளொளியோ டாவி யிடையடங்கி
இன்றளவு நின்ற திருள். 189

அருளது நிலை

இறைவ ரெதிர்ப்பட்டு மிவரருள்வேண் டாமற்
பிறவசுர ரெல்லாம் பெறுதல் - அறையிற்
பரப்பமைந்த கேண்மினிது பாற்கலன்மேற் பூஞை
கரப்பருந்த நாடுங் கடன். 190

அருளுருநிலை

வாதவூரர்க் காள்போல வந்த பரசிவனை
யாரவனென் றெண்ணி யறிந்தார்கொல் - பேரருளாற்
பார்வையென மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வையெனக் காணார் புவி. 191

அறியு நெறி

நீற்றறையின் மற்றிடத்து நின்றிறைவ னன்பருக்குத்
தோற்றுவதின் றித்துணையாய்த் துன்பமுறா - தாற்றுதலால்
ஊனுயிரால் வாழு மொருமைத்தே யூனொடுயிர்
தானுணர்வோ டொன்றாந் தரம். 192

உயிர் விளக்கம்

துறைபிழைத்துச் சென்று சுமந்தாலு மீசன்
உணர்வோடொன் றாகுந் தரம்பார் - தரையில்
கிடைக்கத் தகுமேநற் கேண்மையார்க் கெல்லாம்
எடுத்துச் சுமப்பானை யின்று. 193

இன்புறு நிலை

வாதவூ ரன்பிறர்போல் வந்தவரா னந்தமுறும்
போதினிய தாகப் புணருமறை - ஆதலினால்
இன்பதனை யெய்துவார்க் கீயு மவர்க்குருவம்
இன்பகன மாதலினா லில். 194

ஐந்தெழுத்தருணிலை

உண்டிலையென் றாகமங்க ளோதிமத பேதத்தால்
கொண்டநெறி யுங்கதியுங் கூறுவதென் - அண்டர்பிரான்
எல்லா வகையு மியம்பு மிவனகன்று
நில்லா வகையை நினைந்து. 195

அடைந்தோர் தன்மை

சிதம்பரஞ் சிந்தித்தார் சிவலோக மன்றி
விதந்தறியா ரொன்றும் விரும்பி - பயந்தவிர
எல்லா மறியு மறிவுறினு மீங்கிவரொன்
றல்லா லறியா ரற. 196

வீட்டின் பால் முற்றும்

முதுமொழிமேல் வைப்பு முற்றும்