தேங்காய்த் துண்டுகள் "மாலை நேரத்தில் குடித்துவிட்டுச் சாலை ஓரத்தில் விழுந்து கிடப்பவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இது என்ன கொடுமை! பகல் ஒரு மணிக்கு நல்ல வெயிலில் தார் வெந்து உருகும் வெப்பத்தில் இந்தச் சாலை ஓரத்தில் இப்படி ஒருவன் விழுந்து கிடக்கிறானே" என்று எண்ணிக் கொண்டே அந்த மாரியம்மன் கோயிலை அணுகி நடந்து போய்க் கொண்டிருந்தேன். வெளியூர்களில் கள் சாராயக் கடைகளை மூடி விட்ட பிறகு, அங்கே உள்ள குடிகாரர் சிலர் அடிக்கடி சென்னைக்குப் புறப்பட்டு வந்து, ஏதோ வேலை இருப்பது போல் நகரத்தைச் சுற்றித் திரிந்து, ஆசை தீரக் குடித்து மயங்கியிருந்து, பிறகு ஊருக்குத் திரும்புவது எனக்கு நன்றாகத் தெரியும். எங்கள் ஊரில் இருந்தே பலர் அப்படிப் புறப்பட்டு வந்து சென்னையில் குடித்துவிட்டுப் போவது தெரியும். ஒருமுறை வீட்டுக்கு வந்து என்னைப் பார்த்துவிட்டு, நகரத்தில் பல வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். உணவுக்கு ஒரு வேளையாவது வருமாறு அழைத்தாலும் வருவதில்லை. அவர்களுக்கு விருப்பமான விருந்து கள்ளுக் கடைகளிலும் சாராயக் கடைகளிலும் கிடைக்கும்போது, வெந்த அரிசிச்சோற்றைத் தேடியா வந்து காத்திருப்பார்கள்? நாட்டுப் புறத்தில் மூலைமுடுக்குகளில் காய்ச்சும் திருட்டுச் சாராயம் போதாது என்று இந்தக் கடைச் சரக்கை நாடி வருகிறவர்கள், அதையும் விட்டு நல்ல அரிசிச் சோற்றையும் பொருட்படுத்தாமல் இந்தப் பங்கீட்டு அரிசிச் சோற்றை... ஈரத்தோடு நெடுநாள் இருந்து கெட்டு அழுகிப் பல நிறம் பெற்று விளங்கும் அரிசியால் சமைத்த சோற்றையா நாடி வருவார்கள் என்று நானும் வற்புறுத்தாமல் விட்டுவிடுவேன். ஆனால் மின்சாரவண்டி வரும் வேளையில் தண்டவாளப் பாலத்தின்மேல் நடந்து வண்டியில் அகப்பட்டுக் கொண்டு மடிந்த இரண்டு பிணங்களை ஒரு நாள் காண நேர்ந்தது. அவர்களுக்கு முன்னே நடந்துவந்த சிலர் அவர்களைக் குடிகாரர் என்று அறிந்து அங்கே நடந்து போக வேண்டா என்று சொல்லித் தடுத்தும் கேட்கவில்லையாம். அந்தக் குடிவெறியில் தள்ளாடி நடந்து மின்சார வண்டிக்குப் பலியானார்களே என்று அன்று என் நெஞ்சம் மிக வருந்தியபோது, போக்கு வரவு மிகுந்த சென்னையில்தான் கள் சாராயக் கடைகளை முதலில் மூட வேண்டும் என்று உணர்ந்தேன். "குடிகாரனா?" என்று அவர்களைப் பார்த்துக் கேட்டேன். "இல்லைங்க" என்றார் ஒருவர். "வேறு என்ன? காக்கை வலிப்பா?" என்றேன். "அதுவும் இல்லைங்க. காக்கை வலிப்பாக இருந்தால் இப்படி மூச்சுப் பேச்சு இல்லாமல் சும்மா விழுந்து கிடப்பானா?" என்றார் மற்றொருவர். அவனுக்கு வயது இருபது இருக்கலாம். நல்ல கட்டான உடல் இருந்தது. ஆனால் அழுக்கேறிய ஆடையும் வாடிய முகமும் கண்டபோது, வேறு நோயாக இருக்க முடியுமா என்று எண்ணிப் பார்த்தேன். தீய வழியில் நடந்து பெற்ற விபசார நோயாக (மேகம் முதலிய நோயாக) இருந்து உயிருக்கே உலை வைக்கும் அளவுக்கு முற்றியிருக்கலாம் என்றும், இந்தக் காலத்து இளைஞர்கள் மிகவும் கெட்டுப் போனவர்கள் என்றும் எண்ணினேன். "சரி, கர்ம வினை, நாம் என்ன செய்ய முடியும்?" என்று ஒருவகை வெறுப்போடு நடக்கத் தொடங்கினேன். அதற்குள் யாரோ தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளிக்கவே, அவன் "வேலா, வேலா" என்று ஆழ்ந்த குரலில் இரண்டு முறை சொன்னான். இதைக் கேட்டதும் காலெடுத்துச் சில அடி தொலைவு நடந்து சென்ற நான் அந்த இடத்திலேயே நின்றேன். அப்போது அந்த இடத்தில் என்னைப் போல் வழிப்போக்கர் ஒருவர் எட்டிப்பார்த்து, "இது என்ன அய்யா! பாசாங்கு, வெறும் பாசாங்கு; வாய் திறந்து வேலா வேலா என்று கடவுள் பெயரைச் சொல்கிறானே! நான் இந்த மாதிரிப் பாசாங்குப் பிச்சைக்காரர் எவ்வளவோ பேரைப் பார்த்திருக்கிறேன். நேற்றுக் குழந்தை பெற்றுவிட்டு, இன்றைக்குப் பத்துமாதக் கர்ப்பவதி போல் பாசாங்கு செய்து பிச்சை கேட்பதைப் பார்த்ததில்லையா?" என்றார். உடனே அங்கிருந்த மற்றொருவர், "இதுதான் அய்யா பட்டணம்! போகிறவர்கள் சும்மா போகக் கூடாதா? எட்டிப் பார்த்தவுடன் பாசாங்கு தெரிந்துவிடுமா? அவரவர்கள் வயிற்றுக்கு இல்லாமல் பட்டினியால் செத்தால் தெரியும்" என்றார். 'பட்டினி' என்ற சொல்லைக் கேட்டவுடன் எனக்கு இரக்கம் தோன்றியது. ஏதாவது வாங்கித் தரச் சொல்லலாம் என்று சட்டைப் பையில் கை இட்டுக் காசு எடுத்தேன். அதற்குள் ஒருவர் - கல்லூரி மாணவன் என்று அப்பால் தெரிந்து கொண்டேன் - ஒரு கையில் காப்பியும் மற்றொரு கையில் இரண்டு வாழைப்பழமும் கொண்டு வருவதைக் கண்டேன். என்ன நடக்கிறது, பொறுத்துத்தான் பார்ப்போம் என்று திரும்பி வந்து எட்டிப் பார்த்தேன். அதற்குள் அவனைச் சுற்றிப் பத்துப் பேருக்கு மேல் நின்று கொண்டிருந்தார்கள். "எந்த ஊர் அப்பா?" என்றார் ஒருவர். "மதுரை" என்றான் சிறிது தெளிவான குரலில். "எங்கே வந்தாய்?" "பிழைக்கத்தான் அய்யா! என் கதி...!" "போகட்டும்; என்ன உடம்புக்கு?" "ஐந்து நாளாச்சு அய்யா" என்று சொல்லி வயிற்றை அடித்துக் கொண்டு கண்ணீர் கலங்கினான். உடனே கூட்டம் மெல்ல மெல்லக் கலையத் தொடங்கியது. நான்கு பேர் நின்றார்கள். "எழுந்து நடக்க முடியுமா?" என்று கேட்டேன். "இன்னும் கொஞ்ச நேரம் பொறுங்கள், சாமி" என்று கெஞ்சும் குரலில் சொல்லி முகத்து வியர்வையைத் துடைத்து, கால்களை நீட்டிக் கொண்டும் மடக்கிக் கொண்டும் இருந்தான். பிறகு அங்கிருந்த சிலரும் மெல்ல நகர்ந்தார்கள். காப்பி கொடுத்த மாணவர் மட்டும் அங்கே நின்று கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த கல்லூரி மணி அடித்தது. அந்த மணி ஒலியைக் கேட்டதும், அவரும் திரும்பித் திரும்பிப் பார்த்தார். இறுதியில் அவரும் புறப்பட்டுப் போகவே, நான் மட்டும் அங்கே நின்றேன். அந்த இளைஞனுடைய உண்மையான நிலையைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஏதோ ஒருவகை வேட்கை என் மனதிலிருந்து தூண்டியது. அதனால்தான் நான் புறப்பட முடியாமல் அங்கே நின்றுவிட்டேன். "எழ முடியுமா?" என்று மறுபடியும் அவனைக் கேட்டேன். "உடம்பு அசதியாக இருக்கிறது, சாமி" என்றான். "வீடு வரைக்கும் வந்தால் வயிறாரச் சாப்பிட்டு வரலாம்" என்று அழைத்தேன். "வீடு எங்கே? சொல்லுங்கள். கொஞ்சம் களைப்புத் தீர்ந்ததும் நானே வருவேன்" என்றான். "இன்னும் கொஞ்சம் தூரம் தானே? இந்த மாரியம்மன் கோவிலுக்கு எப்படியாவது போய்ச் சேர்ந்துவிடவேண்டும் என்று தள்ளாடிக் கொண்டே வந்தேனுங்க!" என்று சொல்லிவிட்டு அமைதி ஆனான். பிறகு கண்ணீர் கலங்கித் தன் அழுக்கு ஆடைகளால் கண்களைத் துடைத்துக் கொண்டான். ஏதோ உண்மைக் காரணம் இருக்க வேண்டும் என்று நானும் பொறுத்திருந்தேன். ஒரு பெருமூச்சு விட்டு, "நான் பிழைக்க மாட்டேனுங்க" என்று அழுதான். என்னால் ஆன வரையில் தேறுதல் கூறினேன். "சொந்த ஊரில் சாகாமல் இப்படிப் பட்டணத்தில் சாக வேண்டுமா?" என்று விம்மி விம்மிச் சொன்னான். "அதனால் தான் இந்தக் கோயிலுக்கு வந்து உயிரை விடலாம் என்று வந்தேன்" என்று கலங்கிச் சொன்னான். "நீ தான் திக்கற்றவன் ஆச்சே. உனக்கு எங்கே இறந்தால் என்ன? இந்தக் கோயில் மேல் பக்தி என்ன?" என்று மெல்லக் கேட்டேன். "பக்தி இல்லை சாமி. என்னோடு வந்தவன் - எங்கள் ஊரான் - இங்கே அடிக்கடி வந்து தேங்காய் பழம் வைத்துப் பூசை செய்து விட்டுப் போவது வழக்கம். அவன் வருவான், சாகும்போது அவனாவது பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்வான் என்று தான் இங்கு வந்தேன்" என்றான். இதைக் கேட்டதும், இன்னும் பெரிய கதைகள் இருக்கும் என்று நம்பிப் பேச்சை நிறுத்தி, எழுந்து வீட்டுக்கு வருமாறு சொன்னேன். மெல்ல எழுந்தான். கால்கள் பின்னிக் கொள்ளும் நிலையில் தளர்ந்து அடி எடுத்து வைத்து நடந்து வந்தான். வழியில் உள்ள ஒரு பாலத்தின் சுவரின் மேலும், ஒரு வீட்டுத் திண்ணையின் மேலும் இரு முறை உட்கார்ந்து மூச்சுவிட்டு எப்படியோ வீடு வந்து சேர்ந்தான். சாப்பிட்டு முடியும் வரையில் ஒன்றும் கேட்பதில்லை என்று இருந்தேன். உண்ட பிறகு அவன் முகத்தில் களைப்பும் தெளிவும் கலந்து விளங்கின. திண்ணையின் கீழே மெல்லச் சாய்ந்தான். "சாமி! உங்களுக்கு எவ்வளவோ புண்ணியம்! கொஞ்சநேரம் இங்கே படுத்திருந்துவிட்டுப் போய் விடுவேன்" என்றான். இதுதான் வாய்ப்பு என்று நானும் என் ஐயம் தீரக் கேட்கத் தொடங்கினேன். "உங்கள் ஊரான் கோவிலுக்கு வருவதாகச் சொன்னாயே. அவனுக்கு என்ன வேலை? அவன் நாள் தோறும் கோயிலுக்கு வருகிறானா?" என்று பல கேள்விகள் கேட்டேன். "அவன் எப்படியாவது இரவு படுப்பதற்கு முன் ஒவ்வொரு நாளும் இந்தக் கோயிலுக்கு வராமல் போவதில்லை. ஒருவேளை தவறிவிட்டாலும், அவன் இருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் உள்ள எந்தக் கோயிலுக்காவது போய்க் கும்பிட்டுவிட்டுப் படுத்துக் கொள்வான். அப்போதும் இந்த கோயில் மேல் தான் நினைவு இருக்கும்" என்று கேட்டதற்கெல்லாம் விடை கூறினான். இவ்வளவெல்லாம் சொல்லியும் அவனுடைய தொழிலையும் பெயரையும் சொல்லாமல் மறைத்து வந்தான். அதனால் அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும் எனக்கு மிகுதியாயிற்று. வற்புறுத்திக் கேட்டதன் பிறகு, தன்னைப் போலவே கூலி வேலை செய்து பிழைப்பவன் என்றும், ஆனால் தன்னைப் போல் காசு கிடைக்காமல் கூலி வேலை கிடைக்காமல் உணவு கிடைக்காமல் திண்டாடுவதே இல்லை என்றும், அவன் பெயர் வேலன் என்றும் தெரிவித்தான். பெயர் வேலன் என்று அறிந்ததும், மயங்கி விழுந்து கிடந்த போது "வேலா வேலா" என்று அவன் வாய் பிதற்றியது நினைவிற்கு வந்தது. அவனுடைய நண்பனிடத்தில் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தால், உணர்விழந்த காலத்திலும் அவன் பெயரைச் சொல்லி குமுற முடியும் என்றும், அப்படிப்பட்ட உண்மை நண்பன் நாள் தவறாமல் பூசை செய்யும் நல்ல நிலைமையில் இருக்கும்போது இவன் மட்டும் ஏன் வாட வேண்டும் என்றும் நான் வியந்து அமைதியானேன். அதற்குள் அந்த இளைஞனை உறக்கம் ஆட்கொள்ள வந்ததை உணர்ந்தேன். சிறிது நேரத்தில் குறட்டை விட்டு உறங்கும் நிலைமை அடைந்தான். நான் எழுந்துபோய் என் கடமைகளை முடித்துக் கொண்டு திரும்பி வந்து அந்தத் திண்ணைமேல் சமக்காளம் விரித்துப் படுத்துக்கொண்டு, அவனைப் பற்றியும் அந்த வேலனைப் பற்றியும் வேலன் தொழில் எதுவாக இருக்கும் என்பதைப் பற்றியும் எவ்வளவோ எண்ணிப் பார்த்தேன். உண்மை அறிய முடியாமல் மயங்கிக் கொண்டிருந்தேன். எப்படியாவது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று துணிந்தேன். சிறிது நேரம் கழிந்தது. திடீரென்று அவன் எழுந்து உட்கார்ந்து, "நீங்கள் இல்லாவிட்டால், நான் இன்றைக்குச் செத்தே போயிருப்பேன். என்னோடு வந்தவன் முனிசாமி என்று ஒருவன் அப்படித்தான் பட்டணத்து மண்ணுக்கு பலியானான்" என்று பக்கத்தில் இருந்த ஒரு கல்லையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். எழுந்த ஐயங்கள் தீர்வதற்கு முன்னே இன்னொரு முனிசாமி கதையும் புகுந்து விட்டதே என்று நினைத்து "வேலனுக்குப் பணமும் சாப்பாடும் கிடைத்தபோது இந்த முனிசாமி மட்டும் ஏன் பட்டினியால் சாக வேண்டும்?" என்று கேட்டேன். "வேலன் தைரியம் எங்களுக்கு வராது. வேலன் பள்ளிக் கூடத்திலும் சில மாதம் படித்திருக்கிறான். நான் படிக்கவே இல்லை. முனிசாமி மூன்றாவது படித்து நின்று விட்டான். தவிர, வேலன் செய்வதெல்லாம் முனிசாமிக்குப் பிடிப்பதில்லை. அது நல்லது அல்ல. பாவம் என்று முனிசாமி அடிக்கடி சொல்லுவான். அதனால் வேலனுக்குக் கோபம். அவன் முனிசாமிக்கு உதவி செய்வதே இல்லை. எனக்குக் கொடுக்கும் பணத்தில் கொஞ்சம் எடுத்து வேலனுக்குத் தெரியாமல் முனிசாமிக்குக் கொடுப்பேன். அவன் அதையும் வாங்க மாட்டான். வேலன் கொடுத்த காசு பாவக் காசு, அது எனக்கு வேண்டா, அதைவிட உயிரை விடலாம் என்று பிடிவாதமாய் வாங்க மறுத்து விடுவான். அதனால் பல நாள் பட்டினியிருக்க வேண்டி ஏற்பட்டது. ஒரு நாள் ரயில் வரும்போது தலை கொடுத்து விட்டான். அதுவும் எனக்குத் தெரியாது. வேலன் தான் அந்த பிணத்தைப் பார்த்ததாக இரண்டு நாள் கழித்துச் சொன்னான். எனக்காவது அம்மாவும் இல்லை, அப்பாவும் இல்லை. நான் செத்தால் அழுவாரும் இல்லை. அந்த முனிசாமிக்கு அம்மா இல்லா விட்டாலும், அப்பா இருக்கிறார். அவர் ஏழை. இருந்தாலும் கேள்விப்பட்டால் என்ன பாடுபடுவாரோ" என்று சொல்லிப் பல பல என்று கண்ணீர் விட்டான். "நீங்கள் யாருக்கும் சொல்லக் கூடாது, சாமி. சொன்னால் என் உயிருக்கும் முடிவுதான். முனிசாமி எங்காவது போலீசாரிடம் தன்னைப் பற்றிச் சொல்லிவிடுவானோ என்று அவன் பல நாள் பயப்பட்டான். அதனால் முனுசாமி மேல் சந்தேகமும் கொண்டான். ஆனால் முனிசாமி மிக நல்லவன். பகையாளிக்கும் தீங்கு செய்யமாட்டான். வேலனும் நல்லவன் தான். வேறு வழியில்லை என்று தான் இந்தத் தொழில் செய்கிறான். எனக்கு அதை நினைத்தாலும் பயமாக இருக்கிறது. ஒருநாள் ஒரு விலையுயர்ந்த பேனாவைக் கொடுத்து வைத்திருக்கச் சொன்னான். அன்றெல்லாம் நான் வெளியே திரியாமல் ஒரு மூலையில் முடங்கியிருந்தேன். போலீசாரைக் கண்டாலும் நடுக்கமாக இருந்தது. வேலன் தைரியம் வராது. யாருக்கும் சொல்லாதீர்கள், சாமி" என்று சொல்லி முடித்துக் கெஞ்சுவதுபோல் என் முகத்தநப் பார்த்தான். மறுபடியும் உறுதி கொடுத்தேன். இங்கும் அங்கும் திரும்பிப் பார்த்தபடியே பேசினான். "அவன் பட்டணத்துக்கு வந்த நாலாம் நாளே ஒரு கூட்டத்தில் சேர்ந்துவிட்டான். அந்தக் கூட்டத்தில் ஐந்தாறு போக்கிரிகள் இருக்கிறார்கள். அவர்கள் எந்த நேரமும் சைனாபசாரிலிருந்து மூர்மார்க்கெட் வரையிலும் எங்காவது நின்று கொண்டும் திரிந்து கொண்டும் இருப்பார்கள். சில வேளைகளில் பஸ் நிற்கும் இடங்களில் நிற்பார்கள். ஆட்கள் கூட்டமாகச் சேரும் இடங்களிலே அவர்கள் நடுவில் திரிந்து கொண்டிருப்பார்கள். வேலன் அவர்களோடு சேர்ந்து விட்டான். எனக்கோ முனிசாமிக்கோ அது பிடிக்கவில்லை. ஆனால், நாங்கள் கூலியும் கிடைக்காமல் பட்டினி இருந்த போதெல்லாம் எங்களுக்குக் காப்பி பழம் எல்லாம் வாங்கிக் கொடுத்துக் காப்பாற்றினவன் அவன் தான். ஒரு நாள் வேலனிடத்தில் பத்து ரூபாய் நோட்டு ஐந்து பார்த்தோம். யாரோ சட்டைப் பையில் பணப்பை (மணிபர்ஸ்) வைத்துக் கொண்டு போனதாகவும், அதை அந்த ஐந்தாறு பேரில் ஒருவன் கத்தரித்து இன்னொருவன் கையில் கொடுத்ததாகவும், அது அப்படியே கை மாறி மாடர்ன் கபேயிலிருந்து சென்ட்ரல் ஸ்டேஷன் வரையில் வந்ததாகவும், அது வேலன் கைக்கு வந்தபோது, அதிலிருந்து ஐந்து நோட்டு எடுத்து வைத்துக் கொண்டதாகவும் சொன்னான். இதைக் கேட்டதும் முனிசாமி எங்கள் மேல் கோபத்தோடு புறப்பட்டான். வேலன் ஓடிப்போய் அவனுடைய இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு, போலீசாரிடம் சொல்லாதிருக்குமாறு கெஞ்சினான். இனிமேல் அந்தத் தொழில் செய்வதில்லை என்று வாக்குறுதி கொடுக்கும்படி முனிசாமி கேட்டான். வேலன் வாக்குறுதியும் கொடுத்தான். ஆனால் சொன்னபடி நிற்கவில்லை. ஒருநாள் முன்னைப்போல் ஒருவர் பணப்பை போய்விட்டதாகவும் இருநூறு ரூபாய் இருந்ததாகவும் அழுது கொண்டே சைனாபசாரில் சொன்னார். அதைக் கேட்டபோது முனிசாமி என்னைத் தனியே அழைத்துக் கொண்டு போய், "வேலன் இப்படிப் பலரை அழ வைத்துப் பாவம் தேடிக் கொள்கிறானே" என்றான். வேலனை நான் தனியே ஒருநாள் உருக்கத்தோடு கேட்டேன். தான் ஒன்றும் செய்வதில்லை. என்றும் மற்றவர்களுக்குத் துணையாக இருந்து திருடிய பொருள் கைமாறும்படி செய்வதாகவும் சொல்லிச் சத்தியம் செய்தான். முனிசாமி இறந்த பிறகு நான் வேலனை ஒன்றுமே கேட்பதில்லை. எப்படியாவது போகட்டும் என்று விட்டுவிட்டேன். ஆனால் நான் பட்டினி இருந்ததைப் பற்றியும் வருத்தப்படவில்லை. ஐந்து நாளாக அவனைப் பார்க்கவில்லை. இந்தக் கோயிலுக்கும் அவன் ஐந்து நாளாக வரவில்லை. வந்திருந்தால் எனக்குத் தெரியும் கிழக்கு இறவாணத்து மூலையில் கல்சந்தில் தேங்காய் கொஞ்சமாவது வைக்காமல் போக மாட்டான். ஐந்து நாளாக அங்கே தேங்காய் இல்லை. சைனாபசாரிலும், மூர்மார்க்கெட்டிலும் தேடினேன். எங்கும் கிடைக்கவில்லை. என்னாலும் நடக்க முடியாதபோதுதான் இந்தக் கோயிலில் இருந்து உயிரை விட வந்தேன். இரவில் நேரம் கழித்து வந்தால் பார்க்க முடியும் என்று வந்தேன். கையில் காசு அகப்படாத காரணத்தால் தேங்காய் வாங்க முடியாமல் போனதோ, அல்லது கூட்டாளிகள் துரத்தி விட்டார்களோ, அல்லது போலீசார் பிடித்துச் சிறையில் வைத்து விட்டார்களோ, என்ன ஆனானோ, ஒன்றும் தெரியவில்லை. என் மனத்தில் ஒரே கவலையாக இருக்கிறது. தூங்கிக் கொண்டே இருந்தேன். அதை நினைத்துத்தான் திடுக்கிட்டு எழுந்தேன்" என்றான். "என்றைக்கும் ஆபத்து பிக்பாக்கெட்" என்று சொல்லி முடிப்பதற்குள், அவன் எழுந்து என் இரண்டு கால்களையும் பிடித்துக் கொண்டு, "சாமி, சொல்லிவிடாதீர்கள்" என்று கண்ணீர் விட்டுக் கெஞ்சினான். மறுபடியும் அவனுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. கொஞ்ச நேரம் எதையோ உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு, அவனே என்னைப் பார்த்து, "ஒருமுறை போலீசாரிடம் என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்து, இரண்டு நாள் சிறையில் இருக்கும்படியாகவும், மூன்றாம் நாள் வெளியே அழைத்து வந்து விடுவதாகவும் உறுதியாகச் சொன்னான். ஒரு குற்றமும் செய்யாத நான், அவனுக்காகச் சிறையில் அடைப்பட்டு இருந்தேன். ஆனால், சொன்ன சொல் தவறாமல் அவன் மூன்றாம் நாள் வந்து என்னை அழைத்துக் கொண்டு போனான். போலீசார் யாரும் அவனுக்குப் பகையாளி அல்ல. நாள்தோறும் நிறையப் பணம் வைத்திருக்கிறபடியால், அவனிடம் எல்லாரும் அன்பாகப் பழகுகிறார்கள். ஆனால், முனிசாமியும் நானும் சைனாபசாரில் நடப்பதற்குக் கூட பயந்தோம். அப்படி இருந்தும் எங்களை எல்லாரும் மிரட்டினார்கள். வேலன் உங்களைப் போல் வெள்ளை வெளேல் என்று மடிப்பு வேட்டியும், மடிப்புச் சொக்காயும் சிலவேளைகளில் கோட்டும் போட்டுக் கொண்டு திரிவான். சில நாட்களில் கடைகளில் வாடகைக்கு டவுசர் வாங்கி நல்ல செருப்பும் போட்டுக்கொண்டு திரிவான். இவ்வளவு தைரியம் இருந்தும், ஐந்து நாளாக வரவில்லையே, கண்ணில் படவில்லையே என்பதை நினைக்கும் போது வயிறு பகீர் என்கிறது. எங்காவது ஆசுபத்திரியில் இருக்கிறானோ, அல்லது சிறையில் இருக்கிறானோ, தெரியவில்லை. நான் நோயாளியாக இருந்தாலும் அவன் பார்த்துக் கொள்வான்; சிறையில் இருந்தாலும் அவன் வந்து விடுதலை செய்துகொண்டு போவான். அவனிடம் பணம் இருக்கிறது. ஆனால் நான் அவனை எங்கே தேடுவது? என்ன உதவி செய்வது? எப்படி விடுதலை செய்வது? என்னிடம் பணம் ஏது?" என்று சொல்லி ஒரே கலக்கமாகப் பைத்தியம் பிடித்தவன் போல் பழைய கல்லையே உற்றுப் பார்த்துப் பெருமூச்சு விட்டான். இது நடந்து இரண்டு வாரம் கழிந்து ஒரு நாள் மாலையில் நல்ல நிலவொளியில் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தேன். பழைய அந்த மாரியம்மன் கோயிலைக் கண்ட கண், என் பழைய நினைவைத் தூண்டியது. அங்கே ஓர் இளைஞன் விழுந்து வணங்கிக் கொண்டிருந்தான். எதிரே ஒரு சீப்பு வாழைப்பழமும் பெரிய தேங்காய் ஒன்றும் இருந்தன. தேங்காயை உடைத்துக் கற்பூரம் ஏற்றினான். கைகளைக் குவித்தபடியே நெடுநேரம் நின்று ஏதோ பாடிக் கொண்டிருந்தான். எனக்கு அந்த வேலன் நினைவு வந்தது. இருக்காது, இவர் யாரோ உண்மையான அன்பர் என்று நடக்க எண்ணினேன். எதற்கும் பார்த்துவிட்டுப் போகலாம் என்று இளைப்பாற வந்தவன் போல் நடித்துக் கோயிலை அடுத்த திண்ணையின் மேல் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த வாழைப் பழச் சீப்பை எடுத்துத் தெருவில் போய்க் கொண்டிருந்த சில பிள்ளைகளை அழைத்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்தான். ஒரு மூடி தேங்காயைத் தோண்டி ஆளுக்கு கொஞ்சம் கொடுத்தான். சிறுவர்கள் போய்விட்ட பிறகு மற்ற மூடியை எடுத்துக்கொண்டு கிழக்கு இறவாணத்து மூலைக்கு வந்தான். அந்தக் கல்சந்தில் கைவைத்து எதையோ எடுத்து எடுத்து மெல்ல வீசி எறிந்தான். ஒவ்வொரு முறையும் ஒரு பெருமூச்சு விட்டது எனக்குக் கேட்டது. கடைசியில் மெல்ல நகர்ந்தான். சிறிது தொலைவு நடந்ததும், கைக்குட்டையை எடுத்து கண்களைத் துடைத்துக் கொண்டே செல்வதைக் கண்டேன். என் நெஞ்சத்தில் ஏதோ துயரம் குடி கொண்டது. சிறிது நேரம் கழித்து எழுந்து, அந்தக் கல்சந்தை அணுகிக் கை விட்டுப் பார்த்தேன். அந்தத் தேங்காய் மூடியை அப்படியே வைத்திருந்ததைக் கண்டேன். என்னை அறியாமல் என் வாய், 'அய்யோ' என்று ஒலித்தது. அப்பால் வந்தேன். அவன் எதையோ எடுத்து வீசி எறிந்தானே, அது என்ன பார்க்கலாம் என்று அந்த இடத்திற்குப் போய்ப் பார்த்தேன். மேகங்கள் விலகிச் செல்ல, முன்னிலும் நன்றாய் நிலா ஒளி பரப்பியது. அந்த இடத்தில் தேங்காய்த் துண்டுகள் விழுந்து கிடந்தன; வாடிக்கிடந்தன; எறும்பு மொய்த்துக் கிடந்தன. எடுப்பாரின்றிக் கிடந்தன; கண்ணீரால் நனைந்து கிடந்தன. |
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |