மண்டல புருடர்

இயற்றிய

சூடாமணி நிகண்டு

... தொடர்ச்சி - 3 ...

லகரவெதுகை

புலவர் பாடுநரே கூத்தர் புத னும்பர் கவிகள் ஓவர்
வலவனே வெற்றியாளன் மருவுந் தேர்ப்பாகன் மாயோன்
அலகு நெற்கதிரே யாதி பலகரை நுளம்பு எண் ஏதி
அலரி கண்வரி யருக்கன் அழ கொருமரம் பூவாமே. 206 - 1

ஆலமே வடவிருக்க மடுநஞ்சோ டலர்பூ நீராம்
மூலம் வேர் முதலே யேது முதிர்வுறுகிழங் கோர்நாளாம்
சீலமே குணந் தண்டித்தல் திகழ்சரித்திர முப்பேரே
சாலமே வலை சாலே கமராமரஞ் சபை மதிற் பேர். 207 - 2

காலம் வைகறை காலப்பேர் கல மலம் யாழ் பூ ணாவாய்
சாலகங் காலதர்ப்பேர் தானே பூமொட்டாகும்
தால முண்கலமே நாவே தராதரமே பனையே நாற்பேர்
ஆல லாடுதலொலிப்பேர் அறுவை சித்திரைநா ளாடை. 208 - 3

இலம்பக மத்தியாய நுதற்சுட்டென் றிருபேராமே
இலஞ்சி மா வாவி கொப்பூழ் எயில் குண மகிழே யேரி
பலங் கனி பயன் காய் சேனை பலங் கிழங் கறுபேராகும்
அலங்க லென்பது பூமாலை அசைவொடு தளி ரிலங்கல். 209 - 4

ஒலி யென்ப திடியே காற்றே யோசை யென்றாகு முப்பேர்
ஒலியலே யாறுந் தோலும் உடுத்தவாடையும் பைந்தாரும்
கலுழியே கான்யாறென்ப கலங்கிய நீருமாமே
கலை மதிப்பங்கு தூசு கல்வி நூல் இரலை காஞ்சி. 210 - 5

பீலயே யாலவட்டம் பெருவரை கலாபி தோகை
பாலிகை யுதடு வட்டம் படைவாளின்முட்டியும்பேர்
வேலி யூர் மதில் காவற்பேர் மெத்தை மெல்லணையே சட்டை
தோ லிபம் வனப்பு வார்த்தை துருத்தி தோற்பலகை யைம்பேர். 211 - 6

பாலை யொர் மர நிலம் மந்நிலத்தினிலோர பாடலும்பேர்
வேலையே கடலதற்குமேவிய கரையே காலம்
மாலையே யிரவோடந்தி மாலிகை யொழுங்கு நாற்பேர்
சாலையே குதிரைப்பந்தி யறப்புறந் தானுமாமே. 212 - 7

அல்லி வெள்ளாம்பல் காயா யகவித ழாகமுப்பேர்
அல் லிரா யிருளே யென்ப ஆக மார்பு டலுமாமே
சில்லியே வட்டங் கீரை தேருருள் சிள்வீடென்ப
வல்லி யாய்ப்பாடி வல்லி வரைவொடு நிகளமாமே. 213 - 8

இல் லிள்ளாள் இல்லையென்றல் இராசி சா விடம் வீ டாறே
மல் வளம் வலியினோடு மாயவனாடல் முப்பேர்
சில்லை யென்பது பிரண்டை சிள்வீடு தூர்த்தைக்கும் பேர்
ஒல்லையே விரைவு தொல்லை கடுப்புடன் சிறுபோதாமே. 214 - 9

வில்லென்ப மூலநாளாம் வெஞ்சிலை யொளியு மப்பேர்
வல் வலி விரைவு சூதா மலர்தலே யெதிர்தல் தோன்றல்
புல் புலி புணர்ச்சி புன்மை புதல் பனை யனுஷநாளாம்
கொல்லென்ப தசைச்சொல் ஐயங் கொலையேவல் வருத்த நாற்பேர். 215 - 10

மால் புதன் பெருமை மேக மாயவன் மயக்கங் காற்றே
ஆலோ ட லிரண்டு சொல்லும் ஆமென்ப தல்லவும்பேர்
வால் வெண்மை மிகுதி தூய்மை வசந்தனே தென்றல் காமன்
சால்பு மாட்சிமை சான்றாண்மை சாற்றிய இருபேர்தானே. 216 - 11

வலம்புரி சங்கு நந்தியாவர்த்தம் ஓர்மர முப்பேரே
புலம் பொலி தனிமை யச்சம் பொய்யென்ப பொக்கம் பொந்தாம்
சலம் பொலி ஞெகிழி குன்றாஞ் செருந்தி பஞ்சரம் வாட்கோரை
விலங்கு காற்றளை குறுக்கு மிருகத்தின் பொதுவு மாமே. 217 - 12

உலகமே திசை வெண் பூமி உயரிகுணஞ் சன முயர்ந்தோர்
அலவனே ஞெண்டு பூஞை அம்புலி கடகராசி
இலயமே கூத்துங் கூத்தின்விகற்பமு மிருபேரென்ப
வலவை வஞ்சப்பெண் வல்லோன் வருடைதான் சிம்பு ளாடாம். 218 - 13

கலாபமே மணிவடம் மேகலை மயிலிறகு முப்பேர்
சிலீமுகம் முலைக்கண் வண்டு சித்திரபுங்கந் தானாம்
சலாகை நன்மணி நாராசஞ் சவளமு மாகுமென்ப
விலோதம் பெண்மயிர் பதாகை விட மென்ப நஞ்சுந் தேளும். 219 - 14

செல் லிடி யேவல் மேகஞ் சிதலை யாகுமென்ப
எல் லொளி பக லிகழ்ச்சி இரவுட னிரவி யைம்பேர்
சொல் லுரை கீர்த்தி நெல்லாந் தொடுத்தலே வளைத்தல் கட்டல்
கல் லொலி மலை கல்லென்ப கரண்ட நீர்காக்கை செப்பாம். 220 - 15

கலி வஞ்ச மொலியே வாரி கடையுகம் வல யைம்பேரே
சிலை யொலி மலை கல் வில்லாஞ் செடியொளி செறிவு தீதாம்
தலமென்ப திலை புவிப்பேர் தலை யிடந் தலை விண் ணாதி
திலமே மஞ்சாடி யெள்ளாந் தலக மஞ்சாடி பொட்டாம். 221 - 16

வல்லை கான் விரைவு மைந் தாம் வட மணிவட மா றாம்பு
பல்ல மோர் கணக்கு பாணம் பல்லங் கரடி நாற்பேர்
மல்லலே வலி வளப் பேர் வாயி லைம்புலன் கடைப் பேர்
முல்லை மல்லிகையே வென்றி முல்லைநன்னிலங் கற்பாமே. 222 - 17

கோலென்ப தீட்டி வாட்கோல் துகிலிகை துலாஞ் சம்மட்டி
சீலமன்னவன்றன்செங்கோல் திரட்சி யாழ்நரம்போ டம்பு
நீலவஞ்சனக்கோலோடு நீளிலந்தையும் பன்னோர்பேர்
காலிலி அருணன் பாம்பு காற்றொடு முப்பேராமே. 223 - 18

கூலமே பண்ணிகாரம் புனற்கரை கோ விலங்கின்
வாலோ டாவணமே பாகல் வரம்பொடு குரங் கெண்பேரே
கா லிட மரக்கால் பிள்ளை குறுந்தறி வனங் காம் பூற்றம்
காலங் குரங் கால் வாய்க்கால் காற்றுத் தேருருள் பன்மூன்றே. 224 - 19

கோலமே யழகு பன்றி பாக்கு நீர்க்கொழுந்து பீர்க்காம்
மாலியே யிரவி கள்ளாம் மாந்தலே மரித் துண்டல்
வே லயில் படைக்கலப்பேர் வேதண்டங் கைலை வெற்பாம்
சாலி நெற்பொதுவுங் கள்ளு மருந்ததி தானுமாமே. 225 - 20

உலவை கான் மரத்தின்கொம்பொடுறு தழை விலங்கின்கோடாம்
மலைதலே பொரல் சூடற்பேர் மந்திரி குபேரன் வெள்ளி
அலர் பழி விரிபூ நீராம் அவிர்தலே யொளி பீறற்பேர்
எலி பூரநா ளெலிப் பேர் இரணம் பொன் கடன் மாணிக்கம். 226 - 21

ஆலயங் நகரங் கோயில் யானையின்கூட முப்பேர்
பாலமே மழு நெற்றிப்பேர் பவித்தரஞ் சுசி தருப்பை
நூலோர் மந்திரிகள் பார்ப்பார் நுவல்கவிப்புலவர்க்கும் பேர்
வேலாவலயந்தான் பூமி விரிகட லிருபேராமே. 227 - 22

சூலியே கருப்பப் பெண்ணுந் துர்க்கைஞ் சிவனு முப்பேர்
வாலியே அலாயுதன் கிட்கிந்தையின் மன்னன் பேராம்
பால் புடை யியல்பு திக்குப் பகுத்தல் பாலென்னு மைம்பேர்
ஏலமே மயிர்சாந்தோ டேலத்தின் பேருமாமே. 228 - 23

வகரவெதுகை

நவமென்ப புதுமை கேண்மை யொன்பது நற்கார்காலம்
கவனமே கலக்கம் வெம்மை குதிரையின்கதி போர் காடாம்
உவணமே கலுழனாகும் உயர்ச்சிக்கும் கழுகுக்கும்பேர்
பவணமே யிராசி பூமி படர்காற்று மனையே கோயில். 229 - 1

புவன நீர் புவிய மாகும் புரத்தலே காத்தல் வன்மை
நுவணை நூல் நுண்மை பிண்டி நூலே சாத்திரமுந் தந்தும்
தவவென்வ மிகுதி குன்றல் தந்தே நூல் சாத்திரப்பேர்
சிவ நன்மை குறுணி முத்தே சீவனே யுயிர் வியாழன். 230 - 2

இவறலே மறவி யாசையென்ப பேரிச்சைக்கும் பேர்
இவர்தலே யெழுச்சி யாசை யேறுதல் சேரல் மேவல்
சுவவென்ப புள்ளின்மூக்குஞ் சுவர்க்கமுஞ் சுண்டனும் பேர்
குவவென்ப திரட்சி மற்றும் குவிதலே பெருமைக்கும் பேர். 231 - 3

தவிசென்ப தடுக்கு மெத்தை யிலகட முப்பேர் தானே
சவி மணிக்கோவை செவ்வை சாற்றிய வனப்பு காந்தி
நவிரமே மஞ்ஞை புன்மை நன்மலையுடனே யுச்சி
நவிலல் சொல்லுதல் பண்ணற்பேர் நவியமே மழு கோடாலி. 232 - 4

கவுசிகம் விளக்குத்தண் டோர்பண் பட்டுக் கடியகோட்டான்
சவுரியே திருமால் கள்வன் சனி யம னினைய நாற்பேர்
மவுலியே முடி கோடீரம் வட்கலென்பது நாண் கேடாம்
கவலை செந்தினையோர்வல்லி கவர்வழி துன்ப நாற்பேர். 233 - 5

சேவகம் வீரம் யானைதுயிலிடந் துயிலுஞ் செப்பும்
சீவணியோர் மருந்து செவ்வழித்திறத்தோரோசை
ஆவணம் புணர்தம் வீதி அங்காடி உரிமை நாற்பேர்.
நீவியே துடைத்த லாடை நெருங்கு கொய்சக முப்பேரே. 234 - 6

உவளக மதி லோர்பக்கம் ஊருணி பள்ளம் உள்ளில்
கவடென்ப கப்பி யானைக்கழுத்திடுபுரசைக்கும் பேர்
சிவை யுமை மரவேர் கொல்லனுலைமுகந் திரியும்ஓரி
கவையே ஆயிலியங் காடு கவர்வழி எள்ளிலங்காய். 235 - 7

சிவப்பென்ப சினமும் செம்மையுடன் சினக்குறிப்பு முப்பேர்
உவப்பென்ப மகிழ்சி மேடாம் ஒழுக்கமே வழி யாசாரம்
தெவிட்டலே அடைத்தல் கான்றல் நிறைதலு மொலியுஞ் செப்பும்
துவக்கே தோல் பிணக்கிரண்டாஞ் சூழலே யிடம் விசாரம். 236 - 8

சேவலே காவலோடு சேறு புள்ளாண் முப்பேரே
கேவலந் தனிமை முத்தி கீரமென்பது பால் கிள்ளை
பூவை சாரிகை காயாவாம் புலி சிங்கம் உழுவை சாந்தே
வாவலுஞ் சலிகைப்புள்ளுந் தாவலும் வகுக்கலாமே. 237 - 9

சுவல் பிடர் தோண்மேன் மேடு துரகதக் குசை நாற்பேரே
கவி மந்தி புலவன் சுங்கன் கழி யென்ப மிகுதி காயல்
நவிர் உளை மருதயாழ் வாள் நாஞ்சில் எந்திரங் கலப்பை
கவிகையே குடை கொடைப்பேர் கடிப்பங் காதணி பூண் செப்பாம். 238 - 10

மா வண்டு பெருமை பிண்டி வாசி கூப்பிடல் வெறுத்தல்
காவுறுவிலங்கு செல்வங் கருநிறங் கமலை பத்தாம்
கோ விழி பசு நீர் திக்குக் குலிசம் விண் கிரணம் பூமி
ஏ வுரை சுவர்க்கம் வேந்தன் இரங்கல் வெற் பீரேழாமே. 239 - 11

ஆவியே வாவி நாற்றம் ஆருயிர் புகை மூச்சைம்பேர்
கூவிரந் தேர் தேர்மொட்டாந் குவடு நீண்மலை வெற்புச்சி
காவியே குவளை காவிக்கல்லொடு கள்ளு முப்பேர்
நாவிதன் மஞ்சிகன் கார்த்திகை பூரநாளுமாமே. 240 - 12

ஆவென்ப திரக்கம் பெற்றம் ஆச்சாவோ டிசை வியப்பாம்
காவென்ப துலாம் பூஞ்சோலை காத்தல் தோட்சுமை நாற்பேரே
பாவென்ப பனுவல் நூற்பா பரவுதல் பரப்பு மாகும்
தாவென்ப பகை வருத்தந் தாண்டுதல் வலி கே டைம்பேர். 241 - 13

கவ்வையே பழிச்சொல் துன்பங்கள் ளொல்லி யெள்ளிலங்காய்
பவ்வமே குமிழி வாரி பருமரக்கணு உவாவாம்
தவ்வை முன்பிறந்தாளொடு தாயு மூதேவியும் பேர்
நவ்வியே தோணி மானா நன் றென்ப பெருமை நன்மை. 242 - 14

அவலே சிற்றுண்டி பள்ளம் நீர்நிலை யாகு முப்பேர்
செவிலியே வளர்த்தகைத்தாய் முன்பிறந்தவளுஞ் செப்பும்
கவுட மோர்கொடி யோர்தேச மிருபெயர் கழறலாமே
சுவடு வச்சிராங்கி யோரெண் சுபமென்ப தழகு வெண்மை. 243 - 15

பவமென்ப சனனம் பாவம் பாவந்தான் வினை தியானம்
சவுரியங் களவு வீரந் தண்மை தான் குளிச்சி தாழ்வு
யவமொரு தானியப் பேரென்ப நெல்லிற்கு மப்பேர்
யவனர் சோனகர் கண்ணாளர் சித்திர காரர் ரென்ப. 244 - 16

ஆவரணந்தான் சட்டை தடை மறைப் பாரணம் ஆடை
ஏவலே வியங்கோளென்ப எய்திய வருமைக்கும் பேர்
ஓவியர் சிற்பநூலோரொடு சித்திரக்காரரும் பேர்
ஓ விரக்கச்சொல் நீக்கமோடு நீர்தகை கபாடம். 245 - 17

அவ்வையே தாயின் பேருமௌவையோ டிருபேராமே
செவ்வி யேர் பொழுதினோடு செப்பிய பருவ மாகும்
தெவ் வமர் பகை யிரண்டாந் தீவினை கொடுமை பாவம்
சைவமோர் புராண மீசன் சமயத்தின் விகற்பமாமே. 246 - 18

ழகரயெதுகை

விழவென்ப மிதுன ராசி விளங்கு முற்சவமு மாகும்
கழையென்ப புனர்தம் மூங்கில் கரும்பென விரும்பு முப்பேர்
கழல் கழங்கொடு செருப்புக் காலணி காலந் நாற்பேர்
கிழமை மூப் புரிமை பண்பாங் கிழி நிதிப்பொதி கீறாமே. 247 - 1

சூழியே சுனையும் வெய்ய தும்பியின் முகபடாமும்
பாழியே வலி விலங்கின் படுக்கை யூர் பற்றிலாரூர்
நாழியே யளக்கு நாழி நாழிகை பூரட்டாதி
ஆழி மோதிரமே நேமி அலை கடல் கரையே வட்டம். 248 - 2

இழு மெனலோசையென்ப இனிமை யுமியம்பு மப்பேர்
விழுமமே சிறப்பு சீர்மை யிடும்பையும் விதித்த பேரே
தொழுவென்ப துழலை தானே யிரேவதி நாளுஞ் சொல்லும்
செழுமையே வளங் கொழுப்பாந் தேனென்ப நறவும் வண்டும். 249 - 3

கழுது பேய் பரண் வண்டென்ப கயவு கீழ் பெருமை மென்மை
அழுவமே பரப்பும் நாடும் அழுங்கலே யிரங்கல் கேடாம்
கழுமல் பற்றொடு மயக்கங் காதலே ஆசை கோறல்
கழிலென்பதுவே சாதல் கடந்திடல் மிகுதி முப்பேர். 250 - 4

மாழை பொன்னு லோகக் கட்டி மடமை யோர் புளிமா வோலை
கூழையே சிறகு மாதர்கூந்தல் வெம்படையுறுப்பாம்
தாழை கேதகை தெங்காகுஞ் சாகினி சேம்பு கீரை
ஊழ் முறை வெயில் பகைப்போ ஊசியே சூசி யாணி. 251 - 5

உழையென்ப திடமான் யாழி னோர் நரம்பிற்கும் பேராம்
குழை யென்ப தளிர் துவாரங் குண்டலஞ் சேறு நாற்பேர்
விழைவென்ப புணர்ச்சி காதல் வெறுக்கை யென்பது பொன் செல்வம்
வழி மர பிடம் பின் மார்க்கம் வழங்கலே கொடை யுலாவல். 252 - 6

ஈழம் பொன் கள் ளோர்தேசம் எல்லையே அளவை வெய்யோன்
மேழகங் கவசம்ஆடாம் வேளாண்மை கொடையே மெய்மை
காழியர் வண்ணா ருப்புவாணிகர் இருபேர் காட்டும்
வேழமே கரும்பி யானை கொறுக்கைச் சிவேணு நாற்பேர். 253 - 7

கூழென்ப துணவும்பொன்னும் பயிரென்று கூறுமுப்பேர்
காழென்ப மணியின் கோவை கற்பரல் சேகு வித்தாம்
யாழென்ப மிதுனம் வீணை யிரலைநா ளாதிரைப் பேர்
கீழென்ப திடங் கீழ்சாதி கீழ் திசை கயமை நாற்பேர். 254 - 8

கோழியே குரு கோரூராங் குய்யமே மறைவு யோனி
மூழியே வாவி சேறோ டகப்பையு மொழியு முப்பேர்
மூழையே யகப்பை சோறா முறஞ் சுளகொடு விசாகம்
நூழிலே கோறல் யானை நுண்கொடிக்கொத்தான் பேர். 255 - 9

தொழுதி புள்ளொலி கூட்டப்பேர் தொறு நிறை யடிமைக்கூட்டம்
கெழுவுதல் மயக்கம் பற்றாங் கீலாலங் கறை நீர் காடி
குழ றுளையுடைப்பொருட் பேர் மயி ரிசைக்குழன் முப்பேரே
அழிவென்ப வீதல் கேடாம் அவி நெய் சோ றமரருண்டி. 256 - 10

ளகரயெதுகை

குளம் நுதல் கரும்பின் கட்டி குட்டமுமிட்ட நாமம்
களம மர்க்களமே கண்டங் களா விடங் கறுப்பே யில்லாள்
வளமை மாட்சிமை கொழுப்பாம் வாருணங் கடலு மேற்கும்
விளவென்ப கமர் விளாவாம் விம்ம லேங்குத லொலித்தல். 257 - 1

முளரியே விறகு செந்தீ முண்டகஞ் சிறுமை காடாம்
விளரெண்ப திளமைதானே வெளுப்பொடு கொழுப்புமாகும்
களபமே யானைக்கன்று கமழ்சாந்து கலவை முப்பேர்
உளர்தலே சிதறலாகுந் தடவலு முரைக்கற் பாற்றே. 258 - 2

குளிர் மழு நண் டிருத்தல் குளிர் கவண் முழா மீன்றாரை
நளிர் குளிர் பெருமை ஞெண்டு நாட்டிய செறிவு நாற்பேர்
ஒளி வட்டந்தான் கண்ணாடி சக்கர மிருபே ரோதும்
இளி யிசை யிசித்த லெல்லே யிணங்குத லுரித்தற்கும் பேர். 259 - 3

பளிதமென்பது கர்ப்பூரம் பல்லமென்கணக்கு மாகும்
வௌி லணில் வேழத்தம்பம் வெண்டயிர்கடைதறிப் பேர்
களிறென்பது ளத்தநாளே கறையடி சுறவு பன்றி
ஒளி யிருசுடரே தீயே யொளிப்பிடம் புகழுமாமே. 260 - 4

பாளிதஞ் சோறு கண்டசருக்கரை குழம்பு பட்டாம்
ஒளியே யானைக்கூட மொழுங்கென்றும் வழங்கும் நூலே
கோளி தொன்மரமே யத்தி கொள்வோனுங் கொழிஞ்சியும் பேர்
மீளி திண்ணியன் வலிப் பேர் மேன்மகன் பெருமைக்கும் பேர். 261 - 5

அளை தயிர் முழை புற்றாகும் அசனியே யுருமு வச்சிரம்
உளை பரிமீதுகட்டுமயிர் பிறமயிறும் ஓதும்
கிளை யென்ப தோர்பண் முங்கில் கேளொடு கிளைத்தலும் பேர்
இளை புய லிளமை வேலி தலைக்காவ லிவை நாற்பேரே. 262 - 6

உள்ளலே நினை வுள்ளான் பேர் உழப்பென்ப வலி யுற்சாகம்
ஞெல்லலே பள்ளம் மேன்மை நீண்ட வீதியு முப்பேரே
எள்ளலே நகை யிழிப்பாம் யாமந் தெற் கிரவு சாமம்
ஞொள்கல் சோம் பிளைத்த லச்சக்குறிப்பென்று நுவலற்பாலாம். 263 - 7

வள்ளென்ப காது கூர்மை வலி வளம் வாளே வாராம்
வெள்ளையே முசலி சங்கு வௌிறு வெள்ளாடு வெண்பா
கள்வனே முசு ஞெண்டி யானை கருநிறத்தவனே சோரன்
பள்ளி யூர் சிற்றூர் கோயில் பாயல் கண்படை நீத்தோரூர். 264 - 8

விளக் கொளி சோதிநாளாம் வேள்வியே மகநாள் ஈதல்
அளக்கரே புடவி சே றுப்பளங் கடல் கார்த்திகைப் பேர்
திளைத்தலே யனுபவித்தல் செறிதலே நிறை தன் முப்பேர்
இளைத்தலே யிளைப் பிரங்க லென்றூழே யிரவி வெய்யில். 265 - 9

பிள்ளையே வடுகன் காக்கை பெட்டல் தான் விரும்பல் வேண்டல்
மள்ளரே மள்ளர் வீரர் மறவர்க்குங் குறவர்க்கும் பேர்
உள்ளமே முயற்சி நெஞ்சா முஞற் றிழுக்கொடு தாளாண்மை
வள்ளியே வல்லி செங்கைவளை புனையிழை முப்பேரே. 266 - 10

காளமே யூதுகொம்பு கழு நஞ்சு கருமை நாற்பேர்
வே ளறுமுகன் காமன் பேர் விபூதி யூன் கொடுமை செல்வம்
கோ ளிடையூ றொன்பான் கொலை குணம் வலி பொய் கொள்கை
ஞாளியே சுணங்கன் கள்ளாம் நான்மு கனருகன் வேதா. 267 - 11

களரென்ப மிடறு கோட்டி களர் நிலங் கருமை நாற்பேர்
தளமிலை படையே சாந்து தாழி பூவிதழே மேடை
அளகமே மாதரோதி யறன் மயிற்குழற்சி முப்பேர்
தளை விலங்கொடு தொடர்ச்சி தாட்சிலம் பாண்மயிர்ப் பேர். 268 - 12

புள்ளு வண் டவிட்டம் புட்பேர் புளகந் தர்ப்பணம் குமிழ்ப்பாம்
கள்ளென்ப களவு கள்ளாங் கனலி தீ யிரவி பன்றி
அள் ளுரஞ் செறிவு காதோ டயிலும் பற்றிரும்பு மாகும்
வெள்ள மெண் மிகுதி முந்நீர் வேணுவே மூங்கில் வில் வாள். 269 - 13

வாளென்ப தொளி கட்கப் பேர் வல்லரி தளிர் பைங்காயம்
கூளி பேய் தம ரேறு மாசு குறள் படைத்தலைவன் கூட்டம்
தோளென்ப புயங் கை யாகுஞ் சுந்தரி யுமையே சுண்டன்
தேளென்ப தனுடநாளே விருச்சிகந் தெறுக்காலும் பேர். 270 - 14

அளியென்ப நறவும் வண்டும் அன்பொடு கொடையு நாற்பேர்
அளவையே எல்லை நாளாம் ஆசாரந் துகில் தூ மாரி
விளரியே யிளமை யாழிலோர்நரம்பி யாழ் நீள்வேட்கை
வளமென்ப பதவியும் பல்பண்டமும் வனப்பு மாகும். 271 - 15

வள்ளமே மரக்கால் வட்டில் கடிகைவட்டிற்கு மப்பேர்
வள்ளுரம் பசுவிரைச்சி வரைந்த வூன்பொதுவு மாகும்
அள்ளலே நரகஞ் சேறா மம்பு நீர் புயல் வே யேவாம்
வெள்ளிலே விளாப் பாடைப் பேர் வேலன் வேள் வெறியாட்டாளன். 272 - 16

காளையே எருது பாலைக்கதிபன் இளமையோன் பேர்
கூளியர் நண்பர் பூதகணவீரர் கொலைத்திறத்தோர்
கோளகை வட்டமோடு மண்டலிப்பாம்புங் கூறும்
கேள்வியே செவி கல்விப்பேர் கிடங் ககழ் வாவியாமே. 273 - 17

இளமையே தண்மை காம மிளமையின்பருவ முப்பேர்
அளறென்ப நரகஞ் சேறாம் அக்காரம் புடைவை வெல்லம்
கிளரென்ப கிரணத்தோடு கிளர்கோட்டுமலர்பூந்தாதாம்
களரி போர்க்களங் காடென்ப கருமஞ்செய்யிடமு மாமே. 274 - 18

றகரயெதுகை

இறைவையே புட்டி லேணியென்ப கூர் மிகுதி கூர்மை
குறடென்ப பலகை திண்ணை கொண்மூவென்பது விண் மேகம்
புறவ மோர்புள்ளுங் காடும் முல்லை நன்னிலனும் போற்றும்
புறணியெ குறிஞ்சி முல்லை நிலத்தொடு புறமுந் தோலும். 275 - 1

மறஞ் சினம் பிணக்குக் கூற்றாம் மலைந்த சேவகமு மாகும்
குறிஞ்சி யோரிசை யோர்பண்ணே குறிஞ்சி செம்முள்ளிக்கும் பேர்
பிறங்கலே மிகுதி வெற்பு நிறை வொலி பெருமை யைம்பேர்
குறம்பொறை குன்று காடு குறிஞ்சிநன்னிலத்தூர் முப்பெர். 276 - 2

தாறு விற்குதையே யெல்லை தாழ் மரக்குலை முட்கோலாம்
சேறென்ப கும்பி சாரந் தித்திப்பு விழவு கள்ளே
ஊறென்ப தீமை தீண்டல் உயிர்கொலை யிடையூரென்ப
ஏறிடி முதல்நாளாகு மிடபமொடெருதுமப்பேர். 277 - 3

சிறையே வேறிடமாம் புள்ளின்சிறகொடு காவலும் பேர்
கறை யிறுத்திட லிரத்தங் கறுப் புரல் விடம் பேரைந்தே
முறையென்ப கோசமே யூழ் முறைமையு முப்பேரென்ப
பிறழ்தலே நடுக்கம் வேறுபெயர்தலோ டொளி விடற்பேர். 278 - 4

ஏற்றலே கோடலென்ப வெதிர்ந்து போர் செய்தலும் பேர்
ஆற்றலே பொறை முயற்சி அதிகமே வலியே ஞானம்
தோற்றலே வலி பிறப்புத் தோன்றுதல் புகழே நாற்பேர்
போற்றலே புகழ்த லோம்பல் புறமென்ப முதுகு வீரம். 279 - 5

அற்றமே மறைவுஞ் சோர்வும் அவகாசந் தானுமாகும்
குற்றல் குற்றுதல் பறித்தல் குரை யென்பதிடைச் சொலோசை
எற்றென்ப திரக்க மொத்தல் எறித லெத்தன்மைத்தென்றல்
கொற்றியே துர்க்கைநாமங் கோவிளங்கன்றுங் கூறும். 280 - 6

உறழ்வென்ப புணர்வு காலஞ் செறி விடை யீ டொப் பைம்பேர்
உறவியே யெறும்பு நீரூற் றுலைக்கள முற வுயிர்ப் பேர்
உறுக ணென்பதுவே துன்ப முறுபய மிடி நோய் நாற்பேர்
உறுவனே முனி புத்தன் பேர் உலக்கையே யுரோங்க லோணம். 281 - 7

விறைப்பென்ப செறிவு வெற்றி வெருவுதல் பொருதல் நாற்பேர்
பொறுத்தலே பொறை தாங்கற்பேர் புந்திதான் புதனே புத்தி
இறுத்தலே ஒடித்தல் தங்க லியம்புதல் முப்பேரென்ப
கறுப் பிருள் சினக்குறிப்பாங் கன்று கைவளை கன்றாமே. 282 - 8

பொறி மரக்கலமே செல்வம் பூமக ளெந்திரங்கள்
அறி விலாஞ்சனை யெழுத்தே டைம்பொறி வரி யொன்பான்பேர்
வெறி வெருவுதல் கலக்கம் வெறியாட்டு வட்ட நாற்றம்
குறியபேய் துருவை கள்ளுக் கூறு நோயொன்பதாமே. 283 - 9

உறை பொருண் மருந்து வாழ்நாள் உணவு வெண்கலமே காரம்
எறிபடைக்கலத்தின்கூடே யெண்குறித்திறுதிபெய்தல்
நறிய பாற்பிரை யிடைச்சொல் நகர நீர்த்துளி யீராறாம்
அறை முழை மோதல் பாறை திரை சிற்றின் மொழியாமே. 284 - 10

இறை சிவன் கடன் வேந்தன் கையிறை யிறுப்பிறை சிறந்தோன்
சிறுமை புள்ளிறகு தங்கல் சென்னி கூ னிறப் பீராறே
உறையு ளென்பது நா டூராம் உறுதியே நன்மை கல்வி
பொறை மலை துறுகல் பாரம் பொறை சுமை கருப்பம் பூமி. 285 - 11

இறும்பு தாமரையின்பூவே மலை குறுங்காடு மேற்கும்
இறும்பூது தகைமை வெற்போ டதிசயங் குழை தூ றென்றாம்
கறங்கலே சுழல லோசை கதிரென்ப திரவி சோதி
பறம் புயர்மலை முலைப் பேர் பாய்மாவே குதிரை வேங்கை. 286 - 12

கூற்றென்பதி யமன் சொல்லாங் கோமானே மூத்தோன் பன்றி
நாற்ற நாறுதல் தோன்றற்பேர் நனவென்ப தகலந் தேற்றம்
ஊற்றென்ப தூன்று கோலும் உறவியு மிருபேரோதும்
நோற்றலே பொறை தவப்பேர் நுணங்கென்ப நுண்மை தேமல். 287 - 13

கற்பமே பிரமன் வாழ்நாள் கற்பக தரு சுவர்க்கம்
பொற்பென்ப தழகினோடு பொலிவு யொப்பனையு மாகும்
பற்பமே பதூமந் தூளாம் பழங்கணே துன்பம் ஓசை
உற்கை தாரகை தீக்கொள்ளி யுண்டிதான் புசித்தல் சோறே. 288 - 14

முற்றல் காழ்கோடன் மூப்பு முடிவுடன் வளைத்தல் நாற்பேர்
நெற்றியே நுதலின்பேரும் நெடும் படை யுறுப்பு மாகும்
கொற்றமே வன்மை வெற்றி கோவரசியன் முப்பேரே
ஏற்றுதல் புடைத்தலோடேயெறிதலு மிருபேராமே. 289 - 15

அறுகென்ப சிங்க மோர்புல் யாளியாகு முப்பேர்
வறிதென்ப தருக லேசற் றறியாமை பயனில் வார்த்தை
மறலியே மயக்கங் கூற்றா மறவி கண் மறதி யீனம்
குறளென்ப குறளும் பேயுங் குறுமையும் கூறுமுப்பேர். 290 - 16

விறலென்ப வலி வென்றிப் பேர் விழைந்தோனே நண்பன் வேட்டோன்
நொறிலென்ப விரைவினோடு நுடக்கமு மிருபேராமே
நெறி வழி நீதி யென்ப நிருமித்தல் படைப் பாராய்தல்
பறை பறை வசனத்தோடு பறக்கும்புள்ளிறகு முப்பேர். 291 - 17

னகரயெதுகை

மனவு நன்மணி சங் கக்காம் வரை மலை யிறை வேய் மட்டாம்
தனி தமி யொப்பின்மைப் பேர் சாந்தமே கமையுஞ் சாந்தும்
முனை பகை நுனி வெறுப்பாம் முளை வே யங்குரமே பிள்ளை
யின மிருங்கிளை யமைச்சா மெழில் வண்ண மிளமைக்கும் பேர். 292 - 1

ஆனகம் படகத்தின் பேர்ஆகுந் துந்துபியு மப்பேர்
மானமே யளவி லச்சை விமானமே பெருமை குற்றம்
பானலே பழன நெய்தல் பாங்கரே யிடம் பக்கப் பேர்
மானலே மயக்கம் ஒப்பாம் வருடமே மழையு மாண்டும். 293 - 2

தானமே மத நீராட்டுத் தருகொடை சுவர்க்க நாற்பேர்
பீனமே பருமை பாசி பேடென்ப பேடி யூரே
நானமே பூசும்பூச்சு நானமுங் குளிக்குநீரும்
வான மாகாயமென்ப மழை யுலர்மரமுமாமே. 294 - 3

வானி மேற்கட்டி சேனை வண்துகிற் கொடி முப்பேரே
ஆனி யுத்தராட மூலஞ் சேத மோர் மாதமென்ப
ஏனையே யொழிபு மற்றையெனு மிடைச்சொற்கு மப்பேர்
ஆனியம் பொழுது நாளாம் அனந்தை யோர்சத்தி பூமி. 295 - 4

முன்னலே நினைவு நெஞ்சா முன்னஞ் சீக்கிரியோ டெண்ணம்
கன்னல் சர்க்கரை கரும்பு கரக நாழிகைவட்டிற் பேர்
மன்ன னுத்தரட்டாதிப்பேர் மன்னவன் றானுமாகும்
கின்னர நீர்புள் யாழாங் கிடக்கை பூதலம் பாயற் பேர். 296 - 5

பின்னையே பின்றை தங்கை பெரியமாற்குரியதேவி
கொன் பயனிலாமைக் காலங் கூறிய பெருமை யச்சம்
பொன்னென்ப வனப் பிரும்பு பூமகள் வியாழ நாற்பேர்
மன் னிலை மிகுதி வேந்தே வாழி வாழ்கென லிடைச்சொல். 297 - 6

வன்னியே பிரமசாரி வளர்கிளி சமி செந்தீயாம்
சென்னி கம் பாணன் சோழன் சீரு ளீயஞ் செம்பாகும்
கன்னி பெண் ணழிவிலாமை கட்டிளமைக்கும் பேரே
தென் னிசை வனப்புத் தாழை தெற்கொடு கற்பு மாமே. 298 - 7

குன்று வேதண்டமாகங் குறைவொடு சதய முப்பேர்
அன்றி லோர் புள்ளு மூலநாளென வாமிரண்டே
மன்றமே வௌியின் நாமம் வாச மம்பலமு மப்பெர்
மன்றலே பரிமளப்பேர் மருவு கல்யாணமும் பேர். 299 - 8

தன முலை பொன் ஆன்கன்று சந்த முத்தன மைம்பேராம்
கனவு நித்திரை மையற்பேர் கலிங்கஞ் சாதப்புள் ளாடை
கனை செறி வொலியா மென்ப கவரியே சவரி மேதி
பனுவலே கிளவி நூலாம் படப்பை யூர்புறமே தோட்டம். 300 - 9

அனந்தனே சிவன் மால் சேடன் அலாயுதன் அருக னைந்தே
அனந்தமே முடிவிலாமை யாடகம் விண் முப்பேரெ
அனங்கமே யிருவாட்சிப் பேராகு மல்லிகைக்கு மப்பேர்
தனஞ்சயன் பார்த்தனே செந்தழ லொரு காற்றுமாமே. 301 - 10

சானகி சீதை மூங்கில் தனுவென்ப துடல் வில் லற்பம்
சானுவே மலை முழந்தாண் மலைப்பக்கம் தானுமாகும்
சோனையே யோண நாளும் விடாமழைசொரிதலும் பேர்
கானலே மலைச்சார் சோலை கடற்கரைச்சோலை பேய்த்தேர். 302 - 11

வானென்ப விசும்பு மேகம் மழையொடு பெருமை நாற்பேர்
தானையே சேனை யாடை படைக்கலந் தானுமாகும்
கானந் தே ரிசையே பேதை காடுதற் பாடி யைம்பேர்
ஏனலே செந்தினைப்பேர் தினைப்புன மென்று மாமே. 303 - 12

முனியென்பது யானைக்கன்று முனிவன் வில் லகத்தி நாற்பேர்
துனியென்ப புலவிநீட்டந் துன்ப நோ யாறு கோபம்
பனியென்ப நடுக்கந் துன்பம் பயங் குளி ரிமமைம் பேரே
சினை யென்ப முட்டை பீளா மரக்கொம்புஞ் செப்பு மப்பேர். 304 - 13

மானே சாரங்க மாவின்பொதுவொடு மகர ராசி
கானே நன்மணங் காடென்ப கல்லி யூர்குருவி யாமை
ஏனாதி மஞ்சிகன் மந்திரியுந் தந்திரியு மென்ப
மீனே சித்திரை நாள் வான்மீன் மயிலையு மேவுமப்பேர். 305 - 14

ஞானமே யறிவு கல்வி நல்ல தத்துவ நூன் முப்பேர்
யானமே மரக்கலத்தோ டெழிலுர்திவிகற்ப மிரண்டாம்
ஏன மோலைக்குடைப் பேர் எறுழியு மறமு மப்பேர்
மேனியே வடிவமென்ப நிறத்தையும் விளம்பலாமே. 306 - 15

அன்னையே முன்பிறந்தாள் தோழி தாயாகு மென்ப
அன்ன மோதிமமே சோ றாமாகார முட னெய்யுண்டி
தன்மை யே ரியல்பினோடு தன்மையினிடமுஞ் சாற்றும்
பன்னலே நெருக்கம் வார்த்தை பருத்தியின் பேருமாமே. 307 - 16

வனமே நீர் மிகுதி காடு வளர்சோலை துளசி யீமம்
மனுவே மந்திர மோர்நூலாம் மண்ணை பேய் இளமை மூடன்
புனையென்ப தழகினோடு பொலிவு மொப்பனையுமாகும்
மனையென்ப மனைவி வீடாம் வதுவையே மணங் கல்யாணம். 308 - 17

அன் வினையொடு பெயர்க்கும் விகுதி சாரியையு மாகும்
மன்னிடுங் கனைத்தலென்ப திரு ளோசை யிருபேர் வைக்கும்
இன்னென வொரு சொற் பல்பேர்க் கியற்கவி முந்நூற்றொன்பான்
சொன்னவன் குணபத்திரன் றாள்சூடு மண்டலவன் றானே. 309 - 18


சூடாமணி நிகண்டு : 1 2 3