முதல் பருவம் தோரணவாயில் பூரணமான இந்தக் கதை மாளிகையின் தோரணவாயிலில் ஆவல் பொங்க நிற்கும் வாசக அன்பர்களுக்குச் சில வார்த்தைகள்; சற்றே கண்களை மெல்ல மூடிக் கொள்ளுங்கள்! மணிமேகலையும், சிலப்பதிகாரமும் நிகழ்ந்த காலத்துப் பூம்புகார் நகரத்தையும், மதுரையையும், வஞ்சி மாநகரையும் ஒரு விநாடி உருவெளியில் உருவாக்கிக் காணுங்கள். பழைய பெருமிதத்தோடு சார்ந்த எண்ணங்களை நினைத்துக் கொண்டே காணுங்கள். அடடா! எவ்வளவு பெரிய நகரங்கள். எத்துணை அழகு! மாட மாளிகைகள் ஒரு புறம், கூட கோபுரங்கள் ஒருபுறம். சித்திரப் பொய்கைகள் ஒருபுறம், செந்தமிழ் மன்றங்கள் ஒருபுறம். பல பல சமயத்தார் கூடி வாதிடும் சமயப் பட்டிமன்றங்கள் ஒருபுறம். கோவில்கள், கோட்டங்கள், ஆற்றங்கரைகள், கடற்கரைகள், பெருந்தோட்டங்கள், பூம்பொழில்கள் - நினைப்பில் அளவிட்டு எண்ணிப் பார்க்க இயலாத பேரழகு அல்லவா அது! சங்குகள் ஒலி விம்ம, மகரயாழும் பேரியாழும் மங்கல இசை எழுப்ப, மத்தளம் முழங்க, குழலிசை இனிமையிற் குழைய, நகரமே திருமண வீடு போல், நகரமே நாளெல்லாம் திருவிழாக் கொண்டாடுவது போல் என்ன அழகு! என்ன அழகு! சொல்லி மாளாத பேரழகு! சொல்லி மீளாத பேரழகு! நம் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடித்த பழமையை நினைக்கும் போது, எவ்வளவு பெருமிதமாக இருக்கிறது. இன்று அந்தப் பழம்பெரும் நகரங்களையும் அவற்றின் அரச கம்பீர வாழ்வையும் நினைக்கும்போது நீங்கள் உணர்வதென்ன? விழிகளில் கண்ணீரும், நெஞ்சில் கழிவிரக்க நினைவும் சுரக்க, உருவெளியில் அந்த மாபெரும் நகரங்களைக் கற்பனை செய்து காண முயலும் போது உங்கள் செவிகள் அவற்றில் ஒலித்த இன்னொலிகளைக் கேட்கவில்லையா? உங்கள் நாசியில் அகிற்புகை, சந்தனம், நறுமண மலர்கள் மணக்கவில்லையா? உங்கள் சிந்தனை அவற்றின் வளமான பெருவாழ்வை நினைக்கவில்லையா? அத்தகைய பெருநகரங்களின் செழிப்பு நிறைந்த வாழ்வினூடே நமது கதை நுழைந்து செல்கிறது என்பதற்காக நாம் பெருமிதம் கொள்ளலாம் அல்லவா? தமிழகத்தில் சரித்திர நாவல்கள் என்றால் அரசர், அரசி, படைவீரர், படைத்தலைவர், அமைச்சர் என்று கதாபாத்திரங்களை வகுத்துக் கொண்டு எழுதுவதே இது வரை வழக்கம். இதனால் ஆண்ட வாழ்வின் ஒரு பகுதி ஒளி நிறுவிக் காட்டப்பட்டதே தவிர ஆளப்பட்ட வாழ்வு என்ற பெரும் பகுதி விவரிக்கப் பெறவில்லை. பேரரசர் பலர் போர்கள் செய்து வெற்றி வாகை சூடி வீர வாழ்வு வாழ்ந்தும், அரசவையில் அரியணையில் அமர்ந்தும், பீடுறக் காலங் கழித்த நாளில் அவர்கள் அங்ஙனம் காலங்கழிக்கக் காரணமான மக்களும் பல்லாயிரவர் வாழ்ந்திருக்கத்தானே வேண்டும்?
அந்த மக்களிலும் வீரர்கள் இருந்திருப்பார்கள். பல்வேறு சமயச் சார்புள்ள விதவிதமான மக்கள் விதவிதமாக வாழ்ந்திருப்பார்கள். ஈடு சொல்ல முடியாத அழகர்கள் இருந்திருப்பார்கள். அரச குலத்து நங்கையரை அழகிற் புறங்காணும் பேரழகிகள் இருந்திருப்பார்கள். அவர்களிடையே நளினமான உறவுகள், காதல், களிப்பு எல்லாம் இருந்திருக்கும். வாழ்க்கைப் போராட்டங்கள் இருந்திருக்கும். ஆனால் பெரும்பான்மையானதும், சரித்திரத்தை உண்டாக்கியதும், சரித்திரத்தின் பொன்னேடுகளில் நாயகம் கொண்டாடும் பேரரசர்களை அப்படிப் பேரரசர்களாக ஆக்கியதுமான இந்த மக்கள் கூட்டத்தின் மேல் வரலாற்று நாவலாசிரியர்கள் எந்த அளவு ஒளியைப் படர விட்டார்கள்? எந்த அளவு கவனம் செலுத்த முயன்றார்கள்?
பழைய வாழ்வின் இந்த அழகிய பகுதி மறைந்தே இருக்கிறது. மணிபல்லவம் கதையின் முக்கிய நோக்கங்களில் இந்த அழகிய வாழ்க்கையைப் புனைந்து கூற முயல்வதும் ஒன்று. மணிபல்லவம் கதையின் நாயகன் ஓர் அற்புதமான இளைஞன். காவிரிப்பூம் பட்டினத்துப் பொது மக்களிடையே வாழ்ந்து வளர்ந்து அழகனாய், அறிஞனாய், வீரனாய், உயர்ந்து ஓங்குகிறவன். பருவத்துக்குப் பருவம் அவனுடைய விறுவிறுப்பான வாழ்வில் மாபெரும் மாறுதல்கள் நிகழ்கின்றன. அதனால் இந்தக் கதையின் ஒவ்வொரு பகுதிக்கும் பாகம் என்று பெயரிடாமல் கதாநாயகனின் வாழ்க்கை மாறுதல்களை மனத்திற்கொண்டு பருவம் என்று பெயரிடுகிறேன். கதாநாயகனின் வாழ்வில் நிகழும் பெரிய பெரிய மாறுதல்களுக்கு எல்லாம் மணிபல்லவத் தீவு காரணமாகிறது. அவனுடைய வாழ்வில் இறுதி வரை விளங்கிக் கொள்வதற்கு அரிதாயிருக்கும் மிகப்பெரிய மர்மம் ஒன்றும் மணிபல்லவத்தில்தான் விளங்குகிறது. அந்த மெய் அவன் கண்களைத் திறக்கிறது. தன்னைப் பற்றிய பரம இரகசியத்தை அன்று அங்கே அவன் விளங்கிக் கொள்கிறான். இன்னும் இந்தக் கதையில் எழில் நிறைந்த பெண்கள் வருகிறார்கள். ஆனால், அவர்கள் அரசகுல நங்கையரில்லை. காதலும், வீரமும், சோகமும், இன்பமும், சூழ்ச்சியும், சோதனையும் வருகின்றன. ஆனால், அவை அரண்மனைகளையும் அரச மாளிகைச் சுற்றுப்புறங்களையும் மட்டும் சார்ந்து வரவில்லை. போரும் போட்டியும் வருகின்றன. ஆனால் அவை மணிமுடி தரித்த மன்னர்களுக்கிடையே மண்ணாசை கருதி மட்டும் வரவில்லை. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற மாபெருங் காவியங்கள் பிறக்கக் காரணமாயிருந்தோர் இலக்கிய காலச் சூழலைப் பின்னணியாகக் கொண்டு அந்தப் பெருங்கதையில் கண்ட மிகப்பெரியதும் அளப்பரியதுமான பூம்புகார் நகரை உங்கள் கண்பார்வையிற் கொண்டு வந்து காட்ட முயல்கிறேன். அதோ! சிறப்பு மிக்க சித்திரை மாதம். காவிரிப்பூம் பட்டினம் இந்திர விழா கொண்டாடத் தொடங்கியிருக்கிறது. எங்கும் இனிய ஒலிகள், எங்கும் அலங்காரப் பேரொளி. எங்கும் மணமலர், அகிற்புகை வாசனை. எங்கும் மக்கள் வெள்ளம். காவிரி கடலோடு கலக்கும் சங்க முகத்தில் விழாக் கூட்டம். எங்கு நோக்கினும் யானைகளிலும், குதிரைகளிலும், தேரிலும், சித்திர ஊர்திகளிலும் விரையும் மக்கள். கடல் முடிந்து கரை தொடங்குமிடத்தில் மற்றொரு கடல் தொடங்கி ஆரவாரம் செய்வது போல் அலை அலையாய் மக்கள் குழுமியிருக்கின்றனர். மஞ்சளும் சிவப்புமாய் வண்ண வண்ண நிறம் காட்டும் மாலை வானத்தில் கோல எழில் குலவும் வேளை, அடங்கிய பொழுது, அமைந்த நேரம். அந்த நேரத்தில் அந்த விழாக் கோலங்கொண்ட கடற்கரையில் ஒரு பரபரப்பான இடத்தில் பரபரப்பான சூழ்நிலையில் நம்முடைய கதாநாயகனைச் சந்திக்கிறோம். கதை தொடங்குகிறது. கதை மாளிகைக்குள்ளே நுழையலாம், வாருங்கள். |