உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் - 2 மன்னர் சேதுபதி தொண்டைமான் சத்திரத்தினுள் சென்றதும் சத்திரக்காரன் ஒரு அறையினுள் செல்லும்படிச் சொல்ல தொண்டைமானும் அங்கே சென்றதும் அதிர்ச்சி ஏற்பட்டதல்லவா? தொண்டைமானை அப்படி அதிர்ச்சிக்கு ஆளாக்கிய அந்த நபர் ஆசனத்தில் கம்பீரமாக வீற்றிருந்தபடியே, "தொண்டைமான்... ஏன் திகைத்து நின்று விட்டாய்?" என்று கேட்கவும் செய்தான். "தங்களை இங்கே இந்த நேரத்தில் எதிர்பார்க்கவில்லை" "எங்கே இருப்பேன் என்று எதிர்பார்த்தாய்?" என்று கேட்டான் இராமனாதபுரத்தின் அரசனாகிய 'சேதுபதி' எனும் பட்டப் பெயரையும் கொண்டவன். "நான் புறப்படும்போது ராமேஸ்வரம் செல்லப் போவதாகவும் திரும்பி வர இரு திங்கள் ஆகும் என்றும் சொன்னீர்கள்." "ஆம்... அப்படித்தான் சொன்னேன். திட்டமும் போட்டேன். இப்போது நாட்டின் நிலைமை சோதனைக்கு இலக்காக ஆகி இருக்கிறது" என்ற சேதுபதி, "வெளியே யாரோ இருக்கிறார்கள் போலிருக்கிறதே" என்றும் கேட்டான். "ஆம் சேதுபதி அவர்களே" என்ற தொண்டைமான் திரும்பி, "உள்ளே வாருங்கள் இருவரும்" என்றான். இளவரசனும் இளமங்கையும் உள்ளே வந்தனர். சேதுபதி மதுரை இளவரசனைக் கண்டதும் உடனே எழுந்து கொண்டு, "வருக இளவலே.. வருக..." என்று அருகில் போய் இளவரசனின் கைகளைப் பற்றிக் கொண்டான். "என்ன இது... வியப்பாக இருக்கிறதே... நான்தான் உங்கள் எதிரியாயிற்றே... என் நாட்டிற்குள் புகுந்து.... ஒற்று அறிய வந்தீர்களோ?" என்றும் இடக்காகக் கேட்டவன், "வாருங்கள்... இப்படி அமருங்கள்" என்று ஒரு இருக்கையில் அமரச் செய்து தானும் அமர்ந்து கொண்டான். "தொண்டைமான், நீயும் அப்படி அமரலாம்" என்று இன்னோர் இருக்கையைக் காட்டினான். தொண்டைமான் அமர்ந்ததும் அப்போதுதான் இளமங்கையயும் கண்ட சேதுபதி, "இந்தப் பெண் யார்?" என்றும் தொண்டைமானிடம் வினவினான். "என் தங்கை... பெயர் கதலி... இவளும் வீரம் உள்ளவள்தான்!... அதனால் கிராமத்தில் இருக்கப் பிடிக்காமல் என்னுடன் புறப்பட்டு விட்டாள்..." "ஓ... அப்படியா" என்ற சேதுபதி அவளை உற்றுப் பார்த்தான். கதலியெனும் பெயர் கொண்ட ரகுநாத தொண்டைமானின் தங்கையாகிய அவ்விள மங்கையும் சேதுபதியையே பார்க்க இருவரின் பார்வையிலும் ஒரு கனம் மின்னல்கள் பாய்ந்தன. "இள மானே" என்று விளித்த சேதுபதி, "நீயும் அப்படி உட்கார்" என்று இன்னோர் இருக்கையைக் காட்டினான். அவ்விளமங்கயும் அவன் காட்டிய இருக்கையில் அமர்ந்து கொண்டாள். மதுரை இளவரசன் முத்துவீரப்பன், சேதுபதி அப்பெண்ணின் பக்கம் தன் கவனத்தையும் பார்வையையும் செலுத்தி தன்னைக் கவனிக்காமல் இருப்பதை உணர்ந்து அதை தவிர்க்க வேண்டி, "சேதுபதி அவர்களே" என்று விளித்தான். சேதுபதியும் அப்படி அவன் விளித்ததால் இளவரசனின் பக்கம் திரும்பினான். "என் தந்தையார் தங்களிடம் பகைமை பாராட்டியிருக்கலாம். நான் அப்படி அல்ல... தவிர இப்போது மதுரை நாட்டின் நிலைமையும் மாறி இருக்கிறது.... என் தந்தையாரும் மதுரையின் மன்னராகப் பெயருக்கு இருக்கிறாரே தவிர உண்மையில் மன்னராக இல்லை. தங்களின் உதவியை நாடியே தங்களைச் சந்திக்க வந்துள்ளேன்." "அப்படியா" என்று சொல்லிக் கொண்ட சேதுபதி எதுவும் தெரியாதவர் போல "இப்போது மதுரையின் நிலை என்ன... உங்கள் தந்தையார் ருஸ்தம்கானால் விடுவிக்கப்பட்டு மதுரையின் மன்னராகி விட்டிருக்கிறாரே..." என்றும் கேட்டான். "பெயரளவில்தான் மன்னர். ஆனால் நாட்டை ஆள்வதும் ஆட்சி செய்வதும் அதிகாரங்களும் ருஸ்தம்கானிடம் தான் உள்ளன." "நான் என்ன செய்யவேண்டும் என்கிறீர்கள் இளவரசே" என்று பணிவுடன் கேட்டுக்கொண்டான் சேதுபதி. "ருஸ்தம்கானிடமிருந்து மதுரையயும் திருச்சி கோட்டையையும் மீட்க வேண்டும். அதற்கு தங்களின் உதவி தேவை." "உங்கள் தந்தையைச் சிறைவைத்துச் சிறிய தந்தையான அழகிரிநாதர் திருச்சிக் கோட்டையைக் கைப்பற்றி ஆண்டு கொண்டிருந்தார் அல்லவா?" "ஆம் சேதுபதி அவர்களே." "ருஸ்தம்கான்தானே அழகிரிநாதரைத் திருச்சி கோட்டையிலிருந்து துரத்தி விட்டது?" "ஆம்." "அந்த ருஸ்தம்கான்தானே மதுரையில் சிறை வைக்கப்பட்டிருந்த உங்கள் தந்தையாரைச் சிறையில் இருந்து மீட்டு மறுபடி மதுரையின் மன்னராக ஆக்கியது?" "ஆம்." "அப்படியிருக்க இப்போது நீங்கள் அந்த ருஸ்தம்கானையே குற்றம் சாட்டுகிறீர்களே..." "ருஸ்தம்கான் உண்மையில் என் தந்தையாருக்கு ஆதரவாக இருப்பது போல் நாடகம் ஆடியிருக்கிறான். ஆனால் இப்போது என் தந்தையார் தம் அறையிலேயே சிறையாக வைக்கப்பட்டிருக்கிறார்... அவருக்கு பதிலாக, அவரின் பெயரை வைத்துக்கொண்டு ருஸ்தம்கானே நாட்டை ஆள்கிறான். ருஸ்தம்கானின் மனைவி மக்கட்கு என் தாயாரும் மற்றவர்களும் பணிப்பெண்களாக இருக்கின்றனர். என்னையும் சிறைப்படுத்த திட்டம் போட்டான். நான் தப்பி வந்து விட்டேன்" என்ற இளவரசன் முத்து வீரப்பன் "இப்படியே போனால் என் தந்தையாரைக் கொன்று, தானே மதுரையின் மன்னனாக முடிசூட்டிக் கொள்ளவும் அவன் திட்டம்..." என்றும் கூறி முடித்தான். சேதுபதிக்கு அப்போது உண்மையாகவே ரத்தம் கொதித்தது. மதுரை நாயக்க அரச குலப் பெண்கள் குதிரைப் படைத்தலைவனான ருஸ்தம்கானின் மனைவி மக்களுக்கு பணி விடை செய்யும் அளவுக்கு நிலைமை ஏற்பட்டு விட்டதா? "இளவரசே" என்று விளித்த சேதுபதி "நீங்கள் இதுவரை என்னதான் செய்து கொண்டிருந்தீர்கள்?" என்றும் வினவினான். "என் சிறிய தந்தையாருக்குப் பயந்து தலைமறைவாக இருந்தேன். ருஸ்தம்கானின் ஆதரவால் பசப்பு வார்த்தைகளை நம்பி அவனுக்கு உதவி செய்தேன். அது இப்போது எங்கள் யாவருக்குமே ஆபத்தாக முடிந்து விட்டிருக்கிறது" என்றவன் மேலும் தொடர்ந்து "இந்த ருஸ்தம்கானை வளரவிட்டால் இன்னும் கொஞ்ச காலத்தில் மதுரை, ராமனாதபுரம், தஞ்சை எல்லாம் அவன் வசமாகிவிடும்" என்றும் எச்சரித்தான். "மதுரையில், அரண்மனையில் உங்களுக்கு ஆதரவாக வீரர்கள் இல்லையா?" என்று கேட்டான் சேதுபதி. "என் தந்தை பெயரை வைத்துக் கொண்டு அவரை யாரும் பார்க்க விடாமல் அவரின் முத்திரை மோதிரத்தால் கட்டளையிட்டு நாட்டை ஆள்கிறான் ருஸ்தம்கான். தவிர என் தந்தையாரின் பழைய மனப்போக்கை எண்ணி என் சிறிய தந்தையாரை விரட்டி விட்டதை நினைத்து பாதிப்பேர் எனக்கு எதிரிகளாக இருக்கின்றனர். இப்போதும் என் தந்தையின் கட்டளைப்படியே என்னையும் கைது செய்து சிறையில் அடைக்கவும் திட்டம் போட்டான். கடைசி நேரத்தில் விஷயம் அறிந்து தப்பித்தேன். அதற்குத் தங்கள் படைத் தலைவனும் பெரு வீரனுமான இந்த தொண்டைமானும் உதவியாக இருந்தான். என்னைத் துரத்தி வந்த ருஸ்தம்கானின் வீரர்களைக் கொன்று என்னைக் காப்பாற்றினான்." சேதுபதி உடனே தொண்டைமானின் பக்கம் திரும்பினான். "அப்படியா?" என்று கேட்டான். "ஆம் சேதுபதி அவர்களே" "எல்லோருமே அழிந்தார்களா?" "இல்லை. சிலர் தப்பி ஓடிவிட்டனர்." "அவர்களை இப்படி எதிர்த்தது நீ தான் என்று அவர்களுக்குத் தெரியுமா?" "நான் என்று காட்டிக் கொள்ளவில்லை... நம் மறவர் படை என்று மட்டும் தெரியும்." சேதுபதி யோசனை செய்தான். பின்பு சத்திரத்துத் தலைவனை வரவழைத்து இளவரசன் இரவு தங்கவும் உறங்கவும் அறை அளிக்கும்படி உத்தரவிட்டு, இளவரசனிடம் "நீங்கள் சென்று அங்கே தங்கியிருங்கள். காலையில் பேசிக்கொள்ளலாம்" என்று விடை கொடுத்து அனுப்பினான். இளவரசன் அறையை விட்டுச் சென்றதும் சேதுபதி தொண்டைமானிடம் சொன்னான். "தொண்டைமான்... நான் இளவரசனை மறுபடி ருஸ்தம்கானிடாமே ஒப்படைக்கப் போகிறேன்." தொண்டைமான் திடுக்கிட்டான். |