உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
எவர் குற்றம்? வாழ்க்கையில் எத்தனையோ ஏமாற்றங்கள் வந்து வந்து போகின்றன. ஆனால் இத்தகைய கொடிய ஏமாற்றத்தை - எதிர்த்து நின்று என்னோடு போராடும் ஏமாற்றத்தை இது வரையில் கண்டதில்லை. மற்ற ஏமாற்றங்கள் வரும் போது பெருமூச்சு விட்டுத் தெளிவேன்; போகும்போது பெருமூச்சு விட்டுக் கலங்குவேன்; இந்த ஏமாற்றமோ வரும்போதே என் உயிரைப் பணயமாக வைத்துக் கொண்டு வந்தது. என் உயிரைப் பணயமாகப் பெற்றுக் கொண்டே செல்லும் போல் இருந்தது. பரந்த உலகம் என்று சொல்கின்றார்கள். இருக்கலாம். உணவுத்துறையிலே பரந்த உலகம் தான். விருப்பான உணவை அல்லது விருப்பான உடையை வேண்டிய இடத்தில் வேண்டிய போது ஒருவன் பெற முடியும்? நாளுக்கு நாள் மாறும் உடையா? வாழ்க்கையிலே ஒரு முறை தோன்றி எந்நாளும் நிலைத்து நின்று வாழ்க்கையோடு முடிந்துபோகும் உணர்வு. இந்த உணர்வுத் துறையிலே, உலகத்தைப் பரந்த உலகம் என்று சொல்ல மனம் இல்லை. இது மிக மிகக் குறுகின உலகம். ஒரு சிறு வீடு அல்லது ஒரு சிறு கூடு எனலாம். இந்த உணர்வுத் துறையிலே எனக்கும் ஒருத்திக்கும் தான் இடம் உண்டு. அந்த 'ஒருத்தி' யார்? இதுதான் பெருங்கலக்கத்தின் வித்து; ஏமாற்றத்தின் காரணம்; என் உயிரைப் பணயமாகக் கேட்ட போர். ஆயிரக்கணக்கான இளைஞர்களுடன் பழகிய எனக்கு ஒரு சிலரே நண்பர்களாகக் கிடைத்திருக்கின்றார்கள். இரண்டாயிரம் பேருடன் பழகினேன். அவர்களும் என்னைப் பொறுக்க முயன்றார்கள், நானும் அவர்களில் பலரைப் பொறுக்க முயன்றேன். இது பரந்த உலகம் என்று தவறாக எண்ணியதால் அவ்வாறு முயன்றேன். முயற்சியின் பயனாக நண்பர்கள் இருவரே கிடைத்தனர். நட்புத் துறையிலும் இது குறுகிய உலகமே என்ற உண்மை உணர்ந்தேன். ஆம் நட்பும் உணர்ச்சிதானே? 'உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்' என்ற திருவள்ளுவரைக் கேட்டிருந்தால், அவரும் இது குறுகின உலகம் தான் என்று உடன்பட்டிருப்பார். அப்போது 'மாயிருஞாலம்' என்று இதனை வாழ்த்தியிருக்கமாட்டார். இந்த இரண்டு நண்பர்களும் எனக்குத் துணை செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன். உள்ளத்தையெல்லாம் ஒளிக்காமல் எடுத்துரைத்தேன். இரவெல்லாம் பேசினேன். வைகறையில் வாய் திறந்து அவர்கள் கருதியதை எடுத்துச் சொல்லிவிட்டார்கள். மருந்து இல்லாமலே என் மனப் புண்ணை ஆற்ற முயன்றார்கள். அது ஆறவில்லை. "வாழ்க்கை என்பது ஒரு கலை. அதற்கு அனுபவம் உடையவர்களின் துணை வேண்டும். ஏட்டுக் கல்வியைக் கொண்டு அதனை எட்ட முடியாது. நாங்கள் சொல்வதைக் கேள். நீ விரும்பிய காதல் நல்லதுதான். விரும்பியபடி நீ அதைப் பெற்று வாழலாம். விருப்பத்தை மறந்து விட்டும் வாழலாம். ஆனால் எது நல்லது என்பதை எண்ண வேண்டாவா? உலகத்தை ஒட்டிச் செல்லாமல் சுற்றுப் புறத்தை புறக்கணித்து, எவரையும் பொருட் படுத்தாமல் ஒதுங்கி நீ அவளை மணந்து கொண்டு வாழ்ந்தால் அந்த வாழ்க்கை இன்பமான வாழ்க்கை ஆகுமா? காதல் வாழ்க்கை கட்டற்று விளங்குவது கற்பனை உலகத்தில்தான். நீ நினைப்பதுபோல உலகத்தை மறந்து சுற்றுப் புறத்தைப் புறக்கணித்து ஒருத்தியோடு வாழ்க்கை நடத்த முடியாது". இவ்வாறு நண்பர்கள் உரைத்த உபதேசம் என் மனத்தை ஓரளவு மாற்ற முயன்றது; மாற்றியது என்று சொல்வதற்கில்லை. மாற்ற முயன்றது, அவ்வளவுதான். அந்த அழகிய முகத்தோற்றத்திற்கு நான் அடிமையாகவில்லை. அவளுடைய புன்முறுவலில் விளங்கும் கலைக்கதிருக்கு நான் அடிமையாகவில்லை. அவளுடைய இனிய பேச்சில் மிதக்கும் அறிவொளிக்கு நான் அடிமையாகவில்லை. அந்த அழகையும், நகையொளியையும், கூரிய அறிவையும் நான் மதிக்கிறேன். ஆனால் இவற்றிற்கு நான் அடிமையாகவில்லை. அழகும், சிரிப்பும், அறிவும் நான் எங்கெங்கும் காண்கின்றேன். நான் அவற்றைத் தேடித் திரியும் இளைஞனாயிருத்தால் இன்று இவ்வளவு கவலைப்பட வேண்டியதில்லையே! அழகையும் சிரிப்பையும் அறிவையும் கடந்து அவள் உள்ளத்தில் வாழும் உணர்வு, நான் எங்கும் காணாத உணர்வு; இதனை நினைக்கும்போது இந்த உலகத்தில் நானும் அவளும் தவிர வேறொன்றும் இல்லை என்று தோன்றுகின்றது. இதை அந்த நண்பர்கள் அறிந்தே இருக்கின்றார்கள். அறிந்தும் என்னைத் திருத்த வேண்டும் என்று எண்ணி என்னவோ சொல்கின்றார்கள். இந்த உலகில் நான் வாழவேண்டும். வாழ்வதற்கு உணர்வு வேண்டும். என் உணர்வுக்கு ஒரு துணை வேண்டும். அதற்குத்தான் அவளை நாடினேன். உணர்வுலகத்தில் பழகிய நண்பர்களும் அதைத் தடுக்கிறார்கள். உணர்வை விட உலகம் பெரியது என்கிறார்கள். நான் உலகம் சிறியது என்கிறேன். எங்களுக்குத் தனித்தனி மனங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அவள் உள்ளத்தில் உணர்வது போலவே நான் உணர்கின்றேன். நான் உணர்வது போலவே அவளும் உணர்கின்றாள். எங்கள் வாழ்வு ஒரு மனத்தின் வாழ்வாக இருக்கிறது. அத்தகைய வாழ்விற்கு இடம் இல்லையா? இரண்டு வேறுபட்ட மனங்கள் இடையறாமல் போர் செய்து கொண்டு வாழும் வாழ்க்கையே வேண்டும் என்பது படைத்தவன் நோக்கமா? "அவளை மறந்து வாழ்வதனால்-" இப்படி மூன்று மாதங்களுக்கு முன் நான் எண்ணியிருந்தால், அந்த எண்ணமே எமனாய் மாண்டிருப்பேன். எண்ணிய எண்ணம் அடுத்த நொடியிலே என்னை மாய்த்திருக்கும். மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று இந்த எண்ணத்தை எண்ணவும் முடிகின்றது. ஏமாற்றம் விளையுமே என்று நடுங்கவும் முடிகின்றது. அவளை மறந்துவிட்டு இன்னொருத்தியை மணந்து கொள் என்று நண்பர்கள் சொல்லும் சொல்லைக் கேட்கவும் முடிகின்றது. இன்னொருத்தியும் - அவளும் அழகிதான்; கலை வல்லவள்தான்; அறிவு நிரம்பியவள் தான். ஆனால் என் மனம் நடுங்குகிறது. அவளுடைய உள்ளம் எப்படிப்பட்டதோ? அறிவார் யார்? அறிவது எப்படி? அறியாமல் துணிவது எவ்வாறு? கரவற்ற பார்வை, அடக்கமான நடை, ஒழுக்கமான வாழ்வு... இந்தச் சிறந்த பண்புகள் காண்கின்றேன். ஆயினும்- *****
நான் எங்கோ நடந்து போய்க் கொண்டிருந்தேன். அழகான பாதையாக இருந்தது. என் கையில் திருக்குறளோ வேறு எதுவோ இருந்தது, அதை ஊர்ப்பயணம் என்று சொல்வதற்கில்லை, ஆனால் என் நடையிலே ஒருவகை ஊக்கம் இருந்தது. ஊக்கத்திற்குக் காரணமாக என்னை அடுத்தாற்போல் க-நடந்து வந்து கொண்டிருந்தாள். என் பக்கத்தில் என்னோடு கைகோத்து நடந்துவர வேண்டும் என்று விரும்பினேன். அவள் அதற்கு இணங்கவில்லை. என் பின்னே மெல்ல நடந்து வந்தாள். நான் முன்னே சென்றேன். அந்தப் பாதையில் நடப்பதில் ஓர் இடையூறும் இல்லை என்பது என் எண்ணம். ஆனால் என்ன காரணத்தாலோ அவள் பின் வாங்கினாள். எனக்கு முன்னும் செல்லாமல், என் பக்கத்திலும் வராமல், பின்னே நடந்து வந்தாள். அதுவே போதும் என்று மகிழ்ந்து நான் ஊக்கத்துடன் நடந்தேன். திரும்பித் திரும்பி அவளைப் பார்த்துக் கொண்டே சென்றேன். நெடுந்தூரம் நடந்தேன். நின்றேன். திரும்பி நோக்கியபோது அவள் நெடுந்தொலைவில் காணப்பட்டாள். அப்போது என் பின்னே சிறிது தொலைவில் அடக்கத்தோடு அச்சத்தோடு இன்னொருத்தி நடந்து வருவதைக் கண்டேன். அவள் தான் த-இந்தக் கனவு எவ்வளவு பொருளுடைய கனவு என்பதை நான் அன்று உணரவில்லை. கனவு கண்டு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. கனவு கண்ட அன்று விடியற்காலையில் என் நெஞ்சம் பட்டபாடு சொல்ல முடியாது. அந்தக் கனவை இன்று நினைத்துப் பார்க்கின்றேன். அமைதியோடு நினைக்கின்றேன். அவள் எனக்கு முன்னே சென்றிருப்பாளானால், என்னை ஒருவரும் தடுத்திருக்க முடியாது. அவள் எவ்வளவு வேகமாகச் சென்றிருந்தாலும் நான் அவளை விடாமல் தொடர்ந்திருப்பேன். என்னை ஒருவரும் இழுத்துப் பிடித்திருக்க முடியாது. அல்லது, அவள் என்னுடன் கைகோத்துப் பக்கத்தே நடந்துவந்திருந்தாலும் நாங்கள் பிரிந்திருக்கமாட்டோ ம். நண்பர்களின் உபதேசம் எங்களுக்குத் தடையாக இருந்திருக்க முடியாது. ஆனால், நல்ல பாதை என்று அறிந்தும், இல்லாத இடையூறுகளை நினைந்து அஞ்சி, பின்வாங்கி, என்னை முன்னே நடக்க விட்டுத் தான் பின்னே வந்து கொண்டிருந்தாள். நான் திரும்பிப் பார்த்தபோது என் கண்ணுக்கு எட்டாத் தொலைவில், என் வாழ்க்கைக்கு எட்டா நிலையில் தனித்து, நின்று விட்டாள். இது என் குற்றமா? *****
இன்று - இந்த மூன்று ஆண்டுகள் கழிந்த பிறகு - இந்தக் கனவை அமைதியாக எண்ணும் வாய்ப்புக் கிடைத்த போது, என் வாழ்க்கைத் துணைவியாக விளங்குகின்றாள், த-. இந்தக் கூட்டில் நான் எதிர்பார்த்த கிளி என்னோடு இல்லை. அது கூட்டினுள் புகுவதற்கு அஞ்சி இன்னும் பறந்து திரிந்து கொண்டிருக்கிறது. இந்த அமைதியான கிளி த- என்னுடன் மகிழ்ச்சியாக இருக்கின்றது. அன்று அவள் இல்லாத குறையால் என் நெஞ்சமே வெடித்து விடும் போல் தோன்றியது; என் உயிர் வாழ்வு முறிந்து போகும் போல் இருந்தது. ஆனால் இன்று இவளோடு நானும் வளமாகத்தான் வாழ்கின்றேன், என் நெஞ்சமும் அமைதியாகத்தான் இருக்கின்றது. |