முதல் பருவம் - தோரணவாயில் 27. தேர் திரும்பி வந்தது! பாதாள அறையில் கூண்டினுள் இருந்த புலிகள் பயங்கரமாக உறுமின. நகைவேழம்பர் வளையத்தில் பாதங்களை நுழைத்துத் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தார். ஓவியன் தன் கருத்தை நிறைவேற்றிக் கொள்வதற்குச் சூழ்நிலையும் நேரமும் பொருத்தமாகவேயிருந்தன. கள்ளிச் செடியைப் பிடுங்கி எறியலாம் என்று கைகளால் தீண்டினாலும் அதன் நச்சுப்பால் கைகளில் படுவது போல் கெட்டவர்களோடு பழக நேரிடும் போதே கெட்ட காரியங்களைச் செய்ய விருப்பமில்லையாயினும் அவற்றைச் செய்வதற்குரிய வழிகள் மனத்தில் நெருங்கித் தோன்றுகின்றன. அப்பாவியான ஓவியன் மணிமார்பனுக்கும் நகைவேழம்பர் போன்ற கொடுமையே உருவான ஒருவர் அருகில் இருந்ததனாலோ என்னவோ தானும் கொடுமையாக ஏதாவது செய்து பார்க்கலாமா என்ற நினைப்பு உண்டாயிற்று. ஆனால் அவன் இப்படி நினைத்துக் கொண்டிருந்த போதே, நகைவேழம்பர் வளையத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு கீழே இறங்கி வந்துவிட்டார். அவர் இறங்கி அருகில் வந்து அவன் கையிலிருந்த தீப்பந்தத்தைத் தாங்கிக் கொண்டதும், அவனைக் கேட்ட முதல் கேள்வியே தூக்கி வாரிப் போடச் செய்தது. “சற்று முன் நான் வளையத்தில் தொங்கிக் கொண்டிருந்த போது மேலே ஓடிப்போய்ப் புலிக் கூண்டுகளின் கதவைத் திறந்து விடலாமென்று நினைத்தாய் அல்லவா?” “அப்படி ஒரு போதும் நான் நினைக்கவில்லையே ஐயா!” “புளுகாதே! நீ நினைத்தாய். எனக்குத் தெரியும். இன்னும் சிறிது நேரம் நான் வளையத்தில் தொங்கியிருந்தால் நீ நினைத்ததைச் செய்யும் துணிவு கூட உனக்கு உண்டாகியிருக்கும்.” “இல்லவே இல்லை...” என்று சிரித்து மழுப்ப முயன்றான் ஓவியன். நகைவேழம்பர் ஒற்றை விழி அகன்று விரியக் குரூரமாகச் சிரித்தார். “நீ என்னை ஏமாற்ற முடியாது தம்பி. என் போன்றவர்களுக்குப் பிறருடைய மனத்தில் என்னென்ன நல்லெண்ணங்கள் தோன்றுகின்றன என்பதை அநுமானம் செய்ய முடியாவிட்டாலும் என்னென்ன கெட்ட எண்ணங்கள் தோன்ற இயலும் என்பதை அநுமானம் செய்ய முடியும். நீ சோழ நாட்டுத் தண்ணீரை மட்டும் தான் குடித்திருக்கிறாய் தம்பீ! ஆனால் நான் எத்தனை எத்தனையோ தேசங்களின் தண்ணீரைக் குடித்திருக்கிறேன். நீ வண்ணங்களில் உருவாகும் அழகான சித்திரங்களோடு மட்டுமே பழகியிருக்கிறாய்; நானோ அழகும், அசிங்கமும், நல்லதும், கெட்டதும், சூழ்ச்சியும், சூதும் நிறைந்த எண்ணற்ற மனிதப் பயல்களோடு பழகியிருக்கிறேன். என்னைப் போல் பலருடைய வெறுப்புக்கு ஆளாகிய ஒருவன் இப்படிப் புலிக் கூண்டுகளின் இடையே உயிரையும் மரணத்தையும் அருகருகே வைத்துக் கொண்டு சோதனை செய்வது போல் தொங்கிய போது உன்னைப் போல் என்னைப் பிடிக்காத ஒருவனுடைய மனத்தில் என்ன நினைவு எழும் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நான் மூடனில்லை.”
தன் மனத்தில் தோன்றியதை அவர் கண்டு பிடித்துச் சொல்லிவிட்டாரே என்று தலைகுனிந்தான் மணிமார்பன். “ஒழுங்காக நடந்து கொள்ளாவிட்டால் நீயும் ஒருநாள் இங்கே தலைகீழாய்த் தொங்குவாய்; இந்தக் கொடும் புலிகளுக்கு இரையாவாய்” என்று கூறியவாறே ஓவியனை இழுத்துக் கொண்டு மேலே படியேறினார் நகைவேழம்பர்.
படிகளில் ஏறி மேலே வந்தவுடன் நகைவேழம்பர் அவனைத் திகைக்க வைக்கும் மற்றொரு கேள்வியையும் கேட்டார்: “தம்பீ! நானும் நீ வந்ததிலிருந்து கவனிக்கிறேன், உன்னிடம் தாழம்பூ மணம் கமழ்கிறதே? இத்தனை வயது வந்த இளைஞனாகிய பின்பும் பூ வைத்துக் கொள்ளும் ஆசை இருக்கிறதா உனக்கு?” என்று கூறிச் சிரித்துக் கொண்டே மணிமார்பனின் இடுப்புக் கச்சையிலிருந்து வாள் நுனிபோல் சிறிதளவு வெளியே தெரிந்த வெண்தாழை மடலை உற்றுப் பார்த்தார் நகைவேழம்பர். ‘ஐயோ! இதையும் இந்தப் பாவி மனிதர் பார்த்துவிட்டாரே’ என்று உள்ளம் பதறி நின்றான் மணிமார்பன். “ஒன்றுமில்லை, ஐயா... மணத்துக்காக எடுத்துச் சொருகிக் கொண்டிருக்கிறேன்” என்று கூறித் தப்ப முயன்றும் அவர் அவனை விடவில்லை. “எங்கே பார்க்கலாம், அந்த நறுமணத்தை நானும்தான் சிறிது மோந்து பார்க்கிறேன்” என்று சொல்லிச் சிரித்தபடியே அவன் இடையிலிருந்து அந்த வெண்தாழை மடலை உருவி எடுத்துவிட்டார் அவர். என்ன செய்வதென்று தோன்றாமல் அப்படியே மலைத்துப் போய் நின்றுவிட்டான் மணிமார்பன். ‘ஐயா! இதை நீங்கள் பார்க்கக் கூடாது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றும் இந்த மடலில் இல்லை’ என்று கடிந்து கூறி அவரை விரைந்து தடுக்கும் ஆற்றல் அவனுக்கு இல்லை. நகைவேழம்பர் தீப்பந்தத்துக்கருகில் மடலை நீட்டி ஒற்றைக் கண்ணைப் பக்கத்தில் கொண்டு போய் உற்றுப் பார்க்கலானார். அந்த மடலைப் படிக்கும் போது, அவர் முகம் என்னென்ன உணர்ச்சிகளைக் காட்டுகிறது, எப்படிக் கடுமையடைகிறது என்பதையெல்லாம் கவனித்துக் கொண்டு நிற்பதைத் தவிர ஓவியனால் வேறொன்றும் செய்வதற்குத் துணிய முடியவில்லை. அதைப் படித்துவிட்டுத் தலைநிமிர்ந்தார் நகைவேழம்பர். “தாழை மடலில் வெறும் நறுமணம் மட்டும் கமழவில்லையே! காதல் மணமும் சேர்ந்தல்லவா கமழ்கிறது!” என்று கூறிக் கொண்டே தீப்பந்தத்தைக் கீழே எறிந்து விட்டு எலும்பு முறிகிறாற் போல் அவன் கையை அழுத்திப் பிடித்து இறுக்கினார் அவர். ஓவியனின் மெல்லிய கையில் இரத்தம் குழம்பிச் சிவந்தது. கைப்பிடியால் இறுக்குவது போதாதென்று கேள்வியாலும் அவனை இறுக்கினார் அவர். “இந்த மடலை ஏன் இதற்குரியவனிடம் சேர்க்கவில்லை?” “உரியவருக்கு இதைப் பெற விருப்பமில்லை” என்று சுருக்கமாகப் பதில் கூறினான் ஓவியன். அதற்கு மேல் அவர் அவனை ஒன்றும் கேட்கவில்லை. அந்த மடலையும் அவனிடம் திரும்பித் தரவில்லை. அவனை இழுத்துக் கொண்டு போய் மாளிகைத் தோட்டத்தில் தாம் வசிக்கிற பகுதியில் இருண்ட அறை ஒன்றில் தள்ளிக் கதவுகளை வெளிப்புறம் தாழிட்டுக் கொண்டு போனார் நகைவேழம்பர். ஓவியனைச் சுற்றிலும் இருள் சூழ்ந்தது. அவன் மனத்திலும் தான். ***** தன்னுடைய மாடத்தில் தோழி வசந்தமாலையோடு ஓவியன் திரும்பி வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்த சுரமஞ்சரிக்கு நேரம் ஆக ஆகக் கவலை பிறந்தது. ஓவியன் மேல் சந்தேகம் உண்டாயிற்று. அந்த மாளிகையிலிருந்து தப்பிப் போக வேண்டுமென்ற ஆசையில், தான் வெளியே அனுப்பிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்படியே ஓவியன் எங்கேயாவது ஓடிப்போய் விட்டானோ என்று நினைத்தாள் அவள். அப்படி அவள் சந்தேகப்படுவதற்கும் நியாயமிருக்கிறது. அந்த மாளிகையில் தொடர்ந்து இருப்பதற்குத் தான் விரும்பவில்லை என்ற கருத்தை அவளிடம் மடலை வாங்கிக் கொண்டு புறப்படுமுன்பே அவன் தான் சொல்லியிருந்தானே! சிறிது நேரத்துச் சிந்தனைக்குப் பின்பு ஏதோ தீர்மானமாக முடிவு செய்து கொண்டவள் போல் உட்கார்ந்தபடியே உறங்கிப் போயிருந்த தன் தோழி வசந்தமாலையை எழுப்பினாள் சுரமஞ்சரி. “என்னம்மா? மடல் கொடுக்கப் போன ஓவியன் திரும்பி வந்தாயிற்றா?” என்று கேட்டுக் கொண்டே எழுந்து நின்றாள் வசந்தமாலை. “ஓவியன் திரும்பி வரவில்லை வசந்தமாலை. இனிமேல் அவனை எதிர்பார்த்துக் காத்திருப்பதிலும் பயனில்லை. நீ புறப்படு, நாமே போக வேண்டியதுதான்!” என்று அந்த அகாலத்தில் தலைவியிடமிருந்து பதில் வந்த போது வசந்தமாலை திகைத்துப் போனாள். “ஓவியன் வராவிட்டால் நாளைக் காலை வரையில் அவனை எதிர் பார்க்கலாம். அதற்காக இந்த வேளையில் நாம் எப்படி அங்கே போக முடியும்? போவதுதான் நன்றாயிருக்குமா? ஏறக்குறைய பொழுது விடிவதற்கே சில நாழிகைகள் தான் இருக்கும். இப்போது அங்கே போக வேண்டுமானால் நடந்து போக முடியாது. பல்லக்கில் போகலாமென்றால் தூக்கி வருவதற்குப் பணியாட்களை எழுப்ப இயலாது. பேசாமல் படுத்துக் கொள்ளுங்கள். எல்லாம் காலையில் பார்த்துக் கொள்ளலாம்” என்று வசந்தமாலை தடை செய்ததை சுரமஞ்சரி பொருட்படுத்தவில்லை. “சொன்னால் சொன்னபடி கேள். இந்தக் காரியத்தை இப்போதே செய்து தீர வேண்டுமென்று என் மனத்தில் தோன்றுகிறது. நீ என்ன தடை சொன்னாலும் நான் கேட்கப் போவதில்லை. பல்லக்கிலே போக வேண்டாம். கீழே வா, எப்படிப் போகலாமென்று தெரிவிக்கிறேன்” என்று வசந்தமாலையையும் இழுத்துக் கொண்டு வேகமாகக் கீழே இறங்கி வந்தாள் சுரமஞ்சரி. கீழே தன் தலைவி விரைவாகச் செய்த ஏற்பாடுகளைப் பார்த்த போது வசந்தமாலைக்கே அதிசயமாக இருந்தது. குதிரைகள் கட்டியிருந்த கொட்டாரத்துக்குப் போய் வேகமாகச் செல்லவல்ல வெண்புரவிகள் இரண்டை அவிழ்த்து வந்து மாளிகையின் ஒரு புறத்தே நிறுத்தியிருந்த அழகிய அலங்காரத் தேரில் தன்னுடைய வளைகள் ஒலிக்கும் கைகளாலேயே பூட்டினாள் சுரமஞ்சரி. தேரைச் செலுத்தும் சாரதியின் இடத்தில் அவள் தானே ஏறி நின்று கடிவாளக் கயிறுகளைப் பற்றிக் கொண்டாள். “வசந்தமாலை! உள்ளே ஏறிக்கொள்” என்று அவள் கட்டளையிட்ட போது மறுத்துச் சொல்லத் தோன்றாமல் அப்படியே ஏறிக் கொள்வதைத் தவிரத் தோழியால் அப்போது வேறொன்றும் செய்ய முடியவில்லை. வேளையில்லாத வேளையில் மாளிகையின் இளவரசி தானே தேரைச் செலுத்திக் கொண்டு வெளியேறுவதைப் பார்த்து வாயிற் காவலர்கள் வியந்து நின்றனர். இரவின் அமைதி கவிந்த பட்டினப்பாக்கத்து அகன்ற வீதிகளில் சுரமஞ்சரியின் தேர் ஓசையெழுப்பிக் கொண்டு விரைந்தது. நிசப்தமான தெருக்களில் மத்தளத்தை அளவாக வாசிப்பது போல் குதிரைக் குளம்பொலி எழுந்து ஒலித்தது. வேகமாக ஓடும் தேரும் அதை விட வேகமாக முந்திக் கொண்டு ஓடும் மனமுமாகச் சுரமஞ்சரி நீலநாகர் படைக்கலச் சாலைக்குச் சென்று கொண்டிருந்தாள். “அம்மா! தேரை நான் செலுத்துகிறேன். நீங்கள் உள்ளே உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்று வசந்தமாலை நடுவழியில் கூறிய வார்த்தைகளுக்குச் சுரமஞ்சரி செவி சாய்க்கவே இல்லை. நாளங்காடியின் அடர்ந்த மரக் கூட்டங்களுக்கிடையே உள்ளே சாலையைக் கடந்து தேர் மருவூர்ப்பாக்கத்துக்குள் புகுந்த போது, தேரை நிறுத்தாமலே பின்பக்கமாகத் திரும்பி, “அவர் தங்கியிருக்கிற படைக்கலச் சாலைக்குப் போகும் வழியைச் சொல்லிக் கொண்டு வா” என்று தோழிக்கு உத்தரவு பிறப்பித்தாள் சுரமஞ்சரி. தோழி வசந்தமாலை வழியைக் கூறினாள். தேர் அவள் கூறிய வழிகளின்படியே மாறியும் திரும்பியும் விரைந்து சென்றது. விடிவதற்குச் சில நாழிகைகள் இருக்கும் போதே நீலநாக மறவருக்கு உறக்கம் நீங்கி விழிப்புக் கொடுத்து விடும். படைக்கலச் சாலையின் எல்லையில் முதன் முதலாகக் கண்விழிக்கிறவர் அவர் தான். எழுந்தவுடன் இருள் புலருமுன்பாகவே ஆலமுற்றத்தை ஒட்டிய கடற்கரை ஓரமாக நெடுந்தொலைவு நடந்து போய் விட்டுத் திரும்பி வருவார் அவர். கடற்காற்று மேனியில் படுமாறு அப்படி நடந்து போய்விட்டு வருவதில் அவருக்குப் பெரு விருப்பம் உண்டு. கதிரவன் ஒளி பரவுமுன்பே தமது உடல் வலிமைக்கான எல்லாப் பயிற்சிகளையும் முடித்துக் கொண்டு நீராடித் தூய்மை பெற்று விடுவார் அவர். நீலநாகமறவர் நீராடிவிட்டுப் புறப்படுவதற்கும், ஆலமுற்றத்து அண்ணல் கோயிலில் திருவனந்தல் வழிபாட்டு மணி ஒலி எழுவதற்கும் சரியாயிருக்கும். வழக்கம் போல் அன்று அவர் துயில் நீங்கிக் கடற்கரையில் தனியே உலாவி வருவதற்காகப் புறப்பட்டுப் படைக்கலச்சாலையின் வாயிலுக்கு வந்த போது அங்கே வெண்புரவிகள் பாய்ந்து இழுத்துவரும் அலங்காரத் தேர் ஒன்று அழகாக அசைந்து திரும்பி வந்து நிற்பதைக் கண்டு வியப்படைந்தார். அந்தத் தேரிலிருந்து இரண்டு பெண்கள் இறங்கி வருவதைக் கண்ட போது நீலநாகமறவரின் வியப்பு இன்னும் மிகையாயிற்று. படைக்கலச் சாலைக்குள் நுழைகிற வாயிலை மறித்துக் கொண்டாற் போல் அப்படியே நின்றார் அவர். தேரிலிருந்து இறங்கி முன்னால் வந்த பெண் அரசகுமாரி போல் பேரழகுடன் தோன்றினாள். உடன் வந்தவள் அவள் தோழியாக இருக்கலாமென்று அவர் புரிந்து கொள்ள முடிந்தது. சிலம்பொலி குலுங்க அன்னம் போல் பின்னிப் பின்னி நடந்து வரும் மென்னடை, சூடிய பூக்களும் பூசிய சந்தனமும் அவர்களிடமிருந்து காற்றில் பரப்பிய நறுமணம் இவற்றால் சற்றும் கவரப் படாமல் கற்சிலை போல் அசையாமல் நிமிர்ந்து கம்பீரமாக நின்றார் நீலநாகமறவர். அவரருகில் வந்ததும் அவர்கள் இருவரும் தயங்கி நின்றார்கள். இரண்டு பெண்களும் தங்களுக்குள் ஒருவரையொருவர் மருண்டு பார்த்துக் கொண்டார்கள். நீலநாகமறவர் அவர்களை நோக்கிக் கேட்டார்: “நீங்கள் இருவரும் யார்? இங்கே என்ன காரியமாக வந்தீர்கள்? இது படைக்கலச்சாலை. ஆண்களும், ஆண்மையும் வளருமிடம். இங்கே உங்களுக்கு ஒரு காரியமும் இருக்க முடியாதே?” “இங்கே இளங்குமரன் என்று ஒருவர் இருக்கிறாரே, அவரை அவசரமாக நாங்கள் பார்க்க வேண்டும்” என்று அவருக்குப் பதில் கூறினாள் முன்னால் நடந்து வந்த பெண். நீலநாகமறவருடைய முகபாவம் மாறியது. “இளங்குமரனை உங்களுக்குத் தெரியுமா, பெண்களே?” “நன்றாகத் தெரியும்.” “எப்படிப் பழக்கமோ?” “எங்களை அவருக்கு நன்றாகத் தெரியும். இன்று பகலில் பட்டினப்பாக்கத்திலிருக்கும் எங்கள் மாளிகைக்குக் கூட அவர் வந்திருந்தார்.” “எதற்காக வந்திருந்தான்?” அவர்களிடமிருந்து பதில் இல்லை. நீலநாகமறவருடைய கடுமையான முகத்தில் மேலும் கடுமை கூடியது. “இப்போது நீங்கள் அவனைப் பார்க்க முடியாது.” “அவசரமாகப் பார்த்தாக வேண்டுமே...” “இந்த அகால நேரத்தில் ஓர் ஆண்பிள்ளையைத் தேடிக் கொண்டுவர வெட்கமாக இல்லையா உங்களுக்கு?” என்று சற்றுக் கடுமையான குரலில் கேட்டுவிட்டுத் திறந்து கிடந்த படைக்கலச் சாலையின் பெரிய கதவுகள் இரண்டையும் இழுத்து அடைத்தார் அவர். அந்தக் கதவுகளை இழுத்து அடைக்கும்போது, அவருடைய தோள்கள் புடைப்பதைப் பார்த்தாலே பெண்கள் இருவருக்கும் பயமாயிருந்தது. தழும்புகளோடு கூடிய அவர் முகமும், பெரிய கண்களும், ‘இவரை நெகிழச் செய்ய உங்களால் முடியவே முடியாது’ என்று அந்தப் பெண்களுக்குத் தெளிவாகச் சொல்லின. அவர்கள் நம்பிக்கையிழந்தார்கள். கதவை மூடிக்கொண்டு நிற்கும் அவர் முன் இரண்டு பெண்களும் அவரது முகத்தை ஏறிட்டுப் பார்க்கும் துணிவின்றித் தலைகுனிந்தபடியே தேருக்குத் திரும்பிப் போய் ஏறிக் கொண்டார்கள். தேர் திரும்பியது. வெண்புரவிகள் பாய்ந்தன. “நான் புறப்படும் போதே சொன்னேனே அம்மா! இந்த அகாலத்தில் நாம் இங்கே வந்திருக்கக்கூடாது.” “வாயை மூடடி வசந்தமாலை! நீயும் என் வேதனையை வளர்க்காதே” என்று தேரைச் செலுத்தத் தொடங்கியிருந்த சுரமஞ்சரி, கோபத்தோடு பதில் கூறினாள். தேர் மறுபடியும் பட்டினப்பாக்கத்துக்கு விரைந்தது. சுரமஞ்சரியின் முகத்தில் மலர்ச்சியில்லை; நகையில்லை. யார் மேலோ பட்ட ஆற்றாமையைக் குதிரைகளிடம் கோபமாகக் காட்டினாள் அவள். வெண்பட்டுப் போல் மின்னும் குதிரைகளின் மேனியில் கடிவாளக் கயிற்றைச் சுழற்றி விளாசினாள். அடிபட்ட புரவிகள் மேலும் வேகமாகப் பாய்ந்தன. வந்ததை விட வேகமாகத் திரும்பிக் கொண்டிருந்தது அவர்கள் தேர். தேர் மாளிகைக்குள் புகுந்து நின்றது. சுரமஞ்சரியும் வசந்த மாலையும் கீழே இறங்கினார்கள். “குதிரைகளை அவிழ்த்துக் கொட்டாரத்தில் கொண்டு போய்க் கட்டிவிட்டு வா” என்று தலைவி உத்தரவிட்டபடியே செய்தாள் வசந்தமாலை. பின்பு இருவரும் மாளிகையின் மூன்றாவது மாடத்துக்குச் செல்லும் படிகளில் ஏறி மேலே சென்றார்கள். சுரமஞ்சரியின் மாடத்தில் தீபங்கள் அணைக்கப்பெற்று இருள் சூழ்ந்திருந்தது. தாங்கள் வெளியே புறப்பட்ட போது தீபங்களை அணைத்ததாக நினைவில்லை சுரமஞ்சரிக்கு. “எதற்கும் நீ கீழே போய்த் தீபம் ஏற்றிக் கொண்டு வா! தீபத்தோடு உள்ளே போகலாம். அதுவரை இப்படி வெளியிலேயே நிற்கிறேன்” என்று வசந்தமாலையைக் கீழே அனுப்பினாள் சுரமஞ்சரி. சிறிது நேரத்தில் வசந்தமாலை தீபத்தோடு வந்தாள். தீப ஒளி உள்ளே பரவிய போது மாடத்தின் முதற்கூடத்துக்கு நடுவில் தன் தந்தையாரும், நகைவேழம்பரும், தங்கள் இருவர் வரவையும் எதிர்பார்த்தே காத்திருப்பது போல் அமர்ந்திருப்பதைச் சுரமஞ்சரியும் வசந்தமாலையும் கண்டு திடுக்கிட்டார்கள். “உள்ளே போகலாமா? இப்படியே திரும்பி விடுவோமா?” என்று பதறிய குரலில் தலைவியின் காதருகே மெல்லக் கேட்டாள் வசந்தமாலை. “நம்மை ஒன்றும் தலையைச் சீவி விட மாட்டார்கள். வா, உள்ளே போவோம்” என்று தோழியையும் கைப்பற்றி அழைத்தவாறு துணிவுடன் உள்ளே புகுந்தாள் சுரமஞ்சரி. |