முதல் பருவம் - தோரணவாயில் 32. மாறித் தோன்றிய மங்கை ஆத்திரத்தோடு திரும்பிச் சுரமஞ்சரியின் தந்தையை உறுத்துப் பார்த்தான் இளங்குமரன். அவனுடைய கையை அழுத்திப் பற்றியிருந்த அவர் பிடி இன்னும் தளரவில்லை. “கையை விடுங்கள் ஐயா!” என்று அவன் கூறிய சொற்களைக் கேட்டு அவர் மெல்ல நகைத்தார். அந்த நகை இளங்குமரனின் கோபத்தை இன்னும் வளர்த்தது. உடனே விரைவாக ஓங்கி உதறித் தன் கையை அவருடைய பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டான் அவன். சுரமஞ்சரியின் தந்தை கோபப்படாமல் அதே பழைய நகைப்புடன் அவனை நோக்கிக் கேட்டார். “யாருக்கும் பிடி கொடுக்காத பிள்ளையாயிருப்பாய் போலிருக்கிறதே?” “பிடித்தவர் பிடியில் எல்லாம் சிக்கிச் சுழல்வதற்கு நான் அடிமையில்லை. நீங்கள் ஆண்டானும் இல்லை.” “நீ பொதுவாகப் பேசுவதற்கு வாய் திறந்தாலே உன் பேச்சில் ஒரு செருக்கு ஒலிக்கிறது, தம்பீ! ஆத்திரத்தோடு பேசினால் அதே செருக்கு மிகுந்து தோன்றுகிறது. ஆனால் இப்போது யார் முன்னால் நின்று பேசுகிறோம் என்று நீ கவனமாக நினைவு வைத்துக் கொண்டு பேசுவதுதான் உனக்கு நல்லது.” “எங்களைப் போன்ற அநாதைகளுக்குச் செல்வமில்லை. சுகபோகங்கள் இல்லை. இந்தச் செருக்கு ஒன்று தான் எங்களுக்கு மீதமிருக்கிறது. இதையும் நீங்கள் விட்டு விடச் சொல்கிறீர்களே? எப்படி ஐயா விட முடியும்?” அப்போது அந்த இருள் மயங்கும் வேளையில் எந்தச் சூழ்நிலையில் எவர் முன்பு நின்று பேசிக் கொண்டிருக்கிறோம் என்பது இளங்குமரனுக்கு நன்றாகப் புரிந்துதான் இருந்தது. தனிமையான ஆலமுற்றத்து மணல் வெளியில் சுரமஞ்சரியின் தந்தையும் அவருக்குத் துணைபோல் வந்திருந்த ஒற்றைக்கண் மனிதனுமாக எதிரே நிற்கும் இருவரும் தனக்கு எவ்வளவு பெரிய தீமையையும் செய்யத் தயங்காதவர்கள் என்பதை உணர்ந்திருந்த இளங்குமரன் அதற்காக அஞ்சவில்லை. ஊன்றிச் சிந்தித்துப் பார்த்த போது அன்று மாலை வேளையில் தொடக்கத்திலிருந்து அங்கு நடந்தவை அனைத்துமே திட்டமிட்டுக் கொண்டு செய்யப்பட்ட சூழ்ச்சியாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டான் இளங்குமரன். சற்றுமுன் படைக்கலச் சாலையின் திட்டி வாயிற் கதவருகே சுரமஞ்சரியும் அவள் தோழியும் வருவது போல் போக்குக் காட்டி விட்டு மறைந்தது கூடத் தன்னை உள்ளிருந்து வெளியே வரவழைப்பதற்காகச் செய்யப்பட்ட தந்திரமாக இருக்குமோ என்றும் இளங்குமரன் எண்ணினான். இவ்வாறு எண்ணிக் கொண்டே அந்தப் பெண்கள் எங்காவது தென்படுகிறார்களா என்று மீண்டும் நான்குபுறமும் தன் கண் பார்வையைச் செலுத்தினான் அவன். அப்போது சுரமஞ்சரியின் தந்தை ஏளனமாகச் சிரித்துக் கொண்டே அவனை நோக்கிக் கேட்டார்:
“எதற்காக இப்படிச் சுற்றுமுற்றும் பார்க்கிறாய் என்று எனக்குத் தெரியும் தம்பீ! பெண்களுக்குப் பின்னால் துரத்திக் கொண்டு வந்து இப்படி இந்த ஆண்களுக்கு முன்னால் வகையாக மாட்டிக் கொண்டு விட்டோமே என்று தானே பார்க்கிறாய்?”
“இன்னும் ஒரு முறை அப்படிச் சொல்லாதீர்கள் ஐயா! பெண்களுக்குப் பின்னால் துரத்திக் கொண்டு போகிற வழக்கம் எனக்கு இல்லை. அநாவசியமாக உங்கள் பெண் தான் எனக்குப் பின்னால் விடாமல் என்னைத் துரத்திக் கொண்டு வருகிறாள். நான் அதை விரும்பவில்லை, வெறுக்கிறேன். என்னைத் தேடிக் கொண்டோ, துரத்திக் கொண்டோ உங்கள் பெண் இனிமேல் வரக்கூடாது என்று கண்டித்துச் சொல்வதற்காகத்தான் இப்போது நான் வந்தேன்.” “அதற்கு இப்போது அவசியமில்லை தம்பீ! நீ யாரை கண்டிக்க வேண்டுமோ, அவள் இப்போது இங்கே வரவில்லை. அவள் இங்கு வரும்போது நன்றாகக் கண்டித்துச் சொல்லி அனுப்பு. நீ அப்படிக் கண்டிப்பதைத் தான் நானும் வரவேற்கிறேன்” என்று அவர் பதில் கூறிய போது இளங்குமரன் பொறுமையிழந்தான். “ஏன் ஐயா இப்படி வாய் கூசாமல் பொய் சொல்லுகிறீர்கள்? உங்கள் பெண் சுரமஞ்சரி தன் தோழியுடன் இப்போது இந்த வழியாக வந்ததை நான் நன்றாகப் பார்த்தேனே? ‘வரவில்லை’ என்று நீங்கள் பொய் சொல்லுகிறீர்களே...?” “நான் பொய் சொல்லுவதற்குப் பல சமயங்கள் நேர்ந்திருக்கின்றன, தம்பீ! சில சமயங்களை நானே ஏற்படுத்திக் கொண்டதும் உண்டு. அவற்றுக்காக நான் வருத்தமோ, வெட்கமோ அடைந்ததில்லை. இனியும் அப்படி பொய் கூறும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டாலும் ஏற்படுத்திக் கொண்டாலும் அவற்றுக்காக நான் வெட்கமடையப் போவதில்லை. நான் பெரிய வாணிகன். மலை மலையாகச் செல்வத்தைக் குவித்துக் கொண்டிருப்பவன். உண்மையை நினைத்து, உண்மையைப் பேசி, உண்மையைச் செய்து செல்வம் குவிக்க முடியாது. ‘நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு.’ என்று செல்வம் செய்வதற்கு வகுத்திருக்கும் விதியே தனி வகையைச் சேர்ந்தது, தம்பீ! இந்த நகரில் எவரும் பெறுவதற்கு அரிய எட்டிப் பட்டமும், எண்ணி அளவிட முடியாத பெருஞ்ச் செல்வமும் பெற்று, மாபெரும் சோழ மன்னருக்கு அடுத்தபடி வசதியுள்ள சீமானாயிருக்கிறேன் நான். ஆனால் என்னுடைய இந்தச் செல்வத்துக்கு அடியில் நியாயமும் நேர்மையும், உண்மையும் தான் தாங்கிக் கொண்டிருக்க வேண்டுமென்று நினைத்தால் அது பொய். நான் குவித்திருக்கும் செல்வத்தின் கீழே பலருடைய நியாயம் புதைந்து கிடக்கலாம். அதைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை. வெட்கமும் இல்லை. ஆனால் வாய் தவறி நான் சில உண்மைகளையும் எப்போதாவது சொல்வதுண்டு. அவற்றில் இப்போது சிறிது நேரத்துக்கு முன் உன்னிடம் கூறியதும் ஒன்று.” “எதைச் சொல்கிறீர்கள்?” “என் மகள் சுரமஞ்சரியும் அவள் தோழியும் இன்று இப்போது இங்கு வரவேயில்லை என்பதை மறுபடியும் உனக்கு வற்புறுத்திச் சொல்வதற்கு விரும்புகிறேன். இது தான் உண்மை.” “அந்தப் பெண்கள் இருவரும் இந்தப் பக்கமாக வந்ததை என் கண்களால் நானே பார்த்துவிட்ட பின் நீங்கள் சொல்கிற பொய்யை மெய்யாக எப்படி ஐயா நான் நம்ப முடியும்?” இளங்குமரனின் இந்தக் கேள்வியைக் கேட்டதுமே படர்ந்து முதிர்ந்த தமது முகத்தில் குறும்பும் விஷமத்தனமும் பரவச் சிரித்தார் சுரமஞ்சரியின் தந்தை. அருகிலிருந்த நகைவேழம்பரும் அதே போலச் சிரித்தார். “நான் சொல்வதை நீ நம்ப வேண்டாம். ஆனால் மறுபடியும் உன் கண்களால் நீயே பார்த்தால் நம்புவாயல்லவா?” என்று சொல்லிக் கொண்டே பக்கத்து ஆலமரத்தை நோக்கித் திரும்பிக் கைதட்டி, “மகளே! இப்படி வா” என்று இரைந்து கூப்பிட்டார் அவர். அடுத்த கணம் பருத்த ஆலமரத்தின் அடிமரத்து மறைவிலிருந்து இளங்குமரன் கண் காணச் சுரமஞ்சரி மெல்லத் தலையை நீட்டினாள். அவள் பக்கத்தில் உடன் வந்த தோழிப் பெண்ணும் இருளில் அரைகுறையாகத் தென்பட்டாள். இளங்குமரன் அதைக் கூர்ந்து நோக்கி விட்டு அவர் பக்கம் திரும்பிக் கேட்கலானான்: “நன்றாகப் பாருங்கள். அதோ ஆலமரத்தடியில் சுரமஞ்சரியும் அவள் தோழியும் தானே நிற்கிறார்கள்? சுரமஞ்சரி இங்கு வரவில்லை என்று நீங்கள் கூறியது பொய்தானே? ஏன் ஐயா இப்படி முழுப் பூசணிக்காயைச் சேற்றில் மறைக்கப் பார்க்கிறீர்கள்?” இப்படிக் கேட்ட இளங்குமரனுக்குப் பதில் ஒன்றும் கூறாமல் அவன் முகத்தையே இமையாமல் பார்த்தார் சுரமஞ்சரியின் தந்தை. “எதற்கும் இன்னொருமுறை நன்றாகப் பார்த்து விட்டு சொல்லுங்களேன்” என்று கூறியவாறே இளங்குமரனுக்குப் பக்கத்தில் வந்து நின்று கொண்டு ஒற்றைக் கண்ணரும் அவன் பொறுமையைச் சோதிக்கவே, இவனுக்குக் குழப்பத்தோடு கோபமும் மூண்டது. “நிறுத்துங்கள், ஐயா! ஒற்றைக் கண்ணால் உலகத்தைப் பார்க்கிற நீங்கள் எப்படி இரண்டு கண்களாலும் நன்றாகப் பார்த்துத் தெரிந்து கொள்வது என்பது பற்றி எனக்கு அறிவுரை கூற வேண்டாம். உங்கள் இரண்டு பேருக்கும் ஏற்பட்டிருக்கிற குழப்பத்தை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். என்னையும் சேர்த்துக் குழப்பாதீர்கள். வேண்டுமானால் ஆலமரத்தடியிலிருந்து அவளை இங்கே இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தி ‘அவள்தான் சுரமஞ்சரி’ என்று நான் உங்களுக்கு விளக்க வேண்டியதுதான்.” “அப்படியெல்லாம் விளக்குவதற்கு அவசியம் ஒன்றுமில்லை தம்பீ! ஆலமரத்தடியில் நிற்பவள் என்னுடைய மற்றொரு மகள் வானவல்லியாகவும் இருக்கலாமே? உனக்கு ஏன் அந்தச் சந்தேகமே எழவில்லை?” என்று சுரமஞ்சரியின் தந்தை வெளிப்படையாகச் சொல்லிவிட்டுச் சிரித்தபோதும் இளங்குமரன் அதை நம்ப மறுத்துவிட்டான். “உங்கள் பெண்கள் இரட்டையர் என்பது எனக்குத் தெரியும் ஐயா! ஆனால் இன்று இங்கு வந்திருப்பது வானவல்லியல்லள், சுரமஞ்சரியேதான். அவர்கள் வரும்போது திட்டி வாசலிலிருந்து நான் தான் நன்றாகப் பார்த்தேனே! நீங்களிருவரும் ஏதோ காரணத்துக்காக என்னை ஏமாற்றிச் சுரமஞ்சரியை வானவல்லியாகக் காண்பிக்க முயல்கிறீர்கள். வானவல்லி இங்கு வரவேண்டிய காரணமேயில்லை. வந்தால் சுரமஞ்சரிதான் இங்கு என்னைத் தேடி வந்து எனக்குக் கெட்ட பெயரும் வாங்கி வைப்பாள். எப்படியாவது போகட்டும். யாராக வேண்டுமானாலும் இருந்து தொலைக்கட்டும். எனக்கென்ன வந்தது? சுரமஞ்சரி வந்தால் என்ன? வானவல்லி வந்தாலென்ன? இவர்கள் யாரும் என்னைத் தேடி எனக்காக இங்கு வரக்கூடாது என்பதுதான் என் கவலை. நீங்கள் பொய் கூறுகிறீர்களே என்பதற்காகத்தான் இவ்வளவு நேரம் வீணாக என் ஆற்றலையும் பேச்சையும் செலவழித்து மறுக்க முயன்றேன்” என்று மேலும் தன் கருத்தில் பிடிவாதமாக இருந்தே பேச்சை முடித்தான் இளங்குமரன். அருகில் நெருங்கிச் சிரித்துக் கொண்டே மறுபடியும் அவன் கைகளைப் பற்றினார் சுரமஞ்சரியின் தந்தை. முன்பு பிடித்தது போலன்றி அன்புப் பிடியாக இருந்தது இது. ஆனால் இந்த அன்புப் பிடியிலும் ஏதோ வஞ்சகம் இருப்பதை இளங்குமரன் உணர்ந்தான். “நீ சாதுரியமானவன் என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை தம்பீ! இப்போது நாங்கள் இருவரும் உண்மையை ஒப்புக் கொண்டு விடுகிறோம். அதோ நிற்கிறவள் சுரமஞ்சரியேதான். உன்னுடைய திறமையைப் பரிசோதிப்பதற்காகத்தான் இவ்வளவு நேரம் என்னென்னவோ சொல்லி உன்னை ஏமாற்ற முயன்றோம். நீ இறுதிவரை உறுதியாக இருந்து உண்மையை வற்புறுத்தி விட்டதால் உன்னுடைய நினைவாற்றலைப் பாராட்டுகிறேன்” என்று தன் கையைப் பிடித்துக் கொண்டே தழுவிக் கொள்கிறாற்போல் அருகே நெருங்கிக் குழைந்தபோது இளங்குமரன் அவர் பிடியிலிருந்து விலகித் தன்னை விடுவித்துக் கொண்டான். “கையை விடுங்கள் ஐயா! நான் யாருக்கும் பிடி கொடுக்காதவன் என்று நீங்களே ஒப்புக் கொண்டிருக்கிறீர்களே?” என்று அவரிடமிருந்து விடுவித்துக் கொண்டு இளங்குமரன் திரும்பி நடந்த போது, “நீ யாருக்கும் பிடிகொடுக்காதவன் தான் தம்பீ! ஆனால் இப்போது என்னிடம் சரியாகப் பிடி கொடுத்திருக்கிறாயே!” என்று சூழ்ச்சிப் புன்னகையோடு மர்மமான குரலில் கூறினார் அவர். வேறு பொருள் செய்து கொள்ள இடமிருந்தும் இந்தச் சொற்களை அவ்வளவுக்கு பெரியனவாக மனத்தில் ஏற்றுக் கொண்டு சிந்தனையை வளர்க்காமல் வந்த வழியே திரும்பி படைக்கலச் சாலையை நோக்கி நடந்தான் இளங்குமரன். “பட்டினப்பாக்கத்துப் பக்கமாக வந்தால் மாளிகைக்கு அவசியம் வந்து போ, தம்பீ!” என்று அவர் கூறிய உபசாரச் சொற்களையும் அவன் இலட்சியம் செய்யவில்லை. ஆனாலும் பெரிய சூழ்ச்சி ஒன்றின் அருகில் போய்விட்டு மீண்டு வந்ததுபோல் அவன் மனத்தில் ஒரு குழப்பம் இருந்தது. இளங்குமரன் படைக்கலச் சாலைக்குள் புகுந்து திட்டி வாசற்கதவை அடைத்துக் கொள்கிற ஒலியையும் கேட்ட பின்னர், ஆலமுற்றத்தில் நின்று கொண்டிருந்த நகைவேழம்பர் தம் எதிரே நிற்கும் எட்டிப்பட்டம் பெற்ற பெருநிதிச் செல்வரிடம் இப்படிக் கேட்டார்: “வாழ்நாளிலேயே ஒரே ஒரு தடவை உண்மையைச் சொல்ல முன் வந்திருக்கிறீர்களே என்று பார்த்து வியந்து கொண்டிருந்தேன். கடைசி விநாடியில் அதையும் பொய்யாக மாற்றி எப்படியோ பயனுள்ளதாக முடித்து விட்டீர்களே?” “நான் வணிகம் செய்பவன், ஊதியம் கிடைப்பதாயிருந்தால் எதையும் எப்படியும் மாற்றிச் சொல்ல வேண்டியதுதானே? வானவல்லியைச் சுரமஞ்சரி என்று தவறாகப் புரிந்து கொண்டு சாதித்தான் அந்தப் பிள்ளை. நானும் மறுத்துதான் பார்த்தேன். நான் மறுக்க மறுக்க அவன் தன் பிடிவாதத்தை உறுதியாக்கினான். கடைசியில் அவன் சொல்லியதே மெய் என்று ஒப்புக் கொண்டுவிட்டது போல நடித்து நானும் பாராட்டினேன். என்ன காரணம் தெரியுமா நகைவேழம்பரே? அவன் கண்களில் வானவல்லி சுரமஞ்சரியாகத் தென்படுவதைப் பயன்படுத்திக் கொண்டு நாம் சில காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம். அந்த அளவில் அது நமக்கு ஊதியம் தானே?” என்றார் அவர். “உங்கள் திட்டமெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்தப் பிள்ளையாண்டானை இவ்வளவு எளிதில் ஏமாளியாக்கி விடமுடியுமென்று எனக்குத் தோன்றவில்லை” என்றார் நகைவேழம்பர். |