உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் - 1. சத்திரத்தில் அதிர்ச்சி பூர்வபட்சம் ஆரம்பமாகி ஐந்து நாள் ஆகி விட்டபடியால் மேற்கு அடிவானத்திலிருந்து சற்று மேலே தோன்றிய வளர்பிறை, இரண்டாம் ஜாமம் தொடங்கிவிட்டதையடுத்து கீழே இறங்கவும் செய்துவிட்ட அந்த இரவுப் பொழுதில் புதுக்கோட்டையில் இருந்து இராமநாதபுரம் செல்லும் அந்த ராஜபாட்டையில் ரெகுநாதத் தொண்டைமான் தன் புரவி மீது அமர்ந்தபடி இணையாக ஒரு பெண்ணும் புரவியில் அமர்ந்தபடி பின்னால் ஏழெட்டு புரவி வீரர்களும் பின் தொடர இராமனாதபுரம் நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தான். அந்தப் பயணம் விரைவானதாகவும் இல்லாமல் மிதமானதாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருந்தது. அப்படிப் பயணம் செய்து கொண்டிருக்கையில் மதுரையில் இருந்து வந்தப் பாதையை வெட்டும் இடத்திற்குச் சற்றுத் தொலைவில் அவர்கள் வந்து கொண்டிருக்கையில் மதுரைப் பாதையில் இருந்து இரண்டு பேர் வந்து திரும்பி இராமநாதபுரம் செல்லும் பாதையில் செல்வதைக் கண்டார்கள். "யாரது? நில்லுங்கள்" என்று வேகமாகவே கட்டளையிட்ட தொண்டைமான் அவர்கள் இருவரும் நிற்காமல் போகவே சரேலெனத் தன் வாளை உருவிக்கொண்டு தன் புரவியை முடுக்கி மிக வேகமாகவே செலுத்த ஆரம்பித்து ஒரு கல் தொலைவிற்குள்ளாகவே அந்த இரு புரவிகளையும் முந்திப் போய் பின் திரும்பி வாளையும் நீட்டி தடுக்கவே இரு புரவி வீரர்களும் வேறு வழியின்றி தங்கள் புரவிகளை இழுத்துப் பிடித்து நிறுத்த வேண்டியதாயிற்று. அவர்கள் இருவரும் தங்கள் வாட்களை உருவிக் கொள்ள, தொண்டைமானின் வீரர்களும் பின்னால் வந்து கொண்டிருந்த இளம் பெண்ணும் தொண்டைமானின் அருகில் வந்து இருக்க, "யார் நீங்கள்?" என்று அதட்டியே கேட்டான் தொண்டைமான். "நீ யார்?" என்று அந்த இருவரில் ஒருவன் கேட்கவே சினம் அடந்த தொண்டைமான், "இந்த தொண்டைமானை யார் என்று கேட்டு இங்கே தப்பிப்போவதும் கடினமான காரியம் தான்" என்று வாளைச் சுழற்றியபடிச் சொல்லவே அந்த ஒருவன் இதைக்கேட்டு, "தொண்டைமானா?... ரெகுநாத தொண்டைமானா?" என்றும் வியப்புடன் கேட்டான். "என்னை மரியாதையில்லாமல் அழைக்கும் நீ யார்?" என்று தொண்டைமான் பதிலுக்கு சீற்றமாகவே கேட்டான். "நான் மதுரை இளவரசன் முத்து வீரப்பன்." "ஓ... மதுரை இளவரசரா!" என்று வியப்புடன் கேட்ட தொண்டைமான், "வணக்கம் இளவரசே!... தங்களை இப்படி எதிர் மறைத்து யார் என்று கேட்டதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்" என்று வாளைத் தாழ்த்தி வணங்கவும் செய்தான். "நாம் பின்பு பேசிக்கொள்ளலாம். முதலில் நாம் இங்கிருந்து விரைவாகப் போக வேண்டும். புரவியைத் திருப்பு" என்றான் இளவரசன். "ஏன் இளவரசே?" "ருஸ்தம்கானின் வீரர்கள் துரத்தி வருகிறார்கள்.... எங்களைப் பிடிக்க ...." "தங்களையா!" என்று கேட்ட தொண்டைமான், "அவன் தங்களின் படைத்தலைவன் அல்லவா... அவன் வீரர்கள் ஏன் தங்களைத் துரத்த வேண்டும்?" என்றும் வினவினான். "அவன்தான் இப்போது உண்மையில் மதுரையின் மன்னன்... பிறகு பேசிக் கொள்ளலாம்... நாம் யாவருமே இப்போது தப்ப வேண்டும்... புரவியைத் திருப்பு தொண்டைமான்." "அவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்?" "முப்பது நாற்பது பேர் இருக்கலாம்". "இளவரசே! இந்தத் தொண்டைமான் யார் என்பதை அவர்களுக்குக் காட்டுகிறேன்... எங்களைக் கடந்துதான் அவர்கள் தங்களிடம் வரவேண்டும்" என்ற தொண்டைமான் தன் புரவியைத் தட்டிவிட்டு அந்த இருவரையும் தன் வீரர்களையும் கடந்து முன்னால் போய் இருந்து கொண்டான். தொண்டைமானின் வீரர்களும் தங்கள் புரவிகளை திருப்பிக் கொண்டனர். உடனே இளவரசனும் அவனுடன் கூட வந்தவனும் தங்கள் புரவிகளைத் திருப்பிக் கொண்டனர். "தொண்டைமான்" என்று உரக்கவே அழைத்த இளவரசன் "இப்போது நாம் அவர்களை எதிர்க்க வேண்டாம்... அதற்குக் காலம் வரும்... அப்போது அடியோடு அவர்களை அழிக்கலாம்" என்றும் சொல்லிப் பார்த்தான். "பொறுங்கள் இளவரசே... என்ன காரணமாக இருந்தாலும் தங்களைத் துரத்தி வருவதற்குப் பாடம் கற்பிக்க வேண்டாமா?" "சரி... உன் பெயரை மட்டும் அவரகளிடம் சொல்லிவிடாதே.. காரணத்தைப் பின்பு சொல்லுகிறேன்" என்று கேட்டுக் கொண்டான் இளவரசன். அப்போது எதிரில் இருந்து புரவிகளின் சப்தம் கேட்டது. பின்பு புரவிகளும் கண்ணுக்குப் புலப்பட்டு வீரர்கள் வருவதும் தெரிந்தது. தொண்டைமான் இடது கையிலும் இன்னொரு வாளை உருவிக் கொண்டான். அவன் புரவியில் அமர்ந்தபடியே இரு கைகளாலும் வாட்களை ஏந்திப் போரிடக் கூடியவன். வந்து கொண்டிருந்தவர்கள் எதிரே சில புரவி வீரர்கள் இருப்பதைக் கண்டு தங்கள் புரவிகளை இழுத்துப் பிடித்து நிறுத்திக் கொண்டனர். "யார் நீங்கள்?" என்று அவர்களின் தலைவன் கர்ஜித்தான். "நீங்கள் யார்?" என்று தொண்டைமானும் கர்ஜித்தான். "நாங்கள் மதுரை வீரர்கள்." "மதுரை வீரர்களா... ருஸ்தம்கானின் வீரர்களா?" "இரண்டும் ஒன்றுதான்." "நாங்கள் சேதுபதியின் வீரர்கள்." அந்த வீரர்களின் தலைவன் எதிர் அணிக்குப் பின்னால் தாங்கள் தேடி வந்த இருவரும் இருப்பதைக் கண்டான். "அந்த இருவரையும் எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்" என்று தலைவன் அதட்டலாகக் கேட்டான். "அவர்களில் ஒருவர் மதுரையின் இளவரசர்." "தெரியும் எங்களுக்கு." "தெரிந்துமா துரத்தி வந்தீர்கள்?" "மன்னரின் கட்டளை." "மன்னரின் கட்டளையா? அடிமை ருஸ்தம்கானின் கட்டளையா?" என்று தொண்டைமான் கேட்கவே சினம் அடந்த தலைவன் தன் வீரர்களிடம் "இவர்களைக் கொல்லுங்கள்" என்று உத்தரவிட்டு வாளுடன் புரவியை முன்னேயும் செலுத்த, அந்த ஆஜானுபாகுவான ராட்சத உருவில் இருந்த தலைவனின் வாளின் வீச்சிற்கு முன்னால் வேறு எவராக இருந்தாலும் தாக்குப்பிடிக்க முடியாமல் தலை உருண்டே போயிருக்கும். தொண்டைமான் பார்ப்பதற்குச் சற்று ஒல்லியாகக் காணப்பட்டாலும் அவனுடைய இரு கை வாட்களின் அசுர வேகச் சுழற்சியில் முதலில் உருண்டது தலைவனின் தலைதான். அடுத்துப் பின்பு நான்கு தலைகள் மண்ணில் சாய தொண்டைமானின் வீரகளும் ஆளுக்கு மூன்று நான்கு என்ற கணக்கில் எதிரிகளைச் சாய்க்க பின்னால் மிச்சமிருந்த ஐந்தாறு வீரர்கள் திடீரெனத் தங்கள் புரவிகளித் திருப்பிப் பின்னே ஓடிப்போக.... "அவர்களை விட்டுவிடுங்கள்" என்று தொண்டைமானின் உத்தரவில் வீரர்களும் கட்டுப்பட்டுத் தங்கள் புரவிகளை இழுத்துப் பிடித்து நிறுத்த வேண்டியதாயிற்று. முத்து வீரப்பனும் அவனுடைய உதவியாளும் வாளை உருவிக்கொண்டு முன்னுக்கு வந்தாலும் அவர்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது. "அவர்கள் போய் சேதுபதியின் வீரர்களின் வீரம் எப்படி என்பதை ருஸ்தம்கானிடம் தெரிவிக்கட்டும்... அதனாலேயே அவர்களை உயிருடன் விட்டேன்" என்ற தொண்டைமான் "இந்த எதிரிகளின் புரவிகளையும் நம்முடன் கொண்டு வாருங்கள்" என்று உத்தரவும் இட்டான். "தொண்டைமான்" என்று விளித்த இளவரசன் "உன் வீரத்தைப் பற்றி முன்பே அறிந்திருக்கிறேன். இப்போது நேரிலும் பார்த்தேன்" என்றவன் "உன் உதவியும் உன் மூலம் சேதுபதியின் உதவியும் எனக்குத் தேவை" என்றும் கேட்டுக் கொண்டான். "பின்பு பேசிக் கொள்ளலாம் இளவரசே!" என்ற தொண்டைமான், "வழியில் ஒரு சத்திரம் இருக்கிறது. அங்கே தங்கிவிட்டுக் காலையில் புறப்படலாம்" என்றவன் அதுவரையில் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இளம் பெண்ணிடம் "திரும்பு... போகலாம்" என்று சொல்லிவிட்டு மேலே தன் பயணத்தைத் தொடர மற்றவர்களும் அவனைப் பின் தொடர்ந்தனர். தொண்டைமான் குறிப்பிட்ட அந்தச் சத்திரத்தை அடைந்ததும் புரவிகளை நிறுத்திவிட்டுக் கீழே குதித்தனர். வாயிலின் முகப்பில் ஒரு கல் தூணின் மேல் உள்ள பள்ளத்தில் எண்ணெய் இடப்பட்டு கனமான திரியும் போடப்பட்டு விளக்கு ஒன்று எரிந்து அங்கே மங்கலான ஒளியையும் தந்து கொண்டிருந்தது. சத்திரத்தின் முன் தாழ்வாரத்தில் படுத்திருந்த சில வீரர்கள் இந்த அரவங்கள் கேட்டு தங்களின் வாட்களை எடுத்துக் கொண்டு "யாரது?" என்றார்கள். "நான்தான் தொண்டைமான்" என்று தொண்டைமான் சொன்னதும் அந்தக் குரலைக் கேட்டே அடங்கிப் போன வீரர்கள் "வாழ்க தொண்டைமான்" என்று சத்தம் போடவும் சத்திரத்தின் கதவுகளும் திறந்து கொண்டன. சத்திரத்துத் தலைவன் வெளியே வந்து தொண்டைமானை வரவேற்றான். பணியாட்களை அழைத்துப் புரவிகளைக் கொட்டடிக்கு இட்டுச் செல்லுமாறு பணித்துவிட்டு, வீரர்களை தாழ்வாரத்திலேயே தங்குமாறு பணித்துவிட்டு தொண்டைமான், இளம் பெண், இளவரசன் ஆகியோருடன் உள்ளே சென்றான். கதவுகளையும் சாற்றிவிட்டு தாள் போட்டு விட்டான். தொண்டைமனிடம் திரும்பியவன் பணிவுடன் "வீரரே தங்களை அந்த அறைக்கு வரும்படி உத்தரவு" என்றான். "உத்தரவா?" என்று கேட்ட தொண்டைமான் "உத்தரவிட்ட நபர் யார்?" என்றும் கேட்டான். "சொல்ல உத்தரவில்லை. உள்ளே போனால் தெரியும்" என்று மேலும் பணிவுடன் கூறிய சத்திரத்துத் தலைவன் அந்த அறையை மறுபடியும் சுட்டிக்காட்டிவிட்டு "எனக்கு வேலை இருக்கிறது. உங்களுக்கெல்லாம் உணவு தயாரிக்கச் செய்ய வேண்டும்" என்று வேறு அறைக்குப் போய்விட்டான். அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு முதலில் உள்ளே சென்ற தொண்டைமானுக்கு அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. |