உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர் அருளிய தசகாரியம் குருவணக்கம் திருந்துவட கயிலைதனில் பதமசிவன் அளித்த சிவஞான போதமுணர் நந்திமுதற் சிறந்தே வருங்குரவன் வெண்ணெய்நல்லூர் மெய்கண்ட தேவன் வழங்கருட்சந் ததியின்நமச் சிவாயதே சிகனாம் இருங்குரவன் அளித்தசிவப் பிரகாச தேசன் இலங்குமறை வனத்தருகோர் வனக்குகையில் உறைநாள் பொருந்திஅவன் திருவடிக்கீழ் அவனருள் ஏ வலினால் போந்தருள் ஆவடுதுறைவாழ் நமச்சிவாயனைப் புகழ்வாம். 1 பொங்குமத ஐங்கரனைப் புகழ்ந்துருகிப் போற்றியென்றும் பூரனமாம் அரனருளைப் புனர்ந்துபோற்றிசெய்தே பங்கமறச் சத்தினிதாய்ப் பார்மகுட அரவம்போல் பரந்திழிந்தே வந்தவர்கக்குப் பரஞான வடிவாய்த் தங்கிய மானிடர்போலத் தரித்தருளி அருள்தீக்கை தானளித்துச் சிவஞான போதத்தின் உண்மைதனில் அங்குரைத்த அவத்தை பத்தும் ஆரய்ந்திங் கறைந்திடுவன் அவையென்போல் ஈசலிற காலுலகேற்(று) அலைத்தவையாம். 2 முதற்கருத்துச் சங்கரனே முதலென்ன மொழிந்திடல்காண் முற்றுமத்தின் அத்துவித முப்பொருளும் உண்டென்னல் இதற்கடைவே மூன்றிலுயிர் யானெனதால் உண்டென்னல் எழில்நான்கின் மூன்றவத்தை இழித்திடலால் ஏற்றிடுதல் மதிக்கையினால் பிரமமென்றே வரும் ஐந்தில் மறுத்திடல்கேள் மதித்தறிவார்க்(கு) உயிர்க்குயிராய் மன்னிநின்றே காட்டுதலால் பதிக்கொருமை மலத்துரிமை பகருயிரே அறிவுமதால் பதிபாசம் தெரித்திதலே பாராறிற் பாங்குறவே. 3 ஏற்ற இவை இருபாலும் அணைந்துநின் றீ தாகாமல் ஈதலின்நாம் எனத்தேறி இசைந்தறிவே நாமென்றே பார்த்துடனே தெளிவாகிப் பாரியனும் பகைப்பொருளும் பாராமல் அறிவாதல் பாரேழில் ரூபமதாம் தேற்றுமெட்டின் முப்பொருட்கும் மூன்றறிவும் ஓதித் தேர்ந்திடவே திருமேனித் தெளிவருளி மலங்காட்டிச் சாற்றியிடும் ஆன்மாவின் உண்மைமதனைக் காட்டியபின் தளராமல் அடைதல் இலக்கணமும் சாற்றி. 4 பற்ற அதில் அருட்காட்சி பகர்ந்திடா அங் கதுவாகிப் பரஞான இன்பெனவே பணியறலும் பாரித்தே சொற்ற இது கூடாதேல் உபாயவழி தனையருளால் சொல்லியோகத் தால்கூட்டிச் சுத்திசெய்தல் ஒன்பதிலாம் முற்ற அதில் ரூபகமும் தெரிசனமும் காட்டியபின் மூழ்கியிட இன்பொழிக்க முன்னைபில்லா வான்போலக் கற்றமலன் பணியாகக் கருதிமலங் காணாதால் கதிர்முன்னின் இருள்போலக் காண்பத்தில் யோகமதாம். 5 காட்டியே சிவானுபவங் காணாமை காட்டாமல் கண்கதிர்போல் எங்குமாய்க் கலந்தின்பாய் நின்றிடவே ஊட்டியே தன்னைஎன்றும் ஒன்றீரண்டும் இல்லாமல் ஊன்போகம் உயிர்க்கறவே உள்ளபடி ஊள்ளதெல்லாம் மூட்டியே கொண்டிடுவன் முன்னின்றே ஆனவைதான் முன்னான்மாக் கருவியும் போன்ம் மொழிந்திடும்பத் தொன்றதனில் ஈட்டும் வினைப் பயனுறுவர் எளிதாக வேனும் ஈராறின் மூன்றுருவும் ஏத்தியன்பு செய்திடலே. 6 தத்துவரூபம், தத்துவதரிசனம், தத்துவசுத்தி, ஆன்மரூபம், ஆன்மதரிசனம், ஆன்மசுத்தி பாசவடி வேபகுப்பில் அறிவதுவே ரூபகமாம் பார்க்கிலதில் ஒருசெயலும் அறநிற்றல் தெரிசனமாம் தேசுளநாம் இதிலணைந்தோம் முன்னாளில் இந்நாள் தீண்டாதே நிற்றலது சுத்தியதாம் தேர்ந்திடுநீ ஆசறவே தன்னறிவாய் மூன்றுமுண்டாய்த் தோன்றுங்கால் அதுரூபம் ஆங்கறிவற் றுனைக்காண்டல் தெரிசனமாம் ஏசறவே காட்டியதை யெப்பொதும் இதுகாட்டே இகழ்ந்திருந்தோம் இந்நாளும் என அழுந்தல் சுத்தியதே. 7 சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் திரிவிதமாம் அறிவுதனில் தேர்ந்திரண்டுங் கீழிடவே தேசுளதாய் மேலதுவாய் நிற்பதுவே சிவரூபம் வருமிதனுக் கதிபதியாய் வாட்டிமலம் உணல்காட்டல் வாழ்சத்தி எனத்தோன்றக் காட்டிநிற்றல் காட்சியதாம் பொருவிலதில் பணியறவே இன்பொடுங்கப் புக்கழுந்தப் பொய்ஞ்ஞானங் காணாமை காட்டிநிற்றல் சிவயோகம் கருவிவுளங் கொண்டுநின்று காட்டியே காண்பதுபோல் கருதுமுயிர்ப் போகமெல்லாங் கண்டுநிற்றல் போகமதே. 8 தேசான ஞாதிருவே திருமேனி ஆசானே செப்பிய இப்பத்தவதை தெளிந்தனன்யான் இவைதன்னின் மாசான மூன்றவத்தை மருவியது கருவியதாம் மலமெங்கே மலமிருக்கின் நீக்கமுமில் மலமறியா வாசாம கோசரநீ வந்தாலென் அவத்தையினும் வழங்கவிலை உனதருளும் ஓங்கிவரில் வாயாது பேசாய்மேல் ஐந்திற்கும் பிரிவின்மை பிரிவதுவும் பிரியாய் நீ அறியாய் நாம் ஆக்கியதிற் பேராதால். 9 இப்படியிப் பொருள்பெற்றார் இம்மையே பரமுத்தி எய்திடுவர் சாதித்தோர் அந்தியத்தே எய்திடுவர் முப்பொருளும் வியாபகமே முற்றுந் தராதரமாம் முப்பொருளும் நித்தியமே மூடிருள்கண் கதிர்போல ஒப்பிதுவே வியாபகமும் உட்புறம்பாந் தேசிகர்க்கும் ஒப்பிதுவே திருமேனி ஒழியாமூன் றவத்தையினும் தப்பினபேர் பதமுத்தி அடைந்தடைவர் ஆசானால் தரணியில்நற் குலத்திலவ தரித்துவனைச் சமம்பிறந்தே. 10 தன்னறிவைப் பற்றாத தபோதனராஞ் சத்தியர்கள் தாமறவே ஊன்போகம் தாக்காமல் பரஞான அந்நெறியில் வழுவாமல் அவன் இவரை நீங்காமல் அநாதியே நேயத்தால் ஆக்கிஉருக் கொண்டுவந்த இந்நெறியே கருதிஅது தனுவாக இன்புற்றே எந்நாளும் சிவானுபவம் எய்தியிங்கே இருந்திடுவர் துன்னெறியைக் கைவிட்டே தன்னின்பம் துய்ப்ப்ரெனில் சோதியாய் நில்லாயேல் துன்னெறிபோ காதறியே. 11 அன்றாலின் கீழிருந்தார் அங்கையருட் போதத்தின் அலமலத்தை நீக்கித்தான் அரன்கழலே செலுமென்றும் இன்றேக னேயாகி இறைபணியார்க் கில்லையென்றும் இடைவிடா(து) அன்பினால் அரன்கழலே செலுமென்றும் தன்றாளின் நேயர்தமிற் கூடலென்றும் சாற்றியது தானொன்றே உயிர்ப்போகம் சாராதே இரண்டினிலும் பொன்றாதே தன்னின்பம் புசிக்குமெனும் புத்தியினால் பொன்றறிவில் அவன்நேயம் மிக்கங்கே புத்தியன்றே. 12 உண்மையாஞ் சிவானுபவர் ஊன்போகம் அருந்திடினும் உத்தமமே ஆகும் அவை தானென்போல் உலகிலுள்ளோர் வண்மையாங் கனவுதனில் வல்லிதனைப் புல்கிடவே வருவதெலாம் தூலவுடற்(கு) ஒல்லைதனில் ஆனதுபோல் திண்மையாஞ் சாதகரூழ் அருந்திடினுந் துணைமறவார் சேய்விளையாட் டினைமறவா(து) அனைஅடித்தூட் டிடினுமிக எண்மையாங் குணக்கோமான் இலங்கிடுமா வடுதுறைவாழ் எனுநமச்சி வாயனெனக் களித்தநெறி இவைதேரே. 13 ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர் தசகாரியம் முற்றிற்று |