![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
முதல் பருவம் - தோரணவாயில் 24. வானவல்லி சீறினாள்! உணவுக் கூடத்திலிருந்து வெளியேறிய நகைவேழம்பர் ஓவியனையும் இழுத்துக் கொண்டு விரைவாக முன்னால் சென்றுவிட முயன்றபோது சுரமஞ்சரி அவரைத் தடுத்து நிறுத்திக் கேட்ட கேள்வி அவருடைய தோற்றத்தில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிற்று. அந்த அதிர்ச்சி நிலையை சுரமஞ்சரியும் வசந்தமாலையும் நன்றாக உற்றுக் கவனித்துக் கொண்டார்கள். அருகில் வந்து சுரமஞ்சரி அவருடைய பாதத்திலிருந்த செம்பஞ்சுக் குழம்பின் கறையைச் சுட்டிக் காட்டி அந்தக் கேள்வியைக் கேட்ட போது அவர் உடல் பாதாதிகேச பரியந்தம் ஒருதரம் குலுங்கி அதிர்ந்து ஓய்ந்தது. அப்பப்பா! அந்தச் சமயத்தில் அவர் முகம் அடைந்த விகாரமும், குரூரரும், பயமும் வேறெந்தச் சமயத்திலும் அடைந்திராதவையாயிருந்தன. அதைக் கவனித்துக் கொண்டும், கவனிக்காதவள் போன்ற நடிப்புடனே சுபாவமாகச் சிரித்துக் கொண்டே, “இதைத் தெரிந்து கொள்ளத்தான் கூப்பிட்டேன். வேறொன்றுமில்லை. இனி நீங்கள் போகலாம்” என்று கூறிவிட்டுத் தன் தோழியோடு திரும்பிச் சென்று விட்டாள் சுரமஞ்சரி. திரும்பிச் சென்றவள் நேராகத் தன்னுடைய அலங்கார மண்டபத்தை அடைந்தாள். அங்கே ஒரு பக்கத்தில் மறுநாள் அதிகாலையில் அவள் சூடிக் கொள்வதற்கான பூக்கள் வாடாமல் ஈரத்தோடு பதமாக வைக்கப்பட்டிருந்த பூக்குடலை இருந்தது. அதை எடுத்துப் பிரித்து வெண் தாழம்பூவிலிருந்து மிகத் தெளிவான உள்மடல் ஒன்றை உதிர்த்துத் தனியாக்கினாள். தாழம்பூவின் நறுமணம் மற்றெல்லாப் பூக்களின் மணத்தையும் விஞ்சிக் கொண்டு எழுந்து அலங்கார மண்டபத்தில் பரவியது. காம்பு மழுங்காமல் கூரியதாய் இருந்த பிச்சியரும்பு ஒன்றில் செம்பஞ்சுக் குழம்பைத் தேய்த்துக் கொண்டு வெள்ளியில் வார்த்துத் தீட்டினாற் போன்ற தாழை மடலில் முத்து முத்தாக எழுதத் தொடங்கினாள் சுரமஞ்சரி. எழுதுவதற்காகவும் எழுதப்படுகிறவருக்காகவும் அவளுடைய நெஞ்சுக்குள் மணந்து கொண்டிருந்த நினைவுகளைப் போலவே பிச்சியும், தாழையும், செம்பஞ்சுக் குழம்பும் கலந்து உருவான கையெழுத்துக்களும் கம்மென்று மணம் கிளர்ந்தன. அப்போது சுரமஞ்சரியின் நெஞ்சமே ஒரு பூக்குடலையாகத்தான் இருந்தது. நறுமண நினைவுகள் என்னும் தேன்சுமைப் பூக்கள் அவளது நெஞ்சு நிறையப் பூத்திருந்தன. மண்டபத்துப் பூக்குடலையிலிருந்து மலரும் மடலும் எடுத்து நெஞ்சுப் பூக்குடலையிலிருந்து நினைவுகளைத் தொடுத்து அவள் எழுதலானாள். பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த வசந்த மாலை தனது அறிந்து கொள்ளும் ஆவலை அடக்க முடியாமல், “என்னம்மா எழுதுகிறீர்கள்?” என்று கேட்டாள். “மடல் எழுதுகிறேன்.” “மடல் எழுதுவது தெரிகிறது! ஆனால் யாருக்கு?” “இதென்ன கேள்வி! உன்னைப் போல் எதையும் குறிப்பாக அறிந்து கொள்ளத் தெரியாத பெண் எனக்குத் தோழியாக வாய்த்திருக்கக் கூடாது வசந்தமாலை!” என்று சொல்லிச் சிரித்தாள் சுரமஞ்சரி. வசந்தமாலைக்குப் புரிந்தது. தலைவியின் குறிப்பு மட்டுமல்லாமல் குதூகலமும் சேர்த்துப் புரிந்தது. “நெஞ்சுளம் கொண்ட அன்பருக்கு” என்று சுரமஞ்சரி தன் மடலைத் தொடங்கியிருப்பதையும் வசந்தமாலை பார்த்தாள். மடல் தீட்டும் அந்த நிலையில் தன் தலைவியின் கையும் விரல்களும் குவிந்து குழைந்து நளினமாகத் தோன்றின தோழிக்கு. நிலவில் முளைத்த தளிர்கள் போல் அழகிய விரல்கள் அவை. நிலவிலிருந்து தளிர்ந்த கொழுந்து போன்ற முன் கை விரல்களில் சுடர் விரியும் மோதிரங்கள். அந்த மடலைத் தீட்டும் போது சுரமஞ்சரி மணப்பெண் போல் அழகு கொண்டு தோன்றினாள் வசந்தமாலைக்கு. அந்த மடலில் எழுதுவதற்காக அவளுள்ளத்தே எழும் இங்கிதமான நினைவுகளின் சாயல் முகத்திலும் தோன்றியதினால் வட்டப் பொற்பேழையில் வண்ணநிலாக் கதிர்களின் ஒளி படிந்தது போல் அவள் முகம் புதுமையழகு காட்டியது. கண்கள், பார்வை, இதழ்கள், சிரிப்பு, பளிங்குத் தரையில் தோகை விரித்துச் சாய்ந்த மயில்போல் அவள் சாய்ந்து அமர்ந்து மடல் தீட்டும் கோலம் எல்லாம் புதுமைதான்; எல்லாம் அழகுதான். வசந்தமாலை தன் தலைவியையே கவனித்துக் கொண்டிருந்தாள். ஒரு செயலை மனம் நெகிழ்ந்து விரும்பிச் செய்யும் போது அப்படிச் செய்வதனாலேயே மனிதர்களின் முகத்துக்குத் தனிமையானதொரு மலர்ச்சியும் அழகும் உண்டாகும். பருவ காலத்துப் பூவைப்போல் தோற்றமும் மணமும் செழித்துக் கிளரும் நிலை அது. அந்த வெண் தாழை மடலில் முத்து முத்தாய்ச் சித்திரம் போல் எழுத்துக்களை எழுதும் போது சுரமஞ்சரி அதற்கு முன்னில்லாததொரு தனி அழகுடன் காட்சியளித்தாள். இணையற்ற உற்சாகத்தை அவள் முகமும் கண்களும் காட்டின. தலைவியின் அந்தப் பேரழகு நிலையைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது வசந்தமாலைக்கு. கார்காலத்து முல்லைப் புதர்போல் தலைவியிடம் ஏதோ பூத்துக் குலுங்கி மணப்பதையும் அவள் புரிந்து கொண்டாள். கீழே குனிந்து எழுதிக் கொண்டிருந்த சுரமஞ்சரி எழுதுவதை நிறுத்திவிட்டுத் தலை நிமிர்ந்து, “வசந்தமாலை! நீ போய் நகைவேழம்பரோடு தங்கியிருக்கும் அந்த ஓவியனை அழைத்துக் கொண்டு வா. இந்த மடலை ‘அவரு’க்குக் கொடுத்தனுப்புவதற்கு அவன் தான் தகுதியான மனிதன்” என்றாள். “அது எப்படியம்மா முடியும்? உங்கள் தந்தையார்தான் ஓவியனை நகைவேழம்பருடைய பொறுப்பில் விட்டிருக்கிறாரே. அவரிடம் நீங்கள் எப்படி மடல் கொடுத்து அனுப்ப முடியும்? சற்று முன்புதான் நகை வேழம்பரை அலட்சியமாகப் பேசி அனுப்பியிருக்கிறீர்கள். உங்கள் மேல் அவருக்குச் சினம் மூண்டிருக்குமே? உங்கள் வார்த்தையை அவர் எப்படிக் கேட்பார்?” “மடல் எழுதுகிறேன் என்றோ, மடலைக் கொடுத்து ஓவியனை வெளியே அனுப்பப் போகிறேன் என்றோ நகைவேழம்பரிடம் சொல்லாதே. ஓவியனை நான் அழைத்து வரச் சொன்னதாக மட்டும் சொல்லு, அவர் அனுப்ப மறுக்க மாட்டார். மறுத்தால் நானே நேரில் வருகிறேன்.” “என்னவோ, அம்மா! நீங்கள் சொல்வதற்காகத்தான் போகிறேன். எனக்கு அவருடைய ஒற்றைக்கண் முகத்தைப் பார்க்கவே பயமாயிருக்கிறது” என்று சொல்லிவிட்டு ஓவியனை அழைத்து வருவதற்காக நகைவேழம்பர் இருந்த பகுதிக்குள் சென்றாள் வசந்தமாலை. நகைவேழம்பர் அந்த மாளிகையின் கீழ்ப்புறத்தில் தோட்டத்துக்குள் அமைந்திருந்த தனிப்பகுதி ஒன்றில் வசித்து வந்தார். தந்தையாருடைய கப்பல் வணிகத்தோடு தொடர்புடைய அலுவல்களைக் கவனிப்பதற்காக அந்தப் பகுதி அமைந்திருந்தது. அந்தப் பகுதியின் ஆட்சி அதிகாரங்கள் எல்லாம் நகைவேழம்பருடைய ஆதிக்கத்துக்கு மட்டுமே உட்பட்டவை. தான் கூப்பிட்டனுப்பியதற்கு இணங்கி நகைவேழம்பர் ஓவியனை அனுப்புகிறாரா இல்லையா என்பதைத் தெரிந்து கொண்டு விடுவதற்காகவே சுரமஞ்சரி வசந்த மாலையை அனுப்பினாள். தான் சந்தேகப்படுவது போல் ஓவியன் கௌரவமான முறையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறானா என்பதையும் சுரமஞ்சரி இந்த அழைப்பின் மூலமாகத் தெரிந்து கொண்டுவிட எண்ணியிருந்தாள். தவிர, அந்த இரவு நேரத்தில் மருவூர்ப்பாக்கத்திலுள்ள நீலநாக மறவர் படைக்கலச் சாலைக்குப் போய் இளங்குமரனைச் சந்தித்துத் தனது மடலைக் கொடுப்பதற்கு ஓவியன் மணிமார்பன் தான் தகுதியான ஆள் என்று நினைத்தாள் அவள். அவள் இப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போதே வசந்தமாலை திரும்பி வந்தாள். “அம்மா! ஓவியனைச் சிறிது நேரத்தில் அனுப்பி வைப்பதாக நகை வேழம்பர் ஒப்புக் கொண்டு விட்டார். ஆனால் இந்த மாளிகைக்கு வெளியே எங்கும் அவனை அனுப்பிவிடக் கூடாதென்று உங்களிடம் சொல்லி விடுமாறு என்னிடம் தனியாகக் கூறியனுப்பினார். ஓவியர் இப்போது வந்துவிடுவார்” என்று வசந்தமாலை வந்து கூறியதிலிருந்து சுரமஞ்சரிக்கு ஓர் உண்மை மிகத் தெளிவாகப் புரிந்தது. தந்தையாரும் நகைவேழம்பரும் ஓவியனை எதற்காகவோ மாளிகைக்குள்ளேயே பாதுகாக்க நினைக்கிறார்கள் என்பதுதான் அந்த உண்மை. சிறிது நேரத்தில் ஓவியன் தயங்கித் தயங்கி நடந்து வந்தான். சுரமஞ்சரி, “வாருங்கள் ஓவியரே” என்று முகம் மலர வரவேற்றாள். ஆனால் அவன் அவளுடைய வரவேற்பையும் பொருட்படுத்தாமல் அணையை உடைத்துக் கொண்டு வரும் வெள்ளம் போல் சொற்களைக் குமுறலோடு வெளியிட்டான்: “அம்மணீ! உங்களுக்குக் கோடி முறை வேண்டுமானால் வணக்கம் செலுத்துகிறேன். உலகத்தில் என்னென்ன நன்மைகள் உண்டோ அத்தனையும் கடவுள் உங்களுக்கு அருளட்டும். நூறு பொற்கழஞ்சுகளுக்கும் உங்கள் வார்த்தைகளுக்கும் ஆசைப்பட்டுத் தெரியாத்தனமாய் இந்த மாளிகையில் வந்து மாட்டிக் கொண்டு விட்டேன். இங்கே தோற்றத்தினால் தான் மனிதர்களாயிருக்கிறார்கள். மனத்தினால் மனிதர்களாயிருப்பவர்களைக் காண முடியவில்லை. நான் ஏழை. வயிறு வளர்க்கவும் கலை வளர்க்கவும் சேர்த்து ஒரே சமயத்தில் ஆசைப்படுகிறவன். இங்கே என் மனம் காரணமின்றிப் பயப்படுகிறது. தயவு கூர்ந்து என்னை விட்டு விடுங்கள்! என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றி செலுத்திக் கொண்டேயிருப்பேன்.” சுரமஞ்சரியை எப்போது சந்திக்கப் போகிறோம் என்றே காத்துக் கொண்டிருந்தது போல மனம் விட்டுக் கதறினான் அந்த இளம் ஓவியன். நெஞ்சிலிருந்து குமுறிக் கொண்டு வந்தன அவன் சொற்கள். சூதுவாது, கள்ளங்கபடறியாத, இனி அறியவும் விரும்பாத அப்பாவி என்பது அவனுடைய பால் வடியும் முகத்திலேயே தெரிந்தது. சுரமஞ்சரி அவனுக்கு ஆறுதலாகச் சொல்லலானாள்: “பயப்படாதீர்கள், ஓவியரே! உங்களுக்கு ஒரு கெடுதலும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.” “கெடுதல் என்று தனியாக ஏதாவது வெளியிலிருந்து இங்கே வர வேண்டுமா, அம்மணீ! போதுமான கெடுதல்கள் இங்கேயே இருக்கின்றன. இந்த ஒற்றைக் கண்ணர் ஒருவர் போதுமே!” கடைசியில் நெடுநேரம் பேசி ஓவியனை அமைதி கொள்ளச் செய்த பின் இளங்குமரனுக்குத் தான் எழுதிய மடலை அவனிடம் கொடுத்து யாரும் கண்டுவிடாமல் பரம இரகசியமாக அவனை அங்கிருந்து வெளியே அனுப்பினாள் சுரமஞ்சரி. “நகைவேழம்பர் இவரை வெளியே அனுப்பலாகாதென்று நிபந்தனை சொல்லியிருந்தாரே, அம்மா! நீங்களாக இப்படிச் செய்து விட்டீர்களே!” என்று பதறிய தோழிக்கு, “நிபந்தனை இருக்கட்டும், அதை மீறியதற்காக என்னை அவர் என்ன செய்கிறார் என்று தான் பார்க்கலாமே!” என்று பரபரப்பில்லாமல் பதில் சொன்னாள் சுரமஞ்சரி. சுரமஞ்சரியிடம் சென்ற ஓவியன் நெடுநேரமாகியும் திரும்பாததைக் கண்ட நகைவேழம்பருக்குச் சந்தேகம் மூண்டது. அவர் ஓவியன் திரும்பி வருவதை எதிர்பார்த்துத் தோட்டத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடைபோட்டுக் கொண்டிருந்தார். நாழிகைகள் ஒன்றன்பின் ஒன்றாய் வளர்ந்தன. அவருடைய கோபமும் வளர்ந்தது. சுரமஞ்சரியிடமே நேரில் போய்க் கேட்டுவிடலாம் என்று புறப்பட்ட அவர் எதிர்ப்புறமிருந்து வந்த அவள் தோட்டத்துப் புல்வெளியில் அமர்ந்தாள். நகைவேழம்பர் கோபத்தோடு அவளருகில் சென்று, “சுரமஞ்சரி தேவி, இது சிறிதும் நன்றாயில்லை. உணவுக்கூடத்திலிருந்து வெளியே வரும்போது எவனோ ஒரு நாடோடி ஓவியனையும் வைத்துக் கொண்டு என்னை அவமானப்படுத்திப் பேசினீர்கள். அதையும் பொருட்படுத்தாமல் உங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி அந்த ஓவியனை அனுப்பி வைத்தேன். நீங்கள் என் நிபந்தனையை மீறி அவனை எங்காவது வெளியே அனுப்பியிருக்கலாமோ என்று இப்போது எனக்குச் சந்தேகம் உண்டாகிறது. அப்படி அவனை வெளியே அனுப்பியிருந்தால் அது உங்கள் தந்தையாருக்கே பிடிக்காத காரியமாயிருக்கும். நீங்கள் தொடர்ந்து நெருப்புடன் விளையாடிக் கொண்டேயிருக்கிறீர்கள். அதன் விளைவு உங்களுக்கு நிச்சயமாக நல்ல முடிவைத் தராது. என்றாவது ஒருநாள் நெருப்பு சுடாமல் விடாது” என்று ஆத்திரத்தோடு கூறவும், “விளையாடுவது நானா? நீங்களா? ஐயா நகைவேழம்பரே! உங்களுக்கு ஒரு கண்ணாவது நன்றாகத் தெரியுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த நினைப்புக் கூடத் தப்புப் போலிருக்கிறது. இப்போது நீங்கள் சுரமஞ்சரியிடம் பேசுவதாக நினைத்துக் கொண்டு வானவல்லியிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்! ஒருவரிடம் பேச வேண்டியதை இன்னொருவரிடம் பேசுவது கூட நகைவேழம்பரின் திறமையோ?” என்று வானவல்லியிடமிருந்து சீற்றத்தோடு பதில் கிடைத்தது. அன்று இரண்டாம் முறையாக அதிர்ந்து போய் நின்றார் நகைவேழம்பர் என்னும் அந்தத் திறமையாளர். |