முதல் பருவம் - தோரணவாயில்

31. இருள் மயங்கும் வேளையில்...

     காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது. மாபெரும் காவிரிப்பூம்பட்டின நகரத்தின் தோற்றத்துக்கே புதிய மகிழ்ச்சியையும் கொண்டாட்டமான ஆரவாரங்களையும் அளித்துக் கொண்டிருந்த இந்திரவிழாவின் நாட்களில் இன்னும் ஒன்றே ஒன்றுதான் எஞ்சியிருந்தது. இருபத்தேழு நாட்கள் இருபத்தேழு வினாடிகள் போல் வேகமாகக் கழிந்துவிட்டன. நாளைக்கு எஞ்சியிருக்கும் ஒரு நாளும் முடிந்துவிட்டால் மறுபடியும் இந்திரவிழாவின் இனிய நாட்களை நுகரப் பன்னிரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். வெறும் நாளிலேயே திருநாள் கொண்டாடுவது போலிருக்கும் அந்த நகரம் திருநாள் கொண்டாடும்போது இன்னும் சிறப்பாக இருக்கும். விழா முடிந்த மறுநாளிலிருந்து நாளங்காடியின் கடைகள், பட்டினப்பாக்கத்தின் செல்வ வளமிக்க வீதிகள், மருவூர்ப்பாக்கத்தின் நெருக்கமான பகுதிகள் ஆகிய எல்லா இடங்களிலும் இந்திர விழாவின் புதுமை ஆரவாரங்களெல்லாம் குறைந்து, வழக்கமான ஆரவாரங்களோடு அமைதி பெற்றுவிடும்.

     இந்திர விழாவின் இறுதி நாள் சிறப்பு வாய்ந்தது. அன்று தான் காவேரியின் நீராடு துறைகளில் சிறந்ததும், நகரத்திலேயே இயற்கையழகுமிக்க பகுதியுமாகிய கழார்ப் பெருந்துறையில் பூம்புகார் மக்கள் நீராட்டு விழாக் கொண்டாடுவது வழக்கம். காவிரிப்பூம்பட்டினத்தின் மேற்குப் பகுதியில் காவிரி அகன்றும் ஆழ்ந்தும் பாயும் ஓரிடத்தில் கழார்ப் பெருந்துறை என்னும் நீராடு துறை அமைந்திருந்தது. நீராட்டு விழாவுக்கு முதல்நாள் மாலையிலேயே நகரமக்கள் காவிரிக்கரையிலுள்ள பொழில்களிலும், பெருமரச் சோலைகளிலும் போய்த் தங்குவதற்குத் தொடங்கி விட்டார்கள். நகரமே வெறுமையாகிக் காவிரிக் கரையில் குடியேறிவிட்டது போல் தோன்றியது. கடுமையான வேனிற்காலத்தில் குளிர்ந்த பொழில்களிலும், நதிக்கரையிலும் வசிக்கும் வாய்ப்புக் கிடைத்தால் நகர மக்கள் அதை அநுபவிக்காமல் விடுவார்களா? காவிரிக்கரையில் சித்திரக் கூடாரங்களும், கூரை வேய்ந்த கீற்றுக் கொட்டகைகளும் அமைத்துத் தங்கி மறுநாள் பொழுது விடிவதையும் நீராட்டுவிழா இன்பத்தையும் ஒருங்கே எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் நகர மக்கள்.

     கழார்ப் பெருந்துறைக்குச் செல்லும் சோலைசூழ் சாலையின் இருபுறமும் தேர்களும், பல்லக்குகளும், யானைகளும், வேறு பல சித்திர ஊர்திகளும் நிறைந்திருந்தன. குளிர்ச்சியும் பூஞ்சோலைகளின் நறுமணமும் மிகுந்து விளங்கும் இந்தச் சாலையைத் தண்பதப் பெருவழி என்றும், திருமஞ்சனப் பெருவழி என்றும் இதன் சுகத்தையும் இன்பத்தையும் உணர்ந்த பூம்புகார் மக்கள் பேரிட்டு அழைத்துப் போற்றி வந்தார்கள். காவேரியின் நீரோட்டத்தைத் தழுவினாற் போல் அமைந்த காரணத்தினால் எக்காலத்திலும் சில்லென்று தண்மை பரவித் தங்கிய சாலையாயிருந்தது இது. அதனால்தான் ‘தண்பதப் பெருவழி’ என்று பெயரும் பெற்றிருந்தது. திருமஞ்சனம் என்றால் மங்கல நீராடல் என்று பொருள். பலவிதமான மக்கள் நீராடல்களுக்கும் இந்தத் துறை இடமாக இருந்தது. காவிரித் துறைக்குப் போய் நீராடுவது ஒருபுறமிருக்க நீராடுவதற்காக இந்தச் சாலையின் வழியே நடந்து போகும்போதே உடம்பு நீராடின சுகத்தை உணர்ந்துவிடும். அத்துணைக் குளிர்ச்சியான இடம் இது.

     நகரின் கிழக்குப் பகுதியாகிய மருவூர்ப்பாக்கத்து மக்கள் மேற்குப் பகுதியாகிய காவிரித்துறையிற் சென்று தங்கிவிட்டதனால் மருவூர்ப் பாக்கமும் கடற்கரைப் பகுதிகளும் வழக்கத்துக்கு மாறான தனிமையைக் கொண்டிருந்தன. கடல் அலைகளின் ஓலமும் காற்றில் மரங்கள் ஆடும் ஓசையையும் தவிர மருவூர்ப் பாக்கத்தின் கடலோரத்து இடங்களில் வேறு ஒலிகள் இல்லை. எப்போதும் ஆள் பழக்கம் மிகுந்து தோன்றும் நீலநாகர் படைக்கலச் சாலையில் கூட அன்று பெரும் அமைதி நிலவியது. படைக்கலச் சாலையைச் சேர்ந்த இளைஞர்கள் எல்லாரும் கழார்ப் பெருந்துறைக்குப் போய்விட்டார்கள். நீலநாகமறவரும் அன்று ஊரில் இல்லை. காவிரிப்பூம்பட்டினத்துக்கு அருகில் சிற்றரசர் குடியினரான வேளிர்களின் நகரம் ஒன்று இருந்தது. அந்த நகரத்துக்குத் திருநாங்கூர் என்று பெயர். சிறப்புக்குரிய குறுநில மன்னர் மரபினரான நாங்கூர் வேளிர்களின் தலைநகராகிய அவ்வூரில் நீலநாகமறவருக்கு ஞான நூல்களைக் கற்பித்த முதுபெரும் புலமை வாய்ந்த ஆசிரியர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அந்த முதுபெரும் புலவருக்கு நாங்கூர் அடிகள் என்று பெயர். ஆண்டு தோறும் சித்திரைத் திங்களில் இந்திர விழா முடியும் போது நாங்கூர் அடிகளைச் சந்தித்து வணங்கி வாழ்த்துப் பெற்றுக் கொண்டு வருவது நீலநாகமறவரின் வழக்கம். பூம்புகார் மக்கள் காவிரியின் குளிர் புனலாடிக் களிமகிழ் கொண்டு திரியும் இந்திரவிழாவின் இறுதி நாட்களில் நீலநாகமறவர் நாங்கூரில் வயது முத்துத் தளர்ந்த தன் ஆசிரியருக்குப் பணிவிடைகள் புரிந்து கொண்டிருப்பார் அவ்வாறு தம் ஆசிரியருக்குப் பணிவிடைகள் புரியும் காலத்தில் தாம் சோழ நாட்டிலேயே இணையற்ற வீரர் என்பதையும், தம்முடைய மாபெரும் படைக்கலச் சாலையில் தாம் பல மாணவர்களுக்கு ஆசிரியர் என்பதையும் அவர் மறந்துவிடுவார். தம்மை ஆசிரியராக்கிய ஆசிரியருக்கு முன்பு தான் என்றும் மாணவ நிலையில் இருக்க வேண்டுமென்ற கருத்து அவருக்கு எப்போதும் உண்டு. அந்தக் கருத்திலிருந்து அவர் மனம் மாறுபட்டதே கிடையாது.

     அந்த ஆண்டிலும் இந்திர விழாவின் இறுதி நாளுக்கு முதல் நாள் காலையிலேயே படைக்கலச் சாலையைச் சேர்ந்த தேரில் திருநாங்கூருக்குப் புறப்பட்டுப் போயிருந்தார் நீலநாகமறவர். நீராட்டு விழாவுக்கு முந்திய நாள் பகலிலேயே படைக்கலச்சாலை ஆளரவமற்று வெறிச்சோடிப் போய்விட்டது. நீலநாகமறவர் திருநாங்கூர் நோக்கிப் புறப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் அங்கிருந்த மற்ற இளைஞர்களும் கூட்டம் கூட்டமாக காவிரித்துறைக்குப் போய் நீராட்டு விழாக் கோலாகலத்தில் மூழ்கி மகிழச் சென்று விட்டார்கள். நாளைக்குத்தான் விழா நாள் என்றாலும் உற்சாகத்தை அதுவரை தேக்கி வைக்க முடியாமல் இன்றைக்கே புறப்பட்டுச் சென்றிருந்தார்கள் அவர்கள்.

     ஆனால் அதே நாளில் அதே வேளையில் வெளியே சென்று நகரத்தில் இந்திர விழா மகிழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பாமல் படைக்கலச் சாலையின் எல்லைக்குள்ளேயே தனிமையும் தானுமாக இருந்தான் இளங்குமரன்.

     கடந்த இருபது நாட்களில் ‘இளங்குமரன் படைக்கலச் சாலையில் எல்லைக்குள்ளிருந்து வெளியேறலாகாது’ என்ற கட்டுப்பாட்டையும் படிப்படியாகத் தளர்த்தியிருந்தார் நீலநாகமறவர். அருட்செல்வமுனிவரின் மறைவால் இளங்குமரன் அடைந்திருந்த துக்கமும், அதிர்ச்சியும் அவனை ஒரே இடத்தில் கட்டுப்படுத்தி அடைத்து வைத்திருப்பதனால் இன்னும் அதிகமாகி விடக்கூடாதே என்று கருதித்தான் அப்படிச் செய்திருந்தார் அவர்.

     “இளங்குமரன் படைக்கலச் சாலையிலிருந்து வெளியேறி எங்காவது சென்றாலும் தடுக்க வேண்டாம். ஆனால் நீங்கள் யாராவது அவனோடு துணை போய் வருவது அவசியம்” என்று திருநாங்கூருக்குப் புறப்படுவதற்கு முன்பு கூடக் கதக்கண்ணன் முதலிய இளைஞர்களிடம் அவர் சொல்லிவிட்டுப் போயிருந்தார். அப்படி இருந்தும் இளங்குமரன் தானாகவே வெளியில் எங்கும் செல்வதற்கு விருப்பமின்றிப் பித்துக் கொண்டவன் போலப் படைக்கலச் சாலைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்தான்.

     நீலநாகமறவரைத் திருநாங்கூருக்கு வழியனுப்பி விட்டுக் கதக்கண்ணன் இளங்குமரனிடம் வந்து அவனை நீராட்டு விழா நடக்குமிடத்துக்குப் போகலாமென அழைத்தான்.

     “இன்று என் மனமே சரியில்லை. வெளியில் எங்கும் போய் வர வேண்டுமென்று உற்சாகமும் எனக்கு இல்லை. முடிந்தால் நாளைக்குக் காலையில் வந்து கூப்பிடு! உன்னோடு காவிரித் துறைக்கு வந்தாலும் வருவேன்” என்று கதக்கண்ணனுக்கு மறுமொழி கூறி அவனை அனுப்பினான் இளங்குமரன்.

     நீராடு துறைக்கு எல்லாரும் புறப்பட்டுச் சென்றுவிட்டார்கள். இருள் மயங்கும் நேரத்துக்குப் படைக்கலச் சாலையின் முற்றத்தில் இருந்த மேடையில் வந்து காற்றாட உட்கார்ந்து கொண்டிருந்தான் இளங்குமரன். அருட்செல்வ முனிவரின் மறைவுக்குப் பின் அவனுடைய மனமும், நினைவுகளும் துவண்டு சோர்ந்திருந்தன.

     நீலநாகமறவர் அவ்வப்போது ஆறுதல் கூறி, அவன் மனத்தைத் தேற்றிக் கொண்டிருந்தார். அன்று அவரும் ஊரில் இல்லாததனால் அவன் மனம் மிகவும் வருந்திக் கொண்டிருந்தது.

     ‘என்னுடைய கைகளில் வலிமை இருக்கிறது. மனத்தில் ஆவல் இருக்கிறது. ஆனால் இந்த வலிமையைப் பயன்படுத்தி என் பெற்றோரை அறியவும், காணவும் துடிக்கும் ஆவலை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லையே! என் ஆவலைத் தக்க சமயத்தில் நிறைவேற்றுவதாகச் சொல்லிக் கொண்டிருந்த முனிவரும் போய்விட்டார். அவர் இருந்தவரை ஆவல் நிறைவேறாவிடினும், என்றாவது ஒருநாள் அவரால் அது நிறைவேறுமென்று நம்பிக்கையாவது இருந்தது. இப்போது அதுவும் இல்லையே’ என்று நினைத்து நினைத்து, அந்நினைவு மாறுவதற்கு ஆறுதல் ஒன்றும் காணாமல் அதிலேயே மூழ்கியவனாக அமர்ந்திருந்தான் இளங்குமரன்.

     மாலைப் போது மெல்ல மெல்ல மங்கி இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. படைக்கலச் சாலையின் பெரிய வாயிற் கதவுகள் மூடப்பெற்று நடுவிலுள்ள சிறிய திட்டிவாயிற் கதவு மட்டும் திறந்திருந்தது. அதையும் மூடிவிடலாம் என்று இளங்குமரன் எழுந்து சென்ற போது, காற்சிலம்புகளும் கைவளையல்களும் ஒலிக்க நறுமணங்கள் முன்னால் வந்து பரவிக் கட்டியங் கூறிடச் சுரமஞ்சரியும் மற்றோர் இளம்பெண்ணும் அந்த வாயிலை நோக்கி உள்ளே நுழைவதற்காகச் சிறிது தொலைவில் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தான். அவன் மனத்தில் அவள் மேல் கொண்டிருந்த ஆத்திரமெல்லாம் ஒன்று சேர்ந்தது. ‘இப்படி ஒருநாள் வேளையற்ற வேளையில் இங்கே இந்தப் பெண் என்னைத் தேடி வந்ததனால்தானே நீலநாகமறவர் என்மேல் சந்தேகமுற்று என்னைக் கடிந்து கொண்டார்’ என்பது நினைவுக்கு வந்தது அவனுக்கு.

     கதவுக்கு வெளியிலேயே நிறுத்தி அவர்களைக் கடுமையாகக் கண்டித்துத் துரத்திவிட வேண்டுமென்று இளங்குமரன் முடிவு செய்து கொண்டான். ஆனால் அவனுடைய ஆத்திரமும் கடுமையும் வீணாகும்படி அந்தப் பெண்கள் நடந்து கொண்டு விட்டார்கள். அவர்கள் படைக்கலச் சாலையின் திட்டி வாயிற் கதவருகே அவன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவனருகில் வராமலே நேராக ஆலமுற்றத்துக் கோவிலுக்குப் போகும் வழியில் திரும்பி நடக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களை எப்படியும் கோபித்துக் கொண்டு ‘இனிமேல் என்னைத் தேடி இங்கே வராதீர்கள்’ என்று கடிந்து சொல்லிவிடவும் துணிந்திருந்த இளங்குமரனுக்கு இது பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.

     ‘அவள் எங்கே போனால்தான் என்ன? சிறிது தொலைவு பின் தொடர்ந்து சென்றாவது அவளைக் கோபித்துக் கொண்டு தன் ஆத்திரத்தைச் சொல்லித் தீர்த்துவிட வேண்டும்’ என்ற நினைப்புடன் இளங்குமரனும் அந்தப் பெண்களைப் பின் தொடர்ந்தான்.

     ஆனால் என்ன மாயமோ? ஆலமுற்றத்தில் பெரிய மர வீழ்துகளின் அடர்த்தியில் அந்தப் பெண்கள் வேகமாக எங்கே மறைந்தார்கள் என்று அவனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அதை விளங்கிக் கொள்ள முடியாமல் ஆத்திரமும் திகைப்பும் மாறி மாறித் தோன்ற அவன் ஆலமரத்தடியில் நின்ற போது அவனால் அப்போது அங்கே முற்றிலும் எதிர்பார்க்கப்படாத வேறு இரண்டு மனிதர்கள் அவனுக்கு முன்னால் வந்து நின்றார்கள்.

     அன்று பட்டினப்பாக்கத்திலிருந்து அவனைப் பின் தொடர்ந்த ஒற்றைக் கண் மனிதனும், சுரமஞ்சரியின் தந்தையும் அவன் எதிரே வந்து வழியை மறித்துக் கொள்கிறாற் போல நின்றார்கள்.

     “என்ன தம்பீ! மிகவும் உடைந்து போயிருக்கிறாயே? அருட் செல்வமுனிவர் காலமான துக்கம் உன்னை மிகவும் வாட்டி விட்டது போலிருக்கிறது” என்று விசாரிக்கத் தொடங்கிய சுரமஞ்சரியின் தந்தைக்கு பதில் சொல்லாமல் வெறுப்போடு வந்த வழியே திரும்பி நடக்கலானான் இளங்குமரன். “சிறிது பேசிவிட்டு அப்புறம் போகலாமே தம்பீ!” என்று கூறிக்கொண்டே உடன் நடந்து வந்து பிடி நழுவாமல் இளங்குமரனின் கையை அவனே எதிர்பாராத விதமாக அழுத்திப் பிடித்தார் அவர்.