உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் - 4. குகையில் குழப்பம் பகலவன் மறைந்து பிறை நிலவின் மங்கிய ஒளியில் மலைப்பாதை வழியாக மெல்லவே தங்கள் புரவிகளைச் செலுத்திக் கொண்டிருந்த சேதுபதியும் மற்றவர்களும் தங்குவதற்கு இடம் பார்த்துக் கொண்டே வர ஒரு குகை அவர்களின் பார்வையில் பட்டது. பின்பு சில வீரர்கள் எரியும் பந்தங்களுடன் குகைக்குள் போய் ஆராய்ந்து இரண்டு கல் படுக்கைகள் இருப்பதைக் கண்டனர். வந்து சொல்ல எல்லோரும் குகைக்குள் பிரவேசித்தனர். உணவு மூட்டையைப் பிரித்து அனைவரும் உண்டுவிட்டு குகைக்குள்ளேயே படுத்துக் கொண்டனர். அப்படி அவர்கள் படுத்து உறங்க ஆரம்பித்த ஒரு நாழிகைக்கெல்லாம் குகைக்கு வெளியே பல மனித உருவங்கள் தோன்றின. முதன்மையாக நின்றிருந்த ஒரு மனித உருவம் உள்ளே மங்கிய தீவர்த்தி ஒளியில் படுத்திருந்த மனித உருவங்களைப் பார்த்தது. தன் கையில் இருந்த வாளால் குகைப் பாறையில் தட்டி "எழுந்திருங்கள்" என்று அதட்டவும் செய்தது. குகையின் வாயில் முகப்பில் படுத்திருந்த தொண்டைமான் "யாரது வெளியில்" என்று அதட்டினான். "கன்னிவாடி சின்னக்காட்டீரன்." "ஓ... பாளையக்காரரா!" என்ற தொண்டைமான் கல் படுக்கையில் எழுந்து அமர்ந்திருந்த சேதுபதியைப் பார்த்தான். "என்ன வேண்டும்?" என்று சேதுபதி அமைதியாகவே கேட்டான். "நீங்கள் யார்?" என்று வெளியே வாளுடன் நின்று கொண்டிருந்த சின்னக்காட்டீரன் கேட்டான். "நாங்கள் சேதுபதியின் படைத்தலைவர்கள்." "மதுரை இளவரசர் இங்கே உங்களுடன் இருகிறாரா?" "ஆம்... மதுரை இளவரசர் இங்கே தான் இருக்கிறார்." தொண்டைமான் உடனே சேதுபதியை பார்த்தான், இவராக ஏன் இப்படிக் கூறுகிறார் என்று. "மன்னருக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் பின்பு தப்பி ஓடிவிட்டதாகவும் அவரை எப்படியும் பிடித்துத் தன்னிடம் ஒப்படைக்கும்படியும் உத்தரவு" என்ற சின்னக்காட்டீரன் தன் வாளை மறுபடி பாறையில் தட்டினான். "யார் உத்தரவு?" "மன்னரின் உத்தரவு" "லிகிதம் வந்ததா?" "ஆம்" "மன்னரின் முத்திரை இருந்ததா?" "இல்லாமல் நம்ப நான் என்ன ஒண்ணும் தெரியாதவனா?" என்று கேட்ட சின்னக்காட்டீரன் "உங்கள் சேதுபதி அவர்களுக்கும் லிகிதம் வந்திருக்குமே" என்றும் கேட்டான். "லிகிதம் வருவதற்குள்ளாகவே எங்களுடன் இளவரசரை அனுப்பிவிட்டார்." "எங்கே?" "மதுரைக்குத்தான்." "ஏன்?" "மன்னரிடம் ஒப்படைக்கச் சொல்லி." "அப்படியா" என்று வியப்புடன் வினவினான் சின்னக்காட்டீரன். "ஆம் பாளையக்காரரே..." என்ற சேதுபதி "இளவரசரை உங்களிடம் ஒப்படைத்து விடுகிறோம். நீங்கள் அவரை மன்னரிடம் ஒப்படைப்பது பற்றி எங்களுக்கு சம்மதமே" என்றான். "உண்மையாகவா!" என்றான் சின்னக்காட்டீரன் "நாங்கள் உங்களிடமிருந்து இளவரசரை மீட்கப் போரே நடத்த வேண்டியிருக்கும் என்று நினைத்தேன்" என்றான். "ஒப்படைக்க இல்லாவிட்டால் நாங்கள் ஏன் இளவரசருடன் இங்கே வரவேண்டும்? இந்நேரம் இளவரசர் சேதுபதியின் மாளிகையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பாரே" என்ற சேதுபதி எழுந்து வாயில்புறம் வந்தான். "பாளையக்காரரே" என்ற சேதுபதி "நாம் இருவரும் அப்பால் போய் தனியாகப் பேசலாமா?" என்றும் கேட்டான். "சரி வாருங்கள்." இருவரும் பாதையில் நடந்து தொலைவில் போக உள்ளேயும் வெளியேயும் இருந்த வீரர்கள் உட்கார்ந்து விட்டனர். தொண்டைமான் ஒன்றும் புரியாமல் விழித்தான். கதலி இன்னும் எழாமல் படுத்துக் கிடந்தவாறே வேடிக்கைப் பார்த்தாள். சற்று தொலை தூரத்திற்கு அழைத்துச்சென்ற சேதுபதி மங்கிய நிலவு ஒளியில் சின்னக்காட்டீரனைப் பார்த்தான். "பாளையக்காரரே" என்ற சேதுபதி "நீங்கள் மதிரையில் மன்னரைச் சந்திக்கவே முடியாது" என்றான். "ஏன்?" "மன்னர் சிறை வைக்கப்பட்டிருகிறார்." "சிறையிலா?" "உண்மையான சிறையில் அல்ல. அவருடைய அறையிலேயே சிறையாக வைக்கப்பட்டிருக்கிறார்." "உண்மையாகவா?" "முழு உண்மை." "யார் வைத்திருப்பது அப்படி?" "ருஸ்தம்கான்." "ஏன்?" "மதுரையையும் திருச்சியையும் தானே கைப்பற்றிக் கொள்ள... தானே மன்னன் ஆக." "அந்த குதிரைப் படைத் தலைவனுக்கு அவ்வளவு ஆசையா?" "ஆம்... அவன் வசம்தான் இப்போது மதுரையும் திருச்சியும் உள்ளன." "மன்னரை நான் சந்தித்துவிட்டால்?" "நான் சொன்னதெல்லாம் பொய்." சின்னக்காட்டீரன் யோசித்தான். "மன்னரின் தம்பி அழகிரி மன்னரை உண்மையிலேயே சிறை வைத்து நாட்டை ஆண்டார் அல்லவா?" "ஆம்." "மன்னருக்காக அதிகாரிகள், தளவாய் ஆகியோருடைய உதவியுடன் ருஸ்தம்கான் அழகிரியைப் போரிட்டுத் துரத்தி மன்னரை மீட்டான் அல்லவா?" "ஆம்." "அதன் பின் அவனுக்கே பதவி ஆசை வந்திருக்கிறது. மன்னரை அவருடைய அறையிலேயே சிறை மாதிரி வைத்திருந்து அவர் பெயரால் நாட்டைத் தானே ஆளுகிறான்." "இளவரசரை என் பாதுகாப்பில் வைத்திருந்து முதலில் நான் மதுரை சென்று நிலைமையை ஆராய்கிறேன்." "வேண்டாம். நீங்கள் இளவரசருடன் நேரே மதுரைக்கே செல்லுங்கள். ருஸ்தம்கானிடம் ஒப்படையுங்கள்... அவனால் இப்போது மன்னரையும், இளவரசரையும் எதுவும் செய்ய முடியாது. அதற்கு சூழ்நிலைகள் ஏற்படப் போகின்றன." "என்ன சூழ்நிலைகளோ?" "நீங்கள் சில நாட்களில் அறியப்போகிறீர்கள்... அரண்மனையில் நீங்கள் மன்னரைச் சந்திக்க முடியாவிட்டால், தளவாய் கோவிந்தப்பரைச் சந்தியுங்கள். அதுவும் இயலாவிட்டால் ருஸ்தம்கானுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள். அவனுக்கு உதவுவதாக. நான் உங்களை அங்கே சந்திக்கிறேன்." "எங்கே?" "வணிகர் வீதியில்" என்ற சேதுபதி "இதை யாரேனும் உங்களிடம் காட்டினால் அவனுடன் வந்து என்னைச் சந்திக்கலாம்" என்று இடையில் இருந்து ஒரு இலச்சினையை எடுத்துக் காட்டினான். அதை அருகில் விழிகளைக் கொண்டு நன்றாகக் கவனித்த சின்னக்காட்டீரன் "இது சேதுபதி அவர்களின் முத்திரை அல்லவா" என்றான் வியப்புடன். "நானே சேதுபதி தான்." "அப்படியா... வணக்கம் சேதுபதி அவர்களே" என்ற சின்னக்காட்டீரன் "தாங்களேயா இப்படி ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்படியான செயலில் இறங்கியிருகிறீர்கள்?" என்று கேட்கவும் செய்தான். "மதுரை நாட்டிற்கே ஆபத்து வந்திருகிறது... அதை விடுவிக்க வேண்டாமா?" "மதுரை மன்னர் தங்கள் எதிரி அல்லவா?" "எதிரி தான். ஆனால் இளவரசர் எதிரியல்லவே..." சேதுபதி இலச்சினையை இடையில் செருகிக்கொண்டு "பாளையக்காரரே, வாருங்கள் போவோம்" என்று நடக்க சின்னக்காட்டீரனும் உடன் நடக்கலானான். குகைக்குள் நுழைந்த சேதுபதி, இளவரசர் முத்துவீரப்பனிடம் "இளவரசே, தாங்கள் இந்த பாளையக்காரருடன் புறப்படுங்கள். கவலைப்பட வேண்டாம். எல்லாம் நல்ல படியாக நடக்கும்" என்று கேட்டுக் கொண்டான். பின்பு தொண்டைமனிடம் திரும்பி "தொண்டைமான்... நீயும் இந்தப் பாளையக்காரருடன் புறப்படவேண்டும்" என்று கட்டளையிட்டான். சின்னக்காட்டீரனிடம், "இவனை உங்கள் படைத் தலைவன் என்று சொல்லிக் கொள்ளுங்கள்... தொண்டைமான் என்று தெரிவிக்க வேண்டாம்" என்றான். இளவரசனுடன் சின்னக்காட்டீரனும், தொண்டைமானும் புரவியின் மீது ஏறிப் புறப்பட்டனர். |