18 ‘எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் - என்ற பாணியில் கோமளிஸ்வரனும், அவனைச் சேர்ந்தவர்களும் நடந்து கொண்டதைத் தனசேகரன் வெறுத்தான். இதற்கு முந்திய சந்தர்ப்பங்களில் கோமளிஸ்வரனோ, ஜெயநளினியோ வந்தால் அவர்களிடம் பேசிச் சமாளித்து அனுப்புகிற பொறுப்பை மாமாவிடம் விட்டு விடுகிற வழக்கமுடைய அவன் இன்று தானே எதிர் கொண்டு பேசிச் சமாளிக்க நேர்ந்திருந்தது. அந்தப் பக்கம் கோர்ட்டிலே கேஸ் போட்டு விஷயத்தைப் பயமுறுத்தலுக்கு உரியதாக மாற்றிவிட்டு இந்தப் பக்கம் நேரேயும் வந்து சந்தித்துப் பணம் பறிக்க முயன்ற கோமளீஸ்வரனின் சாகஸம் தனசேகரனுக்கு எரிச்சலூட்டியது. ராஜதர்பாரின் வேஷங்களாலும், வீண் ஜம்பங்களாலும் தந்தை வாழ்ந்துவிட்டுப் போயிருந்த தாறுமாறான வாழ்க்கை இன்று தனசேகரனைப் பெரிதும் பாதித்தது. ‘ஓர் அரண்மனை ஏலத்துக்கு வருகிறது’ என்ற கதையில் வந்த கதாநாயகனைப் போல் தான் ஒரு புதிய தலைமுறை இளைஞனாக நடந்துகொள்ள வேண்டும் என்ற முனைப்பு தனசேகரனுக்கு வந்திருந்தது. பீமநாதபுரத்தில் அரச குடும்பத்துக்குச் சொந்தமான காலிமனைகள், தோட்டங்கள், நிலங்கள் நிறைய இருந்தன. அவற்றின் மொத்த அளவு பற்றிய விவரங்களுக்குக் காரியஸ்தரைக் கேட்டிருந்தான் அவன். பரம்பரை பரம்பரையாக அரண்மனைச் சேவையில் ஈடுபட்டிருந்த அரிஜனக் குடும்பங்கள் பத்துப் பன்னிரண்டு ஊரின் தெற்குக் கோடியில் குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருந்தன. அந்தக் குடிசைகள் இருந்த நிலமும் அரண்மனைக்குச் சொந்தம்தான். பீமநாதபுரத்தில் அது சமஸ்தானமாக இருந்த காலத்தில் முக்கால் வாசிக் கட்டிடங்கள், காலி மனைகள் எல்லாம் அரண்மனைக்குச் சொந்தமானவையாகத்தான் இருந்தன. பெரிய ராஜா காலத்தில் பல கட்டிடங்கள், வீடுகள், விற்கப்பட்டும், அடமானம் வைக்கப்பட்டும் பாழாகி இருந்தன. அவருக்குத் தேவைப்பட்ட போதெல்லாம் சொத்துக்களை விற்பதற்குக் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போட்டிருந்தார் அவர். தனசேகரனுக்குத் தெரிந்து நடந்த விற்பனைகள், அடமானங்கள் தவிரத் தெரியாமலேயும் பல விற்பனைகள், அடமானங்கள் நடந்திருந்தன. அவற்றைப் பற்றிய விவரங்களை மிகவும் சிரமப்பட்டுத்தான் சேகரிக்க முடிந்தது. எஞ்சியுள்ள நிலங்களைப் பங்கிட்டு நிலங்களே இல்லாத, ஏழை மக்களுக்கு வழங்கிவிட இப்போது முடிவு செய்திருந்தான் அவன். திடீரென்று கோமளீஸ்வரன் சென்னையிலிருந்து வந்து போனதால் தனசேகரன் அன்று செய்வதற்குத் திட்டமிட்டிருந்த பல வேலைகள் செய்ய முடியாமற் போயிருந்தன. பிற்பகலில் அவன் பிரதான அரண்மனையை மாற்றியும், புதுப்பித்தும் ஏற்பாடு செய்திருந்த மியூசியம், லைப்ரரிகளை எல்லாம் சுற்றிப் பார்க்கச் சென்றான். அரண்மனையின் மிகப் பெரிய கூடங்கள், மாடிப் பகுதிகள், அனைத்தையும் ஒழித்துப் புதிதாகப் பெயிண்ட் செய்த பின் நல்ல பார்வை இருந்தது. கீழ்ப்பகுதிகள் பொருட்காட்சியும், ஓவியக்காட்சி மாடிப் பகுதியிலும், மற்றொரு மாடிப் பகுதியிலேயே ஏட்டுச் சுவடிகளும் புத்தகங்களும் அடங்கிய நூல் நிலையமும் இருந்தன.
அந்த இண்டீரியர் டெகரேஷன், மியூசிய அமைப்பு ஆகியவற்றுக்காகத் தனசேகரன் வெளியூர்களிலிருந்து வரவழைத்திருந்த ஆட்கள் அதைச் சிறப்பாகச் செய்து முடித்திருந்தார்கள். தனசேகரனுக்கு அதையெல்லாம் பார்க்கும் போது திருப்தியாக இருந்தது. மறுபடியும் கவனித்துக் கவனித்து ஒவ்வொரு மாறுதலாகச் செய்தான் அவன்.
‘பீமநாதபுரம் அரண்மனை மியூசியமாக மாறுகிறது. இளைய ராஜா தனசேகரனின் புரட்சிகரமான முடிவு’ என்று அவனைப் பற்றிப் பத்திரிகைகளில் எல்லாம் செய்திகள் பிரசுரமாயின. ‘ஓர் அரச குடும்பம் முன் மாதிரியாகிறது’ என்று கூடச் சில பத்திரிகைகள் தலைப்புக் கொடுத்திருந்தன. ராஜமான்ய ஒழிப்பை எதிர்த்த பல வட இந்திய அரச குடும்பங்கள் அதே மனத்தாங்கலுடன் ராஜமான்யம் ஒழிந்த பின் எதிர்க்கட்சிகள் சிலவற்றுக்குப் பண உதவி செய்து நாட்டில் மறைமுகமான அரசியல் கிளர்ச்சிகளுக்கும் ஐந்தாம்படை வேலைகளுக்கும் தூண்டுதல் செய்து கொண்டிருந்தன. நாட்டின் பெருவாரியான மக்களுக்குப் பயன்படும் முற்போக்குத் திட்டங்களுக்குக் குறுக்கே நிற்கிற பிற்போக்குச் சக்திகளை ஊக்கப் படுத்துவதற்கு அவர்கள் தங்கள் பணத்தை செலவிட்டார்கள். அதனால் இந்தச் சூழ்நிலையில் தனசேகரன் பீமநாதபுரத்தில் செய்த முற்போக்கான செயல்களும், மாறுதல்களும் பத்திரிகைகளில் முக்கியத்துவம் பெற்றன. தனசேகரன் விளம்பரத்தை விரும்பி இவற்றை எல்லாம் செய்யவில்லை என்றாலும் இவை தற்செயலாக விளம்பரம் பெற்றன. புகழைத் தேடித் தந்தன. அரண்மனையைச் சுற்றி ஏற்கெனவே இருந்த பூங்காவும் தோட்டமும் நவீனமாக்கப்பட்டன. அது பொது மக்களின் உபயோகத்துக்கான அழகிய பூங்காவாக மாற்றப்பட்டது. ஒரு சிறிய மிருகக் காட்சி சாலையும் அதில் ஏற்படுத்தப் பட்டிருந்தது. அரண்மனைக்குச் சொந்தமான யானை, குதிரை, ஒட்டகம், மயில்கள், மான்கள், பறவைகள் அதில் இடம் பெற்றிருந்தன. பீமநாதபுரம் பரம்பரையின் வரலாறு, கலாச்சாரச் சின்னங்கள், இலக்கியங்கள், சுவடிகளை மட்டுமே அவன் பொருட்காட்சியின் மூலம் பாதுகாக்க விரும்பினானே ஒழிய அந்த அரச குடும்பத்தின் ஜபர்தஸ்துக்கள், டம்பங்கள், ஜம்பங்களை அறவே தான் மறந்ததோடு மற்றவர்களையும் மறக்கச் செய்து விட விரும்பினான். அரண்மனையைச் சுற்றியிருந்த பிரம்மாண்டமான கற்சுவர்கள் முக்கால்பகுதி மறைந்து தரை மட்டமாகிவிட்டிருந்தன. அவற்றிலிருந்த பெரிய கற்கள் பக்கத்திலிருந்த அணைக்கட்டுக்கு இரவு பகலாய் லாரிகளில் ஏற்றப்பட்டுப் போய்க் கொண்டிருந்தன. ஏகாதிபத்தியத்தின் ஒரு சின்னமாக மக்களிலிருந்து அரசர்கள் தங்களையும் தங்கள் சுகங்களையும் தனியே வைத்துக் கொள்ளும் ஓர் எல்லையாக இருந்த அந்த மதில் சுவர்களின் கற்கள் மக்களுக்குப் பயன்படும் ஒரு பெரிய அணைக்கட்டுக்காகப் போய்ச் சேர்ந்ததில் தனசேகரனுக்கு ஏற்பட்ட திருப்தி பெரிதாக இருந்தது. அந்த வார இறுதியில் சுவர்கள் அறவே நீக்கப்பட்டு ஊரின் எந்தப் பகுதியிலிருந்து பார்த்தாலும் அரண்மனை தெரிந்தது. கோவில்களை விட்டு விட்டுச் சுவர்கள் முற்றிலும் இடிக்கப்பட்டு விட்டிருந்தன. பழையது எதுவும் அழிக்கப் படக்கூடாது என்ற ஊர்ப் பொதுமக்களில் சிலர், “ஊரில் ஏற்கெனவே காலந்தப்பாமல் பெய்த மழை கொஞ்ச காலமாக நின்னு போயிருக்கு. இந்தப் புராதனமான கோட்டைச் சுவரை வேறே இப்போ இடிச்சிட்டாங்க. என்ன ஆகப்போகுதோ? இதெல்லாம் நல்லதுக் கில்லே” என்று பேசிக் கொள்ளத் தொடங்கினார்கள். “அரண்மனைக் கோட்டைச் சுவரை இடிச்சு இப்போ என்ன பெரிய காரியத்தைச் சாதிச்சாகணும்? வேலை மெனக்கெட்டு இதைப்போய் இடிப்பாங்களோ?” என்றும் சிலர் பேசிக்கொண்டார்கள். “ஊரே அருள் இல்லாமப் போச்சு. எத்தனையோ காலமாக ஊருக்கு லட்சணமா இருந்த மதிற்சுவரைப் போயா இடிக்கனும்?” கண் காண இருந்த ஒன்றை இழப்பதில் மக்களுக்குள்ள பிரமைகளும் மூடநம்பிக்கைகளுமே இந்தப் பேச்சில் வெளிப்பட்டன. மதிலோரத்தில் வெளியே தெருப் பக்கமாகப் பூக்கடைகள், பழக்கடைகள் வைத்திருந்தவர்கள் எல்லாம் சேர்ந்து மதிற் சுவரை இடிப்பதை எதிர்த்துக் கேஸ் போட்டு ‘ஸ்டே’ கேட்டு ஏற்கெனவே கோர்ட் அதைத் தள்ளுபடி செய்திருந்தது. மதில்களை இடிப்பதால் தங்களுக்கு ஏற்படக் கூடிய வியாபார நஷ்டத்தை மட்டுமே மனத்திற் கொண்டு அவர்கள் கோர்ட்டுக்குப் போயிருந்தார்கள். அது பலிக்கவில்லை என்றானதும் அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியிருந்தது. மனத்திற் கறுவிக் கொண்டிருந்தனர். சினிமா நடிகை ஜெயநளினி காலஞ்சென்ற பெரிய ராஜாவின் விதவை தானே என்று சொல்லித் தனசேகரன் மேல் தொடுத்திருந்த வழக்கு விசாரணைக்கு வந்த தினத்தன்று தனசேகரனும் மாமாவும் சென்னைக்குப் போயிருந்தனர். சென்னையில் வழக்கு வேலையாகவும் வேறு சில காரியங்களுக்காகவும் இரண்டு மூன்று நாட்கள் அவர்கள் தங்க நேரிட்டது. அந்த இரண்டு மூன்று நாட்களில் தந்தை உயிரோடிருந்த காலத்தில் அவர் உறுப்பினராக இருந்த ‘ஜாலி ஜில் கிளப்’ போன்ற நவநாகரிக ‘கிளப்’களின் பழைய பாக்கிகளை எல்லாம் தீர்த்து உறுப்பினர் பதவியையும் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்தான் தனசேகரன். உறுப்பினர் பதவியை விட்டு நீங்காமல் தந்தையை அடுத்து அவருடைய வாரிசாகத் தனசேகரன் தொடர வேண்டும் என்று அந்தந்த கிளப்புகளின் முக்கியஸ்தர்கள் எல்லாரும் டெலிபோன் மூலமும் நேரிலும் வந்து வற்புறுத்தினார்கள். “நீங்க மெம்பரா இருக்கிறது எங்களுக்கெல்லாம் ஒரு பிரெஸ்டிஜ் ‘பீமநாதபுரம் பிரின்ஸ் எங்க கிளப்பிலே மெம்பர்’னு சொல்லிக் கொள்கிற வாய்ப்பாவது எங்களுக்கு இருக்கணும்.” “தயவு செய்து நீங்கள்ளாம் என்னை மன்னிக்கணும். பீமநாதபுரம் இப்போ சமஸ்தானமும் இல்லே. நான் அதுக்குப் பிரின்ஸும் இல்லே. இந்த மாதிரி கிளப் மெம்பர்ஷிப்புக்குச் செலவழிக்கிற அத்தனை பண வசதியும் எனக்கு இல்லை. நானே என் குடும்பத்தையும் என்னையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டியதற்கே இனிமேல் உழைத்துத்தான் சம்பாதிக்க வேண்டும்” என்று திடமாகவும் தீர்மானமாகவும் அவர்களுக்கு மறுமொழி கூறி அனுப்பினான் தனசேகரன். மாமா கூட எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். “பணத்துக்கென்னப்பா பஞ்சம்? இந்த சமஸ்தானத்தை நம்பியா நாம் இருக்கோம். ‘சோஷல் லைப்லே’ ஒரு பிடிப்புக்கு இதெல்லாம் தேவைப்படும். ரெண்டொரு கிளப் மெம்பர்ஷிப்பையாவது தொடர்ந்து வச்சுக்கிறதுதான் நல்லது. நாளைக்கே கல்யாணம் முடிஞ்சதும் நீ இங்கேயே இந்தியாவிலே தொழில் தொடங்கி நடத்தறேன்னு வச்சுக்குவோம். உன்னைத் தேடி ஒரு வெளிநாட்டு விருந்தாளி வரான்னு வச்சுகிட்டா அவனைக் கூட்டிக்கிட்டுப் போய் ஒரு பார்ட்டி கீர்ட்டி குடுக்கறதுக்காவது ஒரு கிளப் வேணுமே?” “அதெல்லாம் பார்த்துக்கலாம் மாமா! அப்படி வந்தாலும் இப்போது இதெல்லாம் ஒண்னும் அவசியமில்லே” என்று மறுத்துவிட்டான் அவன். அடுத்து அவன் செய்த முக்கியமான காரியம் தந்தை பைத்தியக்காரத்தனமாக ஏற்பாடு செய்து ஏராளமாகப் பணத்தைக் கோட்டை விட்டுக் கொண்டிருந்த ‘பீமநாதா புரொடக்ஷன்ஸ்’ என்னும் சினிமாக் கம்பெனியைக் கலைத்துக் கணக்குத் தீர்த்து மூடியது ஆகும். ஒரு படமும் உருப்படியாக வெளிவராமல் வருஷா வருஷம் நஷ்டக் கணக்கில் ஏராளமானப் பணத்தை வீணடித்திருந்தது அந்த சினிமாக் கம்பெனி. ஈவு, இரக்கம், பற்று, பாசம், உறவு எல்லாமே இல்லாதபடி தன் தந்தை இன்னும் சிறிது காலம் உயிரோடிருந்திருந்தால் நிறைய சீரழிவுகளைச் செய்திருப்பார் என்று தனசேகரனுக்குத் தோன்றியது. குடும்பத்திற்கு நாணயமாகவோ பீமநாதபுரம் என்ற புகழ், பெற்ற வம்சத்திற்கு நாணயமாகவோ மனசாட்சிக்கு நாணயமாகவோ அவர் வாழவில்லை என்பது முற்றாகத் தெரிந்தபோது தனசேகரனால் அதை எந்த விதத்திலும் பொறுத்துக் கொள்ளவோ சமாதானப்படுத்திக் கொள்ளவோ முடியவில்லை. ஒரு புகழ்பெற்ற வம்சத்தின் பழைய இறந்த காலச் செல்வாக்கையும் நிகழ்கால வருமானத்தையும் எதிர்கால நற்பெயரையும் அவர் முடிந்த வரையிலே விரயமாக்கித் தொலைத்துக் கெடுத்து விட்டுப் போயிருப்பதாகத் தோன்றியது. இப்படி பெரிய விரயங்கள் தொடர்ந்து தேசம் முழுவதும் நிகழாமல் தக்க சமயத்தில் மன்னர்கள் மானிய ஒழிப்பு என்ற சட்டத்தின் மூலமாக அரசாங்கம் தடுத்தது மிகமிகச் சரியான செயல் என்று அவன் நினைப்பதற்கு அவன் தந்தையே சரியான நிரூபணமாக இருந்தார் என்று சொல்லலாம். நீண்டகாலமாகச் சென்னையிலிருந்த ‘ராயல் மியூசிக் சொஸைடி’ என்ற ஒரு சங்கீத சபை அந்த ஆண்டில் தன் தந்தையின் முழு உருவப் படத்தைத் தனது ஹாலில் திறந்து வைக்கப் போவதாக வந்து தெரிவித்த போது கூடத் தனசேகரன் அதில் அவ்வளவாக உற்சாகம் காட்டவில்லை. “உங்கப்பா ரொம்பக் காலமாக இதிலே பேட்ரனாக இருந்திருக்கிறார். அவர் நினைவா ஒரு படம் திறந்து வைக்கணும்னு எங்களுக்கெல்லாம் ஆசை. நீங்களே அரண்மனையிலேயிருந்து ஒரு நல்ல படமாக் குடுத்தீங்கன்னா செளகர்யமா இருக்கும். உங்கப்பா பெரிய கலா ரசிகர், சங்கீத அபிமானி. எங்க சொஸைடி அவராலே நிறையப் பிரயோஜனம் அடைஞ்சிருக்கு. அவர் படம் இல்லாதது எங்களுக்குப் பெரிய மனக்குறைதான்.” “அதெல்லாம் எதுக்குங்க? காந்தி படம் நேரு படம்னு தேசப் பெரியவங்க படமாப் பார்த்துத் திறந்து வையுங்க போதும்” என்று தனசேகரன் மெல்லத் தட்டிக் கழித்துவிட முயன்றான். அவர்கள் விடவில்லை. அவன் சொல்லியதை அவர்கள் அவன் மிகவும் தன்னடக்கமாகப் பேசுவதாக எடுத்துக் கொண்டு விட்டார்கள். அவனோ உண்மையிலேயே தன் தந்தையின் மேலிருந்த கசப்பு உணர்ச்சி தாளாமல் அதைத் தட்டிக் கழித்து விடும் நோக்குடன் பேசிக் கொண்டிருந்தான். அவர்களோ அதை வேறு விதமாகப் புரிந்து கொண்டு விடாப்பிடியாக மன்றாடினார்கள். “நீங்க அப்படிச் சொல்லிடப்படாது. தன்னடக்கம்கிறது உங்க குடும்பத்துக்குப் பரம்பரைக் குணம். உங்கப்பா படத்தை நாங்க திறந்து வைக்கப் போறோம்கிறது உறுதி. அதுக்கு நீங்க ஒரு நல்ல படமாகத் தேர்ந்தெடுத்துத் தர்ரதோட நின்னுடப்படாது! தொடர்ந்து நீங்களும் சொஸைட்டிக்குப் பேட்ரனா இருக்கணும்” என்றார்கள் அவர்கள். தனசேகரனுக்குப் பொறுமை பறிபோய்க் கொண்டிருந்தது. அவன் எங்கே ஆத்திரத்தில் அவர்களிடம் காலஞ் சென்ற பெரிய ராஜாவை விட்டுக் கொடுத்துப் பேசிவிடப் போகிறானோ என்ற தயக்கத்தோடு உடனிருந்த மாமா தங்கபாண்டியனே முந்திக் கொண்டு, “அதெல்லாம் பார்த்துச் செய்யச் சொல்றேன், போங்க! இப்போ என்ன அவசரம்?” என்று வந்திருந்தவர்களுக்கு இதமாகச் சொல்லி அனுப்பி வைத்தார். அவர்கள் விடை பெற்றுக்கொண்டு போய்ச் சேர்ந்தபின் தனசேகரன் மாமாவிடம் சொல்லலானான்: “மாமா! எங்கப்பா போய்ச் சேர்ந்துட்டாலும் அவர் வச்சுட்டுப் போயிருக்கிற மிச்சம் சொச்சங்கள், பந்தபாசங்கள் லேசிலே விடாது போலேயிருக்கு. இன்னும் அரண்மனை, சமஸ்தானம்னு சொல்லி யாராவது வந்திட்டே இருக்காங்க. பணக்காரனா வாழ சட்டம் அனுமதிக்கலே, ஏழையா வாழறதை ஜனங்க அனுமதிக்கவோ ஏத்துக்கவோ தயாராயில்லே. படத்திறப்பு தர்ம பரிபாலனம் நன்கொடைன்னு எவனாவது இன்னும் என்னைத் தேடி வந்துக்கிட்டேயிருக்கானே?” “கொஞ்ச நாளைக்கு அப்படித்தாம்பா இருக்கும்! அப்புறம் எல்லாம் சரியாப்போயிடும். ராஜமானியம் போயிட்டாலும் ராஜாங்கிற எண்ணம் ஜனங்க கிட்டேயிருந்து இன்னும் போகலியே? அதான் இப்படி எல்லாம் தேடிவராங்க!” என்றார் மாமா. ஜெயநளினி கேஸ் முதல் நாள் விசாரணை அன்றே ஒத்திப் போடப்பட்டு விட்டது. தனசேகரன் தரப்பு வக்கீல் வாய்தா கேட்டு வாங்கி விட்டார். மாமாவும் தனசேகரனும் ஊருக்குத் திரும்புவதற்கு முன் பீமநாதபுரம் அரச குடும்பத்துக்கு மிகவும் வேண்டிய சேதுராஜன் சேர்வை என்பவர் அவர்களை ஒரு விருந்துக்கு அழைத்திருந்தார். தனசேகரன் மட்டும் தனியாகச் சென்னைக்கு வந்திருந்தால் இப்படிப்பட்ட விருந்துகளுக்கு எல்லாம் அவன் ஒப்புக் கொண்டிருக்க மாட்டான். மாமா, வேண்டியவர்களையும், உறவினர்களையும், குடும்ப நண்பர்களையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார். ஆகவே அவர் அந்த விருந்துக்கு இணங்கியிருந்தார். உறவினர் சேதுராசன் சேர்வை சினிமா விநியோகஸ்தர். மதுரை, ராமநாதபுரம் ஜில்லாக்களுக்கு சினிமா விநியோக உரிமைகளை வாங்கித் தியேட்டர்களில் படங்களைத் திரையிட்டு லாபம் சம்பாதிக்கும் பெரிய வியாபாரி அவர். அப்பாவின் வாழ்க்கை கடைசி நாட்களில் சினிமா சம்பந்தத்தால் சீரழிந்தது என்ற காரணத்தினால் தனசேகரனுக்குச் சினிமா சம்பந்தம் உடைய ஆள் என்றாலே குமட்டிக் கொண்டு வந்தது. ஒழுக்கமும், நாணயமும், நேர்மையும், பெருவாரியாகப் பலியிடப்படுகிற ஒரு தொழில் என்பதால் அதைப் பற்றியும் அதோடு தொடர்புடைய ஆட்களைப் பற்றியும் ஓர் எச்சரிக்கை உணர்வும் அவனுக்கு வந்திருந்தது. “அட! நீ ஒருத்தன். எதை எடுத்தாலும் சந்தேகப்பட்டு மனுஷங்க முகத்தை முறிச்சிக்கிட்டா எப்படி? நம்ப குடும்ப வகையிலே உறவுக்காரங்கன்னு இந்தச் சேதுராசன் சேர்வை செல்வாக்கா இருக்கான். உங்கப்பா தப்பு வியாபாரம் பண்ணிச் சினிமாவிலே நொடிச்சிப் போனாருன்னா அதுக்கு ஊர்லே இருக்கிற சினிமாக்காரங்களை எல்லாம் விரோதிச்சுக்கிட்டுப் பிரயோஜனமில்லே. நாளை பின்னே உறவு மனுஷங்க வேணுமா, இல்லியா?” என்று தனசேகரனுக்கு மாமா சமாதானம் சொல்லியிருந்தார். தன்னுடைய மாமா இவ்வளவு தூரம் வற்புறுத்தியிரா விட்டால் தனசேகரன் அந்தச் சேதுராசன் சேர்வை வீட்டு விருந்துக்குப் போயிருக்க மாட்டான். மாமாவுக்காகத்தான் அங்கே போனான். விருந்துக்கு எல்லா சினிமா நட்சத்திரங்களும் டைரக்டர்களும், சேதுராசன் சேர்வையின் சக விநியோகஸ்தர்களும் வந்திருந்தார்கள். மாமாவோ தனசேகரனோ முற்றிலும் எதிர்பாராத விதமாக நடிகை ஜெயநளினியும் கோமளீஸ்வரனும் கூட வந்திருந்தார்கள். ஜெயநளினி மிக மிகக் கவர்ச்சியாகவும் வசீகரமாகவும் சிங்காரித்துக் கொண்டு வந்திருந்தாள். எல்லோர் கவனமும் அவள் பக்கமே இருந்தன. விருந்தே அவளுக்காகத்தான் ஏற்பாடு செய்தது போலிருந்தது. சேதுராசன் சேர்வை அவளை எல்லார் முன்னிலையிலும் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவது கலகலப்பாகச் சிரித்துப் பேசுவது என்று பரபரப்பாக ஓடியாடிக் கொண்டிருந்தார். தனசேகரனும் மாமாவும் பட்டும் படாமலும் நடந்து கொண்டார்கள். ஜெயநளினி, சேதுராசன் சேர்வை, தனசேகரன், மாமா, நால்வரும் ஒரே டேபிளில் விருந்து அருந்திய போதிலும் பரஸ்பரம் ‘ஹலோ’ என்பதற்கு அதிகமாக ஒரு வார்த்தை கூடப் பேசிக்கொள்ளவில்லை. விருந்து முடிந்ததும் எல்லாரும் விடை பெற்றுச் சென்ற பிறகு தனசேகரன், மாமா, ஜெயநளினி மூவரையும் வைத்துக் கொண்டு, “கொஞ்சம் இருங்க! நாம் தனியே பேச வேண்டிய விஷயம் ஒண்னு இருக்கு” என்று ஆரம்பித்தார் சேதுராசன் சேர்வை. ஜெயநளினி மாமாவிடம் ஏதோ சிரித்துப் பேசத் தொடங்கியிருந்தாள். தனசேகரன் மனத்தில் அதைப் பற்றிக் கொஞ்சம் சந்தேகம் தட்டியது. தாங்க முடியாத கோபமும் வந்தது. |