![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
முதல் பருவம் - தோரணவாயில் 21. மணிமார்பனுக்குப் பதவி சுரமஞ்சரியும் வசந்தமாலையும் சில கணங்கள் ஒன்றும் பேசிக் கொள்ளத் தோன்றாமல் அப்படியே திகைத்துப் போய் நின்றார்கள். ஊசி கீழே விழுந்தாலும் ஓசை பெரிதாகக் கேட்கும் படியானதொரு நிசப்தம், அப்போது அந்த அலங்கார மண்டபத்தில் நிலவியது. மோனத்தைக் கலைத்து முதலில் பேச்சைத் தொடங்கியவள் வசந்தமாலைதான். மெல்லிய குரலில் தலைவியை நோக்கிக் கேட்கலானாள் அவள்: “அது ஏனம்மா அப்படி செம்பஞ்சுக் குழம்பையெல்லாம் வாரி இறைத்து வீணாக்கினீர்கள்? திரைக்கு அப்பால் நின்று ஒட்டுக் கேட்டது யாரென்று தெரிந்து கொண்டிருக்க வேண்டுமானால் மெல்ல நடந்து போய்த் திரையையே விலக்கிப் பார்த்திருக்கலாமே! அப்படிப் பார்த்திருந்தால் ஒட்டுக் கேட்டவர்களுக்கும் ஒரு பாடம் கற்பித்திருக்கலாமே?” “போடி அசட்டுப் பெண்ணே! பிறர் நாகரிகமாக நமக்குச் செய்கிற பிழைகளைக் கண்டு பிடித்துத் தீர்வு காண முயலும் போது நாமும் நாகரிகமாகவே நடந்து கொள்ளவேண்டும். முன் யோசனை இல்லாமல் திடீரென்று போய்த் திரையைத் திறந்து விட்டு நாம் முற்றிலும் எதிர்பாராத ஆள் அங்கு நிற்பதைக் காண நேர்ந்து விட்டால் நமக்கு வேதனை, அவருக்கும் வேதனை. ஒரு வேளை திரைக்கு அந்தப் பக்கம் நின்றவர் நீயும் நானும் பாடம் கற்பிக்க முடியாதவராக இருக்கலாம். பார்த்த பின், ‘ஐயோ! இவராயிருக்குமென்று தெரிந்திருந்தால் இப்படி அநாகரிகமாகத் திறந்து பார்த்திருக்க வேண்டாமே’ என்று தவிக்கவும் நேரிடுமல்லவா?” “அதெல்லாம் சரிதான் அம்மா. ஆனால் செம்பஞ்சுக் குழம்பை வீணாக்கி வீட்டீர்களே” என்றாள் வசந்தமாலை. “ஆ! அப்படிக் கேள் வசந்தமாலை, அதில்தான் இரகசியமே அடங்கியிருக்கிறது. இந்தச் செம்பஞ்சுக் குழம்பு இரண்டு நாட்களுக்குச் சிவப்புக் கறை அழியாதென்று உனக்குத் தெரியுமோ இல்லையோ?” என்று சுரமஞ்சரி இதழ்களில் இளநகை அரும்பக் கேட்டவுடன் தான் வசந்த மாலைக்குத் தன் தலைவியின் தந்திரம் புரிந்தது. சமயத்துக்கும் சந்தர்ப்பத்துக்கும் ஏற்ற விதத்தில் புத்திக் கூர்மையுடனும் தந்திரமாகவும் சுரமஞ்சரி அந்தச் செயலைச் செய்திருக்கிறாள் என்பதை விளங்கிக் கொண்டபோது தன் தலைவியின் நுண்ணுணர்வை வசந்தமாலையால் வியந்து போற்றாமல் இருக்க முடியவில்லை. “வசந்தமாலை! வா, சித்திரசாலைக்குள் போய்ப் பார்க்கலாம். சற்று முன் தந்தையாரும் ஓவியனும் அங்கே நின்று கொண்டிருந்தார்களே, அந்த ஓவியத்தில் அவர்கள் ஏதாவது மாறுதல் செய்திருக்கிறார்களா என்று பார்க்கலாம்” என்று கூறித் தன் தோழியையும் உடன் அழைத்துக் கொண்டு சித்திரச்சாலைக்குள் புகுந்தாள் சுரமஞ்சரி. வண்ணங்குழைத்து வனப்பு வனப்பாய், வகை வகையாத் தீட்டி வைக்கப்பட்டிருந்த உயிரோவியங்கள் நிறைந்த அந்தச் சாலையில் நடை ஓசையும் கேட்காமல் மெத்தென்ற பட்டுக் கம்பள விரிப்பின் மேல் நடந்து போய் இளங்குமரனின் படத்துக்கு முன் ஆவலுடன் நின்றார்கள் அவர்கள். என்ன மாறுதல் நேர்ந்திருக்கிறதென விரைந்து அறியும் விருப்பத்துடன் தன் கூரிய நோக்கால் அந்தப் படத்தின் ஒவ்வொரு பகுதியாக உற்றுப் பார்த்துக் கொண்டு வந்தாள் சுரமஞ்சரி. ஆனால் அவளையும் முந்திக் கொண்டு வந்தாள் சுரமஞ்சரி. ஆனால் அவளையும் முந்திக் கொண்டு தோழிப் பெண் அந்த மாறுதலைக் கண்டு பிடித்து விட்டாள். “அம்மா! படத்தை வரைந்து வாங்கி, இங்கே கொண்டு வந்து வைத்த போது இதோ இந்த கறுப்புப் புள்ளி இல்லை. இது புதிதாகத் தீட்டப்பட்டதாகத் தோன்றுகிறது” என்று படத்தில் இளங்குமரனுடைய கழுத்தின் வலது பக்கத்துச் சரிவில் மச்சம் போல் கழிக்கப்பட்டிருந்த கறுப்புப் புள்ளியைத் தொட்டுக் காட்டினாள் வசந்தமாலை. சுரமஞ்சரியும் அதைப் பார்த்தாள். அந்த மாறுதல் புதிதாகத்தான் செய்யப்பட்டிருக்கிறதென்பதை அவள் உணர்ந்தாள். ஓவியன் மணிமார்பன் படத்தை முடித்துக் கொடுத்த போது அந்தக் கறுப்பு மச்சம் இளங்குமரனின் கழுத்தில் வரையப் பெறவில்லை என்பது அவளுக்கு நன்றாக நினைவிருந்தது. ‘கருநாவற் பழம் போல் உன் கழுத்தின் வலது பக்கத்துச் சரிவில் எத்தனை அழகான மச்சம் இருக்கிறது பார்த்தாயா’ என்று தந்தையார் பிற்பகலின் போது மாளிகைத் தோட்டத்தில் இளங்குமரனுக்கு அருகில் போய் உற்று நோக்கிக் கொண்டே கேட்ட கேள்வியை இப்போது மீண்டும் நினைவிற் கொண்டு வந்து சிந்திக்கலானாள் சுரமஞ்சரி. ‘படத்தின் அழகை இந்தக் கரும்புள்ளி ஓரளவு குறைத்துக் காட்டும் என்பது தந்தையாருக்கும் ஓவியனுக்கும் தெரியாமலா போயிற்று? தெரிந்து கொண்டே இந்த மாறுதலைச் செய்திருந்தார்களானால் இதன் அந்தரங்க நோக்கம் என்ன? தொழில் நயம் தெரிந்த ஓவியன் இப்படிச் செய்து ஓவியத்தைக் கவர்ச்சியற்றதாக்கத் துணிந்தது ஏன்? அவர் கழுத்திலிருக்கிற மச்சம் ஓவியத்திலும் இருந்துதானாக வேண்டுமென்கிற அவசியம் என்ன?’ என்று சுரமஞ்சரி ஆழ்ந்த சிந்தனைகளால் மனம் குழம்பினாள். இன்னதென்று தெளிவாய் விளங்காவிட்டாலும் இதில் ஏதோ சூது இருக்க வேண்டுமென்பது போல் அவள் உள்ளுணர்வே அவளுக்குக் கூறியது. தன் தந்தையார் மேலும், அவருக்கும் மிகவும் வேண்டியவரான நகைவேழம்பர் என்ற ஒற்றைக் கண் மனிதர் மேலும் பலவிதமான சந்தேகங்கள் அவள் மனத்தில் எழுந்தன. அந்த இரண்டு நாள் பழக்கத்தில் இளங்குமரனிடம் அவ்வளவு அன்பும் பரிவும் தன் மனத்துக்கு எப்படி உண்டாயிற்று என்பதை நினைத்தால் அவளுக்கே விந்தையாயிருந்தது. இளங்குமரன் அவளைப் போல் ஒரு பெண்ணின் மனத்தில் எழும் மென்மையான உணர்வுகளுக்கு உரிய மதிப்போ நெகிழ்ச்சியோ அளிக்கத் தெரியாத முரடனாயிருந்தான். எடுத்தெறிந்து அலட்சியமாகப் பேசினான். தன்னுடைய விழிகளிலும், இதழ்களிலும், உள்ளத்திலும் அவனுக்காக நெகிழும் குறிப்புக்களோடு அவள் அருகே நெருங்கி நின்ற போதெல்லாம் அவன் அதைப் புரிந்து கொண்டு குழையும் மென்மைத் தன்மையில்லாமலே விலகி விலகிச் சென்றிருக்கிறான். ஆயினும் விலக விலக அவனைப் பற்றி நெருக்கமாக நினைக்கத்தான் அவளால் முடிந்தது. அவனை விலக்கி நினைக்கும் ஆற்றல் அவள் மனத்துக்கு வரவில்லை. தான் பேரார்வத்தோடு அளித்த மணிமாலையை மறுத்ததிலிருந்து ஒவ்வொன்றாகத் தனக்கு அவன் செய்த அலட்சியங்களை நினைத்துப் பார்த்தும் அவளால் அவனை வெறுக்க முடியவில்லை. அந்த அலட்சியங்களின் கம்பீரத்தினாலேயே அவன் மீது பரிவும் கவர்ச்சியும் அதிகமாயிற்று அவளுக்கு. நிமிர்ந்து நிற்கும் அவனது திமிர் நிறைந்த தோற்றமும், பரந்து விரிந்த மார்பும், செம்பொன் நிறம் கிளரும் சுந்தரமணித் தோள்களும், கண் நிறைந்து தோன்றும் அழகு முகமும் நினைவில் தோன்றித் தோன்றி, ‘இவற்றையும் இவற்றுக்குரியவனையும் நீ இழக்கலாகாது பெண்ணே! இவனைப் பற்றி நினைப்பதே இன்பம், இவனைப்பற்றித் தவிப்பதே பெருமை, இவனால் அலட்சியப்படுத்தப் பெறுவதை ஏற்பதிலும் கூட இன்பம் இருக்கிறது’ - என்று சுரமஞ்சரியை ஏங்கச் செய்திருந்தன. ஆசைகளுக்கு ஆசைப்படாமல் ஆசைகளை ஆசைப்பட வைக்கும் ஏதோ ஒரு தனித்தன்மை அவனிடமிருந்து அவளைக் கவர்ந்து ஆட்சி புரிந்தது. எதற்கும் அசைந்து கொடுக்காத அந்தத் தனித்தன்மையைத் தன் சிரிப்புக்கும், சிங்கார விழிப் பார்வைக்கும் அசைத்துப் பார்க்க வேண்டுமென்று உள்ளூர உறுதி கொண்டிருந்தது அவள் மனம். இந்தக் கவர்ச்சி காரணமாகத்தான் இளங்குமரன் மேல் அவளுக்கும் பெரும் பரிவு ஏற்பட்டிருந்தது. ‘இதை எனக்கு கொடுத்து விடுவதனால் நீங்கள் பெருமைப்பட இடமிருக்கிறது. ஆனால் இதை உங்களிடமிருந்து வாங்கிக் கொள்வதனால் நான் பெருமைப்பட்டுக் கொள்ளச் சிறிதாவது இடமிருக்கிறதா என்பதுதான் என் சந்தேகம்’ என்று கடற்கரையில் அன்று முனை மழுங்கித் தணியாத முரட்டுத் திமிரோடு பேசிய அதே வாயிலிருந்து ‘சுரமஞ்சரி! உன்னிடமிருந்து எதை வாங்கிக் கொண்டாலும் எனக்குப் பெருமைதான். கற்பனை பிறக்கும் உன் கவிதை நயனங்களின் ஒரு பார்வை கிடைத்தாலும் அதைப் பெருமையாக ஏற்றுக் கொள்வேன். மோகம் பிறக்கும் உனது செவ்விதழ்களின் ஒரு மென்முறுவல் கிடைத்தாலும் பெருமையோடு ஏற்றுக் கொள்வேன்’ என்ற வார்த்தைகளை என்றாவது ஒரு நாள் வரவழைத்துப் பார்த்துவிட வேண்டும் என்ற வேட்கையோடு கூடியதொரு வைராக்கியம் அவள் மனத்தில் முளைத்திருந்தது. இளங்குமரனின் ஓவியத்தில் செய்யப்பட்டிருந்த அந்தச் சிறு மாறுதலைக் கண்டு சிந்தனையிலாழ்ந்திருந்த தன் தலைவியை நோக்கி வசந்தமாலை கூறலானாள்: “இந்த மாறுதல் ஏன் செய்யப்பட்டது என்பதைப் பற்றி உங்கள் தந்தையாரிடம் நேருக்கு நேர் நின்று கேட்டுத் தெரிந்து கொள்வது முடியாத காரியம். ஆனால் அந்த ஓவியனைக் கண்டு பிடித்துக் கேட்டுப் பார்த்தால் ஒரு வேளை காரணம் தெரியலாம்!” “வசந்தமாலை இதைப் பற்றி எப்படி முயன்று யாரிடமிருந்து உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமோ அப்படித் தெரிந்து கொள்ள என்னால் முடியும். நீ பேசாமலிரு. உனக்கு ஒன்றும் தெரிந்தது போல் பிறரிடம் காட்டிக் கொள்ளவே வேண்டாம். இவையெல்லாம் உனக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்த செய்திகளாக இருக்கவேண்டும்” என்று தோழிக்கு வற்புறுத்தி எச்சரிக்கை செய்து அங்கிருந்து அவளை அழைத்துக் கொண்டு புறப்பட்டாள் சுரமஞ்சரி. அப்படி வசந்தமாலையும், சுரமஞ்சரியும் சித்திரச் சாலையிலிருந்து வெளியேறிய அதே நேரத்தில் நிலா முற்றத்திலிருந்து கீழிறங்கி வானவல்லியும் உடனிருந்த பெண்களும் எதிரே வந்து சேர்ந்தார்கள். ‘இவர்கள் யாரிடமும் இங்கு நடந்தது பற்றிப் பேச்சு மூச்சுக் காட்டாதே’ - என்பதை மறுபடியும் கண்களின் பார்வைக் குறிப்பாலேயே தோழிக்கு வற்புறுத்தினாள் சுரமஞ்சரி. “நீ உடனே திரும்பி வந்துவிடப் போகிறாய் என்று நாங்களெல்லாம் நிலா முற்றத்தில் காத்திருந்தோம் சுரமஞ்சரி! நீ வருகிற வழியாயில்லை. நேரமும் ஆகிவிட்டது. உன்னையும் அழைத்துக் கொண்டு உண்பதற்குப் போகலாம் என்று கீழே இறங்கி வந்துவிட்டோம். தந்தையார் நம்மை எதிர்பார்த்து உண்ணாமல் காத்துக் கொண்டிருப்பார். வா போகலாம்” என்று சுரமஞ்சரியை உணவுக்கு அழைத்தாள் வானவல்லி. உடனே எல்லாரும் மாளிகையின் கீழ்ப்பகுதியை நோக்கி உண்பதற்குப் புறப்பட்டுச் சென்றார்கள். அந்தப் பெருமாளிகையின் உணவுக் கூடத்தில் பணியாரங்களின் நறுமணமும், அறுசுவை உண்டிகளின் மணமும் கலந்து பரவிக் கொண்டிருந்தன. நெய்யின் கமகமப்பும், பால் நன்றாக வற்றக் காயும் முறுகிய வாசனையும் அந்தப் பக்கமாக வேறு காரியமாய் வர நேர்ந்தவர்களுக்குக் கூட உண்ணும் ஆசையை உண்டாக்கிக் கொண்டிருந்தன. சுரமஞ்சரியும் வானவல்லியும் வசந்தமாலை முதலிய மற்றப் பெண்களும் உணவுக் கூடத்துக்குள் நுழைந்த போது அங்கே ஏற்கெனவே தந்தையாரும், நகைவேழம்பரும், ஓவியன் மணிமார்பனும் உண்பதற்குச் சித்தமாக வந்து உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். இன்னும் ஒரு பக்கமாகப் பெண்கள் உட்காரும் வரிசையில் சுரமஞ்சரியின் அன்னையும் மாளிகையைச் சேர்ந்த நற்றாய், செவிலித் தாய் முதலிய முது பெண்டிர்களும் அமர்ந்திருந்தார்கள். இந்த இளம் பெண்களின் கூட்டம் உள்ளே நுழைந்தவுடன் நெய்யும், பாலும், பணியாரமும், பல்சுவை மணம் பரப்பிக் கொண்டிருந்த உணவுக் கூட்டத்தில் மல்லிகை மணமும், கூந்தலில் பூசிய தைலமணமும், வேறு பல மென்மணங்களும் புதிதாக எழுந்து உணவு மணங்களோடு கூடிக் கலந்தன. தந்தையார், சுரமஞ்சரி முதலியவர்களை முகமலர்ச்சியோடு உற்சாகமாக வரவேற்றார். “வாருங்கள், பெண்களே! இன்று நமது மாளிகையில் நள பாகமே செய்திருக்கிறார்கள். இந்திரவிழா உற்சாகத்தில் சமையற்காரர்கள் தங்கள் அற்புதத் திறமையைக் காட்டியிருக்கிறார்கள். இனிமேல் நாம் நமது உண்ணும் திறமையைக் காண்பிக்க வேண்டியதுதான்.” “ஆகா! நமது மாளிகை உணவைப் பற்றியா இப்படிச் சொல்கிறீர்கள், அப்பா? என்ன அதிசயம்! என்னால் நம்பவே முடியவில்லையே! ஏதாவது கைதவறிச் செய்திருப்பார்கள். அது நன்றாக வாய்த்துத் தொலைத்திருக்கும். நம் மாளிகைச் சமையற்காரர்கள் அற்புதத் திறமையையும் உற்சாகத்தையும் எப்படி அப்பா காட்டுவார்கள்? அவர்கள் தாம் இந்த மாளிகைக்குள் நுழையு முன்பே அத்தகைய திறமையையும் உற்சாகத்தையும் எங்கோ தொலைத்துவிட்டு வந்து சேர்ந்திருக்கிறார்களே அப்பா!” என்று வானவல்லி வம்புப் பேச்சைத் தொடங்கினாள். அவள் கூறி முடித்ததும் பெண்களின் கிண்கிணிச் சிரிப்புகள் அந்தக் கூடத்தில் அலைஅலையாய் ஒலி பரப்பி அடங்கின. சுரமஞ்சரியையும் வசந்த மாலையையும் தவிர மற்றவர்கள் யாவரும் இந்த நகைச்சுவை மகிழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். சுரமஞ்சரி வானவல்லி ஆகியோரின் அன்னையும் இந்த மகிழ்ச்சியில் கலந்து கொண்டாள். “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை பெண்ணே! நம் மாளிகைச் சமையற்காரர்களைப் பற்றி நீ வேண்டுமென்றே மிகைப்படுத்திக் குற்றம் சொல்கிறாய். எப்போதாவது கொஞ்சம் உப்பைக் கூடப் போட்டிருப்பார்கள். ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்ற பழமொழி இருக்கிறதல்லவா? நமது மாளிகையில் உண்டு சென்றவர்கள் நீண்ட காலம் நம்மை நினைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்றும், அப்படி நம்மை நினைப்பதற்காகவே அவர்கள் நீண்டகாலம் இருக்க வேண்டுமென்றும் தான் நமது சமையற்காரர்கள் இப்படி உப்பை அதிகமாகப் போடுகிறார்கள் போலிருக்கிறது” என்று அன்னை கூறியபோது சிரிப்பொலி முன்னைக் காட்டிலும் பெரிதாக எழுந்தது. நகைவேழம்பரும் சேர்ந்து கொண்டு சிரித்தார். அந்த மனிதரின் ஒற்றைக் கண்ணோடு கூடிய முகத்துக்குச் சிரிப்பு நன்றாயில்லை. பேய் சிரிக்கிறாற் போல் விகாரமாக இருந்தது. செம்மையில்லாத கெட்ட கண்ணாடியில் முகம் பார்த்தது போல் சிரிக்கும் போது பூத பயங்கரம் காட்டியது நகைவேழம்பரின் முகம். குறும்புக்காரியான வானவல்லி விடாமல் மேலும் அந்த வம்புப் பேச்சை வளர்த்தாள். “நீ சொல்வதை நான் அப்படியே ஒப்புக்கொள்ள முடியாதம்மா! ஏனென்றால் காவிரிப்பூம்பட்டினத்துக் கடற்கரையில் உப்புக் காய்ச்சும் உப்பளங்கள் நிறைய இருக்கின்றன என்ற செய்தியையே நம் மாளிகை உணவு மூலமாகத்தான் மிகப் பலர் தெரிந்து கொள்ள நேர்ந்திருக்கிறது. அப்பாவைத் தேடி எத்தனையோ கடல் கடந்த தேசங்களிலிருந்து பெரிய வணிகர்கள், சிற்றரசர்கள் எல்லாம் நம் மாளிகைக்கு வந்து தங்கிச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இங்கு முதன் முறையாக உணவு உண்டு முடிந்தவுடன் அப்பாவைக் கேட்டிருக்கிற முதல் கேள்வி என்ன தெரியுமா? ‘உங்கள் நகரத்தில் நிறைய உப்பளங்கள் இருக்கின்றனவோ?’ என்பதுதான். நான்கு நாட்களுக்கு முன் இரத்தினத் தீவிலிருந்து வந்திருந்த வைர வணிகர் கூட இதே கேள்வியைத் தானே கேட்டார்?” என்று தன் அன்னையிடம் வேடிக்கையாகக் கூறினாள் வானவல்லி. இப்படியே சிரிப்பும் கலகலப்புமாக, உற்சாகமும் உரையாடல்களுமாக உண்ணும் நேரம் கழிந்து கொண்டிருந்தது. சுரமஞ்சரியும், வசந்த மாலையும் மட்டும் சிரிப்போ பேச்சோ இல்லாமல் எதையோ ஆழ்ந்து சிந்திப்பது போல் அமைதியாக அமர்ந்து உண்பதைத் தந்தையார் கவனித்து விட்டார். அந்த மௌனத்தின் காரணத்தைச் சுரமஞ்சரியிடமே நேரில் கேட்காமல் வானவல்லியிடம் கேட்டார் அவர். “வானவல்லீ! இன்றைக்கு உன் சகோதரி சுரமஞ்சரி மௌன விரதம் பூண்டிருக்கிறாளா என்ன? பேச்சுமில்லை, சிரிப்புமில்லை. பதுமை போல் அமர்ந்து உண்கிறாளே!” தந்தையார் இப்படித் தூண்டிக் கேட்ட பின்பும், சுரமஞ்சரி ஒன்றும் பேசவில்லை. தன் சகோதரி சுரமஞ்சரியும் அவளுடைய தோழி வசந்தமாலையும் உற்சாகமாயில்லை என்பதை வானவல்லியும் கவனித்தாள். சகோதரி அப்படி அமைதியாயிருக்கும் போது தான் மட்டும் அதிகப் பிரசங்கியாக வம்பு பேசுவது நாகரிகமில்லை என்று உணர்ந்தவளாய் வானவல்லியும் பேச்சை நிறுத்திக் கொண்டு அமைதியாய் உண்ணத் தொடங்கினாள். “என்னடி, பெண்ணே! உனக்கு உடல் நலமில்லையா? ஏன் இப்படி இருக்கிறாய்?” என்று தாய் சுரமஞ்சரியை விசாரித்தாள். “அதெல்லாம் ஒன்றுமில்லையம்மா!” என்று பெண்ணிடமிருந்து சுருக்கமாகப் பதில் கிடைத்தது தாயாருக்கு. ஆனால் தந்தையார் சுரமஞ்சரியை அவ்வளவு எளிதில் விடவில்லை. எப்படியாவது அவளைப் பேச வைத்துவிட வேண்டுமென்று முனைந்தவர் போல் மீண்டும் அவளிடம் நேரிலேயே பேசலானார்: “சுரமஞ்சரீ! இன்று உனக்குச் சொல்ல வேண்டுமென்பதற்காக மிகவும் நல்ல செய்தி ஒன்று வைத்திருக்கிறேன். இதோ இந்த ஓவியனை நமது மாளிகையிலேயே பணிபுரிவதற்கு நியமித்திருக்கிறேன். எல்லாம் உனக்காகத்தான் பெண்ணே! ஓவியக் கலையில் உனக்கு இருக்கும் பற்று எனக்குத் தெரியும். இவனைப் பயன்படுத்திக் கொண்டு உனது சித்திரச் சாலையின் எஞ்சிய இடங்களையெல்லாம் சித்திரங்களால் நிரப்பி விடலாம்” என்று அவள் முகத்தில் மலர்ச்சியை எதிர்பார்த்துக் கொண்டே கூறிய அவர் அங்கே மலர்ச்சி தோன்றாததைக் கண்டு திகைத்தார். ஒவியன் முகத்தைப் பார்த்தாள் சுரமஞ்சரி. அவன் முகத்தில் பதவிபெற்ற பெருமிதம் இல்லை, ஏதோ பயம் தான் இருந்தது. தந்தையார் நல்ல செய்தி என்று தொடங்கிக் கூறிய இந்தப் பதவி நியமனம் அவள் மனத்தில் பல சந்தேகங்களை உண்டாக்கியது. |