அத்தியாயம் - 3. சூழ்ச்சி வலை

     ஆதரவும் உதவியும் தேடி வந்திருக்கும் மதுரை இளவரசனை, மறுபடி அவனுடைய எதிரியாகிய ருஸ்தம்கானிடமே ஒப்படைக்கப் போவதாக ராமனாதபுரம் சேதுபதி சொல்லவும், திடுக்கிட்டான் அல்லவா தொண்டைமான்.

     அதை அடுத்து தொண்டைமானின் கேள்வியும் எழுந்தது.

     "நாயக்க வம்சத்தையே அழிப்பதுதான் உங்கள் திட்டமா?" என்றான் அவன் சேதுபதியிடம்.

     "இல்லை... மேலும் வளர்ப்பது தான் என் திட்டம்."

     "இளவரசரை எதிரியிடமே ஒப்படைப்பதன் மூலமா?"

     "ஒப்படத்த உடனேயே நம் திட்டத்தை செயற்படுத்த ஆரம்பிக்கப் போகிறோம்."

     "திட்டம் எதற்கோ?"

     "ருஸ்தம்கானை அழித்து மதுரையை மீட்க!"

     "உண்மையாகவா சேதுபதி அவர்களே?"

     "உறுதியாகவும்தான்" என்ற சேதுபதி, அதற்கு மேல் பேசாது, வேறோர் அறையில் தங்கி ஓய்வு எடுக்குமாறும், மறுநாள் பேசிக் கொள்ளலாம் என்றும் அவர்களைப் பணிந்தான்.

     தொண்டைமானுடன் போன அவனது தங்கை கதலியைப் பார்த்ததும் பெருமூச்சொன்று சேதுபதியிடமிருந்து வெளிப்பட்டது.

     மறுநாள் காலையில், தொண்டைமானை மட்டும் தன் அறைக்கு அழைத்து தன் திட்டங்களை அவனிடம் விளக்க ஆரம்பித்தான் சேதுபதி.

     "தொண்டைமான்" என்று அமைதியாகவே ஆரம்பித்த சேதுபதி, "நாம் இளவரசருக்கு அடைக்கலம் கொடுத்தால் ருஸ்தம்கான் நம் நாட்டின் மீது படை எடுக்கலாம்... தவிர ருஸ்தம்கானே மதுரையின் மன்னன் ஆனாலும் அவன் கவனம் நம் நாட்டின் பக்கம் திரும்பத்தான் செய்யும்... அல்லவா?" என்றான்.

     "ஆம்."

     "நாம் இளவரசரை ருஸ்தம்கானிடம் ஒப்படைக்க வேண்டும். அதேசமயம், மன்னரையும், இளவரசரையும் ருஸ்தம்கான் கொல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். ருஸ்தம்கானை அழித்து மதுரையை மீட்கவும் வேண்டும். எப்படி நம் திட்டம்?"

     "திட்டம் சரிதான்..." என்று ஒப்புக்கொண்ட தொண்டைமான், "மதுரைப் படையோ மிகப் பெரியது. தவிர ருஸ்தம்கானின் புரவிப் படையும் சேர்ந்துள்ளது. மதுரைக்குப் பாளையக்காரர்களும் அதிகம்" என்றான் எச்சரிக்கையாக!

     "அறிவேன் இதை... தவிர வாலி கொண்டபுரத்து ஷெர்கான் லோடியும் ருஸ்தம்கானுக்கு உதவியாக படை அனுப்புவான். இதையும் அறிவேன்" என்ற சேதுபதி சற்று நிதானித்து, "நாம் நேரிடையாக ருஸ்தம்கானை எதிர்த்துப் போரிட்டு மதுரையையும் திருச்சியையும் மீட்க முடியாது" என்றும் சொன்னான்.

     தொண்டைமான் எதுவும் பேசாமல், சேதுபதியின் திட்டம் என்ன என்று அறிவதிலேயே ஆவலாய் இருந்தான்.

     "முதலில் நாம் மதுரை தளவாய் கோவிந்தப்பையாவின் ஆதரவும், பாளையப் பட்டுகளின் ஆதரவும் யாருக்கு என்பதை அறிய வேண்டும்."

     "ஆம்" என்று ஒப்புக்கொண்டான் தொண்டைமான்.

     "மைசூர் மன்னன் சிக்கதேவராயனின் படைத்தலைவன் குமரய்யா சத்தியமங்கலக் கோட்டையக் கைப்பற்றி, மதுரையைத் தாக்க வேளை பார்த்துக் கொண்டிருக்கிறான். திருமலை நாயக்கர் காலத்தில், என் முன்னோரான ரகுநாத சேதுபதியின் உதவியுடன் மைசூர்ப் படையை ஓட ஓட விரட்டி, மைசூர்த் தளபதி ஹம்பையாவின் மூக்கை அறுத்ததை இப்போதுள்ள மைசூர் மன்னன் மறந்திருக்க மாட்டான். அதற்கு பழிவாங்கவே சத்தியமங்கலத்தில் தளபதி குமரய்யா காத்திருக்கிறான்... அவனுடன் ருஸ்தம்கான் உடன்படிக்கை செய்து கொள்ளும் முன் நாம் உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டும்."

     "சேதுபதி அவர்களே" என்ற தொண்டைமான், "நாம் மைசூர்ப் படையை அழைப்பது நமக்கு நாமே தீங்கு விளைவித்துக் கொள்வதாகும்" என்று எச்சரித்தான்.

     "அதையும் உணர்ந்துள்ளேன்" என்ற சேதுபதி, "மைசூரானை மடக்க இன்னோர் எதிரி இருக்கிறான்" என்றான்.

     "யார் அது?"

     "செஞ்சி அரசன் சாம்பாஜி. சாம்பாஜிக்கு மைசூரின் வளர்ச்சியில் வெறுப்பு. சாம்பாஜிக்கும் படையுடன் வரும்படி அழைப்பு விடப்போகிறேன்."

     "இதுவும் ஆபத்தில்லையா?"

     "சாம்பாஜியின் பங்காளியான தஞ்சை சரபோஜிக்கும் அழைப்பு விடப்போகிறேன்" என்று சொல்லிவிட்டுச் சிரித்தான் சேதுபதி.

     "தாங்கள் செய்யப்போகும் காரியம், மதுரையை ஆளாளுக்குப் பங்கு போட்டுக் கொடுக்கக் கூடியாதாக இருக்கிறது" என்றான் தொண்டைமான்.

     "அப்படி நடக்காது... நாமும் நம் படையுடன் மதுரையில் ஊடுருவப் போகிறோம். நம் மறவர் நாட்டுக்கு இப்போதைக்கு ஆபத்தில்லை" என்ற சேதுபதியின் குரலில் உறுதி தெரிந்தது.

     "அப்படியானால், நானே திரும்ப மதுரை இளவரசரை ருஸ்தம்கானிடம் ஒப்படைக்க வேண்டுமா?"

     "நாம் ஒப்படைக்கப் போகிறோம்...." என்றான் சேதுபதி அழுத்தமாக.

     "நாம் என்றால்.... தாங்களுமா?"

     "ஆம்... நானும் வருகிறேன்."

     "சேதுபதி அவர்களே" என்ற தொண்டைமான், "இப்போதுள்ள சூழ்நிலையில் தாங்கள் நேரிடையாக வருவது ஆபத்தில்லையா?" என்றான் கவலையுடன்.

     "ஆபத்தை எதிர்கொள்வதுதான் வீரர்களின் கடமை" என்ற சேதுபதி, "நான் வீரன் இல்லையா?" என்று கொஞ்சம் ஏளனத்துடனேயே கேட்டான்.

     "இருந்தாலும் தாங்கள் அதிபதி. மறவர் குல மன்னர்... பொறுப்பை என்னிடம் ஒப்படையுங்கள். நான் கவனித்துக் கொள்கிறேன்."

     "தொண்டைமான் போர் என்றால் நீ மட்டும் போதும்... இது அப்படி அல்ல. சூழ்ச்சி. நானும் உடன் இருப்பதுதான் நல்லது."

     "தங்கள் விருப்பம்" என்றான் தொண்டைமான்.

     "இங்கேயுள்ள நூறு வீரர்களுடன் புறப்படுவோம். ராஜபாட்டையில் செல்லாமல் குறுக்குப் பாதைகள் வழியாகவே போவோம்."

     "ஏன்?" என்றான் தொண்டைமான், வியப்புடன்.

     "நாம் நேரிடையாக ருஸ்தம்கானையே சந்தித்து இளவரசரை ஒப்படைக்க வேண்டும். இடையில் அவன் வீரர்களிடம் அகப்பட்டுவிடக் கூடாது" என்ற சேதுபதி "மாலையில் புறப்படுவோம்" என்றான்.

     "உத்தரவு சேதுபதி அவர்களே!"

     "உன் தங்கையை என்ன செய்வதாக உத்தேசம்?"

     "அதுதான் தெரியவில்லை."

     "அவளும் நம்முடனேயே வரட்டும்."

     "அப்படியே" என்றான் தொண்டைமான், உற்சாகத்துடன்.

     "நீ போய் இளவரசரை இங்கே அனுப்பு" என்று சேதுபதி கட்டளையிட, தொண்டைமான் வெளியேறினான்.

     மதுரை இளவரசன் முத்துவீரப்பன் வர மரியாதைக்காக எழுந்து எதிரில் உள்ள இருக்கையில் அமரச் சொல்லிவிட்டு தானும் அமர்ந்துகொண்ட சேதுபதி, "இளவரசே! தங்களை... நான் ருஸ்தம்கானிடமே ஒப்படைக்கப் போகிறேன்" என்றான் சாதாரணமாக.

     "என்ன?" என்று திடுக்கிட்ட மதுரை இளவரசனிடம், தன் திட்டங்களை விளக்கினான் சேதுபதி. இளவரசன் முகத்தில் புத்தொளி பரவியது, அவற்றைக் கேட்டதும்.

     மாலையே சேதுபதியும், மதுரை இளவரசனும், தொண்டைமானும், கதலியும் வீரர்கள் தொடர்ந்து வர சுற்றுப்பாதை வழியாகப் புறப்பட்டனர்.

     இராமனாதபுரம் எல்லையைக் கடந்து, மதுரையின் மண்ணில் பிரவேசித்தனர். இரவின் இரண்டாம் ஜாமமாகிவிட்டதால், ஒரு மலைக் குகையில் தங்கலாமென நினைத்துச் சென்றவர்களுக்கு, அங்கே பேராபத்து ஒன்று காத்திருந்தது.