அத்தியாயம் - 6. கதலியின் சபதம்

     கன்னிவாடி பாளையக்காரனான சின்னக்காட்டீரன் தன் வீரர்களுடன் அரண்மனையை விட்டு வெளியே வந்தான். கொஞ்ச தூரம் ராஜபாட்டையிலேயே சென்று பின் தன் புரவியை நிறுத்திக் கொண்டு தன் வீரர்களிடம் மதுரை நகரை விட்டு கடந்து சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் தனக்காக காத்திருக்கும்படி பணித்தான். அவர்கள் மேலே சென்ற பின் தன் புரவியை ராஜபாட்டையை விட்டு வீதிகளில் செலுத்தி வணிகர் வீதியை அடைந்தான். புரவியினின்றும் குதித்து அதன் கடிவாளத்தைப் பற்றியபடி பார்வையை அங்கும் இங்கும் துழாவியபடி நடக்க ஆரம்பித்தான்.

     வணிகர் பெருங்குன்றனார் மாளிகையின் முகப்பில் பணியாளன் போல அமர்ந்திருந்த சேதுபதியின் வீரன் பாளையக்காரனை அன்று குகை வாயிலில் லேசான நிலவொளியில் கண்ட தோற்றத்தை மனதில் கொண்டு லேசான அடையாளம் கண்டு எழுந்தான். பாதையில் நின்று கொண்டு "இந்த இலச்சினையைத் தேடுகிறீர்களா?" என்று தன் கையில் இருந்ததைக் காட்டினான்.

     பாளையக்காரனும் "ஆம்... எங்கே அவர்?" என்று கேட்டான்.

     "இந்த மாளிகைதான், உள்ளே வாருங்கள்" என்று வீரன் மாளிகையை நோக்கி நடக்க பாளையக்காரனும் பின் தொடர்ந்தான்.

     இன்னொரு வீரன் விரைந்து வந்து புரவியின் கடிவாளத்தைப் பற்றிக் கொள்ள முதல் வீரனுடன் படிகளில் ஏறி உள்ளே சென்று பின் மேலே ஏறி சேதுபதி இருந்த அறைக்குள் நுழைந்தான்.

     "வாருங்கள் பாளையக்காரரே" என்று எழுந்து வந்து சின்னக்காட்டீரனின் கையைப் பிடித்து வரவேற்ற சேதுபதி அவனை ஒரு ஆஸனத்தில் அமரச் செய்து தானும் அமர்ந்து கொண்டான்.

     "இளவரசரை ஒப்படைத்தீர்களா?"

     "ஒப்படைத்தேன்" என்ற பாளையக்காரன் கதலியைப் பார்த்தான்.

     "நீ ஏன் நின்று கொண்டிருக்கிறாய். அப்படி உட்கார்" என்று சொல்ல கதலியும் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

     "யாரிடம் ஒப்படைத்தீர்கள்?"

     "ருஸ்தம்கானிடம்."

     "தளவாய் இல்லையா?"

     "அவர் திருச்சிக்குப் போயிருக்கிறாராம்."

     "அப்படியென்று யார் சொன்னது?"

     "ருஸ்தம்கான் தான்."

     "மன்னரை சந்தித்தீர்களா?"

     "இல்லை."

     "ஏன்?"

     "அவர்களுக்கு உடல் நிலை சரியில்லையாம்."

     "அப்படியென்று அவன் தான் சொன்னானா?"

     "ஆம்."

     "இதிலிருந்து உங்களுக்கு என்ன தோன்றுகிறது?"

     "ருஸ்தம்கானின் பிடியில் மதுரை உள்ளது என்று."

     "மதுரை மட்டுமல்ல, திருச்சியும் கூட."

     சேதுபதி யோசனையில் ஆழ சில கணங்கள் பொறுத்து "அரண்மனையிலும் முக்கியமான இடங்களிலும் அவனுடைய வீரர்களே காவல் புரிகின்றனர்" என்றும் சொன்னான் சின்னக்காட்டீரன்.

     "அப்படியானால்" என்ற யோசனையில் இருந்து விடுபட்ட சேதுபதி, "இளவரசர் மன்னருக்கெதிராக எதுவும் செய்யவில்லை என்று தெரிகிறது இல்லையா?" என்று கேட்டான்.

     "கண்டிப்பாக இல்லை."

     "மன்னரும் தம் அறையிலேயே சிறை வைக்கப்பட்டிருகிறார்... இல்லையா?"

     "கண்டிப்பாக."

     "ருஸ்தம்கான் தவிர அவரை யாரும் பார்க்க முடியாது."

     "அப்படித்தான் நினைக்கிறேன்."

     "தளவாய் உண்மையில் திருச்சிக்குப் போயிருக்கிறாரா அல்லது இங்கேயே அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறாரா என்பது தெரியவில்லை."

     "ஆம்" என்று பாளையக்காரன் தலையை ஆட்டினான்.

     "இளவரசர் மன்னருக்கு எதிராக சதி செய்தார் என்று இனி பகிரங்கமாகவும் குற்றம் சாட்டப்படலாம். கொஞ்ச நாளில் மன்னர் இறக்கலாம்."

     "என்னது?"

     "இறக்க வைக்கப்படலாம் என்கிறேன்."

     உடனே துள்ளி எழுந்த சின்னகாட்டீரனை கையைப் பற்றி "அமருங்கள் பாளையக்காரரே... பதட்டப்படாதீர்கள். பதட்டப்பட்டால் அறிவு வேலை செய்யாது" என்று திரும்ப அமர வைத்தான் சேதுபதி.

     "தொண்டைமான் எங்கே?" என்று கேட்கவும் செய்தான்.

     "அரண்மனையிலேயே விருந்தினர் மாளிகையில் இருக்கிறார்."

     "ஏன்?"

     "அவருக்குப் பரிசும் தங்களுக்கு லிகிதமும் கொடுக்க."

     "எதற்கு?"

     "தாங்கள் தானே இளவரசரை என்னிடம் ஒப்படைத்தீர்கள். அதையும் தெரிவித்தேன்."

     "நான்தான் தொண்டைமானை உங்கள் படைத்தலைவன் என்று சொல்லிக் கொள்ளும்படி தெரிவித்தேனே."

     "ருஸ்தம்கானே கேட்டான் அவர் தொண்டைமான்தானே என்று" என்ற சின்னக்காட்டீரன், அங்கே நடந்த உரையாடலை விளக்கினான்.

     "ஆகா" என்றபடி துள்ளி எழுந்து கொண்டான் சேதுபதி.

     "என்ன? என்ன?" என்றபடி தானும் நின்று கொண்டான் பாளையக்காரன்.

     "அங்கே தொண்டைமானுக்கு ஆபத்துக் காத்திருக்கிறது."

     இதைக் கேட்ட கதலியும் பதறி எழுந்து கொண்டாள்.

     "எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள் சேதுபதி அவர்களே?" என்று பதட்டமாகக் கேட்டான் சின்னக்காட்டீரன்.

     "தொண்டைமான்தான் இளவரசனைத் துரத்தி வந்த ருஸ்தம்கானின் வீரர்களிடமிருந்து அவரைக் காப்பாற்றியது."

     "அதனால் என்ன?"

     "பெரும்பாலான வீரர்களைத் தொண்டைமான் கொன்று போட்டான். சிலர் தப்பியோடினர்."

     "அதனால்?"

     "அந்த வீரர்கள் அரண்மனையில் இருந்த தொண்டைமானை அடையாளம் காட்டியிருப்பார்கள்."

     "எப்படிச் சொல்லுகிறீர்கள்?"

     "நிலவொளியில் அந்தப் போர் நடைபெற்றது."

     "இது தங்கள் யூகம்தானே?"

     "யூகம்தான். உண்மையும் கூட. இல்லாவிட்டால் தொண்டைமான்தானே என்று அவன் உங்களிடம் கேட்டிருக்க முடியாது."

     "தங்கள் படைத் தலைவர் அவர் என்பது யாவரும் அறிந்த ஒன்றாயிற்றே."

     "போர் நடந்ததும் என் ஆட்சிப் பகுதியில்தான். தவிர தொண்டைமானை ருஸ்தம்கானுக்குத் தெரியாது. அதுவும் நீங்கள் இளவரசரை ஒப்படைத்திருகிறீர்கள். அவனை உங்கள் ஆளாக எண்ணாமல் தொண்டைமானா என்று கேட்டிருக்கிறான். நீங்களும் ஆம் என்றிருக்கிறீர்கள்... ருஸ்தம்கானின் பரிசு மரணப் பரிசாகவும் இருக்கலாம்."

     "என் அண்ணனை மட்டும் அந்த ருஸ்தம்கான் கொன்றால் நான் அவனைப் பழி தீர்ப்பேன். என் கையாலேயே அவனைக் கொன்று தீர்ப்பேன்" என்று அப்போது கதலி தன் வாளை உயர்த்தி சபதம் இட்டாள். சேதுபதி திடீரென்று தன் பதட்டத்தையும் வேகத்தையும் தணித்துக் கொண்டு, "கதலி... அஞ்சாதே... கவலைப்படாதே... நாளை தெரியும் உண்மை. அதுவரை பொறுமையாய் இரு" என்றான்.

     "என்ன... இங்கே ஒரே சப்தமாக இருக்கிறது" என்றபடி அப்போது அங்கே வந்த வணிகர், சின்னக்காட்டீரனைப் பார்த்து "ஓ... பாளையக்காரரா... நீங்கள் இருவரும் எப்படிச் சேர்ந்தீர்கள்?" என்றும் கேட்டார்.

     வணிகர் உட்பட யாவரும் அமர்ந்து கொண்டனர்.

     சேதுபதி அப்போதுதான் அரண்மனையின் உள்ளே உள்ள நிலைமையை அவருக்கு விளக்கினான்.

     அதைக் கேட்ட வணிகரும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார். அவரின் உடலும் நடுங்க ஆரம்பித்தது.