![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
முதல் பருவம் - தோரணவாயில் 30. நெஞ்சில் மணக்கும் நினைவுகள் தோழி வசந்தமாலை தீபத்தை ஏற்றிக்கொண்டு உடன்வர மாடத்துக்குள் நுழைந்த சுரமஞ்சரி அங்கே முன்கூடத்தில் சினத்தோடு வீற்றிருந்த தன் தந்தையாரையும் நகைவேழம்பரையும் கண்டும் காணாதவள் போல் அவர்களைப் புறக்கணிக்கும் குறிப்புடன் விலகி நேரே நடக்கலானாள். வேளையில்லாத வேளையில் அவர்கள் அங்கே வந்து அமர்ந்திருப்பது முறையில்லை என்பதை அவர்களுக்கே உணர்த்த வேண்டுமென்பதற்காகத் தான் சுரமஞ்சரி அப்படிப் புறக்கணித்தாற்போல் பாராமுகமாக நடந்து சென்றாள். ஆனால் அவளும் தோழியும் முன் கூடத்தைக் கடந்து, அலங்கார மண்டபம், சித்திரச்சாலை முதலிய பகுதிகளுக்குச் செல்லும் இரண்டாம் கூடத்து வாயிலை நெருங்கிய போது தந்தையாரின் குரல் பின்புறமிருந்து அவர்களைத் தடுத்து நிறுத்தியது. அந்தக் குரலில் சினமும், கடுமையும் மிகுதியாயிருந்தன. “சுரமஞ்சரி! இப்படி வந்துவிட்டுப் போ. உன்னை எதிர்பார்த்துத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம்.” அவள் திரும்பி நின்றாள். தந்தையார் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறாற் போல் ஆத்திரத்தோடு காட்சியளித்தார். நகைவேழம்பர் என்னும் கொடுமையின் வடிவமும் அவர் அருகில் இருந்தது. “உன்னைத்தான் கூப்பிடுகிறேன், இப்படி வா மகளே!” அமைதியான அந்த இரவு நேரத்தில் சுரமஞ்சரியின் மாடத்துச் சுவர்களில் அவளுடைய தந்தையாரின் இடி முழக்கக் குரல் இரண்டாம் முறையாக எதிரொலித்து அதிர்ந்தது. பயத்தினால் வசந்தமாலை நடுங்கினாள். அவளுடைய கையிலிருந்த தீபமும், தீபத்தின் சுடரும் சேர்ந்து நடுங்கின. சுரமஞ்சரி பதில் கூறாமல் நின்ற இடத்திலேயே நின்றாள். ஊன்றுகோலை ஊன்றிக் கொண்டே வலது காலைச் சாய்த்து சாய்த்து நடந்து அவரே அவளருகில் வந்தார். அவருடைய ஊன்றுகோலின் கைப்பிடியில் ஒரு யாளி வாயைப் பிளந்து கொண்டிருப்பது போன்ற சிங்கமுகத் தோற்றம் செதுக்கப் பெற்று அதன் கண்களுக்கு இரத்தக் குமிழிகள் போல் இரண்டு சிவப்பு இரத்தினக் கற்களும் பதிக்கப்பட்டிருந்தன. அவர் சுரமஞ்சரியை நோக்கிக் கோபத்தோடு பாய்ந்து, பாய்ந்து நடந்து வந்த வேகத்தில் அவருடைய முகமே, ஊன்றுகோலின் சிங்க முகத்தை விடக் கடுமையாகத் தோன்றுவது போலிருந்தது. கைப்பிடியின் சிங்க முகத்தில் கண்களுக்காகப் பதித்திருந்த இரத்தினக் கற்கள் தீ மொட்டுக்களைப் போல் விளக்கின் ஒளியில் மின்னின. அசையாமல் நின்று கொண்டிருந்த சுரமஞ்சரிக்கு அருகில் வந்து சாய்ந்தாற்போல் ஊன்றுகோலை ஊன்றிக் கொண்டு நின்றபின் அவர் கேட்டார்: “பொன்னையும், மணிகளையும், முத்துக்களையும் கப்பலேற்றி வணிகம் செய்து செல்வம் குவித்துக் கொண்டிருப்பதாக நேற்று வரையில் நான் பெருமைப்பட்டதுண்டு மகளே! ஆனால் இன்றுதான், உன்னைப் போல் குடிப்பெருமையையும், மானத்தையும் சேர்த்துக் கப்பலேற்றும் மகள் ஒருத்திக்கு நான் தந்தையாக இருக்கிறேன் என்ற சிறுமையை முதல் முதலாக உணர்கிறேன்.” இதைக் கேட்டுச் சுரமஞ்சரியின் அழகிய கண்கள் சிவந்தன. பவழ மொட்டுக்களைப் போன்ற இதழ்கள் கோபத்தினால் துடித்தன. பிறை நிலாவைப் போல் மென்மையும், தண்மையும் ஒளிரும் அவளுடைய நெற்றி மெல்லச் சுருங்கியது. சிவந்த கண்களும், துடிக்கும் இதழ்களும், சுருங்கிய நெற்றியுமாக நிமிர்ந்து தந்தையாரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் சுரமஞ்சரி. பார்த்துக் கொண்டே அவரைக் கேட்டாள்: “மானம் கப்பலேறும்படி கெடுதலாக நான் என்ன செய்து விட்டேன், அப்பா?” “இன்னும் என்ன செய்ய வேண்டும் மகளே? இதுவரை செய்திருப்பது போதாதா? இதோ இந்த மடல் நீ எழுதியதுதானே?” என்று கேட்டுக் கொண்டே பின்புறம் நின்றிருந்த நகைவேழம்பர் பக்கமாகத் திரும்பினார் அவர். உடனே நகைவேழம்பர் முன்னால் வந்து தம் இடுப்புக் கச்சையிலிருந்து சற்றே கசங்கினாற் போல் இருந்த வெண்தாழை மடல் ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்தார். அவர் அதை வாங்கிச் சுரமஞ்சரியிடம் நீட்டினார். அதை வாங்கிப் பார்த்ததும் சுரமஞ்சரி தலைகுனிந்தாள். திருட்டைச் செய்கிறபோதே அகப்பட்டுக் கொண்ட திருடன் போல் நாணி நின்றாள் அவள். தான் இளங்குமரனுக்காக எழுதி மணிமார்பனிடம் கொடுத்தனுப்பிய மடல் தந்தையாருக்கும், நகைவேழம்பருக்கும் எப்படிக் கிடைத்ததென்று விளங்கிக் கொள்ள முடியாமல் தவித்தது அவள் மனம். ஓவியன் தனக்கு மிகவும் வேண்டியவனைப் போல் நடித்துத் தன்னையே ஏமாற்றி விட்டானோ என்று சந்தேகம் கொண்டாள் அவள். அந்த ஒரு கணம் அவள் மனத்தில் உலகமே சூழ்ச்சியாலும், சந்தேகங்களாலும், ஏமாற்றுக்களாலும் உருவாக்கப்பட்டது போல் ஒரு பயம் ஏற்பட்டது. “ஏன் தலைகுனிகிறாய் மகளே? நாணமும் அச்சமும் இருந்தால் நடு இரவுக்கு மேல் எவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தேரில் வெளியேறிச் சென்று அப்பன் பெயர் அம்மை பெயர் தெரியாத ஆண்பிள்ளையைச் சந்தித்து வரத் துணிவு ஏற்படுமா? சந்திப்பிற்கு வரச்சொல்லி மடல் எழுதத்தான் துணிவு ஏற்படுமா? இந்த மாளிகையின் பெருமை, நமது குடிப்பிறப்பு, செல்வநிலை, தகுதி எல்லாவற்றையும் மறந்து எவனோ ஊர் சுற்றும் விடலைப் பயலுக்கு, ‘நெஞ்சு களம் கொண்ட அன்பரே’ என்று மடல் எழுத நீ எப்படித்தான் துணிந்தாயோ?” நகைவேழம்பரையும் அருகில் வைத்துக் கொண்டு தந்தையார் தன்னை இப்படிப் பேசியது சுரமஞ்சரிக்கு வேதனையாகவும், அவமானமாகவும் இருந்தது. ‘அவரையும் வைத்துக் கொண்டு தந்தையார் தன்னை இப்படிக் கண்டித்துப் பேசினால் நாளைக்கு அவர் எப்படித் தன்னை மதிப்பார்?’ என்று நினைத்து மனங்குன்றிப் போய் நின்றாள் சுரமஞ்சரி. “இந்த வேளையில் இதற்குமேல் அதிகமாக எதையும் உன்னிடம் பேசிக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை மகளே! ஆனால் ஒன்றை மட்டும் நன்றாக நினைவு வைத்துக்கொள். இந்த ஏழடுக்கு மாளிகையைக் கல்லினாலும் மரத்தினாலும் மட்டும் இவ்வளவு பெரிதாக நான் ஆக்கவில்லை. இந்த மாளிகையின் கல்லோடு கல்லாய், மரத்தோடு மரமாய்ப் பன்னெடுங்காலம் பரிந்து பயந்து சம்பாதித்த குடிப்பெருமையையும், செல்வாக்கையும், புகழையும் சேர்த்துத்தான் இவ்வளவு உயரமாக இதை நிமிர்ந்து நிற்கச் செய்திருக்கிறேன். இந்த உயரம் சரிந்து போக நீயே காரணமாகிவிடக் கூடாது! போ, போய்ப் படுத்துக் கொள். மற்றவற்றை நாளைக்குப் பேசிக் கொள்ளலாம்” என்று கூறிவிட்டு நகைவேழம்பரையும் உடன் அழைத்துக் கொண்டு தந்தையார் கீழே இறங்கிச் சென்று விட்டார். அவர் அந்த இடத்திலிருந்து சென்ற பின்பும் சிறிது நேரம் அங்கேயே அப்படியே தலைகுனிந்து நின்று கொண்டிருந்தாள் சுரமஞ்சரி. தந்தையார் குடிப்பெருமையைப் பற்றிக் கூறிய சொற்களுக்காக அவள் கவலைப்படவில்லை. கப்பல் வணிகத்திலும் பிறவற்றிலும் பல்லாண்டுகளாகப் பழகிப் பழகிச் சூழ்ச்சிகளும், சாதுரியமாகப் பேசும் ஆற்றலும் பெற்றிருந்ததைப் போலவே எதிராளியைத் தம் கருத்துக்கேற்ப வளையச் செய்ய எந்த வார்த்தைகளை எப்படி இணைத்துப் பேச வேண்டுமோ அப்படிப் பேசி விடுவதிலும் தந்தையார் தேர்ந்தவர் என்பது அவளுக்குத் தெரியும். மாளிகையையே குடிப்பெருமையால் நிமிர்ந்து நிற்கச் செய்திருப்பதாக அவர் கூறியவிதம் அழகாகவும், உருக்கமாகவும் இருந்தது அவளுக்கு. ஆனால் அவர் அப்படிக் கூறிவிட்டதற்கு ஏற்பத் தான் இளங்குமரனுக்கு மடல் எழுதியதோ, இரவில் அவனைச் சந்திப்பதற்காகத் தேடிக் கொண்டு சென்றதோ, குடிப்பெருமைக்குக் குறைதேடும் காரியங்கள் என்று அவள் ஒருபோதும் நினைக்கவோ ஒப்புக் கொள்ளவோ சித்தமாயில்லை. இளங்குமரனைக் கண்களாற் காணும்போதும் நெஞ்சினால் நினைக்கும் போது தான் உணரும் பெருமை, வேறெந்த நினைவினாலும் எய்துவதற்கு அரிதாயிருந்தது அவளுக்கு. தான் எவற்றையும் வேண்டித் தவிக்காமல், தன்னுடையவை என்றிருக்கும் எல்லாவற்றுக்காகவும் எல்லாரும் ஏங்கவும் தவிக்கவும் செய்துவிடுகிற ஓர் ஒளி அவன் முகத்திலும் கண்களிலும் இருக்கிறதே! அதற்கு முன் அவள் குடிப்பெருமை எம்மாத்திரம்? அவள் தந்தையின் அரசபோக ஆடம்பரங்களும், மலைபோல் குவிந்த செலமும் எம்மாத்திரம்? விழியிலும், மொழியிலும், இதழிலும், நகைப்பிலுமாக ஆண்மையைச் சூறையாடுவதற்கு அவள் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும் எழில் நுணுக்கங்கள் எம்மாத்திரம்? இளங்குமரனின் மனத்தையும், அந்த மனத்தின் விருப்பத்தையும் வெற்றி கொள்வதை விட உயர்ந்த பெருமை இந்த உலகத்தில் வேறொன்றும் இருக்க முடியாது என்பதை இந்திர விழாவின் முதல் நாள் மாலை கடற்கரையில் அவனைச் சந்தித்துப் பேசிய சில விநாடிகளிலேயே அவள் உறுதி செய்து கொண்டு விட்டாள். அந்த உறுதியையும், முடிவையும் அவள் இனிமேல் யாருக்காகவும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை. இளங்குமரனின் இறுமாப்போடு கூடிய அழகை வெற்றி கொள்வதற்காகத் தன்னுடைய இறுமாப்பை இழந்துவிட நேருமானாலும் அவள் அந்த இழப்பை ஏற்றுக் கொள்ளத் துணிந்திருந்தாள். காதலில் இழப்பதும், தோற்பதும், விட்டுக்கொடுப்பதும் கூட வெற்றிகள்தானே? இவ்வாறு கையில் கசங்கிய தாழை மடலும், நெஞ்சில் மணக்கும் நினைவுகளுமாக நின்று கொண்டிருந்த சுரமஞ்சரி, ‘படுத்துக் கொள்ளப் போகலாமே அம்மா’ என்று வசந்தமாலை அழைத்தபோதுதான் தன் நினைவு பெற்றாள். மென்மையான பூக்களைக் குவித்து அவற்றின்மேல் படுத்துறங்குவது போல் பட்டு மெத்தை விரித்த மஞ்சத்தில் பஞ்சணைகளிற் சாய்ந்து படுத்த போது சோர்ந்து களைத்த அவள் உடல் சுகம் கண்டது. ‘இதே வேளையில் படைக்கலச் சாலையின் கரடு முரடான தரையில் எங்காவது ஒரு மூலையில் இளங்குமரனின் பொன்னுடல் புரண்டு கொண்டிருக்கும்’ என்று நினைத்த போது தானும் மஞ்சத்திலிருந்து கீழிறங்கி வெறுந்தரையில் படுத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது அவளுக்கு. இளங்குமரன் எங்கெங்கே எந்தெந்த நேரங்களில் என்னென்ன வசதிக் குறைவுகளை அனுபவித்துத் துன்பப்பட்டுக் கொண்டிருப்பானோ அவ்வளவையும் தானும் தனக்கு ஏற்படுத்திக் கொண்டு துன்பத்தை அனுபவிக்க வேண்டும்போல மனத்துடிப்பு அடைந்தாள் சுரமஞ்சரி. அருகில் வசந்தமாலை இருந்ததனால் வெறுந்தரையில் படுக்கும் எண்ணத்தை அன்றிரவு அவள் நிறைவேற்றிக் கொள்ள இயலவில்லை. வெறுந்தரையில் படுத்தால் வசந்தமாலை ‘ஏன்’ என்று கேட்பாள். ‘இளங்குமரன் அங்கே வெறுந்தரையில் படுத்திருப்பார். அதனால்தான் நானும் இங்கே வெறுந்தரையில் படுத்துக் கொள்கிறேன்’ என்று வெட்கத்தை விட்டு அவளுக்குப் பதில் சொல்ல முடியுமா? ‘பெண்ணுக்கு நாணமும், அந்த நாணத்துக்கு ஓர் அழகும் இருப்பதற்குக் காரணமே அவளுடைய மனத்துக்கு மட்டுமே சொந்தமான சில மெல்லிய நினைவுகள் வாய்ப்பதுதானே? அந்த நினைவுகளை எல்லாரிடமும் எப்படிப் பங்கிட்டுக் கொள்ள முடியும?’ இதை நினைத்த போது சுரமஞ்சரி தனக்குத்தானே புன்னகை புரிந்து கொண்டாள். சிறிது நேர மௌனத்துக்குப் பின் இருந்தாற் போலிருந்து தனக்கு அருகில் கீழே தரையில் படுத்திருந்த வசந்தமாலையிடம் ஒரு கேள்வி கேட்டாள் சுரமஞ்சரி. “ஏனடி வசந்தமாலை! செல்வத்தைச் சேர்ப்பதும், சேர்த்து ஆள்வதும் பெருமைக்கும் கர்வப்படுவதற்கும் உரிய காரியமானால், செல்வத்தையே அலட்சியம் செய்கிற தீரன் அதைவிட அதிகமாகப் பெருமையும் கர்வமும் கொண்டாடலாம் அல்லவா?” “இப்போது திடீரென்று இந்தச் சந்தேகம் உங்களுக்கு எப்படி முளைத்தது அம்மா?” “சந்தேகத்துக்காகக் கேட்கவில்லையடி; அப்படிப் பெருமை கொண்டாடுகிற ஒருவரை எனக்குத் தெரியும். இப்போது அவர் நினைவு வந்தது, அதனால்தான் கேட்டேன்.” இவ்வாறு சொல்லிச் சுரமஞ்சரி சிரித்தபோது வசந்தமாலையும் எதையோ புரிந்து கொண்டவள் போல் தலைவியோடு சேர்ந்து சிரித்தாள். அப்போது தான் இருந்த மஞ்சத்துக்கு எதிரே சாளரத்தின் வழியே விண்மீன்களும், சந்திரனும் திகழும் வானத்தைக் கண்டாள் சுரமஞ்சரி. விண்மீன்கள் சாதாரண ஆண்பிள்ளையாகவும், சந்திரன் பேராண்மையாளனாகிய இளங்குமரனாகவும் மாறி அவள் கண்களுக்குத் தோன்றினார்கள். |