நிகண்டு நூல்கள்

     நிகண்டு என்பது சொற்களுக்கான பொருள்களைத் தருவதற்காக ஆக்கப்பட்ட நூல் வகையாகும். தமிழில் அகராதிகளுக்கு முன்னோடியாக இருந்தவை நிகண்டுகள். இந் நூல்கள் முற்காலத்தில் உரிச்சொற்பனுவல் என்ற பெயரால் அழைக்கப்பட்டன, ஆயினும் நிகண்டு என்னும் சொல் வடமொழி என்ற கருத்தும் உள்ளது.

     நிகண்டுகள் செய்யுள் வடிவில் அமைந்தவை. அவற்றில் ஒருபொருட் பல்பெயர், ஒருசொற் பல்பொருள், தொகைப்பெயர் என்னும் மூன்று பெரும் பிரிவுகள் உண்டு. அவை பெரும்பாலும் நூற்பாவினால் அமைந்தவை. வெண்பா, ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம், கட்டளைக் கலித்துறை போன்ற பிற பாவகைகளினால் அமைந்த நிகண்டுகளும் உள்ளன. பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே அரிய தமிழ்ச் சொற்களின் பொருளை அறிய நிகண்டு நூல்கள் தோன்றின. பிற்கால நிகண்டுகள் ஒரு பொருளைத் தரும் பலசொற்களைத் திரட்டித் தரும் பாங்கினையும் இணைத்துக்கொண்டுள்ளன.

     நிகண்டுகளில் பழமையானது திவாகர நிகண்டு. இது இக்கால அகராதி போலச் சொற்களை அகர வரிசையில் அடுக்கி வைத்துக்கொண்டு சொற்களை விளக்கும் வேறு சொற்களைத் தொகுத்துத் தருகிறது. இதற்குப் பின்னர் தோன்றிய நிகண்டுகள் சொற்களை அடுக்கும்போது முதலெழுத்தை அடுத்து நிற்கும் எதுகை எழுத்து அடிப்படையைக் கையாளுகின்றன. முதலெழுத்து அடுக்குமுறை ஏட்டைப் பார்த்துப் பொருள் உணர்ந்துகொள்ள ஏந்தாக அமையும். எதுகை எழுத்தடுக்கு முறைமை நூற்பாக்களை மனனம் செய்து மனத்தில் பதிய வைத்துக்கொள்ள ஏதுவாக அமையும்.