நீதி வெண்பா

     நீதிவெண்பா வெண்பாக்களால் ஆன நீதி நூல் ஆகும். இந்நூலின் ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை. இந்நூலின் காலம் 12 ஆம் தூற்றாண்டு ஆகும். கடவுள் வாழ்த்துப் பாடலைத் தவிர்த்து இதில் மொத்தம் 100 பாக்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு நீதியைச் சொல்கிறது.

காப்பு

மூதுணர்ந்தோர் ஓதுசில மூதுரையைப் பேதையேன்
நீதிவெண்பா வாக நிகழ்ந்துவேன் - ஆதிபரன்
வாமான் கருணை மணிஉதரம் பூத்தமுதல்
கோமான் பெருங்கருணை கொண்டு.

நூல்

தாமரைபொன் முத்து சவரங்கோ ரோசனைபால்
பூமருதேன் பட்டுப் புனுகுசவ்வா - தாமழல்மற்(று)
எங்கே பிறந்தாலும் எள்ளாரே! நல்லோர்கள்
எங்கே பிறந்தாலும் என். 1

அரிமந் திரம்புகுந்தால் ஆனை மருப்பும்
பெருகொளிசேர் முத்தும் பெறலாம் - நரிநுழையில்
வாலும் சிறிய மயிர்எலும்பும் கர்த்தபத்தின்
தோலுமல்லால் வேறுமுண்டோ சொல். 2

அறிவன் பகையேனும் அன்புசேர் நட்பாம்
சிறுவன் பகையாம் செறிந்த - அறிவுடைய
வென்றி வனசரன்தான் வேதியனைக் காத்தான்முன்
கொன்றதொரு வேந்தைக் குரங்கு. 3

மென்மதுர வாக்கால் விரும்பும் சகம்; கடின
வன்மொழியி னால்இகழும் மண்ணுலகம்! - நன்மொழியை
ஓதுகுயில் ஏ(து)அங்(கு) உதவியது கர்த்தபம்தான்
ஏ(து) அபரா தம்செய்த(து) இன்று. 4

பகைசேரும் எண்ணான்கு பற்கொண்டே நன்னா
வகைசேர் சுவையருந்து மாபோல் - தொகைசேர்
பகைவரிடம் மெய்யன்பு பாவித்(து) அவரால்
சுகமுறுதல் நல்லோர் தொழில். 5

காந்தன்இல் லாத கனங்குழலாள் பொற்பவமாம்
சாந்தகுணம் இல்லார் தவம்அவமாம் - ஏந்திழையே!
அன்னையில்லாப் பிள்ளை இருப்ப(து) அவம்அவமே
துன்னெயிறில் லாரூண் சுவை. 6

வருத்தவளை வேய்அரசர் மாமுடியின் மேலாம்
வருத்த வளையாத மூங்கில் - தரித்திரமாய்
வேழம்பர் கைப்புகுந்து மேதினியெல் லாம்திரிந்து
தாழுமவர் தம்அடிக்கீழ்த் தான். 7

நொய்தாம் திரணத்தின் நொய்தாகும் வெண்பஞ்சின்
நொய்தாம் இரப்போன் நுவலுங்கால் - நொய்யசிறு
பஞ்சுதனின் நொய்யானைப் பற்றாதோ காற்றணுக
அஞ்சுமவன் கேட்ப(து) அறிந்து. 8

ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே!
இருபோது போகியே என்ப - திரிபோது
ரோகியே நான்குபோ(து) உண்பான் உடல்விட்டுப்
போகியே என்று புகல். 9

கண்ணிரண்டே யாவர்க்கும் கற்றோர்க்கு மூன்றுவிழி
எண்ணுவிழி ஏழாகும் ஈவோர்க்கு - நண்ணும்
அநந்தம் தவத்தால் அருள்ஞானம் பெற்றோர்க்(கு)
அநந்தம் விழியென்(று) அறி. 10

உற்றபெருஞ் சுற்றம் உறநன் மனைவியுடன்
பற்றிமிக வாழ்க பசுவின்வால் - பற்றி
நதிகடத்த லன்றியே நாயின்வால் பற்றி
நதிகடத்தல் உண்டோ நவில். 11

ஆசைக் கடியான் அகிலலோ கத்தினுக்கும்
ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை
தனையடிமை கொண்டவனே தப்பா(து) உலகம்
தனையடிமை கொண்டவனே தான். 12

ஆனந் தணர்மகளிர் அன்பாங் குழந்தைவதை
மானந் தரும்பிசி வார்த்தையிவை - மேனிரையே
கூறவரு பாவங் குறையாதொவ் வொன்றுக்கு
நூறதிகம் என்றே நுவல். 13

பெற்றமையும் என்னாப் பெரியோரும் பெற்றபொருள்
மற்றமையும் என்றே மகிழ்வேந்தும் - முற்றியநன்
மானமிலா இல்லாளும் மானமுறு வேசியரும்
ஈனம் உறுவார் இவர். 14

கற்றோர் கனமறிவர் கற்றாரே கற்றறியா
மற்றோர் அறியார் வருத்தமுறப் - பெற்றறியா
வந்தி பரிவாய் மகவைப் பெறுந்துயரம்
நொந்தறிகு வானோ நுவல். 15

செய்யில் ஒருகருமந் தேர்ந்து புரிவதன்றிச்
செய்யின் மனத்தாபஞ் சேருமே! - செய்யஒரு
நற்குடியைக் காத்த நகுலனைமுன் கொன்றமறைப்
பொற்கொடியைச் சேர்துயரம் போல். 16

நாவின் நுனியில் நயமிருக்கிற் பூமாதும்
நாவினிய நல்லோரும் நண்ணுவார் - நாவினுனி
ஆங்க டினமாகில் அத்திருவுஞ் சேரான்முன்
ஆங்கே வருமரண மாம். 17

ஈக்கு விடம்தலையில் எய்துமிருந் தேளுக்கு
வாய்த்த விடங்கொடுக்கில் வாழுமே - நோக்கரிய
பைங்கணர வுக்குவிடம் பல்லளவே துற்சனருக்(கு)
அங்கமுழு தும்விடமே ஆம். 18

துர்ச்சனரும் பாம்புந் துலையொக்கி னும்பாம்பு
துர்ச்சனரை ஒக்குமோ தோகையே! - துர்ச்சனர்தாம்
எந்தவிதத் தாலும் இணங்காரே பாம்புமணி
மந்திரத்தா லாமே வசம். 19

கொம்புளதற் கைந்து குதிரைக்குப் பத்துமுழம்
வெம்புகரிக் காயிரந்தான் வேண்டுமே! - வம்புசெறி
தீங்கினர்தங் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி. 20

அவ்விய நெஞ்சத் தறிவில்லாத் துர்ச்சனரைச்
செவ்விய ராக்குஞ் செயலுண்டோ - திவ்வியநற்
கந்தம் பலவும் கலந்தாலும் உள்ளியது
கந்தங் கெடுமோ கரை. 21

துன்னும் இருமலுந் துர்ச்சனரும் ஒக்குமே
மன்னும் இனிமையான் மாறாகிப் - பன்னுங்
கடுவும் கடுநேர் கடுமொழியுங் கண்டாற்
கடுக வசமாகை யால். 22

செங்கமலப் போதலர்ந்த செவ்விபோ லும்வதனம்
தங்கு மொழிசந் தனம்போலும் - பங்கியெறி
கத்திரியைப் போலும்இளங் காரிகையே! வஞ்சமனங்
குத்திரர்பால் மூன்று குணம். 23

நீசனே நீசன் நினையுங்கால் சொல்தவறும்
நீசனே நீசன் அவனையே - நீசப்
புலையனாம் என்றுரைக்கும் புல்லியனே மேலாம்
புலையனா மென்றே புகல். 24

ஞானமா சாரம் நயவா ரிடைப்புகழும்
ஏனைநால் வேதம் இருக்குநெறி - தான்மொழியிற்
பாவநிறை சண்டாளர் பாண்டத்துக் கங்கைநீர்
மேவுநெறி யென்றே விடு. 25

குணம்நன் குணராக் கொடியோ ரிடத்திற்
குணம்நன் குடையார் குறுகார் - குணமுடைமை
நண்ணாச் சமண நகரத்தில் தூசொலிக்கும்
வண்ணானுக் குண்டோ வழக்கு. 26

ஆனை மருப்பும் அருங்கவரி மான்மயிருங்
கான வரியுகிரும் கற்றோரும் - மானே!
பிறந்தவிடத் தன்றிப் பிறிதொரு தேசத்தே
செறிந்தவிடத் தன்றோ சிறப்பு. 27

தலைமயிருங் கூருகிரும் வெண்பல்லுந் தத்தம்
நிலையுடைய மானவரும் நிற்கும் - நிலைதவறாத்
தானத்திற் பூச்சியமே சாரும் நிலைதவறுந்
தானத்திற் பூச்சியமோ தான். 28

வென்றி வரியுகிரும் வெண்கவரி மான்மயிரும்
துன்றுமத யானைச் சுடர்மருப்பும் - நின்றநிலை
வேறுபடி னுஞ்சிறப்பாம் மெய்ஞ்ஞானி நின்றநிலை
வேறுபடி னுஞ்சிறப்பா மே. 29

அன்னை தயையும் அடியாள் பணியுமலர்ப்
பொன்னின் அழகும் புவிப்பொறையும் - வன்னமுலை
வேசி துயிலும் விறல்மந் திரிமதியும்
பேசில் இவையுடையாள் பெண். 30

பெண்ணொருத்தி பேசிற் பெரும்பூமி தானதிரும்
பெண்ணிருவர் பேசில்விழும் வான்மீன்கள் - பெண்மூவர்
பேசில் அலைசுவறும் பேதையே! பெண்பலர்தாம்
பேசிலுல கென்னாமோ பின்? 31

என்னே! கிரேதத் திரேணுகையே கூற்றுவனாம்
தன்னேர் திரேதத்தில் சானகியே - பின்யுகத்திற்
கூடுந் திரௌபதையே கூற்றாம் கலியுகத்தில்
வீடுதொறும் கூற்றுவனா மே. 32

கர்ப்பூரம் போலக் கடலுப் பிருந்தாலும்
கர்ப்பூரம் ஆமோ கடலுப்பு - பொற்பூரும்
புண்ணியரைப் போல இருந்தாலும் புல்லியர்தாம்
புண்ணியரா வாரோ புகல்? 33

சீலமில்லான் ஏதேனுஞ் செப்பிடுனும் தானந்தக்
காலம் இடமறிந்து கட்டுரைத்தே - ஏலவே
செப்புமவ நுந்தானே சிந்தைநோ காதகன்று
தப்புமவன் உத்தமனே தான். 34

சிற்றுணர்வோ ரென்றும் சிலுசிலுப்பர் ஆன்றமைந்த
முற்றுணர்வோ ரொன்றும் மொழியாரே - வெற்றிபெரும்
வெண்கலத்தின் ஓசைமிகுமே விரிபசும்பொன்
ஒண்கலத்தின் உண்டோ ஒலி. 35

உள்ளபொழு(து) ஏதும் உவந்தளிப்ப தல்லாலோர்
எள்ளளவும் ஈய இசையுமோ? - தெள்ளுதமிழ்ச்
சீரளித்தோன் உண்டநாள் சேர்மேகத் துக்கருந்த
நீரளித்த தோமுந்நீர் நின்று. 36

பேதையரைக் கண்டால் பெரியோர் வழிவிலகி
நீதியொடு போதல் நெறியன்றோ? - காதுமத
மாகரத்த யானை வழிவிலகல் புன்மலந்தின்
சூகரத்துக்(கு) அஞ்சியோ சொல். 37

மந்திரமும் தேவும் மருந்தும் குருஅருளும்
தந்திரமும் ஞானந் தருமுறையும் - யந்திரமும்
மெய்யெனில் மெய்யாய் விளங்குமே மேதினியிற்
பொய்யெனிற் பொய்யாகிப் போம். 38

ஈசனெதிர் நின்றாலும் ஈசனருள் பெற்றுயர்ந்த
நேசரெதிர் நிற்ப தரிதாமே - தேசுவளர்
செங்கதிர்முன் நின்றாலும் செங்கதிர வன்கிரணந்
தங்குமணல் நிற்கரிதே தான். 39

முற்றும் இறைசெயலே முற்றிடினும் தன்னருளைப்
பெற்றவர்தம் பாலே பெரிதாகும் - பற்றுபெருந்
தாபத் திடத்தே தழன்றிடினும் நற்சோதி
தீபத் திடத்தே சிறப்பு. 40

கன்னியரைப் பொன்நாண் கழிந்தோரை மற்றயலார்
பன்னியரை மாயப் பரத்தையரை - முன்னரிய
தாதியரை நல்லோர் தழுவநினை யார்; நரகத்
தீதுவரும் என்றே தெரிந்து. 41

தன்னை யளித்தாள் தமையன் மனைகுருவின்
பன்னி அரசன் பயில்தேவி - தன்மனையைப்
பெற்றாள் இவரைவர் பேசில் எவருக்கும்
நற்றாயர் என்றே நவில். 42

வாவியுறை நீரும் வடநிழலும் பாவகமும்
ஏவனைய கண்ணார் இளமுலையும் - ஓவியமே!
மென்சீத காலத்து வெம்மைதரும் வெம்மைதனில்
இன்பாரும் சீதளமா மே. 43

உற்றதொழில் செய்வோர்க்(கு) உறுபஞ்சம் இல்லையாம்
பற்றுசெபத் தோர்க்கில்லை பாவங்கள் - முற்றும்
மவுனத்தோர்க் கில்லை வருகலகம் துஞ்சாப்
பவனத்தோர்க் கில்லை பயம். 44

ஆபத்து வந்தால் அரும்பொருள்தான் வேண்டுமே
ஆபத்தேன் பூமா(து) அருகிருந்தால் - ஆபத்து
வந்தால் அவளும் மருவாமல் எப்பொருளும்
அந்தோ உடன்போம் அறி. 45

இன்னல் தரும்பொருளை ஈட்டுதலும் துன்பமே
பின்னதனைப் பேணுதலும் துன்பமே - அன்ன(து)
அழித்தலுந் துன்பமே அந்தோ பிறர்பால்
இழத்தலுந் துன்பமே யாம். 46

தானே புரிவினையால் சாரும் இருபயனும்
தானே அனுபவித்தல் தப்பாது - தான்நூறு
கோடிகற்பஞ் சென்றாலும் கோதையே! செய்தவினை
நாடிநிற்கும் என்றார் நயந்து. 47

தூய அறிவினர்முன் சூழ்துன்பம் இல்லையாம்
காயும் விடம்கருடற் கில்லையாம் - ஆயுங்கால்
பன்முகஞ்சேர் தீமுன் பயில்சீதம் இல்லையாம்
துன்முகனுக் குண்டோ சுகம். 48

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் என்றிவரோ(டு)
இன்புறத்தான் உண்டல் இனிதாமே - அன்புறவே
தக்கவரை இன்றித் தனித்துண்டல் தான்கவர்மீன்
கொக்கருந்த லென்றே குறி. 49

இந்திரவி நீள்கிரணம் எங்கும் நிறைந்தாலும்
இந்திரவி காந்தத் திலகுமே - இந்திரவி
நேத்திரத்தோன் எங்கும் நிறைந்தாலும் நித்தனருள்
நேத்திரத்தோர் பாலே நிறைவு. 50

தாமோ தரன்முதலோர் சாதல், நூல் சாற்றுவதும்
பூமேலோர் பொன்றுவதும் கண்டோமே - நாமுடலை
நேசிப்ப(து) என்னோ நிலையாகும் சங்கரனைப்
பூசிப்ப(து) என்றே புகல். 51

அரசின் இலையதனின் அக்கிரத்தி னின்று
விரைய விழுதுளியே போலும் - புரையுடைய
ஆக்கைவிடா முன்னம் அரன்பாதம் பூசித்தல்
நோக்கல்நன் றென்றே நுவல். 52

சத்தியத்தை வெல்லா(து) அசத்தியம்தான் நீள்பொறையை
மெத்திய கோபமது வெல்லாது - பத்திமிகு
புண்ணியத்தைப் பாவமது வெல்லாது போரரக்கர்
கண்ணனைத்தான் வெல்லுவரோ காண். 53

பொற்பறிவல் லாதபல புத்திரரைப் பேறலினோர்
நற்புதல்வ னைப்பெறுதல் நன்றாமே - பொற்கொடியே!
பன்றிபல குட்டி பயந்ததனால் ஏதுபயன்
ஒன்றமையா தோகரிக்கன் றோது. 54

அத்தி மலரும் அருங்காக்கை வெண்ணிறமும்
கத்துபுனல் மீன்பதமுங் கண்டாலும் - பித்தரே
கானார் தெரியல் கடவுளருங் காண்பரோ
மானார் விழியார் மனம். 55

காளவிடப் பாந்தள் கருடனையும் கட்டுமோ
வாளெரியைக் கட்டுமோ வன்கயிறு - நீளும்
பவமருளும் பாசம்வெம் பஞ்சேந் திரியம்
சிவயோகி யைப்பிணியா வே. 56

புத்தியொடு முத்திதரும் புண்ணியத்தா லன்றியே
மத்தமிகு பாவத்தால் வாழ்வாமோ - வித்துபயிர்
தாயாகி யேவளர்க்குந் தண்புனலா லல்லாது
தீயால் வளருமோ செப்பு. 57

சிவனே சிவனே சிவனேயென் பார்பின்
சிவனுமையா ளோடுந் திரிவன் - சிவனருளால்
பெற்றவிளங் கன்றைப் பிரியாமற் பின்னோடிச்
சுற்று பசுப்போல் தொடர்ந்து. 58

தாமுங்கொ டார்கொடுப்போர் தம்மையும்ஈ யாதவகை
சேமஞ்செய் வாரும் சிலருண்டே - ஏமநிழல்
இட்டுமலர் காய்கனிகள் ஈந்துதவும் நன்மரத்தைக்
கட்டுமுடை முள்ளெனவே காண். 59

ஆயுமலர்த் தேன்வண் டருந்துவது போல்இரப்போர்
ஈயு மவர்வருந்தா தேற்றலறம் - தூயஇளம்
பச்சிலையைக் கீடமறப் பற்றி யரிப்பதுபோல்
அச்சமுற வாங்க லகம். 60

மாதா மரிக்கின் மகன்நாவின் நற்சுவைபோம்
தாதா வெனிற்கல்வி தானகலும் - ஓதினுடன்
வந்தோன் மரித்துவிடில் வாகுவலி போம்மனையேல்
அந்தோ இவையாவும் போம். 61

ஓதுபொருள் கண்டோர்க் குறுமாசை நீதியிலாப்
பாதகரைக் கண்டோர்க்குப் பாவமாம் - சீதமலர்
கண்டோர்க் குறும்வாசம் கற்றமைந்த நற்றவரைக்
கண்டோர்க் குடனாங் கதி. 62

பாவிதனந் தண்டிப்போர் பாலாகும் அல்லதருள்
மேவுசிவன் அன்பர்பால் மேவாதே - ஓவியமே!
நாயின்பால் அத்தனையும் நாய்தனக்காம் அன்றியே
தூயவருக் காகுமோ சொல். 63

பொன்னும் கரும்பும் புகழ்பாலுஞ் சந்தனமும்
சின்னம் படவருத்தம் செய்தாலும் - முன்னிருந்த
நற்குணமே தோன்றும் நலிந்தாலும் உத்தமர்பால்
நற்குணமே தோன்றும் நயந்து. 64

வேசியரும் நாயும் வித்நூல் வயித்தயரும்
பூசுரரும் கோழிகளும் பொன்னனையாய்! - பேசிலொரு
காரணந்தான் இன்றியே கண்டவுட னேபகையாம்
காரணந்தான் அப்பிறப்பே காண். 65

அன்னமனை யாய்! குயிலுக் கானவழ கின்னிசையே
கன்னல்மொழி யார்க்கழகு கற்பாமே - மன்னுகலை
கற்றோர்க் கழகு கருணையே ஆசைமயக்(கு)
அற்றோர்க் கழகுபொறை யாம். 66

இதமகித வார்த்தை எவர்க்கேனும் மேலாம்
இதமெனவே கூறலித மன்றே - இதமுரைத்த
வாக்கினால் ஏரண்ட மாமுனியுஞ் சோழனொடு
தேக்குநீர் வீழ்ந்தொழிந்தான் சேர்ந்து. 67

இத்தரையோர் தம்மில் இருவரே மேலானோர்
சித்திரச வாதி, சிவயோகி - முத்தனையாய்!
நல்குரவும் உற்பவமும் நாசம் புரிவரே
அல்லவர் வீரியக்கீ டம். 68

அற்றசிவ யோகிக்(கு) அருஞ்சின்னம் மூன்றுண்டு
பற்றலகை உன்மத்தர் பாலரியல் - முற்றுரச
வாதிக்குச் சின்னமூன் றுண்டே மகிழ்போகம்
ஈதல் இரவாமை என்று. 69

வல்லவர்பாற் கல்வி மதம்ஆ ணவம்போக்கும்
அல்லவர்பாற் கல்வி யவையாக்கும் - நல்லிடத்தில்
யோகம் பயில்வார் உயர்ந்தோர் இழிந்தோர்கள்
போகம் பயில்வார் புரிந்து. 70

தீயவர்பாற் கல்வி சிறந்தாலும் மற்றவரைத்
தூயவரென் றெண்ணியே துன்னற்க - சேயிழையே!
தண்ணொளிய மாணிக்கம் சர்ப்பந் தரித்தாலும்
நண்ணுவரோ மற்றதனை நாடு. 71

ஊரூர் எனும்வனத்தே ஒள்வாட்கண் மாதரெனுங்
கூரூர் விடமுட் குழாமுண்டே - சீரூர்
விரத்திவை ராக்கியவி வேகத் தொடுதோல்
உரத்தணியத் தையாவென் றோது. 72

போற்று குருகிளைஞர் பொன்னாசை யோர்க்கில்லை
தோற்றுபசிக் கில்லை சுவைபாகம் - தேற்றுகல்வி
நேசர்க் கிலைசுகமும் நித்திரையும் காமுகர்தம்
ஆசைக் கிலைபயம்மா னம். 73

நன்றறியாத் தீயோர்க் கிடங்கொடுத்த நல்லோர்க்கும்
துன்று கிளைக்குந் துயர்சேரும் - குன்றிடத்திற்
பின்னிரவில் வந்தகரும் பிள்ளைக் கிடங்கொடுத்த
அன்னமுதற் பட்டதுபோ லாம். 74

மனம்வேறு சொல்வேறு மன்னுதொழில் வேறு
வினைவேறு பட்டவர்போல் மேவும் - அனமே!
மனமொன்று சொல்லொன்று வான்பொருளு மொன்றே
கனமொன்று மேலவர்தங் கண். 75

கண்ணுக் கினிய சபைக்குமணி கற்றோனே
விண்ணுக் கினியமணி வெய்யோனே - வண்ணநறுஞ்
சந்த முலையாள் சயனத் தினியமணி
மைந்தன் மனைக்கு மணி. 76

பாலின்நீர் தீயணுகப் பால்வெகுண்டு தீப்புகுந்து
மேலும்நீர் கண்டமையும் மேன்மைபோல் - நூலினெறி
உற்றோர் இடுக்கண் உயிர்கொடுத்தும் மாற்றுவரே
மற்றோர் புகல மதித்து. 77

அந்தோ! புரமொரித்த அண்ணலடி யார்பொருள்கள்
செந்தீ யினுங்கொடிய தீகண்டாய் - செந்தீயை
நீங்கிற் சுடாதே நெடுந்தூரம் போனாலும்
ஏங்கச் சுடுமே இது. 78

நிந்தையிலாத் தூயவரும் நிந்தையரைச் சேரிலவர்
நிந்தையது தம்மிடத்தே நிற்குமே - நிந்தைமிகு
தாலநிழற் கீழிருந்துஆன் றன்பால் அருந்திடினும்
பாலதெனச் சொல்லுவரோ பார். 79

கன்மமே பூரித்த காயத்தோர் தம்செவியில்
தன்மநூல் புக்காலுந் தங்காதே - சன்மமெலும்(பு)
உண்டு சமிக்கும்நாய் ஊண்ஆவின் நெய்யதனை
உண்டு சமிக்குமோ ஓது. 80

பெண்ணுதவுங் காலை பிதாவிரும்பும் வித்தையே
எண்ணில் தனம்விரும்பும் ஈன்றதாய் - நண்ணிடையிற்
கூரியநற் சுற்றம் குலம்விரும்பும் காந்தனது
பேரழகு தான்விரும்பும் பெண். 81

காந்துநறும் புண்ணைக் கலந்துஈ விரும்புமே
வேந்தர் தனமே விரும்புவார் - சாந்தநூல்
கல்லார் பகைசேர் கலகம் விரும்புவார்
நல்லார் விரும்புவார் நட்பு. 82

கற்றைக் குழலார் கவினெல்லாம் ஓர்மகவைப்
பெற்றக் கணமே பிரியுமே - கற்றருளை
வேட்ட பெரியோர் பெருமையெல்லாம் வேறொன்றைக்
கேட்ட பொழுதே கெடும். 83

சீலங் குலமடியாள் தீண்டிற் கெடும் கணிகை
ஆலிங் கனம்தனநா சம்மாகும் - நூலிழந்த
வல்லிதழு வக்குறையும் வாழ்நாள் பிறர்தாரம்
புல்லினர்க்கெல் லாநலமும் போம். 84

சத்தியமெக் காலுஞ் சனவிருத்த மாகுமே
எத்தியபொய் யார்க்கும் இதமாகும் - நத்தியபால்
வீடுதொறுஞ் சென்று விலையாம் மதுஇருந்த
வீடுதனி லேவிலையா மே. 85

நல்லொழுக்கம் இல்லார் இடஞ்சேர்ந்த நல்லோர்க்கும்
நல்லொழுக்கம் இல்லாச்சொல் நண்ணுமே - கொல்லும்விடப்
பாம்பெனஉன் னாரோ பழுதையே யானாலும்
தூம்பமரும் புற்றடுத்தாற் சொல். 86

வாக்குநயத் தாலன்றிக் கற்றவரை மற்றவரை
ஆக்கைநயத் தாலறியல் ஆகாதே - காக்கையொடு
நீலச் சிறுகுயிலை நீடிசையா லன்றியே
கோலத் தறிவருமோ கூறு. 87

ஆசையெனும் பாசத்தால் ஆடவர்தஞ் சிந்தைதனை
வீசுமனை யாந்தறியில் வீழ்த்தியே - மாசுபுரி
மாயா மனைவியரா மக்கள் மகவென்னும்
நாயாற் கடிப்பித்தல் நாடு. 88

தானறிந்தோ ருக்குதவி தன்னா லமையுமெனில்
தானுவந் தீதல் தலையாமே - ஆனதனாற்
சொன்னாற் புரிதலிடை சொல்லியும்பன் னாள்மறுத்துப்
பின்னாள் புரிவதுவே பின். 89

உற்ற மறையகத்தின் உய்க்குவன் உத்தமனே
மற்று மறைபகர்வோன் மத்திமனே - முற்றிழையே!
அத்த முறலாற் புகல்வான் அதமனென
வித்தகநூல் ஓதும் விரித்து. 90

உத்தமர்தாம் ஈயுமிடத்(து) ஓங்குபனை போல்வரே
மத்திமர்தாம் தெங்குதனை மானுவரே - முத்தலரும்
ஆங்கமுகு போல்வார் அதமர் அவர்களே
தேங்கதலி யும்போல்வார் தேர்ந்து. 91

எல்லோர் தமக்கும் இனிதுதவல் அன்றியே
நல்லோர் தமக்குதவி நாடாரே - வல்லதரு
நாமநிதி மேகம் நயந்துதவல் அன்றியே
தாமுதவி நாடுமோ சாற்று. 92

வெய்யோன் கிரணம் மிகச்சுடுமே வெய்யவனில்
செய்யோன் கிரணமிகத் தீதாமே - வெய்யகதிர்
எல்லோன் கிரணத்(து) எரியினிலும் எண்ணமில்லார்
சொல்லே மிகவுஞ் சுடும். 93

திங்கள் அமிர்த கிரணமிகச் சீதளமே
திங்களினும் சந்தனமே சீதளமாம் - இங்கிவற்றின்
அன்பறிவு சாந்தம் அருளுடையார் நல்வசனம்
இன்பமிகும் சீதளமா மே. 94

சீராம்வெண் ணீற்றுத் திரிபுண் டரம்விடுத்தே
பேரான முத்தி பெறவிரும்பல் - ஆரமிர்த
சஞ்சீ வியைவிடுத்தே சாகா திருப்பதற்கு
நஞ்சே புசித்ததுபோல் நாடு. 95

செந்தா மரைஇரவி சேருதயம் பார்க்குமே
சந்திரோத யம்பார்க்கும் தண்குமுதம் - கந்தமிகும்
பூவலரப் பார்க்கும் பொறிவண்(டு) அரனன்பர்
தேவரவைப் பார்ப்பர் தெளிந்து. 96

வில்லமறு குக்கொவ்வா மென்மலர்கள்; நால்வரெனும்
நல்லவன்பர் சொற்கொவ்வா நான்மறைகள்; - மெல்லிநல்லாய்!
ஆமந் திரமெவையும் ஐந்தெழுத்தை ஒவ்வாவே
சோமசுந்த ரற்கென்றே சொல். 97

கல்லார் பலர்கூடிக் காதலித்து வாழினும்நூல்
வல்லான் ஒருவனையே மானுவரோ - அல்லாரும்
எண்ணிலா வான்மீன் இலகிடினும் வானகத்தோர்
வெண்ணிலா வாமோ விளம்பு. 98

சந்தனத்தைச் சேர்தருவும் தக்க மணங்கமழும்
சந்தனத்தைச் சார்வேய் தழல்பற்ற - அந்தவனந்
தானும்அச் சந்தனமும் தன்னினமும் மாள்வதன்றித்
தானுங் கெடச்சுடுமே தான். 99

கங்கைநதி பாவம் சசிதாபம் கற்பகந்தான்
மங்க லுறும்வறுமை மாற்றுமே - துங்கமிகும்
இங்குணமோர் மூன்றும் பெரியோ ரிடஞ்சேரில்
அக்கணமே போமென்(று) அறி. 100

நீதி வெண்பா முற்றிற்று
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247