![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
முதல் பருவம் - தோரணவாயில் 6. வம்பு வந்தது! தன் அருகே வந்து நின்றவனை நன்றாக உற்றுப் பார்த்தான் இளங்குமரன். ஓவியம் எழுதுவதற்குரிய திரைச் சீலை தூரிகைகளும், வண்ணங்களடங்கிய சிறுமரப் பேழையும் அவனிடம் இருந்தன். அவன் இள வயதினன்தான். கலை அறிவுள்ளவர்களின் முகத்துக்கு அந்தப் பயிற்சியால் வரும் அழகுச் சாயல் தவிர இயல்பாகவேயும் அழகனாக இருந்தான் அவன். ஓவியம் எழுதுவதற்கு வந்ததாகத் தன்னை அறிமுகம் செய்துகொண்ட அந்த இளைஞனே ஓவியம் போல் கவர்ச்சியாக இருப்பதை எண்ணி வியந்தவனாக அவனை நோக்கிக் கேள்விகளைத் தொடுக்கலானான் இளங்குமரன்: "உன் பெயர் என்னவென்று நான் அறியலாமா, தம்பி!" "ஐயா! இந்த ஏழை ஓவியனை மணிமார்பன் என்று அழைப்பார்கள்." "உன் மார்பில் அப்படி ஒன்றும் மணிகளைக் காணவில்லையே அப்பனே?" இளங்குமரன் குறும்பு நகையுடன் இப்படிக் கேட்ட போது, அந்த இளம் ஓவியன் சிறிது நாணமடைந்தது போல் தலைகுனிந்தான். பின்பு மெல்லச் சொல்லலானான்: "ஐயா! நீங்கள் மனம் வைத்தால் இந்த ஏழையினுடைய மார்பிலும் மணிகள் ஒளிரச் செய்ய முடியும்." இதைக் கேட்டு இளங்குமரன் அலட்சியமாகச் சிரித்தான். "என்னைப் பற்றித் தப்புக் கணக்குப் போடுகிறாய், தம்பீ! பட்டினப் பாக்கத்தில் எவரோ பெருஞ்செல்வரின் மகன் என்றோ, வேறு விதமான பெரிய இடத்துப் பிள்ளை என்றோ என்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தால் இந்தக் கணமே அந்த நினைவை விட்டுவிடு மணிமார்பா. என் சித்திரத்தை நன்றாக எழுதிக் காண்பித்தால் அதை வாய் நிறையப் புகழ்வதைத் தவிர வேறு எந்தப் பரிசும் தரமுடியாதவன் நான்." "நீங்கள் பரிசு ஒன்றும் எனக்குத் தரவேண்டியதில்லை, ஐயா! உங்கள் படத்தை நான் வரைந்து போய்க்கொடுத்தாலே எனக்கு உடனே கனகாபிஷேகம் செய்து விடக் காத்திருக்கிறவர்கள் இந்தக் கூட்டத்தில் இருக்கிறார்களே!" இப்படிக் கூறிவிட்டு நளினமானதொரு மென்னகை இதழ்களில் இழையோட இளங்குமரன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான் மணிமார்பன். இதைக் கேள்வியுற்ற இளங்குமரனுக்குத் திகைப்பும் வியப்பும் ஒருங்கே உண்டாயின. "மணிமார்பா! இந்தப் பூம்புகார் நகரம் திடீரென்று என்னை அவ்வளவு பெரிய மனிதனாக மதிப்பிடத் தொடங்கி விட்டதா, என்ன? சரிதான் போ! எனக்கு ஏதோ போதாத காலம் ஆரபமாகிறது போலிருக்கிறது? அப்பனே! இந்த மாபெரும் கோநகரத்தில் எனக்கு எதிரிகளும், வேண்டாதவர்களும் நிறைய இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் நேருக்கு நேர் என்னிடம் வந்து சண்டையிட பயம். என்னுடைய சித்திரத்தை எழுதி மகிழலாமென்று அந்த அப்பாவிகளில் யாராவது ஆசைப்பட்டிருக்கலாம். நான் முரடனாக இருக்கிறேனாம். அதனால் என்னிடம் நேரே போருக்கு வர அஞ்சுகிற ஆட்கள் நிறைய இருக்கிறார்கள்." "ஐயா! இப்போது உங்களை ஓவியமாக்கிக் கொண்டு வரச் சொல்லி என்னை அனுப்பியவர் உங்களுக்கு எதிரியில்லை. தாக்கி மகிழ்வதற்காக உங்கள் ஓவியத்தை அவர் கேட்கவில்லை. நோக்கி மகிழ்வதற்குக் கேட்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது." "அடடா! வேடிக்கையாக அல்லாவா இருக்கிறது நீ சொல்லுகிற செய்தி. இந்திரவிழாவின் இரண்டாவது நாளாகிய இன்று போனால் போகிறதென்று கொஞ்சம் நல்ல வாய்ப்புகளும் என்னைத் தேடிக்கொண்டு வருகிறாற் போல் இருக்கிறது! என்னை இத்தனை பெரிய பாக்கியசாலியாக்குவதற்குத் துணிந்திருக்கும் அந்தப் புண்ணியவான் யார் அப்பனே?" மணிமார்பன் பதில் கூறாமல் கண்களை மூடித்திறந்து குறும்பாகவும் எதையோ ஒளிக்கும் குறிப்புடனும் இளங்குமரனைப் பார்த்துச் சிரித்தான். "அப்பனே! நீ நன்றாகத்தான் சிரிகிறாய். சிரிப்பிலேயே சித்திர விசித்திர நுணுக்கங்களெல்லாம் காட்டிச் சொல்ல வந்ததை மறைக்காதே. யார் அந்தப் புண்ணியவான் என்பதை மட்டும் முதலில் சொல்!" "புண்ணியவான் இல்லை ஐயா; புண்ணியவதி!" என்று கூறிக்கொண்டே கிழக்குப் பக்கமாகத் திரும்பி, "அதோ அந்தப் ப்ல்லக்கிலிருந்து இறங்குகிறாரே எட்டிக் குமரன் வீட்டுப் புதல்வியார் அவருக்கு உங்கள் சித்திரம் வேண்டுமாம்" என்று சுட்டிக் காட்டினான் ஒவியன். இளங்குமரன் அவன் காட்டிய திசையில் பார்த்தான். அவனுடைய முகத்திலிருந்து சிரிப்பும் மலர்ச்சியும் விடைபெற்றன. முதல்நாள் மாலை கடற்கரையில் மற்போர் வெற்றிக்காகத் தனக்கு மணிமாலை பரிசளிக்க முன்வந்த அதே அழகி பல்லக்கிலிருந்து இறங்கி ஒளி சிதறிக்கொண்டு நடைபயில்வது போல் தனது அணிமணிகள் சுடரிடக் தோழியோடு பூதசதுக்கத்து வாயிலுக்கு வருவதை அவன் கண்டான். "ஐயா! உங்கள் ஓவியத்தை எழுதி முடித்து அவர்கள் இங்கிருந்து திரும்புவதற்குள் கொண்டுவந்து கொடுத்தால் நூறு கழஞ்சு பொன் எனக்குப் பரிசு தருவ்தாகச் சொல்லியும் அடையாளம் காட்டி அனுப்பினார்கள். நீங்கள் என்மேல் கருணை கொண்டு..." "உன் மேல் கருணை கொள்வதற்கு நான் மறுக்க வில்லை தம்பீ! ஆனால் உனக்கு உலகம் தெரியாது. நீ சிறு பிள்ளை. உன்னுடைய சித்திரங்களின் புனைவிலும் பூச்சிலும் விதம் விதமான வண்ணங்களைக் கண்டு மகிழ்வது போல் பேரின்ப நகரமான இந்தப் பூம்புகாரின் வாழ்விலும் ஒளிதரும் வண்ணங்களே நிறைந்திருப்பாதாக நீ நினைக்கிறாய். சூதும் வாதும் இகழ்ச்சியும் நிறைந்த பூம்புகாரின் வாழ்க்கைச் சித்திரம் உனக்குத் தெரிந்திராது. அங்கே வண்ணங்கள் வனப்புக் காட்டவில்லை. அழுதுவடிகின்றன. வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பிவிடக்கூடாது. செல்வத் திமிர் பிடித்த பட்டினப் பாக்கத்தார் தாம் பூம்புகார் எனும் வாழ்க்கை ஓவியத்தின் மறுபுறம் மங்கியிருப்பதற்குக் காரணமானவர்கள். இவர்களைக் கண்டாலே எனக்கு அந்த நினைவு வந்து விடுகிறது. வெறுப்பும் வந்து விடுகிறது. சில சமயங்களில் இவர்கள் அழகையும் செழுமையையும் கண்டு கவர்ச்சி பெற்றாலும் ஆழ்ந்து சிந்திக்கும் போது என் மனம் கொதிக்கிறது, தம்பீ!" அதைக் கேட்டபின் ஓவியனுடைய மனத்தில் அவ நம்பிக்கை இருள்தான் கவிந்தது. நம்பிக்கை ஒளி சிறிதும் படரவில்லை. "ஐயா நீங்கள் கூறுகிற கருத்துக்கள் எல்லாம் மிகவும் நன்றாயிருக்கின்றன். ஆனால் என் போன்ற ஏழைக்கலைஞனுக்கு அவற்றால் ஒரு பயனும் இல்லை. அருள் கூர்ந்து உங்களைச் சித்திரமாக்கி அந்தப் பெண்மணியிடம் அளிக்க அனுமதி தந்தீர்களானால், ஏதோ எனக்கும் அதனால் நூறு கழ்ஞ்சு பொன் பெறுகிற வாய்ப்புக் கிடைக்கும். வெறும் உபதேசத்தினால் என்ன பயன் விளையப் போகிறது?" என்று நைந்து நம்பிக்கையிழந்த குரலில் மணிமார்பன் கூறியபோது இளங்குமரனுக்கு அவன்மேல் சிறிது ஆத்திரம் மூண்டது. என் முன்னால் நின்று கொண்டே என்னை நோக்கி, 'வெறும் உபதேசத்தால் என்ன பயன் விளையப் போகிறது? என்று கேட்கிறானே இந்த இளைஞன், கையாலாகாத ஆளுக்கு உபதேசம் எதற்கு? என்று என்னையே இடித்துக் காட்டுகிறானா இவன்?' இளங்குமரன் தன் மனத்தின் ஆத்திரத்தை முகத்தில் காட்டாமல் அவனை உற்றுப் பார்த்தான். 'பாவம்! ஏழை ஓவியன். நாம் ஒப்புக் கொள்வதனால் நமக்கு இழப்பு ஒன்றுமில்லை. ஒப்புக் கொள்ளாவிட்டால் இவனுக்கு நூறு பொற் கழஞ்சு கிடைக்காமல் போகும். பிழைத்துப் போகிறான். செருக்கு மிகுந்த அந்தச் செல்வக் குமரிக்காக இல்லாவிட்டாலும் இவனுக்கு ஊதியம் கிடைக்கும் என்பதற்காக இதை நாம் எற்றுக்கொள்ளலாம்' என்று ஆத்திரம் மாறி இரக்கம் உண்டாயிற்று இளங்குமரன் மனத்தில். அடுத்த கணம் அவன் முகம் மலர்ந்தது. பாசத்தோடு அருகில் சென்று அந்த ஓவியன் முதுகில் தட்டிக்கொடுத்தான். "மணிமார்பா! தளராதே அப்பனே. எங்கே நான் கண்டிப்பாக மறுத்து விடுகிறேனோ என்ற பயத்தில் உன் அழகிய முகம் மங்கிய வண்ணம் போல் வாடிவிட்டதே. தம்பீ! வா, என்னை வரைந்து கொள். உனக்கு நான் பயன்படுகிறேன் என்பதுதான் என் இணக்கத்துக்குக் காரணம்." "ஐயா தனக்காகவே நான் உங்களை வரைகிறேன் என்பதை உங்களிடம் சொல்லாமல் வரைந்து வருமாறுதான் அந்தப் பெண்மணி கூறியிருந்தார். நான் தான் உங்களிடம் மெய்யை மறைக்க முடியாமல் கூறிவிட்டேன். உங்கள் கண்களுக்கு எதிரே நின்று பேசுகிறபோது உண்மையை மறைத்துப் பேசவரவில்லை." "பார்த்தாயா? அவளுக்காக என்பதை நீ என்னிடம் கூறினால் நான் இணங்க மாட்டேன் என்று அந்த அழகரசிக்கே நன்றாகத் தெரியும் தம்பி!" "ஏன் ஐயா? உங்களுக்குள் ஏதாவது கோபமா?" "தம்பீ! இந்தக் கேள்வியெல்லாம் கேட்டு நேரத்தை வீணாக்காதே. நீ வரையத் தொடங்கு!" இளங்குமரன் மீண்டும் குரலில் கடுமையை வரவழைத்துக் கொண்டு கண்டித்த பின்புதான் ஓவியன் மணிமார்பன் பேச்சைக் குறைத்து வேலையில் இறங்கினான். மரத்தைத் தழுவினாற் போல் படர்ந்திருந்த ஒரு முல்லைக் கொடியைப் பிடித்தவாறு மலர்ந்த முகத்தோடு சித்திரத்துக்கு வாய்ப்பான கோலத்தில் நின்றான் இளங்குமரன். திரைச்சீலையை விரித்து வண்ணப் பேழையைத் திறந்து வரையலானான் மணிமார்பன். நாளங்காடிச் சதுக்கப் பூதத்தின் பலிப் பீடிகையிலிருந்து முல்லை வழிபாட்டை முடித்துக் கொண்டு திரும்புமுன் மணிமார்பனுடைய வரைவுவேலை முடிந்துவிட வேண்டுமென்று துரிதப்படுத்தினான் இளங்குமரன். முல்லை கொண்டு வரப்போகும் நெய் எள்ளுருண்டையை நினைக்கும்போது அவன் நாவில் சுவைநீர் சுரந்தது. "ஐயா! உண்மையிலேயே நீங்கள் மிகவும் அழகாய்த்தான் இருக்கிறீர்கள்!" "தம்பீ! அப்படியானால் என்னுடைய அழகைப்பற்றி இது வரையில் உனக்குச் சந்தேகம் இருந்ததா? நான் அழகாயிருப்பது எவ்வளவு பெரிய தவறு என்பது இன்று இந்த நாளங்காடி நாற்சந்தியில் நீ என்னைத் தேடி வந்ததிலிருந்தே தெரிந்துவிட்டது. அழகாயிருப்பதைப் பற்றி நீயும் நானும் நினைத்துப் பார்க்க நேரமேது? பொன்னிலும், யானைத் தந்தத்திலும் யவனப்பாடியிலுள்ள சிற்பிகள் எவ்வளவோ அழகான சிலைகள் செய்கிறார்களே அவற்றையெல்லாம் விலைக்கு வாங்கிச் செல்கிறவர்கள் பட்டினப்பாக்கத்துச் செல்வர்கள்தாம். அதே போல் அழகாயிருக்கிற ஆட்களையும் அன்பு என்கிற விலைக்கு வாங்கிவிடத் துடிக்கிறார்கள் அவர்கள்." "நீங்கள் அதைவிடப் பெரிய விலை ஏதேனும் எதிர் பார்க்கிறீர்களோ?" "என் தன்மானமும் தன்னம்பிக்கையும் பட்டினப்பாக்கத்து ஏழு அடுக்குமாடங்களைவிட உயரமானவை தம்பீ!" "என்ன காரணத்தாலோ பட்டினப்பாக்கத்து ஆடம்பர வாழ்வின் மேலும், செல்வச் சுகபோகங்கள் மேலும் உங்களுக்கு வெறுப்பு ஏற்பட்டிருப்பது தெரிகிறது, ஐயா." இதற்கு இளங்குமரன் பதில் சொல்லவில்லை. மணிமார்பனும் குறிப்பறிந்து, பேசுவதை நிறுத்திக்கொண்டான். கரும்பு வில்லில் மலர்க்கணைதொடுத்த கோலத்தில் மன்மதன் நிற்பதுபோல் முல்லைக் கொடியைப் பிடித்தாற் போல் நிற்கும் இளங்குமரன் திரைச்சீலையில் உருவாகிக் கொண்டிருந்தான். அப்போது சிலம்பொலி கிளரச் சீறடி பெயர்ந்து நடந்து வந்தாள் முல்லை. "உங்களை எங்கே எல்லாம் தேடுவது?" என்று கூறிக் கொண்டே நெய்மணம் கமழும் எள்ளுருண்டைப் ப்ணியாரத்தை முன் நீண்ட அவன் கையில் வைத்துவிட்டு ஒவியனுக்கும் தருவதற்காக் எதிர்ப்பக்கம் நடந்தாள் முல்லை. பணியாரத்தை வாயிலிடுவதற்காக் மேலெழுந்த இளங்குமரனின் வலக்கரம் பின்னாலிருந்து வேறொரு முரட்டுக் க்ரத்தால் தட்டி விடப்பட்டது! எள்ளுருண்டைகள் அந்தரத்தில் பறந்தன. அடக்க முடியாத சினத்தோடு அழற்சி பொங்கும் விழிகளைப் பின்புறமாகத் திருப்பினான் இளங்குமரன். அங்கே அன்றைய கணக்குக்கு அவனைத் தேடி வர வேண்டிய வம்பு வந்திருந்தது! பயங்கரமாகக் கட்சி கட்டிக் கொண்டு வந்திருந்தது! அவனது புயங்களின் தசை திரண்டது. |