உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
ஸ்ரீ அம்பலவாண தேசிகர் அருளிய தசகாரியம் பாயிரம் தலையானேம் ஆவித் தலையானேம் இன்பத் தலையா வடுதுறைத்தாள் தந்த - தலையம் பலவாணன் பாட்டில் தசகா ரியத்தைப் பலகால் வணங்குகையால் பார்த்து. மங்கல வாழ்த்து விநாயகர் ஒருவிய இச்சை ஆதி உதயமாய் ஒடுங்க என்பால் மருவிய கலாதி இச்சை மறைந்திட ஈசன் தன்பால் விரவிய இச்சை ஆதி விளங்கியங்(கு) ஒடுங்க திருவருள் வார ணத்தின் திருவடி சென்னி வைப்பாம். 1 ஸ்ரீ ஞானமா நடராசர் அருந்திடும் வினையும் மையல் ஆக்கிடும் இருந்திடும் மலமும் இன்னே இரிந்திட உயிரும் இன்பம் பொருந்திட உமையாள் கண்டு போற்றிட அம்பலத்தே திருந்திடநடனஞ் செஉவோன் திருவடி உளத்தின் வைப்பாம். 2 ஸ்ரீ நமசிவாய மூர்த்திகள் சதுரறி யாமை தீரித்தருள் உருவு கொண்டு துதிதரு வெண்ணெய் மெய்யன் துலங்குசந் ததிக்கோர் ஞானக் கதிரெனத் தோன்றித் தென்னா வடுதுறைக் கண்ணி ருந்து மதிதரு நமச்சிவாயன் வளர்கம லங்கள் போற்றி. 3 ஸ்ரீ மறைஞான தேசிகர் அரனருள் உருவாய் ஆவிக்(கு) அளித்திட உளத்தை மாயா உரமது பிளந்து குற்றம் ஒழித்து நின் மலம தாக்கி வரமது தனைய ளித்து மருவுமா வடுதுரைக்கோர் பரன்மரை ஞான தேசன் பதாம்புயம் பற்றி வாழ்வாம். 4 நூல் முப்பொருளுண்மையும், தசகாரியமும் பதிபசு பாசம் என்னப் பகர்வரப் பசுத்தா னாகும் மதியது அற்றுப் பாசம் பதியென வரினும் மாயா விதிசெலும் மலமே ஆயும் மேலதாம் பதிக்குக் கீழாம் கதிமதி அவத்தை பத்தாய்க் கழறுவன் கருதி டாயே. 5 பாசஞானம் பிறிவியிற் குருடர் கையில் பெற்றிடுங் கோல்போல் ஆன்மா அறிவை ஆணவமே மூடி அழித்திடக் கலாதி கோலாய் நெறிதரச் செயலி னின்று நிலையிலாப் பொய்மெய் யாக வெறிதரச் நரக சொர்க்கம் மேவலால் பாச ஞானம். 6 பாசஞானம் என்பதன் பெயர்க்காரணம் கேவலம் மலத்தின் உண்மை கிளரொளி கலாதி வந்து மேவினும் மலமே ஆவி வேண்டிடு பொருள்கா ணாமல் காவலாய் ம்றைத்து நின்று காட்டிடும் பொய்மெய் யாக ஆவதால் சகல மாகும் ஆயினும் கேவ லந்தான். 7 பசுஞானம் இயைந்திடும் சரியை யாதிக்(கு) எழுந்தவப் பதங்கள் பொய்யாய்க் கயந்துமெய் வேற தாகக் கருதிகண் டுயிர்மே லாகப் பயந்திடல் பசுவின் ஞானம் பார்க்கின் நின் மலம தாக உயர்ந்திடும் சாக்கி ரத்தின் உண்மை என்(று) உரைப்பார் மேலோர். 8 சிவஞானம் ஒத்திடும் மலம கற்றி உயிரினை அணைத்துத் தம்பால் வைத்திட இச்சா ஞானச் செய்தியை வைத்து ஞானப் பித்திட மலங்க ளெல்லாம் பெயர்ந்திடப் பின்ன மற்றுச் சத்துடன் இச்சை மேவித் தரிப்பது சிவஞா னந்தான். 9 சத்திநிபாதம் திருந்திய கருணை யாலே திருவுரு முன்ற தாகி இருந்திடும் ஈசர் நோக்கும் இயைந்திடும் உயிர்கள் நோக்கும் தெரிந்திபுண் ணியமும் சற்றுந் தெரிந்திடா தனவும் ஒத்து விரிந்திட அறிவு மேலாய் விளங்கின்நற் பாத மாமே. 10 அருளும் ஆன்மாவும் பாசவேர் அறுமாறாக்கும் பகர்சரி யாதி நான்கான் மாசறும் பசுமே லாக மன்னும் அவ் வாற தாகத் தேசுறும் அணுவும் ஈசன் அருளும் அவ் வாற தாக ஏசறும் உயிர தாக இயைந்துளம் புகுந்துநிற்கும். 11 தீவிரதர சத்திநிபாத முற்றோனியல்பு புகுத்திநன்(கு) அறிவு ளத்துப் பொய்மலம் புறம்ப தாக அகற்றிப்பே ரறிவே யாக்கி ஆகும்முப் பொருள்கள் கண்டு பகுத்திட உளத்தின் நின்ற பரம்பொருள் தானே இந்நாள் செகத்திவ தரித்தே உள்ளத் திகைப்பது தீர்க்கும் ஆசான். 12 சிவனே குரு புகுத்திநன்(கு) அறிவு ளத்துப் பொய்மலம் புறம்ப தாக அகற்றிப்பே ரறிவே யாக்கி ஆகும்முப் பொருள்கள் கண்டு பகுத்திட உளத்தின் நின்ற பரம்பொருள் தானே இந்நாள் செகத்திவ தரித்தே உள்ளத் திகைப்பது தீர்க்கும் ஆசான். 13 காட்டுமுபகாரமும் வேண்டும் என்பது அண்டிடும் படலம் கீன்று அங் களித்திட ஒளியைக் கட்குக் கண்டிடும் பொருள்கள் ஒன்றும் கண்டிடா வாறு போல விண்டிடும் மலமு னக்கு விளங்கிடும் அறிவு மேலாய்க் கொண்டிடும் பொருள்கள் காட்டிக் கொடுத்திடின் அன்றிக் காணாய். 14 மலமகலாதவழி காட்டினுங் காணுமாறில்லை என்பது கண்ணிகழ் படலத் தோற்குக் காட்டினுங் காணான் ஒன்றும் கண்ணிகழ் படலம் அற்றால் காட்டிடக் காணு மாபோல் உண்ணிகழ் மறைப்பும் இன்னே ஒழிந்ததிவ் வுடலு னக்குத் திண்ணிய மறைப்பும் அன்று தெளிந்திடும் ஒளியும் அன்றாம். 15 முன்னதற்கு ஏதுமொழிவது காட்டினால் அன்றிக் காணா(து) என்றுமுன் னோர்கள் செய்யுள் நாட்டிய தென்னை என்னின் நாட்டமற் றவர்க்குக் கோலைக் கூட்டீய வழியுங் காட்டிக் கொடுப்பவர் போல மாசு வீட்டிடா தவர்க்குக் காட்டல் விதிவழி பதிய தன்றாம். 16 சிவத்துவவியாப்தி சித்திப்பதெப்படி? விதிவழிக் கில்லை என்றும் விளங்குயிர்க் குள்ள தென்றும் பதிநடை பகர்வ(து) என்னோ படலமே படர்ந்த கட்குக் கதிற்நடை இன்றாய்க் காட்டுங் கருத்தது போல ஈசன் மதிநடை இன்றாய்க் காட்டும் என்றுநீ மதித்தி டாயே. 17 உடலை விளக்கெனல் பொருந்துமா? விளக்கென உடலை மிக்கோர் விதித்திட அன்ற தாகக் கிளத்திடல் என்னோ வானிற் கிளர்கதிர் தனைவி ளக்கோ அளித்திடும் ஆதி வன்ற்ன் அடைந்திடாக் கண்போல் ஆவி ஒளித்திருல் நிற்கப் போகம் உதவிடும் ஒளிய தன்றாம். 18 மாயை இறைவற்குச் சத்தியாமா? சத்தியாம் மாயை என்னச் சாற்றிய தேன்னை நூல்கள் புத்தியாய் மறைப்பு தீர்த்துப் புண்ணீயம் புகுத்த லானுஞ் சித்ததாம் உலக மெல்லாஞ் செனித்திடு விக்கை யானும் அத்தன்றன் சத்திச் செய்திக்(கு) ஆம்செல்வம் ஆத லானும். 19 உடலம் மயக்குமா றெங்ஙன்? மயக்கிடும் உடலம் என்று மறைவல்லோர் உரைப்ப சென்னை இயக்கிடுங் கோல தாகி இசைந்திடுங் குருடு போலத் தியக்கிடும் உடல தாகிச் சேர்ந்துபொய் மெய்ய தாக் முயக்கிடும் மலம் தற்றால் முன்னிலை மயக்க மின்றாம். 20 இதுவுமது கோலத்தில் இச்சை கூரக் கொடுத்தது குருடே யாமால் மாலது கலாது தன்னின் வந்தது மலத்தால் அன்றோ கோலது போகம் துய்க்கக் கொடுத்தது நடையாய்க் கன்மத் தாலதில் விகார மாகி அலைதலால் மயக்கும் என்பர். 21 கலாதிதத்துவங்களின் ஈரியல்பு இருட்டதால் விளக்கைக் கையால் எடுத்திடு வார்கள் கட்குப் பொருட்டர வேண்டு மாபோல் பொருந்திய மலத்தி னாலே தெருட்டிடுங் கலாதி வந்து சேர்பொருள் அனைத்துங் காட்டல் இருட்டல பதார்த்தம் போலாம் இருந்தருள் எழுந்த போது. 22 உடல் விளக்கம் என்பதை வேறொருவகையான் விளக்குவது மறைந்திடும் இருட்டக் கன்றால் மன்னிய விளக்குக் கட்கு நிறுத்திடும் பதார்த்தத் தொன்றாய் நிற்றலால் இருட்டோ(டு) ஒன்றாய் அறுத்திடுங் கதிரைக் காட்டாது ஆதலால் மயக்க மாக வெறுத்திடும் உடலும் இவ்வா றாமென விடுவர் மிக்கோர். 23 தடத்தம் சொரூபமென இயல்பு இரண்டாமெனல் இயல்பது இரண்டாதாக இயம்புவர் எப்பொ ருட்கும் மயலது அன்னி யத்தின் மன்னிடல் பொதுவ தாகும் அயலதில் சார்தல் இன்றி அடங்கல்தன் இயல்ப தாகும் முயலுமுப் பொருட்கும் தத்தம் முறைமையைப் பகுத்துத்ச் சொல்வாம். 24 தத்துவரூபம், தத்துவதரிசனம், தத்துவசுத்தி தத்துவம் அனைத்தும் நோக்கித் தனித்தனிச் செயல்கள் காண்டல் ஒத்ததன் உருவ மாகும் ஒன்றை ஒன்(று) உணரா(து) ஈது சத்தியம் சடமே என்னத் தானறிந் திடுதல் காட்சி நித்தியம் அன்று சின்னாள் நீங்குதல் என்றல் சுத்தி. 25 ஆன்மரூபம் அனைத்தையும் துறந்தோம் இந்நாள் யாவர்க்கும் மேல்நாம் என்ன நினைத்திடல் உயிர்க்கு ரூபம் நீநெடு நாள தாகச் செனித்தனை நரகி னின்றும் திளைத்தனை தெளிந்து சற்றும் உனைத்தை நினைந்த தில்லை உறுஞ்செயல் அருளது என்று ஒர். 26 ஆன்மதரிசனம் அழுந்திட நினைம றைத்த அகவிருள் இரிய மேலே எழுந்திடும் இச்சை மூன்றும் இரிந்திட நின்பால் ஒத்துள் அழுந்திடல் காட்சி யாகும் சொப்பனம் அருள தெங்கே எழுந்திடும் நினைவ டக்கி இசைந்துனைத் தந்த தோரே. 27 சுழுத்தி இருந்திடும் அகம தாக எழுந்திடும் நினைவ டக்கித் தெரிந்திடும் தனையி ழந்து திருவருள் இச்சை கூரப் பொருந்திடல் அருளின் இச்சை பூண்டது சுழுத்தி யாகும் திருந்திட அதளின் செய்திட வேண்டும் எற்கே எற்கே. 28 துரியம் உலகினை விளக்கா நிற்கும் உயர்கதிர் ஒளிய தாகி இலகிய கண் அச் செய்தி விளக்கிடா போல ஞானம் நிலவிடும் உயிர் அச் செய்தி நிறுத்திடா அதுவே யாகக் குலவிடல் துரியம் சுத்தி கொள்ளுமேசிவம் தாகும். 29 மேலதற்கோர் ஐயமறுத்தல் ஓங்கிய ஞானந் தனனில் ஒடுங்கலே அன்றி நேயந் தாங்குதற் கில்லை என்னில் தனையறிந் திட்ட தின்றாம் வாங்கியே சிவத்தில் உன்னை வைத்தது மதிய தாகும் நீங்கலோ அருட்கு நேயம் நிகழ்த்திட வேண்டும் எற்கே. 30 இதுவுமது கிரணம் அக் கதிர தாகா கிளர்கதிர் கிரண மாகா அரணது போல ஈசன் கருணையாம் அருளும் ஒப்பாம் கரணமே உனக்க தன்றாய்க் காட்டிட உதிக்கும் நேயம் மரணமும் இரிய ஒன்றாய் மன்னுதல் அதீத மாகும். 31 சிவமாந்தன்மை இகழ்ந்திடும் மலம் கற்றி இலங்கிய உயிரை வாங்கி மகிழ்ந்திட கருணை யுள்ளே வைத்ததன் இயல்பு சற்றுந் திகழ்ந்திடா தடக்கி நிற்றல் தெளிவுறு சிவமே யாகும் நிகழ்ந்திடும் உருவ மாதி நிலைமையும் இத்னுட் சொல்வாம். 32 சிவரூபம், சிவதரிசனம் பித்ததாய் உளத்தின் நின்ற பிரிவிருள் அகல ஞான வித்தாய் நிற்கும் வீரம் விட்டருள் இச்சை மேவ வைத்தது ரூப மாகும் வருமருட் செயல தாக ஒத்தது காட்சி யாகும் உயர்சிவ மதற்குத் தானே. 33 சிவயோகம், சிவபோகம் சத்தியின் செயல்கள் எல்லாம் தற்சிவம் அதனுக் கின்றாய் ஒத்திடல் உணர்வ ளித்தல் உயர்சிவ யோக மாகும் பித்தது வாகிச் சற்றும் பின்னம தற்றுத் தன்னுள் வைத்துயிர்ப் போக மாக வளர்தலா ராமை தானே. 34 சிவசிவக் கலப்பு புரந்திடும் இச்சை மூன்றும் பொருந்தி அன்(று) என்னை நோக்கி இரந்ததிங்(கு) எங்கே என்னில் ஈந்திட வாங்கித் தன்னுட் கரந்திடும் முன்னை ஈசன் காறலை போல ஒன்றாய்ப் பரந்திடும் ஞான ஞேயம் பற்றும் ஆன் மாவும் உற்றே. 35 ஆசாரியன் அருட்பார்வையால் அருவினையகறல் அழித்திடும் மலமும் யானாய் ஆகிய உடலிம் என்னால் செழித்திடும் வினையும் எங்கே தீர்த்தனை என்னின் மாசும் ஒழித்த சஞ் சிதமும் நாலாஞ் சத்திநி பாதத்(து) ஆசான் விழித்திட வேற தாகும் விட்ட அவ் வகையுஞ் சொல்வாம். 36 தத்துவசுத்தியின் பயன் நிறுத்திடும் உடலைக் கூட்டி நீக்குதலாலே முன்னே அறுத்தலால் மலமும் இன்பாய் ஆக்கிடும் அகிலம் எல்லாம் ஒறுத்தலால் தின்பாய் மற்றச் சஞ்சிதம் ஒழித்த தாகும் புறத்திடு தத்து வத்தின் சுத்தியின் உதலம் போமே. 37 சிவன் நிலை நின்றிடா உடல்த னித்து நீங்கிய ஆன்மாக் கூடாது ஒன்றிடான் சிவன் உடற்கண் ஒத்திடு பவரார் என்னில் பொன்றிடா உயிரைத் தன்பால் புகுத்துவான் உடற்கு வேறாய்ச் சென்றிடான் சிவன் ஒத்து நிற்குமா போல நிற்பன். 38 கலாதிதத்துவங்கள் அரனுடைமையாம் எனல் மல இருள் அகற்ற வாய்த்த கலையது கொடுத்துக் கன்ம பலமுள(து) அருத்தித் தீய மறைப்பது ப்றித்து ஞான நிலையுளம் அடிமை யாக நின்றிடும் அன்றே என்றால் கலைமுதல் உடைமை யாகக் கைக்கொளல் வியப்போகாணில். 39 கடவுள் கன்மபலத்தை ஊட்டுதல் கண்ணினால் விடயந் தன்னைக் கவர்ந்திடும் ஆவி போல நண்ணிய தனுவ தாகி நாடிய உயிரை வாங்கிப் பண்ணிய தனுவின் ஊழும் பலவுயிர் கவர்ந்தங் கன்பாய் நண்ணுமப் போகங் கொண்டு நற்பலம் பதிப்பன் ஈசன். 40 சுத்தான்மாவின் துய்ப்பு தனுவது கருணை மேனி தாணுவும் அணுவும் ஒன்றாய் நினைவது கருணை தானாய் நிற்றலால் போகம் அன்பாய் மனவிருள் இரிய மற்றோர் உளமது மருவி மாயா வினையறும் வினைபு சிப்பான் மேலவம் கருணை யாலே. 41 ஐயமறுத்தது உற்றவன் சிவனே யாக ஒத்துடல் சிவன தாகப் பெற்றவன் அருச்ச னாதி பிடிப்பதென் மலைவு தீரச் சொற்றிட வேண்டும் ஞேயம் துலங்கிய ஆவி ஆன்மா நற்றிரு மேனியாகும் நாடில் அங் காங்கி யாமே. 42 குரு உயிர் - சீடன் உடல் எனல் மாசிலா ஆவி அங்கம் மன்னிடும் உயிராம் ஈசன் ஆசிலாத் தேகம் தேகி ஆனது போல மாணன் தேசுலா மேனி அங்கம் திரெண்டெழு குருவின் மேனி ஏசிலா உயிரே யாகி இசைந்ததங் காங்கி யாமே. 43 வெம்மையுற்று அரக்கு இளக்கம் மேவிய அரக்கின் தன்மை செம்மையற் றுண்டோ சீவன் ஈசனைச் சேர்ந்தொன் றாகித் தம்மையற் றொன்றாய் நிற்றல் தகுமுதல் ஒன்றே அன்றோ அம்மையற் றளித்த மேனி அதுபுகுந் துருக்கா நிற்கும். 44 அகம்புறம் என்றி ரண்டாம் அறிவதை ஒழித்து மாயாச் செகம்புற மாக்கித் தன்னைத் தெரிசித்துச் சிவனோ டொன்றாய் இகம்பர மற்று நிற்கும் இன்பத்துள் அதீத மான சுகம்புரி கருணை மேனி தொழிதுகண் டுருகா நிற்கும். 45 ஆணவம் அடைந்த ஆன்மா ஆணவ மாய்ம றைந்து காணுறுங் கருணை மேனி காணுறா போல ஞானத் தாணுவை அடைந்த ஆன்மாத் தாணுவாய் மறைந்து நேயம் பூணுறுங் கருணை மேனி போற்றிஒன் றாயே நிற்கும். 46 திருவுரு மூன்றி டத்தும் திருந்திய வணக்கம் ஒன்ற அருளியது இயல்பாம் என்னை அடைந்திடு பவர்க்கு யானிங்கு இருள் அகற் றிடூவது என்னோ இயைந்திடும் மலத்தி னின்றும் பருவரற் படுதல் பார்த்துப் பரிந்திடல் கருணை வாழ்வே. 47 அங்கமுள் அங்கி ஒத்துத் தங்கலால் அங்கி தானாம் இங்குயிர் உள்ளே ஈசன் இயைதலால் கருணை தானாய்த் தங்கிடும் இரும்பின் உள்ளே தரித்திடும் எரியே போலப் பொங்கிய பாசம் போக்கிப் புகுந்திடும் கருணையாலே. 48 சீவன்முத்திக்கும் பரமமுத்திக்கும் வேறுபாடு சீவனச் சிவனோ(டு) ஒத்துத் தெளிவுறும் முத்தி தன்னைப் பாவினில் சீவன் முத்தி பகருமேல் பரம முத்தி மேவுவன் என்றும் அந்நூல் விளம்மால் விகற்பங் கேள்நீ யாவதும் இரண்டும் ஒன்றே ஆயினும் விகற்பஞ் சொல்வாம். 49 முத்தியும் இதுவே யாகும் முடிவும்வே றில்லை யாகும் சித்திமும் இதுவே யாகும் தெளிவும் லில்லை யாகும் பித்தும் இன்(று) ஒழிவே யாமேல் பேறிதற் கில்லை யாகும் ஒத்த இவ்வுடலும் இந்நாள் இறுவதும் இல்லை யாமே. 50 ஆதலால் இரண்டும் ஒன்றே ஆயினும் சிவற்கு ளத்தை ஈதலான் மேனி யாகி இசையினும் கருணை மேனி நீதியால் வழிபா டுற்று நின்றிட லானும் உண்மைத் தீதிலாச் சீவன் முத்திச் செயலெனச் செப்பும் நூலே. 51 பரம முத்தி பருவரன் மலத்தி னாலே படுமுயிர் அனைத்தும் தன்பால் மருவுடக் கொணார்ந்த ஈசன் வடிவனைத் தினுக்கும் பூசை ஒருவிடில் துயமாதல் உற்றிடின் மகிழ்ச்சி யாதல் தருமிவை இரண்டும் நீங்கத் தருதலே பரம முத்தி. 52 ஈசன்மேல் எழுந்த அன்பும் ஈசனாம் சீவண் தன்பேர் பேசிய தன்று அவன்தாள் பின்னமே அற்ற அன்பால் ஆசையை அவனெழுப்பி அமந்ததால் அவனே ஆகும் மாசிலா நூலோர் மிக்கு விதித்தலான் மதித்த தாமே. 53 முத்தியை நான்க தாக மொழிந்தனர் பரம மாகும் முத்தி யோ(டு) ஐந்த தாக மொழிந்தனர் இல்லை ஆறாய்ச் சத்திய அவத்தை தன்னை சற்றினார் இல்லை முன்னாள் உத்தமன் உரைத்தா னேனும் உணருமா(று) உணர்ந்து கொள்வாம். 54 முன்னவன் வடநூல் நோக்கி மொழிந்தனன் போதம் மற்றோன் பின்னவன் அந்நூல் நோக்கிப் பெயர்த்தனன் சித்தியாக அன்னவை இரண்டும் நோக்கி அறைந்தனன் புடைநூல் மற்றோன் சொன்னவை முன்றும் நோக்கித் தொகுத்தனன் அவத்தை பத்தாய். 55 வெண்பா தசகாரிய மைம்பத் தஞ்சாய விருத்துத் திசையா அருள்புரிந்தான் என்றும் - வசைதீர்ந்த மேல் ஆவடுதுறைக் கோர்வீறு அம்பலவாணன் மாலா மருவி னர்க்கு வந்து. ஸ்ரீ அம்பலவாண தேசிகர் தசகாரியம் முற்றிற்று |