![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
அகல் விளக்கு (www.agalvilakku.com) - தற்போதைய வெளியீடு :
திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் கோவில் |
சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
காகம் (Crow) |
தேவிஸ் கார்னர் (www.deviscorner.com) - தற்போதைய வெளியீடு : அத்திப் பழம் - Fig |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 24. ‘செய்தி பரவியது’ |
முதல் பருவம் - தோரணவாயில் 4. முல்லைக்குப் புரியவில்லை! சம்பாபதி வனத்திலிருந்து வெளியேறி அப்பாலுள்ள கோட்டங்களையும் தவச்சாலைகளையும் பலபல சமயத்தார் வழிபாட்டுக்கு மலர் கொய்யும் மலர் வனங்களையும் கடந்து வந்துவிட்டால் புறவீதி நிலா வொளியில் குளித்துக் கொண்டு நீண்டு தோன்றியது. புறவீதியின் தொடக்கத்தில் மலர்வனங்களின எல்லை முடிவடைந்ததனால் மெல்லிய காற்றோடு அவ்வனங்களில் வைகறைக்காக அரும்பவிழ்த்துக் கொண்டிருந்த பல்வேறு பூக்களின் இதமான மணம் கண்ணுக்குப் புலனாகாத சுகந்த வெள்ளமாய் அலை பரப்பிக் கொண்டிருந்தது. எங்கும் பின்னிரவு தொடங்கி விட்டதற்கு அடையாளமான மென்குளிர்ச் சூழல், எங்கும் மலர் மணக்கொள்ளை, ஆகா! அந்த நேரத்தில் அந்தச் சூழ்நிலையில் புறவீதிதான் எத்தனை அழகாயிருந்தது!. புறநகரின் இராக் காவலர்களும் சோழர் கோநகரான பூம்புகாரைச் சுற்றி இயற்கை அரண்களுள் ஒன்றாக அமைக்கப்பட்டிருந்த காவற் கோட்டை காக்கும் பொறுப்புள்ள வீரர்களும் அதிகமாக வசிக்கும் குடியிருப்பு வீதி அது. சில பெரிய திண்ணைகளில் வேல்களும், ஈட்டிகளும், சூலாயுதங்களும் சாத்தி வைக்கப்பட்டிருந்தன. சித்திர வேலைப்பாடமைந்த பெரிய மரக்கதவுகளில் சோழப்பேரரசின் புலிச்சின்னம் செதுக்கப்பெற்றிருந்தது. அந்த அமைதியான நேரத்தில் திண்ணை முரசங்களில் அடிக்கொருதரம் காற்று மோத்தியதனால் எழுந்த ஓசை வீதியே உறுமுவது போல் பிரமை உண்டாக்கியது. சிறு சிறு வெண்கல மணிகள் பொருந்திய கதவுகளில் காற்று மோதியது போல் வீதியே கலீரென்று சிரிப்பது போல் ஒரழகு புலப்பட்டுத் தோன்றி ஒடுங்கிக் கொண்டிருந்த்து. அந்த நிலையில், சம்பாபதி வனத்துப் புதரில் தாக்கப்பட்டு மயங்கிக் கிடந்த முனிவரின் உடலைச் சுமந்தவாறு புறவீதியில் தனியாக் நடந்து வந்து கொண்டிருந்தான் இளங்குமரன். மாலையில் கடற்கரையில் கிடைத்த வெற்றி அனுபவமும் அதன்பின் நினைத்தாலே கதைபோல் தோன்றக்கூடிய சம்பாபதிவனத்து பயங்கர அனுபவங்களும், இப்போது மலர்மணமும் சீதமாருதமும் தவழூம் புறவீதியில் முனிவரின் மெலிந்த உடலைத் தாங்கி நடக்கும் இந்த அனுபவமும், எல்லாம் ஏதோ திட்டமிட்டுத் தொடர்பாக வரும் அபூர்வக் கனவுகள் போல் தோன்றின அவனுக்கு. புறவீதியின் நடுப்பகுதியில் முரசமும் ஆயுதங்களும் மற்ற வீடுகளில் காணப்பட்டதைவிடச் சற்று மிகுதியாகவே வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய வீட்டில் படியேறி "முல்லை! முல்லை! கதவைத் திற" என்று இரைந்து கூப்பிட்டவாறே கதவைத் தட்டினான் இளங்குமரன். நிசப்தமான வீதியில் அவன் குரலும் கதவைத் தட்டியதனால் நாவசைத்து ஒலித்த மணிகளின் ஒலியும் தனியோசைகளாய் விட்டொலித்தன. சிறிதுநேரம் இவ்வாறு கதவைத் தட்டியும், குரல் கொடுத்தும் உள்ளே இருப்பவர்களைத் தூக்கத்திலிருந்து எழுப்ப முயன்ற அவன் முயற்சி வெற்றி பெற்றது. உள்ளிலிருந்து யாரோ ஒரு பெண் அளவாய்ப் பாதம் பெயர்த்து நடைபயின்று வருவதை அறிவிக்கும் சிலம்பொலி மெல்லக் கேட்டது. திறவுகோல் நுழைக்கும் துளை வழியே உள்ளிருந்து கதவருகே நெருங்கி வரும் தீப ஒளியும் தெரிந்தது. இளங்குமரன் கண்ணை அருகிற் கொண்டு போய்த் திறவுகோல் நுழைவின் வழியே பார்த்தான். பேதமைப்பருவத்துப் பெண்ணான முல்லை கையில் தீபத்துடன் சுரிகுழல் அசைவுற துயிலெழுமயிலெனப் பரிபுர ஒலி எழச் சித்திரம் நடந்து வருவதுபோல் வந்து கொண்டிருந்தாள். தூக்கம் கலைந்து அழகு செருகினாற்போல் அப்போது அற்புதமாய்க் காட்சியளித்தன முல்லையின் கண்களும், முகமும். துயில் நீங்கிய சோர்வு ஒடுங்கிய நீண்ட விழிகள்தாம் எத்தனை அழகு என்று வியந்தான் இளங்குமரன். விளக்கு ஒளியும், சிலம்பொலியும் நெருங்கி வந்தன. கதவின் தாழ் ஓசையோடு திறக்கப்பட்டது. தன் கையிலிருந்த பிடிவிளக்கைத் தூக்கி, வந்திருப்பவரின் முகத்தை அதன் ஒளியில் பார்த்தாள் முல்லை. "நீங்களா?" என்ற இனிய வினாவுக்குப் பின் முல்லையின் இதழ்களில் முல்லை மலர்ந்தது. "யாரையோ தூக்கிக்கொண்டு வந்திருக்கிறீர்களே! யார் அது?" "ஏதேது? வாயிலிலேயே நிறுத்தி வைத்துக்கொண்டு நீ கேட்கிற கேள்விகளைப் பார்த்தால் உள்ளே வரவிடாமல் இங்கேயே பேசி விடைகொடுத்து அனுப்பிவிடுவாய் போலிருக்கிறதே?" "ஐயையோ, அப்படியெல்லாம் ஒன்றும் இலலை. உள்ளே வாருங்கள். இந்திரவிழா பார்த்துவிட்டு நகருக்குள்ளிலிருந்து நானும் தந்தையும்கூடச் சிறிது நாழிகைக்கு முன் தான் இங்கே வீட்டுக்குத் திரும்பி வந்தோம்" என்று கூறியபோது முல்லையின் இதழ்களில் மீண்டும் முல்லை மலர்ந்தது. இளங்குமரன் உள்ளே நுழைந்து அங்கிருந்த கட்டில் ஒன்றில் அருட்செல்வ முனிவரின் உடலைக் கிடத்தினான். அவரை அங்கே கிடத்தியவுடனே இப்போது நன்றாகத் தெரியும் இளங்குமரனின் தோளிலும் மார்பிலும் சிறு சிறு காயங்கள் தென்படுவதையும் அவன் சோர்ந்திருப்பதையும் பார்த்து ஒன்றும் புரியாமல் மருண்டு நின்றாள் முல்லை. "முல்லை! சம்பாபதி வனத்தில் காவலுக்காகச் சுற்றிக்கொண்டுருந்த உன் தமையனைச் சந்தித்தேன். அவன் தான் என்னை இங்கே போகச் சொல்லி அனுப்பினான். அவனை அந்தப் பக்கம் அனுப்பிவிட்டுத் திரும்பினால், இன்னொரு புதரில் இவரை யாரோ அடித்துப் போட்டிருப்பது தெரிந்தது. இவரையும் எடுத்துக் கொண்டு நேராக இங்கு வந்து சேர்ந்தேன்; இனிமேல் கவலையில்லை. நாளை விடிகிறவரை இரண்டு பேரும் முல்லைக்கு அடைக்கலம்தான்." இதைக் கேட்டு முல்லை சிரித்தாள். "உங்கள் உடம்பைப் பார்த்தாலும், நீங்கள் கூட யாருடனோ பலமாகச் சண்டை போட்டுவிட்டு வந்திருப்பீர்கள் போலிருக்கிறதே?" "ஒரு சண்டையென்ன? பொழுதுபோனால், பொழுது விடிந்தால் சண்டைகளாகத்தான் இருக்கிறது என் பாடு. அதைப் பற்றியெல்லாம் அப்புறம் விரிவாகப் பேசிக்கொள்ளலாம். முதலில் முனிவருடைய மயக்கத்தைப் போக்கி அவருக்குத் தெளிவுவரச் செய்யவேண்டும், அதற்கு உன்னுடைய உதவிகள் தேவை! உன் தந்தையாரை எழுப்பாதே. அவர் நன்றாக உறங்கட்டும். நீ மட்டும் உன்னால் முடிந்தவற்றைச் செய்தால் போதும்.." "முனிவருக்கு மட்டுந்தானா? நீங்கள் கூடத்தான் ஊமைக் காயங்களாக மார்பிலும் தோளிலும் நிறைய வாங்கிக் கொண்டு வந்திருக்கிறீர்கள். அவைகளுக்கும் மருந்து போட்டுத்தானே ஆகவேண்டும்?" "மார்பிலும் தோளிலும் காயம் படுவது பெருமைதான் முல்லை! அவற்றை விழுப்புண்கள் என்று புகழின் முத்திரைகளாகக் கணக்கிடுகிறார்கள் இலக்கிய ஆசிரியர்கள்!" "கணக்கிடுவார்கள் கணக்கிடுவார்கள்! ஏன் கணக்கிட மாட்டார்கள்? புண்ணைப் பெறுகிறவன் பெற்றுக் கொண்டு வந்துவிட்டால் அப்புறம் சோம்பல் இல்லாமல் புகழ்கிறவர்களுக்கு என்ன வலிக்கிறதாம்?" என்று சிரித்தவாறே கூறிவிட்டுப் பம்பரமாகச் சுழன்று காரியங்களை கவனிக்கத் தொடங்கினாள் முல்லை. சிலம்பும் வளைகளும் ஒலித்த விரைவிலிருந்து அவள் எவ்வளவு வேகமாக மருந்தரைக்கிறாள், எவ்வளவு வேகமாகச் சுடுநீர் வைக்கிறாள் என்பதை நினைத்து வியந்தவாறே முனிவரின் கட்டிலருகே இருந்தான் இளங்குமரன். நடுநடுவே முனிவர் முனகினார். கனவில் உளறுவது போல் சொற்கள் அரைகுரையாக வெளிவந்தன. அந்தச் சொற்களை திரட்டி, "பாவிகளே! என்னைக் கொல்லாதீர்கள். உங்கள் தீமைகளுக்கு உங்களை என்றாவது படைத்தவன் தண்டிக்காமல் விட மாட்டான்! பாவிகளே" என்று இளங்குமரன் ஒருவிதமாகக் கூட்டி உணர முயன்றான். முல்லையின் குறுகுறுப்பான இயல்புக்குமுன் எவ்வளவு கடுமையான சுபாவமுள்ளவர்களுக்கும் அவளிடம் சிரித்து விளையாடிப் பேசவேண்டுமென்று தோன்றுமே ஒழிய கடுமையாகவோ துயரமாகவோ இருந்தாலும் அவற்றுக்குரிய பேச்சு எழாது. அவளிடமிருந்த அற்புதக் கவர்ச்சி அது. அதனால்தானோ என்னவோ இளங்குமரனும் சிரிப்பும் கலகலப்புமாக அவளிடம் பேசினானே தவிர உண்மையில் கதக்கண்ணனுடைய வீட்டுக்கு நுழையும்போதும் சரி, நுழைந்த பின்னும் சரி, அவன் மனம் மிகவும் குழம்பிப்போயிருந்தது. முல்லையும் இளங்குமரனும் செய்த உபசாரங்களை ஏற்றுக் கொண்டு முனிவர் தெளிவு பெற்றுக் கண்விழித்த போது, இரவு மூன்றாம் யாமத்துக்கு ஓடிக்கொண்டிருந்தது. "முல்லை முதலில் நீ போய் உறங்கு. மற்றவற்றைக் காலையில் பார்த்துக் கொள்ளலாம். உனக்கு நிறையத் தொல்லை கொடுத்துவிட்டேன்" என்று இளங்குமரன் அவளை அனுப்ப முயன்றும் அவள் விடுகிற வழியாயில்லை. "உங்கள் காயங்களை மறந்துவிட்டீர்களே? ஆறினால்தானே விழுப்புண் என்று பெருமை கொண்டாடலாம். பச்சைக் காயமாகவே இருந்தால் அந்தப் பெருமையும் கொண்டாட முடியாதே!" என்று கூறி நகைத்தாள் முல்லை. அதன் பின் அவன் காயங்களுக்கு மருந்து கொடுத்துப் போட்டுக் கொள்வதையும் இருந்து பார்த்து விட்டுத்தான் அவள் படுக்கச் சென்றாள். படுத்தவுடன் அயர்ந்து நன்றாக உறங்கிவிட்டாள். இரண்டு மூன்று நாழிகைத் தூக்கத்துக்குப்பின். அவளுக்கு அரைகுறையாக ஒரு விழிப்பு வந்தபோது மிக அருகில் மெல்லிய குரலில் யாரோ விசும்பி அழுகிற ஒலி கேட்டுத் திகைத்தாள். திகைப்பில் நன்றாக விழிப்பு வந்தது அவளுக்கு. சிலம்பும் வளைகளும் ஒலிக்காமல் கவனமாக எழுந்து பார்த்தாள். இளங்குமரனும், அருட்செல்வ முனிவரும் படுத்திருந்த பகுதியிலிருந்து அந்த ஒலி வருவதாக அவளுக்குத் தோன்றியது. தீபச்சுடரைப் பெரிதாக்கி எடுத்துக் கொண்டு போய்ப் பார்க்கலாமா என்று அவள் உள்ளத்தில் ஆவல் எழுந்தது. அப்படிப் பார்ப்பது அநாகரிகமாகவோ, அசந்தர்ப்பமாகவோ முடிந்துவிட்டால் வீட்டில் வந்து தங்கியுள்ள விருந்தினர்கள் மனம் புண்பட நேருமோ என்று அந்த எண்ணத்தைக் கைவிட்டாள் முல்லை. அவள் மேலும் உற்றுக் கேட்டதில் அழுகுரல் முனிவருடையதாக இருந்தது. "இளங்குமரா! அதைச் சொல்லிவிட்டால் நான் உயிரோடு இருக்க முடியாது. உயிரோடு இருக்கவேண்டுமானால் அதைச் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட இரகசியத்தைக் கேட்டுக் கேட்டு என் நிம்மதியும் மனத்தூய்மையும் கெட்டு வேதனைப்படச் செய்வதைவிட உன் கைகளாலேயே என்னைக் கொன்று விடு. வேறு வழியில்லை!" "சுவாமீ! அப்படிக் கூறாதீர்கள். நான் தவறாக ஏதேனும் கேட்டிருந்தால் என்னை மன்னியுங்கள்." "மன்னிப்பதிருக்கட்டும்! நீ நெடுங்காலம் உயிரோடு வாழவேண்டும் இளங்குமரா! அது என் இலட்சியம். உனக்கு அந்த உண்மையைச் சிறிது கூறிவிட்டாலும், நாலு புறமும் உன்னையும் என்னையும் பிணமாக்கி விடத்துடிக்கும் கைகள் கிளரும் என்பதில் சந்தேகமே இல்லை" இவ்வாறு சொல்லிவிட்டு முனிவர் சிறுபிள்ளை போல் குலுங்கிக் குலுங்கி அழும் ஒலி கேட்டது. "சுவாமீ! கெட்ட கனவு கண்டது போல் நடந்ததையும் நான் உங்களிடம் கேட்டதையும் மறந்துவிடுங்கள். நிம்மதியாகச் சிறிது நேரமாவது உறங்குங்கள்." "நிம்மதியான உறக்கமா? உன்னைச் சிறு குழந்தையாக எடுத்து வளர்க்க ஆரம்பித்த நாளிலிருந்து அதைப் பற்றி நான் மறந்து விட்டேன், இளங்குமரா?" இருளில் எழுந்து அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த முல்லைக்கு, முதலும் தொடர்பும் முடிவும் இல்லாத இந்த உரையாடலிலிருந்து ஒன்றும் புரியவில்லை. ஆனால் பொதுவில் அவளுக்கு அதைக் கேட்டதிலிருந்து ஏதோ திகைப்பாகவும் பயமாகவுமிருந்தது. |